Yoga! | Shanti-Parva-Section-317 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 144)
பதிவின் சுருக்கம் : யோக நிலைகளான சகுண பிராணாயாமம், நிர்க்குண பிராணாயாமம், சமாதி ஆகியவை குறித்தும் யோகிகளின் தத்துவம் குறித்தும் ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...
யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனுக்கு}, "நான் சாங்கியர்களின் அறிவியலை உனக்குச் சொன்னேன். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இப்போது, யோகிகளின் அறிவியலை நான் கேள்விப்பட்டவகையிலும், பார்த்த வகையிலும் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(1) சாங்கிய ஞானத்தோடு ஒப்பிடத்தக்க வகையில் வேறு ஞானம் ஏதும் இல்லை. யோக பலத்தோடு ஒப்பிடத்தக்க வகையில் வேறு பலம் ஏதும் கிடையாது. ஒரே நடைமுறைகளை விதிக்கும் இவ்விரண்டும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கவல்லவையாகக் கருதப்படுகின்றன.(2) புத்தியால் அருளப்படாத மனிதர்களே சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டிருப்பதாகக் கருதுகிறார்கள். எனினும், ஓ! மன்னா, அவற்றை (கற்று, சிந்தித்த பிறகு) நாம் அடையும் தீர்மானத்தின்படி அவற்றை ஒன்றாகவே நாம் காண்கிறோம்.(3) சாங்கியர்கள் பார்ப்பதையே யோகிகளும் பார்க்கிறார்கள். சாங்கியம் மற்றும் யோக அமைப்புகளை ஒன்றாகக் காண்பவன், அண்டத்தை விதிக்கும் தத்துவங்கள், அல்லது கோட்பாடுகளை உண்மையில் அறிந்தவனாகக் கருதப்படுகிறான்.(4)
ஓ! மன்னா {தேவராதனா}, உயிர் மூச்சுகளும், புலன்களுமே யோகம் பயில்வதற்கான முக்கிய வழிமுறைகள் என்பதை அறிவாயாக. அந்த உயிர் மூச்சுகளையும், புலன்களையும் ஒழுங்கு செய்வதன் மூலம் மட்டுமே யோகிகள் தங்கள் விருப்பப்படி எங்கும் திரிகிறார்கள்[1].(5) பருவுடல் அழிவடையும்போது, (அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் முதலிய அட்டமா சித்திகளான) எட்டு யோக குணங்களைக் கொண்ட நுண்ணுடல்களுடன் அனைத்து வகை இன்பநிலைகளையும் (அவ்வுடலால்) அனுபவித்தபடியே அண்டத்தில் திரிகிறார்கள்.(6)
யோக பலம் எட்டு வகையெனச் சாத்திரங்களில் ஞானிகள் சொல்லியிருக்கின்றனர். அவர்கள் யோகத்தை எட்டு அங்கங்களைக் கொண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்[2].(7) உண்மையில், ஓ! மன்னா, அவர்கள் வேறு எவ்வகை யோகத்தைக் குறித்தும் பேசவில்லை. யோகிகளின் சிறந்த நடைமுறைகளில் (அவற்றின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு) இரண்டுவகை உண்டு எனச் சொல்லப்படுகிறது. சாத்திரங்களில் தோன்றும் குறியீடுகளின்படி அவை, குணங்களுடன் கூடிய நடைமுறை {சகுணயோகம்} மற்றும் குணங்களில் இருந்து விடுபட்ட நடைமுறை {நிர்க்குணயோகம்} என்று இருவகைப்படும்.(8)
யோக பலம் எட்டு வகையெனச் சாத்திரங்களில் ஞானிகள் சொல்லியிருக்கின்றனர். அவர்கள் யோகத்தை எட்டு அங்கங்களைக் கொண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்[2].(7) உண்மையில், ஓ! மன்னா, அவர்கள் வேறு எவ்வகை யோகத்தைக் குறித்தும் பேசவில்லை. யோகிகளின் சிறந்த நடைமுறைகளில் (அவற்றின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு) இரண்டுவகை உண்டு எனச் சொல்லப்படுகிறது. சாத்திரங்களில் தோன்றும் குறியீடுகளின்படி அவை, குணங்களுடன் கூடிய நடைமுறை {சகுணயோகம்} மற்றும் குணங்களில் இருந்து விடுபட்ட நடைமுறை {நிர்க்குணயோகம்} என்று இருவகைப்படும்.(8)
[1] "இங்கு ருத்ரம் என்பது பிராணவாயு மற்றும் பிற வாயுக்களைக் குறிக்கும் சொல்லாகும். உயிர் மூச்சுகளையும், புலன்களையும் ஒழுங்குமுறை செய்வதன் மூலம் யோக பலத்தை அடையும் யோகிகள், தங்கள் லிங்க சரீரம் அல்லது நுண்உடல்களுடன் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்வதில் வெல்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "பிராணாயாமம், பிரத்யாஹாரம், தியானம், தாரணை, தாரகம், சமாதி, யமம் மற்றும் நியமம் ஆகியவையே யோகத்தின் அந்த எட்டு அங்கங்களாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மன்னா {தேவராதனா}, மூச்சை அடுத்தடுத்து ஒழுங்குசெய்து, (குறிப்பிட்ட பதினாறு பொருட்களில்) மனத்தைக் குவிப்பது (ஒரு வகை {யோகம்} ஆகும்). காலம் நெடுகிலும் புலன்களை அடக்கி (தியானிப்பவர், தியானிக்கப்படும் பொருள் ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் அனைத்தையும் அழிக்கும் வழியில்) மனத்தைக் குவிப்பது (மற்றொரு வகை {யோகம்} ஆகும்). முதல் வகை யோகம் குணங்களைக் கொண்டதாக {சகுண யோகமாகச்} சொல்லப்படுகிறது; இரண்டாம் வகைக் குணங்களில் இருந்து விடுபட்டதாக {நிர்க்குண யோகமாகச்} சொல்லப்படுகிறது[3].(9) மேலும் மூச்சை ஒழுங்குமுறை செய்தல் குணங்களுடன் கூடிய யோகமாகும். குணங்களற்ற யோகத்தில் மனமானது, அதன் செயல்பாடுகளில் இருந்து விடுபட்டு நிலைத்திருக்க {குவிந்திருக்க} வேண்டும். ஓ! மிதிலையின் ஆட்சியாளா {தேவராதனா}, (உள்ளிழுத்து நிறுத்தப்படும்) மூச்சானது, (வரையறுக்கப்பட்ட மந்திரத்தின் மூலம்) ஒரு திட்டவட்டமான தோற்றத்தின் மீது மனத்தைச் செலுத்தாமல் வெளியேற்றப்பட்டால், அந்தப் புதிய பயிற்சியாளனின் {உடல்} அமைப்பில் காற்று {வாயு} பெருகி, அவனுக்குப் பெரும் தீங்கை இழைக்கும் என்பதால், குணங்களுடன் கூடிய மூச்சுப் பயிற்சி {சகுண பிராணாயாமம்} மட்டுமே அவனால் முதலில் செய்யப்பட வேண்டும்[4].(10) இரவின் முதல் யாமத்தில் {ஜாமத்தில்}, மூச்சைப் பிடிக்கும் பனிரெண்டு வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உறங்கிய பிறகு, இரவின் இறுதி யாமத்தில், அதையே செய்வதற்கு வேறு பனிரெண்டு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.(11) அமைதியாக இருப்பவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், ஓய்வில் வாழ்பவனும், தன்னில் மகிழ்பவனும், சாத்திரங்களின் கருத்துகளை முழுமையாக அறிந்தவனுமான ஒருவன், (இந்த இருபத்துநான்கு வழிமுறைகளின் மூலம் மூச்சை ஒழுங்குபடுத்தி) தனது ஆன்மாவை (பரமாத்மாவில்) நிலைநிறுத்த வேண்டும்[5].(12)
[3] "9ம் ஸ்லோகத்தின் முதல் வரியில் உள்ள பிராணாயாமம் என்ற சொல், உயிர்மூச்சுகளை ஒழுங்கபடுத்தும் செயலைக் குறிக்கிறது. இரண்டாம் வரியில் உள்ள அதே சொல் மனத்தால் புலன்களை அழிப்பதைக் குறிக்கிறது. யோக சாத்திரங்களில் குறிப்பிடப்படும் பதினாறு பொருட்களில் அடுத்தடுத்து மனத்தை நிலைபெறச் செய்வது தாரணை என்று சொல்லப்படுகிறது. ஏகாகிரதை ekaagrataa என்ற சொல், தியாத்ரி, தேயம், தியானம் ஆகியவற்றுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் அறியாத மனம் குவிந்த நிலையைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "பிராணாயாமம் பயிலாதவர்களுக்கு இதை முழுமையாகப் புரிந்து கொள்வது கடினமானதாக இருக்கும். உண்மையில், சகுண பிராணாயாமத்தில், மூச்சு உள்ளிழுக்கப்படும்போது, நன்கறியப்பட்ட மந்திரத்தை மனத்தில் சொல்வதற்கு ஆகும் காலம் வரை அஃது உள்ளிழுக்கப்படும். அவ்வாறு உள்ளிழுக்கப்படும் மூச்சு நிறுத்தப்படும் போதும், ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை மனத்தால் சொல்லும் காலம் வரை அது நிறுத்தப்படும். எனவே, அவ்வாறு மூச்சு நிறுத்தி வைக்கப்படும் காலத்தின் அதே அளவுக்கு அது வெளியேற்றப்படவும் வேண்டும். தொடக்கப் பயிற்சியாளர்களுக்கு இந்தச் சகுண பிராணாயாமமே பரிந்துரைக்கப்படுகிறது. மூச்சு வெளியேறுவது குறித்து மட்டுமே சொல்லப்பட்டிருந்தாலும், அஃது உள்ளிழுப்பதையும், நிறுத்தப்படுவதையும் சேர்த்தே குறிக்கும். இம்மூன்று நடைமுறைகளும், பூரகம், கும்பகம் மற்றும் ரேசகம் என்று யோக மொழியில் குறிப்பிடப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "ஏகாந்தாசிலி என்பது சந்நியாசியைக் குறிக்கும்; ஆத்மாராமம் என்பது ஒருவன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் இல்லாமல் தன் ஆன்மாவிலேயே இன்பம் பெறும் நிலையைக் குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஐம்புலன்களின் ஐந்து களங்கங்களான ஒலி, வடிவம், ஊறு {தீண்டல்}, சுவை மற்றும் மணத்தை (அவற்றை அவை நுகரும் பொருட்களில் இருந்து விலகச் செய்து) களைந்து,(13) ஓ! மிதிலையின் ஆட்சியாளா, பிரதீபம், அபபங்கம் என்றழைக்கப்படும் நிலைகளைக் களைந்து, புலன்கள் அனைத்தும் மனத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.(14) ஓ! மன்னா, மனமானது நனவுநிலையில் {அகங்காரத்தில்} நிலைநிறுத்தப்பட வேண்டும்; நனவுநிலையானது புத்தியில் நிலைநிறுத்தப்பட வேண்டும்; புத்தியானது பிரகிருதியில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.(15) இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக இவற்றைக் கலக்கும் யோகிகள், ஒன்றேயானவனும், ரஜஸ் குணத்தில் இருந்து விடுபட்டவனும், களங்கமற்றவனும், நிலையானவனும், எல்லையற்றவனும், தூய்மையானவனும், குறையற்றவனும்,(16) நித்தியபுருஷன் என்றழைக்கப்படுபவனும், மாற்றமில்லாதவனும், பிரிக்கப்பட முடியாதவனும், சிதைவும், அழிவும் அற்றவனும், எப்போதும் இருப்பவனும், குறைவைக் கடந்தவனும், நிலையான பிரம்மமுமான பரமாத்மாவைத் தியானிக்கிறார்கள்.(17)
ஓ! ஏகாதிபதி, யோகத்தில் இருப்பவனின் குறியீடுகளைக் குறித்து இப்போது கேட்பாயாக. சமாதியில் இருப்பவனிடம் நிறைவாக உறங்குபவனிடம் காணப்படும் நிறைவும் மற்றும் உற்சாகக் குறியீடுகள் அனைத்தும் இருக்கும்.(18) சமாதியில் இருப்பவன், எண்ணெய் நிறைந்ததும், காற்று இல்லாத பகுதியில் எரிவதுமான விளக்கின் நிலைத்த மேல்நோக்கிய தழலைப் போலத் தெரிவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(19) மேகங்களில் இருந்து கனமழை பொழிந்தாலும், சற்றும் அசைக்கப்பட முடியாத ஒரு பாறையைப் போலவே அவன் இருப்பான்.(20) சங்கங்கள், பேரிகைகள், அல்லது பாடல்கள் அல்லது நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளின் ஒலி ஒன்றாக முழங்கும்போதும் அந்த ஆரவாரத்தால் அசைக்கப்பட முடியாதவனாக அவன் இருப்பான். இதுவே சமாதியில் இருப்பவனின் குறியீடாகும்.(21)
பதற்றமற்ற துணிவும், உறுதிப்பாடும் கொண்ட மனிதன், தன் கரங்களில் எண்ணெய் நிறைந்த பாத்திரத்துடன் படிகளில் ஏறும்போது, ஆயுதம் தரித்த மனிதர்களால் அச்சுறுத்தப்பட்டாலும், ஒரு துளி எண்ணெயையும் சிந்த விடாததைப் போலவே ஒரு யோகியும், தன் மனம் குவிந்த சமாதி நிலையில் பரமாத்மாவைக் காணும்போது, தன் புலன்களின் செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தியிருப்பதன் விளைவால் சற்றும் அசையாதவனாக இருப்பான். இதுவும் சமாதியில் இருக்கும் யோகியின் குறியீடாக அறியப்பட வேண்டும்.(22-24)
சமாதியில் இருக்கும்போது அந்த யோகி, நிலையானதும், அடர்ந்த இருளுக்கு மத்தியில் சுடர்மிக்க ஒளியாக இருப்பதுமான பரப்பிரம்மத்தைக் காண்கிறான்.(25) இவ்வழிமுறைகளின் மூலமே அவன் பல வருடங்கள் சென்றதும், தன் உயிரற்ற உடலைக் கைவிட்டு விடுதலையை {முக்தியை} அடைகிறான். இதையே நித்யமான ஸ்ருதி அறிவிக்கிறது.(26) இதுவே யோகிகளின் யோகம் என்று அழைக்கப்படுகிறது. அது வேறென்ன? ஞானம் கொண்டவர்கள் இஃதை அறிந்தே, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுகிறார்கள்" என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(27)
சாந்திபர்வம் பகுதி – 317ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |