Saturday, November 03, 2018

பரமஞானம்! - சாந்திபர்வம் பகுதி – 319

Supreme Knowledge! | Shanti-Parva-Section-319 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 146)


பதிவின் சுருக்கம் : சூரியனிடமிருந்து யஜுர் வேதத்தை அடைந்தது; கந்தர்வ மன்னன் விஸ்வாவசுவின் இருபத்தைந்து கேள்விகள்; அவற்றுக்குத் தாம் அளித்த விடைகள்; பிரகிருதி, ஜீவாத்மா, பரமாத்மா தொடர்புடைய மோக்ஷ அறிவியல்; ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...


யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, "ஓ! ஏகாதிபதி, புலப்படாததில் {அவ்யக்தத்தில்} வசிக்கும் பரப்பிரம்மத்தைக் குறித்து நீ என்னிடம் கேட்டாய். உன் கேள்வி ஆழ்ந்த புதிருடன் தொடர்புடையதாகும். ஓ! மன்னா, குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, முனிவர்களால் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பணிவுள்ளவனாக என்னை ஒழுங்கு செய்து கொண்டு சூரியனிடமிருந்து நான் யஜுஸ்களை {யஜுர் வேதத்தைப்} பெற்றேன்.(2) முன்பு நான், வெப்பம் தரும் தேவனை {சூரியனைத்} துதித்தபடியே கடுந்தவத்தில் ஈடுபட்டேன். ஓ! பாவமற்றவனே, என்னிடம் நிறைவடைந்த பலமிக்கச் சூரியன், என்னிடம்,(3) "ஓ! மறுபிறப்பாள முனிவரே, எவ்வளவுதான் அடைவதற்கரிதாக இருந்தாலும் எதில் உமது இதயத்தை நிலைபெறச் செய்திருக்கிறீரோ, அந்த வரத்தைக் கேட்பீராக. உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் நான் அஃதை உமக்கு அருள்வேன். எனது அருளை அடைவது மிக அரிதானதாகும்" என்றான்.(4)

வெப்பம் தரும் ஒளிக்கோள்களின் முதன்மையானவனுக்கு {சூரியனுக்குத்} தலைவணங்கிய நான் இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னேன், "எனக்கு யஜுஸ்களைக் குறித்து எந்த அறிவும் கிடையாது. தாமதமேதுமின்றி நான் அவற்றை அறிய விரும்புகிறேன்" என்றேன்.(5)

இவ்வாறு கேட்கப்பட்ட அந்தப் புனிதனமானவன் என்னிடம், "நான் உமக்கு யஜுஸ்களைக் கொடுப்பேன். வாக்கையே சாரமாகக் கொண்ட தேவி சரஸ்வதி உமது உடலுக்குள் நுழைவாள்" என்று சொன்னான்.(6)

பிறகு அந்தத் தேவன், எனது வாயைத் திறக்குமாறு ஆணையிட்டான். ஆணையிடப்பட்டவாறே நானும் செய்தேன். ஓ! பாவமற்றவனே, தேவி சரஸ்வதி என்னுடலுக்குள் நுழைந்தாள்.(7) இதனால் நான் எரியத் தொடங்கினேன். தாங்கவொண்ணா வலியால் நான் ஓர் ஓடையில் விழுந்தேன். உயர் ஆன்ம சூரியன் எனக்குச் செய்த நன்மையைப் புரிந்து கொள்ளாத நான் அவனிடம் கோபமடைந்தேன்.(8)

தேவியின் சக்தியால் நான் எரிந்து கொண்டிருந்தபோது, புனிதமான சூரியன் என்னிடம், "இந்த எரிச்சல் உணர்வை சற்றே பொறுத்திருப்பீராக. இது விரைவில் தணிவடையும், நீரும் குளிர்வடைவீர்" என்றான்.(9) உண்மையில் நான் குளிர்வடைந்தேன். ஒளியைச்செய்பவன் {சூரியன்}, சுகம் மீண்ட என்னைக் கண்டு, என்னிடம், "ஓ! மறுபிறப்பாளரே, மொத்த வேதங்களும், பிற்சேர்க்கையாகக் கருதப்படும் பிற பகுதிகளும் {கில மந்திரங்களும்}, உபநிஷத்துக்களும் உள்ளொளியால் உமக்குத் தோன்றும்.(10) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, மொத்த சதபதங்களையும் {சதபத பிராம்மணங்களையும்} நீர் தொகுக்கப் போகிறீர். அதன் பிறகு உமது புத்தி, விடுதலையின் {முக்தியின்} பாதையில் திரும்பும்.(11) சாங்கியர்கள் மற்றும் யோகியர்கள் இருவராலும் ஆசைப்படப்படுவதும், விரும்பப்படுவதுமான கதியையும் நீர் அடைவீர்" என்றான். இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்ன அந்தத் தெய்வீகமான சூரியன் அஸ்த மலைகளுக்குச் சென்றான்.(12)

அவனது இறுதி வார்த்தைகளைக் கேட்டு, நான் இருந்த இடத்தில் இருந்து அவன் சென்ற பிறகு, மகிழ்ச்சியாக இல்லம் திரும்பி தேவி சரஸ்வதியை நான் நினைவுகூர்ந்தேன்.(13) என்னால் நினைக்கப்பட்டதும், உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்துகளால் அலங்கரிக்கப்பட்டவளும், ஓம் என்ற ஓரசையை {ஓங்காரத்தைத்} தன் முன்னிலையில் கொண்டவளுமான மங்கலகரமான சஸ்வதி என் கண்களுக்கு முன்பாக உடனே தோன்றினாள்.(14) பிறகு நான் விதிப்படி அந்தத் தேவிக்கு வழக்கமான அர்க்கியத்தையும், வெப்பம் தரும் தேவர்களில் முதன்மையான சூரியனுக்கு மற்றொன்றையும் அர்ப்பணித்தேன். இந்தக் கடமையைச் செய்துவிட்டு, அவ்விரு தேவர்களிடமும் அர்ப்பணிப்புடன் என் இருக்கையில் அமர்ந்தேன். அதன்பேரில் மொத்த சதபத பிராம்மணங்களும், அவற்றின் புதிர்கள், அவற்றின் சுருக்கங்கள், அவற்றின் பிற்சேர்க்கைகள் ஆகியனவும் என் மனக்காட்சியில் தானே தோன்றியதால், நான் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தேன்.(16)

நற்சீடர்களான நூறு பேருக்கு நான் அவற்றைக் கற்பித்தேன், அதன்காரணமாக, தன் சீடர்களால் சூழப்பட்டவரும், உயர் ஆன்மா கொண்டவருமான என் தாய்மாமனுக்கு (வைசம்பாயனருக்கு) ஏற்பில்லாததைச் செய்தேன்[1].(17) பிறகு, ஓ! மன்னா {தேவராதா}, கதிர்களுக்கு மத்தியில் உள்ள சூரியனைப் போலவே, என் சீடர்களுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்த நான், உனது உயர் ஆன்ம தந்தையுடைய {ஜனகனுடைய} வேள்வியின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டேன்.(18) அந்த வேள்வியில், வேதங்களை ஓதியதற்காகக் கொடுக்கப்படும் தக்ஷிணையை யார் பெறுவது என்பதில் எனக்கும், என் தாய்மாமனுக்கும் {வைசம்பாயனருக்கும்} இடையில் ஒரு சச்சரவு ஏற்பட்டது.(19) தேவலரின் முன்னிலையிலேயே நான் தக்ஷிணையில் பாதியை எடுத்துக் கொண்டேன் (மற்றொரு பாதி என் தாய்மாமனுக்குச் சென்றது).(19) உன் தந்தை {ஜனகன்}, சுமந்தர், பைலர், ஜைமினி மற்றும் பிற தவசிகள் அனைவரும் அந்த ஏற்பாட்டுக்கு உடன்பட்டனர்[2].(20)

[1] "விப்ரியம் என்பது ஏற்பில்லாதது என்ற பொருளைக் கொண்டதாகும். யாஜ்ஞவல்கியருக்கும், அவரது தாய்மாமனும், வியாசரின் கொண்டாடபட்ட சீடருமான வைசம்பாயனருக்கும் இடையில் ஒரு சச்சரவு நடந்தது. இந்தச் சச்சரவே அடுத்த ஸ்லோகத்தில் குறிப்பாகச் சொல்லப்படுகிறது. வைசம்பாயனரே வேதங்களைப் போதிக்கும் ஆசானாக அறியப்பட்டு, தம்மைச் சுற்றிலும் பெரும் எண்ணிக்கையிலான சீடர்களைத் திரட்டி வைத்திருந்தார். எனவே, மைத்துனனான யாஜ்னவல்கியர் சூரியனிடம் இருந்து வேதங்களைப் பெற்று அவற்றைப் போதிக்கத் தொடங்கிய போது, இயல்பாகவே ஒரு பொறாமை எழுந்து, அடுத்த ஸ்லோகத்தில் குறிப்பிடப்படும் ஜனகனின் வேள்வியில் தக்ஷிணை குறித்த வெளிப்படையான சச்சரவை உண்டாக்கியது. விஷ்ணுபுராணத்தில் யாஜ்ஞவல்கியருக்கும், பைலருக்கும் இடையில் சச்சரவு நடந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. பைலரின் ஆசானான வியாசர் வந்து அவரது தரப்பை அடைந்து அவரிடம் இருந்து பெறப்பட்ட வேதங்களைத் திருப்பித் தருமாறு யாஜ்ஞவல்கியரிடம் கேட்டார். யாஜ்ஞவல்கியரும் வேதங்களைக் கக்கினார். அது தித்திரி பறவைகளின் வடிவிலான வேறு இரு முனிவர்களால் உடனே விழுங்கப்பட்டது. அதுவே பின்னர்த் தைத்திரிய உபநிஷத்தாக வெளிப்பட்டது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "நான் வேத அறிவில் வைசம்பாயனருக்கு இணையானவனாகக் கருதப்பட்டேன். சுமந்தர், பைலர், ஜைமினி, வைசம்பாயனர் ஆகியோர் வேதங்களைத் தொகுக்கும் பெரும் வியாசரின் பணியில் துணைபுரிந்தனர் என யாஜ்ஞவல்கியர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! ஏகாதிபதி, நான் இவ்வாறே சூரியனிடம் இருந்து பத்து யஜுஸ்களை ஐந்து முறை {அதாவது ஐம்பது சாகைகளைப்} பெற்றேன். பிறகு நான் ரோமஹர்ஷனுடன் சேர்ந்து புராணங்களைக் கற்றேன்.(21) ஓ! மன்னா, அந்த (மூல) மந்திரங்கள் மற்றும் தேவி சரஸ்வதியுடன், சூரியனிடம் கிடைத்த உத்வேகத் துணையால், சிறந்த சதபத பிராம்மணங்களைத் தொகுப்பதில் என்னை நிறுவிக் கொண்டு, அதற்கு முன்பு வேறு எவராலும் செய்யப்படாத பணியைச் செய்வதில் வெற்றியை அடைந்தேன். நான் விரும்பிய பாதையைப் பின்பற்றினேன், அதையே என் சீடர்களுக்கும் கற்பித்தேன்.(22,23) உண்மையில், மொத்த வேதங்களும், அவற்றின் சுருக்கங்களும் என்னால் என் சீடர்களுக்குச் சொல்லப்பட்டன. என் போதனைகளின் விளைவால், மனம் மற்றும் உடல் தூய்மையடைந்த என் சீடர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(24) நான் சூரியனிடம் இருந்து பெற்ற ஐம்பது அங்கங்களைக் கொண்ட இந்த ஞானத்தை நிலைநிறுத்திய பிறகு, அந்த ஞானத்தின் பெரும்பொருளை {பிரம்மத்தை} இப்போது தியானித்துக் கொண்டிருக்கிறேன்.(25)

ஓ! மன்னா {தேவராதா}, வேதாந்த சாத்திரங்களை நன்கறிந்தவனான கந்தர்வன் விஸ்வாவசு, இந்த ஞானத்தால் பிராமணர்களுக்குக் கிட்டும் நன்மை, அதிலிருக்கும் உண்மை, இந்த ஞானத்தின் சிறந்த நோக்கம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்காக என்னிடம் ஒரு காலத்தில் கேள்விகளைக் கேட்டான். ஓ! மன்னா வேதங்கள் தொடர்பாக மொத்தம் இருபத்து நான்கு கேள்விகளை அவன் என்னிடம் கேட்டான். இறுதியில் உள்ளுணரும் ஆய்வுமுறை குறித்த ஞானக் கிளை {மனனமெனும் யுக்தி} தொடர்பாக அவன் இருபத்தைந்தாவது கேள்வியையும் கேட்டான். அக்கேள்விகள் பின்வருமாறு: "அண்டம்{1} மற்றும் அண்டமற்றது{2} {விஷ்வாவிஷ்வம்} என்றால் என்ன? அஸ்வாம் {புருஷன்}{3} மற்றும் அஸ்வம் {பிரகிருதி}{4} என்றால் என்ன? மித்திரன்{5} என்றால் என்ன? வருணன்{6} என்றால் என்ன?(26-28) ஞானம்{7} என்றால் என்ன? ஞானத்தின் பொருள் {ஞேயம்}{8} என்றால் என்ன? புத்தியற்றது {அஜஞன் / அறியாதவன்}{9} என்றால் என்ன? புத்தியுடன் கூடியது {ஞன் / அறிகின்றவன்}{10} என்றால் என்ன? கம் {ஆனந்தம்}{11} என்றால் என்ன? மாற்றக் கொள்கை {தபஸ் / ஆலோசனை}{12} என்றால் என்ன? அஃது இல்லாதது {அதபஸ் / ஆலோசியாமை}{13} என்றால் என்ன? சூரியனை விழுங்குபவன்{14} மற்றும் சூரியன்{15} {ஸூர்யாதிஸூர்யர்கள்} என்றால் என்ன? வித்தை{16} மற்றும் அவித்யை{17} {வித்யாவித்யைகள்} என்றால் என்ன?(29) வேத்யம் {அறியக்கூடியது}{18} மற்றும் அவேத்யம் {அறியக்கூடாதது}{19} {வேத்யாவேத்யம்} என்றால் என்ன? அசைவற்றது {அசலம்}{20} மற்றும் அசைவுள்ளது {சலம்}{21} என்றால் என்ன? தொடக்கமற்றது {அக்ஷரம் / குறைவற்றது}{22}, அழிவற்றது {அவ்யயம்}{23}, அழியக்கூடியது {க்ஷேம்யம்}{24} ஆகியவை என்னென்ன?" {என்று கேட்டான்}. இந்தச் சிறந்த கேள்விகளே அந்த முதன்மையான கந்தர்வனால் {விஸ்வாவசுவால்} என்னிடம் கேட்கப்பட்டன.(30)

கந்தர்வர்களில் முதன்மையான மன்னன் விஸ்வாவசு, இந்தக் கேள்விகளை என்னிடம் ஒன்றன்பின் ஒன்றாகக் கேட்ட பிறகு, அவற்றுக்கு நான் முறையாகப் பதிலளித்தேன்.(31) எனினும் முதலில் நான் அவனிடம், "உன் கேள்விகளைக் குறித்து நான் சிந்திக்கும் வரை ஒரு குறுகிய {ஒரு முகூர்த்த} காலத்திற்குக் காத்திருப்பாயாக" என்று அவனிடம் சொன்னேன். "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன அந்தக் கந்தர்வன் அமைதியாக அமர்ந்தான்.(32) அப்போது நான், தேவி சரஸ்வதியை மீண்டும் மனத்தால் நினைத்தேன். அந்தக் கேள்விகளுக்கான மறுமொழிகள், தயிரில் இருந்து வரும் நெய்யைப் போல இயல்பாகவே என் மனத்தில் எழுந்தன.(33) உள்ளுணரும் ஆய்வுமுறையெனும் உயர்ந்த அறிவியலை நோக்கில் கொண்ட நான், ஓ! ஏகாதிபதி, உபநிஷத்துகளையும், வேதங்கள் தொடர்பான துணை சாத்திரங்களையும் என் மனத்தால் கடைந்தேன்.(34) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஏற்கனவே நான் உனக்குச் சொன்னதும், இருபத்தைந்தாவதான ஜீவனை அடிப்படையாகக் கொண்டதுமான விடுதலை {முக்தி} குறித்துச் சொல்லும் நான்காவது அறிவியலை அப்போது நான் அவனுக்கு விளக்கிச் சொன்னேன்[3].(35)

[3] "மூன்று வேதங்கள், உழவு, அறநெறி மற்றும் தண்டனை அறவியல் ஆகிய மூன்றுக்கு அடுத்து இது நான்காவது அறிவியலாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலி உள்ளதைப் போன்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "சிறந்த யுக்திரூபமான வித்தையைப் பார்த்துவிட்டு மோக்ஷத்திற்கு நன்மையும், இருபத்தைந்தாவதான ஆத்மாவை அடைந்தவனான நான் உனக்குச் சொல்லியதும் (வேதம் வார்த்தை தண்ட நீதி இவைகளை அபேக்ஷித்து) நான்காவதுமாயிருக்கிற இந்த வித்தியைச் சொன்னேன்"என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ மன்னர்களில் புலியே, இது மறுமை குறித்த ஞானத்தில் நான்காம் வகையாகும்" என்றிருக்கிறது. மேலும் அதன் அடிக்குறிப்பில், "தர்மம் {அறம்}, அர்த்தம் {பொருள்}, காமம் {இன்பம்} ஆகியவற்றுக்கு அடுத்து மோக்ஷமாக {வீடாக} இருக்கும் இது நான்காவதாகும்" என்றிருக்கிறது.

ஓ! ஏகாதிபதி {தேவராதா}, மன்னன் விஸ்வாவசுவிடம் இவை அனைத்தையும் சொன்ன பிறகு நான் அவனிடம், "நீ என்னிடம் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்கிறேன் கேட்பாயாக.(36) ஓ! கந்தர்வா, அண்டம் மற்றும் அண்டமற்றது {விஷ்வாவிஷ்வம்} என்றால் என்ன? என்று நீ கேட்ட கேள்விக்கு இப்போது பதிலளிக்கிறேன். அண்டமானது புலப்படாததாகவும் {அவ்யக்தமாகவும்}, (விடுதலையை {முக்தியை} விரும்புவோருக்குப்} பயங்கரமான பிறப்பிறப்புக் கோட்பாடுகளுடன் கூடிய மூலப் பிரகிருதியாகவும் இருக்கிறது.(37) மேலும் அது (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முக்குணங்களால் நிறைந்த படைப்புக் கோட்பாடுகளைக் கொண்டிருப்பதன் விளைவால் அஃது {அண்டம் / விஷ்வம்} குணங்களுடையதாகவும் இருக்கிறது[4]. அண்டமற்றது {அவிஷ்வம்} என்பது குணங்களேதும் அற்ற புருஷனாகும். அஸ்வாம் மற்றும் அஸ்வம் ஆகியன, பெண் மற்றும் ஆணாகவும்,{38) முன்னது பிரகிருதியாகவும், பின்னது புருஷனாகவும் சொல்லப்படுகின்றன. அதேபோல, மித்ரன் என்பது புருஷனும், வருணன் என்பது பிரகிருதியுமாகின்றன[5].(39) மேலும் ஞானமானது பிரகிருதியாகவும், ஞானத்தின் பொருளாக அறியப்படுவது புருஷனாகவும் அழைக்கப்படுகின்றன. அறியாதது (ஜீவன்), அறிவது அல்லது புத்தி ஆகிய இரண்டும் குணங்களற்ற புருஷனாக இருக்கின்றன (ஏனெனில், புருஷன் அறியாமை கொள்ளும்போதே ஜீவனாகிறான்).(40)

[4] "சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களையும் சம அளவில் கொண்டதாகப் பிரகிருதி கருதப்படுகிறது. பிரகிருதியில் இருந்து உண்டாகும் மஹத் முதலிய கோட்பாடுகள் அனைத்தும், இந்த முக்குணங்களின் பல்வேறு அளவீடுகளாலேயே அடையாளம் காணப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] "மித்திரன் என்பது ஒளி மற்றும் வெப்பத்தை அளிக்கும் தேவனாவான். வருணன் என்பது அண்டத்திலுள்ள நீரைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மாற்றக் கொள்கை கொண்டதாகவும் {தபஸ் / ஆலோசனை}, மாற்றக்கொள்கை இல்லாததாகவும் {அதபஸ் / ஆலோசனையற்றது} உள்ள கம் {ஆனந்தம்} குறித்து நீ கேட்டாய். நான் பதிலளிக்கிறேன், கம் என்பது புருஷனாகும்[6]. மாற்றக்கொள்கையுடன் கூடியது {தபஸ்} பிரகிருதியாகும். மாற்றக் கொள்கை இல்லாதது {அதபஸ்} புருஷனாகும்.(41) அதே போலவே, அவேத்யம் (அறியமுடியாதது) என்றழைக்கப்படுவது பிரகிருதியாகும்; வேத்யம் என்றழைக்கப்படுவது புருஷனாகும்.(42) அசைவற்றது {அசலம்} மற்றும் அசைவுள்ளது {சலம்} குறித்தும் நீ என்னிடம் கேட்டாய். என் பதில் என்ன என்பதைக் கேட்பாயாக. மாற்றங்களுக்கு உட்பட்டுப் படைப்பு மற்றும் அழிவுக்குக் காரணமாக இருக்கும் அசைவுள்ளது {சலமானது} பிரகிருதியாகும். மாற்றங்களுக்கு உட்படாமல் படைப்பு மற்றும் அழிவுக்குத் துணை புரிவதால் அசைவற்றது {அசலமானது} புருஷனாகும்.(43) (வேறொரு தத்துவ அமைப்பின்படி) வேத்யம் பிரகிருதியாகும்; அதே வேளையில் அவேத்யம் புருஷனாகும். பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டும் புத்தியற்றவையாகவும், நிலையானவையாகவும், அழிவற்றவையாகவும்,(44) பிறப்பற்றவையாகவும், நித்தியமானவையாகவும் அத்யாத்மம் என்ற பெயரில் உள்ள தத்துவங்களை அறிந்த தத்துவ ஞானிகள் கொண்ட தீர்மானங்களின் படியே அறியப்படுகின்றன.(45)

[6] "கம் என்பது உரையாசிரயரால் ஆனந்தம் அல்லது இன்பநிலை என்று விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

படைப்பின் காரியத்தில், பிரகிருதி அழிவற்றதாக இருப்பதன் விளைவால், பிறப்பற்ற அந்தப் பிரகிருதி, சிதைவுக்கோ, அழிவுக்கோ உட்படாததாகக் கருதப்படுகிறது. மேலும் புருஷன், மாறாததாக இருப்பதால், அழிவற்றதாகவும், மாற்றமில்லாததாகவும் இருக்கிறது.(46) பிரகிருதியில் வசிக்கும் குணங்களே அழியத்தக்கன, பிரகிருதியானவள் அழியத்தக்கவளல்ல. மேலும் பிரகிருதியானது, மாற்றங்களுக்கு உட்பட்டு, படைப்புக்கான காரணமாகச் செயல்படுகிறது. படைக்கப்பட்ட விளைவுகளாவன தோன்றவும், மறையவும் செய்கின்றன, மூலப்பிரகிருதியோ தோன்றுவதுமில்லை, மறைவதுமில்லை. எனவே பிரகிருதி அழிவற்றது என அழைக்கப்படுகிறது. இவ்வாறே, உள்ளுணர்வு ஆய்வுமுறையின் அடிப்படையிலானதும், விடுதலையையே {முக்தியையே} கதியாகக் கொண்டதுமான நான்காம் அறிவியலை நான் சொல்லிவிட்டேன்.(47) ஓ! விஸ்வாவசு, உள்ளுணர்வு ஆய்வுமுறை அறிவியலின் மூலமும், ஆசான்களிடம் காத்திருந்தும், ரிக்குகள், சாமங்கள், யஜுஸ்கள், நோற்கப்பட வேண்டிய கடமைகளின் அனைத்து நடைமுறைகள் மற்றும் வேதங்கள் அனைத்தும் மதிப்புடன் கற்கப்பட வேண்டும்.(48) ஓ! கந்தர்வர்களில் முதன்மையானவனே, வேதங்களையும், அதன் கிளைகள் அனைத்தையும் கற்றாலும், அனைத்துப் பொருட்களும் தங்கள் பிறப்பைக் கொள்வதும், அழிவடையும்போது அனைத்துப் பொருட்களும் சென்று கலப்பதும், வேதம் போதிக்க முனையும் ஞானப் பொருளுமான பரமாத்மாவை அறியாதவர்களின், உண்மையில், வேதங்கள் நிறுவ முனைவதைக் குறித்து எந்த அறிவும் இல்லாதவர்களின் வேத கல்வியானது எந்நோக்கமும் இல்லாததாக, வீணான சுமையாகவே அவர்களுக்கு இருக்கும்.(49,50)

நெய்யை விரும்பும் மனிதன், தான் முனைவது என்ன என்பதைக் காணாமல், கழுதைப்பாலைக் கடைந்தால், உடல்கழிவின் இழிமணத்திற்கு ஒப்பான ஒரு பொருளையே அடைவான்.(51) அதைப் போலவே, வேதங்கற்ற ஒருவன், எது பிரகிருதி, எது புருஷன் என்பதைப் புரிந்து கொள்ளத் தவறினால், அவன் தன் மூடப் புத்தியை மட்டுமே உறுதிசெய்து, (வேதக் கதை எனும் வடிவிலான) பயனற்ற சுமையையே சுமக்கிறான்[7].(52) ஒருவன், மீண்டும் மீண்டும் பிறந்து இறப்பதைத் தவிர்ப்பதற்காகக் கவனமான அர்ப்பணிப்புடன், பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் சிந்திக்க வேண்டும்.(53) ஒருவனுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பிறப்புகள் நேர்வைக் குறித்துச் சிந்தித்து, அழியத்தக்க விளைவுகளை உண்டாக்கும் செயலறத்தைத் தவிர்த்து, அழிவற்ற யோக அறத்தை அவன் பின்பற்ற வேண்டும்.(54)

[7] "குறிப்பிடப்படும் இருவரின் மடமையே இங்கு ஒப்பிடப்படுகிறது. நெய்க்காகக் கழுதைப் பாலைக் கடைபவன் வெறும் மூடனே. அதே போல, வேதங்களில் இருந்து பிரகிருதி மற்றும் புருஷனின் இயல்பைப் புரிந்து கொள்ளத் தவறுபனும் மூடனே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! காசியபா[8], ஒருவன் ஜீவாத்மாவின் இயல்பையும், பரமாத்மாவுடன் அது கொண்டுள்ள தொடர்பையும் தொடர்ந்து சிந்திப்பதால், குணங்கள் அனைத்தையும் நீக்குவதிலும், பரமாத்மாவைக் காண்பதிலும் வெல்கிறான்.(55) மூடப் புத்தி கொண்ட மனிதர்களால் மட்டுமே, நித்தியமானதும், புலப்படாததுமான பரமாத்மாவானது, இருபத்தைந்தாவதிலிருந்து அல்லது ஜீவாத்மாவிலிருந்து வேறுபட்டதாகக் கருப்படுகிறது. ஞானத்துடன் கூடியவர்கள இவை இரண்டையும் உண்மையில் ஒன்றாகவே காண்கிறார்கள்.(56) மீண்டும் மீண்டும் நேரும் பிறப்பிறப்புகளை அஞ்சும் சாங்கியர்களும், யோகிகளும், ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் ஒன்றாகவே கருதுகிறார்கள்" என்றேன் {யாஜ்ஞவல்கியர் கந்தர்வன் விஸ்வாவசுவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்}.(57)

[8] இந்தக் கந்தர்வன் விஸ்வாவசுவானவன், கசியபரின் மகனாவான், இது பின்வரப்போகும் 59-63 ஸ்லோகங்களுக்கிடையில் அவனாலேயே சொல்லப்படுகிறது.

அப்போது விஸ்வாவசு, "ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, ஜீவாத்மாவானது அழிவற்றது என்றும், உண்மையில் பரமாத்மாவில் இருந்து வேறாக இல்லாதது என்றும் நீர் சொல்கிறீர். எனினும், இதைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருக்கிறது. இக்காரியம் குறித்து மீண்டும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(58) இது குறித்து, ஜைகீஷவ்யர், அசிதர், தேவலர், மறுபிறப்பாள தவசியான பராசரர், நுண்ணறிவைக் கொண்டவரான {புத்திமானான} வார்ஷகண்யர், பிருகு, பஞ்சசிகர், கபிலர், சுகர், கௌதமர், ஆர்ஷ்டிஷேணர், உயர் ஆன்மாவான கர்க்கர், நாரதர், ஆஸுரி, நுண்ணறிவைக் கொண்டவரான புலஸ்தியர், ஸனத்குமாரர், உயர் ஆன்மாக் கொண்ட சுக்கிரர் மற்றும் என் தந்தையான கசியபர் ஆகியோரின் உரையாடல்களை நான் கேட்டிருக்கிறேன். அதற்கடுத்து, ருத்திரன் மற்றும் நுண்ணறிவுமிக்க விஸ்வரூபர், பல்வேறு தேவர்கள், பித்ருக்கள் மற்றும் தைத்தியர்கள் இது குறித்த செய்த உரையாடல்களையும் நான் கேட்டிருக்கிறேன். ஞானங்கள் அனைத்தின் நித்திய பொருளையே அவர்கள் பொதுவாக உரையாடுவதால், நான் அவர்கள் சொல்லும் அனைத்தையும் அடைந்திருக்கிறேன்.(59-63)

எனினும், உமது நுண்ணறிவின் துணை கொண்டு அவற்றைக் குறித்து நீர் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன். நீர் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவராகவும், சாத்திரங்களைக் கற்பிக்கும் கல்விமானாகவும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவராகவும் இருக்கிறீர்.(64) நீர் அறியாதது ஏதுமில்லை. ஓ! பிராமணரே, தேவர்கள் மற்றும் பித்ருக்களின் உலகங்களின் விளக்கப்படும் ஸ்ருதிகளின் பெருங்கடலாக நீர் இருக்கிறீர்.(65) ஒளிக்கோள்கள் அனைத்தின் நித்திய தலைவனான ஆதித்தியனே (இந்த ஞானக்கிளையின் காரியத்தில்) உமது ஆசான் என்று பிரம்மலோகத்தில் வசிக்கும் பெரும் முனிவர்கள் சொல்கின்றனர்.(66) ஓ! யாஜ்ஞவல்கியரே, ஓ! பிராமணரே, சாங்கியர்களின் மொத்த அறிவியலையும், அதிலும் குறிப்பாக யோகிகளின் சாத்திரங்களையும் நீர் அடைந்திருக்கிறீர்.(67) அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டம் குறித்து முழுமையாக அறிந்த நீர், விழிப்படைந்த ஞானத்தைக் கொண்டவர் என்பதில் ஐயமில்லை. தயிரிலிருந்து வெண்ணையைத் திரட்டி எடுப்பதைப் போல அந்த ஞானத்தைக் (குறித்து நீர் உரையாடுவதை நான்) கேட்க விரும்புகிறேன்" என்றான் {கந்தர்வன் விஸ்வாவசு}.(68)

யாஜ்ஞவல்கியர் {ஆகிய நான்}, "ஓ! கந்தர்வர்களில் முதன்மையானவனே, நீ ஞானங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளவல்லவனாவாய். எனினும், நீ கேட்பதால், என் ஆசானிடமிருந்து {சூரியனிடமிருந்து} பெற்ற வகையிலேயே நான் உனக்குச் சொல்கிறேன்.(69) புத்தியற்ற பிரகிருதியானது, ஜீவனால் உணரப்படுகிறது. எனினும், ஓ! கந்தர்வா, ஜீவனைப் பிரகிருதியால் உணர முடியாது.(70) ஜீவனானது பிரகிருதியில் பிரதிபலிக்கப்படுவதன் விளைவால், பின்னது {பிரகிருதியானது} சாங்கியர்களாலும், ஸ்ருதிகளில் குறிப்பிடப்படும் மூலக் கோட்பாடுகளை அறிந்த யோகிகளாலும் பிரதானம் என்றழைக்கப்படுகிறது.(71) ஓ! பாவமற்றவனே, மற்றது {ஆத்மாவானது}, இருபத்துநான்காவதும் (பிரகிருதியும்}, இருபத்தைந்தாவதும் {ஆன்மாவும்) காணப்படுவதைக் காண்கிறது; இருபத்தாறாவது காணப்படுவதைக் காணாதிருக்கிறது[9].(72) இருபத்தைந்தாவதானது {ஆன்மாவானது}, தன்னைவிட உயர்ந்தது ஏதுமில்லை எனக் கருதுகிறது. எனினும், உண்மையில், தன்னைக் காணும் அஃதை (இருபத்தாறாவதை {பரமாத்மாவை} ) அது {இருபத்தைந்தாவது} காண்பதில்லை[10].(73)

[9] "இந்த ஸ்லோகத்தைப் புரிந்து கொள்வது எவ்வளவு கடினம் என்பதைக் காட்டவே நான் சொல்லுக்குச் சொல்லாக மொழிபெயர்த்திருக்கிறேன். உரையாசிரியர் பின்வருமாறு சரியாகவே விளக்குகிறார்: ‘அன்னியம் அல்லது மற்றது என்பது பிரகிருதியின் பிரதிபலிப்பில் இருந்து வேறுபட்ட ஆத்மாவாகும். அதாவது பிரகிருதியின் சார்பாற்ற உண்மை இயல்பிலான ஆன்மாவாகும். உண்மை இயல்பிலான ஆன்மாவானது (விழிப்பு மற்றும் கனவு நிலைகளில் இருப்பதைப் போல) அனைத்தின் சாட்சியாக இருக்கும்போது, (இருபத்தைந்தாவதான) தன்னையும், (இருபத்துநான்காவதான) பிரகிருதியையும் உணர்கிறது. எனினும், அது (கனவற்ற உறக்கம் அல்லது யோக சமாதி நிலையில்) அத்தகைய சாட்சியாக இருக்கும்போது, பரமாத்மா, அல்லது இருபத்தாறாவதைக் காண்பதைக் காணத் தவறுகிறது’. எளிய மொழியில் சொல்வதென்றால்: ’ஆன்மாவானது, விழிப்பு மற்றும் கனவு நிலைகளில் தன்னையும், பிரகிருதியையும் உணர்கிறது. சமாதி நிலையில் மட்டுமே அது பரமாத்மாவைக் காண்கிறது’" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[10] "இங்கே சொல்லப்படுவது என்னவென்றால்: ‘இருபத்தாறாவது, அல்லது பரமாத்மாவானது எப்போதும் இருபத்தைந்தாவது அல்லது ஜீவாத்மாவைக் காண்கிறது. எனினும், செருக்கு நிறைந்த பின்னது {ஜீவாத்மாவானது}, தன்னைத் தவிர உயர்ந்தது வேறேதும் இல்லையெனக் கருதுகிறது. யோகசமாதியில் அதனால் எளிமையாக இருபத்தாறாவதை {பரமாத்மாவைக்} காண முடியும். பரமாத்மாவைக் காணத் தகுந்ததாக இருப்பினும் அது சாதாரணமாக அதைக் காணத் தவறுகிறது’. இருபத்தாறாவது தத்துவம், அல்லது இருபத்துநாலாவதோடு தங்களால் அடையாளங்காணப்படும் இருபத்தைந்தாவதையும் கூட மறுக்கும் சார்வாகர்கள் மற்றும் சௌகதர்களின் கோட்பாட்டில் உள்ள மதிப்பை உரையாசிரியர் இந்த ஸ்லோகத்தில் காண்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஞானம் கொண்ட மனிதர்கள், உண்மையில் சார்பற்ற இருப்பைக் கொண்ட இருபத்தைந்தாவதோடு அல்லது ஆன்மாவோடு, (புத்தியற்ற அல்லது செயலற்ற பிரகிருதியான) இருபத்துநான்காவது அடையாளங்காணப் படுவதை ஒருபோதும் ஏற்கக்கூடாது. மீனானது நீரில் வாழ்கிறது. அது தன் இயல்பால் தூண்டப்பட்டே அங்கே இருக்கிறது.(74) நீரில் வாழும் மீனானது, அதனிலிருந்து தனியாகக் கருதப்படுவதைப் போலவே, இருபத்தைந்தாவதும், அது தொடர்ந்து இருபத்துநான்காவது அல்லது பிரகிருதியுடன் தொடர்புநிலையில் இருந்தாலும், பிரகிருதியில் இருந்து தனிப்பட்ட சார்பற்ற உண்மையான நிலையிலேயே உணரப்பட வேண்டும். நான் என்ற மமதையில் மூழ்கும்போது, இருபத்தாறாவதோடு {பரமாத்மாவோடு} கூடிய தன் அடையாளத்தைப் புரிந்து கொள்ள முடியாத போது, பிரகிருதியுடன் தானே இருப்பதால் உண்டாகும் மாயையில் பீடிக்கப்படும் விளைவாலும், தான் சிந்திக்கும் முறையினாலும், ஜீவாத்மாவனது, எப்போதும் {மமதையில்} மூழ்கவே செய்தாலும், அத்தகைய மமதையில் இருந்து விடுபடும்போது மேல்நோக்கி எழுகிறது.(75,76) தான் ஒன்று என்றும், தான் வசிக்கும் பிரகிருதியானது மற்றொன்று என்றும் உணர்வதில் ஜீவாத்மா வெல்லும்போது, ஓ மறுபிறப்பாளனே {கந்தர்வன் விஸ்வாவசுவே}, அது பரமாத்மாவைக் காண்பதில் வென்று, அண்டத்தோடு ஒன்றும் நிலையை அடைகிறது.(77) ஓ! மன்னா, பரம் ஒன்றும், இருபத்தைந்தாவது (அல்லது ஜீவாத்மா) மற்றொன்றுமாகும். எனினும், பரமானது ஜீவாத்மாவுக்கு மேலிருப்பதன் விளைவால், ஞானிகள் அவை இரண்டையும் ஒன்றாகவே கருதுகிறார்கள்.(78)

பிறப்பிறப்பை அஞ்சுபவர்களும், இருபத்தாறாவதன் {பரமாத்மாவின்} காட்சியால் அருளப்பட்டவர்களும், உடல் மற்றும் மனத்தூய்மை கொண்டவர்களும், பரமாத்மாவில் பக்தி கொண்டவர்களுமான யோகிகளும், சாங்கிய தத்துவ அமைப்பைப் பின்பற்றுபவர்களும், இந்தக் காரணங்களினாலேயே ஜீவாத்மாவை அழிவற்றதாக {ஜீவாத்மா அழிவற்றது என்ற கருத்தை} வரவேற்பதில்லை[11]. ஒருவன் பரமாத்மாவைக் கண்டு, தன் தனித்துவ நனவுநிலையை {அகங்காரத்தை} இழந்து, தன்னைப் பரத்துடன் அடையாளம் காணும்போது, அவன் அனைத்தையும் அறிந்தவனாகி, அனைத்தையும் அறிந்த அத்தகைய நிலையால், மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து விடுபடுகிறான். ஓ! பாவமற்றவனே, புத்தியற்ற பிரகிருதி, புத்தியுடன் கூடிய ஜீவாத்மா மற்றும் அனைத்தையும் அறிந்த பரமாத்மா ஆகியவற்றைக் குறித்து ஸ்ருதிகளில் உள்ள குறியீடுகளின்படியே நான் உனக்கு உண்மையாகச் சொல்லியிருக்கிறேன். அறிவது மற்றும் அறியப்படுவது ஆகியவற்றுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவனும், ஞானம் மற்றும் அறியப்பட்டது ஆகியவற்றுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவனுமான மனிதன், அண்டத்தின் மூலக் காரணமான கேவலம் {முழுமையாகவும்} மற்றும் கேவலமற்ற {முழுமையற்றதாகவும்} என இரண்டாகவும், ஜீவாத்மா {இருபத்தைந்தாவது} மற்றும் பரமாத்மாவாகிய {இருபத்தாறாவதுமாகிய} இரண்டாகவும் இருக்கிறான்" என்றேன் {யாஜ்ஞவல்கியன் என்கிற நான்}.(79-82)

[11] "பொதுவான கோட்பாடுகள், ‘ஜீவாத்மாவானது பிறப்பற்றதாகவும், மரணமற்றதாகவும் இருப்பதாலும், பிறப்பென்றும் மரணமென்றும் அழைக்கப்படும் நிலைகள், அதனுடன் கலந்த நிலையில் விடுதலைக்கு வழிவகுக்காமல் இருக்கும் பிரகிருதியின் மாற்றங்களால் மட்டுமே நேர்கிறது என்பதாலும் {ஜீவாத்மாவானது} அழிவற்றதாகும்’ எனச் சொல்லும். இந்த ஸ்லோகத்தில் அந்தப் பொதுக்கோட்பாடு கைவிடப்படுகிறது. இங்கே சொல்லப்படுவது, ‘ஜீவாத்மாவானது, பரமாத்மாவோடு அடையாளம் காணப்படும்போது, அந்த மாற்றத்தையே மரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்பதால் அது {ஜீவாத்மா} மரணமற்றதல்ல’ என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

விஸ்வாவசு, "ஓ! பலமிக்கவரே, தேவர்களின் மூலப்பொருளாக இருக்கும் விடுதலையை {முக்தியைக்} குறித்துப் போதுமான அளவுக்கு முறையாக நீர் சொல்லிவிட்டீர். சிறந்த உண்மையை நீர் சொன்னீர். தீராத அருள் எப்போதும் உம்மிடம் இருக்கட்டும், உமது மனம் எப்போதும் புத்தியுடன் கலந்திருக்கட்டும்" என்றான்".(83)

யாஜ்ஞவல்கியர் தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் கந்தர்வ இளவரசன் {விஸ்வாவசு}, ஒளிமிக்க அழகில் ஒளிர்ந்தபடியே சொர்க்கத்தை நோக்கிச் சென்றான். என்னைவிட்டுச் செல்லும் முன் அந்த உயர் ஆன்மா {விஸ்வாவசு}, என்னை வலம் வந்து முறையாகக் கௌரவித்தான், நானும் உயர்வான நிறைவுடன் அவனைப் பார்த்தேன்.(84) ஓ! மன்னா {தேவராதா}, என்னிடம் இருந்து பெற்ற அறிவியலை, பிரம்மலோகத்தில் வசிக்கும் தேவர்கள், பிற தேவர்கள், பூமியில் வசிப்போர், பாதாளலோகவாசிகள் மற்றும் விடுதலை {முக்தி} பாதையைப் பின்பற்றுவோருக்கு அவனே {விஸ்வாவசுவே} கற்பித்தான்.(85) சாங்கியர்கள், தங்கள் அமைப்பின் நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். யோகிகள், தங்கள் அமைப்பில் கற்பிக்கப்படும் நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர, தங்கள் விடுதலையை {முக்தியை} அடைய விரும்பும் வேறு பிறரும் இருக்கின்றனர். அவர்களிடம் இந்த அறிவியல் புலப்படத்தக்க கனிகளை உண்டாக்கும்.(86) ஓ! மன்னா, விடுதலையானது {முக்தியானது / மோக்ஷமானது}, ஞானத்தில் இருந்தே உண்டாகிறது. ஞானமில்லாமல் அஃதை ஒருபோதும் அடைய முடியாது. ஓ! ஏகாதிபதி, ஞானிகள் இதையே சொல்கின்றனர். எனவே, பிறப்பிறப்பில் இருந்து தன்னை விடுதலை அடையச் செய்யும் உண்மை ஞானத்தை அனைத்து விவரங்களுடன் அறிவதில் ஒருவன் முனைப்பைக் காட்ட வேண்டும்.(87) நம்பிக்கையுள்ள ஒருவன், பிராமணனிடமிருந்தோ, க்ஷத்திரியனிடமிருந்தோ, வைசியனிடமிருந்தோ, தாழ்ந்த பிறவியைச்சார்ந்த ஒரு சூத்திரனிடமிருந்தோ கூட அந்த ஞானத்தை அடைய வேண்டும். அத்தகைய ஞானத்தில் எப்போதும் அவன் மதிப்பைக் காட்ட வேண்டும். நம்பிக்கையுள்ள ஒருவனைப் பிறப்பிறப்பால் பீடிக்க முடியாது[12].(88)

[12] கும்பகோணம் பதிப்பில், "ஆத்மாவை ஜனனமரணங்களிலிருந்தும் விடுவிக்கக்கூடிய ஞானத்தை உண்மையாகத் தேட வேண்டும். ஸ்ரத்தையுள்ளவன் பிராமணனிடமிருந்தோ, க்ஷத்திரியனிடமிருந்தோ, வைஸ்யனிடமிருந்தோ, சூத்திரனிடமிருந்தோ, நீசனிடமிருந்தோ எப்போதும் ஞானத்தை அடைந்து ஸ்ரத்தை வைக்க வேண்டும். ஸ்ரத்தையுடையவனை ஜனனமரணங்கள் தொடருகிறதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.

அனைத்துவகை {வர்ணங்களைச் சார்ந்த} மனிதர்களும் பிராமணர்களே. அனைவரும் பிரம்மத்திலிருந்தே எழுந்தனர். அனைத்து மனிதர்களும் பிரம்மத்தையே சொல்கிறார்கள்[13]. பிரம்மத்தில் இருந்து பெறப்பட்டு, அதை {பிரம்மத்தை} நோக்கியே செலுத்தப்படும் புத்தியின் துணையுடன், பிரகிருதி மற்றும் புருஷன் ஆகியவற்றைக் குறித்த இந்த அறிவியலை நான் கற்பிக்கிறேன். உண்மையில் இந்த மொத்த அண்டமும் பிரம்மமே.(89) பிராமணர்கள் பிரம்மாவின் வாயிலிருந்தும், க்ஷத்திரியர்கள் கரங்களில் இருந்தும், வைசியர்கள் தொப்புளிலிருந்தும், சூத்திரர்கள் அவனது பாதங்களில் இருந்து உண்டானார்கள். (இவ்வழியிலேயே உண்டான) அனைத்து வகையினரும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களாகக் கருதப்படக்கூடாது.(90) ஓ! மன்னா {தேவராதா}, அறியாமையால் தூண்டப்படும் மனிதர்கள் அனைவரையும், இறப்பையும், பிறப்பையும் அடையச் செய்யும் காரணமாக இருப்பது செயல்களே[14]. ஞானமற்றவர்களான அனைத்து வகை {வர்ண} மனிதர்களும், பயங்கர அறியாமையால் இழுத்துச் செல்லப்பட்டு, பிரகிருதியில் இருந்து உண்டாகும் கோட்பாடுகளின் மூலம் பல்வேறு வகைகளில் {வர்ணங்களில்} வீழ்கிறார்கள்.(91) இக்காரணத்தினாலேயே அனைவரும் ஞானத்தை அடைய முனைய வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அஃதை {அந்த ஞானத்தை} அடைய முனைய வேண்டும் என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஞானம் கொண்ட ஒருவனே பிராமணனாவான். (க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களாகிய) பிறரும் ஞானத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, இந்த விடுதலை {முக்தி} அறிவியல் அனைவருக்குமானதாகும். ஓ! மன்னா, ஞானிகளால் இது சொல்லப்பட்டிருக்கிறது[15].(92) உன்னால் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் வாய்மைக்கு ஏற்புடைய வகையில் என்னால் பதிலளிக்கப்பட்டது. எனவே, துன்பங்கள் அனைத்தையும் நீ களைவாயாக. இவ்விசாரணையின் {பொருளின்} மறு எல்லைக்குச் செல்வாயாக {ஞானத்தின் மறுகரையை அடைவாயாக}. உன் கேள்விகள் நன்றாக இருந்தன. எப்போதும் உன் சிரத்தில் அருளிருக்கட்டும்" என்றார் {யாஜ்ஞவல்கியர்}".(93)

[13] "மனிதர்கள் அனைவரும் பேசுகின்றனர், வாக்கே பிரம்மமாக இருப்பதால், அனைவரும் பிரம்மத்தைச் சொல்பவர்களாகவே கருதப்பட வேண்டும். மேலும் பிரம்மம் என்பது குறிப்பாக வேதங்களைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டால், அஃது அனைத்துமனிதர்களும் வேதங்களைச் சொல்பவர்களே, அல்லது வேத கல்விக்குத் தகுந்தவர்களே என்று பொருள்படும். இத்தகைய தாராளக் கருத்தானது, யாஜ்ஞவல்கியர் கற்பிக்கும் விடுதலை அறத்தால் மட்டுமே சாத்தியமாகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[14] "செயல்கள் அழிக்கப்படாத வரை விடுதலை {முக்தி} சாத்தியமில்லை என்பது கோட்பாடாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[15] கும்பகோணம் பதிப்பில், "அப்படியே அறிவீனமான வர்ணங்கள் மிகுந்த அஜ்ஞானத்தால் பிராகிருதமான பலபிறவிகளில் விழுகின்றன. ஆகையால், ஞானமானது எவ்விதமாகவாவது தேடத்தக்கது. இந்தப் பிரம்மமானது எங்குமிருக்கிறதென்பது என்னால் உனக்குச் சொல்லப்பட்டது. ஓ! அரசனே, பிரம்மாவானாலும் {பிராமணர்களானாலும்}, மற்றவனானாலும் அந்தப் பிரம்மத்திலிருக்கிறவனுக்கு நிலைபெற்ற மோக்ஷமுண்டென்று சொல்லுகிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அறிவற்ற அனைத்து வர்ணத்தாலும் இவ்வழியிலேயே வீழ்கின்றனர். பங்க அறியாமையில் மூழ்கும் அவர்கள் பிரகிருதியின் பிறப்பெனும் வலையால் சூழப்படுகிறார்கள். எனவே, ஒருவன் எவ்வழியிலேனும் ஞானப் பாதையிலேயே நடக்க முனைய வேண்டும். நான் இது குறித்து உனக்குச் சொல்லியிருக்கிறேன். பரப்பிரம்மத்தில் நிறுவச்செய்ய ஒரு மனிதன் விடுதலையை {முக்தியை} அடைபவனாகவும், பிராமணர்களில் இந்திரனாகவும் எப்போதும் சொல்லப்படுகிறான்" என்றிருக்கிறது.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "நுண்ணறிவைக் கொண்ட யாஜ்ஞவல்கியரால் இவ்வாறு கற்பிக்கபட்ட மிதிலையின் மன்னன் {தேவராதன்} மகிழ்ச்சியால் நிறைந்தான்.(94) அம்மன்னன், அந்த முதன்மையான தவசியை வலம் வந்து அவரைக் கௌரவித்தான். மன்னன் விடைகொடுத்ததும், அவர் {யாஜ்ஞவல்கியர்} அவனது சபையில் இருந்து புறப்பட்டார். விடுதலை {முக்தி} அறம் குறித்த ஞானத்தை அடைந்த மன்னன் தேவராதன் தன் ஆசனத்தில் அமர்ந்து,(95) பத்து லட்சம் பசுக்களையும், பெரும் அளவிலான தங்கத்தையும், பெரும் அளவிலான ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களையும் தீண்டி, அவற்றைப் பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான்.(96) அந்த முதிர்ந்த மன்னன் {தேவராதன்}, விதேஹர்களின் ஆட்சியுரிமையில் தன் மகனை நிறுவிவிட்டு, யதிகளின் நடைமுறைகளைப் பின்பற்றி வாழத் தொடங்கினான்.(97) அம்மன்னன், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) பொதுவான கடமைகள் மற்றும் கடமை தவறுதல்கள் {தர்மாதர்மங்கள்} அனைத்தையும் சிறுமையாக நினைத்து, சாங்கியர்கள் மற்றும் யோகிகளின் அறிவியலை முழுமையாகக் கற்கத் தொடங்கினான்.(98) முடிவற்றவனாகத் தன்னைக் கருதிய அவன், சார்பற்ற, நித்தியமான ஒருவனை {பரமனை} மட்டுமே சிந்திக்கத் தொடங்கினான். பொதுவான கடமைகள் மற்றும் கடமை தவறல்கள், அறம் மற்றும் மறம், வாய்மை மற்றும் பொய்மை,(99) பிறப்பு மற்றும் இறப்பு, பிரகிருதியால் உண்டாகும் கோட்பாடுகள் தொடர்புடைய பிற பொருட்கள் அனைத்தையும் அவன் கைவிட்டான்.(100)

சாங்கியர்களும், யோகிகளும், தங்கள் அறிவியல்களின் போதனைப்படியே, இந்த அண்டத்தைப் புலப்படுவது மற்றும் புலப்படாதது ஆகியவற்றின் செயல்பாட்டு விளைவு எனவே கருதுகிறார்கள்.(101) தற்சார்புடையதும், உயர்ந்ததில் உயர்ந்ததும், நித்தியமானதும், தூய்மையானதுமான பிரம்மமானது நன்மை மற்றும் தீமையில் இருந்து விடுபட்ட ஒன்றாக இருப்பதாகக் கல்விமான்கள் சொல்கிறார்கள். எனவே, ஓ! ஏகாதிபதி, நீ தூய்மையடைவாயாக.(102) கொடையாளி, கொடைபெறுபவன், கொடை, கொடையளிக்கப்பட விதிக்கப்பட்டவை ஆகியன அனைத்தும் புலப்படாத ஆன்மாவாகவே கருதப்படுகின்றன. ஆன்மாவே அந்த ஆன்மாவின் ஒரே உடைமையாகும். எனவே, ஒருவனுக்கு அந்நியனாக எவன் இருக்க முடியும்? நீ எப்போதும் இவ்வழியிலேயே சிந்திப்பாயாக. ஒருபோதும் வேறு வகையில் சிந்திக்காதே.(103,104) குணங்களுடன் கூடிய பிரகிருதி எது, குணங்களைக் கடந்த புருஷன் எது என்பதை அறியாதவனே, அந்த ஞானமற்றவனே, புனித நீர்நிலைகளுக்குச் சென்று வேள்விகளைச் செய்கிறான்[16].(105) ஓ! குருவின் மகனே {யுதிஷ்டிரா}, ஒருவன் வேத கல்வியாலோ, தவங்களாலோ, வேள்விகளாலோ ஒருபோதும் பிரம்ம நிலையை அடைய முடியாது. புலப்படாதவன், அல்லது பரமனை உணர்வதில் வென்றால் மட்டுமே அவன் மதிப்புமிக்கவனாகக் கருதப்படுகிறான்.(106) மஹத்திடம் காத்திருப்பவர்கள் {மஹத்தை பூஜிக்கிறவர்கள்} மஹத்தின் உலகங்களை அடைகிறார்கள். நனவுநிலையிடம் {அகங்காரத்திடம்} காத்திருப்பவர்கள், நனவுநிலைக்குரிய இடத்தை அடைகிறார்கள். உயர்ந்ததிடம் காத்திருப்பவர்கள், இவற்றைவிட உயர்ந்த இடங்களை அடைகிறார்கள்[17].(107)

[16] கும்பகோணம் பதிப்பில், "ஸகுணமான அவ்யக்தத்தையும், நிர்க்குணத்தையும் அறியாதவனும், பண்டிதனுமானவன் புண்ணியத் தீர்த்தஸ்நானங்களையும், யாகங்களையும் செய்ய வேண்டும் என்றிருக்கிறது". பிபேக் திப்ராயின் பதிப்பில், "குணங்களுடன் கூடிய மற்றும் குணங்களற்ற புலப்படாததை {பிருகிருதி மற்றும் புருஷனை} அறியாத மனிதன் எப்போதும் புண்ணியத்தலங்களுக்குச் சென்று, வேள்விகளைச் செய்கிறான்" என்றிருக்கிறது.

[17] கும்பகோணம் பதிப்பில், "ஒருவன் தன்னுடைய வேதங்களாலும், தவங்களாலும், யாகங்களாலும் அவ்யக்தஸ்தானத்தை அடைகிறதில்லை. அவ்யக்தத்தை அறிந்தவன் பூஜிக்கப்படுகிறான்; அப்படியே, மகத்தத்வத்தின் ஸ்தானத்தையும், அஹங்காரத்தின் ஸ்தானத்தையும், அஹங்காரத்திற்கு மேலுள்ள ஸ்தானங்களையும் அடைவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "புலப்படாதது உணரப்பட வேண்டும். மகத் மற்றும் நனவு {அகங்கார} நிலைகளும் அவ்வாறே உணரப்பட வேண்டும். ஒருவன் அந்த நனவுநிலைக்கு மேம்பட்ட உயர்ந்த நிலையை அடைய வேண்டும்" என்றிருக்கிறது.

சாத்திரங்களைக் கற்ற கல்விமான்களும், புலப்படாத பிரகிருதியைவிட உயர்ந்ததாக இருக்கும் நித்திய பிரம்மத்தை உணர்வதில் வென்றவர்களுமான மனிதர்கள், பிறப்பிறப்பைக் கடந்ததும், இருப்பில் உள்ளதும், இல்லாதிருப்பதும், குணங்களில் இருந்து விடுபட்டதுமான நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(108) நான் இந்த ஞானம் அனைத்தையும் ஜனகனிடம் இருந்து பெற்றேன். ஜனகன் அதை யாஜ்ஞவல்கியரிடம் இருந்து அடைந்தான். ஞானமே மிக மேன்மையானது. வேள்விகளை அதனோடு ஒப்பிட முடியாது. ஞானத்தின் துணையாலேயே ஒருவன், இக்கட்டுகளும், ஆபத்துகளும் நிறைந்த உலகமெனும் பெருங்கடலைக் கடப்பதில் வெல்கிறான். வேள்விகளின் மூலம் ஒருவனால் அந்தப் பெருங்கடலை ஒருபோதும் கடக்க முடியாது.(109) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறப்பிறப்பு மற்றும் பிற தடைகளை ஒருவன் சாதாரண முயற்சியின் மூலம் கடக்க முடியாது. வேள்விகள், தவங்கள், நோன்புகள் மற்றும் நியமங்களால் மனிதர்கள் {மோக்ஷத்தையடைவதில்லை;} சொர்க்கத்தையே அடைகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கிருந்து மீண்டும் பூமியிலேயே விழுகிறார்கள்.(110) எனவே, மிகத் தூய்மையானதும், அருளப்பட்ட நிலையும், களங்கமற்றதும், புனிதமானதும், (விடுதலையாக இருப்பதால்) அனைத்து நிலைகளையும் கடந்திருப்பதுமான பர நிலையை நீ மதிப்புடன் துதிப்பாயாக. ஓ மன்னா, க்ஷேத்திரத்தை உணர்வதன் மூலம், ஞானமீட்டும் வேள்வியைச் செய்வதன் மூலம் நீ உண்மையில் ஞானியாவாய்.(111) பழங்காலத்தில் யாஜ்ஞவல்கியர், உபநிஷதக் கல்வியின் மூலம் அடையப்படும் நன்மையை மன்னன் ஜனகனுக்குச் செய்தார். நித்தியமானதும், மாற்றமில்லாததுமான பரத்தைக் குறித்தே அந்தப் பெரும் முனிவர் {யாஜ்ஞவல்கியர்}, மிதிலையின் மன்னனிடம் {ஜனக குல தேவராதனிடம்} உரையாடினார். அஃது அவனை, மங்கலமானதும், அழிவற்றதும், அனைத்து வகைத் துன்பங்களையும் கடந்திருப்பதுமான பிரம்ம நிலையை அடையத்தக்கவனாக்கியது" {என்றார் பீஷ்மர்}.112.

சாந்திபர்வம் பகுதி – 319ல் உள்ள சுலோகங்கள் : 112

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்