Decrepitude and death! | Shanti-Parva-Section-320 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 147)
பதிவின் சுருக்கம் : முதுமை மற்றும் மரணத்தைக் கடக்கும் வழிமுறை குறித்து ஜனகனுக்குச் சொன்ன பஞ்சசிகர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "பெரும் சக்தியையும், பெரும் செல்வத்தையும் பெற்ற பிறகு, நெடுங்காலத்தை வாழ்நாளாகப் பெற்ற பிறகு, ஒருவன் எவ்வாறு மரணத்தைத் தவிர்ப்பதில் வெல்வான்?(1) தவங்கள், (வேதங்களில் விதிக்கப்பட்ட) பல்வேறு செயல்களைச் செய்வது, ஸ்ருதிகளில் ஞானம், மருந்துகள் உண்பது ஆகிய இந்த வழிமுறைகளில் எதன் மூலம் ஒருவன் முதுமையையும், மரணத்தையும் தவிர்ப்பதில் வெல்லலாம்?" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம், "இது தொடர்பாகப் பழங்கதையில், நடைமுறையில் பிக்ஷுவாக {சந்நியாசியாக} இருந்த பஞ்சசிகருக்கும், ஜனகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில் விதேஹர்களின் ஆட்சியாளனான ஜனகன், வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், கடமைகள் {தர்மங்கள்} அனைத்தின் நோக்கம் மற்றும் பொருள் குறித்துத் தான் {ஜனகன்} கொண்டிருந்த ஐயங்கள் அனைத்தும் நீங்கியவருமான பெரும் முனிவர் பஞ்சசிகரிடம் கேள்வி கேட்டான்.(4) மன்னன் {ஜனகன்}, "ஓ! புனிதமானவரே, எவ்வொழுக்கத்தின் மூலம் ஒருவன் முதுமையையும், மரணத்தையும் கடக்கலாம்? தவங்களாலா? புத்தியாலா, (வேள்விகள் மற்றும் நோன்புகள் போன்ற) அறச்செயல்களாலா? சாத்திரக் கல்வி மற்றும் ஞானத்தாலா?" என்று கேட்டான்.(5)
விதேஹர்களின் ஆட்சியாளனால் இவ்வாறு கேட்கப்பட்டவரும், புலப்படாத அனைத்தின் பொருட்களை அறிந்தவரும், கல்விமானுமான பஞ்சசிகர், "(முதுமை மற்றும் மரணம் ஆகிய) இவை இரண்டையும் தவிர்க்க முடியாது; எந்தச் சூழ்நிலையிலும் இதைத் தவிர்க்க முடியாது என்பதும் உண்மையுமல்ல.(6) பகல்களோ, இரவுகளோ, மாதங்களோ நிற்பதில்லை. நிலையற்றவனாக இருந்தாலும், (நிவிருத்தி அறம் அல்லது செயல்கள் அனைத்தையும் தவிர்த்தல் எனும்) நித்திய {நிலையான} பாதையைப் பின்பற்றும் மனிதனால் மட்டுமே பிறப்பிறப்பைத் தவிர்ப்பதில் வெல்ல முடியும்[1].(7) அனைத்து உயிரினங்களுக்கும் அழிவு ஏற்படுகிறது. முடிவிலா கால வெள்ளத்தில் உயிரினங்கள் அனைத்தும் நிற்காமல் பிறந்து கொண்டிருப்பது காணப்படுகிறது. (மீட்பதற்கு) ஓர் ஓடமும் இல்லாததும், முதுமை மற்றும் மரணம் என்ற இருபெரும் முதலைகளால் தொற்றப்பட்டதுமான முடிவிலா கால வெள்ளத்தில் பிறப்பவை, தம் துணைக்கு யாருமில்லாமல் மூழ்கிப்போகின்றன.(8)
[1] கும்பகோணம் பதிப்பில், "இந்த ஜராமரணங்களுக்கு நிவிருத்தியில்லை. ஒருவிதத்தாலும் இவைகளை மீறிச் செய்ய முடியாது. சென்ற பகல்கள் மறுபடியும் திரும்புகிறதில்லை. மாஸங்களும் திரும்புகிறதில்லை. ராத்ரிகளும் திரும்புகிறதில்லை. எல்லாப்பிராணிகளையும் நாசஞ்செய்வதும், நிலையாததுமான இந்தக் காலமானது நெடுநாளாக நிலையான மார்க்கத்தை அடைகின்றது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இவையிரண்டையும் வெல்ல முடியாது. ஆனால் இவற்றை வெல்லவே முடியாது என்பதும் உண்மையல்ல. பகல்களும், இரவுகளும், மாதங்களும் கடந்து செல்கின்றன. ஒரு மனிதன் தற்காலிகமானவனாகவே இருப்பினும், அவனால் நிலையான உறுதியான நிலையை அடைய முடியும்" என்றிருக்கிறது.
அந்த வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் ஒருவன், உதவி பெற நண்பன் எவனையும் காண்பதிலும், வேறு எவனது நலத்தில் ஈர்க்கப்படுவதிலும் தவறுகிறான்.(9) அவன், தன் பாதையில் மட்டுமே மனைவிகளையும், பிற நண்பர்களையும் சந்திக்கிறான். எந்தக் காலத்திலும் எவருடனும் இத்தகைய தோழமையை அவன் அதற்கு முன்பு அனுபவிப்பதில்லை.(10) கால வெள்ளத்தில் பிறக்கும் உயிரினங்கள், காற்றால் அசைக்கப்பட்டுப் பேரொலியுடன் ஒன்றையொன்று சந்திக்கும் மேகத்திரள்களைப் போல ஒருவருக்கொருவர் மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றனர்.(11) முதுமையும், மரணமும் ஓநாய்களைப் போல உயிரினங்கள் அனைத்தையும் விழுங்குபவையாகும். உண்மையில் அவை, பலமிக்கவை மற்றும் பலமற்றவை, குட்டை மற்றும் நெட்டையான அனைத்தையும் விழுங்குகின்றன.(12)
எனவே, நிலையற்றவையாக இருக்கும் உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் ஆன்மா மட்டுமே என்றென்றும் {நித்தியமாக} நிலைத்திருக்கிறது. உயிரினங்கள் பிறக்கும்போது அவன் ஏன் மகிழ வேண்டும்? அவை இறக்கும் போது அவன் ஏன் வருந்த வேண்டும்?(13) 'எங்கிருந்து நான் வந்தேன்? நான் யார்? நான் எங்கே செல்லப் போகிறேன்? நான் யாருடையவன்? எதன் முன்னால் நான் ஓயப்போகிறேன்? {இனி எங்கே இருக்கப் போகிறேன்?} நான் என்னவாகப் போகிறேன்?' என்று எந்தக் காரணத்திற்காகவும், எதற்காகவும் நீ ஏன் வருந்த வேண்டும்?(14) (உன் செயல்களுக்கு) உன்னைத் தவிர வேறு யார் சொர்க்கத்தையோ, நரகத்தையோ காணப் போவது? எனவே சாத்திரங்களை வீசியெறியாமல் ஒருவன் கொடைகளை அளிக்கவும், வேள்விகளைச் செய்யவும் வேண்டும்" என்றார் {பஞ்சசிகர்}.(15)
சாந்திபர்வம் பகுதி – 320ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |