The Lesson leading to cleansed heart! | Shanti-Parva-Section-322 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 149)
பதிவின் சுருக்கம் : உலகம் நிலையற்றது; பிரம்மஞானத்தைக் கொண்டு பிறப்பிறப்பில் இருந்து விடுதலையடைய வேண்டிய அவசியம்; இதயத்தைத் தூய்மையாக்கும் பாடத்தைச் சுகருக்குச் சொன்ன வியாசர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "பழங்காலத்தில், வியாசரின் மகனான சுகர் எவ்வாறு விடுதலை நிலையை வென்றெடுத்தார்? நீர் சொல்லி அக்கதையைக் கேட்க நான் விரும்புகிறேன். இதில் நான் தணியாத ஆவல் கொண்டிருக்கிறேன்.(1) ஓ! குரு குலத்தவரே, புலப்படாதது ({வெளிப்படாத} காரணம்), புலப்படுவது ({வெளிப்படும்} விளைவுகள்), அவற்றில் இருந்தாலும், அவற்றில் பற்றில்லாத உண்மை (அல்லது பிரம்மம்), சுயம்புவான நாரயாணனின் செயல்கள் ஆகியவற்றைக் குறித்த தீர்மானங்களை உமது புத்திக்கு அறிந்தவரை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "சாதாரண மனிதர்களால் தீங்கற்றவை என்று கருப்படும் செயல்களைச் செய்து கொண்டு, அச்சமில்லாமல் வாழ்ந்து வரும் தம் மகன் சுகரைக் கண்ட வியாசர், அவருக்கு வேதம் முழுமையும் கற்பித்து, ஒருநாள் அவரிடம் இவ்வார்த்தைகளில் பேசினார்.(3)
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "ஓ! மகனே, உன் புலன்களை வென்று, அதீத குளிர், அதீத வெப்பம், பசி, தாகம், காற்று ஆகியவற்றையும் வென்று, (யோகிகள் செய்வதைப் போல) அவற்றை வென்ற பிறகு, அறம் பயில்வாயாக.(4) வாய்மை {ஸத்யம்}, நேர்மை {ருஜுவாயிருத்தல்}, கோபம் மற்றும் வன்மத்தில் இருந்து விடுதலை {குரோதமின்மை மற்றும் அஸூயையில்லாமை}, தற்கட்டுப்பாடு {தமம்}, தவங்கள், நற்கடமைகள் {துன்பம் செய்யாமை}, கருணை {குரூரத் தன்மையில்லாமை} ஆகியவற்றை நீ முறையாகப் பயில்வாயாக.(5) வாய்மையைச் சார்ந்திருக்கும் நீ, அனைத்துவகை நேர்மையின்மைகளையும், வஞ்சனைகளையும் கைவிட்டு, அறத்தில் உறுதியான அர்ப்பணிப்புக் கொள்வாயாக. தேவர்கள் மற்றும் விருந்தினர்கள் உண்ட பிறகு எஞ்சும் உணவில் உன் வாழ்வைத் தாங்கிக் கொள்வாயாக.(6) நீர்ப்பரப்பில் இருக்கும் நுரையைப் போலவே உன் உடலும் நிலையற்றதாகும். ஜீவாத்மாவானது, ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையைப் போலப் பற்றில்லாமல் அதில் {உடலில்} அமர்ந்திருக்கிறது. ஏற்புடைய பொருட்கள் அனைத்தின் துணையும் மிகக் குறுகிய காலம் வருபவையே. ஓ! மகனே பிறகேன் நீ இத்தகைய மறதியில் உறங்குகிறாய்?(7) உன் எதிரிகள் {ஆசைகள்} கவனத்துடனும், விழிப்புடனும், (உன்மீத பாய) எப்போதும் தயாராகவும், தங்கள் வாய்ப்புக்காக எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இஃதை அறியாமல் நீ ஏன் மூடனாயிருக்கிறாய்?(8)
நாட்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கடக்கும்போது, உன் வாழ்நாள் காலமும் குறைகிறது. உண்மையில், உன் வாழ்நாள் காலம் இடையறாமல் குறைந்து கொண்டிருக்கும்போது, (மீட்பின் வழிமுறைகளைக் கற்க) நீ ஏன் ஆசான்களை நோக்கி ஓடாமல் இருக்கிறாய்?(9) (மறுமை இருப்பில்) நம்பிக்கையற்றவர்களே, குருதியின் சதையும் பெருகச் செய்யும் விளைவை மட்டுமே கொண்ட இவ்வுலகம் சார்ந்த பொருட்களில் தங்கள் இதயத்தை நிலைநிறுத்துகிறார்கள். மறுமையைப் பொறுத்தவரையில் அவர்கள் முற்றிலும் கவலையற்றவர்களாகவே இருக்கிறார்கள்.(10) பிழையான புரிதல்களின் மூலம் மலைப்படைந்த மனிதர்கள், அறத்தில் வெறுப்பை வெளிக்காட்டுகிறார்கள். சுற்றி வளைந்து செல்லும் தவறான பாதையில் தவறாக வழிநடத்தப்படும் மனிதர்களுக்குப் பின்னால் செல்லும் மனிதனும் அவர்களைப் போலவே இணையாகப் பீடிக்கப்படுகிறான்.(11) எனினும், நிறைவடைந்தவர்கள், சாத்திரங்களில் அர்ப்பணிப்புள்ளவர்கள், உயர் ஆன்மா கொண்டவர்கள், பெரும் வலிமையைக் கொண்டவர்கள் ஆகியோர் அறப்பாதையிலேயே நடக்கின்றனர். நீ அவர்களிடம் காத்திருந்து, அவர்களின் போதனைகளை நாடுவாயாக.(12) அறத்தில் கண்கள் நிறுவப்பட்ட ஞானிகளிடம் இருந்து பெறப்படும் போதனைகளின் படி நீ செயல்படுவாயாக. மேன்மையாகச் சொல்லப்படும் அந்தப் பாடங்களின் மூலம் தூய்மையடைந்து புத்தியைக் கொண்டு, சரியான பாதையில் இருந்து பிறழ எப்போதும் தயாராக இருக்கும் உன் இதயத்தைக் கட்டுப்படுத்துவாயாக.(13) தற்காலம் தொடர்புடையவற்றிலேயே எப்போதும் புத்தியைக் கொண்டோர், நாளையென்பது வெகுதொலைவில் உள்ளது என்று கருதி அச்சமில்லாமல் இருப்போர், உணவுக் காரியங்களில் எத்தகைய கட்டுப்பாடுகளையும் கொள்ளாதோர் ஆகிய உணர்வற்ற மனிதர்கள் இவ்வுலகமானது தகுதி காணும் களம் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.(14)
அறத்தால் அமைந்த படிக்கட்டுகளுக்குச் சென்று, ஒன்றன்பின் ஒன்றாக அதில் ஏறுவாயாக. தற்போது நீ, தன்னைச் சுற்றி வலையைப் பின்னி, தப்பும் வழிமுறைகள் அனைத்தையும் இழக்கும் ஒரு புழுவைப் போன்றவனாகவே நீ இருக்கிறாய்.(15) கட்டுப்பாடுக்ள அனைத்தையும் மீறுபவனும், காட்டாற்றின் அருகில் இருக்கும் வீட்டைப் போன்றவனும், செருக்கால் தலையை உயர்த்தி நிற்கும் மூங்கிலைப் போலப் (பிறருக்குத்) தெரிபவனுமான நாத்திகவாதியை எந்தத் தயக்கமும் இல்லாமல் உன் இடப்பக்கத்தில் நிறுத்துவாயாக {அவனை உன்னிடமிருந்து இருந்து விலக்குவாயாக}[1].(16) ஆசை, கோபம், மரணமெனும் கடும்பூதங்களை {முதலைகளைக்} கொண்டதும், பிறப்பெனும் சுழலைக் கொண்டதும், ஐம்புலன்களெனும் நீரைக் கொண்டதுமான வாழ்வெனும் பெருங்கடலை யோகமெனும் ஓடத்தைக் கொண்டு கடப்பாயாக.(17) மரணத்தால் பாதிக்கப்படுவதும், முதுமையால் பீடிக்கப்படுவதும், பகல்கள் மற்றும் இரவுகள் என்ற இடிகள் இடையறாமல் விழுவதுமான இவ்வுலகத்தை அறம் எனும் ஓடத்தைக் கொண்டு கடப்பாயாக.(18) நீ அமர்ந்திருக்கும்போதோ, கிடக்கும்போதோ எக்கணத்திலும் மரணம் உன்னைத் தேடிக் கொண்டிருக்கும்போது, எந்நேரத்தில் மரணம் உன்னைத் தன் பலியாகக் கொள்ளும் என்பது நிச்சயமாகும். மீட்பை நீ எங்கிருந்து அடையப்போகிறாய்.(19) செம்மறியாட்டை அபகரித்துச் செல்லும் காலனைப் போலவே, ஒருவன் செல்வம்மீட்டுவதிலும், இன்பங்களை அனுபவிப்பதிலும் ஈடுபட்டு அவற்றில் நிறைவடையாதிருக்கும்போதே காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(20)
[1] கும்பகோணம் பதிப்பில், "நாஸ்திகனும், மர்யாதையை மீறினவனும் கரையையிடிக்கிற பிரவாகம் போலிருப்பவனுமான மனிதனைத் தடையற்றவனாகி (வழியில்) பிடுங்கப்பட்ட மூங்கிலைப் போல இடப்பக்கத்தில் செய்" என்றிருக்கிறது.
இருளில் நுழைய விதிக்கப்படும்போது, நன்கு வளர்க்கப்பட்ட தழலைக் கொண்ட அற புத்தியாலான விளக்கை நீ ஏந்துவாயாக.(21) மனிதர்களின் உலகில் ஒன்றுக்குப் பின் ஒன்றெனப் பல்வேறு வடிவங்களில் வீழும் ஓர் உயிரினம், பெரும் கடின காலத்திற்குப் பிறகே பிராமண நிலையை அடைகிறது. நீ அந்நிலையை அடைந்திருக்கிறாய். ஓ! மகனே, நீ அதை (முறையாகப்) பராமரிக்க முயற்சி செய்வாயாக.(22) ஒரு பிராமணன், ஆசைகளில் நிறைவு கொள்வதற்காகப் பிறப்பை அடைவதில்லை. மறுபுறம், மறுமையில் ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைவதற்காக இவ்வுலகில் தன்னை வருத்திக் கொள்ளவும், தவங்கள் செய்யவுமே அவன் {பிராமணன்} உடலைக் கொள்கிறான்.(23) நீண்ட நெடிய கடுந்தவங்களின் துணையுடனே பிராமணத் தன்மை என்ற நிலை அடையப்படுகிறது. அந்நிலையை அடைந்த ஒருவன், புலன்களில் ஈடுபடுவதால் தன் காலத்தை வீணடிக்கக்கூடாது. தவங்கள் மற்றும் தற்கட்டுப்பாட்டில் எப்போதும் ஈடுபட்டு, உனக்கான நன்மையை விரும்பி, அமைதியில் அர்ப்பணிப்புடன் நீ வாழவும், செயல்படவும் செய்வாயாக.(24) ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் காலமும் ஒரு குதிரையைப் போன்றதாகும். அந்தக் குதிரையின் இயல்பு புலப்படாததாகும். (ஏற்கனவே சொல்லப்பட்ட பதினாறு) தத்துவங்களே {கலைகளே} உடலாகின்றன. அதன் இயல்பு மிக மிக நுட்பமனாதாகும். க்ஷணங்கள், திருதிகள், நிமிஷங்கள் ஆகியன அதன் உடலில் உள்ள ரோமங்களாகும். சந்தி வேளைகள் அதன் தோள்பூட்டுகளாக இருக்கின்றன. தேய்பிறையும், வளர்பிறையும் சம சக்தியைக் கொண்டு அதன் இரு கண்களாக இருக்கின்றன. மாதங்கள் அதன் உறுப்புகளாகும். அந்தக் குதிரை வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.(25)
உன் கண்கள் குருடாகவில்லையெனில், அக்குதிரை பார்வைக்குப் புலப்படாத பாதையில் நகர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, மறுமை குறித்த கேள்விக்கு உன் ஆசான்கள் என்ன சொல்கின்றனர் என்பதைக் கேட்டு உன் இதயத்தை அறத்தில் நிலைநிறுத்துவாயாக.(26) அறத்தில் இருந்து வீழ்பவர்களும், பொறுப்பற்ற ஒழுங்கில் தங்களை நடத்திக் கொள்பவர்களும், பிறரிடம் எப்போதும் வன்மத்தைக் காட்டுபவர்களும், தீய வழிகளில் நடப்பவர்களும், யமலோகத்தில் (இருப்புசார்ந்த) உடலை அடைந்து, பல்வேறு வகையான தங்கள் நீதியற்ற செயல்களின் விளைவால் பல்வேறு துன்பங்களை அடைகின்றனர்.(27) அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனும், நல்லோரிடமும், தீயோரிடமும் வேறுபாடு பார்க்காமல் பாதுகாத்து, தண்டிப்பவனுமான மன்னன், அறச்செயல்கள் செய்த மனிதர்களின் உலகை அடைகிறான். பல்வேறுவகை நற்செயல்களைச் செய்வதன் விளைவால் களங்கமற்றதும், ஆயிரமாயிரம் பிறவிகள் எடுத்தாலும் அடைய முடியாததுமான இன்பநிலையை அவன் அடைகிறான்.(28) பெற்றோர் மற்றும் ஆசான்களின் ஆணைகளை மீறும் மனிதன், இறந்த பிறகு நரகத்தை அடைந்து பயங்கர முகத்தோற்றம் கொண்ட சீற்றமிகு நாய்களும், இரும்பு அலகுகளைக் கொண்ட காகங்களும், கருங்காக்கை, கழுகுகள் மற்றும் பிற பறவை கூட்டங்களும், குருதி உறிஞ்சும் புழுக்களும் அவனைத் தாக்குகின்றன.(29) சுயம்புவால் விதிக்கப்பட்ட பத்து கட்டளைகளை, பொறுப்பற்ற தன்மையின் விளைவால் மீறும் இழிந்த பாவி, பித்ருக்களின் மன்னனுடைய ஆட்சிப்பகுதிகளில் உள்ள காட்டுக் கழிவுகளில் பெரும் துன்பத்துடன் தன் காலத்தைக் கழிக்கும் கடப்பாட்டை அடைகிறான்[2].(30)
[2] "பத்துக் கட்டளைகளில் தூய்மை, நிறைவு, தவம், வேத கல்வி, தியானம் என்ற நேர்மறையான ஐந்தும், கொடூரந்தவிர்த்தல், பொய்மை தவிர்த்தல், களவு தவிர்த்தல், நோன்பில்லாமை தவிர்த்தல் மற்றும் செல்வந்திரட்டலைத் தவிர்த்தல் என்ற எதிர்மறையான ஐந்தும் அடங்கும் என உரையாசிரியர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இவ்வுலகில் மனம் போன வழியே சென்று பிரம்மாவினால் நியமிக்கப்பட்டவைகளும் (சுசியாயிருத்தல், ஸந்தோஷம், தவம், வேதாத்யயனம், ஈஷ்வரத்தியானம், கொல்லாமை, பொய் சொல்லாமை, திருடாமை, பிரம்மச்சர்யம், பிரதிக்ரகம் செய்யாமையென்கிற) பத்துக் குணங்களுடையவைகளுமான இந்த மரியாதைகளைப் பாதிக்கிற பாபியானவன் யமனுடைய ராஜ்யத்திலுள்ள (அஸிபத்திர) வனத்தையடைந்து மிகவும் கஷ்டத்துடன் வசிக்கிறான்" என்றிருக்கிறது.
பேராசையால் களங்கமடைந்தவனும், பொய்மையில் அன்பு பாராட்டுபவனும், ஏமாற்று மற்றும் வஞ்சனையில் எப்போதும் திளைப்பவனும், போலித்தனம் மற்றும் வஞ்சகம் பயில்வதன் மூலம் பிறருக்குத் தீங்கிழைப்பவனுமான மனிதன், ஆழ்நரகிற்குச் சென்று, தன் தீச்செயல்களுக்காகப் பெரும் துன்பங்களை அனுபவிக்கிறான்.(31) அத்தகைய மனிதன், கொதிக்கும் நீரைக் கொண்ட வைதரணி என்றழைக்கப்படும் பேராற்றில் நீராட வற்புறுத்தப்பட்டு, வாட்களைப் போன்ற கூரிய இலைகளைக் கொண்ட மரங்கள் நிறைந்த வனத்திற்குள் அனுப்பப்பட்டு, போர்க்கோடரிகளாலான படுக்கையில் கிடத்தப்படுகிறான். அவன் தன் நாட்களைப் பெருந்துன்பத்துடன் பயங்கர நரகில் இவ்வாறே கழிக்கிறான்.(32) நீ பிரம்மலோகத்தையும், தேவர்களின் உலகங்களையும் மட்டுமே காண்கிறாய், ஆனால் உயர்ந்ததை (மோக்ஷத்தைக்) காணாத குருடனாக இருக்கிறாய். ஐயோ, (தளர்ச்சி, முதுமை என்ற) வரிசையில் மரணத்தைக் கொண்டு வருவதை எப்போதும் காணாத குருடனாக இருக்கிறாய்.(33) (விடுதலையின் {முக்தியின்} பாதையில்) செல்வாயாக. ஏன் தாமதிக்கிறாய்? உன் மகிழ்ச்சியை அழிக்கும் பேரச்சம் உன் எதிரில் இருக்கிறது. விடுதலை அடைவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பாயாக.(34) மரணம் அடைந்தவுடன் யமனின் ஆணைக்காக அவன் முன்னிலைக்கு நிச்சயம் எடுத்துச் செல்லப்படுவாய். மறுமையில் இன்பநிலையை அடைவதற்காகப் பயிலக் கடினமான கடும் நோன்புகள் மூலம் அறத்தை ஈட்ட முனைவாயாக.(35)
பிறரின் துன்பங்களைக் கருத்தில் கொள்ளாத யமன், உன்னையும், உன் நண்பர்களையும் போன்ற மனிதர்கள் அனைவரின் உயிரையும் விரைவில் எடுத்துக் கொள்வான். அவனைத் தடுக்கவல்லவன் எவனுமில்லை.(36) வெகு விரைவில் உன் முன்னிலையில் யமனின் காற்று வீசும் (உன்னை அவனது முன்னிலைக்கு அழைத்துச் செல்லும்). வெகுவிரையில் நீ பயங்கரத் தனிமையை அடைவாய். அங்கே உன் நன்மைக்கானதை அடைவாயாக.(37) மிக விரைவில் உன் முன்னிலைக்கு வரப்போகும் அந்த மரணக்காற்று இப்போது எங்கிருக்கிறது? (அந்தக் கவனத்துடன் நீ இருக்கிறாயா?) அந்தக் கணம் நேரும்போது, திசைப்புள்ளிகள் அனைத்தும் உன் கண் முன்பு சுழலத் தொடங்கும். (அந்தக் கவனத்துடன் நீ இருக்கிறாயா?)(38) ஓ! மகனே, (அந்தக் கணம் நேரும்போது) அந்தப் பயங்கர இருப்பில் ஆதரவற்றவனாக இருக்கும்போது உன் வேதங்கள் உன் பார்வையில் இருந்து விரைவில் மறையும். எனவே, சிறப்புவாய்ந்த தியான யோகத்தில் நீ உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக.(39) (மரணத்திற்குப் பிறகு) பிழையின் இயல்பிலான உன் கடந்த கால நல்ல மற்றும் தீய செயல்களை நினைத்து வருந்தாமல் இருக்கச் செய்யும் ஒரே புதையலை அடைய முனைவாயாக[3].(40)
[3] "கேவலம் நிதிம் என்பது ஒரே புதையல் என்ற பொருளைத் தரும். அது சமாதியையோ, பிரம்மத்தையோ குறிக்கும். செயல்கள், நன்மையாகவோ, தீமையாகவோ இருப்பினும் அவனை அனைத்தும் பிழையில் இருந்தே எழுகின்றன. செயல்களைத் தவிர்ப்பதே விடுதலைக்கான உண்மையான வழியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
முதுமை வெகுவிரைவில் உன் உடலைப் பலவீனப்படுத்தி, உன் பலத்தையும், அங்கங்களையும், அழகையும் களவாடிவிடும். எனவே அந்த ஒரே புதையலை நீ நாடுவாயாக.(41) நோயைச் சாரதியாகக் கொண்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்தகன், உன் உடலைத் துளைத்து நொறுக்கவும், உன் உயிரை எடுக்கவும் வெகுவிரைவில் வருவான். எனவே, கடுந்தவங்களைச் செய்வாயாக.(42) உன் உடலுக்குள் வசிக்கும் அந்தப் பயங்கர ஓநாய்கள் {ஆசைகள்} வெகுவிரைவில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உன்னைத் தாக்கும். எனவே, அறச் செயல்கள் செய்ய முயற்சி செய்வாயாக.(43) வெகுவிரையில் அடர்த்தியான இருளில் நீ தனியாக இருப்பதைக் காண்பாய், வெகுவிரைவில் மலையின் உச்சியில் தங்க மரணங்கள் இருப்பதையும் காண்பாய். எனவே, அறச்செயல்களைச் செய்ய விரைவாயாக[4].(44) நட்பின் போர்வையில் உள்ள உன் தீய தோழர்களான உன் எதிரிகள் (புலன்கள்) வெகுவிரைவில் உன்னைச் சரியான பார்வையில் இருந்து திரும்பச் செய்வார்கள். எனவே, ஓ! மகனே, உயர்ந்த நன்மையை அடைய முனைவாயாக.(45)
[4] "தங்க மரங்களைப் பார்ப்பது மரணத்தைக் குறித்த முன்னறிக் குறியீடாகும் {சகுணமாகும்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மன்னர்களிடமோ, கள்வர்களிடமோ அச்சத்தை ஏற்படுத்தாததும், மரணத்தின்போதும் கைவிடத்தகாததுமான அந்தச் செல்வத்தை நீ ஈட்டுவாயாக.(46) ஒருவனுடைய செயல்களால் ஈட்டப்படும் அந்தச் செல்வத்தை யாருடனும் நீ பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் தான் ஈடிய அந்தச் செல்வத்தையே (மறுமையில்) அனுபவிக்கிறான்.(47) ஓ! மகனே {சுகரே}, மறுமையில் வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பிறருக்குக் கொடுப்பாயாக. அழிவற்றதும், நீடித்திருப்பதுமான அந்தச் செல்வத்தை ஈட்டுவதில் நீ உன்னை நிறுவிக் கொள்வாயாக.(48) இன்பங்களில் தணிவு ஏற்படும் முன்பே மரணம் நேரலாம் என்பதால் முதலில் அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிக்க நினைக்காமல், உன் இதயத்தை விடுதலையை {முக்தியை} நோக்கித் திருப்புவாயாக. இதை நோக்கில் கொண்டு நற்செயல்களைச் செய்வதில் விரைவாயாக.(49) தாயோ, மகனோ, உறவினர்களோ, உற்ற நண்பர்களோ வெகுமதிகளை அளித்து வேண்டிக் கேட்டாலும் இறக்கும் மனிதனுடன் துணைக்கு வர மாட்டார்கள். யம லோகத்திற்கு ஒருவன் துணைக்கு யாருமில்லாமல் தனியாகவே செல்ல வேண்டும்.(50)
மரணத்திற்கு முன்பு அவன் செய்த நல்ல மற்றும் தீய செயல்கள் மட்டுமே அடுத்த உலகத்திற்குச் செல்லும் அவனோடு உடன் செல்லும்.(51) நல்ல மற்றும் தீய வழிமுறைகள் மூலம் ஒருவனால் ஈட்டப்பட்ட தங்கமும், ரத்தினங்களும், அவனது உடல் அழிவை அடையும்போது எந்த நன்மையையும் உண்டாக்குவதில்லை.(52) அடுத்த உலகிற்குச் சென்ற மனிதர்களால், இவ்வாழ்வில் செய்யப்பட்ட, செய்யப்படாத செயல்களின் சாட்சியாக ஆன்மாவைத் தவிர வேறு சிறந்த சாட்சி ஏதும் கிடையாது.(53) செயல்படும் சைதன்யம் (ஜீவாத்மா) சாட்சியான சைதன்யத்திற்குள் நுழையும்போது உடல் அழிவை அடைகிறது என்பது, யோகிகள் தங்கள் யோக புத்தியின் மூலம் தங்கள் இதயங்களால் ஆகாயத்தில் நுழையும்போது காணப்படுகிறது[5].(54) இங்கேயும் நெருப்பின் தேவன் {அக்னி}, சூரியன் மற்றும் காற்று {வாயு} ஆகிய மூவரும் உடலில் வசிக்கிறார்கள். ஒருவன் தன் வாழ்நாளில் செய்யும் செயல்கள் அனைத்துக்கும் இவர்கள் சாட்சியாக இருக்கின்றனர்.(55)
[5] "53ம் ஸ்லோகத்தில் இம்மையில் செய்த செயல்கள் மற்றும் தவிர்த்தல்கள் அனைத்தின் சாட்சியாக மறுமையில் ஆன்மா இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 54ம் ஸ்லோகத்தில் யோகிகள் தங்கள் உடல்களை மறந்து யோகத்தில் தங்கள் ஆன்மாவிலேயே வாழ்வதால், உடலில்லாத போதும் ஆன்மாவின் இருப்புக்குச் சாத்தியம் இருக்கிறது என்று சொல்லலப்படுகிறது. செயல்படும் சைதன்யமானது அந்தச் சைதன்யத்திலேயே நுழைந்து, சாட்சியாக நீடித்திருப்பது என்பது உடலின் மரணத்தைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பரலோகத்தில் செல்லுகிறவனுக்கு மனுஷ்யதேகம் சூன்யமாய்விடுகிறது. (பரலோகத்திற்குச் செல்லுகிற ஆத்மா ஞானியினால்) புத்தியாகிற நேத்திரத்தினால் பிரவேசித்து முழுதும் பார்க்கப்படுகிறது" என்றிருக்கிறது.
அனைத்துப் பொருட்களையும் வெளிக்காட்டும் குணத்தைக் கொண்ட பகல்களும், அனைத்துப் பொருட்களையும் மறைக்கும் குணத்தைக் கொண்ட இரவுகளும், அனைத்துப் பொருட்களையும் தீண்டியபடியே இடையறாமல் கடந்து போகின்றன (அதன்படி அந்தப் பொருட்களுக்காக ஒதுக்கப்பட்ட இருப்பின் காலத்தைக் குறைத்து வருகின்றன). எனவே, நீ உன் வகைக்கான கடமைகளை நோற்பாயாக.(56) (யமலோகத்திற்கு வழிவகுக்கும்) மறுமையின் சாலையானது, (இரும்பு அலகைக் கொண்ட பறவைகள் மற்றும் ஓநாய்களின் வடிவிலான) பல எதிரிகளாலும், வெறுத்தொதுக்கும் பயங்கரப் பூச்சிகள் மற்றும் புழுக்களாலும் தொற்றப்பட்டிருக்கிறது. அந்தச் சாலையில் உனக்குத் துணையாக வரப்போவது செயல்கள் மட்டுமே என்பதால் நீ உன் செயல்களைக் கவனமாகச் செய்வாயாக.(57) அங்கே ஒருவன் தன் செயல்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை, ஆனால் தன்னால் செய்யப்பட்ட ஒவ்வொரு செயல்களுக்கான கனிகளை அவன் அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் வேண்டும்.(58) அப்சரஸ்களும், பெரும் முனிவர்களும் பேரின்பநிலைகளின் கனிகளை அடைவதைப் போலவே, அறச்செயல்கள் செய்யும் மனிதர்களும் தங்கள் தங்கள் அறச்செயல்களின் கனிகளாகச் செலுத்துபவர்களின் விருப்பத்திற்கேற்ப எங்கேயும் செல்லக்கூடிய ஒளி பொருந்திய தேர்களை மறுமையில் அடைகிறார்கள்.(59) களங்கமற்ற செயல்களையும், தூய்மையான ஆன்மாக்களையும், தூய பிறவியையும் கொண்ட மனிதர்கள், இம்மையில் {இவ்வுலகில்} செய்யப்பட்ட தங்கள் சொந்த அறச் செயல்கள் தொடர்பான மறுமையின் {அவர்கள் செல்லக்கூடிய வேறு உலகங்களின்} கனிகளை அடைகிறார்கள்.(60)
மனிதர்கள், இல்லறக் கடமைகளாலமைந்த நெடுஞ்சாலையில் நடந்து செல்வதன் மூலம் பிரஜாபதி, அல்லது பிருஹஸ்பதி அல்லது நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} ஆகியோரின் உலகங்களை அடைந்து மகிழ்ச்சியான கதிகளை அடைகிறார்கள்.(61) என்னால் ஆயிரமாயிரம் போதனைகளை உனக்குத் தர முடியும். எனினும், பலமிக்கத் தூய்மையாளியே (அறம்) {பரிசுத்தமாகச் செய்கிற தர்மமே}, மூட மனிதர்கள் அனைவரையும் இருளில் வைத்திருக்கிறது என்பதை அறிவாயாக[6].(62) நீ இருபத்துநான்கு {24} வயதைக் கடந்துவிட்டாய். இப்போது முழுமையாக நீ இருபத்தைந்து வயதை அடைந்தவனாக இருக்கிறாய். உன் வயது கடந்து செல்கிறது. அறக்கொள்முதல் செய்யும் கிடங்கை விரிக்கத் தொடங்குவாயாக {அறமீட்டுவாயாக}.(63) பிழையிலும், விழிப்பற்ற தன்மையிலும் வசிக்கும் யமன் மிக விரைவாக உன் புலன்களை அவற்றுக்குரிய சக்திகளைக் கொண்டே இழக்கச் செய்வான். அந்த அழிவு ஏற்படும் முன்னர் நீ இன் உடலை மட்டுமே சார்ந்துஉன் கடமைகளை விரைவாகச் செய்வாயாக.(64) நீ மட்டுமே முன்னும் பின்னும் இருக்கக்கூடிய சாலையில் செல்லும் உன் கடமையின் போது, உன் உடலாலோ, உன் மனைவியாலோ, உன் பிள்ளையாலோ உனக்கு என்ன தேவை இருக்கிறது?[7](65)
[6] "மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் பாதையில் ஒரு மனிதனைக் கொண்டுவர அறத்தால் மட்டுமே முடியும், வெறும் போதனைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டாலும் முடியாது என்பதே இங்குப் பொருள் என நினைக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] "நீ மட்டுமே முன்னும் பின்னும் இருக்கக்கூடிய சாலை என்பது தன்னறிவுக்கான {சுயஞானத்துக்கான / ஆன்மஞானத்திற்கான} சாலையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உனக்குப் பிராயம் சென்றுவிடுகிறதே. அந்த யமன் உன் தவறுதலைத் தன் சேனைக்குக் கோமுகமாகச் செய்யப் போகிறான். (ஆகையால்) முயற்சியுடன் தர்மத்தைக் காப்பதில் விரைவாய் முன்னும் பின்னும் ஒருவருமின்றித் தனியே செல்லப் போகிற உனக்குச் சரீரத்தாலும் பிறனாலும் என்ன உபயோகம்?" என்றிருக்கிறது.
மனிதர்கள் யமலோகத்திற்கு எந்தத் துணையும் இல்லாமல் தனியாகச் செல்ல வேண்டிய இந்தப் பயங்கரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், முற்றான ஒரே செல்வக்குவியலை {புதையலை} (அறம் அல்லது யோக சமாதியை) அடைவதற்கு நீ முனைய வேண்டும் என்பதே தெளிவாகத் தெரிகிறது.(66) பிறரைப் பீடிப்பதைக் கருத்தில் கொள்ளாத பலமிக்க யமன், ஒருவனுடைய நண்பர்களையும், உறவினர்களையும், அவனது குலத்தையும் வேரோடு அபகரித்துச் செல்கிறான். அவனைத் தடுக்க வேறு எவனுமில்லை. எனவே, அறத்தைத் திரட்ட நீ முனைவாயாக.(67) ஓ! மகனே, நான் பின்பற்றும் சாத்திரங்களுக்கு ஏற்புடைய இந்தப் பாடங்கள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன்.(68) தன் வகைக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் தன் உடலை ஆதரித்துக் கொள்பவனும், அத்தகைய செயல்களுடன் பிணைக்கப்பட்ட எந்தக் கனியையும் ஈட்ட கொடையளிப்பவனுமான மனிதன், அறியாமை மற்றும் பிழையால் பிறக்கும் விளைவுகள் அனைத்தில் இருந்து விடுபடுகிறான்.(69) அறச் செயல்களைச் செய்யும் மனிதன் வேத அறிவிப்புகளில் இருந்து அடையும் ஞானம் எல்லாமறிந்த நிலைக்கு {கடவுளுக்கு} வழிவகுக்கிறது. அந்த எல்லாமறிந்த நிலையானது {கடவுள்} மனிதன் அடையக்கூடிய உயர்ந்த பொருளின் அறிவியலை (விடுதலையை {முக்தியை}) போன்றதாகும். நன்றியுள்ளவர்களுக்குச் சொல்லப்படும் போதனையானது, (மனிதர் அடையக்கூடிய உயர்ந்த பொருளை அடைவதற்கு வழிவகுப்பதன் விளைவால்) நன்மையாகிறது.(70)
மனித வாழிடங்களுக்கு மத்தியில் ஒருவன் கொள்ளும் இன்பமானது உண்மையில் அவனை இறுகப் பற்றும் கயிறாகும். அறச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அந்தக் கயிற்றை அறுத்து, பேரின்ப உலகங்களுக்குச் செல்கிறார்கள். எனினும், தீய மனிதர்கள் அந்தக் கயிற்றை அறுக்கத் தவறுகிறார்கள்.(71) ஓ! மகனே, நீ இறக்கப் போவதால் செல்வத்தாலோ, உறவினர்களாலோ, பிள்ளைகளாலோ உனக்கென்ன பயனேற்படப் போகிறது? குகைக்குள் மறைந்திருக்கும் உன் ஆன்மாவைத் தேடுவதில் ஈடுபடுவாயாக. உன் பாட்டான்கள் அனைவரும் எங்கே சென்றனர்? நாளை செய்ய வேண்டியதை நீ இன்று செய்வாயாக. பிற்பகலில் செய்ய வேண்டியதை முற்பகலில் செய்வாயாக. ஒருவன் தன் பணியைச் செய்துவிட்டானா இல்லையா என்று பார்த்து மரணம் காத்திருப்பதில்லை.(73) ஒருவன் இறந்ததும் (சுடலைக்கு) உடலைப் பின்தொடர்ந்து செல்லும் அவனது உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அஃதை {உடலை} ஈமச் சிதைக்குள் வீசிவிட்டு திரும்பிவிடுகின்றனர்.(74) ஐயுறுவாதிகள், கருணையற்றவர்கள், தீய வழிகளில் அர்ப்பணிப்புள்ளவர்கள் ஆகியோரைப் புறக்கணிக்கத் தயங்காமல், அக்கறையற்றதன்மையோ, உணர்வின்மையோ இல்லாமல் உனக்கான உயர்ந்த நன்மையைத் தேட முயற்சிப்பாயாக.(75) எனவே, உலகம் காலனால் இவ்வாறு பீடிக்கப்படும்போது, அசைக்கமுடியாத பொறுமையின் துணையுடனும், உன் முழு இதயத்துடனும் அறத்தை ஈட்டுவாயாக[8].(76)
[8] கும்பகோணம் பதிப்பில், "பரமாத்மாவை அடைய விருப்பமுடையவனும், சோம்பலில்லாதவனுமாகி நாஸ்திகர்களும், தயையில்லாதவர்களும், பாபபுத்தியுள்ளவர்களுமான மனிதர்களைத் தடையின்றி இடப்பக்கம் செய். இவ்விதம், உலகம் கெடுக்கப்பட்டும் காலத்தால் பீடிக்கப்பட்டுமிருத்தலால் மிகுந்த தைரியத்தையடைந்து எல்லாவிதத்தாலும் தர்மத்தைச் செய்" என்றிருக்கிறது.
விடுதலையை {முக்தியை} அடையும் வழிமுறைகளை நன்கறிந்தவனும், தன் வகைக்குரிய கடமைகளை முறையாகச் செய்பவனுமான மனிதன் மறுமையில் நிச்சயம் பேரின்ப நிலையை அடைவான்.(77) வேறொரு உடலை அடைவதே மரணம் என்று உணர்ந்தவனும், அறவோர் நடக்கும் பாதையில் இருந்து விலகாதவனுமான உனக்கு அழிவே கிடையாது. அறப்பங்குகளைப் பெருக்குபவனே உண்மையில் ஞானியாவான். மறுபுறம், அறத்திலிருநுத வீழ்பவனோ மூடனாவான் என்று சொல்லப்படுகிறது.(78) நற்செயல்களைச் செய்வதில் ஈடுபடும் ஒருவன் சொர்க்கத்தையும், பிற வெகுமதிகளையும் அச்செயல்களின் கனிகளாக அடைகிறான்; ஆனால் தீயச் செயல்களில் பற்று கொண்டவனோ நரகத்தில் மூழ்குகிறான்.(79) அடைவதற்கரிதானதும், சொர்க்கத்திற்கான முதற்படியுமான மானிட நிலையை அடைந்து ஒருவன், மீண்டும் வீழ்ந்துவிடாதவாறு தன் ஆன்மாவை பிரம்மத்தில் நிலைநிறுத்த வேண்டும்.(80)
சொர்க்கத்தின் பாதையில் செலுத்தப்படும் புத்தியைக் கொண்டவனும், அங்கிருந்து விலகாதவனும், ஞானிகளால் உண்மையில் அறவோனாக {தர்மவானாகக்} கருதப்படுபவனுமான மனிதன் இறக்கும்போது அவனது நண்பர்கள் துயரில் ஈடுபடக்கூடாது.(81) பிரம்மத்தை நோக்கிச் செலுத்தப்படாத அமைதியான புத்தியைக் கொண்டவனும், சொர்க்கத்தை அடைந்தவனுமான மனிதன் (நரகம் எனும்) பேரச்சத்தில் இருந்து விடுபடுகிறான்.(82) தவசிகளின் ஆசிரமங்களில் பிறந்து, அங்கேயே இறப்பவர்கள், தங்கள் வாழ்வு முழுவதும் இன்பங்கள் மற்றும் ஆசையில் ஈடுபடுவதில் இருந்து விலகியிருப்பதன் மூலம் அதிகத் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில்லை.(83) எனினும், இன்பத்திற்குரிய பொருட்களைக் கொண்டிருந்தாலும், அவற்றைக் கைவிட்டு, தவப் பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவன் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்[9].(84) நூற்றுகணக்கான, ஆயிரக்கணக்கான தாய்மார்கள், தந்தைமார்கள், மகன்கள், மனைவிகள் இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் உண்டு, இனியும் உண்டாவார்கள். எனினும், அவர்கள் யார்? நாம் யாருடையவர்கள்?(85)
[9] கும்பகோணம் பதிப்பில், "தபோவனங்களில் பிறந்தவர்களும், அவ்விடத்திலேயே மரணத்தையடைந்தவர்களும், காம்போகங்களை அறியாதவர்களுமான அவர்களுடைய தர்மமானது மிகவும் சிறியதாகும். போகங்களைத் தள்ளிவிட்டுச் சரீரத்தினால் தவத்தைச் செய்பவனால் அடையப்படாதது ஒன்றுமில்லை" என்றிருக்கிறது.
நான் தனியாகவே இருக்கிறேன். என்னுடையவர் என்று சொல்ல எனக்கு யாரும் கிடையாது. நான் யாருக்கும் உரியவனுமல்ல. நான் யாருடையவன் என்று சொல்ல ஒருவரையும், என்னுடையவர் என்று சொல்ல ஒருவரையும் நான் காணவில்லை.(86) உன்னைக் கொண்டு அவர்களுக்குச் செய்ய ஒன்றுமில்லை. அவர்களைக் கொண்டு நீ செய்ய வேண்டியதும் ஒன்றுமில்லை. உயிரினங்கள் அனைத்தும் தங்கள் முற்பிறவி செயல்களுக்கு ஏற்புடைய வகையிலேயே தங்கள் பிறப்பை அடைகின்றன. நீயும் உன் செயல்களின் மூலம் தீர்மானிக்கப்படும் (ஒரு புதிய வகையிலான பிறப்பை அடைவதற்குரிய) இடத்திற்குச் செல்ல வேண்டும்.(87) செல்வந்தர்களின் நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் மட்டுமே அவர்களிடம் பற்றுடன் நடந்து கொள்வது காணப்படுகிறது. எனினும், வறியவனின் நண்பர்களும், தொண்டர்களும் அவன் வாழும்போதே வீழ்ந்துவிடுகின்றனர்.(88) மனிதன் தன் மனைவி (மற்றும் பிள்ளைகளின்) நிமித்தம் எண்ணற்ற தீச்செயல்களைச் செய்கிறான். அந்தத் தீச்செயல்களில் இருந்தே அவன் இம்மையிலும், மறுமையிலும் துன்பத்தை அடைகிறான்.(89) வாழும் ஒவ்வொரு உயிரினத்தாலும் செய்யப்படும் செயல்களின் மூலம் இவ்வுலக வாழ்வு கெட்டுப்போவதை ஞானமுள்ள மனிதன் காண்கிறான். எனவே, ஓ! மகனே, நான் உனக்குச் சொன்ன அறிவுரைகளின்படியே நீ செயல்படுவாயாக.(90)
உண்மைப் பார்வை கொண்ட மனிதன், இவ்வுலகைச் செயற்களமாக மட்டுமே கண்டு, மறுமையில் பேரின்பநிலையை அடைய விரும்பி நற்செயல்களைச் செய்ய வேண்டும்.(91) மாதங்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} எனும் கரண்டிகளின் துணையைக் கொண்டதும், சூரியனையே நெருப்பாகக் கொண்டதும், ஒவ்வொரு உயிரினத்தாலும் செய்யப்படும் ஒவ்வொரு செயலின் கனிகளையும் சாட்சியாகக் காணும் இரவு பகலெனும் விறகுகளைக் கொண்டதுமான காலம், தடுக்கப்படமுடியா தன் பலத்துடன் முயன்று (தன் கொப்பரையில்_ உயிரினங்கள் அனைத்தையும் சமைக்கிறது.(92) கொடையளிக்கப்படாததும், அனுபவிக்கப்படாதமான செல்வத்திற்கான நோக்கம்தான் என்ன? {அந்த செல்வத்தினால் என்ன பயன்?} ஒருவனுடைய எதிரிகளைத் தடுப்பதிலோ, அடக்குவதிலோ ஈடுபடதா பலத்திற்கான நோக்கம்தான் என்ன? {அந்த பலத்தினால் என்ன பயன்?} ஒருவனை அறச்செயல்கள் செய்யத்தூண்டாத சாத்திர அறிவின் நோக்கம்தான் என்ன? {அந்த சாத்திர அறிவினால் என்ன பயன்?} புலன்களை அடக்காததும், தீச்செயல்களில் இருந்து விலகாததுமான அன்மாவின் நோக்கம்தான் என்ன? {அந்த ஆன்மாவினால் என்ன பயன்?}" என்றார் {வியாசர்}".(93)
பீஷமர் தொடர்ந்தார், "தீவில் பிறந்தவரால் {துவைபாயனரான} வியாசரால் சொல்லப்பட்ட இந்த நன்மையான வார்த்தைகளைக் கேட்ட சுகர், தன் தந்தையை விட்டகன்று, தனக்கு விடுதலை அறத்தை {மோக்ஷதர்மத்தைக்} கற்பிக்கக்கூடிய ஓர் ஆசானைத் தேடிச் சென்றார்"[10].(94)
[10] "இந்தப்பகுதி 'பாவகாத்யயனம்' என்றழைக்கப்படுகிறது. படித்துத் தேர்ச்சி பெறும்போது, தூய்மையான இதயத்திற்கு வழிவகுக்கும் பாடம் என்பது இதற்குப் பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 322ல் உள்ள சுலோகங்கள் : 94
ஆங்கிலத்தில் | In English |