Acts that are sown sprouts! | Shanti-Parva-Section-323 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 150)
பதிவின் சுருக்கம் : செய்த வினை செய்தவனையே சரியாக வந்தடையும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, கொடைகள், வேள்விகள், நன்கு செய்யப்படும் தவங்கள், ஆசான்களுக்கும், மதிப்புமிக்கப் பெரியோருக்கும் செய்யப்படும் கடமையுணர்வுமிக்கத் தொண்டுகள் ஆகியவற்றுக்குச் செயற்திறன் {பலாபலன்} உண்டென்றால் அதைக்குறித்து எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தீமையுடன் தொடர்புடைய புத்தியானது மனத்தைப் பாவத்தில் வீழச் செய்கிறது. இந்நிலையில் தன் செயல்களைத் தானே களங்கம் செய்யும் ஒருவன் பெரும் துன்பத்தில் வீழ்கிறான்.(2) பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவர்கள் மிகவறிய நிலையில் உள்ள மனிதர்களாகப் பிறக்க வேண்டிவரும். பஞ்சத்துக்குப் பஞ்சம், துன்பத்துக்குத் துன்பம், அச்சத்திற்கு அச்சம் என்பதே அவர்களது மாற்றமாக இருக்கும். இறந்தவர்களைக் காட்டிலும் இவர்களே இறந்தவர்களாக இருக்கிறார்கள்.(3) நம்பிக்கை கொண்டவர்கள், தற்கட்டுப்பாடு கொண்டவர்கள், அறச்செயல்களில் அர்ப்பணிப்புமிக்கவர்கள் ஆகியோர் செழிப்பை அடைந்தவர்களாக, இன்பத்துக்கு இன்பம், சொர்க்கத்திற்குச் சொர்க்கம், மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி என்ற மாற்றமடைகின்றனர்.(4) நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்கள், இரைதேடும் விலங்குகளாலும், யானைகளாலும் தொற்றப்பட்டதும், பாம்புகள், கள்வர்கள் மற்றும் அச்சத்திற்குரிய பிற காரணங்கள் நிறைந்ததுமான பாதையற்ற தடத்தில் கையைப் பிசைந்தபடியே கடக்க நேரிடும். இவற்றைத் தவிர வேறு என்ன சொல்லப்பட வேண்டும்?(5)
மறுபுறம், தேவர்களையும், விருந்தினர்களையும் மதிப்பவர்கள், பரந்த மனம் கொண்டவர்கள், நல்லோரை முறையாக மதிப்பவர்கள் ஆகியோர் தூய்மையடைந்த, வெல்லப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களுக்குச் சொந்தமான (இன்பம்நிறைந்த) பாதையைத் தங்களுடையதாகக் கொள்கிறார்கள்.(6) தானியங்களுடன் பதர்களும், பறவைகளுடன் கரப்பான்பூச்சிகளும் கணக்கிடப்படாததைப் போலவே மனிதர்களுடன் அறவோர் கணக்கிடப்படுவதில்லை.(7) ஒருவன் செய்யும் செயல்கள், அவன் வீழும்போது அவனோடு கிடக்கிறது.(8) உண்மையில், ஒருவன் செய்யும் பாவங்கள் அவன் அமரும் போது அமர்கின்றன, அவன் ஓடும்போது ஓடுகின்றன. செய்தவன் செயல்படும்போது பாவங்களும் செயல்படுகின்றன. உண்மையில் அவை செய்தவனின் நிழல் போல அவனைப் பின்தொடர்கின்றன.(9) எந்த வழிமுறையிலும், எந்தச் சூழ்நிலையிலும் ஒருவன் செய்யும் எந்தச் செயலும், (அவற்றின் கனிகளைப் பொறுத்தவரையில்) அதைச் செய்தவனால் மறுமையில் நிச்சயம் அனுபவிக்கப்படவும், தாங்கிக் கொள்ளப்படவும் வேண்டும்.(10)
உயிரினங்கள் வீசப்படும் தொலைவு மற்றும் அவற்றின் செயல்களோடு தொடர்புடைய விதியை முறையாகக் காணும் காலம் அவற்றை {அந்த உயிரினங்களை} அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எப்போதும் இழுத்துக் கொண்டிருக்கிறது.(11) மலர்களும், கனிகளும் தூண்டப்படாமலே தாமதிக்காமல் உரிய காலத்தில் தோன்றுவதைப் போலவே, முற்பிறவியில் செய்த செயல்களும் {வினைகளும்} உரிய காலத்தில் தோன்றுகின்றன.(12) கௌரவம் மற்றும் கௌரவமின்மை, ஈட்டல் மற்றும் இழத்தல், அழிவு மற்றும் வளர்ச்சி ஆகியவை தோன்றுவது காணப்படுகிறது. (அவை வரும்போது) அவற்றை யாராலும் தடுக்க முடியாது. தோன்றியதும் மறைவதால் அவற்றில் எதுவும் நீடித்திருக்காது.(13) ஒருவன் அனுபவிக்கும் துன்பம் அவனது செயல்களின் விளைவேயாகும். ஒருவனுடைய மகிழ்ச்சி அவனது செயல்களில் இருந்தே உண்டாகிறது. ஒருவன் தாயின் கருவறைக்குள் கிடக்கும் காலத்திலிருந்து தன் முற்பிறவி செயல்களை அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் தொடங்குகிறான்.(14) குழந்தைப் பருவம், இளமை, அல்லது முதுமையில் ஒருவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் எதன் விளைவையும் அவனது மறுமையில் அதே வயதுகளில் அவன் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறான்.(15)
ஆயிரம் பசுக்களுக்கு மத்தியில் கன்று தன் தாயை அடையாளம் காண்பதைப் போலவே முற்பிறவியில் ஒருவன் செய்த செயல்கள், அடுத்தபிறவியில் அவன் தன் இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் நின்றாலும் (தவறேதும் இல்லாமல்) அவனையே வந்து அடையும்.(16) அழுக்கடைந்த துணியானது நீரால் வெளுக்கப்படுவதைப் போலவே, அறவோரும் நோன்புகள் தவங்களெனும் நெருப்பில் தொடர்ந்து தங்களை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் தூய்மையடைந்து, இறுதியாக எல்லையில்லா மகிழ்ச்சியை அடைகின்றனர்.(17) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, நன்கு செய்யப்படும் நீடித்த தவங்களால் பாவங்கழுவப்பட்டவர்களின் ஆசைகளும், நோக்கங்களும், கனிவதால் மகுடம் சூட்டப்படுகின்றன.(18) வானத்தில் பறவைகளின் பாதையைய் போன்றோ, நீரில் மீன்களின் பாதையைப் போன்றோ அறவோரின் பாதையையும் பிரித்தறிய முடியாது.(19) பிறரை நிந்திப்பதற்கு எந்தத் தேவையுமில்லை; அதே போலப் பிறர் தவறிய தருணங்களைச் சொல்ல வேண்டியதுமில்லை. மறுபுறம் ஒருவன், தனக்கு இனிமையானதையும், ஏற்புடையதையும், நன்மையானதையும் செய்துகொள்ள வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(20)
சாந்திபர்வம் பகுதி – 323ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |