The penance of Vyasa! | Shanti-Parva-Section-324 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 151)
பதிவின் சுருக்கம் : மகனைப் பெற வியாசர் தவமிருந்தது; சிவன் வரமருளியது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, கடுதவங்களைக் கொண்ட உயர் ஆன்மா சுகர் வியாசரின் மகனாக எவ்வாறு பிறந்தார்? உயர்ந்த வெற்றியை அடைவதில் அவர் எவ்வாறு வென்றார்?(1) தவத்தையே செல்வமாகக் கொண்ட வியாசர் எந்தப் பெண்மணியிடம் தன் மகனைப் பெற்றார்? சுகரின் தாயார் யார் என்பதை நாம் அறியவில்லை, மேலும் அந்த உயர் ஆன்ம தவசியின் பிறப்பைக் குறித்த எதையும் நாம் அறியவில்லை.(2) சிறுவனாக இருந்தபோதே இவரது மனம் எவ்வாறு நுட்பமான ஞானத்தில் (பிரம்மத்தில்) செலுத்தப்பட்டது? உண்மையில், இவ்வளவு இளம் வயதில் இத்தகைய மனநிலை வாய்த்த வேறு இரண்டாவது மனிதனை இவ்வுலகில் காண முடியாது.(3) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, இவை யாவையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். அமுதம் போன்ற உமது சிறந்த வார்த்தைகளைக் கேட்பதில் நான் ஒருபோதும் தணிவடைவதில்லை.(4) ஓ! பாட்டா, சுகரின் மகிமை, ஞானம் மற்றும் அவரது ஆத்மயோகத்தையும் (பரமாத்மாவுடன் அவர் கலந்த வகையையும்) முறையான வரிசையில் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "வயது, முதுமை, செல்வம் அல்லது நண்பர்களைச் சார்ந்து முனிவர்கள் தகுதியை அடைவதில்லை. வேத கல்வியில் ஈடுபடுபவனே பெரியவன் என அவர்கள் சொல்கிறார்கள்.(6) நீ கேட்கும் இவை அனைத்தும் தவங்களையே தங்கள் வேராகக் கொண்டவையாகும். மேலும், ஓ! பாண்டுவின் மகனே, அந்தத் தவமானது புலனடக்கத்தில் இருந்தே எழுகிறது.(7) தன் புலன்களிடம் கடிவாளத்தை ஒப்படைக்கும் ஒருவன் நிச்சயம் களங்கத்தை ஈட்டுகிறான். அவற்றைக் கட்டுப்படுத்துவதாலேயே அவன் வெற்றியை ஈட்டுகிறான்.(8) ஆயிரம் குதிரை வேள்விகள், அல்லது நூறு வாஜபேயங்களோடு தொடர்புடைய தகுதியானது, யோகத்தில் இருந்து எழும் தகுதியின் பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது.(9) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் புரிந்து கொள்ள முடியாதவையான சுகரின் பிறந்த சூழ்நிலைகள், தன் தவங்களால் அவர் வென்ற கனிகள், (தன் செயல்களால்) அவர் அடைந்த முதன்மையான கதி ஆகியவற்றைக் குறித்து இப்போது உனக்குச் சொல்லப்போகிறேன்.(10)
ஒரு காலத்தில், கர்ணீகார மலர்களால் {கொன்றை மலர்களால்} அலங்கரிக்கப்பட்ட மேருவின் சிகரத்தில், தன் தோழர்களான பயங்கரமான பூதகணங்களின் துணையுடன் மஹாதேவன் விளையாடிக் கொண்டிருந்தான்.(11) மலைகளின் மன்னனுடைய மகளான தேவி பார்வதியும் அங்கிருந்தாள். தீவில் பிறந்தவர் ({துவைபாயனரான} வியாசர்}, இயல்புக்குமீறிய கடுந்தவங்களை அந்தச் சிகரத்திற்கு அருகிலேயே செய்து கொண்டிருந்தார்.(12) ஓ! குருக்களில் சிறந்தவரே, யோகப் பயிற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருந்த அந்தப் பெரும் தவசி, யோகத்தின் மூலம் தன் ஆன்மாவுக்குள் தன்னையே ஈர்த்துக் கொண்டும், தாரணையில் ஈடுபட்டும், ஒரு மகனுக்காக (மகனைப் பெறுவதற்காக) கடுந்தவங்கள் பலவற்றைச் செய்து வந்தார்.(13) அவர் அந்தப் பெருந்தேவனிடம், "ஓ! பலமிக்கவனே {விபுவே}, நெருப்பு {அக்னி}, பூமி {நிலம்}, நீர் {அப்பு}, காற்று {வாயு} மற்றும் வெளி {ஆகாயம்} ஆகியவற்றின் பலத்துடன் கூடிய ஒரு மகன் எனக்குக் கிடைக்கட்டும்" என்று வேண்டிக் கொண்டிருந்தார்.(14) தீவில் பிறந்த முனிவரான அவர் {வியாசர்} மிகக் கடுமையான தவங்களில் ஈடுபட்டு, தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் அணுக முடியாத பெருந்தேவனிடம் (வார்த்தைகளாலல்லாமல்) தன் யோகத் தீர்மானத்தின் மூலம் வேண்டினார்.(15)
பலமிக்கவரான வியாசர், காற்றை மட்டுமே உண்டு பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், உமையின் தலைவனுமான மஹாதேவனைத் துதித்தபடியே நூறு வருடங்கள் அங்கேயே இருந்தார்.(16) அங்கே மறுபிறப்பாள முனிவர்கள், அரசமுனிகள், லோகபாலகர்கள், சாத்யர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், ருத்திரர்கள், சூரியன், சந்திரமாஸ், மருத்துகள், பெருங்கடல்கள், ஆறுகள்,(17) அசுவினிகள், தேவர்கள், கந்தர்வர்கள், நாரதர் மற்றும் பர்வதர், கந்தர்வன் விஸ்வாவசு, சித்தர்கள் மற்றும் அப்ரசஸ்கள் அனைவரும் இருந்தனர்.(18) அங்கே ருத்திரன் என்ற பெயராலும் அழைக்கப்படும் மஹாதேவன் {சிவன்}, கர்ணீகார மலர்களால் {கொன்றை மலர்களால்} ஆன சிறந்த மாலையை அணிந்து கொண்டு, கதிர்களால் ஒளிரும் நிலைவைப் போலச் சுடர்விட்டுபடியே அமர்ந்திருந்தான்.(19) தேவர்களும், தெய்வீக முனிவர்களும் நிறைந்த இனிமையான தெய்வீக வனத்தில் அந்தப் பெரும் முனிவர் ஒரு மகனைப் பெறும் விருப்பத்தால் உயர்ந்த தியான யோகத்திலேயே நீடித்திருந்தார்.(20)
அவரது பலம் குன்றவில்லை, எந்தத் துன்பத்தையும் அவர் உணரவில்லை. இதனால் மூன்று உலகங்களும் மிகவும் ஆச்சரியமடைந்தன.(21) அளவிலா சக்தியைக் கொண்ட அந்த முனிவர் {வியாசர்}, யோகத்தில் அமர்ந்திருந்தபோது, அவரது சக்தியின் விளைவால் அவரது சடாமுடி நெருப்பின் தழல்களைப் போலச் சுடர்விடுவதாகத் தெரிந்தது.(22) சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம் இருந்தே நான் இவற்றைக் கேட்டறிந்தேன். அவரே எப்போதும் தேவர்களின் செயல்களைக் குறித்து எனக்குச் சொல்வார்.(23) உயர் ஆன்மா கொண்டவரும் (தீவில் பிறந்தவருமான) கிருஷ்ணரின் {வியாசரின்} சடாமுடி இவ்வாறு அவரது சக்தியால் எரிந்து கொண்டிருந்த காரணத்தாலேயே இந்த நாள்வரை அது நெருப்பின் நிறத்துடன் கூடியதாக இருக்கிறது.(24) ஓ! பாரதா, முனிவரின் இத்தகைய தவங்கள் மற்றும் அர்ப்பணிப்பில் நிறைவடைந்த பெருந்தேவன் (அவர் விரும்பியதைக் கொடுக்கத்) தீர்மானித்தான்.(25)
முக்கண் தேவன் {சிவன்}, மகிழ்ச்சியாகப் புன்னகைத்தபடியே அவரிடம், "ஓ! தீவில் பிறந்தவரே {துவைபாயனரே}, நீர் விரும்பியதைப் போன்றே ஒரு மகனைப் பெறுவீர்.(26) மகிமை நிறைந்த அவன், நெருப்பைப் போல, காற்றைப் போல, பூமியைப் போல, நீரைப் போல, வெளியைப் போலத் தூய்மையானவனாக இருப்பான்.(27) அவன் தன்னுணர்வில் பிரம்ம விழிப்பு நிலையில் இருப்பான்; அவனது புத்தியும், ஆன்மாவும் பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும்; அவன் பிரம்மத்தைப் போன்றவனாகவே அதையே முழுமையாகச் சார்ந்திருப்பான்" என்றான் {சிவன்}[1].(28)
[1] கும்பகோணம் பதிப்பில், "உம்முடைய புத்திரன் பிரம்மபாவத்தைத்யானிக்கிறவனும் ப்ரம்மத்தில் உறுதியுடையவனும், பிரம்மத்தினிடம் ஆதரவுள்ளவனும், ப்ரம்மத்தை ஆஸ்ரயமாகவுடையவனுமாகித் தேஜஸால் மூவுலகஙளையும் வியாபிக்கச்செய்து கீர்த்தியை அடையப் போகிறான்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 324ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |