The birth of Suka! | Shanti-Parva-Section-325 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 152)
பதிவின் சுருக்கம் : சுகப்பிரம்மத்தின் பிறப்பு மற்றும் உபநயனம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பெருந்தேவனிடம் {சிவனிடம்} இருந்து உயர்ந்த வரத்தை அடைந்த சத்தியவதியின் மகன் {வியாசர்}, நெருப்பை உண்டாக்குவதற்காக ஒரு நாள் அரணிக் கட்டைகளை எடுத்துக் கடைவதில் ஈடுபட்டார்.(1) ஓ! மன்னா, அந்தச் சிறப்புமிக்க முனிவர் அவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தன் சக்தியின் விளைவால் பேரழகைக் கொண்டிருந்த அப்சரஸ் கிருதாசியைக் கண்டார்.(2) ஓ! யுதிஷ்டிரா, அந்தக் காட்டில் அப்சரஸைக் கண்ட சிறப்புமிக்க முனிவர் வியாசர் திடீரென ஆசையால் பீடிக்கப்பட்டார்.(3) ஆசையால் இதயம் பீடிக்கப்பட்ட முனிவரைக் கண்ட அந்த அப்சரஸ், தன்னை ஒரு பெண்கிளியாக மாற்றிக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தாள்.(4) அந்த அப்சரஸ் மற்றொரு வடிவத்தால் தன்னை மறைத்திருப்பதை முனிவர் கண்டாலும், அவரது இதயத்தில் எழுந்த ஆசை (மறையாமல்) அவரது உடலில் ஒவ்வொரு பகுதிக்கும் பரவியது.(5)
பொறுமையை வேண்டிய அந்தத் தவசி அந்த அசையை அடக்கப் பெரும் முயற்சி செய்தார். எனினும், வியாசர் எவ்வளவுதான் முயன்றாலும், கலக்கமடைந்த தன் மனத்தை அடக்குவதில் அவர் வெல்லவில்லை. நடக்கப் போவதைத் தவிர்க்க முடியாததால், முனிவரின் இதயம் கிருதாசியின் அழகிய வடிவில் ஈர்க்கப்பட்டது.(6) அவர் தன் உணர்வை அடக்கி நெருப்பை உண்டாக்கும் பணியில் தன்னை நிறுவிக் கொள்ள உண்மையில் மெய்யுறுதிப்பாட்டுடன் முயன்றாலும், அவரது உயிர்வித்து {அந்த அரணிக்கட்டைகளிலேயே} வெளியேறியது.(7) ஓ! மன்னா, இருந்தாலும் அந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர் {வியாசர்}, நடந்ததற்காக எந்த ஐயுணர்வும் அடையாமல் தன் அரணிக் கட்டைகளைக் கடைவதைத் தொடர்ந்தார். விழுந்த அந்த வித்தில் இருந்து, சுகர் என்றழைக்கப்படும் ஒரு மகன் அவருக்குப் பிறந்தார்.(8) அவரது பிறப்பு தொடர்பான இந்தச் சூழ்நிலையின் விளைவாலேயே அவர் சுகர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். உண்மையில் இவ்வாறே முனிவர்களில் முதன்மையானவரும், யோகிகளில் உயர்ந்தவருமான அந்தப் பெருந்தவசி (தன் தந்தை நெருப்பை உண்டாக்க வைத்திருந்த) ஈர் அரணிக் கட்டைகளில் இருந்து தன் பிறப்பை அடைந்தார்[1].(9) வேள்வியில் தெளிந்த நெய் ஆகுதியாக ஊற்றப்படும்போது சுடர்மிக்க நெருப்பானது சுற்றிலும் ஒளியைப் பொழிவதைப் போலவே, சுகரும் தன் சக்தியின் விளைவால் ஒளியால் சுடர்விட்டபடி தன் பிறப்பை அடைந்தார்.(10)
[1] கும்பகோணம் பதிப்பில், "அந்த முனிவர் அக்கினியை உண்டுபண்ண விருப்பத்தால் முயற்சி செய்து மனத்தையடக்கும்பொழுது, உடனே அவருடைய வீரியமானது அரணியிலேயே விழுந்தது. அரசனே, பிராம்மணசிரேஷ்டரான அந்தப் பிரம்மரிஷியானவர் சங்கையில்லாத மனத்துடன் அப்படியே அரணியைக் கடைந்தார். அந்த அரணியில் சுகர் உண்டானார். சுக்கிரமானது கடையப்படும்போது, பெருந்தவமுடையவரும் பரமரிஷியும், மஹாயோகியும் அரணியின் கர்ப்பத்தில் உற்பத்தியையுடையவருமான அந்தச் சுகர் பிறந்தார்" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், "சுக்ரமென்றால் வீரியம். சுக்ரமென்கிற பதத்தில் ரக்ரத்தைத் தள்ளிச் சுகரென்று பெயர் கொண்டார்" என்றிருக்கிறது.
ஓ! குருவின் மகனே, தூய ஆன்மாவைக் கொண்ட சுகர், தன் தந்தையின் சிறந்த வடிவத்தையும், நிறத்தையும் ஏற்று, புகையற்ற நெருப்பைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(11) ஓ! மன்னா, ஆறுகளில் முதன்மையான கங்கை, தன் உடல் கொண்ட வடிவுடன் மேருவின் சாரலுக்கு வந்து, தன் நீரால் சுகரை (அவரது பிறப்புக்குப் பிறகு) நீராட்டினாள்.(12) ஓ! குருவின் மகனே, ஓ! ஏகாதிபதி, அப்போது அந்த உயர் ஆன்ம சுகர் பயன்படுத்த ஒரு தண்டமும் ஒரு கரிய மான்தோலும் {கிருஷ்ணாஜினமும்} ஆகாயத்தில் இருந்து விழுந்தது.(13) கந்தர்வர்கள் மீண்டும் மீண்டும் பாடினார்கள்; பல்வேறு இனங்களைச் சேர்ந்த அப்சரஸ்கள் ஆடினார்கள்; தெய்வீகப் பேரிகைகள் உரக்க முழங்கத் தொடங்கின.(14) கந்தர்வன் விஸ்வாவசு, தும்புரு, நாரதர் மற்றும் ஹாஹா மற்றும் ஹுஹு என்ற பெயர்களில் அழைக்கப்படும் கந்தர்வர்கள் சுகரின் பிறப்பைத் துதித்தனர்.(15)
சக்ரனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட லோகபாலகர்களும், தேவர்களும், தெய்வீக மறுபிறப்பாள முனிவர்களும் அங்கே வந்தனர்.(16) காற்றின் தேவன் {வாயு}, அந்த இடத்தில் தெய்வீகப் பூமாரியைப் பொழிந்தான்.(17) அசைபவற்றையும், அசையாதவற்றையும் கொண்ட அண்டம் முழுமையும் இன்பத்தால் நிறைந்தது.(18) பேரொளி கொண்ட உயர் ஆன்ம மஹாதேவன் {சிவன்}, {உமா} தேவியின் துணையுடன், அன்பால் உந்தப்பட்டு அங்கே வந்து, முனிவரின் மகன் பிறந்ததும் அவருக்குப் புனித நூலை தரித்துவிட்டான்.(19) தேவர்களின் தலைவனான சக்ரன் {இந்திரன்} சிறந்த வடிவிலான ஒரு கமண்டலத்தையும், சில தெய்வீக ஆடைகளையும், அன்புடன் அவருக்குக் கொடுத்தான்.(20)
ஓ! பாரதா, அன்னங்கள், சதபத்ரங்கள் {நூறு சிறகுகளைக் கொண்ட அன்னங்கள்}, ஆயிரக்கணக்கான நாரைகள் மற்றும் பல கிளிகளும், சாஸங்களும் அவரது தலையை வட்டமிட்டன {வலம் வந்தன}.(21) பெரும் காந்தியையும் நுண்ணறிவையும் கொண்ட சுகர், அந்த அரணிக் கட்டைகள் இரண்டில் பிறப்பை அடைந்து, பல நோன்புகள் மற்றும் நியமங்களைக் கவனமாக நோற்றபடி அங்கேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.(22) சுகர் பிறந்த உடனேயே, ஓ மன்னா, புதிர்கள் அனைத்துடன் கூடிய வேதங்களும், அவற்றின் பொழிப்புரைகளும் அவரது தந்தையுடன் வசிப்பதைப் போலவே அவரிடமும் வசிக்க வந்தன.(23) அதன் பிறகும் சுகர், உலக நடைமுறையின்படியே, அங்கங்கள் மற்றும் உரைகளுடன் கூடிய வேதங்கள் அனைத்தையும் அறிந்தவரான பிருஹஸ்பதியைத் தன் ஆசானாகத் தேர்ந்தெடுத்தார்[2].(24)

[2] "வேதங்கள் தாமாகவே முன்வந்து சுகரிடம் வசித்தாலும், அவர் உலக நடைமுறையை அலட்சியம் செய்யாமல், ஓர் ஆசானிடம் முறையாக அவற்றைப் பெறும் கடப்பாட்டை ஏற்றார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! பலமிக்க ஏகாதிபதி, புதிர்கள் மற்றும் பொழிப்புரைகள் அனைத்துடன் கூடிய வேதங்களையும், வரலாறுகள் அனைத்தையும், அரசு அறிவியலையும் படித்த அந்தப் பெருந்தவசி,(25) தன் ஆசானுக்குரிய கட்டணத்தை அளித்துவிட்டு {குருவுக்குத் தக்ஷிணை கொடுத்துவிட்டு} வீடு திரும்பினார். பிரம்மச்சாரியின் நோன்பைப் பின்பற்றிய அவர், அது முதல் தன் கவனம் அனைத்தையும் குவித்துக் கடுந்தவங்களைப் பயிலத் தொடங்கினார்.(26) குழந்தைப்பருவத்திலும் கூட அவர், தனது ஞானத்திற்காகவும், தவங்களுக்காகவும் தேவர்களாலும், முனிவர்களாலும் மதிக்கப்பட்டார்.(27) ஓ! மன்னா, அந்தப் பெருந்தவசியின் மனமானது, இல்லறத்தைத் தங்களில் ஒன்றாகக் கொண்ட மூன்று வகை வாழ்வு முறைகளிலும் {மூவகை ஆசிரமங்களிலும்} இன்பங்கொள்ளாமல் விடுதலை {முக்தி} அறத்தையே தன் மனத்தில் நோக்கமாகக் கொண்டு, அதையே செய்தார்" என்றார் {பீஷ்மர்}.(28)
சாந்திபர்வம் பகுதி – 325ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |