The command of Vyasa! | Shanti-Parva-Section-326 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 153)
பதிவின் சுருக்கம் : வியாசரின் ஆணையை ஏற்று, விதேஹர்களின் தலைநகரான மிதிலைக்குச் சென்று, மன்னன் ஜனகனின் அரண்மனையை அடைந்த சுகர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "விடுதலையைக் குறித்து எண்ணிய சுகர் தன் தந்தையை {வியாசரை} அணுகி, பணிவுடன் கூடியவராக, தனக்கான உயர்ந்த நன்மையை அடைய விரும்புபவராக அந்தப் பேராசானை {வியாசரை} வணங்கி, அவரிடம்,(1) "விடுதலை {முக்தி} அறத்தை {மோக்ஷதர்மத்தை} நீர் நன்கறிந்தவராவீர். ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! பலமிக்கவரே, உயர்ந்த மனோ அமைதி எனதாகும் வகையில் அதைக் குறித்து எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார்.(2)
தன் மகனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெரும் முனிவர், அவரிடம், "ஓ! மகனே, விடுதலையறத்தையும் {மோக்ஷதர்மத்தையும்}, வாழ்வின் பல்வேறு கடமைகள் அனைத்தையும் நீ கற்பாயாக" என்றார்.(3)
அறவோர் அனைவரிலும் முதன்மையான சுகர், ஓ! பாரதா, தன் தந்தையின் கட்டளையின் பேரில் யோக சாத்திரங்கள் அனைத்திலும், கபிலரிடம் இருந்து உண்டான அறிவியலிலும் {சாங்கிய அறிவியலிலும்} தேர்ச்சியடைந்தார்.(4)
ஓ! மன்னா, சுகர் தன் தந்தையின் ஆணையை ஏற்றுக் கொண்டு, கடமைகளின் உண்மையையும், விடுதலை தரும் புகலிடத்தையும் குறித்து மன்னனிடம் தெரிந்து கொள்வதற்காக மிதிலைக்குச் சென்றார்.(7)
அவர் புறப்படுவதற்கு முன்னர் அவரது தந்தை அவரிடம், "சாதாரண மனிதர்கள் செல்லும் பாதையிலேயே நீ அங்கே செல்வாயாக. வானத்தினூடாகச் செல்வதற்காக நீ உன் யோகபலத்தைப் பயன்படுத்த வேண்டாம்" என்றார்.(8)
சுகர் (எளிய இயல்பினரென்பதால்) இதில் எந்த ஆச்சரியத்தையும் அடையவில்லை. மேலும் அவர் அந்த இடத்திற்கு எளிமையுடன் செல்ல வேண்டும் என்றும், இன்பத்திற்கான ஆசையில் செல்லக்கூடாது என்றும் சொல்லப்பட்டார், {வியாசர்}, "நண்பர்களும், மனைவிகளும் உலகப் பற்றுக்கான காரணங்கள் என்பதால், நீ செல்லும் வழியில் நண்பர்களையோ, மனைவிகளையோ தேடாதே.(9) வேள்வி செய்வதில் நம் உதவியைப் பெறுபவர்களில் ஒருவனான மிதிலையின் ஆட்சியாளன் {ஜனகன்} இருந்தாலும், அவனோடு வாழும்போது நீ உயர்வு மனப்பான்மையுடன் எதிலும் ஈடுபடக்கூடாது. நீ அவனது இயக்கத்தின் கீழ், அவனுக்குக் கீழ்ப்படிந்தே வாழ வேண்டும். அவனே உன் ஐயங்கள் அனைத்தையும் அகற்றுவான்.(10) அம்மன்னன், கடமைகள் அனைத்தையும் நன்கறிந்தவன், விடுதலை {முக்தி} குறித்த சாத்திரங்களையும் நன்கறிந்தவனாவான். நான் வேள்வி நடத்திக் கொடுப்பவர்களில் அவனும் ஒருவன். அவன் சொல்வதை நீ எந்த ஐயுணர்வுமின்றிச் செய்ய வேண்டும்" {என்றார்}.(11)
இவ்வாறு கற்பிக்கப்பட்ட அற ஆன்ம சுகர், கடல்களுடன் கூடிய பூமி முழுமையிலும் வானத்தின் ஊடாகச் செல்லவல்லவரென்றாலும் அவர் கால்நடையாகவே மிதிலைக்குச் சென்றார்.(12) பல குன்றுகள், மலைகள், ஆறுகள், நீர்நிலைகள், தடாகங்கள், தோப்புகள், இரைதேடும் விலங்குகளும், பிற விலங்குகளும் நிறைந்த காடுகள் ஆகியவற்றைக் கடந்து,(13) மேரு மற்றும் ஹரி என்ற இரு வர்ஷங்களை அடுத்தடுத்து கடந்து, அடுத்ததாக இமய வர்ஷத்தையும் கடந்து இறுதியாகப் பாரதம் என்ற பெயரில் அறியப்பட்ட வர்ஷத்தை வந்தடைந்தார்.(14) வழியில் சீனர்களும், ஹூணர்களும் வசித்த பல நாடுகளைக் கண்ட அந்தத் தவசி இறுதியாக ஆர்யவர்த்தத்தை அடைந்தார்.(15)
அவர் தன் தந்தையின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தும், அவற்றைத் தொடர்ந்து தன் மனத்தில் கொண்டும், காற்றில் பறக்கும் பறவைகளைப் போலப் பூமியில் படிப்படியாகத் தன் வழியில் கடந்து சென்றார்.(16) பல இனிய ஊர்களையும், மக்கள் கூட்டம் நிறைந்த நகரங்களையும் கடந்து சென்ற அவர், அவதானிக்கக் காத்திராமல் பல்வேறு வகைச் செல்வங்களையும் காணாமல் சென்றார்.(17) அவர் தன் வழியில் பல இனிய தோட்டங்களையும், தளங்களையும், புனித நீர்நிலைகளையும் கடந்து சென்றார்.(18)
அதிகக் காலம் கடக்கும் முன் அறம் சார்ந்த உயர் ஆன்ம ஜனகனால் பாதுகாக்கப்பட்ட விதேஹர்களின் நாட்டை அவர் அடைந்தார்.(19) அங்கே அவர் மக்கள் தொகை நிறைந்த கிராமங்களையும், பல வகை உணவு மற்றும் பானங்களையும், மனிதர்களாலும், கால்நடைக் கூட்டங்கள் பலவற்றாலும் நிறைந்திருந்த மாட்டிடையர்களின் வசிப்பிடங்களையும் கண்டார்.(20)
அதிகக் காலம் கடக்கும் முன் அறம் சார்ந்த உயர் ஆன்ம ஜனகனால் பாதுகாக்கப்பட்ட விதேஹர்களின் நாட்டை அவர் அடைந்தார்.(19) அங்கே அவர் மக்கள் தொகை நிறைந்த கிராமங்களையும், பல வகை உணவு மற்றும் பானங்களையும், மனிதர்களாலும், கால்நடைக் கூட்டங்கள் பலவற்றாலும் நிறைந்திருந்த மாட்டிடையர்களின் வசிப்பிடங்களையும் கண்டார்.(20)
நெல், கோதுமை மற்றும் பிற தானியங்கள் நிறைந்த வயல்கள் பலவற்றையும், அன்னங்கள், நாரைகள் வசித்தவையும், அழகிய தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான தடாகங்கள் மற்றும் நீர்நிலைகள் பலவற்றையும் கண்டார்.(21) வசதிவாய்ப்புள்ள மக்கள் நிறைந்த விதேஹ நாட்டின் ஊடே கடந்து சென்று, பல்வேறு வகை மரங்கள் நிறைந்த, இனிமைநிறைந்த மிதிலையின் தோட்டங்களை {உபவனத்தை} அடைந்தார்.(22) யானைகள், குதிரைகள், தேர்கள் நிறைந்து, ஆண் பெண் மக்களால் நிரம்பிய அதனில் தன் கண்ணுக்கு விருந்தளிக்கப்பட்ட எந்தப் பொருளையும் காணக் காத்திராமல் கடந்து சென்றார்.(23) (விடுதலை அறத்தில் {மோக்ஷதர்மத்தில்} திறம்பெற விரும்பிய) தன் மனச்சுமையைத் தாங்கிக் கொண்டும், இடையறாமல் அந்நிலையிலேயே வசித்துக் கொண்டும் சென்றவரும், உற்சாக ஆன்மா கொண்டவருமான சுகர், அக ஆய்வில் மட்டுமே திளைப்பை அடைந்து இறுதியில் மிதிலையை அடைந்தார்.(24) வாயிலை வந்தடைந்த அவர், வாயில்காப்போர் மூலம் {தன் வருகையைச்} சொல்லியனுப்பினார். மன அமைதி கொண்டவரும், தியானத்திலும், யோகத்திலும் அர்ப்பணிப்புள்ளவருமான அவர், அனுமதியைப் பெற்றுக் கொண்டு அந்நகருக்குள் {மிதிலைக்குள்} நுழைந்தார்.(25)
வசதிவாய்ப்புள்ள மனிதர்களால் நிறைந்த முக்கியச் சாலையின் {ராஜமார்க்கத்தின்} வழியே சென்ற அவர், மன்னனின் அரண்மனையை அடைந்து, எந்த ஐயுணர்வுமின்றி அதனுள் நுழைந்தார்.(26) சுமைதூக்குபவர்கள் கடுமொழிகளால் அவரைத் தடுத்தார்கள். அதன்பேரில் சுகர் கோபமேதும் அடையாமல் நின்று அங்கேயே காத்திருந்தார்.(27) சூரியனோ, அவர் நடந்து வந்த நெடுந்தொலைவோ அவரைக் களைப்படையச் செய்யவில்லை. பசியோ, தாகமோ, களைப்பாலோ அவர் பலவீனமடையவில்லை. சூரியனின் வெப்பத்தால் அவரை எரிக்கவோ, துன்புறுத்தவோ, தளர்வடையச் செய்யவோ முடியவில்லை.(28) அந்தச் சுமைதூக்கிகளில், பிரகாசத்துடன் கூடிய நடுப்பகல் சூரியனைப் போல அங்கே நின்று கொண்டிருந்த அவரிடம் கருணை கொண்ட ஒருவன் இருந்தான்.(29) முறையான வடிவில் அவரை வழிபட்டு, அவரை முறையாக வணங்கி, கூப்பிய கரங்களுடன் அந்த அரண்மனையின் முதல் அறைக்கு அவரை அழைத்துச் சென்றான்.(30)
ஓ! மகனே {யுதிஷ்டிரா}, அங்கே அமர்ந்த அவர் விடுதலையை {முக்தியை} மட்டுமே சிந்திக்கத் தொடங்கினார். ஒரே தன்மையிலான காந்தியைக் கொண்ட அவர், நிழல்விழுந்த இடத்தையும், சூரியனின் கதிர்களுக்கு வெளிப்பட்ட இடங்களையும் சமகண்ணுடனே பார்த்தார்.(31)வெகு விரைவில் மன்னனின் அமைச்சர், கரங்களைக் கூப்பியபடியே அந்த இடத்திற்கு வந்து அரண்மனையின் இரண்டாம் அறைக்கு அவரை அழைத்துச் சென்றார்.(32) அந்த அறையானது, அரண்மனையின் அந்தப்புரத்தில் ஒரு பகுதியாக அமைந்திருந்த ஓர் அகன்ற நந்தவனத்திற்கு வழிவகுத்தது. அஃது இரண்டாம் சைத்ரரதம் போல இருந்தது. முறையான இடைவெளிகளில் அழகிய நீர்த்தடாகங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. அந்த வனத்தில் இருந்த இனிமைநிறைந்த மரங்கள் அனைத்தும் மலரும் பருவத்தில் இருந்தன.(33)
ஒப்பற்ற அழகுடைய காரிகையர் கூட்டம் அங்கே இருந்தது. அந்த அமைச்சர் சுகரை இரண்டாம் அறையில் இருந்து அந்த இனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தத் தவசிக்கு இருக்கை அளிக்கும்படி அந்தக் காரிகைகளுக்கு ஆணையிட்ட அமைச்சர், அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்.(34) நன்கு உடுத்தியிருந்த அந்தக் காரிகையர், அழகிய அம்சங்களையும், சிறந்த இடைகளையும், இளங்காதுகளையும் கொண்டவர்களாகவும், மெலிதான சிவப்பாடைகளை அணிந்தவர்களாகவும், புடம்போட்ட தங்கத்தாலான ஆபரணங்கள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.(35) ஏற்புடைய உரையாடல்களைச் செய்வதிலும், பித்துகொள்ளச் செய்யும் களியாட்டங்களில் நன்கு திறம்பெற்றவர்களாகவும், ஆடல் மற்றும் பாடல் கலைகளில் முற்றான தலைவிகளாகவும் திகழ்ந்தனர். எப்போதும் புன்னகையுடன் உதடுகளைத் திறக்கும் அவர்கள், அழகில் அப்ஸரஸ்களைப் போலவே இருந்தனர்.(36) பாலுறவுச் செயல்கள் அனைத்திலும் திறம்பெற்றவர்களாகவும், தாங்கள் காத்திருக்கக்கூடிய {பணிவிடை செய்யக்கூடிய} மனிதர்களின் எண்ணங்களைப் படிக்கும் திறன் கொண்டவர்களாகவும், சிறப்புத் திறன்கள் அனைத்தையும் கொண்டவர்களாகவும், மிக மேன்மையான வகையைச் சேர்ந்தவர்களாகவும், எளிய ஒழுக்கத்தையே கொண்டவர்களாகவும் இருந்த ஐம்பது காரிகையர் அந்தத் தவசியை {சுகரைச்} சூழ்ந்து கொண்டனர்[1].(37) அவரது காலைக் கழுவிக் கொள்ள நீரையும், வழக்கமான பொருட்களையுங்கொடுத்து மதிப்புடன் அவரை வழிபட்ட அவர்கள், அந்தப் பருவகாலத்திற்குரிய சிறந்த, ஏற்புடைய உணவுவகைகளையுங்கொடுத்து அவரை நிறைவு செய்தார்கள்.(38)
அவர் உண்ட பிறகு, அந்தக் காரிகையர் ஒருவர் பின் ஒருவராக அவரைத் திடலுக்கு அழைத்துச் சென்று, விருப்பத்திற்குரிய ஒவ்வொரு பொருளையும் அவருக்குக் காட்டினார்கள்.(39) மனிதர்கள் அனைவரின் எண்ணங்களையும் அறியவல்லவர்களான அந்தக் காரிகையர், விளையாடிக் கொண்டும், நகைத்துக் கொண்டும், பாடிக் கொண்டும், உன்னத ஆன்மாவைக் கொண்ட அந்த மங்கலமான தவசியை உபசரித்தனர்.(40) தூய ஆன்மாவைக் கொண்டவரும், அரணிக்கட்டைகளில் பிறந்தவரும், தன் கடமைகளில் எவ்வகையையும் ஐயமில்லாமல் செய்பவரும், தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டவரும், கோபத்தை முற்றாக ஆள்பவருமான அந்தத் தவசி {சுகர்}, இவை யாவற்றிலும் விருப்பமோ, கோபமோ கொள்ளவில்லை.(41) அப்போது, அழகிய பெண்களில் முதன்மையானவர்களான அவர்கள் அவருக்கு ஒரு சிறந்த இருக்கையை அளித்தனர்.(42)
[1] கும்பகோணம் பதிப்பில், "அழகான வேஷமுடையவர்களும், தருணவயதுள்ளவர்களும், பிரியமான தோற்றமுடையவர்களும், மெல்லிய சிவப்பு வஸ்திரந்தரித்தவர்களும், புடம்வைத்த பொன்னாபாரணமுடையவர்களும், சல்லாபம், ஆலாபமிவைகளில் ஸாமார்த்தியமுடையவர்களும், நாட்டியம் கானம் இவைகளில் தேர்ச்சி பெற்றவர்களும், சிரித்துக் கொண்டே பேசுகிறவர்களும், அழகிய அப்ஸரஸுகளுக்கொப்பானவர்களும், அந்தரங்கத்துடன் உபசரிப்பதில் சக்தியுள்ளவர்வர்களும், அபிப்ராயத்தை அறிகிறவர்களும், ஸ்ருங்காரசேஷ்டைகளில் தேர்ந்தவர்களும், தாஸிகளிற்சிறந்தவர்களுமான ஐம்பது ஸ்திரீகள் அவரிடம் வந்தார்கள்; பாத்ய முதலானவைகள் கொடுத்துச் சிறந்த பூஜையினால் உபசரித்தார்கள்; அப்பொழுது, அந்த ஸமயத்துக்குத் தகுந்த ருசியான அன்னத்தினால் திருப்தியும் அடைவித்தார்கள்" என்றிருக்கிறது.
தன் பாதங்களையும், பிற அங்கங்களையும் கழுவிக் கொண்ட சுகர், தன் மாலை வேளை வேண்டுதல்களைச் சொல்லி, அந்தச் சிறந்த இருக்கையில் அமர்ந்து, தான் அங்கே வந்த நோக்கத்தைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(43) இரவின் முதல் பகுதியில் அவர் தன்னை யோகத்தில் அர்ப்பணித்தார். அந்தப் பலமிக்கத் தவசி, இரவின் நடுப்பகுதியை உறக்கத்தில் கழித்தார்.(44) வெகுவிரைவில் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட அவர், தன் உடலின் தூய்மைக்குத் தேவையான சடங்குகளைச் செய்த பிறகு அழகிய பெண்களால் சூழப்பட்டிருந்தாலும் மீண்டும் யோகத்தில் தன்னை அர்ப்பணித்தார்.(45) ஓ! பாரதா, தீவில்பிறந்தவரான கிருஷ்ணரின் {வியாசரின்} மகன், இவ்வாறே அந்த நாளின் இறுதிப் பகுதியையும், அந்த இரவு முழுமையையும் மன்னன் ஜனகனின் அரண்மனையில் கடத்தினார்"{என்றார் பீஷ்மர்}.(46)
சாந்திபர்வம் பகுதி – 326ல் உள்ள சுலோகங்கள் : 46
ஆங்கிலத்தில் | In English |