The knowledge of Brahma! | Shanti-Parva-Section-327 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 154)
பதிவின் சுருக்கம் : சுகரை வரவேற்று, வழிபட்டு அவருக்கு பிரம்மஞானத்தை உபதேசித்த மன்னன் ஜனகன்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, அடுத்த நாள் காலையில், மன்னன் ஜனகன் தன் அமைச்சர்கள் மற்றும் மொத்த குடும்பத்தின் துணையுடனும், தன் புரோகிதரை முன்னணியில் நிறுத்திக் கொண்டும் சுகரிடம் வந்தான்.(1) அந்த ஏகாதிபதி, விலைமதிப்புமிக்க இருக்கைகள் பல்வேறு வகையான ரத்தினங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்தும், தன் தலையில் அர்க்கிய உட்பொருட்களைச் சுமந்து கொண்டும் தன் மதிப்புமிக்க ஆசானின் {வியாசரின்} மகனை {சுகரை} அணுகினான்.(2) மன்னன், பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த விரிப்பு விரிக்கப்பட்டதும், அனைத்துப் பகுதியிலும் அழகாக இருந்ததும், மிக்க விலைமதிப்புமிக்கதுமான இருக்கையைத் தன் புரோகிதரின் கைகளில் இருந்து, தன் கைகளாலேயே பெற்று, தன் ஆசானின் மகனான சுகரிடம் பெரும் மதிப்புடன் கொடுத்தான்.(3,4) (தீவில் பிறந்த) கிருஷ்ணரின் மகன் {கிருஷ்ண துவைபாயணரான வியாசரின் மகன் சுகர்} அதில் அமர்ந்தபிறகு, பரிந்துரைக்கப்படும் சடங்குகளின்படி மன்னன் அவரை முறையாக வழிபட்டான். முதலில் அவரது பாதங்களைக் கழுவிக் கொள்ள நீரைக் கொடுத்த அவன், பிறகு அர்க்கியத்தையும், பசுவையும் அவருக்குக் கொடுத்தான்.(5)
அந்தத் தவசியும் {சுகரும்} தனக்கு அளிக்கப்பட்ட வழிபாட்டை முறையான சடங்குகளுடனும், மந்திரங்களுடனும் ஏற்றுக் கொண்டார். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரான அவர், மன்னனால் {ஜனகனால்} அளிக்கப்பட்ட காணிக்கையை இவ்வாறு ஏற்றுக் கொண்டு,(6) அவருக்கு அளிக்கப்பட்ட பசுவையும் பெற்றுக் கொண்டு அந்த ஏகாதிபதியை வணங்கினார். பெரும் சக்தியைக் கொண்ட அவர், மன்னனின் நலனையும், செழிப்பையும் விசாரித்தறிந்தார்.(7) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உண்மையில் சுகர் அந்த ஏகாதிபதியின் {ஜனகனின்} தொண்டர்கள் மற்றும் அலுவலர்களின் நலத்தையும் விசாரித்தார்.(8) உயர் ஆன்மாவையும், உயர்ந்த பிறப்பைக் கொண்ட அந்த ஏகாதிபதி {ஜனகன்}, கூப்பிய கரங்களுடன் வெறுந்தரையில் அமர்ந்து அந்த வியாசர் மகனின் {சுகரின்} நலத்தையும், அவரது குறைவற்ற செல்வத்தையும் குறித்து விசாரித்தான்.(9) பிறகு அந்த ஏகாதிபதி தன் விருந்தினர் வந்த நோக்கத்தைக் கேட்டான்.(10)
சுகர் {ஜனகனிடம்}, "நீர் அருளப்பட்டு இருப்பீராக. விதேஹர்களின் ஆட்சியாளரும், ஜனகன் என்ற பெயரால் உலகம் முழுவதும் அறியப்பட்டவருமான தமது எஜமானர் விடுதலை அறம் {மோக்ஷதர்மம்} குறித்து நன்கறிந்தவர் என்று என் தந்தை {வியாசர்} சொன்னார்.(11) பிரவிருத்தி, அல்லது நிவிருத்தி ஆகிய அறக்காரியங்களில் தீர்மானத்தை எட்டுவதில் ஐயமேதும் எழுந்தால் தாமதமில்லாமல் அவரிடம் செல்லும்படியும் {ஜனகரான உம்மிடம் செல்லும்படியும்} அவர் ஆணையிட்டார். மிதிலையின் மன்னர் என் ஐயங்கள் அனைத்தையும் அகற்றுவார் என்றும் அவர் சொன்னார்.(12) எனவே, என் தந்தையுடைய {வியாசருடைய} ஆணையின் பேரில் உம்மிடம் பாடங்கள் கேட்கும் நோக்கத்தில் நான் இங்கு வந்துள்ளேன். ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, எனக்குக் கற்பிப்பதே உமக்குத் தகும்.(13) பிராமணர்களின் கடமைகள் என்னென்ன? விடுதலையை {முக்தியை} நோக்கமாகக் கொண்ட அந்தக் கடமைகளின் சாரமென்ன? {மோக்ஷரூபமான புருஷார்த்தமானது என்ன ஸ்வரூபமுடையது?} மேலும், விடுதலை {முக்தி} எவ்வாறு அடையப்படுகிறது? அது ஞானத்தின் துணையால் அடையத்தக்கதா? தவங்களின் உதவியால் அடையத்தக்கதா?" என்று கேட்டார்.
ஜனகன் {சுகரிடம்}, "ஒரு பிராமணன் பிறந்தது முதல் அவனுடைய கடமைகள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! மகனே, புனித நூலை ஏற்ற {உபநயனம் செய்யப்பட்ட} பிறகு அவன் தன் கவனத்தை வேத கல்வியில் அர்ப்பணிக்க வேண்டும்.(15) தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் தான் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடுவதற்காகத் தவங்கள் பயின்று, கடமையுணர்வுடன் தன் ஆசானுக்குத் தொண்டு செய்து, பிரம்மச்சாரியின் கடமைகளை நோற்பதன் மூலம் அவன், தீய நோக்கங்கள் அனைத்தையும் கைவிடவேண்டும்.(16) மிகக் கவனமாக வேதங்களைப் பயின்று, தன் புலன்களை அடக்கி, தன் ஆசானுக்குரிய தக்ஷிணையைக் கொடுத்த பிறகு அவன் தன் ஆசானின் அனுமதியுடன் இல்லம் திரும்ப வேண்டும்.(17) இல்லம் திரும்பிய அவன், இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} மேற்கொண்டு ஒரு துணைவியை மணந்து அவளிடம் மட்டுமே கட்டுப்பட்டு, அனைத்துவகைத் தீய நோக்கங்களில் இருந்தும் தன்னை விடுவிக்கும் வகையில் வாழ்ந்து தன் இல்லற நெருப்பை நிறுவிக் கொள்ள வேண்டும்.(18) இல்லறத்தில் வாழும் அவன் மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் பெற வேண்டும். அதன் பிறகு, காட்டுக்குள் ஓய்ந்து சென்று அதே நெருப்புகளை வழிபடுவதைத் தொடர்ந்து, இதயப்பூர்வமான விருந்தோம்பலுடன் விருந்தினர்களை உபசரிக்க வேண்டும் {வானப்ரஸ்தாஸ்ரமத்தை ஏற்க வேண்டும்}.(19) அதன்பிறகு அவன், காட்டில் அறவோனாக வாழ்ந்து, தன் நெருப்பைத் தன் ஆன்மாவில் நிறுவி, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஆன்மாவின் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டுச் சந்நியாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையில், அல்லது பிரம்மம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையில் தன் நாட்களைக் கடத்த வேண்டும்" என்றான் {ஜனகன்}.(20)
சுகர் {ஜனகனிடம்}, "ஒருவன், சாத்திரக் கல்வி மற்றும் அனைத்துப் பொருட்களின் உண்மைப் பொருளை உணர்தல் ஆகியவற்றின் மூலம் தெளிந்த புத்தியை அடைந்தால், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் விளைவுகளில் இருந்தும் அவனது இதயம் நிரந்தரமாக விடுபட்டால், அத்தகைய மனிதனும் பிரம்மச்சர்யம், கார்ஹஸ்தியம், வானப்ரஸ்தம் என்றழைக்கப்படும் மூன்று வாழ்வு முறையையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பின்பற்ற வேண்டுமா?(21) இதையே நான் உம்மிடம் கேட்கிறேன். எனக்கு இதைச்சொல்வதே உமக்குத் தகும். உண்மையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, வேதங்களின் உண்மை பொருளின்படி இதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார்.(22)
ஜனகன் {சுகரிடம்}, "சாத்திரக் கல்வியின் மூலமும், விஞ்ஞானம் என்ற பெயரில் அறியப்படும் அனைத்துப் பொருட்களின் உண்மைப் பொருளை உணர்தலின் மூலமும் தூய்மையடைந்த புத்தியின் துணையில்லாமல் விடுதலையை {முக்தியை} அடைவது சாத்தியமற்றதாகும். மேலும் அந்தத் தூய்மையடைந்த புத்தியும், ஓர் ஆசானின் தொடர்பில்லாமல் அடையப்பட முடியாது என்றும் சொல்லப்படுகிறது.(23) (உலகமெனும் பெருங்கடலைக் கடப்பதில் ஒருவன் வெல்வதிலும், அதில் துணை செய்வதிலும்) ஞானம் படகாகிறது, ஆசானே படகோட்டியாகிறார். அப்படகை அடைந்த பிறகே ஒருவன் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறான். உண்மையில், பெருங்கடலைக் கடந்ததும் அவன் அவை இரண்டையும் {படகான ஞானத்தையும், படகோட்டியான ஆசானையும்} கைவிடலாம்.(24) உலகங்கள் அனைத்தையும் அழிவில் இருந்து காப்பதற்கும், (உலகங்கள் எவற்றைச் சார்ந்திருக்க்கிறதோ அந்தச்) செயல்களை அழிவில் இருந்து காப்பதற்கும் பழங்கால ஞானிகளால் இந்த நான்கு வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} தொடர்புடைய கடமைகள் பயிலப்பட்டன.(25) ஒருவன் பல பிறவிகளின் போக்கில் இவ்வகைமுறை சார்ந்த செயல்களுக்கு ஏற்புடைய வகையில் நல்ல மற்றும் தீய செயல்களைக் கைவிடுவதன் மூலம் விடுதலையை அடைகிறான்[1].(26) எந்த மனிதன் பல பிறவிகளில் செய்யும் தவங்களின் மூலம் மனம், புத்தி மற்றும் ஆன்மத் தூய்மையை அடைவதில் வெல்கிறானோ அவனால் (தன் புதிய பிறவியில்) முதல் வாழ்வுமுறையிலேயே {பிரம்மச்சரிய வாழ்வுமுறையிலேயே} கூட நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைய முடியும்.(27)
[1] "ஒருவன் முக்தி அடைவதற்கு முன்னர் நிச்சயம் செயல்கள் அனைத்தையும் கைவிடவேண்டும். ஆனால் செயல்கள் அனைத்தையும் உடனே கைவிடக்கூடாது. பல்வேறு வாழ்வுமுறைகளின் வரிசையிலேயே அவை கைவிடப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறாரல்.
தூய்மையடைந்த புத்தியை அடைகையில் விடுதலை அவனுடையதாவதன் மூலம் அவன் புலப்படும் அனைத்துப் பொருட்களின் ஞானத்தையும் அடைவான் எனும்போது, {கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம் என்ற} மூன்று பிற வாழ்வுமுறைகளை நோற்பதன்மூலம் அடையத்தக்க விருப்பமான பொருள் வேறென்ன இருக்க முடியும்?[2](28) ரஜஸ் மற்றும் தமஸில் {குணங்களில்} பிறக்கும் களங்கங்கள் அனைத்தையும் ஒருவன் கைவிட வேண்டும். அவன், சத்வத்தின் {சத்வ குணத்தின்} பாதையைப் பின்பற்றித் தன்னைத் தன்னால் {சுயத்தைச் சுயத்தால்} அறிய வேண்டும்[3].(29) தன்னை {தன் சுயத்தை} அனைத்து உயிரினங்களிலும், அனைத்து உயிரினங்களில் தன்னையும் {தன் ஆன்மாவென்ற சுயத்தையும்} காணும் ஒருவன், (எதனிலும் பற்றுக் கொள்ளாமல்) நீரில் வாழ்ந்தும், நீரில் நனையாமல் இருக்கும் நீர்வாழ் உயிரினங்களைப் போல வாழ வேண்டும்.(30) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடப்பதிலும், அவற்றின் ஆதிக்கத்தைத் தடுப்பதிலும் வெல்லும் ஒருவன், பற்றுகள் அனைத்தையும் கைவிடுவதில் வென்று, கீழே இருந்து வானத்திற்குப் பறந்து செல்லும் பறவையைப் போல, மறுமையில் முடிவிலா இன்ப நிலையை அடைகிறான்.(31) இது தொடர்பாகப் பழங்காலத்தில் மன்னன் யயாதியால் பாடப்பட்டதும், விடுதலை {முக்தி} குறித்த சாத்திரங்களை {மோக்ஷசாத்திரங்களை} அறிந்த மனிதர்கள் அனைவராலும் நினைவில் கொள்ளப்படுவதுமான ஒரு சொலவடை இருக்கிறது.(32) (பரமாத்மா எனும்) பிரகாசமிக்கக் கதிர், ஒருவனின் ஆன்மாவுக்குள்ளேயே இருக்கிறது, வேறு எங்கும் இல்லை. அஃது அனைத்து உயிரினங்களிலும் சமமாக இருக்கிறது. யோகத்தில் அர்ப்பணிப்புள்ள இதயத்துடன் கூடிய ஒருவனால் அதைத் தனக்குள்ளேயே காண முடியும்.(33)
[2] "விடுதலையையும், அனைத்தையும் அறியும் அறிவையும் முதல் வாழ்வுமுறையிலேயே பெற்ற பிறகு, அதைத் தொடர்ந்து வரும் மூன்று பிற வாழ்வுமுறைகளால் வேறு எந்தத் தேவையும் கிடையாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "தன் ஆன்மாவின் மூலம் பரமாத்மாவைக் காண வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தன்னைப் பார்த்தவுடனே மற்றவன் அஞ்சாத வகையில் வாழ்பவனும், பிறரைக் கண்டு ஒருபோதும் அஞ்சாதவனும், விருப்பு வெறுப்பு வளர்ப்பதை நிறுத்துபவனுமான ஒருவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(34) எண்ணம், சொல் மற்றும் செயலில் அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் பாவம் நிறைந்த மனோநிலையை நிறுத்துபவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(35) மனம் மற்றும் ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், மனத்தைக் கலங்கடிக்கும் தீய நோக்கத்தைக் கைவிடுவதன் மூலமும், ஆசை மற்றும் மயக்கத்தை விடுவதன் மூலமும் ஒருவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(36) ஒரு மனிதன், கேட்கும் பொருட்கள் மற்றும் பார்க்கும் பொருட்கள் அனைத்திலும், (பிற புலன்களின் செயல்பாடுகளிலும்), வாழும் உயிரினங்கள் அனைத்திலும் சம மனநிலையைக் கொண்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடக்கும்போது அவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(37) ஒரு மனிதன், புகழ் மற்றும் இகழ், தங்கம் மற்றும் இரும்பு, இன்பம் மற்றும் துன்பம், வெப்பம் மற்றும் குளிர், நன்மை மற்றும் தீமை, ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை, வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றில் சமமாகக் கண்களைச் செலுத்தும் போது அவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(38, 39)
துறவி வகையினரின் கடமைகளை நோற்கும் ஒருவன், நீட்டப்பட்ட தன் அங்கங்களை உள்ளிழுத்துக் கொள்ளும் ஓர் ஆமையைப் போலத் தன் புலன்களையும், மனத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.(40) இருளில் மூழ்கிய ஒரு வீட்டை தூண்டப்பட்ட விளக்கின் துணையுடன் பார்ப்பதைப் போலவே, புத்தி எனும் விளக்கின் துணையால் ஆன்மாவையும் காண முடியும்.(41) ஓ!புத்திசாலிகளில் முதன்மையானவனே, நான் உனக்குச் சொல்லும் இந்த ஞானம் அனைத்தும் உன்னிடம் வசிப்பதை நான் பார்க்கிறேன். விடுதலை அறத்தை {மோக்ஷதர்மத்தைக்} கற்க விரும்பும் ஒருவனால் அறியப்பட வேண்டிய எதையும் நீ ஏற்கனவே அறிந்திருக்கிறாய்.(42) ஓ! மறுபிறப்பாள முனிவனே, உனது ஆசானின் அருள் மூலமாகவும், நீ பெற்ற கல்வியின் மூலமும், நீ ஏற்கனவே புலன்நுகர் பொருட்கள் அனைத்தையும் கடந்துவிட்டாய் என நான் நம்புகிறேன்.(43) ஓ! பெரும் தவசியே, உனது தந்தையின் அருள் மூலம் அனைத்தையும் அறிந்தவன் நான், எனவே உன்னை அறிந்து கொள்வதில் வென்றிருக்கிறேன்.(44)
நீ உனக்கு இருப்பதாக நினைப்பதைவிட உன் ஞானம் மிகப் பெரியதாகும். உள்ளுணர்வின் மூலம் விளையும் உன் கருத்துகளும் நீ கொண்டிருப்பதாக நினைப்பதைவிட மிகப் பெரியவையாகும். நீ அறிந்ததைவிட உன் பலம் மிகப் பெரியது.(45) உன் இளம் வயதினாலோ, ஐயங்களை அகற்ற இயலாததாலோ, விடுதலை {முக்தி} அடையாததால் உண்டாகும் அச்சத்தாலோ, உள்ளுணர்வின் மூலம் உன் மனத்தில் ஏற்கனவே எழுந்த ஞானத்தை நீ அறியாமல் இருக்கிறாய்.(46) எங்களைப் போன்றோரின் மூலம் ஐயங்கள் விலக்கப்பட்ட பிறகே ஒருவன் தன் இதய முடிச்சுகளைத் திறப்பதில் வெல்கிறான். அதன்பிறகு செய்யும் அறம் சார்ந்த முயற்சியின் மூலம் அவன் அந்த ஞானத்தை அடைந்து அறிந்து கொள்கிறான்.(47)
உன்னைப் பொறுத்தவரையில் நீ ஏற்கனவே ஞானத்தை அடைந்தவனாவாய். உன் புத்தி நிலையாகவும், அமைதியாகவும் இருக்கிறது. நீ பேராசையில் இருந்து விடுபட்டவனாக இருக்கிறாய். ஓ! பிராமணா, இவையாவும் இருந்தாலும், முயற்சி இல்லாத ஒருவனால், அடைவதற்கரிய உயர்ந்த பொருளான பிரம்மத்தை அடைவதில் ஒருபோதும் வெல்லமுடியாது.(48) இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையில் நீ எந்த வேறுபாட்டையும் காணவில்லை. நீ பேராசையுடன் இல்லை. ஆடுவதிலும், பாடுவதிலும் உனக்கு விருப்பமில்லை. உனக்குப் பற்றுகள் ஏதும் இல்லை.(49) நண்பர்களிடம் உனக்குப் பிணைப்பேதும் கிடையாது. அச்சத்தைத் தூண்டும் பொருட்களில் உனக்கு அச்சமேதுமில்லை. ஓ! அருளப்பட்டவனே, தங்கக் குவியலிலும், மண்ணாங்கட்டியிலும் நீ சமகண்களைக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன்.(50) நானும், ஞானம் கொண்ட பிறரும், உயர்ந்த, அழிவற்ற அமைதி வழியில் நீ நிறுவப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.(51) ஓ! பிராமணா, ஒரு பிராமணன் அடையத்தக்க கனிகளைப் பெற்றுத் தருபவையும், விடுதலை {முக்தி} என்று சொல்லப்படும் பொருள் சாரங்களைப் போன்றவையுமான கடமைகளிலேயே நீ இருக்கிறாய். இன்னும் என்னிடம் நீ கேட்பதற்கு வேறென்ன இருக்கிறது?" என்று கேட்டான் {ஜனகன்}".(52)
சாந்திபர்வம் பகுதி – 327ல் உள்ள சுலோகங்கள் : 52
ஆங்கிலத்தில் | In English |