Rules for the study of Vedas! | Shanti-Parva-Section-328 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 155)
பதிவின் சுருக்கம் : உலகையும், தேவர்களையும் அவமதித்த முருகன்; வேலை அசைத்த விஷ்ணு; வேலை அசைக்க முடியாமல் வீழ்ந்த பிரகலாதன்; கடுந்தவம் செய்த சிவன்; சிவனின் தவத்தைப் பாதுகாத்த அக்னி; சீடர்களுக்கு வேதங்களைப் போதித்த வியாசர்; சீடர்கள் வியாசரிடம் வேண்டிய வரம்; வேத கல்வியை வழங்க வேண்டிய வழிமுறைகளை வகுத்த வியாசர் ...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மன்னன் ஜனகனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், தூய்மையான ஆன்மாவையும், நிறுவப்பட்ட தீர்மானங்களையும் கொண்டவருமான சுகர், தன்னைத் தன்னால் {சுயத்தைச் சுயத்தால்} கண்டு, தன்ஆன்மாவை தன் ஆன்மாவிலேயே நிலைக்கச் செய்யத் தொடங்கினார்.(1) தன் நோக்கம் நிறைவடைந்த அவர், அமைதியையும், மகிழ்ச்சியையும் அடைந்தவராக, மேலும் ஜனகனிடம் கேள்விகளைக் கேட்காமல், காற்றின் வேகத்தில் காற்றைப் போலவே வடக்கு நோக்கி இமய மலைகளுக்குச் சென்றார்[1].(2)
[1] "அவர் அதற்கு மேலும் சாதாரண மனிதர்களைப் போல நடந்து செல்லவில்லை. பூமியில் நடந்து செல்லாமல், வானத்தின் ஊடாகச் சென்றார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அந்த மலைகள் பல்வேறு அப்சரஸ் இனங்களால் நிறைந்ததாகவும், மென்மையான பல ஒலிகளை எதிரொலிப்பதாகவும் இருந்தது. ஆயிரக்கணக்கான கின்னரர்கள் மற்றும் பிருங்கராஜங்களால் {வண்டுகளாலும்} நிறைந்திருந்த அது, மதகங்கள் {நீர்க்காக்கைகள்}, கஞ்சரிதங்கள் {கருங்குருவிகள்}, பல்வேறு வண்ணங்களிலான ஜீவஜீவகங்கள் {சகோரப்பறவைகள்} ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(3,4) கண்கவர் வண்ணங்களிலான பல மயில்கள் அங்கே தங்கள் கீச்சுக்குரலால் காதுக்கினியவகையில் அகவிக் கொண்டிருந்தன.(5) அன்னங்களின் கூட்டங்கள் பலவும், கோகிலங்களின் {குயில்களின்} கூட்டங்கள் பலவும், அந்த இடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தன. பறவைகளின் இளவரசனான கருடன் அந்தச் சிகரத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தான்.(6) லோகபாலர்கள் நால்வர், தேவர்களும், முனிவர்களில் பல்வேறு வகையினரும் உலகிற்கு நன்மை செய்ய விரும்பி எப்போதும் அங்கே வந்து கொண்டிருந்தனர்.(7) உயர் ஆன்ம விஷ்ணு ஒரு மகனைப் பெறும் நோக்கத்துடன் அங்கே கடுந்தவம் செய்திருந்தான்.(8)
இங்கேதான் குமாரன் என்ற பெயரிலான தேவ தளபதி, தன் இளம் வயதில், மூவுலகங்களையும், தேவலோகவாசிகள் அனைவரையும் அலட்சியம் செய்து, தன் ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால் / வேலால்} பூமியைப் பிளந்தான். தன் ஈட்டியை வீசிய ஸ்கந்தன், அண்டத்திடம்,(9) "வலிமையிலோ, பிராமணர்களிடம் அதிக அன்பு கொள்வதிலோ என்னிலும் மேன்மையானவனாகவோ, பிராமணர்கள் மற்றும் வேதங்களிடம் கொள்ளும் அர்ப்பணிப்பில் என்னுடன் ஒப்பிடத்தக்கவனாகவோ, சக்தியில் என்னைப் போன்றவனாகவோ எவனாவது இருந்தால்,(10) அவன் இந்த ஈட்டி {சக்தியை / வேலைத்} தூக்கட்டும், அல்லது அசைக்கவாவது செய்யட்டும்" என்றான்.
இந்த அறைகூவலைக் கேட்ட மூவுலகங்களும் கவலையால் நிறைந்தன. அனைத்து உயிரினங்களும் தங்களுக்குள் "இவ்வீட்டியைத் தூக்கப் போவது யார்?" என்று ஒன்றையொன்று கேட்டுக் கொண்டன.(11) தேவர்கள், அசுரர்கள் மற்றும் ராட்சசர்கள் அனைவரும் புலன்களாலும், மனத்தாலும் கலங்கியிருப்பதை விஷ்ணு கண்டான்.(12) அந்தச் சூழ்நிலையில் எதைச் செய்வது சிறந்ததென அவன் சிந்தித்தான். ஈட்டிவீசுவதைக் குறித்த அந்த அறைகூவலைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவன் {விஷ்ணு}, நெருப்பு தேவனின் {அக்னியின்} மகனான ஸ்கந்தனின் மீது தன் கண்களைச் செலுத்தினான்.(13) தூய ஆன்மாவைக் கொண்ட விஷ்ணு, சுடர்மிக்க அந்த ஈட்டியைத் தன் இடக்கையால் பற்றி அஃதை அசைக்கத் தொடங்கினான்.(14) பெரும் வலிமையைக் கொண்ட விஷ்ணுவால் இவ்வாறு அந்த ஈட்டி அசைக்கப்பட்டபோது, மலைகள், காடுகள், கடல்களுடன் கூடிய பூமியானவள் அந்த ஈட்டியுடன் சேர்ந்து மொத்தமாகக் குலுங்கினாள்.(15)
அந்த ஈட்டியை உயர்த்த விஷ்ணு முழுத் தகுதியுடையவன் என்றபோதிலும், அவன் {விஷ்ணு} அஃதை {ஈட்டியை} அசைத்ததோடு நின்றுவிட்டான். இதன் மூலம் அந்தப் பலமிக்கத் தலைவன் {விஷ்ணு}, ஸ்கந்தனின் கௌரவத்திற்குக் குறைவு நேராமல் பார்த்துக் கொண்டான்.(16) அஃதை அசைத்த பிறகு, அந்தத் தெய்வீக விஷ்ணு, பிரஹலாதனிடம், "குமாரனின் வலிமையைப் பார். இந்த அண்டத்தில் வேறு எவராலும் இந்த ஈட்டியைத் தூக்க முடியாது" என்றான்.(17) இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரஹலாதன் அந்த ஈட்டியைத் தூக்கத் தீர்மானித்தான். அதைப் பிடித்த அவனால் அதைக் கொஞ்சமும் அசைக்கமுடியவில்லை.(18) அவன் உரக்க அலறியபடியே மயக்கமடைந்து மலையுச்சியில் இருந்து கீழே விழுந்தான். உண்மையில், அந்த ஹிரண்யகசிபுவின் மகன் {பிரஹலாதன்} பூமியில் விழுந்தான்.(19)
காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட மஹாதேவன் {ருத்ரன்}, வடக்குப்பக்கத்தில் இருந்த அந்தப் பிரம்மாண்ட மலைகளுக்குச் சென்று கடுந்தவங்களைச் செய்தான்.(20) மஹாதேவன் தவம் செய்த ஆசிரமமானது அனைத்துப் பக்கங்களிலும் சுடர்மிக்க நெருப்பால் சூழப்பட்டிருந்தது. தூய்மையடையாத ஆன்மா கொண்ட மனிதர்களால் அணுகப்பட முடியாத அம்மலை ஆத்தியம் என்ற பெயரில் அறியப்பட்டது.(21) அதைச் சுற்றிலும் பத்து யோஜனைகள் அகலத்தில், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும், தானவர்களாலும் அணுகப்பட முடியாத அளவுக்கு ஒரு நெருப்பு வளையம் இருந்தது.(22) வலிமையும், சக்தியும் கொண்ட சிறப்புமிக்க நெருப்பு தேவன் {அக்னி}, ஒற்றைக் காலில் ஆயிரம் தேவ வருடங்கள் நின்றிருந்த பெரும் ஞானம் கொண்ட மஹாதேவனின் அருகில் இருந்து {அந்தத் தவத்திற்கான} தடைகள் அனைத்தையும் அகற்றுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(23) உயர்ந்த நோன்புகளைக் கொண்ட மஹாதேவன், அந்த முதன்மையான மலையின் அருகில் வசித்து, (தன் தவங்களின் மூலம்) தேவர்களைத் தகிக்கச் செய்தான்.(24)
அந்த மலைகளின் அடிவாரத்தில்தான், பெரும் தவத்தகுதியைக் கொண்ட பராசரரின் மகன் வியாசர், தமது சீடர்களுக்கு வேதங்களைக் கற்பித்தார்.(25) சுமந்து, வைசம்பாயனர், பெரும் ஞானியான ஜைமினி, பெரும் தவத்தகுதியைக் கொண்ட பைலர் ஆகியோரே உயர்வாக அருளப்பட்ட அந்தச் சீடர்களாவர்.(26)
சுகர், தம் தந்தையும், பெரும் தவசியுமான வியாசர், தமது சீடர்கள் சூழ வசித்து வந்த இனிமை நிறைந்த ஆசிரமத்திற்குச் சென்றார்.(27) ஆசிரமத்தில் அமர்ந்திருந்த வியாசர், சிதறிய தழல்களுடன் கூடிய சுடர்மிக்க நெருப்பைப் போன்றோ, பிரகாசமான சூரியனுக்கு ஒப்பாகவோ வந்து கொண்டிருக்கும் தம் மகனைக் கண்டார்.(28) சுகர் வந்து கொண்டிருந்தபோது, அவர் மரங்களையோ, மலையின் பாறைகளையோ தீண்டுவது போன்று தெரியவில்லை. புலன்நுகர் பொருட்கள் அனைத்தில் இருந்தும் முழுமையாகத் தொடர்பறுந்து, யோகத்தில் ஈடுபட்டிருந்த அந்த உயர் ஆன்ம தவசி {சுகர்}, வில்லில் இருந்து ஏவப்பட்ட ஒரு கணையின் வேகத்திற்கு ஒப்பாக வந்து கொண்டிருந்தார்.(29) அரணிக் கட்டைகளில் பிறந்தவரான சுகர் தமது தந்தையை அணுகி அவரது பாதங்களைத் தீண்டினார். பிறகு வழக்கமான நடைமுறைகளின் படியே தன் தந்தையின் சீடர்களை வணங்கினார்.(30) பிறகு, மன்னன் ஜனகனுடனான தமது உரையாடலின் விபரங்கள் அனைத்தையும் தம் தந்தையிடம் பெரும் உற்சாகத்துடன் சொன்னார்.(31) பராசரரின் மகனான வியாசர், தமது பலமிக்க மகன் வந்த பிறகும், தமது சீடர்களுக்கும், தமது மகனுக்கும் கற்பிப்பதில் ஈடுபட்டவாறு அங்கே இமயத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.(32) ஒரு நாள் அவர் அமர்ந்திருந்தபோது, வேதங்களில் நன்கு திறம்பெற்றவர்களும், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தியவர்கள், அமைதியான ஆன்மாவுடன் கூடியவர்களுமான அவரது சீடர்கள் அவரைச் சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள்.(33) அவர்கள் அனைவரும் வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் முழுமையாகத் திறம்பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் தவங்களை நோற்பவர்களாகவும் இருந்தனர். கூப்பிய கரங்களோடு அவர்கள் தங்கள் ஆசானிடம் பின்வரும் வார்த்தைகளில் பேசினர்.(34)
அந்தச் சீடர்கள், "உமது அருளால், நாங்கள் பெரும் சக்தி கொண்டவர்களாக இருக்கிறோம். எங்கள் புகழும் பரவியிருக்கிறது. நீர் எங்களுக்கு அருள ஓர் ஆதரவை நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகிறோம்" என்றனர்.(35)
அவர்களுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த மறுபிறப்பாள முனிவர் {வியாசர்} அவர்களிடம், "பிள்ளைகளே, என்ன வரத்தை நான் அருள நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை எனக்குச் சொல்வீராக" என்றார்.(36)
தங்கள் ஆசானின் இந்தப் பதிலைக் கேட்ட சீடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். மீண்டும் தங்கள் ஆசானுக்குத் {வியாசருக்குத்} தலைவணங்கிய அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் கரங்களைக் கூப்பியபடி இந்தச் சிறந்த வார்த்தைகளை ஒரே குரலில் சொன்னார்கள்: "ஓ! தவசிகளில் சிறந்தவரே, எங்கள் ஆசான் எங்களிடம் நிறைவுடன் இருந்தால், நிச்சயம் நாங்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களே.(37,38) ஓ! பெரும் முனிவரே, நீர் எங்களுக்கு ஒரு வரத்தை அருள வேண்டுமென நாங்கள் அனைவரும் உம்மிடம் வேண்டுகிறோம். நீர் எங்களிடம் அருள்கூர்வீராக. (எங்கள் ஐவரைத் தவிர) ஆறாவது சீடன் புகழை அடைவதில் வெல்ல வேண்டாம்.(39) நாங்கள் நால்வர். எங்கள் ஆசானின் மகன் ஐந்தாவதாக அமைகிறார். வேதங்கள் எங்கள் ஐவரில் மட்டுமே ஒளிரட்டும். இதுவே நாங்கள் வேண்டும் வரமாகும்" என்றனர்.(40)
பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், வேதங்களின் பொருளை நன்கறிந்தவரும், அற ஆன்மாவைக் கொண்டவரும், மறுமையில் மனிதர்களுக்கான நன்மைகளை அளிக்கும் பொருட்களை நினைப்பதிலேயே எப்போதும் ஈடுபடுபவரும், பராசரரின் மகனுமான வியாசர், தமது சீடர்களின் வார்த்தைகளைக் கேட்டு, பெரும் நன்மை நிறைந்த இந்த நீதிமிக்க வார்த்தைகளைத் தன் சீடர்களுக்குச் சொன்னார்: "ஒரு பிராமணனுக்கோ, பிரம்மலோக வாசத்தை அடைய ஆவலுடன் விரும்புபவனின் மூலம் வேதக் கருத்துகளைக் கேட்க விரும்பும் ஒருவனுக்கோ வேதங்கள் எப்போதும் கொடுக்கப்பட வேண்டும்[2].(41,42) நீங்கள் பெருகுவீராக. வேதங்கள் (உங்கள் முயற்சிகளின் மூலம்) பரவட்டும். முறையாகச் சீடனாகாத ஒருவனுக்கு வேதங்கள் ஒருபோதும் கொடுக்கப்படக்கூடாது. நல்ல நோன்புகளை நோற்காதவனுக்கும் அவை கொடுக்கப்படக்கூடாது. தூய்மையடையாத ஆன்மாவைக் கொண்டவனுக்குள் வசிப்பதற்கும் அவை கொடுக்கப்படக்கூடாது.(43) (வேத அறிவைக் கற்பிக்க) சீடர்களாக ஏற்கக்கூடிய மனிதர்களின் முறையான தகுதிகளாக இவையே அறியப்பட வேண்டும். ஒருவனுடைய குணத்தை முறையாக ஆராயாமல் எந்த அறிவியலும் அவனுக்குக் கொடுக்கப்படக் கூடாது. தூய தங்கமானது, வெப்பம், வெட்டுதல், தேய்த்தல் ஆகியவற்றின் மூலம் சோதிக்கப்படுவதைப் போலவே சீடர்களும் அவர்களுடைய பிறப்பு {குலம்} மற்றும் சாதனைகளின் மூலம் சோதிக்கப்பட வேண்டும்.(45)
[2] கும்பகோணம் பதிப்பில், "(இந்த வேதமானது) பிரம்மலோகத்தில் நிலைத்ததான வாஸத்தை நன்கு விரும்புகிறவனும், பரப்ரம்மத்தை விசாரிக்க விருப்பமுடையவனுமான பிராம்மணனுக்கு எப்பொழுதும் உபதேசிக்கத்தக்கது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், பிரம்மலோகத்தில் வசிக்க நிச்சயம் விரும்புபவனுமான ஒரு பிராமணனுக்கே அவை எப்போதும் கொடுக்கப்பட வேண்டும்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் பதிப்பில் உள்ளது போன்றே இருக்கிறது.
நிறுவப்படக்கூடாத பணிகளிலோ, ஆபத்து நிறைந்த பணிகளிலோ உங்கள் சீடர்களை நீங்கள் ஒருபோதும் நிறுவக்கூடாது. ஒருவனுடைய ஞானமானது, எப்போதும் அவனுடைய புத்தி மற்றும் கல்வியில் அவனுடைய தளரா உழைப்பு ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்கதாகும்.(46) சீடர்கள் அனைவரும் அனைத்துக் கடினங்களையும் {சிரமங்களையும்} வெல்லட்டும், அவர்கள் அனைவரும் மங்கலமான வெற்றியை அடையட்டும். அனைத்து வகைகளை {வர்ணங்களைச் சார்ந்த} மனிதர்களுக்கும் நீங்கள் சாத்திரங்களைக் கற்பிக்கத் தகுந்தவர்களாக இருக்கிறீர்கள். அவ்வாறு கற்பிக்கும்போது, ஒரு பிராமணனை முன்னே வைத்துக் கொண்டு அவனிடம் மட்டுமே நீங்கள் சொல்ல வேண்டும்[3].(47) இவையே வேத கல்வியின் விதிகளாகும். மேலும் இதுவே உயர்ந்த பணியாகவும் கருதப்படுகிறது. வேதங்களைக் கொண்டு தேவர்களைத் துதிக்கும் நோக்கத்திற்காகவே சுயம்புவால் அவை படைக்கப்பட்டன.(48) புத்தி மயக்கத்தின் மூலமாக எந்த மனிதன், வேதமறிந்த ஒரு பிராமணனை நிந்திக்கிறானோ, அத்தகைய தீய பேச்சின் விளைவால் அவன் நிச்சயம் அவமானத்தை அடைவான்.(49) அறவிதிகள் அனைத்தையும் அலட்சியம் செய்து ஞானத்தை வேண்டுபவன், அறவிதிகளை அலட்சியம் செய்து ஞானத்தைப் போதிப்பவன் ஆகிய இருவரும் வீழ்கிறார்கள். மேலும், இத்தகைய வேண்டலும், இத்தகைய போதனையும் ஆசானுக்கும் சீடனுக்கும் இடையில் நீடிக்க வேண்டிய பற்றுக்குப் பதிலாக, நம்பிக்கையின்மையையும், ஐயுணர்வையுமே நிச்சயம் உண்டாக்கும்.(50) வேதங்களைக் கற்கவும், கற்பிக்கப்படவும் வேண்டிய வழி குறித்த அனைத்தையும் நான் இப்போது உங்களுக்குச் சொன்னேன். இந்த அறிவுரைகளை உங்கள் மனத்தில் கொண்டே நீங்கள் உங்கள் சீடர்களிடம் செயல்பட வேண்டும்" என்றார் {வியாசர்}".(51)
[3] கும்பகோணம் பதிப்பில், "புத்திக்கும் படிப்புக்கும் தக்கபடி வித்தை பயன்படும். எல்லாரும் ஸங்கடங்களைத் தாண்டட்டும். எல்லாரும் மங்களங்களைப் பார்க்கட்டும். பிராம்மணனை முன்னே வைத்துக் கொண்டு நாலு வர்ணங்களையும் கேட்கும்படி செய்ய வேண்டும்." என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 328ல் உள்ள சுலோகங்கள் : 51
ஆங்கிலத்தில் | In English |