Seven winds! | Shanti-Parva-Section-329 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 156)
பதிவின் சுருக்கம் : வியாசரிடம் விடைபெற்றுச் சென்ற அவரது சீடர்கள்; களங்கங்கள் என்னென்ன என்பதைச் சொன்ன நாரதர்; வியாசரை வேதமோதத் தூண்டிய நாரதர்; வேதமோதக்கூடாத வேளை; ஏழு வாயுக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர் ...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தங்கள் ஆசானின் {வியாசரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களுமான வியாசரின் சீடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து ஒருவொரையொருவர் தழுவிக் கொண்டனர்.(1) அவர்கள் தங்களுக்குள், "நமது எதிர்கால நன்மையைக் கருதி சிறப்புமிக்க நமது ஆசானால் சொல்லப்பட்டதை நாம் எப்போதும் நினைவில் கொண்டு, அதன்படியே நிச்சயம் செயல்படுவோம்" என்றனர்.(2)
மகிழ்ச்சி நிறைந்த இதயங்களோடு ஒருவருக்கொருவர் இவ்வாறு சொல்லிக் கொண்டவர்களும், வார்த்தைகளை முற்றாக ஆள்பவர்களுமான வியாசரின் சீடர்கள், மீண்டும் தங்கள் ஆசானிடம், "ஓ! பலமிக்கவரே, ஓ! பெருந்தவசியே, உமக்கு நிறைவுண்டானால், வேதங்களை வகுப்பதற்காக {பரவச் செய்வதற்கு} நாங்கள் இம்மலையில் இருந்து பூமிக்குச் செல்ல விரும்புகிறோம்" என்றனர்.(4)
தமது சீடர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்கப் பராசரர் மகன், அறம் மற்றும் லாபம் தாண்டி நன்மை நிறைந்த வார்த்தைகளால் அவர்களுக்கு மறுமொழிகூறினார்.(6) {வியாசர்}, "விரும்பியபடி நீங்கள் பூமிக்கும் செல்லலாம், தேவலோகத்திற்கும் செல்லலாம். வேதங்கள் எப்போதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட நேரிடும், எனவே நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார்[1].(6)
[1] "வேதங்களைத் தொடர்ந்து படிக்கவில்லையென்றால், அவை மறக்கப்பட நேரிடும் என்ற பொருளில் இது சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இஷ்டமிருக்குமானால் பூமிக்கோ, தேவலோகத்துக்கோ போகலாம். வேதத்திற்குப் பலகெடுதிகளுண்டு. நீங்கள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்" என்றிருக்கிறது.
வாய்மை நிறைந்த தங்கள் ஆசானால் {வியாசரால்} அனுமதிக்கப்பட்ட அந்தச் சீடர்கள், அவரை வலம் வந்து, அவருக்குத் தலைவணங்கி அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டனர்.(7) பூமிக்கு இறங்கி வந்த அவர்கள் அக்னிஷ்டோமத்தையும் பிற வேள்விகளையும் செய்தனர்; அவர்கள் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களுக்கான வேள்விகளைச் செய்து கொடுக்கத் தொடங்கினர்.(8) இல்லறவாழ்வுமுறையில் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தி வந்த அவர்கள், பிராமணர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். பெரும்புகழையும், செழிப்பையும் கொண்ட அவர்கள், {பிறருக்குப்} போதிப்பதிலும், {பிறரின்} வேள்விகளைச் செய்து கொடுப்பதிலும் ஈடுபட்டனர்.(9) வியாசர், தமது சீடர்கள் சென்ற பிறகு, தமது மகனின் {சுகரின்} துணையுடன், தமது ஆசிரமத்திலேயே இருந்தார். கவலைநிறைந்த நினைவுகளுடன் தன் நாட்களைக் கடத்திவந்த அந்த முனிவர், ஆசிரமத்தின் ஓர் ஓரத்தில் அமைதியாக ஓய்ந்து அமர்ந்திருந்தார்.(10) அந்நேரத்தில், பெரும் தவத்தகுதியைக் கொண்ட நாரதர், வியாசரைக் காண அந்த இடத்திற்கு வந்து, செவிக்கினிய ஒலியிலமைந்த வார்த்தைகளால் அவரிடம் பேசினார்.(11)
நாரதர், "ஓ! வசிஷ்ட குலத்தைச் சேர்ந்த மறுபிறப்பாள முனிவரே, ஏன் இப்போது வேதவொலிகள் அமைதியடைந்தன? ஆழ்ந்த எண்ணங்களின் சிந்தனையில் உள்ள ஒருவரைப் போலத் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டு ஏன் நீர் தனியாக அமைதியாக அமர்ந்திருக்கிறீர்?(12) ஐயோ, வேத எதிரொலிகள் இல்லாத இந்த மலையானது, ராகுவால் தாக்கப்படும்போதோ, புழுதியால் மறைக்கப்படும்போதோ காந்தியை இழக்கும் சந்திரனைப் போலத் தன் அழகனைத்தையும் இழந்திருக்கிறது.(13) தெய்வீக முனிவர்கள் வசித்திருந்தாலும், வேதவொலிகளை இழந்திருக்கும இந்த மலை அழகனைத்தையும் இழந்து நிஷாதர்களின் கிராமத்துக்கு ஒப்பாக இருக்கிறது.(14) வேதவொலியை இழந்ததன் விளைவால் முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் ஒளியில்லாமல் இருக்கிறார்கள்" என்றார்.(15)
நாரதரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, தீவில் பிறந்த கிருஷ்ணர் {வியாசர்}, "ஓ! பெரும் முனிவரே, வேத வெளிப்பாடுகளை நன்கறிந்தவரே, நீர் சொல்பவை அனைத்தும் எனக்கு ஏற்புடையவையாகவும், உண்மையில் உம்மால் சொல்லத்தகுந்தவையாகவும் உள்ளன. நீர் அனைத்தையும் அறிந்தவர். நீர் அனைத்தையும் கண்டவர். உமது ஆர்வம் அனைத்துப் பொருட்களையும் தழுவியதாக இருக்கிறது.(16,17) மூவுலகங்களில் நேர்ந்தவை அனைத்தையும் நீர் நன்கறிந்திருக்கிறீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே, நீர் எனக்கு ஆணையிடுவீராக. ஓ!, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக.(18) ஓ! மறுபிறப்பாள முனிவரே, இப்போது என்னால் செய்யத்தகுந்தவற்றை எனக்குச் சொல்வீராக. என் சீடர்களிடமிருந்து பிரிந்திருக்கும் என் மனம் இப்போது உற்சாகமற்றதாக இருக்கிறது" என்றார்.(19)
நாரதர் {வியாசரிடம்}, "வேதமோதுவதை நிறுத்துவதே அதன் {வேதத்தின்} களங்கமாகும் பிராமணர்கள் நோன்பு நோற்காததே அவர்களின் களங்கமாகும். பாஹ்லீக குலம் இந்தப் பூமியின் களங்கமாகும். ஆர்வம் பெண்களின் களங்கமாகும்.(20) நீர் நுண்ணறிவைக் கொண்ட உமது மகனுடன் வேதங்களை ஓதி, ராட்சசர்களிடம் இருந்து எழும் அச்சங்களை அந்த வேதவொலிகளின் எதிரொலியால் அகற்றுவீராக" என்றார்".(21)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "கடமைகளை {தர்மங்களை} அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், வேதமோதுவதில் உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டவருமான வியாசர், நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, நாரதரிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்று பதிலளித்தார்[2].(22)
[2] கும்பகோணம் பதிப்பில், பாஹ்லீகர்கள் ஏன் களங்கப்பட்டவர்கள்? பெண்கள் ஏன் களங்கப்பட்டவர்கள்? என்று வியாசர் நாரதரிடம் கேட்பதும், அதற்கு நாரதர் விடையளிப்பதும், விடையளித்துவிட்டு மறைவதும் குறிப்பிடப்படுகிறது. கங்குலியின் பதிப்பில் அந்தப் பகுதி தவிர்க்கப்பட்டிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்தப் பகுதி இல்லை.
அவர், தமது மகனான சுகருடன் சேர்ந்து, உச்சரிப்பு ஆய்வின் விதிகள் அனைத்தையும் நோற்று, மூவுலகங்களையும் நிறைக்கும் வகையில் மிக உரத்த குரலில் வேதமோதுவதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(23) ஒரு நாள், கடமைகள் அனைத்தையும் நன்கறிந்தவர்களான அந்தத் தந்தையும் மகனும் வேதமோதுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பெருங்கடலின் மத்தியில் வீசும் வலுவான காற்றால் உந்தப்பட்டது போல் தெரிந்த கடுங்காற்று எழுந்தது.(24) அந்த வேளை புனித பாராயணத்திற்குத் தகுந்ததல்ல என்பதை அந்தச் சூழ்நிலையில் புரிந்து கொண்ட வியாசர், உடனே பாராயணத்தை நிறுத்துமாறு தமது மகனுக்கு ஆணையிட்டார். தமது தந்தையால் இவ்வாறு தடுக்கப்பட்ட சுகர் ஆர்வத்தால் நிறைந்தார்.(25)
அவர் தமது தந்தையிடம், "ஓ! மறுபிறப்பாளரே, இந்தக் காற்று எங்கிருந்து வருகிறது? இந்தக் காற்றின் போக்கைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டார்.(26)
சுகரின் இந்தக் கேள்வியைக் கேட்ட வியாசர் ஆச்சரியத்தால் நிறைந்தார். அது வேத பாராயணம் நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடும் ஒரு சகுனம் என்று சொல்லி சுகருக்கு அவர் பதிலளித்தார்,(27) "நீ ஆன்ம பார்வையைப் பெற்றிருக்கிறாய். உன் மனமும், ஒவ்வொரு மாசிலிருந்தும் தூய்மையடைந்திருக்கிறது. ஆசை மற்றும் இருள் {ரஜஸ் மற்றும் தமஸ்} குணங்களில் இருந்து நீ விடுபட்டிருக்கிறாய். நீ இப்போது நல்லியல்பின் {சத்வ} குணத்தில் நிலைபெற்றிருக்கிறாய்.(28) ஒருவன் தன் பிம்பத்தை ஒரு கண்ணாடியில் காண்பதைப் போலவே நீ இப்போது உன் ஆன்மாவால் ஆன்மாவைக் காண்கிறாய். உன் ஆன்மாவிலேயே நிலைபெற்றிருக்கும் நீ வேதங்களைக் குறித்தும் சிந்திக்கிறாய்.(29) பரமாத்மாவின் பாதை தேவயானம் (தேவர்களின் பாதை) என்றழைக்கப்படுகிறது. தமஸ் குணத்தாலான பாதை பித்ருயானம் (பித்ருக்களின் பாதை) என்றழைக்கப்படுகிறது. இவையே மறுமைக்கான இரு பாதைகளாகும். ஒன்றின் வழியே மக்கள் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். மற்றொன்றின் மூலம் மக்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள்.(30)
காற்றானது {வாயுவானது} பூமியின் பரப்பிலும், ஆகாயத்திலும் வீசுகிறது. அவை ஏழு வழிகளில் {மார்க்கங்களில்} வீசுகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக நான் சொல்கிறேன் கேட்பாயாக.(31) உடலானது புலன்களைக் கொண்டுள்ளது. புலன்களானவை, சத்யஸ்களாலும், வலிமையும், பலமும் கொண்ட பெரும்பூதங்கள் பலவற்றாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. இவையே {புலன்களே} சமானன் என்ற பெயரில் வெல்லப்பட முடியாத ஒரு மகனை ஈன்றது.(32) சமானனிலிருந்து உதானன் என்றழைக்கப்படும் மகன் ஒருவன் எழுந்தான். உதனானிலிருந்து வியானன் எழுந்தது. வியானனிலிருந்து அபானன் எழுந்தது, இறுதியாக அபானனிலிருந்து பிராணன் என்றழைக்கப்படும் காற்று எழுந்தது.(33) எதிரிகள் அனைத்தையும் எரிப்பவனான அந்த வெல்லப்பட முடியாத பிராணன் பிள்ளையற்றவனானான். அந்தக் காற்றுகளின் {வாயுக்களின்} வெவ்வேறு செயல்பாடுகளைக் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன்.(34) உயிரினங்கள் அனைத்தின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் காற்றே {வாயுவே} காரணமாக இருக்கிறது. உயிரினங்கள் அதன் மூலம் வாழத்தகுந்தவையாவதாலேயே அக்காற்று பிராணன் (அல்லது உயிர்) என்றழைக்கப்படுகிறது.(35)
மேற்கண்ட பட்டியலில் முதலாவதாக இருப்பதும், பிரவஹம் (சமானன்) என்ற பெயரில் அறியப்படுவதுமான காற்றானது {வாயுவானது}, முதல் வழியில் புகை மற்றும் வெப்பத்தில் பிறக்கும் மேகத்திரள்களைத் தூண்டுகிறது. ஆகாய வழியில் நீர்நிறைந்த மேகங்களின் தொடர்பை அடையும் அந்தக் காற்றானது, மின்னல் கீற்றுகளின் பிரகாசத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.(36)
ஆவஹம் {நமது உடலுக்குள் உதானன்} என்றழைக்கப்படும் இரண்டாம் காற்று {வாயு} பேரொலியுடன் வீசுகிறது. இந்தக் காற்றே சோமனையும் {சந்திரனையும்}, பிற ஒளிக்கோள்களையும் எழவும், தோன்றவும் செய்கிறது. (அண்டத்தின் நுண்ணுயிரான இந்த) உடலுக்குள் உள்ள அந்தக் காற்று ஞானிகளால் உதானன் என்றழைக்கப்படுகிறது.(37)
நான்கு பெருங்கடல்களில் இருந்து நீரை உறிஞ்சி, ஆகாயத்திலுள்ள மேகங்களுக்கு அளித்து, அம்மேகங்களை மழை தேவனுக்கு {பர்ஜன்யனுக்கு} அளிக்கும் காற்றானது, பட்டியலில் மூன்றாவதாக உத்வஹம் {நமது உடலுக்குள் வியானன்} என்ற பெயரில் அறியப்படுகிறது.(38,39)
மேகங்களை ஆதரிப்பதும், அவற்றைப் பல்வேறு பகுதிகளாக வகுப்பதும், மழைபொழிவிற்காக அவற்றை உருக்குவதும், மீண்டும் அவற்றைத் திடமாக்குவதும், முழங்கும் மேகங்களின் ஒலியாக உணரப்படுவதும், உலகைப் பாதுகாப்பதற்காக மேகங்களின் வடிவைத் தானே ஏற்றுக் கொண்டிருப்பதும், தேவர்கள் அனைவரின் தேர்களையும் வானத்தில் சுமந்து செல்வதுமான காற்றானது {வாயுவானது} ஸம்வஹம் {நமது உடலுக்குள் அபானன்} என்ற பெயரில் அறியப்படுகிறது. பட்டியலில் நான்காவதான அது {ஸ்வஹம் / அபானன்} மலைகளையே பிளக்கும் வல்லமையும், பெரும் பலமும் கொண்டதாகும்.(40,41)
ஐந்தாவது காற்றானது {வாயுவானது}, பெரும் சக்தியையும், வேகத்தையும் கொண்டதாகும். உலர்ந்ததாக இருக்கும் அது, மரங்களை வேரோடு பிடுங்கி கீழே வீழ்த்தவல்லதாகும். அதனுடன் இருக்கும் மேகங்கள், வலாஹம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.(42) அந்தக் காற்றானது, பல வகைகளிலான பேரிடர் நிகழ்வுகளை உண்டாக்கியபடி, ஆகாயத்தில் முழங்கும் ஒலிகளையும் உண்டாக்குகிறது. அது விவஹம் {நமது உடலில் பிராணன்} என்ற பெயரில் அறியப்படுகிறது.(43,44)
ஆறாவது காற்றானது {வாயுவானது}, தெய்வீக நீர்நிலைகள் அனைத்தையும் சுமந்தபடி, அவை கீழே விழாமல் பாதுகாக்கிறது. தெய்வீக கங்கையின் புனித நீரை நீடிக்கச் செய்து வீசும் அந்தக் காற்றானது, அது {அந்தக் கங்கை நீர்} கீழ்நோக்கிப் பாயாமல் தடுக்கிறது.(45) உண்மையில் ஆயிரம் கதிர்களின் தோற்றுவாயும், உலகிற்கு ஒளியூட்டுவதுமான சூரியன், அந்தக் காற்றால் தொலைவிலேயே தடுக்கப்பட்டு ஒற்றைக் கதிரைக் கொண்ட ஒளிக்கோளாகத் தோன்றுகிறது.(46) அந்தக் காற்றின் செயல்பாட்டினாலேயே சந்திரன் தேயும் சந்திரன், முழு வட்டில் வெளிப்படும்வரை மீண்டும் வளர்கிறது. ஓ! தவசிகளில் முதன்மையானவனே, அந்தக் காற்று {வாயு}, பரிவஹம் என்ற பெயரில் அறியப்படுகிறது[3].(47)
[3] "சில உரைகளில் இது ஜயதாம்பரஹம் என்று இருக்கிறது. இஃது ஏற்கப்பட்டால் அது பலம் அல்லது சக்திகள் அனைத்திலும் முதன்மையானது என்ற பொருளைக் கொண்டதாகவும், பரிவஹம் என்பதன் உரிச்சொல்லாகவும் {பெயரடையாக} இருக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உரிய நேரத்தில் உயிரினங்கள் அனைத்தின் உயிரை அபகரித்துச் செல்வதும், மரணம் {மிருத்யு} மற்றும் சூரியனின் மகனான யமன் ஆகியோர் பின்பற்றும் பாதையைக் கொண்டதும்,(48) எப்போதும் தியான யோகத்தில் ஈடுபடும் நுட்பமான பார்வை கொண்ட யோகிகளால் அடையப்படும் இறவாமையின் ஊற்றுக் கண்ணாக இருப்பதும்(49), பழங்காலத்தில் உயிரினங்களின் தலைவனான தக்ஷனின் பத்து பிள்ளைகளின் மூலம் பிறந்தவர்களான ஆயிரக்கணக்கான {தக்ஷனின்} பேரப்பிள்ளைகள் அண்டத்தின் எல்லையை அடைவதில் துணைபுரிந்ததும், உலகத்திற்குத் திரும்பிவரும் கடப்பாட்டில் இருந்து விடுவித்து ஒருவனைத் தன் தீண்டலினாலேயே விடுதலையை {முக்தியை} அடையச் செய்வதுமான காற்றானது {வாயுவானது} பராவஹம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. காற்றுகள் அனைத்திலும் முதன்மையான அஃது, எவராலும் தடுக்கப்பட முடியாததாக {ஏழாவது காற்றாக / வாயுவாக} இருக்கிறது.(50,51)
இந்தக் காற்றுகள் {வாயுக்கள் / மருத்துகள்} அனைவரும் அதிதியின் மகன்களாவர்[4]. எங்கும் செல்லவல்லவையும், அனைத்தையும் தாங்கிப் பிடிப்பவையுமான அவை {வாயுக்கள்}, எந்த நேரத்திலும் உன்னோடு இணையாமல் உன்னைச் சுற்றிலும் வீசிக் கொண்டே இருக்கின்றன.(52) எனினும், வீசத்தொடங்கியிருக்கும் இந்தக் காற்றால் இந்த முதன்மையான மலையே திடீரென நடுங்குவது ஆச்சரியம் நிறைந்ததாகும்.(53) இந்தக் காற்று விஷ்ணுவின் மூக்குத்துளைகளில் வரும் அவனது மூச்சுக்காற்றாகும். இது வேகத்தால் தூண்டப்பட்டுப் பெருஞ்சக்தியுடன் வீசத் தொடங்கும்போது மொத்த அண்டமும் கலக்கமடைகிறது {பீடையடைகிறது}.(54) எனவே, காற்று வலுவாக வீசத்தொடங்கும்போது, வேதமறிந்த மனிதர்கள் வேதபாராயணம் செய்வதில்லை. வேதங்களும் காற்றின் வடிவமேயாகும். எனவே {வேதமானது} சக்தியுடன் சொல்லப்படும்போது, புறக்காற்றுப் பீடிக்கப்படுகிறது" என்றார் {வியாசர்}.(55)
[4] கங்குலியின் பதிப்பில் இது திதின் மகன்கள் என்றே இருக்கிறது. எனினும், கும்பகோணம் பதிப்பு, பிபேக்திப்ராயின் பதிப்பு என அனைத்திலும் அதிதியின் மகன்கள் என்றிருப்பதால், இஃதை அச்சுப்பிழையாகக் கருதி மேலே அதிதியின் மகன்கள் என்றே இட்டிருக்கிறேன். பிபேக்திப்ராயின் பதிப்பில் இதன் அடிக்குறிப்பில், "தேவர்கள் அனைவரும் அதிதி மற்றும் தவசி கசியபரிடம் இருந்து தோன்றியவர்களே" என்றிருக்கிறது.
பராசரரின் பலமிக்க மகன் {வியாசர்}, இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, (காற்றன் பலம் குறைந்ததும்) தமது மகனை {சுகரை} வேதபாராயணம் செய்யும்படி ஆணையிட்டார். பிறகு அவர், தெய்வீகக் கங்கையின் நீரில் மூழ்குவதற்காக அந்த இடத்தை விட்டுச் சென்றார்" என்றார் {பீஷ்மர்}.(56)
சாந்திபர்வம் பகுதி – 329ல் உள்ள சுலோகங்கள் : 56
ஆங்கிலத்தில் | In English |