Practices in the world! | Shanti-Parva-Section-330 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 157)
பதிவின் சுருக்கம் : வியாசர் சென்றதும் சுகரிடம் வந்த நாரதர்; நன்மையானவை எவை என சுகர் கேட்டது; நன்மையானவற்றையும், உலக இயல்பையும் சுகருக்குச் சொன்ன நாரதர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "வியாசர் அந்த இடத்தைவிட்டுச் சென்றவுடன், நாரதர் வானத்தின் ஊடாகப் பயணித்து, சாத்திரக் கல்வியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுகரிடம் வந்தார். வேதங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளுக்குரிய பொருளைச் சுகரிடம் கேட்கும் நோக்கத்திலேயே அந்தத் தெய்வீக முனிவர் வந்தார்.(1) தெய்வீக முனிவரான நாரதர் தமது ஆசிரமத்திற்கு வந்ததைக் கண்ட சுகர், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி அர்க்கியம் கொடுத்து அவரை வழிபட்டார்.(2)
தமக்கு அளிக்கப்பட்ட கௌரவங்களில் நிறைவடைந்த நாரதர், சுகரிடம், "ஓ! அறவோரில் முதன்மையானவனே, ஓ! அன்புக்குரிய குழந்தாய், நான் உனக்கு என்ன நன்மையைச் செய்ய வேண்டும் எனச் சொல்வாயாக" என்று கேட்டார்.(3)
நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சுகர், ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இந்த வார்த்தைகளை அவரிடம் {நாரதரிடம்} சொன்னார், "எது எனக்கு நன்மையானது என்பதை எனக்குக் கற்பிப்பதே உமக்குத் தகும்" {என்று சுகர் கேட்டார்}.(4)
நாரதர் {சுகரிடம்}, "பழங்காலத்தில் சிறப்புவாய்ந்த சனத்குமாரர், தம்மிடம் உண்மையை விசாரிக்க வந்தவர்களும், தூய ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான சில குறிப்பிட்ட முனிவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(5) ஞானத்தைப் போன்று வேறொரு கண்ணில்லை. வாய்மையைப் போன்று வேறொரு தவமில்லை. பற்றை {ஆசையைப்} போன்று வேறொரு கவலையில்லை. துறவைப் போன்று வேறொரு மகிழ்ச்சியில்லை.(6) பாவச் செயல்களைத் தவிர்த்தல், நிலையான அறப்பயிற்சி, நல்லொழுக்கம், அனைத்து அறக்கடமைகளையும் முறையாக நோற்பது ஆகியனவே உயர்ந்த நன்மையாகும்.(7) கவலைநிறைந்த மனித நிலையை அடைந்த பிறகு, எவன் அதில் பற்றுக் கொண்டு கலக்கமடைகிறானோ {மயக்கமடைகிறானோ}, அத்தகைய மனிதன், கவலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. (உலகம் சார்ந்த பொருட்களில்) பற்றுக் கொள்வது துன்பத்தின் குறியீடாகும்.(8) உலகம் சார்ந்த பொருட்களில் பற்றுக் கொண்ட மனிதனின் புத்தியானது மேலும் மேலும் மயக்கவலையில் சிக்கிக் கொள்கிறது. மயக்கவலையில் சிக்கிக் கொள்ளும் மனிதன் இம்மையிலும், மறுமையிலும் துன்பத்தையே அடைகிறான்.(9) ஒருவன் தன் நன்மையை நாடினால் அவன் தன் சக்திக்குத்தக்க ஒவ்வொரு வழிமுறையினாலும் ஆசை மற்றும் கோபம் ஆகிய இரண்டிலிருந்தும் {காமகுரோதங்களில் இருந்தும்} விலக வேண்டும். அவை இரண்டும் ஒருவனுக்கான நன்மையை அழிப்பதற்காக மட்டுமே உண்டாகிறது.(10)
ஒருவன் எப்போதும் தன் தவங்களைக் கோபத்திலிருந்தும் {குரோதத்திலிருந்தும்}, செழிப்பைச் செருக்கிலிருந்தும் பாதுகாக்க வேண்டும். ஒருவன் எப்போதும் தன் ஞானத்தை மதிப்பு மற்றும் அவமதிப்பு {மான அவமானம்} ஆகியவற்றில் இருந்தும், அவனது ஆன்மாவைப் பிழையிலிருந்தும் {அஜாக்ரதையிலிருந்தும்} பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(11) கருணையே {அஹிம்சையே} உயர்ந்த அறமாகும். மன்னிக்கும் தன்மையே {பொறுமையே} உயர்ந்த தகுதியாகும் {பலமாகும்}. தன்னறிவே {சுயஞானமே} உயர்ந்த ஞானமாகும். வாய்மையைவிட உயர்ந்ததேதும் கிடையாது.(12) உண்மையைப் பேசுவதே எப்போதும் முறையானதாகும். உண்மையைப் பேசுவதைவிட நன்மைக்கானதைப் பேசுவதே மிகச் சிறப்பானதாகும். உயிரினங்கள் அனைத்திற்குமான பெரும் நன்மை நிறைந்ததே வாய்மை என நான் கருதுகிறேன்.(13) ஒருபோதும் நம்பிக்கையில் ஈடுபடாமல் {எதிர்பார்ப்பில் ஈடுபடாமல்} ஒவ்வொரு செயலையும் கைவிடுபவனும், உலகச் சூழலில் இருந்து முற்றிலும் தொடர்பறுந்தவனும், உலகம் சார்ந்த அனைத்தையும் துறந்தவனுமான மனிதனே உண்மையில் கல்விமான் என்றும் ஞானம் கொண்டவன் என்றும் சொல்லப்படுகிறான்.(14) தன் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ள புலன்களின் துணையுடன் புலன்நுகர் பொருட்கள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டும் அவற்றில் பற்றில்லாமல் இருப்பவனும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், இன்பதுன்பங்களால் ஒருபோதும் அசைக்கப்படாதவனும், தியான யோகத்தில் எப்போதும் ஈடுபடுபவனும்,(15) புலன்களில் ஆதிக்கம் செலுத்தும்தேவர்களுடன் எப்போதும் தோழமையுடன் வாழ்பவனும், அவற்றில் இருந்து தொடர்பறுந்தவனும், உடலைக் கொண்டிருந்தாலும், அதனோடு ஒருபோதும் தன்னை ஒப்பிடாதவனுமான ஒருவன் விடுதலையடைந்து, மிக விரைவில் உயர்ந்த நன்மையை அடைகிறான்.(16)
ஓ! தவசியே, பிறரை ஒருபோதும் காணாதவனும், பிறரை ஒருபோதும் தீண்டாதவனும், பிறருடன் ஒருபோதும் பேசாதவனுமான ஒருவன் விரைவில் தனக்கான உயர்ந்த நன்மையை அடைகிறான்.(17) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் எந்தத் தீங்கையும் இழைக்கக்கூடாது. மறுபுறம் அவன் அனைத்திடமும் முற்றான நட்புடன் நடந்து கொள்ள வேண்டும். மனித நிலையை அடைந்த ஒருவன் ஒருபோதும் எந்த உயிரினத்திடமும் பகைமையுடன் நடந்து கொள்ளக்கூடாது.(18) உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிலும் முற்றான அலட்சியம், முற்றான நிறைவு, அனைத்து வகை எதிர்பார்ப்புகளையும் கைவிடல், பொறுமை ஆகியவை புலன்களைக் கட்டுப்படுத்தித் தன்னறிவை அடைந்த ஒருவனுக்கான உயர்ந்த நன்மையாக அமைகின்றன.(19) ஓ! குழந்தாய், பற்றுகள் அனைத்தையும் கைவிட்டு உன் புலன்கள் அனைத்தையும் அடக்கி, அதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் இன்பநிலையை அடைவாயாக.(20)
பேராசையில் {காமத்தில்} இருந்து விடுபட்டோர் ஒருபோதும் எந்தக் கவலையையும் அடைய வேண்டியதிராது. எனவே ஒருவன் தன் ஆன்மாவில் இருந்து பேராசைகள் அனைத்தையும் கைவிட வேண்டும். ஓ! இனியவனே, அருளப்பட்டவனே, பேராசையைக் கைவிடுவதன் மூலம் கவலை மற்றும் துன்பத்தில் இருந்து நீ விடுபட இயன்றவனாவாய்.(21) வெல்லமுடியாததை {விடுதலையை / முக்தியை} வெல்ல விரும்பும் ஒருவன், தவங்கள், தற்கட்டுப்பாடு, பேசாமை {மௌனம்}, ஆன்ம அடக்கம் ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்து வாழ வேண்டும்.(22) பற்றுகளுக்கு மத்தியில் அவற்றில் பற்றில்லாமல் வாழ்பவனும், எப்போதும் தனிமையில் வாழ்பவனுமான பிராமணன், மிக விரைவில் உயர்ந்த இன்பநிலையை அடைகிறான்.(23) பாலுறவுக் கலவி வாழ்வில் திளைப்பையடையும் உயிரினங்களுக்கு மத்தியில் தன்னிலேயே மகிழ்ச்சியுடன் வாழும் மனிதன், ஞானத்தால் தாகம் தணிக்கப்பட்ட மனிதனாக அறியப்பட வேண்டும். ஞானத்தால் தாகம் தணிக்கப்பட்ட மனிதன் ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும்.(24) நற்செயல்களின் மூலம் ஒருவன் தேவர்களின் நிலையை அடைகிறான்; அதே வேளையில் உண்மையில் தீமையான செயல்களைச் செய்யும் ஒருவன், இழிந்த விலங்குகளின் மத்தியில் ஆதரவற்ற நிலையில் வீழ்கிறான்.(25)
கவலை, துன்பம் மற்றும் மரணம் ஆகியவற்றால் எப்போதும் பீடிக்கப்படும் ஓர் உயிரினம் (காலத்தின் கொப்பரையில்) இவ்வுலகில் சமைக்கப்படுகிறது. அதை நீ அறிவாயா?(26) உண்மையில் தீங்கானதை நன்மையென்றும்; உண்மையில் உறுதியில்லாததை உறுதியானதென்றும்; விரும்பத்தகாததை விரும்பத்தக்கது என்றும், நன்மையற்றதை நன்மையானது என்றும் கருதுவதைத் தொடர்கிறாய். ஐயோ, இவற்றைச் சரியாக உணர்ந்து நீ ஏன் விழிக்காமல் இருக்கிறாய்?(27) தன் வலைக்குள் தானே அடைபடும் பட்டுப்புழுவைப் போல உன் எண்ணற்ற செயல்களால் பிறக்கும் மயக்கம் மற்றும் பிழையால் அமைந்த வலைக்குள் நீ தொடர்ந்து அடைபட்டுக் கொண்டிருக்கிறாய். ஐயோ, இந்தச் சூழ்நிலையைச் சரியாக உணர்ந்து நீ ஏன் விழிக்காமல் இருக்கிறாய்?(28) இவ்வுலகப் பொருட்களில் எந்தப் பற்றும் கொள்ளும் தேவை உனக்கில்லை. உலகம்சார்ந்த பொருட்களில் பற்றுக் கொள்வது தீமையையே உண்டாக்கும். தன்னைச் சுற்றிலும் வலையைப் பின்னும் பட்டுப்புழு இறுதியில் அதன் செயலாலேயே அழிவையடையும்.(29) மகன்கள், மனைவிகள், உறவினர்களிடம் பற்றுள்ள மனிதர்களோ, புதைகுழியில் மூழ்கும் காட்டு யானைகள் படிப்படியாகப் பலவீனமடைந்து மரணமடைவதைப் போல இறுதியில் அழிவையே சந்திக்கிறார்கள்.(30)
பாசவலையால் இழுக்கப்படும் உயிரினங்கள் அனைத்தும், பெரும் வலைகளால் மண்ணுக்கு இழுக்கப்படும் மீன்களைப் போலப் பெருந்துன்பத்தையே அடைகிறார்கள்.(31) உறவினர்கள், மகன்கள், மனைவிகள், இந்த உடல், கவனமாகப் பாதுகாக்கப்படும் ஒருவனுடைய உடைமைகள் அனைத்தும் நிலையற்றவையாக, மறுமையில் எத்தொண்டுமாற்றாதவையாகவும் இருக்கின்றன. ஒருவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் மட்டுமே ஒருவனை மறுமையில் பின்தொடர்கின்றன.(32) மறுமையில் இவை அனைத்தையும் விட்டுவிட்டு, நிச்சயம் நீ ஆதரவற்றவனாகவே செல்லப்போகிறாய் எனும்போது, ஐயோ, உண்மையான நிலையான செல்வத்தைக் கவனிக்காமல், எம்மதிப்புமில்லாத நிலையற்ற பொருட்களின் மீது நீ ஏன் பற்று கொள்கிறாய்?(33) நீ செல்ல வேண்டிய பாதையானது (ஓய்வெடுப்பதற்கான) எவ்வகை ஓய்விடங்களும் இல்லாததாக இருக்கிறது. அவ்வழியில் ஒருவன் ஆதரவாகப் பிடித்துக் கொள்ளக்கூடிய ஏதும் கிடையாது. அது {அந்தப் பாதை} கடக்கும் நாடு அறியப்படாததாகவும், கண்டுபிடிக்கப்படாததாகவும் இருக்கிறது. மேலும் அஃது அடர்த்தியான இருளில் மூழ்கியிருக்கிறது. ஐயோ, தேவையான செலவுக்கு ஆயத்தமாகாமல் நீ எவ்வாறு அவ்வழியில் செல்லப் போகிறாய்?(34) நீ அந்தச் சாலையில் செல்லும்போது, உன்னைப் பின்தொடர்ந்து எவரும் வரப் போவதில்லை. இம்மையிலிருந்து நீ மறுமைக்குச் செல்லும்போது, நீ செய்த நல்ல மற்றும் தீய செயல்கள் மட்டுமே உன்னைப் பின்தொடரப்போகின்றன.(35)
கல்வி, செயல்கள், (அக மற்றும் புறத்) தூய்மை, பெரும் ஞானம் {பேரறிவு} ஆகிய வழிமுறைகளின் மூலமே ஒருவன் பொருட்களின் பொருளைத் தேடுகிறான். பொருட்களில் முதன்மையானது அடையப்படும்போது, அவன் (மறுபிறப்பிலிருந்து) விடுபடுகிறான்.(36) மனித வசிப்பிடங்களுக்கு மத்தியில் ஒருவன் வாழ உணரும் விருப்பமானது கட்டும் கயிற்றைப் போன்றதாகும். நற்செயல்களைச் செய்வோர் அந்தக் கட்டை அறுப்பதில் வென்று, தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். தீச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் மட்டுமே அவற்றை அறுப்பதில் வெல்வதில்லை.(37) வாழ்வு (அல்லது உலகம்) எனும் ஆறு பயங்கரமானதாகும். மேனி அல்லது வடிவழகு அதன் கரைகளாக இருக்கிறது. மனம் அதன் ஓட்டத்தின் வேகமாக இருக்கிறது. தீண்டல் அதன் தீவாக இருக்கிறது. சுவை அதன் ஓட்டமாக இருக்கிறது. மணம் அதன் சகதியாக இருக்கிறது. ஒலி அதன் நீராக இருக்கிறது. அதில் சொர்க்கத்தை நோக்கி வழிவகுக்கும் குறிப்பிட்ட பகுதி பெரும் சிரமங்களைக் கொண்டதாகும். ஒருவன் அந்த ஆற்றைக் கடக்கும் படகாக உடல் இருக்கிறது. மன்னிக்கும் தன்மை {பொறுமை} அதைத் தூண்டும் படகுத்துடுப்பாக இருக்கிறது. வாய்மை அப்படகை நிலைபெறச் செய்யும் சரளையாக {அடிச்சுமையாக} இருக்கிறது. அறம்சார்ந்த நடைமுறையானது, கடினமான நீர்நிலைகளில் அந்தப் படகை இழுக்கப் பயன்படும் கொடிக்கம்பத்தை இணைக்கும் இழையாக இருக்கிறது. ஈகை அல்லது தானம், அந்தப் படகைத் தூண்டும் காற்றாக இருக்கிறது. நிலையான வேகத்துடன் கூடிய அந்தப் படகைக் கொண்டுதான் ஒருவன் வாழ்வெனும் ஆற்றைக் கடக்க வேண்டும்.(38,39) அறம் மற்றும் மறம், வாய்மை மற்றும் பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடுவாயாக. வாய்மை மற்றும் பொய்மையைக் கைவிட்ட பிறகு, இவற்றைக் கைவிடச் செய்வதையும் கைவிடுவாயாக.(40)
நோக்கங்கள் அனைத்தையும் கைவிடுவதன் மூலம் நீ அறத்தைக் கைவிடுவாயாக; ஆசைகள் அனைத்தையும் கைவிடுவதன் மூலம் நீ பாவத்தையும் கைவிடுவாயாக. புத்தியின் துணையோடு நீ வாய்மையையும், பொய்மையையும் கைவிடுவாயாக; இறுதியாக, உயர்ந்த தத்துவத்தின் (பரமாத்மாவின்) ஞானத்தின் மூலம் அந்தப் புத்தியையும் கைவிடுவாயாக.(41) எலும்புகளைத் தூண்களாகக் கொண்டதும்; நரம்புகளைக் கட்டும் கயிறுகளாகவும், இழைகளாகவும் கொண்டதும்; சதை மற்றும் குருதியை புறப் பூச்சாகக் கொண்டதும்; தோலைப் புறக் கூடாகக் கொண்டதும்; மலமும் சிறுநீரும் நிறைந்தும், அதனால் கெட்ட மணம் கொண்டதும்; முதுமை மற்றும் துன்பம் என்ற தாக்குதல்களுக்கு உட்பட்டதும்; நோயின் இருக்கையாகவும், துன்பத்தில் பலவீனமடைவதாகவும் இருப்பதும்; ரஜஸ் குணத்தின் ஆதிக்கத்தைப் பெற்றதும்; நிலையற்றதும், உள்வசிக்கும் உயிரினத்தின் (தற்காலிக) வசிப்பிடமாகத் தொண்டுபுரிவதுமான இவ்வுடலை நீ கைவிடுவாயாக.(42,43) பருப்பொருளாலான இந்த மொத்த அண்டமும், மஹத் அல்லது புத்தி என்றழைக்கப்படுவதும், (ஐந்து) பெரும்பூதங்களால் ஆனவையாகும். பர செயல்பாட்டின் மூலமே அது மஹத் என்றழைக்கப்படுகிறது.(44) ஐம்புலன்களும், தமஸ், சத்வம் மற்றும் ரஜஸ் என்ற முக்குணங்களும் (ஏற்கனவே சொல்லப்பட்டவற்றுடன் சேர்த்து) பதினேழாகிறது[1].(45)
[1] கும்பகோணம் பதிப்பில், "ஆகாயம், வாயு, அக்னி, அப்பு, பிருதிவி என்பவை மஹாபூதங்கள். சித்தமென்பது ஆறாவது. அகங்காரமானது ஏழாவதாகச் சொல்லப்படுகிறது. எட்டாவது மனமென்று அறிய வேண்டும். புத்தி ஒன்பதாவதாகக் கருதப்பட்டது. இந்திரியங்கள் ஐந்து, ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகப் பதினேழு சேர்ந்த இந்தக் கூட்டமானது அவ்யக்தமென்று பெயருடையது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஐம்புலன்கள், ஐந்து செயற்புலன்கள், ஐந்து உயிர்மூச்சுகள், மனம் மற்றும் புத்தி ஆகியவையே இவை" என்றிருக்கிறது.
புலப்படாதவை {அவ்யக்தம்} என்ற பெயரில் அறியப்படும் இந்தப்பதினேழும், புலப்படுபவை {வியக்தம்} என்று அழைக்கப்படும், ஐந்து புலன் நுகர் பொருட்களும் (வடிவம், சுவை, ஒலி, தீண்டல் மற்றும் மணம்), நனவுநிலை மற்றும் புத்தி ஆகியவையும் சேர்ந்து நன்கறியப்பட்ட பட்டியலான இருபத்து நான்காக {24} அமைகிறது[2].(46) இந்த இருபத்து நான்கு உடைமைகளையும் கொள்ளும்போது ஒருவன் ஜீவன் (புமான்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்.(47) (அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற) முத்தொகை, மகிழ்ச்சி, கவலை, வாழ்வு, மரணம் ஆகியவற்றின் உண்மையையும், அவற்றின் விபரங்களையும் அறிந்தவன், வளர்ச்சியையும், சிதைவையும் அறிந்தவன் எனச் சொல்லப்படுகிறான். அறிவுக்கு எட்டும் பொருட்கள் எதுவும் ஒன்றன்பின் ஒன்றாகப் படிப்படியாக அறியப்பட வேண்டும்.(48) புலன்களால் உணரத்தக்க பொருட்கள் அனைத்தும் புலப்படுபவை {வ்யக்தம்} என்றழைக்கப்படுகின்றன. புலன்களைக் கடந்தவையும், குறியீடுகளின் மூலம் மட்டுமே உணரப்படுபவையுமான பொருட்கள் புலப்படாதவை {அவ்யக்தம்} என்று சொல்லப்படுகின்றன.(49) புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவன், இனிய மழையில் தாகம் கொண்ட காய்ந்த பயணியைப் போலப் பெரும் நிறைவை வெல்கிறான். புலன்களை அடக்கிய ஒருவன், தன் ஆன்மா அனைத்துப் பொருட்களையும் தழுவப் பரவுவதையும், அனைத்துப் பொருட்களும் தன் ஆன்மாவுக்குள் அடங்குவதையும் காண்கிறான்.(50)
[2] கும்பகோணம் பதிப்பில், "வ்யக்தங்களும், அவ்யக்தங்களும், இந்திரிய விஷயங்களனைத்தும் சேர்ந்து இருபத்துநான்கு என்கிற இந்தக் கூட்டமானது வ்யக்தம் அவ்யக்தம் இவைகளின் ஸ்வருபமாயிருக்கிறது" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில் இந்த இருபத்துநான்கு என்பதற்கு, "மூலப்பிரகிருதி, மஹத்தத்வம், மனம், ஸூக்ஷ்மபூதம் ஐந்து, இந்தியிரங்கள் பத்து, ஸ்தூல பூதங்கள் ஐந்து, பிராணன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "புலன்நுகர் பொருட்களுடன் கூடிய புலப்படுபவையும், புலப்படாதவையும், புலப்படுபவை மற்றும் புலப்படாதவையின் குணங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து இருபத்தைந்தாகச் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஐந்து புலன்நுகர் பொருட்கள், அகங்காரம், அறியாமை, பிரகிருதி மற்றும் ஏற்கனவே சொல்லப்பட்ட பதினேழைக் கொண்ட பட்டியல் ஆகியவை சேர்த்து இந்த இருபத்தைந்து" என்றிருக்கிறது.
(இவ்வாறு) பரமனைத் தன் ஆன்மாவிலேயே காண்பவன், அல்லது அனைத்து நிலைகளிலும் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் (தன்ஆன்மாவிலேயே) எப்போதும் காணும் மனிதனிடம் உள்ளதும், ஞானத்தையே தன் வேராகக் கொண்டதுமான பலம் ஒருபோதும் தொலைந்து போவதில்லை[3].(51) பிழை மற்றும் மயக்கத்தில் உண்டாகும் அனைத்து வகைத் துண்பங்களையும் ஞானத்தின் துணையுடன் கடக்கும் ஒருவன், அனைத்து உயிரினங்களுடனான தொடர்பை அடைவதால் எந்தத் தீமையையும் ஒருபோதும் பற்றுவதில்லை[4].(52) புத்தி முழுமையாக வெளிப்படும் அத்தகைய மனிதன், உலகில் நீடித்திருக்கும் ஒழுக்க நடைமுறையில் ஒருபோதும் களங்கம் காண்பதில்லை. விடுதலையை {முக்தியை} அறிந்த ஒருவன், பரமாத்மா தொடக்கமும் முடிவுமற்றது; அனைத்து உயிரினங்களாகவும் பிறப்பெடுக்கிறது; ஜீவாத்மாவில் (சாட்சியாக) அது வசிக்கிறது; அது செயலற்றதாவும், வடிவற்றதாகவும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். தவறான தன் செயல்களின் விளைவால் துன்பத்தைச் சந்திக்கும் மனிதன் மட்டுமே,(53,54) அந்தத் துன்பத்தைக் களையும் நோக்கத்திற்காக எண்ணற்ற உயிரினங்களைக் கொல்கிறான்[5]. அத்தகைய வேள்விகளைச் செய்யும் விளைவால், நிகழ்த்துபவர்கள் {அந்த வேள்வியைச் செய்பவர்கள்} மறுபிறப்பையும், அனைத்துப் புறத்திலும் எண்ணற்ற செயல்களைச் செய்யும் தேவையையும் அடைகிறார்கள்.(55)
[3] கும்பகோணம் பதிப்பில், "ஆத்மாவை உலகத்தில் வியாபித்ததாகவும், உலகங்களை ஆத்மாவினத்தில் வியாபித்தவையாகவும் பார்த்துப் பராவரத்தை {பிரம்மத்தை} அறிந்தவனுடைய ஞான மூலமான சக்தியானது நசிக்கிறதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஞானப் பலத்தின் மூலம், ஒரு மனிதன் பரத்தைக் காணலாம். கரையற்றிருப்பதை அவன் உணர்வதில்லை. ஒவ்வொரு வழியிலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அன் அனைத்து உயிரினங்களையும் அதனில் காண்கிறான். அவன் பிற உயிரினங்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலும், இவ்வழக்கில் அவன் விரும்பத்தகாத எதையும் அனுபவிப்பதில்லை" என்றிருக்கிறது.[4] "பற்றுகள் அனைத்தையும் கடந்தவன், பிற உயிரினங்களின் சேர்க்கையால் ஒருபோதும் துன்பத்தை அடைவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்[5] "ஞானிகள், பெரும் எண்ணிக்கையிலான உயிரினங்கள் கொல்லப்படும் வேள்விகளைச் செய்வதில்லை. பிரவிருத்தி அறத்தில் பற்றுக் கொண்ட மனிதர்கள் வேள்விகளைச் செய்கிறார்கள். முற்பிறவி செயல்களின் விளைவால் இவ்வுலகிற்கு வரும் அவர்கள், வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளின் வழியில் (சொர்க்கத்திற்குச் செல்லும்) மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். மேம்போக்காகக் காணிக்கையளிக்கப்படும் பலிகளைத் தவிர்த்து, எண்ணற்ற சிறு, நுண்ணிய உயிரினங்களும் வேள்வி நெருப்புகளிலும், வேள்விகளுக்காகச் செய்யப்படும் பிற ஆயத்தங்களிலும் கொல்லப்படுகின்றன என்பதைச் சொல்வதே இந்த ஸ்லோகத்தின் நோக்கமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சாஸ்திரத்தை அறிந்த பகவானானவர் ஆதியந்தமற்றத்தையறிந்தவனான அவனை ஆத்மாவிலிருக்கிறவனாகவும், நாசமில்லாதவனாகவும், கர்த்தாவாகாதவனாகவும், சரீரமில்லாதவனாகவும் சொன்னார். தான் செய்த வினையினால் எப்பொழுதும் துக்கத்தையடைந்த பிராணியானது தன் துக்கத்தை விலக்கிக் கொள்வதற்குப் பல ஜந்துக்களைக் கொல்லுகிறது; அதனால், வேறு பல புதிய வினைகளை அடைகிறது; பிறகு, நோயாளி அபத்தியத்தால் வருத்தமடைவது போல அந்த வினையினால் திரும்பவும் வருத்தமடைகிறது" என்றிருக்கிறது.
பிழையால் குருடாகும் ஒரு மனிதன் {மோகமடைந்தவன்}, உண்மையில் துன்பத்தின் ஊற்றுக்கண்ணான அதையே இன்பநிலையென்று கருதி, முறையற்ற உணவை உண்ணும் ஒரு நோயாளியைப் போலவே, தொடர்ந்து துன்பத்தை அடைகிறான்.(56) அத்தகைய மனிதன் கடையப்படும் எந்தப் பொருளையும் போலவே, தன் செயல்களால் ஒடுக்கப்பட்டுக் கடையப்படுகிறான். தன் செயல்களால் கட்டப்பட்ட அவன் மறுபிறப்பை அடைகிறான். அவனது செயல்களின் இயல்பே அவனது வாழ்வின் வகையைத் தீர்மானிக்கிறது.(57) பல்வேறு வகைக் கொடுமைகளை அனுபவிக்கும் அவன், நிற்காமல் சுழலும் சக்கரத்தைப் போலவே மீண்டும் மீண்டும் மறுபிறப்பெனும் வளையத்தில் பயணிக்கிறான். எனினும், நீ உன் கட்டுகள் அனைத்தையும் அறுத்திருக்கிறாய். நீ செயல்கள் அனைத்தையும் தவிர்க்கிறாய்.(58) அனைத்தையும் அறிந்தவனும், அனைத்துப் பொருட்களிலும் திறம்பெற்றவனுமான நீ வெற்றியையடைந்து, இருப்பிலுள்ள பொருட்கள் அனைத்திலும் இருந்து விடுபடுவாயாக. புலனடக்கம், தவசக்தி ஆகியவற்றின் மூலம் (பழங்காலத்தில்) பல மனிதர்கள் செயற்கட்டுகளை அறுத்து, உயர்ந்த வெற்றியையும், தடையில்லாத இன்பநிலையையும் அடைந்திருக்கிறார்கள்" என்றார் {நாரதர்}.(59)
சாந்திபர்வம் பகுதி – 330ல் உள்ள சுலோகங்கள் : 59
ஆங்கிலத்தில் | In English |