Emancipation technique! | Shanti-Parva-Section-331 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 158)
பதிவின் சுருக்கம் : உலக இயல்பையும் முக்திக்கான உத்திகளையும் சுகருக்குச் சொன்ன நாரதர்...
நாரதர் {சுகரிடம்}, "அருளப்பட்டவையும், அமைதி குறித்தவையும், துயரை விலக்குபவையும், மகிழ்ச்சியை உண்டாக்குபவையுமான சாத்திரங்களைக் கேட்பதன் மூலம், ஒருவன் தூய புத்தியை அடைந்து, அதன் மூலம் உயர்ந்த இன்பநிலையை அடைகிறான்.(1) கவலைக்கான ஆயிரம் காரணங்களும், அச்சத்திற்கான நூறு காரணங்களும் புத்தியற்றவனையே நாளுக்குநாள் பீடிக்கின்றனவேயன்றி ஞானியையோ, கல்விமானையோ அல்ல.(2) எனவே, உன் துன்பங்களை விலக்கும் நோக்கில் நான் சொல்லப்போகும் சில பழங்கதைகளைக் கேட்பாயாக. ஒருவனால் தன் புத்தியை அடக்க முடியுமென்றால் {புத்தியானது அவனது வசத்திலிருக்குமென்றால்}, அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான்.(3) விரும்பத்தகாததை அடைவது மற்றும் ஏற்புடையதில் இருந்து விலகுவது ஆகியவற்றின் மூலம் மட்டுமே சிறு மதி கொண்ட மனிதர்கள் அனைத்து வகை மனதுக்கங்களையும் அடைகிறார்கள்.(4) காரியங்கள் கடந்து சென்ற பிறகு ஒருவன் அவற்றின் தகுதிகளை நினைத்து வருந்தக்கூடாது. அத்தகைய கடந்த காரியங்களைப் பற்றுடன் நினைப்பவனால் ஒருபோதும் விடுதலையை {முக்தியை} அடைய முடியாது.(5)
தான் பற்றுக் கொள்ளத் தொடங்கும் பொருட்களில் ஒருவன் எப்போதும் களங்கங்களைக் காண வேண்டும். அவன் அத்தகைய பொருட்களை மிகத் தீமை நிறைந்தவையாக எப்போதும் கருத வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் விரைவில் அவற்றிலிருந்து விடுதலையடைவான்.(6) கடந்ததை நினைத்து வருந்தும் மனிதன் செல்வத்தையோ, அறத்தகுதியையோ, புகழையோ ஈட்டத் தவறுகிறான். இருப்பில் இல்லாததை ஒருபோதும் அடையமுடியாது. அத்தகைய பொருட்கள் கடந்து சென்றால், (ஒருவன் எவ்வளவுதான் அவற்றுக்காக வருத்தப்பட்டாலும்) மீண்டும் அவை திரும்பாது.(7) உயிரினங்கள் உலகம் சார்ந்த பொருட்களைச் சில வேளைகளில் அடைகின்றன, சில வேளைகளில் இழக்கின்றன. இவ்வுலகில் தனக்கு நேரும் அனைத்து நிகழ்வுகளிலும் எந்த மனிதனும் வருத்தமடைவதில்லை.(8) கடந்து சென்ற ஒன்றின் இறப்பிலோ, இழப்பிலோ ஒருவன் கொள்ளும் துக்கத்திற்காகத் துக்கத்தை மட்டுமே அடைகிறான். ஒரு துன்பத்திற்குப் பதிலாக அவன் இரு துன்பங்களை அடைகிறான்.(9) உலகில் வாழ்வு மற்றும் மரணம் என்ற நடைமுறையைத் தங்கள் புத்தியின் துணையுடன் கண்ணீர் சிந்தாமல் காணும் மனிதர்கள் சரியாகப் பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய மனிதர்கள் (என்ன நடந்தாலும்) ஒருபோதும் கண்ணீர் சிந்துவதில்லை.(10)
ஒருவன் தன்னால் முடிந்த சிறந்த முயற்சிகளைச் செய்தாலும் தவிர்க்க முடியாததும், உடல், அல்லது மனத் துன்பத்தை உண்டாக்கவல்லதுமான அத்தகைய பேரிடரேதும் நேரும்போது, ஒருவன் அதைக்குறித்துத் துன்பத்துடன் சிந்திப்பதை நிறுத்த வேண்டும்.(11) துன்பத்திற்கான மருந்து இதுவே, அதைக் குறித்துச் சிந்திப்பதல்ல. அதை நினைப்பதால் ஒருவனால் ஒருபோதும் அதை அகற்ற முடியாது; மறுபுறம், துன்பத்தை நினைப்பதால் அஃது அதிகரிக்கவே செய்கிறது.(12) மனத்துயரங்கள் ஞானத்தால் கொல்லப்பட வேண்டும்; அதே வேளையில் உடல் துயரங்கள் மருந்துகளால் விலக்கப்பட வேண்டும். இதுவே ஞானத்தின் சக்தியாகும். இத்தகைய காரியங்களில் ஒருவன் புத்தி குறைந்த மனிதர்களைப் போல நடந்து கொள்ளக்கூடாது.(13) இளமை, அழகு, உயிர், செல்வம், உடல்நலம், அன்புக்குரியோரின் தோழமை ஆகிய இவையாவும் நிலையற்றவையே. ஞானம் கொண்ட ஒருவன் இவற்றில் ஒருபோதும் ஆசை கொள்ளக்கூடாது. மொத்தமாக ஒரு சமூகத்துக்கே தொடர்புடைய துன்பம் நிறைந்த காரியங்களில் ஒருவன் தனியாக அழக்கூடாது. அவ்வாறு ஈடபடாமல், துயரம் வரும்போது அதைத் தவிர்க்கமுனையும் ஒருவன், தீர்வுக்கான வாய்ப்பைக் கண்டவுடன் அதைச் செய்ய வேண்டும்.(15)
இந்த வாழ்வில் மகிழ்ச்சியின் அளவைவிடத் துன்பம் மிகப் பெரியது என்பதில் ஐயமில்லை. மனிதர்கள் அனைவரும் புலன் நுகர் பொருட்களில் பற்றை வெளிப்படுத்தி, மரணத்தை ஏற்பில்லாததாகக் கருதுகிறார்கள் என்பதிலும் ஐயமில்லை.(16) எந்த மனிதன் இன்பதுன்பங்கள் இரண்டையும் கைவிடுகிறானோ, அவன் பிரம்மத்தை அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதன் இவ்வுலகில் இருந்து செல்லும்போது, அவனது காரியத்தில் ஞானிகள் ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை.(17) செல்வத்தைச் செலவழிப்பதில் துன்பம் இருக்கிறது. அதைப் பாதுகாப்பதிலும் துன்பமிருக்கிறது. எனவே, ஒருவன் தனது செல்வம் அழிவடையும்போது எத்துன்பத்திலும் ஈடுபடக்கூடாது.(18) புத்தி குறைந்த மனிதர்கள் பல்வேறு தரத்திலான செல்வத்தை அடைந்து, நிறைவை வெல்லத் தவறி இறுதியில் துன்பத்தில் அழிவடைகிறார்கள். எனினும் ஞானிகளோ எப்போதும் நிறைவுடன் இருக்கிறார்கள்.(19) சேர்க்கைகள் அனைத்தும் இறுதியில் கலையவே {பிரியவே} போகின்றன. உயர்ந்த பொருட்கள் அனைத்தும் வீழவும், தாழ்வடையவும் விதிக்கப்பட்டிருக்கின்றன. சேர்க்கைகள் நிச்சயம் பிரிவிலேயே முடியப்போகின்றன, வாழ்வும் நிச்சயம் மரணத்திலேயே முடிவடையும்.(20)
தாகம் தணிவடையாது {ஆசைக்கு முடிவில்லை}. மனநிறைவே உயர்ந்த மகிழ்ச்சியாகும். எனவே, ஞானிகள் மனநிறைவையே மிக மதிப்புமிக்கச் செல்வமாகக் கருதுகிறார்கள்.(21) ஒருவனுக்காக ஒதுக்கப்பட்ட வாழ்வுக்காலம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது {கடந்து செல்கிறது}. அஃது ஒருக்கணம் கூடத் தன் பாதையில் நிற்பதில்லை. ஒருவனுடைய உடல் நீடிக்க முடியாதபோது, அவன் (இவ்வுலகத்தில்) வேறு எந்தப் பொருளை நீடிக்கப்போவதாகக் கருத முடியும்?(22) உயிரினங்கள் அனைத்தின் இயல்பையும் சிந்தித்து, அது மனத்தால் புரிந்து கொள்ளப்பட முடியாதது எனத் தீர்மானிக்கும் மனிதர்கள், தங்கள் கவனத்தை உயர்ந்த பாதையை நோக்கித் திருப்பி, அதில் நல்ல முன்னேற்றத்தை அடைபவர்கள் துன்பத்தில் ஈடுபடவேண்டியதில்லை[1].(23) தன் இரையை அபகரித்து ஓடும் புலியைப் போலக் காலனானவன், மனிதன் ஆசை மற்றும் அனுபவிப்பதில் தணிவடையாமல் அத்தகைய (லாபமில்லா) தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே அவனை அபகரித்துச் செல்கிறான்.(24) ஒருவன் எப்போதும் தன்னைக் கவலையில் இருந்து விடுவித்துக் கொள்ள முனைய வேண்டும். உற்சாகச் செயல்பாடுகளைத் தொடங்குவதன் மூலம் ஒருவன் கவலையை விலக்க முனைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட கவலையில் இருந்து விடுபட்டதும், மேலும் கவலையில் ஈடுபடாமல், களங்கமான நடத்தைகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலம் கவலையைத் தொலைவில் வைக்கும் வழியில் ஒருவன் செயல்பட வேண்டும்[2].(25)
[1] "இந்த ஸ்லோகம் ஐயம் நிறைந்ததாகும். இங்கே உரையாசிரியர் அமைதியாக இருக்கிறார். பரப்பில் கிடக்கும் பொருளையே நான் பின்பற்றியிருக்கிறேன். பொருட்களின் இயல்பைக் குறித்துச் சிந்திக்கும் மனிதர்கள், அத்தொழில் பயன்றறது என்று அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், பொருட்களின் இயல்புகள் மனத்தால் புரிந்து கொள்ளப்பட முடியாதவையாகும். பெரும் தத்துவ ஞானி புல்லின் தன்மைகளையும், அது நீடித்திருக்கும் காரணத்தையும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரமும் அஃது அடையும் மாற்றத்தைக் குறித்து அறியாமல் இருக்கிறார். எனினும், பலனில்லாத அத்தொழிலில் ஈடுபடாத மனிதர்கள், உயர்ந்த பாதையில் நடந்து துன்பத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள் என்பது பொருளாக இருக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிராணிகளின் தன்மையை ஆலோசித்து மனத்திற்கெட்டாத ஆத்மாவை அறிந்தவர்களும் (ஸம்ஸார) மார்க்கத்தைக் கடந்தவர்களுமானவர்கள் துக்கத்தையடையார்" என்றிருக்கிறது.[2] "நான் இந்தச் சுலோகத்தைச் சரியாகப் புரிந்திருக்கிறேனா என்பதில் எனக்கு உறுதியில்லை" எனக் கங்குலி இங்கே சொல்கிறார். கும்பகோணம் பதிப்பில், "துக்கத்தை விலக்குவதற்குரிய உபாயத்தைத் தேட வேண்டும். துக்கியாமலே ஆரம்பிக்கவேண்டும். முயற்சி செய்வதனால் வியஸனமில்லாதவனாக வேண்டும்" என்றிருக்கிறது.
ஒலி, தீண்டல், வடிவம், மணம், சுவை ஆகியவற்றை அனுபவிப்பதில் செல்வந்தனும், வறியவனும் ஒரே வகையிலேயே எதையும் காண்பதில்லை[3].(26) சேர்க்கைக்கு முன்பு உயிரினங்கள் ஒருபோதும் துன்பமடைவதில்லை. எனவே, தன் உண்மை இயல்பில் இருந்து வீழாத ஒருவன், அந்தச் சேர்க்கை முடிவடையும்போது ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை[4].(27) ஒருவன் தனது பாலுறவு பசியையும், வயிற்றின் பசியையும் பொறுமையின் துணை மூலம் அடக்க வேண்டும்[5]. அவன் தனது கைகளையும், கால்களையும் கண்ணின் துணையால் பாதுகாக்க வேண்டும். கண்களும், காதுகளும், பிற புலன்களும் அவனது மனத்தால் பாதுகாக்கப்பட வேண்டும். மனமும், வாக்கும் ஞானத்தின் துணையால் ஆளப்பட வேண்டும்.(28) அறிந்த மனிதர்களிடமும், அறியாதவர்களிடம் போலவே அன்பு மற்றும் பாசத்தை அவன் கைவிட்டு, பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தகைய மனிதனே ஞானி என்று சொல்லப்படுகிறான், அவனே நிச்சயம் மகிழ்ச்சியைக் காண்கிறான்.(29) எந்த மனிதன் தன் ஆன்மாவிலேயே நிறைவடைகிறானோ[6], எவன் யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, எவன் தன்னை {ஆன்மாவைத்} தவிர வேறு எதையும் சார்ந்திருக்கவில்லையோ, எவன் தன்னை {ஆன்மாவைத்} தவிர வேறு எந்தத் துணையுமில்லாமல் நடந்து கொள்கிறானோ அவனே இன்பநிலையை அடைவதில் வெல்கிறான் {சுகம் அடைகிறான்}" என்றார் {நாரதர்}.(30)
[3] "புலன்களை நிறைவு செய்வது (அனுபவத்தைத் தவிர) வேறு எதையும் விட்டுவிட்டுச் செல்வதில்லை. புலன்கள் அவற்றுக்குரிய பொருட்களில் தொடர்பு கொள்ளும் வரையே இன்பம் நீடிக்கிறது என்பதையே இந்த ஸ்லோகம் சொல்ல வருகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சப்தத்திலும், ஸ்பரிசத்திலும், ரூபத்திலும், கந்தத்திலும், ரஸத்திலும் தனவானுக்கும், தனமில்லாதவனுக்கும் அனுபவிப்பதைப் பார்க்கிலும் வேறு ஒன்றுமில்லை"என்றிருக்கிறது.[4] "ஒரு மனிதன் மனைவிகள், பிள்ளைகள் அல்லது செல்வம் முதலியவற்றைக் கொண்டிருக்கிறான். அவை இல்லாதபோது எந்தக் கவலையில் இல்லாதவனாகவே இருந்தான். இந்தச் சேர்க்கைகளின் மூலமே ஒருவனது துன்பம் தொடங்குகிறது. எனவே, இவை மறையும்போது ஒரு புத்திசாலி மனிதன் எந்தக் கவலையிலும் ஈடுபடக்கூடாது. கட்டுகள் {பந்தங்கள்} அல்லது பற்றுகள் எப்போதும் துன்பத்தை உண்டாக்குபவையே. கட்டுகள் அறைக்கப்படும்போது, அல்லது அழிக்கப்படும்போது துன்பம் ஏதும் ஏற்படக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] கும்பகோணம் பதிப்பில், "தைரியத்தால் குறியையும் வயிற்றையும் காக்க வேண்டும்" என்றிருக்கிறது.[6] "எந்த மனிதனின் இன்பங்கள் புறப் பொருட்களான மனைவிகள், பிள்ளைகள் முதலியவற்றைச் சார்ந்திருக்கவில்லையோ" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 331ல் உள்ள சுலோகங்கள் : 30
ஆங்கிலத்தில் | In English |