Tuesday, November 20, 2018

கயிலாயம் சென்ற சுகர்! - சாந்திபர்வம் பகுதி – 332

Suka proceeded to Kailasa! | Shanti-Parva-Section-332 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 159)


பதிவின் சுருக்கம் : சுகருக்கு உலக இயல்புகளையும், மோக்ஷதர்மத்தையும் தொடர்ந்து கற்பித்தது; மோக்ஷமடைய விரும்பிய சுகர்; வியாசரிடம் விடைபெற்றுக் கொண்டு கயிலாயம் சென்ற சுகர்...


நாரதர் {சுகரிடம்}, "இன்பதுன்பங்களின் மாற்றங்கள் தோன்றும்போது, அல்லது மறையும்போது, அந்த நிலைமாற்றங்கள் ஞானத்தின் மூலமோ, கொள்கைகள் அல்லது முயற்சியின் மூலமோ தவிர்க்கமுடியாதவையாக இருக்கின்றன.(1) ஒருவன் தன் உண்மை இயல்பில் இருந்து வீழ்ந்துவிட அனுமதியாமல், அவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தன்னால் இயன்ற சிறந்த முயற்சியைச் செய்ய வேண்டும். அத்தகைய கவனம் மற்றும் முயற்சியைக் கொள்ளும் ஒருவன் ஒருபோதும் சோர்வடைய வேண்டியதில்லை. தன்னை {சுயத்தை} அன்புக்குரிய ஏதோ ஒன்றைப் போலக் கருதும் அவன், முதுமை, மரணம் மற்றும் நோயில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(2) மன மற்றும் உடல் நோய்கள், பலமிக்க வில்லாளியின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கூர்முனைக் கணைகளைப் போல உடலைப் பீடிக்கும்.(3) தாகத்தால் கொடுமைக்குள்ளாவதும், வேதனையால் கலக்கமடைவதும், முற்றிலும் ஆதரவற்றதும், நீண்ட வாழ்நாளை விரும்புவதுமான ஒரு மனிதனின் உடல் அழிவை நோக்கியே இழுக்கப்படுகிறது.(4)


பகல்களும், இரவுகளும், தங்கள் ஓட்டத்தில் மனிதர்கள் அனைவரின் வாழ்நாள் காலங்களைச் சுமந்தபடியே இடையறாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆறுகளின் ஓட்டத்தைப் போல அவை திரும்பிப் பாறாமல் இடையறாமல் பாய்ந்து கொண்டிருக்கின்றன.(5) வளர் பிறை நாட்களும், தேய்பிறை நாட்களும் இப்பணியில் ஒரு கணமும் நிற்காமல் மனித உயிரினங்களைத் தொடர்ந்து இடையறாமல் வீணடித்து வருகின்றன.(6) நாளுக்கு நாள் எழுவதும், மறைவதுமாக இருப்பவனும், சிதைவற்றவனுமான சூரியன், மனிதர்களின் இன்ப துன்பங்களைத் தொடர்ந்து சமைத்துக் கொண்டிருக்கிறான்.(7) விதியைச் சார்ந்திருப்பவையும், மனிதனால் எதிர்பார்க்கப்படாதவையுமான அவனது நல்ல மற்றும் தீய நிகழ்வுகளை இரவுகள் தங்களுடன் எடுத்துக் கொண்டு இடையறாமல் சென்று கொண்டிருக்கின்றன.(8)

மனிதச் செயல்களின் கனிகள், பிற சூழ்நிலைகளைச் சாராமல் இருந்தால், அவன் தான் விரும்பிய எந்தப் பொருளையும் அடைவான்.(9) புலன்களை அடக்கியவர்களும், புத்திசாலிகளும், நுண்ணறிவு கொண்டவர்களுமான மனிதர்களும் கூட, செயல்களற்றவர்களாக இருந்தால், எந்தக் கனிகளையும் ஈட்டுவதில் அவர்கள் ஒருபோதும் வெல்வதில்லை[1].(10) புத்தியற்றவர்களாகவும், எந்தவகைச் சாதனைகளும் இல்லாதவர்களும், மனிதர்களில் இழிந்தவர்களுமான மற்றவர்கள், வெற்றியை எதிர்பார்க்காதிருந்தாலும், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனிவதால் மகுடம் சூட்டப்படுகின்றனர்.(11) அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்ய எப்போதும் ஆயத்தமாக இருப்பவனும், உலகமனைத்தையும் வஞ்சிப்பதில் ஈடுபடுபவனுமான வேறொருவன் மகிழ்ச்சியில் புரள்வதும் காணப்படுகிறது.(12)

[1] "செயல்களின் பயனையும், தேவையையும் காட்டுவதே இந்த ஸ்லோகத்தின் நோக்கமாகும். எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் செயல்படாத எவனும் எந்தக் கனியையும் ஈட்ட முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மிக்க முயற்சியுள்ளவர்களும், ஸாமர்த்தியமுள்ளவர்களும், புத்திமான்களுமான மனிதர்களும் எல்லாக் கர்மங்களாலும் குறைவடைந்து பயனடையாதவர்களாகக் காணப்படுகிறார்கள்" என்றிருக்கிறது.

சோம்பலாக அமர்ந்திருக்கும் வேறொருவன் பெருஞ்செழிப்பை அடைகிறான்; அதேவேளையில், மெய்யுறுதியுடன் முயற்சி செய்பவன் கிட்டத்தட்ட அடையும் தருவாயில் இருக்கும் விரும்பத்தகுந்த கனிகளைத் தவறவிடுவதும் காணப்படுகிறது.(13) நீ இதை மனிதனின் களங்கங்களில் ஒன்றாக ஏற்பாயாக. ஒருவரைப் பார்ப்பதன் மூலம் ஒருவனின் இயல்பில் உண்டாகும் உயிர் வித்தானது, மற்றொருவருக்குச் செல்கிறது.(14) அது கருவறைக்குச் செல்லும்போது, சில வேளைகளில் கருவை உண்டாக்கிறது, சில வேளைகளில் தவறுகிறது. பாலுறவு கலவி பொய்க்கும்போது, ஒரு கனியையும் உண்டாக்காமல் பெரும் மலர்கள் பலவற்றை மலரச் செய்யும் ஒரு மாமரத்திற்கு அஃது ஒப்பாகிறது[2].(15) வாரிசைப் பெற விரும்பும் சில மனிதர்களைப் பொறுத்தவரையில், தங்கள் நோக்கம் கனிவதற்காக (பல்வேறு தேவர்களை வழிபடுவதன் மூலம்) இதயப்பூர்வமாக முயன்றும் கருவறையில் கருவை உண்டாக்க அவர்கள் தவறுகிறார்கள்.(16)

[2] "இதில் என்ன களங்கம் சொல்லப்படுகிறது என்பது எனக்கு விளங்கவில்லை. ஒருவேளை பொருள் இதுவாக இருக்கலாம். இந்து உடலியங்கியலில், உயிர்வித்தானது, ஒரு விரும்பத்தக்க பெண்ணைக் காண்பதன் மூலம் உண்டாகிறது. யாரைக் கண்டு உயிர்வித்து உண்டாகிறதோ அவரிடமல்லாமல் வேறொருவருடன் கலவியில் ஈடுபடும்போது அஃது உற்பத்தியில் தவறுகிறது. இத்தைய கலவியில் ஈடுபடுபவர் எவரோ அவரே பழிக்குத் தகுந்தவர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஓரிடத்திலுண்டான வீர்யம் திரும்ப வேறிடம் போகிறது. கருப்பையில் விடப்பட்ட வீர்யத்திற்குக் கர்ப்பம் உண்டாகிறதோ இல்லையோ. வீர்யத்தினுடைய பரிணாமமானது மாம்பூவுக்கு நிகராகக் காணப்படுகிறது" என்றிருக்கிறது.

கடும் நஞ்சுமிக்கப் பாம்பைக் கண்டு அஞ்சும் ஒருவனைப் போலக் கரு உண்டாவதை அஞ்சும் வேறொருவன், நீண்ட வாழ்வைக் கொண்டவனும், தான் கடந்த வாழ்நிலைகளில் இருந்து தானே திரும்பி வந்ததைப் போலத் தெரிபவனுமான மகன் தனக்குப் பிறப்பதை அவன் காண்கிறான்.(17) வாரிசுக்கான ஆவலும், ஏக்கமும் கொண்டவர்களும், அக்காரியத்தினால் உற்சாகமற்றிருப்பவர்களுமான பல மனிதர்கள், பல தேவர்களுக்கு வேள்வி செய்து, கடும் தவங்களை மேற்கொண்டு இறுதியாகத் தங்கள் குலத்திலேயே இழிந்தவர்களாகத் தங்களை நிரூபித்துக் கொள்ளும் பிள்ளைகளைப் பத்து நீண்ட மாதங்கள் முறையாகச் சுமந்து பெறுகின்றனர்.(18) அத்தகைய சடங்குகள் மற்றும் நியமங்களுடைய அறத்தின் மூலம் பெறப்பட்ட வேறு சிலர், தங்கள் தந்தைமாரால் ஈட்டப்பட்டு, சேமிக்கப்பட்ட செல்வத்தையும், தானியங்களையும், அனுபவிக்கத்தகுந்த பல்வேறு ஆதாரங்களையும் உடனே அடைகின்றனர். பாலுறவு செயலில் எதிர் பாலினங்களைச் சேர்ந்த இருவர் ஒருவரோடொருவர் கலவி புரியும்போது, தாயைப் பீடிக்கும் பேரிடரைப் போலக் கருவறையில் கரு உண்டாகிறது.(20)

உயிர் மூச்சுகள் நின்ற உடனேயே, திரள் உடல் அழிவடைந்தாலும், சதை மற்றும் கபத்தால் உண்டான அந்தத் திரள் உடலால் செய்யப்பட்ட செயல்கள் அழிவடையாமல் உடல்படைத்த உயிரினம் கொண்டிருக்கும் பிற உடல் வடிவங்களைப் பீடிக்கிறது[3].(21) உடல் அழிந்த பிறகு, அழிவடைந்த அந்த உடலைப் போன்றே அழிவடையக்கூடிய மற்றொரு உடல், பயணிகளை ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மாற்ற மற்றொன்றிற்குச் செல்லும் படகைப் போலவே, எரிக்கப்பட்டதும் அழிவையடைந்ததுமான அந்த உயிரினத்திற்காக (அதனிடம் செல்ல) ஆயத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது.(22) கலவிச் செயலின் விளைவால், அசைவற்றதான ஒரு துளி உயிர்வித்தானது, கருவறையில் விடப்படுகிறது. யாருடைய, அல்லது எதன் கவனிப்பால் அந்தக் கரு உயிருடன் வைக்கப்படுகிது என்பதை நான் உன்னிடம் கேட்கிறேன்.(23) உண்ணும் உணவு உடலின் எந்தப் பகுதிக்குள் செல்கிறதோ, எங்கே அது செரிக்கப்படுகிறதோ, அந்த இடத்திலேயே இந்தக் கரு வசித்தாலும் அங்கே அது செரிக்கப்படாமல் இருக்கிறது.(24)

[3] "மரணத்திற்குப் பிறகு ஒவ்வொருவரும் புதிய உடலை அடைகிறார்கள். ஓர் உயிரினம் தான் கட்டுண்ட உடல் பந்தங்கள் இல்லாமல் ஒருபோதும் இருக்க முடியாது என்பதே இந்த ஸ்லோகம் உணர்த்த வரும் பொருளாகும். இதுவே செயல்கள் அனைத்தையும் அழிப்பதன் மூலம் தங்கள் விடுதலையை அடைவதில் வென்ற மனிதர்களுக்கு வேறு வகையில் அமையும் என்பதும் உண்மையே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

கருவறையில், சிறுநீருக்கும் மலத்திற்கும் மத்தியில் ஒருவனுடைய பயணம் இயற்கையால் ஒழுங்குமுறை செய்யப்பட்டுள்ளது. அங்கே வசிக்கும் காரியத்தில், அல்லது அங்கிருந்து தப்பிக்கும் காரியத்தில் பிறக்கப் போகும் உயிரினம் சுதந்திரம் கொண்டதல்ல. உண்மையில், அது முற்றிலும் ஆதரவற்ற நிலையிலேயே இருக்கிறது.(25) சில கருக்கள் (வளர்ச்சிநிலை அடையாமலேயே) கருவறையில் இருந்து விழுகின்றன. சில உயிரோடு வெளியே வருகின்றன (தொடர்ந்து வாழ்கின்றன). அதே வேளையில் சில, (தங்கள் செயல்களின் இயல்பின் மூலம்) தங்களுக்காக வேறு உடல்கள் ஆயத்தமாக இருப்பதன் விளைவால் வாழ்வை இழந்து அழிவைச் சந்திக்கின்றன.(26) எந்த மனிதன் பாலுறவுக் கலவிச் செயலில் உயிர்நீரை உட்செலுத்துகிறானோ, அவன் ஒரு மகனையோ, மகளையோ அடைகிறான். அவ்வாறு அடையப்படும் வாரிசு, காலம் நேரும்போது, அதே போன்ற கலவியில் ஈடுபடுகிறது.(27) ஒரு மனிதனின் வாழ்வுக்கு ஒதுக்கப்பட்ட காலம் நெருங்கும்போது, அவனது உடலில் உள்ள ஐம்பூதங்களும், ஏழாவது மற்றும் ஒன்பதாவது நிலைகளை அடைந்து, பிறகு இல்லாமல் போகிறது. எனினும், மனிதன் எந்த மாற்றத்தையும் அடைவதில்லை[4].(28)

[4] "இந்த ஸ்லோகம் நிச்சயம் ஒரு முக்கியச் செய்தியைக் குறிப்பிடும் ஸ்லோகமாகும். இதை விளக்குவதில் உரையாசிரியர் போதுமான அறிவாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார் என நான் நினைக்கிறேன். மனித வாழ்வின் பத்து நிலைகள் என்பன (1) கருவறை வாசம், (2) பிறப்பு, (3) 5 வயதுக்குட்பட்ட மழலைப் பருவம். (4) 12 வயதுக்குட்பட்ட குழந்தைப்பருவம், (5) 16 வயதுக்குட்பட்ட பௌகண்டம், (6) 48 வயதுக்குட்பட்ட இளமைப் பருவம், (7) முதுமை, (8) தளர்நிலை, (9) மூச்சை நிறுத்தல், (10) உடலின் அழிவு - ஆகியவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவன் ஒருவனுக்குப் பிறகு கூடப்பிறந்தமையால் அவனிடமிருந்து உண்டானை ஐந்தும், ஏழாவதான அவஸ்தையையும் ஒன்பதாவதான அவஸ்தையையும் அடைகின்றன; நூறு பிராயம் இருப்பதில்லை" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஐந்தும் என்பது பூதங்கள்" என்றும், "ஜீவனுக்குள்ள பத்து அவஸ்தைகளாவன: கர்ப்பவாஸம், ஜன்மம், பால்யம், கௌமாரம், பௌகண்டம், யௌவனம், ஸ்தாவிர்யம், ஜரை, பிராணரோதம், நாசம் என்றும்" இருக்கிறது.

வேடர்களால் தாக்கப்படும் சிறு விலங்குகளைப் போல நோய்களால் மனிதர்கள் பீடிக்கப்படும்போது, அவர்கள் எழுவதற்கும், அசைவதற்குமான தங்கள் சக்த்தியை அப்போது இழக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(29) நோய்களின் மூலம் மனிதர்கள் பீடிக்கப்பட்டால், மருத்துவர்கள் சிறந்த முயற்சிகளைச் செய்தாலும் தங்கள் துன்பத்தைத் தணிக்க முடியவில்லையெனினும் அவர்கள் தங்கள் திரண்ட செல்வத்தைச் செலவழிக்கவே விரும்புகிறார்கள்.(30) நன்கு திறம்பெற்றவர்களும், தங்கள் சாத்திரங்களை நன்கு கற்றவர்களும், சிறந்த மருந்துகளால் நன்கு ஆயத்தமடைந்தவர்களுமான மருத்துவர்களேகூட, வேடர்களால் தாக்கப்படும் விலங்குகளைப் போல நோய்களால் பீடிக்கப்படுகின்றனர்.(31) வலுவூட்டும் பானங்களையும், பல்வேறு வகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட நெய்யையும் பருகும் மனிதர்களும் கூடப் பலமான யானைகளால் ஒடிந்த மரங்களைப் போல முதுமையால் உடைந்து போவது காணப்படுகிறது.(32)

விலங்குகள், பறவைகள், இரைதேடும் விலங்குகள் ஆகியவையும், வறியவர்கள் ஆகியோரும் பிணியால் பீடிக்கப்படும்போது, மருந்துகளால் அவர்களுக்குச் சிகிச்சையளிப்பவன் எவன்? உண்மையில் அவர்கள் நோய்வாய்ப்படுவது காணப்படுவதில்லை.(33) சிறு விலங்குகளைத் தாக்கும் பெரும் விலங்குகளைப் போலவே பிணிகளும் கடுஞ்சக்தி கொண்டவர்களும், வெல்லப்பட முடியாத ஆற்றலைகள் கொண்டவர்களையும் பீடிப்பது காணப்படுகிறது.(34) சக்தியிழந்த மனிதர்கள் அனைவரும் துன்பத்தைக் குறிக்கும் ஓலமிட்டு, பிழையிலும், துன்பத்திலும் மூழ்கி, வீசப்பட்ட கடும் ஓடையிலேயே சுமந்து செல்லப்படுவதும் காணப்படுகிறது.(35) உடல் கொண்ட உயிரினங்கள், இயற்கையை வெல்ல முனையும்போது, செல்வம், அரசு சக்தி அல்லது கடுந்தவங்களின் துணையுடன் அதை வெல்ல இயலாமல் போகிறது.(36)

மனிதர்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டால், அப்போது மனிதர்கள் ஒருபோதும் சாக மாட்டாரகள், ஒருபோதும் முதுமைக்கு ஆட்பட மாட்டார்கள், ஒருபோதும் ஏற்புடைய எதையும் அடைய மாட்டார்கள், இறுதியாகத் தங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனிந்து மகுடம் சூட்டப்படுவார்கள்.(37) மனிதர்கள் அனைவரும் தங்கள் நிலையில் படிப்படியாக மேன்மையடையவே விரும்புகிறார்கள். இந்த விருப்பத்தை நிறைவு செய்யவே அவர்கள் தங்கள் சிறந்த சக்தியால் முயற்சிக்கிறார்கள். எனினும் விளைவானது அவர்களது விருப்பத்திற்கு ஏற்புடையதாக இருப்பதில்லை.(38) முற்றிலும் விழிப்புணர்வுடன் இருப்பவர்களும், நேர்மையானவர்களும், துணிவுமிக்கவர்களும், ஆற்றல்மிக்கவர்களுமான மனிதர்களும் கூட, செழிப்பின் செருக்கிலும், மதுவிலும் போதையுண்ட மனிதர்களைத் துதிப்பது காணப்படுகிறது.(39) இடர்களைக் கவனிக்குமுன்பே அவை காணாமல் போகும் சில மனிதர்களும் காணப்படுகிறார்கள். எந்தச் செல்வமும் இல்லாதிருந்தாலும் அனைத்து வகைத் துயரங்களில் இருந்து விடுபட்ட வேறு சிலரும் காணப்படுகிறார்கள்.(40)

செயல்களின் ஒன்றுதலில் உள்ள கனிகளைப் பொறுத்தவரையில் பேரமைதியே காணப்படுகிறது. சிலர் வாகனங்களைத் தங்கள் தோள்களில் சுமப்பதும், சிலர் அந்த வாகனங்களைச் செலுத்துவதும் காணப்படுகிறது.(41) மனிதர்கள் அனைவரும் செழிப்பையும், செல்வாக்கையும் விரும்புகிறார்கள். சிலர் மட்டுமே தேர்களை (யானைகளையும், குதிரைகளையும்) தங்கள் உடைமைகளாகக் கொண்டிருக்கிறார்கள். முதல் மனைவி இறந்து, வேறு மனைவியை அடையத் தவறுபவர்கள் சிலர் இருக்கிறார்கள்; அதே வேளையில் நூற்றுக்கணக்கான மனைவிகளைக் கொண்ட பிறரும் இருக்கிறார்கள்.(42) துன்பமும் இன்பமும் அருகருகே நீடிக்கும் இரு பொருட்களாகும். மனிதர்கள் இன்பத்தையோ, துன்பத்தையோ அடைகிறார்கள். இந்த ஆச்சரியத்தைப் பார். எனினும், அத்தகைய காட்சியின் பிழையால் நீ மயக்கமடையாதே.(43) அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கைவிடுவாயாக. வாய்மையையும், பொய்மையையும் கைவிடுவாயாக. வாய்மை மற்றும் பொய்மை ஆகிய இரண்டையும் கைவிட்ட பிறகு, எதனுடைய துணையின் மூலம் அவற்றைக் கைவிட்டாயோ, அதனையும் கைவிடுவாயாக.(44) ஓ! முனிவர்களில் சிறந்தவனே, எது பெருந்துன்பம் என்பதை நான் இப்போது உனக்குச் சொன்னேன். (மனிதர்களாக இருந்த) தேவர்கள் அனைவரும் சொர்க்கவாசிகளாவதற்காக, இத்தகைய அறிவுரைகளின் துணையுடன், இந்தப் பூமியை விட்டுச் செல்வதில் வெல்கிறார்கள்" என்றார் {நாரதர்}.(45)

பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், அமைதியான மனத்தைக் கொண்டவருமான சுகர், நாரதரின் வார்த்தைகளைக் கேட்டு, தாம் பெற்ற அறிவுரைகளின் வேறுபாட்டைக் குறித்துச் சிந்தித்தாலும், முடிவான எந்தத் தீர்மானத்தையும் அவரால் எட்ட முடியவில்லை.(46) பிள்ளைகள் மற்றும் மனைவிகளைப் பெறுவதால் பெருந்துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதையும்; அறிவியலையும், வேதங்களையும் அடைவதற்காக ஒருவன் பெரும் உழைப்பைச் செலுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவர் தமக்குள்ளேயே, "நித்தியமானதும், அனைத்து வகைத் துன்பத்தில் இருந்தும் விடுபட்டுமாக இருந்தாலும், பெருஞ்செழிப்பைக் கொண்டதுமான நிலை எது?" என்று கேட்டுக் கொண்டார்.(47) கடமைகள் அனைத்தின் தொடக்கத்தையும், முடிவையும் நன்கறிந்தவரான சுகர், தாம் செல்வதற்காக விதிக்கப்பட்ட நடைமுறையைக் குறித்து ஒருக்கணம் சிந்தித்து, பெரும் இன்பநிலை நிறைந்த உயர்ந்த கதியை அடையத் தீர்மானித்தார்.(48)

அவர் {சுகர்} தமக்குள்ளேயே, "பற்றுகள் அனைத்தையும் களைந்து, முற்றிலும் விடுப்பட்டவனாகி எவ்வாறு நான் சிறந்த கதியை அடையப் போகிறேன்? உண்மையில், பல்வேறு வகைப் பிறவிகளைக் கொண்ட இந்தப் பெருங்கடலுக்குத் திரும்பாமல் இருக்கக்கூடிய சிறந்த நிலையை நான் எவ்வாறு அடையப் போகிறேன்?(49) எங்கிருந்து திரும்பிவர வேண்டாமோ அந்த இருப்புநிலையை அடையவே நான் விரும்புகிறேன். அனைத்து வகைப் பற்றுகளையும் கைவிட்டு, மனத்தின் துணையால் சிந்தித்து ஒரு நிச்சயத் தன்மையை அடைந்து நான் அந்தக் கதியை அடையப் போகிறேன்.(50) ஆன்மா அமைதியாக இருக்கக்கூடியதும், முதுமைக்கோ, மாற்றத்திற்கோ ஆட்படாமல், நித்தியமாக வசிக்ககூடியதுமான அந்த நிலையை நான் அடையப் போகிறேன்.(51) எனினும், யோகத்தின் துணையில்லாமல் அந்த உயர்ந்த கதியை நிச்சயம் அடைய முடியாது. முற்றான ஞான நிலை மற்றும் தெளிவு நிலையை அடைந்த ஒருவன் ஒருபோதும் செயல்களின் மூலம் இழிந்த பற்றுகளை அடைய முயல மாட்டான்.(52)

எனவே, நான் யோகம் பயின்று, என் தற்போதைய இருப்பிடமான இவ்வுடலைக் கைவிட்டு, காற்றாக மாறி, சூரியனால் பிரதிபலிக்கப்படும் பிரகாசத் திரளுக்குள் நுழையப் போகிறேன்.(53) ஜீவன் அந்தப் பிரகாசத் திரளுக்குள் நுழையும்போது, தேவர்களுடன் கூடிய சோமனைப் போல அவன் தகுதி {புண்ணியம்} தீர்ந்தவனாக, பூமியில் வீழ்ந்து, மீண்டும் போதிய தகுதியை அடைந்து மீண்டும் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.(54) சந்திரன் தேய்ந்து மீண்டும் வளர்வது காணப்படுகிறது. மீண்டும் மீண்டும் நேரும் இந்தத் தேய்தல் மற்றும் வளர்தலைக் காணும் நான் இத்தகைய மாறுபாடுகளைக் கொண்ட இருப்பின் வடிவத்தைக் கொள்ள விரும்பவில்லை.(55) சூரியன் தனது கடுங்கதிர்களால் உலகங்கள் அனைத்திற்கும் வெப்பமூட்டுகிறான். அவனது வட்டில் எந்தவொரு ஒளி குறைவையும் அடைவதில்லை. மாறாமல் நீடிக்கும் அவன், அனைத்துப் பொருட்களின் இருந்தும் சக்தியை உறிஞ்சுகிறான். எனவே நான் சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட சூரியனுக்குச் செல்ல விரும்புகிறேன்[5].(56)

[5] "இங்கே சொல்லப்படும் சூரியன் மற்றும் சந்திரன் என்ற வார்த்தைகள், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இரு வெவ்வேறு பாதைகளைக் குறிப்பிடுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அனைவராலும் வெல்லப்படமுடியாதவனாக, என் உள் ஆன்மாவில் உள்ள அச்சமனைத்தில் இருந்தும் விடுபட்டவனாக, இந்த என் உடலைக் கைவிட்டவனாக நான் அங்கே சூரியலோகத்தில் வாழப் போகிறேன்.(57) பொறுத்துக் கொள்ளமுடியாத சக்தியைக் கொண்ட சூரியனுக்குள் நான் பெரும் முனிவர்களுடன் சேர்ந்து நுழையப் போகிறேன். அனைத்து உயிரினங்கள், இந்த மரங்கள், இந்த யானைகள், இந்த மலைகள், பூமி, திசைகளின் பல்வேறு புள்ளிகள், ஆகாயம்,(58) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோரிடம் உண்மையில் நான் உலகின் உயிரினங்கள் அனைத்திற்குள்ளும் நுழையப் போகிறேன் என்பதை அறிவிக்கப் போகிறேன்[6].(59) முனிவர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும் இன்று என் யோக ஆற்றலைக் காணட்டும்" என்று {தமக்குள்ளேயே} சொல்லிக் கொண்டார் {சுகர்}. இந்த வார்த்தைகளைச் சொன்ன சுகர், தன் நோக்கத்தை உலகப் புகழ்பெற்ற நாரதரிடம் தெரிவித்தார்.(60)

[6] "இங்கே சுகர், அண்டந்தழுவிய பிரம்மத்தை அடைந்து, அனைத்துப் பொருட்களிலும் ஒன்றாகக் கலக்கப்போவதாகச் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சுகர், நாரதரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தமது தந்தை {வியாசர்} இருந்த இடத்திற்குச் சென்றார். பெருமுனிவரும், உயர் ஆன்மா கொண்டவரும், தீவில் பிறந்தவருமான {துவைபாயனருமான} கிருஷ்ணரின் {வியாசரின்} முன்னிலையை அடைந்த அவர், வழக்கமான விசாரிப்புகளைச் செய்தார்.(61) சுகரின் நோக்கத்தைக் கேட்ட அந்த உயர் ஆன்ம முனிவர் {வியாசர்} பெரிதும் நிறைவடைந்தார். அவரிடம் பேசிய அந்தப் பெரும் முனிவர், "ஓ! மகனே, ஓ! அன்புக்குரிய மகனே, என் கண்கள் நிறைவடையும் வண்ணம் நான் சிறிது காலம் உன்னைப் பார்க்கும் வகையில் இன்று இங்கேயே தங்குவாயாக" என்றார்".(62) எனினும் பற்றில் இருந்தும், ஐயங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட சுகர், விடுதலையை மட்டுமே சிந்திக்கத் தொடங்கிப் பயணத்தில் தம் இதயத்தை நிலை நிறுத்தினார்.(63) தமது தந்தையை விட்டுச் சென்ற அந்த முதன்மையான முனிவர் {சுகர்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட தவசிகளின் கூட்டம் வசிக்கும் பரந்த கயிலாயச் சாரலுக்குச் சென்றார்" என்றார் {பீஷ்மர்}.(64)

சாந்திபர்வம் பகுதி – 332ல் உள்ள சுலோகங்கள் : 64

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்