Suka on the path of emancipation! | Shanti-Parva-Section-333 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 160)
பதிவின் சுருக்கம் : யோகத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட சுகர்; முக்தியின் வழியைக் அவர் கண்டடைந்தது; தாம் கண்ட பாதையை நாரதருக்குச் சொன்னது; மீண்டும் யோகத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டது; தமது தந்தை அழைத்தால் மறுமொழி கூறுமாறு தேவதேவிகளுக்கு ஆணையிட்டது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, {கயிலாய} மலையின் சிகரத்தில் ஏறிய வியாசரின் மகன் {சுகர்}, பிற உயிரினங்களின் நடமாட்டம் இல்லாத புற்களற்ற சமதரையில் அமர்ந்தார்.(1) யோகத்தினுடைய அடுத்தடுத்த படிநிலைகளின் வரிசையை அறிந்தவரான அந்தத் தவசி {சுகர்}, சாத்திரங்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்புடைய வகையிலும், விதிக்கப்பட்ட விதிகளின்படியும், முதலில் தம் ஆன்மாவை ஓர் இடத்திலும், பிறகு மற்றுமோர் இடத்திலுமென {படிப்படியாக} நிலை நிறுத்தி, பாதம் தொடங்கி அங்கங்கள் அனைத்தையும் கடந்து சென்றார்.(2) பிறகு சுகர், சூரியன் உதித்து வெகு நேரமாகாத போது, தமது முகத்தைக் கிழக்குப்புறம் நோக்கித் திருப்பி, கைகால்களை மடக்கிப் பணிவான மனோநிலையில் அமர்ந்தார்.(3)
நுண்ணறிவைக் கொண்டவரான அந்த வியாசரின் மகன், யோகத்தில் {தமக்குள்} தம்மையே காண ஆயத்தமாக இருந்த அந்த இடத்தில் எந்தப் பறவைக்கூட்டமுமில்லை, எந்த ஒலியும் இல்லை, வெறுத்தொதுக்கும், அல்லது அச்சத்தைத் தூண்டும் எந்தக் காட்சியும் தென்படவில்லை.(4) பிறகு அவர் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட தமது ஆன்மாவைக் கண்டார். அனைத்துப் பொருட்களிலும் உயர்ந்ததைக் கண்டு அவர் இன்பமாகச் சிரித்தார்.(5) பிறகு அவர் விடுதலையின் பாதையை {மோக்ஷ மார்க்கத்தை} அடைவதற்காக மீண்டும் தம்மை யோகத்தில் நிறுவிக் கொண்டார். யோகத்தின் பேராசானாக ஆன அவர், வெளியெனும் பூதத்தைக் கடந்தார்.(6) அதன்பிறகு, தெய்வீக முனிவரான நாரதரை வலம் வந்து, உயர்ந்த யோகத்தைத் தாமே அடைந்த உண்மையை முனிவர்களில் முதன்மையான அவரிடம் {நாரதரிடம்} சொன்னார்.(7)
சுகர் {நாரதரிடம்}, "நான் (விடுதலையின் {முக்தியின்}) பாதையைக் காண்பதில் வென்றேன். நானே அதைக் கண்டுகொண்டேன். ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவரே, நீர் அருளப்பட்டிருப்பீராக. ஓ! பெருங்காந்தி கொண்டவரே, மிகவும் விரும்பத்தக்க கதியை உமது அருளால் நான் அடையப் போகிறேன்" என்றார்".(8)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தீவில் பிறந்த வியாசரின் மகனான சுகர், தெய்வீக முனிவரான நாரதரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு வணங்கி, மீண்டும் தம்மை யோகத்தில் நிலைநிறுத்தி வெளியெனும் பூதத்திற்குள் நுழைந்தார்.(9) அவர், கயிலாய மலைச் சாரலில் இருந்து உயர்ந்து வானத்திற்குள் எழுந்தார். ஆகாயத்தினூடாகப் பயணிக்கவல்லவரும், நிலைத்த தீர்மானத்தால் அருளப்பட்டவருமான சுகர், அப்போது தம்மைக் காற்றெனும் பூதமாகக் கண்டார்.(10) கருடனின் பிரகாசத்தைக் கொண்ட அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர் {சுகர்}, மனோ வேகத்தில், அல்லது எண்ணத்தின் வேகத்தில் வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்தபோது, அனைத்து உயிரினங்களும் தங்கள் கண்களை அவர் மேல் செலுத்தின.(11) நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியைக் கொண்ட சுகர், மூவுலகங்கள் முழுமையையும் ஒரே தன்மையைக் கொண்ட பிரம்மமாகக் கருதி, நெடுநீளம் கொண்ட அந்தப் பாதையில் சென்று கொண்டிருந்தார்.(12)
அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும், குவிந்த கவனத்தோடும், அமைதியான, அச்சமற்ற ஆன்மாவோடும் சென்று கொண்டிருந்த அவர் மீது தங்கள் கண்களைச் செலுத்தின.(13) அனைத்து உயிரினங்களும், விதிக்கு ஏற்புடைய வகையிலும், தங்கள் சக்திக்குத் தகுந்த வகையிலும் அவரை மதிப்புடன் வழிபட்டன.(14) அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வ குலங்கள் அனைத்தும் அவரைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தன. வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர்களும் கூட அதற்கிணையான வியப்பையே அடைந்தனர்.(15)
அவர்கள் {முனிவர்கள்}, "தவங்களால் வெற்றியை அடைந்த இவன் யார்? தன் உடலில் இருந்து {பார்வை} விலகியவனும், மேல் நோக்கிய பார்வையுடன் கூடியவனுமான இவன், நம் அனைவரையும் தன் பார்வையின் மூலம் இன்பத்தால் நிறையச் செய்கிறான்" என்றனர்.(16)
உயர்ந்த அற ஆன்மாவைக் கொண்டவரும், மூவுலகங்களிலும் முழுமையாகக் கொண்டாடப்படுபவருமான சுகர், தம் முகத்தைக் கிழக்கு நோக்கித் திருப்பிக் கொண்டு, சூரியனை நோக்கிச்செலுத்தப்பட்ட பார்வையுடன் அமைதியாக {மௌனமாகச்} சென்று கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சென்ற போது, அவர் அனைத்திலும் பரவும் ஒலியால் மொத்த ஆகாயத்தையும் நிறைப்பதாகத் தெரிந்தது.(17) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர் அவ்வழியில் வருவதைக் கண்டு பிரமிப்படைந்த அப்ஸரஸ் குலங்கள் அனைத்தும் வியப்பால் நிறைந்தன.(18) அவர்கள் ஒருவருக்கொருவர், "இவர் பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டவராகவும், ஆசைகள் அனைத்தில் இருந்தும் விடுதலையடைந்தவராகவும் இங்கே வருகிறார் என்பதில் ஐயமில்லை. இத்தகைய உயர்ந்த கதியை அடைந்திருக்கும் இந்தத் தேவன் யார்?" என்று கேட்டனர்.(19)
பிறகு அவர் {சுகர்} ஊர்வசியும், பூர்வசித்தியும் எப்போதும் வசிக்கும் மலய மலைகளுக்குச் சென்றார்.(20) அவர்கள் இருவரும், அந்தப் பெரும் மறுபிறப்பாள முனிவரின் சக்தியைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் {ஊர்வசி}, "வேதங்களை ஓதுவதையும், அவற்றைக் கற்பதையும் வழக்கமாகக் கொண்ட ஒரு மறுபிறப்பாள இளைஞனின் இந்தக் குவிந்த கவனம் ஆச்சரியம் நிறைந்ததாகும். விரைவில் இவன் நிலவைப் போல ஆகாயம் முழுவதும் செல்லப் போகிறான். இவன் தன் தந்தையிடம் கொண்ட கடமைநிறைந்த தொண்டுணர்வு மற்றும் பணிவிடையினால் இந்தச் சிறந்த புத்தியை அடைந்திருக்கிறான்.(21,22) இவன் கடுந்தவங்களைச் செய்த தன் தந்தையிடம் உறுதியான பற்றுடன் இருக்கிறான், மேலும் இவனது தந்தையால் மிகவும் விரும்பப்படுபவனாகவும் இருக்கிறான். ஐயோ, கவனமில்லாத இவனது தந்தையால், திரும்பிவராத பாதையில் ஏன் இவன் அனுப்பப்பட்டான்?" என்றனர் {என்றாள்}.(23)
ஊர்வசியின் இந்த வார்த்தைகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் கவனித்து, தம் கண்களை அனைத்துப் பக்கங்களிலும் செலுத்தி,(24) மீண்டும் ஆகாயம் முழுமையையும், மலைகள், நீர்நிலைகள், காடுகள், தடாகங்கள் மற்றும் ஆறுகள் அனைத்தையும் கொண்ட மொத்த உலகத்தையும் கண்டார்.(25) தேவர்கள் மற்றும் தேவிகள் அனைவரும், தீவில் பிறந்த முனிவரின் மகனை {வியாசரின் மகனை} மதிக்கும் வகையில் தங்கள் கரங்களைக் குவித்து, ஆச்சரியத்துடனும், மதிப்புடனும் அவனைக் கண்டனர்.(26) அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரான சுகர் அவர்கள் அனைவரிடமும் இந்த வார்த்தைகளைச் சொன்னார், "என் தந்தை {வியாசர்} என்னைப் பின்தொடர்ந்து வந்து, மீண்டும் மீண்டும் என் பெயரைச் சொல்லி அழைத்தால்,(27) நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்காக அவருக்குப் பதிலளியுங்கள். என்னிடம் அன்பு கொண்ட நீங்கள் அனைவரும் இந்த என் வேண்டுகோளை நிறைவேற்றுவீராக" என்றார் {சுகர்}.(28)
சுகரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திசைப்புள்ளிகள் அனைத்தும், காடுகள் அனைத்தும், கடல்கள் அனைத்தும், ஆறுகள் அனைத்தும், மலைகள் அனைத்தும், ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் அவருக்குப் பதிலளித்தன,(29) "ஓ! மறுபிறப்பாளரே, நாங்கள் உமது ஆணையை ஏற்கிறோம். நீர் சொன்னது போலவே ஆகட்டும். அந்த முனிவரால் {வியாசரால்} சொல்லப்படும் வார்த்தைகளுக்கு நாங்கள் இவ்வழியிலேயே பதிலளிக்கப் போகிறோம்" {என்றன}" என்றார் {பீஷ்மர்}.(30)
சாந்திபர்வம் பகுதி – 333ல் உள்ள சுலோகங்கள் : 30
ஆங்கிலத்தில் | In English |