Suka attained emancipation! | Shanti-Parva-Section-334 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 161)
பதிவின் சுருக்கம் : முக்திக்கான பாதையில் சுகர் கண்ட காட்சிகள்; சுகர் முக்தியடைந்தது; சுகரைப் பின்தொடர்ந்து சென்ற வியாசர், சுகருக்காக வருந்தி அழுதது; வியாசருக்கு வரமளித்த சிவன்; சுகரின் பிறப்பு மற்றும் வாழ்வைக் கேட்பதால் கிட்டும் பரமகதி ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "கடும் தவங்களைக் கொண்ட மறுபிறப்பாள முனிவரான சுகர், இவ்வாறு தம் வழியில் (அனைத்துப் பொருட்களிடமும்) பேசி, நான்கு வகைக் களங்கங்களை {தோஷங்களைக்}[1] கைவிட்டு, வெற்றியில் {யோக ஸித்தியில்} நிலைத்திருந்தார்.(1) எட்டுவகைத் தமஸ்களைக் கைவிட்டு, ஐந்து வகை ரஜஸ்களையும் விட்டுவிட்டார்[2]. பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர், பிறகு சத்வ குணத்தையும் கைவிட்டார். இவை யாவும் மிக ஆச்சரியமானவைகளாகத் தோன்றின.(2) பிறகு அவர் குணங்களற்றதும், ஒவ்வொரு குறியீட்டிலிருந்தும் விடுபட்டதுமான பிரம்மம் என்ற அந்த நித்திய நிலையிலேயே வசித்து, புகையற்ற நெருப்பைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(3)
[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸத்வ குணத்தாலுண்டானவைகளும், மோக்ஷத்திற்குத் தடையாயுள்ளவைகளுமான தர்மம், ஞானம், வைராக்யம், ஐஸ்வர்யம் என்பவை" என்றிருக்கிறது.[2] பிபேக்திப்ராயின் பதிப்பின் அடிக்குறிப்பில், "எட்டுக் குணங்கள்: விழிப்புணர்வு இல்லாமை, குழப்பம், மயக்கம், புத்தியின்மை, உறக்கம், கவனமின்மை, தாமதம் செய்தல், விளைவுகளைக் காணாதிருத்தல் ஆகும். உண்மையில் ரஜஸ் குணங்கள் ஒன்பதாகும். அவை: நம்பிக்கை, தயாளம், இன்பம், துணிவாண்மை, ஆசை, கோபம், செருக்கு, வன்மம் மற்றும் அவதூறு ஆகும்.
விண்கற்கள் விழத் தொடங்கின[3]. திசைப்புள்ளிகள் அனைத்தும் எரிவதாகத் தெரிந்தன. பூமி நடுங்கினாள். இந்தத் தோற்றப்பாடுகள் அனைத்தும் மிக ஆச்சரியமானவைகளாகத் தெரிந்தன.(4) மரங்கள் தங்கள் கிளைகளையும், மலைகள் தங்கள் சிகரங்களையும் உதிர்க்கத் தொடங்கின. (இடியின்) உரத்த ஒலியானது இமய மலைகளையே பிளப்பது போலக் கேட்டது.(5) சூரியன் அந்தக் கணத்தில் ஒளியற்றவனாகக் காணப்பட்டான். நெருப்பு ஒளியை வெளியிட மறுத்தது. தடாகங்கள், ஆறுகள் மற்றும் கடல்கள் அனைத்தும் கலக்கமடைந்தன.(6) வாசவன் {இந்திரன்}, சிறந்த சுவையும், மணமும் கொண்ட மழையைப் பொழிந்தான். தூய தென்றல், சிறந்த நறுமணங்களைச் சுமந்தபடி வீசத் தொடங்கியது.(7)
[3] பெரும் மஹான் பூமியில் இருந்து செல்வதால் உண்டாகும் தீய சகுனம்.
ஆகாயத்தினூடாகச் சுகர் சென்று கொண்டிருந்தபோது, இமயத்திற்குரிய ஒன்றும், மேருவுக்குரிய ஒன்றுமென அழகிய இரண்டு சிகரங்களைக் கண்டார். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடன் நெருங்கி இருந்தன. அதிலொன்று தங்கத்தாலானதால் மஞ்சள் நிறத்திலும், மற்றொன்று வெள்ளியாலானதால் வெள்ளை நிறத்திலும் இருந்தன.(8) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அவை ஒவ்வொன்றும் நூறு யோஜனைகள் உயரமும், அதே அளவு அகலமும் கொண்டவையாக இருந்தன. உண்மையில் சுகர் வடக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அந்த அழகிய சிகரங்கள் இரண்டையும் கண்டார்.(9) அவர், அச்சமற்ற இதயத்துடன் ஒன்றோடொன்று கலந்திருந்த அந்த இரு சிகரங்களையும் மோதிச் சென்றார். அந்தச் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த இரு சிகரங்களும் திடீரென இரண்டாகப் பிளந்தன.(10) ஓ! ஏகாதிபதி, அந்தக் காட்சியைக் காண மிக அற்புதமாக இருந்தது. அந்தச் சிகரங்கள், சுகர் செல்வதைத் தடுக்க இயலாதவையாக இருந்ததால் அவர் அவற்றைத் துளைத்துச் சென்றார். இதனால் சொர்க்கத்தில் வசித்தவர்களிடமிருந்து பேரொலி எழுந்தது.(11,12)
அந்த மலையில் வசித்து வந்த கந்தர்வர்கள் மற்றும் பிறர் அந்த மலை பிளக்கப்பட்டதையும், சுகர் அதைக் கடந்து சென்றதையும் ஆரவாரத்துடன் கண்டனர். உண்மையில், ஓ! பாரதா, அந்தக் கணத்தில் "நன்று, நன்று" என்ற வார்த்தைகள் எங்கும் கேட்டன.(13) கந்தர்வர்கள், முனிவர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்கள் கூட்டத்தினாலும், வித்யாதரர் குலங்கள் அனைத்தினாலும் அவர் துதிக்கப்பட்டார்.(14) ஓ! ஏகாதிபதி, ஊடுருவமுடியாத அந்த அரணை சுகர் இவ்வாறு துளைத்துச் சென்ற அக்கணத்தில், சொர்க்கத்திலிருந்து பொழியப்பட்ட தெய்வீக மலர்களால் ஆகாயம் நிறைந்திருந்தது.(15) அற ஆன்மா கொண்ட சுகர் அப்போது, மலர்ந்திருக்கும் சோலைகள் மற்றும் காடுகள் பலவற்றினால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பகுதியின் கீழே பேரழகுடன் ஓடிக் கொண்டிருக்கும் தெய்வீக ஓடையான மந்தாகினியை {தேவ கங்கையை} உயர்ந்த பகுதியில் {வானத்தில்} இருந்து கண்டார்.(16) அந்த நீரில் அழகிய அப்சரஸ்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆடையற்றிருந்த அந்த விண்ணுலகவாசிகள், உடலற்றவராக இருந்த சுகரைக் கண்டு வெட்கமேதும் அடையவில்லை.(17)
சுகர் பெரும்பயணம் மேற்கொண்டிருப்பதை அறிந்த அவரது தந்தை வியாசர், அன்பால் நிறைந்தவராக அதே விண்பாதையில் அவரை {சுகரைப்} பின்தொடர்ந்து சென்றார்.(18) அதேவேளையில் சுகர், காற்றுப் பகுதிக்கு {வளிமண்டலத்திற்கு}[4] மேலிருக்கும் ஆகாயப்பகுதியில் சென்று, தமது யோக ஆற்றலை வெளிப்படுத்தி, பிரம்மத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார் {பிரம்மத்தோடு கலந்தார்}.(19) கடுந்தவங்களைக் கொண்ட வியாசர், உயர்ந்த யோகத்தின் நுண்பாதையைப் பின்பற்றி, சுகர் முதலில் பயணம் தொடங்கிய இடத்தைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அடைந்தார்.(20) அதே வழியில் சென்ற வியாசர், எதன் ஊடாகச் சுகர் கடந்து சென்றாரோ, அந்த மலைச்சிகரம் பிளந்து கிடப்பதைக் கண்டார். தீவில் பிறந்த அந்தத் தவசியைச் சந்தித்த முனிவர்கள், அவரது மகனின் சாதனைகளை அவருக்குச் சொல்லத் தொடங்கினர்.(21) எனினும் வியாசர், தமது மகனின் பெயரைச் சொல்லி உரக்க அழைத்து, தாமுண்டாக்கிய ஒலியால் மூவுலகங்களையும் எதிரொலிக்கச் செய்து, அழுது புலம்பத் தொடங்கினார்.(22)
[4] "வளிமண்டலத்தின் உயரம் முடிவற்றதல்ல என்பதை முனிவர்கள் அறிந்திருந்தனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சுகரோ வாயுவைக் காட்டிலும் மேலான ஆகாயமனத்தைச் செய்து தம்முடைய பெருமையைக் காண்பித்துக் கொண்டு அப்பொழுது எல்லாமாகிவிட்டார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சுகர், காற்று பாயும் பகுதிக்கு மேலிருக்கும் வானத்திற்கு உயர்ந்தார். தன் சக்திகளை வெளிப்படுத்திய அவர், தம்மை அனைத்து உயிரினங்களோடு அடையாளப்படுத்திக் கொண்டார் {கலந்தார்}" என்றிருக்கிறது.
அதே வேளையில், அனைத்துப் பொருட்களுக்குள்ளும் நுழைந்து, அவற்றின் ஆன்மாவாக ஆனவரும், எங்கும் நிறைந்த நிலையை அடைந்தவரும், அற ஆன்மா கொண்டவருமான {தர்மாத்மாவுமான} சுகர், எதிரொலியின் வடிவில் "போ" {Bho} என்ற ஓரசையைச் சொல்லித் தமது தந்தைக்குப் பதிலளித்தார்.(23) இதனால், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டமும் "போ" என்ற ஓரசையைச் சொல்லிச் சுகரின் பதிலை எதிரொலித்தது.(24) அந்நேரத்தில் இருந்து, மலைக்குகைகளிலோ, மலைச்சாரல்களிலோ ஒலிகள் ஒலிக்கப்படும்போது அவை சுகரின் பதிலைச் சொல்வது போல இன்னும் {இப்போது வரை} அதை (போ என்ற ஓரசையை} எதிரொலிக்கின்றன.(25) சுகர், இவ்வழியிலேயே ஒலி முதலிய குணங்கள் அனைத்தையும் கைவிட்டு, மறையும் வகையில் தமது யோக ஆற்றலைக் காட்டி உயர்ந்த நிலையை அடைந்தார்.(26)
அளவிலா சக்தி கொண்ட தமது மகனின் மகிமையையும், பலத்தையும் கண்ட வியாசர், அந்த மலைச்சாரலில் அமர்ந்து, துயரத்துடன் தமது மகனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(27) தெய்வீக ஓடையான மந்தாகினியில் {தேவ கங்கையின்} கரைகளில் விளையாடிக் கொண்டிருந்த அப்சரஸ்கள் அனைவரும், அந்த முனிவர் அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டு, வெட்கத்தால் இதயம் இழந்தவர்களாகக் கலக்கமடைந்தனர்.(28) அம்முனிவரைக் கண்டதும், அவர்களில் சிலர் தங்கள் நிர்வாணத்தை மறைக்க ஓடைக்குள் குதித்தனர், சிலர் புதர்களில் நுழைந்தனர், சிலர் விரைவாகத் தங்கள் ஆடைகளை எடுத்தனர்.(29) (அவர்களில் எவரும் அவரது மகனைக் கண்டு கலக்கக் குறியீடுகளைக் காட்டவில்லை). இந்த அசைவுகளைக் கண்ட முனிவர் {வியாசர்}, தமது மகன் {சுகர்} பற்றுகள் அனைத்தில் இருந்து விடுதலை அடைந்ததையும், தாம் அவற்றில் இருந்து விடுபடாததையும் புரிந்து கொண்டார். இதனால் அவர் மகிழ்ச்சி மற்றும் வெட்கம் ஆகிய இரண்டாலும் நிறைந்தார்.(30)
வியாசர் அங்கே அமர்ந்திருந்தபோது, மங்கல தேவனும், பிநாகைபாணியும் {பிநாகை என்ற வில்லைத் தரித்தவனும்}, தேவர்கள் மற்றும் கந்தர்வர்கள் பலரால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனும், பெரும் முனிவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்டவனுமான சிவன் அங்கே வந்தான்.(31) தமது மகனைக் குறித்த கவலையில் எரிந்து கொண்டிருந்தவரும், தீவில் பிறந்தவருமான {துவைபாயனருமான} அம்முனிவருக்கு ஆறுதலளிக்கும் வகையில் மஹாதேவன் {சிவன்},(32) "நெருப்பு {அக்னி}, பூமி {பிருத்வி}, நீர் {அப்பு}, காற்று {வாயு}, வெளி {ஆகாயம்} ஆகியவற்றின் சக்தியைக் கொண்ட மகனை முன்பு நீர் வேண்டினீர்.(33) உமது தவங்களால் அதே போன்றவொரு மகன் உண்டானான். என் அருளால் அவன் தூயனாகவும், பிரம்ம சக்தியால் நிறைந்தவனாகவும் இருந்தான்.(34) புலன்களை முழுமையாக அடக்காதவர்களாலோ, தேவர்களில் எவராலோ கூட வெல்ல முடியாத உயர்ந்த கதியை அவன் அடைந்திருக்கிறான். ஓ! மறுபிறப்பாள முனிவரே, அந்த மகனுக்கான ஏன் நீர் வருந்துகிறீர்? எவ்வளவு காலம் மலைகள் இருக்குமோ, எவ்வளவு காலம் பெருங்கடல் இருக்குமோ, அவ்வளவு காலம் உமது மகனின் புகழ் மங்காதிருக்கும்.(36) ஓ! பெரும் முனிவரே, என் அருளால், உமது மகனுக்கு ஒப்பான ஒரு நிழல்வடிவம், உம்மைவிட்டு ஒருக்கணமும் அகலாமல், உமதருகிலேயே இருப்பதை நீர் இவ்வுலகில் காண்பீர்" என்றான்.(37)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, சிறப்புமிக்க ருத்திரனாலேயே இவ்வாறு ஆதரிக்கப்பட்ட அம்முனிவர், தம் அருகிலேயே தமது மகனின் நிழலைக் கண்டார். இதனால் மகிழ்ச்சியில் நிறைந்த அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றார்.(38) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சுகரின் பிறப்பு மற்றும் வாழ்வு குறித்து நீ கேட்ட அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(39) தெய்வீக முனிவரான நாரதரும், பெரும் யோகியான வியாசரும், பழங்காலத்தில் இக்காரியம் குறித்து உரையாடல்களில் கேட்கப்பட்ட போது, இவையனைத்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(40) எந்த மனிதன் அமைதிநிலைக்குத் தன்னை அர்ப்பணித்து, விடுதலை {முக்தி} குறித்த நேரடி தொடர்புடைய இந்தப் புனித வரலாற்றைக் கேட்பானோ, அவன் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவான்" என்றார் {பீஷ்மர்}.(41)
சாந்திபர்வம் பகுதி – 334ல் உள்ள சுலோகங்கள் : 41
ஆங்கிலத்தில் | In English |