Nara and Narayana! | Shanti-Parva-Section-335 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 162)
பதிவின் சுருக்கம் : நாரத முனி, நாராயண முனி ஆகியோருக்கிடையிலான உரையாடல்; நரனும் நாராயணனும் செய்த தினசரி சடங்குகள்; நரநாராயணர்களால் துதிக்கப்பட்ட தேவன் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு மனிதன், இல்லறவாசியாகவோ {கிருஹஸ்தனாகவோ}, பிரம்மச்சாரியாகவோ, காட்டுத்துறவியாகவோ {வானப்பிரஸ்தனாகவோ}, சந்நியாசியாகவோ இருந்து வெற்றியடைய விரும்பினால், அவன் எந்தத் தேவனைத் துதிக்க {ஆராதிக்க} வேண்டும்?(1) எங்கிருந்து அவன் சொர்க்கத்தையும், உயர்ந்த நன்மையையும் (விடுதலையையும் {முக்தியையும்}) நிச்சயமாக அடையலாம். எந்த விதிமுறைகளின்படி அவன் தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் ஹோமத்தைச் செய்ய வேண்டும்?(2) ஒருவன் விடுதலை {முக்தியை} அடையும்போது எந்தக் கதியை அடைகிறான்? விடுதலையின் சாரம் என்ன? சொர்க்கத்தை அடைந்த பிறகு, அங்கிருந்து வீழாதிருக்க ஒருவன் என்ன செய்ய வேண்டும்?(3) தேவர்களின் தேவன் யார்? பித்ருக்களின் பித்ரு யார்? தேவர்களின் தேவருக்கும், பித்ருக்களின் பித்ருவுக்கும் மேலானவர் யார்? ஓ! பாட்டா இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்றான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! கேள்வி கேட்கும் கலையை நன்கறிந்தவனே, ஓ! பாவமற்றவனே, நீ கேட்ட இந்தக் கேள்வி ஆழ்ந்த புதிரைக்கொண்டதாகும். ஒருவன் நூறு ஆண்டுகள் முயன்றாலும், பொருள்முறைப்படி விவாதிக்கும் அறிவியலின் {தர்க்க சாஸ்திரத்தின்} துணை கொண்டு இதற்குப் பதிலளிக்க முடியாது.(5) ஓ! மன்னா, நாராயணனின் அருளில்லாமலோ, உயர்ந்த ஞானத்தை அடையாமலோ, இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது. இக்காரியம் ஆழ்ந்த புதிரோடு தொடர்புடையதென்றாலும், ஓ! பகைவர்களைக் கொல்பவனே, நான் அஃதை உனக்கு விளக்குகிறேன்[1].(6)
[1] "நம்பிக்கையில்லாமல் இதைப்புரிந்து கொள்ள முடியாது எனப் பீஷ்மர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இது தொடர்பாக, நாரதருக்கும் நாராயண முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லும் பழைய வரலாறு குறிப்பிடப்படுகிறது.(7) ஓ!ஏகாதிபதி, கிருத யுகத்தில் தான்தோன்றியான {சுயம்புவான} மனுவின் காலகட்டத்தில் {மன்வந்தரத்தில்}, அண்டத்தின் ஆன்மாவான நித்திமான நாராயணன், தர்மனுக்கு மகனாக நரன், நாராயணன், ஹரி மற்றும் சுயம்புவான கிருஷ்ணன் என்ற நால்வராகப் பிறந்தான்[2].(8,9) அவர்கள் அனைவரிலும், நாராயணனும், நரனும் பதரி என்ற பெயரில் அறியப்படும் இமய ஆசிரமத்திற்குத் தங்கத் தேர்களில் சென்று கடுந்தவங்களைச் செய்தனர்.(10) அந்தத் தேர்கள் ஒவ்வொன்றிலும் எட்டுச் சக்கரங்கள் இருந்தன. ஐம்பூதங்களால் செய்யப்பட்ட அந்தத் தேர்கள் மிகவும் அழகானவையாக இருந்தன.
[2] "ஸ்வயம்புவம் Swayambhuvah என்று கிருஷ்ணனைக் குறிப்பதற்குக் குறிப்பிட்ட பொருள் ஏதும் இல்லை. தகுதிக்காக அன்றி வேறெதற்கும் சொல்லப்படாத உரிச்சொல்லாக {பெயரடையாக} இது பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தர்மனின் மகன்களாகப் பிறந்த அந்த உண்மையான லோகபாலர்கள், கடுந்தவத்தின் விளைவால் மிகவும் மெலிந்தவர்களானார்கள். உண்மையில், அந்தத் தவங்களுக்காகவும், அவர்களின் சக்திக்காகவும், தேவர்களாலேயே அவர்களைப் பார்க்க இயலவில்லை.(11) அவர்கள் எந்தத் தேவனிடம் அன்பு கொள்கிறார்களோ, அந்தத் தேவனால் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும்.(12)
நாரதர், அவர்களிடம் அர்ப்பணிப்பாலும், அவர்களைக் காணும் நீண்ட ஆவலாலும் மேரு மலைகளின் உயர்ந்த சிகரத்தில் இருந்து கந்தமாதனத்திற்குக் கீழே இறங்கிவந்து உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தார்.(13) பெரும் வேகம் கொண்ட அவர் இறுதியாகப் பதரி ஆசிரமம் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்தார். ஆவலால் உந்தப்பட்ட அவர், நரனும் நாராயணனும் தங்கள் தினசரி சடங்குகளைச் செய்து கொண்டிருந்த வேளையில் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தார்.(14)
அவர் {நாரதர்} தமக்குள்ளேயே, "தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள மற்றும் பெரும்பாம்புகள் உள்ளிட்ட உலகங்கள் அனைத்தும் எவரில் நிறுவப்பட்டுள்ளனவோ, உண்மையில் இஃது அவரது ஆசிரமமே.(15) முன்பு இந்தப் பெரும் பொருளுக்கு ஒரே வடிவமே இருந்தது. அந்த வடிவமானது, அந்தத் தேவனால் வளர்க்கப்பட்ட தர்மனின் குலம் பெருகுவதற்காக நான்கு வடிவங்களில் பிறவியை அடைந்தது.(16) நரன், நாராயணன், கிருஷ்ணன், ஹரி என்ற நான்கு பெருந்தேவர்களால் தர்மன் இவ்வாறு கௌரவிக்கப்பட்டது அற்புதம் நிறைந்ததாகும்.(17) இந்த இடத்திலேயே முன்பு கிருஷ்ணனும், ஹரியும் வசித்தனர். எனினும் இப்போது நரன் மற்றும் நாராயணன் ஆகிய இந்த இருவர் தங்கள் தகுதியை {புண்ணியத்தைப்} பெருக்கிக் கொள்ளும் நோக்கத்தில் இங்கே வசித்துத் தவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.(18) இந்த இருவரும் அண்டத்தின் பெரும்புகலிடமாக இருக்கிறார்கள். இந்த இருவரும் செய்யும் தினசரி சடங்குகளின் இயல்புகள் என்ன? அவர்களே அனைத்து உயிரினங்களின் தந்தைமாரும், அனைத்துப் பொருட்களின் சிறப்புமிக்கத் தேவர்களும் ஆவர். பெரும் நுண்ணறிவைக் கொண்ட இந்த இருவரும் வழிபடும் அந்தத் தேவன் யார்? அனைத்துப் பொருட்களின் பித்ருக்களான இவ்விருவரும் துதிக்கும் அந்தப் பித்ருக்கள் யார்?" என்று கேட்டுக் கொண்டார்.(19)
நாராயணனிடம்
பக்தியில் நிறைந்திருந்த நாரதர், தமது மனத்தில் இதை நினைத்துத் திடீரென அந்தத் தேவர்கள் இருவரின் முன்பும் தோன்றினார்.(20) அந்தத் தேவர்கள் இருவரும் தங்கள் தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கான துதிகளை நிறைவு செய்த பிறகு, தங்கள் ஆசிரமத்திற்கு வந்திருந்த அந்தத் தெய்வீக முனிவரைக் கண்டனர். பின்னவர் {நாரதர்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள நித்திய கடமைகளின்படி கௌரவிக்கப்பட்டார்.(21) சிறப்புமிக்கவரான முனிவர் நாரதர், உண்மை தேவர்களான அவர்கள் இருவரும் வேறு தேவர்களையும், பித்ருக்களையும் வழிபடும் இயல்புக்குமீறிய நடத்தைக் கண்டு, தாம் பெற்ற கௌரவங்களால் நன்கு நிறைவடைந்து அங்கே அமர்ந்தார்.(22) உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் கூடிய அவர், மஹாதேவனை வணங்கி, தமது கண்களை நாராயணன் மீது செலுத்திக் கொண்டே இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(23)
பக்தியில் நிறைந்திருந்த நாரதர், தமது மனத்தில் இதை நினைத்துத் திடீரென அந்தத் தேவர்கள் இருவரின் முன்பும் தோன்றினார்.(20) அந்தத் தேவர்கள் இருவரும் தங்கள் தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கான துதிகளை நிறைவு செய்த பிறகு, தங்கள் ஆசிரமத்திற்கு வந்திருந்த அந்தத் தெய்வீக முனிவரைக் கண்டனர். பின்னவர் {நாரதர்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள நித்திய கடமைகளின்படி கௌரவிக்கப்பட்டார்.(21) சிறப்புமிக்கவரான முனிவர் நாரதர், உண்மை தேவர்களான அவர்கள் இருவரும் வேறு தேவர்களையும், பித்ருக்களையும் வழிபடும் இயல்புக்குமீறிய நடத்தைக் கண்டு, தாம் பெற்ற கௌரவங்களால் நன்கு நிறைவடைந்து அங்கே அமர்ந்தார்.(22) உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் கூடிய அவர், மஹாதேவனை வணங்கி, தமது கண்களை நாராயணன் மீது செலுத்திக் கொண்டே இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(23)
நாரதர், "வேதங்களிலும், புராணங்களிலும், அங்கங்களிலும், உப அங்கங்களிலும் நீயே மதிப்புடன் பாடப்படுகிறாய். நீ பிறப்பற்றவனாகவும், நித்தியமானவனாகவும் இருக்கிறாய். படைப்பாளன் நீயே. அண்டத்தின் அன்னை நீயே. அழிவின்மையின் உடல்வடிவம் நீயே, பொருட்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே. கடந்த காலமும், எதிர்காலமும், உண்மையில், மொத்த அண்டமும் உன்னிலேயே நிறுவப்பட்டுள்ளன.(24) ஓ!தலைவா, இல்லறத்தை முதலாகக் கொண்ட நான்கு வாழ்வுமுறைகளும் {ஆசிரமங்களும்}, பல்வேறு வடிவங்களிலான உன்னையே இடையறாமல் துதிக்கின்றன.(25) அண்டத்தின் தந்தையாகவும், தாயாகவும், ஆசானாகவும் நீயே இருக்கிறாய். இன்று நீ துதிக்கும் அந்தத் தேவன் அல்லது பித்ரு யார் என்பதை நாங்கள் அறியவில்லை" என்றார்.(26)
அதற்கு அந்தப் புனிதமானவன் {நாராயணன்}, "இக் காரியம் குறித்து ஒருவனால் எதுவும் சொல்லப்படக்கூடாது. இஃது ஒரு புராதனப் புதிராகும். நீர் என்னிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு {பக்தி} மிகப் பெரியதாகும். எனவே, ஓ!மறுபிறப்பாளரே, வாய்மைக்கு ஏற்புடைய வகையில் நான் உமக்குச் சொல்லப் போகிறேன்.(27) நுட்பமானதும், புலப்படாததும், வெளிப்படாததும், அசைவற்றதும், நீடித்து நிலைத்திருப்பதும், புலன்கள் மற்றும் புலன்நுகர் பொருட்களுடனான எந்தத் தொடர்பும் இல்லாததும்,(28) (ஐந்து) பூதங்களிடம் இருந்து தொடர்பறுந்ததும் எதுவோ, அதுவே இருப்பிலுள்ள உயிரினங்கள் அனைத்தினுள்ளும் வசிக்கும் ஆத்மாவாக அழைக்கப்படுகிறது. அது க்ஷேத்ரஜ்ஞன் என்ற பெயரில் அறியப்படுகிறது. சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய முக்குணங்களையும் கடந்திருக்கும் அதுவே புருஷன் என்று சாத்திரங்களில் கருதப்படுகிறது.(29) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அவனிலிருந்தே சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்ட புலப்படாதவள் தோன்றினாள். உண்மையில் புலப்படாதவளாக இருப்பினும் அவள் அழிவில்லாத பிரகிருதி என்று அழைக்கப்பட்டு, புலப்படும் வடிவங்கள் அனைத்திலும் வசித்து வருகிறாள்.(30)
நாங்கள் இருவரும் எங்கிருந்து உதித்தோமோ அந்தத் தோற்றுவாய் அவளே {பிரகிருதியே} என்பதை அறிவீராக. இருப்பில் உள்ள மற்றும் இருப்பில் இல்லாத பொருட்கள் அனைத்தினாலும் உண்டானதும், நீக்கமற நிறைந்திருப்பதுமான ஆன்மாவானவன் எங்களால் துதிக்கப்படுகிறான். தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் நாங்கள் செய்யும் சடங்குகள் அனைத்திலும் அவனையே நாங்கள் வழிபடுகிறோம்.(31) ஓ! மறுபிறப்பாளரே, அவனைத் தவிர வேறு உயர்ந்த தேவர் எவரும், அல்லது பித்ரு எவரும் இல்லை. அவனே எங்கள் ஆன்மா என்பது அறியப்பட வேண்டும். அவனையே நாங்கள் வழிபடுகிறோம்.(32) ஓ! மறுபிறப்பாளரே, மனிதர்களால் பின்பற்றப்படும் இந்தக் கடமையின் நடைமுறைகள் அவனிடம் இருந்த வெளிவந்தன. தேவர்களுக்கும், பித்ருக்களுக்குமான சடங்குகள் அனைத்தும் முறையாகச் செய்யப்பட வேண்டும் என்பதை அவனே விதித்திருக்கிறான்.(33) பிரஜாபதிகள் என்றழைக்கப்படும் பிரம்மன், ஸ்தாணு, மனு, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது,(34) வசிஷ்டர், பரமேஷ்டி, விவஸ்வத், சோமன் கர்த்தமர் என்றழைக்கப்படுபவர், குரோதர், அவாக், கிருதர்(35) ஆகிய இந்த இருபத்தோரு பேரும் முதலில் பிறந்தவர்களாவர். அவர்கள் அனைவரும் பரம்பொருளின் நித்திய விதிகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தனர்.(36)
தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிப்பதற்காக விதிக்கப்பட்ட சடங்குகள் அனைத்தையும் விரிவாக நோற்ற அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள், தாங்கள் வேண்டிய பொருட்கள் அனைத்தையும் அடைந்தனர்.(37) உடலற்ற தேவலோகவாசிகளே அந்த உயர்ந்த தேவனை வணங்கி, அவனது அருளின் மூலம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கனிகளையும், கதிகளையும் அடைகின்றனர்.(38) (அறிவுப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, உயிர் மூச்சுகள் ஐந்து, மனம் மற்றும் புத்தி அடங்கிய) பதினேழு குணங்களில் இருந்து விடுபட்டவர்களும், செயல்கள் அனைத்தையும் கைவிட்டவர்களும், திரள் உடலாக அமையும் பதினைந்து கலைகளுமற்றவர்களும் முக்தர்கள் என்று சொல்லப்படுவதே சாத்திரங்களின் இறுதித் தீர்மானமாகும்[3].(39) முக்தர்கள் தங்கள் இறுதி கதியாக எதை அடைகிறார்களோ அதுவே க்ஷேத்ரஜ்ஞன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. (சாத்திரங்களின்படி) அவன் {க்ஷேத்ரஜ்ஞன்} குணங்கள் அனைத்தையும் கொண்டவனாகவும், அவை அனைத்தும் அற்றவனாகவும் கருதப்படுகிறான்.(40)
[3] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பின்படி" பதினைந்து கலைகள்: பிராணன், ஸ்ரத்தை, ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி, மனம், அன்னம், வீர்யம், தவம், மந்திரம், கர்மம், லோகங்கள் மற்றும் நாமம். பதினேழு குணங்கள் பிராணன் ஐந்து, இந்திரியம் பத்து, மனம், புத்தி".
அவனை {க்ஷேத்ரஜ்ஞனை} ஞானத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நாங்கள் இருவரும் அவனிலிருந்தே உதித்தோம். இவ்வழியில் அவனை அறிந்திருக்கும் நாங்கள் அனைத்துப் பொருட்களின் நித்திய ஆன்மாவான அவனைத் துதிக்கிறோம்.(41) வேதங்களும், வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} அனைத்தும் விரிந்த கருத்துகளின்படி அறியப்பட்டாலும் அவனை அனைவரும் பக்தியுடன் வழிபடுகின்றனர். அவனே விரைந்து அருள் வழங்கி அவர்களுக்கு இன்பம் நிறைந்த உயர்ந்த கதிகளை அளிக்கிறான்.(42) இவ்வுலகில் அவனால் நிறைந்தவர்கள், அவனிடம் முற்றான முழுமையான பக்தியைக் கொண்டு மிக உயர்ந்த கதிகளை அடைகின்றனர். எனெனில், அவர்கள் அவனில் நுழைந்து, அவனது சுயத்திலேயே கலக்கிறார்கள்.(43) ஓ! நாரதரே, நீர் என்னிடம் கொண்ட பக்தியாலும், நான் உம்மிடம் கொண்ட அன்பினாலும் அசைக்கப்பட்டு உயர்ந்த புதிரை உமக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், நீர் என்னிடம் கொள்ளும் பக்தியின் விளைவாலேயே எனது உரையை உம்மால் கேட்க முடிந்தது" என்றான் {நாராயணன்}.(44)
சாந்திபர்வம் பகுதி – 335ல் உள்ள சுலோகங்கள் : 44
ஆங்கிலத்தில் | In English |