The first treatise! | Shanti-Parva-Section-336 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 163)
பதிவின் சுருக்கம் : ஸ்வேதத்வீபத்திற்குச் சென்ற நாரதர்; பாஞ்சராத்ர சாத்திரத்தின் வரலாறு; உலகின் முதல் நீதி சாத்திரத்தைத் தொகுத்த சப்தரிஷிகள்; நீதி சாத்திரத்தை அடைந்த மன்னன் உபரிசரன்; நாராயணன் சொன்ன வார்த்தைகள்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "முதன்மையான நாராயணனால் இந்த வார்த்தைகளால் சொல்லப்பட்டவரும், மனிதர்களில் முதன்மையானவருமான நாரதர், உலக நன்மைக்காக நாராயணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)
நாரதர், "ஓ! சுயம்புவே, தர்மனின் இல்லத்தில் நான்கு வடிவங்களில் நீர் பிறப்பெடுத்த நோக்கம் நிறைவேறட்டும். நான் இப்போது உன் உண்மை இயல்பைக் காண்பதற்காக (வெண் தீவுக்கு {ஸ்வதேத்வீபத்திற்குச்}) செல்லப் போகிறேன்.(2) நான் எப்போதும் பெரியோரை வழிபடுகிறேன். நான் ஒருபோதும் பிறரின் இரகசியங்களை வெளியிட்டதில்லை. ஓ! அண்டத்தின் தலைவா, நான் வேதங்களைக் கவனமாகக் கற்றிருக்கிறேன். நான் கடுந்தவங்களைச் செய்திருக்கிறேன். நான் ஒருபோதும் பொய்மை பேசியதில்லை.(3) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடியே நான் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய நான்கைப் பாதுகாத்திருக்கிறேன்[1]. நான் நண்பர்களிடமும் பகைவர்களிடமும் சமமாகவே நடந்து கொள்கிறேன். தேவர்களின் முதல்வனான பரமாத்மாவிடம் முற்று முழுதான அர்ப்பணிப்பை {பக்தியைக்} கொண்ட நான் அவனை இடையறாமல் துதித்து வருகிறேன்.(4) சிறப்புத்தகுதிகளான இந்தச் செயல்களின் மூலம் என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்ட பிறகு, எல்லையில்லாதவனான அண்டத்தின் தலைவனுடைய காட்சியைப் பெறுவதில் நான் ஏன் வெல்ல மாட்டேன்?" என்றார் {நாரதர்}.
[1] "கைகள், கால்கள், வயிறு மற்றும் இன்ப உறுப்பு {பிறப்புறுப்பு} ஆகியனவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பரமேஷ்டியின் மகனான அவர் {நாரதர்} சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், சாத்திரங்களைப் பாதுகாப்பவனுமான நாராயணன், "ஓ! நாரதரே, செல்வீராக" என்று சொன்னான்.(5) உயர்ந்த யோக பலத்தைக் கொண்ட நாரதர் திடீரென ஆகாயத்தில் எழுந்து, மேரு மலைகளின் சிகரத்தை அடைந்தார். அந்தச் சிகரத்தில் ஒரு தனிமையான இடத்தை அடைந்த அந்தப் பெருந்தவசி சிறிது நேரம் ஓய்ந்திருந்தார்.(7) பிறகு அவர் தமது கண்களை வடமேற்குத் திசையில் செலுத்தி மிக அற்புதமான காட்சியை ஒன்றைக் கண்டார். வடக்கில் உள்ள பாற்கடலில் வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்ற பெயரைக் கொண்ட ஒரு பெரிய தீவு இருக்கிறது.(8) மேரு மலைகளில் இருந்து அதன் தொலைவு முப்பத்திரண்டாயிரம் யோஜனைக்கும் மேல் எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள். அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்குப் புலன்கள் ஏதும் கிடையாது. அவர்கள் எந்த உணவும் உட்கொள்ளாமலேயே வாழ்கிறார்கள். அவர்களது கண்கள் இமைப்பதில்லை. அவர்கள் சிறந்த மணங்களை வெளியிடுகிறார்கள்.(9)
அவர்களது நிறம் வெண்மையானதாகும். அவர்கள் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தவர்களாக இருந்தனர். அவர்களது எலும்புகளும், உடல்களும் வஜ்ரத்தைப் போன்று கடினமானதாக இருந்தன. அவர்கள் மான அவமானங்களை ஒரே ஒளியில் கருதினர். அவர்கள் அனைவரும் தேவர்களைப் போலத் தெரிந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் மங்கலக் குறிகளையும், பெரும் பலத்தையும் கொண்டிருந்தனர்.(10) அவர்களது தலைகள் குடைகளைப் போல இருந்தன. அவர்களது குரல்கள் மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்டவர்களாவர். அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு முஷ்கங்களைக் கொண்டிருந்தனர்[2]. அவர்களது பாதங்கள் நூறு கோடுகளால் குறிக்கப்பட்டிருந்தன. அவர்கள் அனைவரும் அறுபது பற்களையும், எட்டு சிறு பற்களையும் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பல நாவுகள் இருந்தன. அந்த நாவுகளைக் கொண்டு அனைத்துத் திசைகளையும் நோக்கும் சூரியனையே தீண்டுவதைப் போலத் தெரிந்தது.(11) உண்மையில் அவர்கள், மொத்த அண்டமும், வேதங்களும், கடமைகள், அமைதியான குணம் கொண்ட முனிவர்களும் எதனில் இருந்து எழுந்தார்களோ அந்தப் பெருந்தேவனையே விழுங்கிவிட வல்லவர்களைப் போலத் தெரிந்தனர்" என்றார் {பீஷ்மர்}.(12)
[2] முஷ்கம் என்ற சொல் சாதாரணமாக விதைப்பை என்ற பொருளைத் தரும். ஆனால் உரையாசிரியர் நீலகண்டர் தோள்மூட்டு எனக் கொள்கிறார். அஃதாவது அவர், அந்தத் தீவின் மக்கள் ஒவ்வொருவரும் நான்கு கரங்களைக் கொண்டிருந்ததாகக் கருதுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, அவர்களுக்குப் புலன்கள் ஏதும் கிடையாது, அவர்கள் தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள எதையும் உண்பதில்லை, அவர்களது கண்கள் இமைப்பதில்லை; அவர்கள் எப்போதும் சிறந்த மணத்தைப் பரப்புகிறார்கள் என்று சொன்னீர். நான் கேட்கிறேன், அவர்கள் எவ்வாறு பிறந்தார்கள்? அவர்கள் அடையும் பரகதி எது?(13) ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, விடுதலை {முக்தி} அடையும் மனிதர்களின் அடையாளங்களும், வெண்தீவுவாசிகளைப் போன்றதாகுமா? என் ஐயங்களை விலக்குவீராக. {கேட்பதற்கு} நான் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். வரலாறுகள் மற்றும் உரையாடல்களின் பெருங்கொள்ளிடமாக நீர் இருக்கிறீர். எங்களைப் பொறுத்தவரையில், ஞானம் மற்றும் அறிவுரைகளுக்கு உம்மையே நாங்கள் முற்றிலும் சார்ந்திருக்கிறோம்" என்றான்.(15)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி, என் தந்தையிடம் இருந்து நான் கேட்ட இந்தக் கதை மிகப் பெரியதாகும். அதை நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். உண்மையில், இது கதைகள் அனைத்தின் சாரமாகக் கருதப்படுகிறது.(16) ஒரு காலத்தில் உபரிசரன் என்ற பெயரில் பூமியில் ஒரு மன்னன் இருந்தான். அவன் தேவர்களின் தலைவனான இந்திரனுடைய நண்பனாக அறியப்பட்டார். அவன் ஹரி என்ற பெயரில் அழைக்கப்படும் நாராயணனிடம் அர்ப்பணிப்புடன் இருந்தான் {பக்தி கொண்டிருந்தான்}.(17) அவன் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகள் {தர்மங்கள்} யாவையும் நோற்பவனாக இருந்தான். எப்போதும் தன் தந்தையிடம் அர்ப்பணிப்புடன் இருந்த அவன், எப்போதும் விழிப்புணர்வு நிறைந்தவனாகவும், செயலுக்கு ஆயத்தமானவனாகவும் இருந்தான். அவன் நாராயணனிடம் இருந்து பெற்ற வரத்தின் விளைவால் உலகின் அரசுரிமையை வென்றான்.(18) பழங்காலத்தில் சூரியனால் அறிவிக்கப்பட்ட சாத்வத சடங்கை {பாஞ்சராத்ரவிதியைப்}[3] பின்பற்றிய மன்னன் உபரிசரன் அந்தத் தேவர்களின் தேவனை (நாராயணனை) வழிபடுவதை வழக்கமாகக் கொண்டு, தன் வழிபாடு நிறைவடைந்ததும் அண்டத்தின் பெரும்பாட்டன்களைத் துதித்துக் கொண்டிருந்தான்.(19) பெரும்பாட்டன்களை (பித்ருக்களை) வழிபட்ட பிறகு அவன் பிராமணர்களை வழிபட்டான். பிறகு அவன் தன்னைச் சார்ந்திருந்தவர்களுக்குக் காணிக்கைகளைப் பகிர்ந்தளித்தான். அவர்களுக்குத் தொண்டாற்றிய பிறகு எஞ்சியதிலேயே மன்னன் தன் பசியைத் தணித்துக் கொண்டான். வாய்மையில் அர்ப்பணிப்புள்ள அந்த ஏகாதிபதி, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்த்து வந்தான்.(20)
[3] "சாத்வத சடங்கு என்பது பாஞ்சராத்ர சடங்கு என்ற பொருளைத் தரும் என உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாத தேவர்களின் தேவனும், அண்டத்தின் படைப்பாளனும், எவ்வித சிதைவும் இல்லாதவனுமான ஜனார்த்தனனிடம் மொத்த ஆன்மாவுடன் கூடிய அர்ப்பணிப்புடன் அவன் இருந்தான்.(21) பகைவர்களைக் கொல்பவனான அவன் நாராயணனிடம் கொண்ட அர்ப்பணிப்பை {பக்தியைக்} கண்ட தேவர்களின் தலைவன், தன் இருக்கையையும், படுக்கையையும் அவனுடன் பகிர்ந்துகொண்டான்.(22) அவனது நாடு, செல்வம், மனைவிகள், விலங்குகள் அனைத்தும் நாராயணனிடம் இருந்து பெறப்பட்டதாகவே அவனால் கருதப்பட்டன. எனவே அவன் தன் உடைமைகள் அனைத்தையும் அந்தப் பெருந்தேவனுக்கே காணிக்கையாக்கினான்.(23) சாத்வதச் சடங்கைப் பின்பற்றிய மன்னன் உபரிசரன், குவிந்த ஆன்மாவுடன் கட்டாயமற்ற மற்றும் கட்டாயமான தன் வேள்விச் செயல்கள் மற்றும் நியமங்கள் அனைத்தையும் {காம்யகங்களையும், நைமித்திகங்களையும்} செய்து வந்தான்.(24) அந்தச் சிறப்புமிக்க மன்னனின் அரண்மனையில், பாஞ்சராத்ர சடங்கை நன்கறிந்த முதன்மையான பிராமணர்கள் பலர், தேவன் நாராயணனுக்குப் படைக்கப்படும் உணவை அனைவருக்கும் முன்பு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.(25)
பகைவர்களைக் கொல்பவனான அவன் தன் நாட்டைத் தொடர்ந்து அறம் சார்ந்து ஆண்டு வந்த வரை, அவனது உதடுகளில் இருந்து எந்தப் பொய்மையும் நழுவி வந்ததில்லை, எந்தத் தீமையும் அவனது மனத்துக்குள் நுழைந்ததில்லை.(26) அவன் தன் அங்கங்களைக் கொண்டு ஒருபோதும் சிறு பாவத்தையேனும் செய்ததில்லை. சித்திர சிகண்டிகள்[4] என்ற பெயரில் அறியப்பட்ட மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் பெருஞ்சக்தியைக் கொண்ட வசிஷ்டர் என்று கொண்டாடப்படும் ஏழு முனிவர்களும், மலைகளில் முதன்மையான மேருவின் சாரலில் ஒன்றுகூடி, நான்கு வேதங்களுக்கு இணக்கமான கடமைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த சிறந்த சாத்திரத்தை உண்டாக்கினார்கள். அந்தச் சாத்திரத்தின் உள்ளடக்கம் ஏழு வாய்களால் சொல்லப்படுவதாகவும், மனித கடமைகள் மற்றும் நடைமுறைகளின் சுருக்கமான சிறந்த தொகுப்பாகவும் இருந்தது. ஏற்கனவே சொல்லப்பட்டது போல, சித்திர சிகண்டிகள் என்ற பெயரால் அறியப்பட்ட அந்த ஏழு முனிவர்களும், (மஹத், அகங்காரம் முதலிய) ஏழு (பிரகிருதி) பூதங்களாகவும், பட்டியலில் எட்டாவதாகச் சுயம்புவான மனுவும் மூலப் பிரகிருதியின் உள்ளடக்கமாக இருந்தனர். இந்த எண்மரே அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவர்களும், கவனம் திரும்பியிருக்கும் அந்தச் சாத்திரத்தை உண்டாக்கியவர்களும் ஆவர்.(27-30)
[4] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "விசித்திரமான மயில் தோகையுள்ளவர்கள்" என்று விளக்கப்பட்டிருக்கிறது.
முழுக் கட்டுப்பாட்டுடன் கூடிய புலன்கள் மற்றும் மனத்துடன், எப்போதும் யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருந்த அந்த எட்டு தவசிகளும், குவிந்த ஆன்மாக்களுடன், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை முழுமையாக அறிந்தவர்களாக வாய்மை எனும் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருந்தனர்.(31) "இது நன்மையானது, இது பிரம்மம், இஃது உயர்ந்த நன்மையானது" என்று இவ்வழியில் தங்கள் மனத்தில் சிந்தித்த அந்த முனிவர்களே, உலகங்களையும், அறநெறி அறிவியலையும், உலகங்களை ஆளும் கடமைகளையும் உண்டாக்கினர்.(32) அறம், செல்வம் மற்றும் இன்பம், அதைத் தொடர்ந்து விடுதலை {முக்தி} குறித்தும் அந்த ஆசிரியர்கள் அந்தச் சாத்திரத்தில் உரை செய்திருந்தார்கள். அவர்கள் பூமிக்கும், சொர்க்கத்திற்குமான பல்வேறு கட்டுப்பாடுகளையும் வரைமுறைகளையும் அதில் விதித்திருந்தனர்.(33) பலமிக்கவனும், சிறப்புமிக்கவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான நாராயணனை, பல முனிவர்களின் துணையுடன் ஆயிரம் தேவ வருடங்கள் தவங்களால் வழிபட்டு அந்தச் சாத்திரத்தை அவர்கள் உண்டாக்கினார்கள்.(34) அவர்களது தவங்கள் மற்றும் வழிபாட்டால் நிறைவடைந்த நாராயணன், வாக்கின் தேவியான சரஸ்வதியை அந்த முனிவர்களின் மேனியில் நுழையும்படி ஆணையிட்டான். அந்தத் தேவியும் உலகங்களுக்கு நன்மை செய்வதற்காக, தனக்கு ஆணையிடப்பட்ட வகையிலேயே செயல்பட்டாள்.(35)
வாக்கின் தேவி அவர்களது மேனியில் நுழைந்ததன் விளைவால் தவங்களை நன்கறிந்தவர்களான அம்முனிவர்கள், சொல், கருத்து {பொருள்}, காரணம் ஆகியவற்றாலான அந்த முதன்மையான சாத்திரத்தைத் தொகுப்பதில் வென்றார்கள்.(36) ஓம் என்ற ஓரசையால் புனிதமடைந்த அந்தச் சாத்திரத்தைத் தொகுத்தபிறகு அந்த முனிவர்கள், முதலில் அதை அன்புடன் கேட்டுக் கொண்டிருந்த நாராயணனிடம் படித்துக் காட்டினார்கள்.(37) சிறப்புமிக்கவனும், உடலற்றவனுமான நாராயணன் தான் கேட்டதில் மிக உயர்ந்த நிறைவை அடைந்தான்.
பிறகு பொருட்கள் அனைத்திலும் முதன்மையான அவன் {நாராயணன்} அம்முனிவர்களிடம் உடலற்ற குரலில் {அரூபக் குரலில் / அசரீரியாக}, "நூறாயிரம் சுலோகங்களில் நீங்கள் தொகுத்திருக்கும் இந்தச் சாத்திரம் சிறப்பானதாகும். இதனிலிருந்தே உலகங்கள் அனைத்தின் கடமைகளும், நடைமுறைகளும் உண்டாகும்.(39) யஜுஸ், ரிக், சாமம் மற்றும் அங்கிரசின் அதர்வணம் என்ற நான்கு வேதங்களுக்கும் முழு இணக்கத்துடன் இருக்கும் உங்கள் சாத்திரம், பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி ஆகிய இரண்டிலும் அங்கீகரிக்கப்பட்டதாக உலகமெங்கும் கொண்டாடப்படும்.(40) சாத்திரங்களின் அதிகாரத்திற்கு ஏற்புடைய வகையிலேயே நான் அருள் எனும் குணத்தின் மூலம் பிரம்மனையும், எனது கோபத்திலிருந்து ருத்திரனையும், (மஹத், அகங்காரம் முதலிய) பிரகிருதிகளால் உங்களையும், பிராமணர்களையும் உண்டாக்கினேன்.(41) சூரியன், சந்திரமாஸ், காற்று, பூமி, நீர், நெருப்பு, விண்மீன்கள், கோள்கள், நட்சத்திரக்கூட்டங்கள், உயிரினங்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் அனைத்தும், (வேதம் அல்லது) பிரம்மம் ஓதுபவர்கள் ஆகியோர் அனைவரும் தங்கங்கள் தங்களுக்குரிய வட்டங்களில் தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட வகையில் செயல்பட்டு வாழ்கிறார்கள். நீங்கள் தொகுத்திருக்கும் இந்தச் சாஸ்திரமும், உயர்ந்த அதிகாரத்தைக் கொண்ட படைப்பாக மனிதர்கள் அனைவராலும் அதே ஒளியில் கருதப்படும். இஃது என் ஆணையாகும். இந்தச் சாத்திரத்தின் வழிகாட்டுதலின்படி சுயம்புவான மனு, உலகின் கடமைகள் மற்றும் நடைமுறைகளை அறிவிப்பார்.(42-44) உசனஸும் {சுக்கிராச்சாரியரும்}, பிருஹஸ்பதியும் உண்டாகும்போது, அவர்கள் இந்தச் சாத்திரத்தால் வழிநடத்தப்பட்டும், மேற்கோளாகக் கொண்டும் அறம் மற்றும் அறநெறி குறித்த சாத்திரங்களை உண்டாக்குவார்கள்[5].(45)
[5] "ஏழு முனிவர்களால் {சப்தரிஷிகளால்} அறம் மற்றும் நெறிகள் குறித்துத் தொகுக்கப்பட்ட எந்தப் படைப்பு செய்யப்பட்டதோ, இல்லையோ, இப்போது அஃது இருப்பில் இல்லை என்பது உறுதியாகும். மஹாபாரதத்தில் இந்தப் படைப்பைக் குறித்து உள்ள இந்தக் குறிப்பைத் தவிர வேறு எங்கும் இது குறிப்பிடப்படவில்லை. ’சுக்ர நீதி’யைப் பொறுத்தவரையில் அது வழக்கிலுள்ளது. பிருஹஸ்பதியின் ’நீதி சாஸ்திரம்’ செயலற்றுப் போன ஒன்றாகும். எனினும் ‘சுக்ர நீதிக்கு’ முன்பே ஒரு படைப்பிருந்திருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சுயம்புவான மனுவும், உசனஸும், பிருஹஸ்பதியும் தங்கள் சாத்திரங்களை வெளியிட்ட பிறகு,(46) உங்களால் தொகுக்கப்பட்ட இந்த அறிவியல், (உபரிசரன் என்ற பெயராலும் அறியப்படும்) மன்னன் வசுவால் அடையப்படும். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, உண்மையில், அம்மன்னன் இந்தப் படைப்பின் ஞானத்தைப் பிருஹஸ்பதியிடம் இருந்து அடைவான்.(47) நல்ல சிந்தனைகள் அனைத்தாலும் நிறைந்திருக்கும் அம்மன்னன் என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவானாக இருப்பான். இந்தச் சாத்திரத்தால் வழிநடத்தப்பட்டு அவன் தன் அறச்செயல்களையும் நடைமுறைகளையும் அமைத்துக் கொள்வான்.(48) உண்மையில் உங்களால் தொகுக்கப்பட்ட இந்தச் சாத்திரம், அறம் மற்றும் நெறிகள் குறித்த சாத்திரங்கள் அனைத்திலும் முதன்மையானதாக இருக்கும். சிறப்பு நிறைந்த இந்தச் சாத்திரம், செல்வத்தையும், அறத்தகுதியையும் ஈட்டுவதற்கு உரிய அறிவுரைகள் நிறைந்ததாகவும், புதிர்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.(49) உங்களுடைய இந்தச் சாத்திரத்தை வெளியிடுவதன் விளைவால், நீங்கள் பெரும் குலம் ஒன்றின் மூதாதையர்களாவீர்கள். மன்னன் உபரிசரனும், மகிமையும் செழிப்பும் கொண்டவனாக இருப்பான்.(50) எனினும் அந்த மன்னனின் மரணத்திற்குப் பிறகு இந்த நித்திய சாத்திரம் உலகில் இருந்து மறைந்துவிடும். இவை யாவையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றான் {நாராயணன்}.(51)
புலப்படாதவனான நாராயணன், அந்த முனிவர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அவர்களை விட்டுவிட்டு, அவர்களால் அறியப்படாத வேறொரு இடத்திற்குச் சென்றான்.(52) அப்போது உலகத்தின் தந்தைகளான அந்த முனிவர்கள், உலகம் அடையப்போகும் கதியை நினைத்துக் கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தின் நித்திய மூலமாகச் சாத்திரத்தை வெளியிட்டனர்.(53) அதற்கடுத்து முதல், அல்லது கிருத யுகத்தில் பிருஹஸ்பதி அங்கிரஸக் குலத்தில் பிறந்தபோது, அந்த ஏழு முனிவர்களும், உபநிஷத்துகள் மற்றும் வேதங்களின் பல்வேறு கிளைகளுக்கு இணைக்கமான தங்கள் சாத்திரத்தை வெளியிடும் பணியை அவருக்குக் கொடுத்தனர்.(54) உலகங்கள் அனைத்தையும் தாங்குபவர்களும், தர்மங்கள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் முதலில் வெளியிட்டவர்களுமான அவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்து இடத்திற்குச் சென்று தவங்களில் தங்களை அர்ப்பணிக்கத் தீர்மானித்தனர்" என்றார் {பீஷ்மர்}.(55)
சாந்திபர்வம் பகுதி – 336ல் உள்ள சுலோகங்கள் : 55
ஆங்கிலத்தில் | In English |