Narayaneeyam! | Shanti-Parva-Section-337 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 164)
பதிவின் சுருக்கம் : உபரிசர வசு செய்த யாகம்; பிருஹஸ்பதிக்கு நாராயணனின் மகிமையைச் சொன்ன ஏகதர் மற்றும் பிறர்; ஸ்வேதத்வீபம் என்ற வெண்தீவு; அங்கே வசிக்கும் வெண் மனிதர்கள்; ஸ்வேதத்வீபத்தில் நாராயணனைக் காணாத முனிவர்கள்; உபரிசரவசு அடைந்த கதி...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] "பெரும் கல்பம் {மஹாகல்பம்} நிறைவடைந்ததும், அங்கிரஸ குலத்தில் தேவபுரோஹிதர் பிருஹஸ்பதி பிறந்தபோது, தேவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.(1) பிருஹத், பிரம்ம, மஹத் என்ற சொற்கள் அனைத்தும் ஒரே பொருளைக் கொண்டனவாகும்[2]. ஓ! மன்னா, தேவ புரோஹிதர் இந்தக் குணங்கள் அனைத்தையும் கொண்டிருந்ததால் பிருஹஸ்பதி என்று அழைக்கப்படலானார்.(2) வசு என்றும் அழைக்கப்படும் மன்னன் உபரிசரன், பிருஹஸ்பதியின் சீடனாகி விரைவில் அவனது முதன்மையான சீடனானான். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அவன், தன் ஆசானின் காலடியில் அமர்ந்து, சித்திர சிகண்டிகள் என்ற பெயரில் அறியப்பட்ட ஏழு முனிவர்களால் தொகுக்கப்பட்ட அந்த அறிவியலை {சாத்திரத்தைக்} கற்கத் தொடங்கினான்.(3) வேள்விகள் மற்றும் பிற அறச்சடங்குகள் மூலம் தீமைகள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்த அவன் {உபரிசரன்}, சொர்க்கத்தை ஆளும் இந்திரனைப் போல இந்தப் பூமியை ஆண்டு வந்தான்.(4)
[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் இந்தப் பகுதி முதல் "நாராயணீயம்" தொடங்குவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.[2] "’பர்யாயம்’ என்பது உண்மையில் பட்டியல் என்ற பொருளைக் கொண்டதாகும். ஒரு பொருளைத் தரும் சொற்கள் அனைத்தையும் கொண்ட பட்டியல் பர்யாயம் என்ற பெயரில் அறியப்பட்டது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அந்தச் சிறப்புமிக்க மன்னன் தன் ஆசானான பிருஹஸ்பதி ஹோத்ரியாக அமைந்த ஒரு பெரும் குதிரை வேள்வியை {அஸ்வமேதயாகத்தைச்} செய்தான்.(5) பிரஜாபதியின் (பிரம்மனின்) மகன்களான ஏகதர், துவிதர், திரிதர் ஆகியோர் அந்த வேள்வியின் சத்யஸ்களானார்கள்.(6) இன்னும் தனுஷர், ரைப்யர், அர்வாவஸு, பராவஸு, மேதாதி, பெரும் முனிவரான தாண்டியர்,(7) அருள் நிறைந்தவரான சாந்தி முனிவர், வேதசிரஸ் என்று அழைக்கப்பட்டவர், சாலிஹோத்திரரின் தந்தையும், முனிவர்களில் முதன்மையானவருமான கபிலர்,(8) முதன்மையானவரான கல்பர் {கடர்}, வைசம்பாயனருக்கு மூத்தவரான {அண்ணனான} தைத்திரி, கண்வர், தேவஹோத்தர் ஆகிய வேறு பதினாறு பேரும் சத்யஸ்களாக இருந்தனர்.(9)
ஓ! ஏகாதிபதி அந்தப் பெரும் வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் திரட்டப்பட்டன. அதில் எந்த விலங்கும் கொல்லப்படவில்லை. மன்னன் அவ்வாறே அதை விதித்திருந்தான்(10) அவன் கருணை நிறைந்தவனாக இருந்தான். தூய்மையான, தயாள மனம் கொண்ட அவன், ஆசைகள் அனைத்தையும் கைவிட்டவனாகவும், சடங்குகள் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருந்தான். அவ்வேள்விக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் காட்டில் விளைபவையாகவே இருந்தன.(11) புராதன தேவர்களுக்குத் தேவன் (ஹரி), அந்த வேள்வியினால் மன்னனிடம் உயர்ந்த நிறைவை அடைந்தான். வேறு எவராலும் காணப்பட முடியாதவனான அந்தப் பெருந்தேவன், தன் வழிபாட்டாளனுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(12) அவன் {ஹரி}, அதன் மணத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் தனக்கு அளிக்கப்பட்ட பங்கான புரோடாசத்தை[3] எடுத்துக் கொண்டான். அந்தப் பெருந்தேவன் யாரும் காணாதவண்ணம் அந்தக் காணிக்கைகளை எடுத்துக் கொண்டான்.(13) இதனால் பிருஹஸ்பதி கோபம் அடைந்தார். அவர், வேள்விக் கரண்டியை எடுத்து வானத்தில் வேகமாக வீசி எறிந்துவிட்டு, கோபத்தில் கண்ணீர் சிந்தத் தொடங்கினார்.(14)
[3] "வேள்விகளில் கொடுக்கப்படும் தெளிந்த நெய்யில் முக்கியெடுக்கப்பட்ட வாற்கோதுமை மாவு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவர் {பிருஹஸ்பதி} மன்னன் உபரிசரனிடம், "நாராயணனுக்குரிய வேள்விக் காணிக்கைகளை இங்கே வைக்கிறேன். என் கண்களுக்கு முன்பாகவே இதை அவன் எடுக்கப் போகிறான் என்பதில் ஐயமில்லை" என்றார்".(15)
யுதிஷ்டிரன், "உபரிசரனின் பெரும் வேள்வியில் தேவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய வடிவங்களில் வந்து அனைவரும் காணும்படி தங்கள் பங்குகளை எடுத்துக் கொண்டனர். பலமிக்க ஹரி மட்டுமே ஏன் வேறுவகையில் மறைமுகமாகத் தன் பங்கை எடுத்துக் கொண்டான்?" என்று கேட்டான்.(16)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிருஹஸ்பதி கோபமடைந்த போது, மாமன்னன் வசுவும், அவனது சத்யஸ்கள் அனைவரும் அந்த மாமுனிவரைத் தணிவடையச் செய்ய முயன்றனர்.(17) அவர்கள் அனைவரும் மிக அமைதியாகப் பிருஹஸ்பதியிடம், "நீர் கோபவசப்படக்கூடாது. இந்தக் கிருத யுகத்தில், நீர் கொள்ளும் கோபத்தை யாரும் கொள்ளக்கூடாது.(18) உம்மால் வேள்வி காணிக்கையளிக்கப்பட்ட பெருந்தேவனே கோபத்தில் இருந்து விடுபட்டவனாவான். ஓ! பிருஹஸ்பதி, அவன் உம்மாலோ, எங்களாலோ காணப்பட முடியாதவனாவான்.(19) அவனது அருள் கொண்டவர்கள் மட்டுமே அவனைக் காண முடியும்" என்றனர்.
அப்போது, ஏழு முனிவர்களால் தொகுக்கப்பட்ட அறநெறிகள் மற்றும் கடமைகளை நன்கறிந்தவர்களான ஏகதர், திவிதர், திரிதர் முதலிய முனிவர்கள், அந்தச் சபையில் பின்வருமாறு உரையாடத் தொடங்கினர்,(20) "நாங்கள் பிரம்மன் நினைவில் பிறந்த அவரது மகன்களாவோம் {பிரம்மாவின் மானஸபுத்திரர்களாவோம்} (சாதாரண வழியில் பிறக்கவில்லை). ஒரு காலத்தில் நாங்கள் எங்கள் உயர்ந்த நன்மையை அடைவதற்காக வடக்கே சென்றோம்.(21) ஆயிரம் வருடங்கள் தவமிருந்து, பெரும் தவத் தகுதியை ஈட்டிய நாங்கள், மீண்டும் நிலையான மரக்கட்டைகளைப் போல ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தோம்.(22) நாங்கள் தவமிருந்த நாடானது, மேரு மலைகளுக்கு வடக்கே, பாற்கடலின் கரைகளில் இருக்கிறது.(23) நாங்கள் எங்கள் மனத்தில் கொண்டிருந்த நோக்கமானது, தெய்வீகமான நாரயாணனை அவனது வடிவிலேயே காண்பதாகும். எங்கள் தவங்கள் நிறைவடைந்ததும், இறுதியான தூய்மைப்படுத்தும் சடங்குகளைச் செய்த பிறகு, ஓ! பலமிக்கப் பிருஹஸ்பதி, மேக முழக்கம் போல ஆழமானதும், மிக இனிமையானதும், எங்கள் இதயத்தை இன்பத்தால் நிறைப்பதுமான ஓர் அரூபக் குரலை நாங்கள் கேட்டோம்.(24)
அந்தக் குரல், "பிராமணர்களே, உற்சாகம் நிறைந்த ஆன்மாக்களோடு நீங்கள் இந்தத் தவங்களைச் செய்திருக்கிறீர்கள். நாராயணனிடம் பக்தி கொண்ட நீங்கள், பெரும்பலம் கொண்ட அந்தத் தேவனைக் காண்பதில் எவ்வாறு வெல்வது என அறியும் வகையை நாடுகிறீர்கள்.(25) பாற்கடலின் வடகரையில் வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்ற பெயரைக் கொண்டதும், பெரும் காந்தியைக் கொண்டதுமாக ஒரு தீவு இருக்கிறது. அந்தத் தீவில் வசிக்கும் மனிதர்கள், சந்திரனின் கதிர்களைப் போன்ற வெண்நிறத்தைக் கொண்டவர்களாகவும், நாராயணனிடம் பக்தி கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.(26) அனைத்திலும் முதன்மையானவனான அவனை வழிபடும் அவர்கள், தங்கள் முழு ஆன்மாவுடன் அவனிடம் அர்பணிப்புக் கொண்டவர்கள் {பக்தி செலுத்துபவர்கள்} ஆவர். அவர்கள் அனைவரும், நித்தியமானவனும், சிறப்புமிக்கவனுமான ஆயிரம் கதிர்களைக் கொண்ட தேவனில் நுழைகிறார்கள்.(27) அவர்கள் புலன்களற்றவர்களாவர். அவர்கள் உயிர்வாழ்வதற்காக எவ்வகை உணவையும் உட்கொள்வதில்லை. அவர்களது கண்கள் இமைப்பதில்லை. அவர்களது உடல்கள் எப்போதும் நறுமணத்தை வெளியிடுகின்றன. உண்மையில் வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} வசிப்பவர்கள் ஒரே தேவனை மட்டுமே நம்பவும், வழிபடவும் செய்கிறார்கள். தவசிகளே, நான் அங்கே வெளிப்பட்டிருக்கிறேன் என்பதால் அங்கே செல்வீராக" என்றான் {நாராயணன்}.(28)
அரூபக் குரலின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் அனைவரும், குறிப்பிட்டு விளக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும் வழியில் சென்றோம்.(29) அவனைக் காணும் ஆவலிலும், அவனுக்காக நிறைந்த இதயத்துடனும் இறுதியாக நாங்கள் வெண்தீவு என்று அழைக்கப்பட்ட அந்தப் பெரிய தீவை அடைந்தோம். அங்கே எங்களால் எதையும் காண முடியவில்லை. உண்மையில், அந்தப் பெருந்தேவனின் சக்தியால் எங்கள் பார்வை குருடாக்கப்பட்டதால் எங்களால் அவனைக் காண முடியவில்லை.(30) இதன் காரணமாக அந்தப் பெருந்தேவனின் கருணையால், ’போதுமான அளவு தவங்களைச் செய்யாதவனால் நாராயணனை விரைவாகக் காண முடியாது’ என்ற கருத்து எங்களின் மனத்தில் எழுந்தது.(31) இந்தக் கருத்தின் ஆதிக்கத்தால், காலத்திற்கும், இடத்திற்கும் தக்க வகையில் மீண்டும் நாங்கள் நூறு வருடங்களுக்குக் கடுந்தவங்களைச் செய்தோம். எங்கள் நோன்புகள் நிறைந்தவடைந்ததும், நாங்கள் மங்கலமான குணங்களைக் கொண்ட எண்ணற்ற மனிதர்களைக் கண்டோம்.(32) அவர்கள் அனைவரும் (நிறத்தில்) சந்திரனைப் போலத் தெரிந்தனர், அவர்களிடம் அருள் குறியீடுகள் அனைத்தும் இருந்தன. அவர்களது கரங்கள் எப்போதும் வேண்டும் வகையில் கூப்பியே இருந்தன. சிலரின் முகங்கள் வடக்கு நோக்கியும், சிலரின் முகங்கள் கிழக்கு நோக்கியும் இருந்தன.(33) அந்த உயர் ஆன்ம மனிதர்களால் செய்யப்பட்ட ஜபம் மனோஜபமாகும் (அவை வார்த்தைகளாலான மந்திரச் சொற்களைச் சொல்வதாக இல்லை). அவர்களது இதயங்கள் முழுமையாக அவனில் நிறுவப்பட்டிருப்பதன் விளைவால், ஹரி அவர்களிடம் உயர்வான நிறைவை அடைந்திருந்தான்.(34)
ஓ! தவசிகளில் முதன்மையானவரே {பிருஹஸ்பதியே}, அம்மனிதர்கள் வெளிப்படுத்திய பிரகாசமானது, அண்ட அழிவின்போது சூரியன் வெளிப்படுத்தும் காந்திக்கு ஒப்பானதாக இருந்தது.(35) உண்மையில் நாங்கள் அத்தீவே சக்திகள் அனைத்தின் வீடு என நினைத்தோம். அங்கே வசித்த அனைவரும் முற்றிலும் சமமான சக்தியுடன் இருந்தனர்.(36) பிறகு, ஓ! பிருஹஸ்பதி, நாங்கள் ஆயிரம் சூரியர்களின் குவிந்த பிரகாசத்துக்கு ஒப்பான ஓர் ஒளி எழுவதைக் கண்டோம்.(37) அங்கே வசித்தவர்கள் ஒன்றுகூடி, மதிப்புமிக்க மனோநிலையுடன் கரங்களைக் கூப்பி, முழு மகிழ்ச்சியுடன் நமஸ் (வணங்குகிறோம்) என்ற ஒற்றைச் சொல்லைச் சொல்லிக் கொண்டே அந்த ஒளியை நோக்கி ஓடினார்கள்.(38) அவர்கள் அனைவரும் சேர்ந்து பேரொலி எழுப்பியதை நாங்கள் கேட்டோம். அந்த மனிதர்கள் அனைவரும் அந்தப் பெருந்தேவனுக்கு ஒரு வேள்வியைக் காணிக்கையாக்குவதில் ஈடுபடுவதாகத் தெரிந்தது.(39) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் அவனது சக்தியால் திடீரென எங்கள் புலன்களை இழந்தவர்களானோம். பார்வை, பலம் மற்றும் புலன்கள் அனைத்தையும் இழந்த எங்களால் வேறு எதையும் காணவோ, உணரவோ முடியவில்லை.(40)
அங்கே வசித்திருந்தவர்களின் கூட்டம் எழுப்பிய பேரொலியை மட்டுமே நாங்கள் கேட்டோம். அது {அந்தப் பேரொலி}, "ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, வெற்றி உனதாகட்டும். ஓ! அண்டத்தைப் படைத்தவனே, உன்னை வணங்குகிறோம்.(41) ஓ! ரிஷிகேசா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, ஓ! முதல் பிறவியே உன்னை நாங்கள் வணங்குகிறோம்" என்றது. தனித்தவகையிலும், சொல் உச்சரிப்பு விதிகளுக்கு ஏற்புடைய வகையிலும் உண்டான அந்த ஒலி இதுவாகவே இருந்தது.(42)
அதே வேளையில், தெய்வீக மலர்கள், குறிப்பிட்ட மூலிகைகள், அச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்படும் செடிகள் ஆகியவற்றின் மணங்களைக் கொண்டதுமான நறுமணமிக்க, தூய்மையான தென்றல் அங்கே வீசியது.(43) பெரும் அர்ப்பணிப்புடன் கூடியவர்களும், இதயம் நிறைந்த மதிப்பைக் கொண்டவர்களும், பஞ்சராத்ரத்தில் விதிக்கப்பட்ட விதிகளை அறிந்தவர்களுமான அந்த மனிதர்கள், மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் அந்தப் பெருந்தேவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்[4].(44) அவ்வொலி எழுந்தபோது அவ்விடத்தில் ஹரி தோன்றினான் என்பதில் ஐயமில்லை. எங்களைப் பொறுத்தவரையில், அவனது மாயையால் மயங்கியிருந்த எங்களால் அவனைக் காண முடியவில்லை.(45) ஓ! அங்கிரஸ குலத்தில் முதன்மையானவரே, தென்றல் வீசுவது நின்று, வேள்வி முடிந்த பிறகு எங்களது இதயங்கள் கவலையால் கலக்கமடைந்தன.(46) தூய பரம்பரையில் வந்த அந்த ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு மத்தியில் நாங்கள் நின்று கொண்டிருந்தபோது, எவரும் எங்களைக் கண்ணாலாவது, மனத்தாலாவது மதிக்கவில்லை.(47) உற்சாகம் நிறைந்தவர்களும், அர்ப்பணிப்பால் நிறைந்தவர்களும், பிரம்மமனோநிலையில் பயிற்சிகளைச் செய்பவர்களுமான அந்தத் தவசிகள் எங்களுக்கு எவ்வகை உணர்வையும் வெளிப்படுத்தவில்லை[5].(48)
[4] "’பஞ்சகாலம், அல்லது பஞ்சராத்ரம், அல்லது சாத்வத விதி என்பது, நாரதர் மற்றும் பிற முனிவர்களால் நாராயணனை வழிபட விதிக்கப்பட்ட குறிப்பிட்ட விதிமுறைகளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஐந்து காலங்களையுமறிந்தவர்களும், ஏகாந்திகளும், பரமபக்தியுள்ளவர்களுமான அந்த மனுஷ்யர்களால் அப்போது ஹரியானவர் மனத்தினாலும், வாக்கினாலும், செய்கையினாலும் பூஜிக்கப்பட்டார்" என்றிருக்கிறது.[5] "பிரம்மத்துக்கு ஒப்பான மனோநிலையில் அவர்கள் அனைவரும் பயிற்சி செய்து கொண்டிருந்ததால் எங்களை அவர்கள் மதிப்பாகவோ, அவமதிப்பாகவோ கருதவில்லை எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நாங்கள் மிகக் களப்படைந்திருந்தோம். எங்கள் தவங்கள் எங்களை மெலிவடையச் செய்திருந்தன. அந்நேரத்தில், வானத்தில் இருந்து ஓர் அரூபக் குரல் இந்த வார்த்தைகளில் எங்களிடம் பேசியது,(49) {அந்தக் குரல்}, "புறப்புலன்கள் அனைத்தும் இல்லாதவர்களான இந்த வெண்மனிதர்களே (நாராயணனைக்) காணத்தகுந்தவர்கள். இந்த வெண்மனிதர்களின் பார்வையால் கௌரவிக்கப்பட்ட மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்கள் மட்டுமே அந்தப் பெருந்தேவனைக் காணத்தகுந்தவர்கள்.(50,51) முனிவர்களே, நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்பிச் செல்லுங்கள். அர்ப்பணிப்பில்லாத {பக்தியற்ற} ஒருவனால் அந்தப் பெருந்தேவனை {நாராயணனைக்} காண இயலாது.(52) அவனது பளிச்சிடும் பிரகாசத்தின் விளைவால் காணப்பட இயலாதவனாக இருக்கும் அந்தப் பெருந்தேவனை, முற்றுமுழுதாக அவனிடம் மட்டுமே நீண்ட காலமாக அர்ப்பணிப்பு பக்தி} கொண்ட மனிதர்களால் மட்டுமே காண முடியும். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் செய்ய வேண்டிய பெருங்கடமை இருக்கிறது.(53) கிருத யுகம் முடிந்து, திரேதா யுகம் நேரும்போது, விவஸ்வானின் காலத்தில் {மன்வந்திரத்தில்} உலகங்களுக்குப் பேரிடர் நேரிடும். முனிவர்களே, அப்போது நீங்கள் (அந்தப் பேரிடரை விலக்குவதற்காக) தேவர்களின் கூட்டாளிகளாக வேண்டும்" {என்றது}.(54)
அமுதம் போன்ற இந்த இனிய வார்த்தைகளைக் கேட்ட நாங்கள், அந்தப் பெருந்தேவனின் கருணையின் மூலம் நாங்கள் விரும்பிய இடத்திற்கு விரைவாக வந்து சேர்ந்தோம்.(55) அத்தகைய கடுந்தவங்கள், மற்றும் அர்ப்பணிப்பு மிக்க வேள்வி காணிக்கைகளின் {ஹவ்யகவ்யங்களின்} துணையின் மூலம் கூட அந்தப் பெருந்தேவனை எங்களால் காண முடியவில்லை எனும்போது, அவ்வளவு எளிதாக அவனைக் காணலாம் என நீர் எவ்வாறு நினைக்கலாம்?(56) நாராயணனே பெரும்பொருளாவான். அவனே அண்டத்தைப் படைத்தவனாவான். வேத மந்திரங்களின் துணையுடன் தெளிந்த நெய் மற்றும் வேறு உணவு வகைக் காணிக்கைகளுடன் அவனே வேள்விகளில் துதிக்கப்படுகிறான். அவன் தொடக்கமும், முடிவுமில்லாதவனாவான். அவன் வெளிப்படாதவனாவான். தேவர்கள் மற்றும் தானவர்கள் ஆகிய இருவரும் அவனையே வழிபடுகிறார்கள்" என்றனர்.(57) ஏகதரால் பேசப்பட்டவையும், அவரது தோழர்களான திவிதர் மற்றும் திரிதரால் அங்கீகரிக்கப்பட்டவையுமான இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டவரும், சத்யஸ்களால் வேண்டப்பட்டவருமான உயர்ந்த மனத்தைக் கொண்ட பிருஹஸ்பதி தேவர்களுக்குரிய துதிகளை முறையான சடங்குகளுடன் செய்து அந்த வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.(58)
மன்னன் உபரிசரனும், தனது பெரும் வேள்வியை நிறைவு செய்த பிறகு, தன் குடிமக்களை அறம்சார்ந்து ஆட்சி செய்யத் தொடங்கினான். இறுதியில் அவன் தன் உடலைக் கைவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். சிறிது காலத்திற்குப் பிறகு, பிராமணர்களின் சாபத்தால் அவன் இன்ப உலகங்களில் இருந்து வீழ்ந்து, பூமியின் குடல்களுக்குள் ஆழமாக மூழ்கிப் போனான்.(59) ஓ! ஏகாதிபதிகளில் புலியே {யுதிஷ்டிரா}, அந்த வசுவானவன் {உபரிசரன்}, வாய்மை அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்தான். அவன் பூமியின் குடல்களுக்குள் ஆழ மூழ்கினாலும் அவனது அற அர்ப்பணிப்பு தணியவில்லை.(60) நாராயணனிடம் எப்போதும் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனும், நாராயணனையே தங்கள் தேவனாகக் கொண்ட புனித மந்திரங்களை எப்போதும் உரைப்பவனுமான அவன், நாராயணனின் அருளின் மூலம் மீண்டும் சொர்க்கத்தை அடைந்தான்.(61) பூமியின் குடல்களுக்குள் இருந்து எழுந்த மன்னன் வசு {உபரிசரன்}, தான் அடைந்த உயர்ந்த கதியின் விளைவால் பிரம்மலோகத்திற்கும் மேலான ஓர் உயர்ந்த இடத்திற்குச் சென்றான்" என்றார் {பீஷ்மர்}.(62)
சாந்திபர்வம் பகுதி – 337ல் உள்ள சுலோகங்கள் : 62
ஆங்கிலத்தில் | In English |