The curse on Uparichara! | Shanti-Parva-Section-338 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 165)
பதிவின் சுருக்கம் : வேள்விகள் தானியங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டுமா? விலங்குகளைக் கொண்டு செய்யப்பட வேண்டுமா? என்பதில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையில் நேர்ந்த சச்சரவு; மன்னன் உபரிசரன் சொன்ன தீர்ப்பு; பிராமணர்களால் சபிக்கப்பட்ட உபரிசரன்; தேவர்களின் கருணையாலும், நாராயணனின் அருளாலும் உயர்ந்த கதியை அடைந்தது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மாமன்னன் வசு நாராயணனிடம் முழுமையான பக்தியுடன் இருந்தபோது, என்ன காரணத்தினால் அவன் சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்தான்? மேலும் அவன் ஏன் பூமியின் பரப்புக்குக் கீழே மூழ்கிப் போனான்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாக முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஒரு காலத்தில், பிராமணர்களில் முதன்மையானோரிடம் பேசிய தேவர்கள், அவர்களிடம் அஜஸ் என்ற பலிகளைக் காணிக்கையாக்குவதன் மூலம் வேள்விகள் செய்யப்பட வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அஜ என்ற சொல்லின் மூலம் வெள்ளாடு என்று புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி வேறு எந்த விலங்கையும் அல்ல.(3)
முனிவர்கள், "வேத ஸ்ருதியானது, வேள்விகளில் வித்துகள் {தானியங்கள்} காணிக்கைகளாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வித்துகளே {தானியங்களே} அஜஸ் என்று அழைக்கப்படுகின்றன. வெள்ளாடுகளைக் கொல்வது உங்களுக்குத் தகாது.(4) தேவர்களே, விலங்குகளைக் கொல்ல விதிக்கப்படுவது நல்லோருக்கும், அறவோருக்குமான அறமல்ல. மேலும் இது கிருத யுகமாகும். அறம்சார்ந்த இந்த யுகத்தில் விலங்குகள் எவ்வாறு கொல்லப்படலாம்?" என்றனர்".(5)
பீஷ்மர் தொட்ரந்தார், "முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் இந்த உரையாடல் நேர்ந்து கொண்டிருந்தபோது, மன்னர்களில் முதன்மையானவனான வசு அவ்வழியில் வந்தான். பெருஞ்செழிப்பைக் கொண்ட அந்த மன்னன், தன் துருப்புகள், வாகனங்கள் மற்றும் விலங்குகளுடன் ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தான்.(6)
வானத்தின் மூலம் அந்த இடத்திற்கு வரும் மன்னன் வசுவைக் கண்ட அந்தப் பிராமணர்கள், தேவர்களிடம், "இவன் எங்கள் ஐயங்களை விலக்குவான்.(7) இவன் வேள்விகளைச் செய்பவன். இவன் கொடைகளை அளிக்கும் ஈகையாளன். இவன் எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையை நாடுபவனாவான்" என்றனர்.(8)
இவ்வாறு தங்களுக்குள் பேசிக்கொண்ட முனிவர்களும் தேவர்களும் விரைவாக மன்னன் வசுவிடம் வந்து அவனைக் கேள்வி கேட்டனர். {அவர்கள்}, "ஓ! மன்னா, எதைக் கொண்டு ஒருவன் வேள்விகளைச் செய்ய வேண்டும்?(9) அவன் வெள்ளாட்டைக் கொண்டு வேள்வி செய்ய வேண்டுமா? மூலிகைகள் மற்றும் செடிகளைக் கொண்டு வேள்வி செய்ய வேண்டுமா? எங்களுடைய இந்த ஐயங்களை நீ விலக்குவாயாக. இக்காரியத்தில் நாங்கள் உன்னையே நீதிபதியாகக் கொள்கிறோம்" என்றனர்.(10)
இவ்வாறு அவர்களால் சொல்லப்பட்ட வசு {உபரிசரன்}, பணிவுடன் தன் கரங்களைக் கூப்பியபடி அவர்களிடம், "பிராமணர்களில் முதன்மையானவர்கள், இக்காரியத்தில் உங்கள் கருத்து என்ன என்பதை உண்மையில் எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான்.(11)
முனிவர்கள், "ஓ! மன்னா, வேள்விகள் தானியங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டுமென நாங்கள் கருதுகிறோம். எனினும், தேவர்களோ விலங்குகளைக் கொண்டு வேள்விகள் செய்யப்பட வேண்டும் எனச் சொல்கின்றனர். எங்களுக்கிடையில் நீதிபதியாக இருந்து இந்தக் கருத்துகளில் எது சரி என்பதைச் சொல்வாயாக" என்றனர்".(12)
பீஷ்மர் தொடர்ந்தார், "தேவர்களால் சொல்லப்படும் கருத்து என்ன என்பதை அறிந்த வசு {உபரிசரன்}, அவர்களுக்குச் சாதகமாக விலங்குகளைக் கொண்டே வேள்விகள் செய்யப்பட வேண்டும் என்று சொன்னான்.(13)
சூரியனின் காந்தியுடன் கூடிய முனிவர்கள் அனைவரும் இந்தப் பதிலால் மிகவும் கோபமடைந்தனர். தேரில் அமர்ந்திருந்தவனும், (தவறாகத்) தேவர்களின் தரப்பை அடைந்தவனுமான வசுவிடம் அவர்கள்,(14) "நீ (தவறாகத்) தேவர்களின் தரப்பை அடைந்ததால், சொர்க்கத்தில் இருந்து வீழ்வாயாக. ஓ! ஏகாதிபதி, இந்த நாள் முதல் நீ வானத்தில் பயணிக்கும் உன் சக்தியை இழப்பாயாக. எங்கள் சாபத்தால் நீ பூமியின் பரப்புக்கு அடி ஆழத்தில் மூழ்குவாய்" என்றனர்.(15)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முனிவர்கள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், உடனே கீழே விழுந்த மன்னன் உபரிசரன், பூமியின் குழிக்குச் சென்றான். எனினும், நாராயணனின் ஆணையின் பேரால் அவனது நினைவு தவறவில்லை.(16) பிராமணர்களால் வசுவுக்கு இடப்பட்ட சாபத்தால் துன்புற்ற தேவர்கள், அவனுடைய நற்பேற்றின் காரணமாக, அந்தச் சாபத்தை எவ்வாறு சமன் செய்வது {தணிப்பது} என்பதைக் கவலையுடன் நினைக்கத் தொடங்கினர்.(17)
அவர்கள், "இந்த உயர் ஆன்ம மன்னன் நம் நிமித்தமாகவே சபிக்கப்பட்டிருக்கிறான். சொர்க்கவாசிகளான நாம் ஒன்று சேர்ந்து அவன் நமக்குச் செய்ததற்குப் பதிலாக அவனுக்கு நன்மையைச் செய்ய வேண்டும்." என்றனர்.(18)
நினைவின் துணைகொண்டு இதைத் தங்கள் மனங்களில் தீர்மானித்த தேவர்கள் மன்னன் உபரிசரன் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவனது முன்னிலைக்குச் சென்ற அவர்கள்,(19) பிராமணர்களின் பெருந்தேவனிடம் (நாராயணனிடம்) நீ அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டிருக்கிறாய். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பெருந்தேவனாக இருக்கும் அவன், உன்னில் நிறைவடைந்திருப்பதால், உன் மீது விழுந்திருக்கும் சாபத்தில் இருந்து உன்னை மீட்பான்.(20) எனினும், உயர் ஆன்ம பிராமணர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதே முறையானது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உண்மையில் அவர்களது தவங்கள் கனி தர வேண்டும்[1].(21) உண்மையில் நீ வானத்தில் இருந்து பூமிக்கு ஏற்கனவே விழுந்துவிட்டாய். எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன்னைப் பொறுத்தவரையில் உனக்கு நாங்கள் உதவ விரும்புகிறோம்.(22) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீ இந்தக் குழியில் இருக்கும்வரை (எங்கள் வரத்தின் மூலம் உனக்குரிய வாழ்வாதாரத்தைப்) பெறுவாயாக.(23) பிராமணர்களால் குவிந்த மனத்துடனும், புனித மந்திரங்களின் துணையுடனும் வேள்விகளில் ஊற்றப்படுவதும், வசுதாரம் {வஸோர்த்தாரை / ஆஜ்யதாரை} என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான தெளிந்த நெய்யின் இழையானது, எங்களது பொறுப்பில் உனதாகட்டும். உண்மையில், பலவீனமோ, மனத்தளர்வோ உன்னைப் பற்றாது[2].(24) ஓ! மன்னர்களின் மன்னா, பூமியின் குழிக்குள் வாழும்போது நீ வசுதாரம் என்றழைக்கப்படும் தெளிந்த நெய்க்கீற்றுகளைக் குடிக்கப் போவதால், பசியோ, தாகமோ உன்னைப் பீடிக்காது. உன் சக்தியும் குன்றாது. நாங்கள் உனக்குத் தரும் இந்த வரத்தின் விளைவால், தேவர்களின் தேவனான நாராயணன், எங்களிடம் நிறைவடைந்து, உன்னை இங்கிருந்து பிரம்மலோகத்திற்குக் கொண்டு செல்வான்" என்றார்கள்.(25)
[1] "அவர்களுடைய சாபம் பலிக்க வேண்டும். அந்தச் சாபத்தை ஒன்றுமில்லாமல் செய்ய நீ எதையும் செய்யக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "இந்த நாள்வரை, அறச்சடங்குகள் பலவற்றில் மந்திரங்கள் சொல்லி இந்த நெய்யிழை ஊற்றப்படுகிறது. வசுதாரம் என்றழைக்கப்படும் அவை சுவற்றின் பரப்பில் ஊற்றப்படுகின்றன. முதலில் அலையும் ஒரு சிவப்புக் கோடு சுவற்றில் கிடைமட்டமாக வரையப்படுகிறது. பிறகு அந்தக் கோட்டின் கீழ் ஏழு புள்ளிகள் உண்டாக்கப்படுகின்றன. பிறகு வேள்விக் கரண்டியைக் கொண்டு அந்த ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் சுவற்றின் வழியாக அடர்த்தியான நெய்யிழை ஊற்றப்படுகிறது. அந்த இழைகளின் நீளம் பொதுவாக 3 முதல் 4 அடியாகவும், அகலம் அரையடியாகவும் இருக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மன்னனுக்கு இந்த வரங்களை அளித்த பிறகு, மன்னனுக்கு இவ்வரங்களை அளித்த தேவலோகவாசிகளும், தவங்களைச் செல்வமாகக் கொண்ட அந்த முனிவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்றனர்.(26) அப்போது அந்த வசுவானவன், ஓ! பாரதா, அண்டத்தைப் படைத்தவனைத் துதிக்கத் தொடங்கி, பழங்காலத்தில் நாராயணனின் வாயில் இருந்து வெளிவந்த புனித மந்திரங்களை அமைதியாக ஓதிக் கொண்டிருந்தான்[3].(27) அம்மன்னன் பூமியின் குழிக்குள் வசித்துவந்தாலும், ஓ! பகைவர்களைக் கொல்பவனே {யுதிஷ்டிரா}, ஒவ்வொரு நாளும் ஐந்து வேளைகளில் செய்யப்படும் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தேவர்கள் அனைவரின் தலைவனான அந்த ஹரியை வழிபட்டு வந்தான்.(28) ஹரி என்றும் அழைக்கப்படும் நாராயணன், அந்தத் துதிகளின் விளைவால், நிறைவடைந்து, தன்னையே ஒரே புகலிடமாக எண்ணி தன்னையே முழுமையாகச் சார்ந்திருந்தவனும், புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான அவனிடம் உயர்ந்த நிறைவையடைந்தான்.(29)
[3] "வசுவால் சொல்லப்பட்ட மந்திரங்கள் வேதமந்திரங்களாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அப்போது, வரங்களை அளிப்பவனான சிறப்புமிக்க விஷ்ணு, பணியாளனாகத் தன்னிடம் காத்திருந்தவனும், பறவைகளில் முதன்மையானவனும், பெரும் வேகம் கொண்டவனுமான கருடனிடம் இந்த இனிய இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(30) "ஓ! பறவைகளில் முதன்மையானவனே, ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. அற ஆன்மா கொண்டவனாகவும், கடும் நோன்புகளைக் கொண்டவனாகவும், வசு என்ற பெயரில் ஒரு பெரும் மன்னன் இருக்கிறான். பிராமணர்களின் கோபத்தால் அவன் பூமியின் குழிக்குள் வீழ்ந்திருக்கிறான்.(31) பிராமணர்கள் (தங்கள் சாபம் பலித்திருப்பதால்) போதுமான அளவுக்குக் கௌரவிக்கப்பட்டு இருக்கின்றனர். நீ இப்போது அந்த மன்னனிடம் செல்வாயாக.(32) ஓ! கருடா, பூமியின் குழிக்குள் இப்போது வசித்து வருபவனும், வானத்தில் பறக்க முடியாதவனும், மன்னர்களில் முதன்மையானவனுமான அந்த உபரிசரனிடம் என் ஆணையின் பேரில் சென்று, தாமதமில்லாமல் அவனை உயர்ந்த ஆகாயத்திற்குக் கொண்டு வருவாயாக" என்றான் {விஷ்ணு}.(33)
விஷ்ணுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், தன் சிறகுகளை விரித்து, காற்றின் வேகத்தில் விரைந்து, மன்னன் வசு வாழ்ந்துவந்த பூமியின் குழிக்குள் நுழைந்தான்.(34) திடீரென அந்த வினதையின் மகன் {கருடன்}, அம்மன்னனைத் தூக்கிக் கொண்டு வானத்தில் உயரப் பறந்து, அங்கேயே தன் அலகுகளில் இருந்து மன்னனை விடுவித்தான்.(35) அந்தக் கணத்தில் மீண்டும் தன் தேவ வடிவத்தை அடைந்த மன்னன் உபரிசரன், பிரம்மலோகத்திற்குள் மீண்டும் நுழைந்தான்.(36) ஓ! குந்தியின் மகனே, இவ்வழியிலேயே அந்தப் பெரும் மன்னன் பேச்சின் களங்கத்திற்காகப் பிராமணர்களின் சாபத்தின் மூலம் முதலில் விழுந்து, பெருந்தேவனின் (விஷ்ணுவின்) ஆணையின் பேரில் மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(37) அனைத்திலும் முதன்மையானவனும், பலமிக்கவனுமான தலைவன் ஹரியை மட்டுமே அவன் {உபரிசரன்} அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} வழிபட்டு வந்தான். இந்த அர்ப்பணிப்புமிக்க வழிபாட்டின் காரணமாகத்தான் அம்மன்னன், பிராமணர்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட சாபத்தில் இருந்து தப்புவதிலும், பிரம்மனின் பேரின்ப உலகத்தை மீண்டும் அடைவதிலும் மிக விரைவாக வென்றான்".(38)
பீஷ்மர் தொடர்ந்தார், "பிரம்மனின் ஆன்ம மகன்களின் தோற்றம் குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதர் எவ்வாறு வெண்தீவிற்கு {ஸ்வேதத்வீபத்திற்குச்} சென்றார் என்பதை நான் இப்போது சொல்லப் போகிறேன், சிதறாத கவனத்துடன் கேட்பாயாக".(39)
சாந்திபர்வம் பகுதி – 338ல் உள்ள சுலோகங்கள் : 39
ஆங்கிலத்தில் | In English |