A narrative which dispells sickness! | Shanti-Parva-Section-340 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 167)
பதிவின் சுருக்கம் : நாரதருக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாராயாணன்; நாரதருக்கும், நாராயணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்; தன் இயல்பையும், தனது அவதாரங்களையும் நாரதருக்கு எடுத்துச் சொன்ன நாராயணன்; பிரம்மன் காணாத நாராயணனின் வடிவத்தைக் கண்ட நாரதர்; நாராயணீயத்தின் மகிமையை உரைத்த பீஷ்மர்; படிப்பதாலும், கேட்பதாலும், நோய் நீங்கும் பலனைத் தரும் புராணம்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு பிறர் அறியாத பெயர்களால் பாடப்பட்டவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனுமான தெய்வீக நாராயணன், தவசி நாரதருக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(1) அவனது வடிவம் சந்திரனை விடத் தூய்மையானதாகவும், சில தன்மைகளில் சந்திரனில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தது. அவன் சுடர்மிக்க நெருப்பின் நிறத்தைக் கொண்டிருந்தான். அந்தப் பலமிக்கத் தலைவன் விஷ்டி என்ற வடிவத்தில் இருந்தான்.(2) சில தன்மைகளில் கிளியின் இறகுகளுக்கு ஒப்பானவனாகவும், சில தன்மைகளில் தூய படிகத் திரளுக்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் மை மலைக்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் தூய்மையான தங்கத் திரளுக்கு ஒப்பாகவும் அவன் இருந்தான்.(3) அவனது நிறம் முதலில் அமையும் பவளத்திற்கு ஒப்பானதாகவும், வெண்மையாகவும் இருந்தது. சில தன்மைகளில் அந்த நிறம் தங்கவண்ணமாகவும், சில தன்மைகளில் வைடூரியத்திற்கு ஒப்பாகவும் இருந்தது.(4) சில தன்மைகளில் நீலவைடூரிய வண்ணத்திற்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் இந்திரநீலக்கல்லுக்கு ஒப்பாகவும் இருந்தது. சில தன்மைகளில் மயில்கழுத்தின் வண்ணத்திற்கும், சிலவற்றில் முத்து மாலைக்கும் ஒப்பானதாக இருந்தது.(5)
அந்த நித்திய தேவன், தன் மேனியில் பல்வேறு வகைகளிலான இந்த வண்ணங்களைச் சுமந்தபடி நாரதரின் முன்பு தோன்றினான். ஆயிரங்கண்களைக் கொண்டவனாகவும், பேரழகுவாய்ந்தவனாகவும் அவன் இருந்தான். நூறு தலைகளையும், நூறு கால்களையும் கொண்டிருந்தான்.(6) ஆயிரம் வயிறுகளையும், ஆயிரம் கரங்களைக் கொண்டிருந்தான். இருப்பினும் அவன் மனத்திற்கு முழுமையாகப் புலப்படாதவனாகவே தோன்றினான். அவனது ஒரு வாயால் ஓம் என்ற ஓரசையையும், ஓம்-மைத்தொடர்ந்து காயத்ரியையும் {காயத்ரி மந்திரத்தையும்} சொன்னான்.(7) மனத்தை முழுக் கட்டுப்பாட்டில் வைந்திருந்தவனும், ஹரி மற்றும் நாராயணன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டவனுமான அந்தப் பெருந்தேவன், நான்கு வேதங்களில் அரண்யகம் என்ற பெயரில்அறியப்பட்ட பல மந்திரங்களைச் சொன்னான்.(8) தேவர்கள் அனைவரின் தலைவனும், வேள்விகளில் துதிக்கப்படுபவனுமான அந்தப் பெருந்தேவன், தன் கரங்களில் ஒரு வேள்வி பீடத்தையும், ஒரு கமண்டலுவையும், சில வெண் ரத்தினங்களையும், பாதணிகள் இரண்டையும், தர்ப்பைப் புற்கட்டு ஒன்றையும், ஒரு மான் தோலையும், பற்குச்சி ஒன்றையும், சுடர்மிக்கச் சிறு நெருப்பையும் கொண்டிருந்தான்[1].(9) உற்சாகம் மிக்க ஆன்மா கொண்டவரும், மறுபிறப்பாளரும், வாக்கைக் கட்டுப்படுத்தியவருமான நாரதர், அந்தப் பெருந்தேவனை வணங்கித் துதித்தார்.(10) அவ்வாறு மதிப்புடன் தலைவணங்கி நின்றவரிடம் {நாரதரிடம்}, சிதைவறியாதவனும், தேவர்கள் அனைவரிலும் முதல்வனுமான அவன் {நாராயணன்} பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(11)
[1] "உபானகம் என்ற இரண்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது பலரைக் குழப்புகிறது. அந்தப்பெருந்தேவன் ஏன் தன் கரங்களில் இரண்டு காலணிகளுடன் தோன்றுகிறான் என்பதை உணர்வது மிகக் கடினமானதாகும். ஒருவேளை உபானகம் என்பது பழங்காலத்தில் மரப் பாதணியாக இருந்திருக்க வேண்டும். இங்கே நாராயணன் ஒரு பிரம்மச்சாரிக்குரிய அனைத்துப் பொருட்களுடன் தோன்றுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அப்பொழுது, யஜ்ஞங்களுகுப்பதியானவ தேவேசர் வேதி, கமண்டலு, தர்ப்பங்கள், சிறந்த (ஜப) மணிகள், குசங்கள், மான்தோல், தண்டம் இவற்றையும், ஜ்வலிக்கின்ற அக்நியையும் கைகளால் தரித்துக் கொண்டிருந்தார்" என்றிருக்கிறது.
அந்தப் புனிதமானவன் {நாராயணன்}, "பெரும் முனிவர்களான ஏகதர், திவிதர், திரிதர் ஆகியோர் என்னைக் காண்பதற்காக இந்த ஆட்சிப்பகுதிக்கு வந்தனர்.(12) எனினும், அவர்களால் தங்கள் விருப்பங்களைக் கனியச் செய்ய இயலவில்லை. தங்கள் மொத்த இதயங்களுடன் என்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்களைத் தவிர வேறு எவராலும் என்னைக் காண முடியாது. உம்மைப் பொறுத்தவரையில், என்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்கள் அனைவரிலும் நிச்சயம் முதன்மையானவர் நீர்.(13) இந்த உடல்கள் நான் ஏற்கும் சிறந்த உடல்களாகும். ஓ! மறுபிறப்பாளரே, இவை தர்மனின் இல்லத்தில் பிறந்தன. நீர் எப்போதும் அவர்களை வணங்கி, அந்த வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட விதிகளுடன் கூடிய சடங்குகளைச் செய்வீராக.(14) ஓ! பிராமணரே, நீர் விரும்பும் வரங்களை என்னிடம் கேட்பீராக. இன்று நான் உம்மிடம் நிறைவடைந்திருக்கிறேன், இப்போது சிதைவிலும், அழிவிலும் இருந்து விடுபட்ட என அண்ட வடிவில் உமக்கு முன்பு தோன்றியிருக்கிறேன்" என்றான் {நாராயணன்}.(15)
நாரதர், "ஓ! புனிதமானவனே, இன்று உன் காட்சி கிடைக்கப்பெற்றதால், ஓ! தேவா, நான் நோற்று வந்த என் தவங்கள், தற்கட்டுப்பாடு, நோன்புகள் மற்றும் நியமங்கள் அனைத்தும் தாமதமில்லாமல் கனிந்திருப்பதாகக் கருதுகிறன்.(16) உண்மையில், ஓ! நித்திய தலைவா, இன்று உன்னை நீ எனக்கு வெளிப்படுத்தியதே நான் வேண்டிய உயர்ந்த வரமாகும். ஓ! புனிதமானவனே, அண்டத்தையே உன் கண்ணாகக் கொண்டவன் நீயே. சிங்கம் நீயே. உன் வடிவம் அனைத்துடனும் அடையாளங்காணத்தக்கது. ஓ! தலைவா, பலம் கொண்டவனான நீ பரந்தவனாகவும், எல்லையற்றவனாகவும் இருக்கிறாய்" என்றார்".(17)
பீஷ்மர் தொடர்ந்தார், "இவ்வாறு பரமேஷ்டியின் மகனான நாரதரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அந்தப் பெருந்தேவன் அந்தத் தவசியிடம் {நாரதரிடம்}, "ஓ! நாரதரே, செல்வீராக, தாமதிக்காதீர்.(18) சந்திர நிறத்தைக் கொண்ட இந்த வழிபாட்டாளர்கள் அனைவரும், அனைத்துப் புலன்களும் இல்லாதவர்கள், அவர்கள் எவ்வகை உணவை உண்டும் உயிர்வாழவில்லை. மேலும் அவர்கள் அனைவரும் விடுதலையடைந்தவர்களாவர் {முக்தியடைந்தவர்களாவர்}. என்னிடம் முழுமையாகக் குவிந்த மனங்களுடன் மக்கள் என்னைக் குறித்துச் சிந்திக்க {தியானிக்க} வேண்டும். அத்தகைய வழிபாட்டாளர்கள் எவ்வகைத் தடைகளையும் ஒருபோதும் எதிர்கொள்ளமாட்டார்கள்.(19) இந்த மனிதர்கள் அனைவரும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். பழங்காலத்திலிருந்தே இவர்கள் என்னிடம் முழு அர்ப்பணிப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் இருந்து விடுபட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னில் நுழையவும், என் சுயத்தில் கலக்கவும் தகுந்தவர்களாக இருக்கிறார்கள்.(20)
கண்களால் காணப்பட முடியாதவனும், தீண்டும் புலனால் தீண்டப்பட முடியாதவனும், மணப்புலனால் நுகரப்பட முடியாதவனும், சுவை புலனின் உணர்தலுக்கு அப்பாற்பட்டவனும்,(21) சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களால் தீண்டப்பட முடியாதவனும், அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், அண்டத்தின் சாட்சியாக இருப்பவனும், மொத்த அண்டத்தின் ஆன்மாவாக விளக்கப்படுபவனும்,(22) படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் உடல் அழிவிலும் அழிக்கப்படாதவனும், பிறப்பற்றவனும், மாற்றமில்லாதவனும், நித்தியமானவனும், குணங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், பிரிக்கப்பட முடியாதவனும், முழுமையானவனும்,(23) இருபத்து நான்கு தத்துவங்களைக் கடந்து நிற்கும் இருபத்தைந்தாவதாகக் கருதப்படுபவனும், புருஷன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனும், செயலற்றவனும், ஞானத்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்படக்கூடியவனும்,(24) மறுபிறப்பாளர்களில் முதன்மையானோர் நுழைந்து விடுதலை அடையும் இடமாக இருப்பவனும், நித்தியமான பரமாத்மாவுமான அவன் வாசுதேவன் என்ற பெயரால் அறியப்படுகிறான்.(25)
ஓ! நாரதரே, அந்தத் தேவனின் மகிமையையும், பலத்தையும் காண்பீராக. அவன் ஒருபோதும் நற்செயல்களாலோ, தீச்செயல்களாலோ தீண்டப்படுவதில்லை. சத்வ, ரஜஸ், தமஸ் என்பன (மூலமான) முக்குணங்களாகச் சொல்லப்படுகின்றன. இவை அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசித்துச் செயல்படுகின்றன.(27) க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படும் ஜீவாத்மாவானவன், இந்த முக்குணங்களின் செயல்பாட்டை அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்கிறான். எனினும், அவன் அவற்றைக் கடந்தவனாகவும், அவற்றால் தீண்டப்பட முடியாதவனாகவும் இருக்கிறான். இந்தக் குணங்களில் இருந்து விடுபட்ட அவன் அவற்றை அனுபவிப்பவனாகவும், தாங்கிக் கொள்பவனாகவும் இருக்கிறான். அவற்றைத் தானே உண்டாக்கிய அவன் அவை அனைத்திற்கும் மேலானவனாவான்.(28)
ஓ! தெய்வீக முனிவரே, அண்டத்தின் புகலிடமான பூமியானது (அண்ட அழிவின் வேளையில்) நீரில் மறைந்து போகும். நீரானது ஒளியில் மறைந்து போகும், ஒளியானது காற்றில் மறைந்து போகும்.(29) காற்றானது வெளியில் மறைந்து போகும், வெளியானது மனத்தில் மறைந்து போகும். மனமான பெரும்பூதம், புலப்படாதவளான பிருகிருதியில் மறைந்து போகும். புலப்படாதவளான பிருகிருதி, ஓ! பிராமணரே, செயலற்ற புருஷனில் மறைந்து போவாள். புருஷனை விட உயர்ந்ததும், நித்தியமானதுமான வேறு எதுவும் கிடையாது.(31) அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதனவற்றிற்கு மத்தியில் நித்திய புருஷனான வாசுதேவனைத் தவிர வேறு எதுவும் மாற்றமில்லாதது இல்லை.(32) பெரும்பலம் கொண்ட வாசுதேவனே அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாவான். பூமி, காற்று, வெளி, நீர் , ஐந்தாவதாக ஒளி,(33) ஆகியனவே பெரும்பலம் கொண்ட அடிப்படை பூதங்களாகும். இவை ஒன்றுக்கொன்று கலந்து உடலென்று அழைக்கப்படும் வடிவை அடைகின்றன. ஓ! பிராமணரே, நுட்பமான ஆற்றலைக் கொண்டவனும், அனைவரின் கண்களுக்கும் புலப்படாதவனும், பலமிக்கவனுமான வாசுதேவன், உடல் என்றழைக்கப்படும் அந்த ஐந்து அடிப்படை பூதக் கலவையில் நுழைகிறான். அத்தகைய நுழைவே பிறப்பு என்றழைக்கப்படுகிறது, பிறவியடையும் அவன் அந்த உடலை அசையவும், செயல்படவும் வைக்கிறான்.(34) அடிப்படையான இந்த ஐந்து பூதங்களின் கலப்பு இல்லாமல் எந்த உடலும் அமையமுடியாது.(35)
மேலும், உடலுக்குள் ஜீவன் நுழையாமல், அதனுள் வசிக்கும் மனத்தால் இயங்கவோ, செயல்படவோ முடியாது. உடலுக்குள் நுழையும் பெரும்பலம் கொண்டவனே ஜீவன் என்று அழைக்கப்படுகிறான். அவன் சேஷன் மற்றும் சங்கர்ஷணன் என்ற வேறு பெயர்களாலும் அறியப்படுகிறான்.(36) எவன் தன் செயல்களின் மூலம் சங்கர்ஷணனிலிருந்து எழுகிறானோ அவன் சனத்குமாரன் என்றும், அண்ட அழிவு நேரும்போது எவனில் அனைத்து உயிரினங்களும் கலக்குமோ, எவன் அனைத்து உயிரினங்களின் மனமாக இருக்கிறானோ அவன் பிரத்யும்னன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.(37) அவனிடம் இருந்து காரணமாகவும், விளைவாகவும் இருக்கும் படைப்பாளன் எழுகிறான். இந்த இறுதியானவனிலிருது, அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டமனைத்தும் எழுகிறது. இவனே அநிருத்தன் என்றழைக்கப்படுகிறான். அவன் வேறு வகையில் ஈசானன் என்றும் அழைக்கப்படுகிறான், அவன் செயல்கள் அனைத்திலும் வெளிப்படுகிறான்.(38) க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுபவனும், குணங்களற்றவனும், சிறப்புமிக்கவனுமான வாசுதேவனே, ஜீவனாகப் பிறப்பெடுக்கும்போது பலமிக்கச் சங்கர்ஷணனாக அறியப்படுகிறான்.(39) சங்கரஷ்ணனிலிருந்து ‘மனமாகப் பிறப்பவன்’ என்றழைக்கப்படும் பிரத்யும்னன் எழுகிறான். பிரத்யும்னனிலிருந்து அநிருத்தன் எழுகிறான். அவன் அகங்காரமாகவும், ஈஸ்வரனாகவும் (உயர்ந்த தலைவனாகவும்) இருக்கிறான்.(40)
என்னிலிருந்தே அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட மொத்த அண்டமும் எழுகிறது. ஓ! நாரதரே, அழிவில்லாதவையும், அழிவடைபவையும், இருப்பவையும், இல்லாதவையும் என்னிலேயே எழுகின்றன.(41) என்னில் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டோர் என்னில் நுழைந்து விடுதலையை {முக்தியை} அடைகின்றனர். நான் புருஷன் என்று அறியப்படுகிறேன். செயல்களற்ற நான் இருபத்தைந்தாவதாக {25வது தத்துவமாக} இருக்கிறேன்.(42) குணங்களைக் கடந்த நான் முழுமையானவனாகவும், பிரிக்கப்பட இயலாதவனாகவும் இருக்கிறேன். நான், முரண்பட்ட இரட்டைகளைக் கடந்தவனாகவும், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனாகவும் இருக்கிறேன். ஓ! நாரதரே, இதைப் புரிந்து கொள்ள நீர் தவறுவீர். வடிவுடையவனாக என்னை நீர் காண்கிறீர். நான் விரும்பினால், ஒரு கணத்தில் என்னால் இந்த வடிவத்தை மறைக்க முடியும். நானே உயர்ந்த தலைவனாகவும் {ஈஸ்வரனாகவும்}, அண்டத்தின் ஆசானாகவும் இருக்கிறேன்.(43) ஓ! நாரதரே, எதை நானாக நீர் காண்கிறீரோ அது என் மாயை மட்டுமே ஆகும். நான் இப்போது படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் குணங்களைக் கொண்டவனாகக் காணப்படுகிறேன். நீர் என்னை அறிந்து கொள்ள இயலாதவராக இருக்கிறீர்.(44) நான் என் நான்கு வகை வடிவங்களை உமக்குச் சொல்லியிருக்கிறன். ஓ! நாரதரே, நானே செயல்படுபவன், நானே காரணன், நானே விளைவும் ஆவேன்.(45)
நான் உயிரினங்கள் அனைத்தின் மொத்த கூட்டுத் தொகையாக இருக்கிறேன். அனைத்து உயிரினங்களும் என்னையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றன. ஜீவாத்மாவைக் கண்டதாக நீர் நினைக்க வேண்டாம்.(46) ஓ! பிராமணரே, அனைத்துப் பொருட்களிலும் நான் படரந்தூடுருவி இருக்கிறேன், அனைத்து உயிரினங்களின் உள்ளும் ஆன்மாவாக இருக்கிறேன். எனினும், உயிரினங்கள் அனைத்தின் உடல்களும் அழிக்கப்படும்போதும் நான் அழிவடைவதில்லை.(47) தவ வெற்றியை அடைந்த அந்த உயர்ந்த அருளைக் கொண்ட மனிதர்கள், ஓ! பெருந்தவசியே, ரஜஸ் மற்றும் தமஸ் என்ற குணங்கள் இரண்டிலிருந்தும் விடுபட்டவர்களாக என்னில் மொத்தமாக அர்ப்பணிப்புக் கொண்டு, எனக்குள் நுழைவதில் வெற்றியடைந்தார்கள்.(48) ஹிரண்யகர்ப்பன் என்றழைக்கப்படுபவனும், உலகின் தொடக்கமாக இருப்பவனும், நான்கு முகங்களைக் கொண்டவனும், நிருக்தத்தின் உதவியின்றிப் புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், பிரம்மன் என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுபவனுமான நித்திய தேவன், என் காரியங்களைச் செய்வதிலேயே ஈடுபடுகிறான்.(49) என் கோபத்தில் பிறந்த தேவன் ருத்திரன், என் நெற்றியில் இருந்து உண்டானவனாவான். என் உடலின் வலப்பகுதியில் பதினோரு ருத்திரர்கள் (வலிமையுடன்) பெருகியிருப்பதைப் பார்பீராக.(50) என் உடலின் இடப்பக்கத்தில் பனிரெண்டு ஆதித்தியர்கள் இருக்கின்றனர். என் முன்னே இருக்கும் தேவர்களில் முதன்மையான எட்டு வசுக்களையும்,(51) என் பின்னே இருக்கும் தேவ மருத்துவர்களான நாஸத்யன் மற்றும் தஸ்ரன் ஆகிய இருவரையும் பார்ப்பீராக. பிரஜாபதிகள் அனைவரையும், ஏழு முனிவர்களையும் {சப்தரிஷிகளையும்} என் உடலில் பார்ப்பீராக.(52)
வேதங்களையும், எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கான வேள்விகள் அனைத்தையும், அமுதத்தையும், மூலிகைகள், செடிகள், தவங்கள், நோன்புகள் மற்றும் பல்வேறு வகை நியமங்களையும் என்னில் காண்பீராக.(53) ஒன்று கலந்த உள்ளார்ந்த வடிவில் என்னில் மொத்தமாக வசிப்பவையும், வலிமையின் குறியீடுகளாக இருப்பவையும், தலைமையின் குணங்கள் என்று குறிப்பாக அழைக்கப்படுபவையுமான எட்டு குணங்களையும் என்னில் காண்பீராக. ஸ்ரீ, லட்சுமி, கீர்த்தி மற்றும் கூன்முதுகுடன் கூடிய பூமியையும் காண்பீராக.(54) வேதங்களின் தாயான தேவி சரஸ்வதி என்னில் வசிப்பதைக் காண்பீராக. ஓ! நாரதரே, ஆகாயத்தில் திரியும் ஒளிக்கோள்களில் முதன்மையானவனாகத் துருவனைக் காண்பீராக.(55) நீரின் கொள்ளிடங்களான பெருங்கடல்கள் அனைத்தையும், தடகாங்களையும், ஆறுகளையும் காண்பீராக. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உள்ளார்ந்த வடிவங்களில் உள்ள பித்ருக்களில் முதன்மையான நால்வரையும் காண்பீராக. வடிவமற்றவையான (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) முக்குணங்கள் என்னில் வசிப்பதையும் காண்பீராக.(56)
தேவர்களைக் கௌரவிக்கச் செய்யப்படும் செயல்களைவிடப் பித்ருக்களைக் கௌரவிக்கச் செய்யப்படும் செயல்கள் (தகுதியின் அடிப்படையில்) மேன்மையானவையாகும். தேவர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகிய இருவரின் பித்ருவான நான் (அவர்கள் இல்லாத காலத்திலிருந்தே) தொடக்கத்தில் இருந்தே இருக்கிறேன்.(57) குதிரைத் தலையாகி, மேற்கத்திய மற்றும் வடக்கத்திய பெருங்கடலில் திரிந்து, மந்திரங்களுடன் முறையாக ஊற்றப்படும் வேள்விக் காணிக்கைகளையும், மதிப்புடனும், பக்தியுடனும் அளிக்கப்படும் திடமான வேள்வி உணவுகளையும் உட்கொள்கிறேன்.(58) பழங்காலத்தில் வேள்விகளில் என்னைத் துதித்த பிரம்மனை நானே படைத்தேன். அதனால் அவனிடம் நிறைவடைந்த நான், அவனுக்குச் சிறந்த பல வரங்களை அளித்தேன்.(59) கல்பத்தின் தொடக்கத்தில் அவன் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்றும், அகங்காரம் இருப்புக்கு வரும் தொடக்கத்தின் விளைவால் பல்வேறு பெயர்கள் சூட்டப்படும் பல்வேறு பொருட்களுடன் கூடிய உலகங்கள் அனைத்தின் அரசுரிமையையும் அவனுக்குக் கிடைக்கும் என்று அவனிடம் சொன்னேன்.(60)
(உயிரினங்களின் பழக்க வழக்கத்திற்கு) அவனால் கொடுக்கப்படக்கூடியவையும், எவராலும் மீற முடியாதவையுமான எல்லைகளையும், வரைமுறைகளையும் அவனுக்குச் சொன்னேன். அவனிடம் (வேள்விகளில் முறையான செயல்களின் மூலம்) வேண்டுவோருக்கு வரங்கள் கொடுக்கக்கூடியவனாக அவன் இருப்பான் என்பதையும் அவனுக்குச் சொன்னேன்.(61) தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள், பித்ருக்கள், படைப்பில் அமைந்திருக்கும் பல்வேறு உயிரினங்கள் அனைத்தினாலும் துதிக்கத்தக்கவனாக அவன் இருப்பான் என்பதையும் அவனுக்கு உறுதிகூறினேன்.(62) தேவர்களின் காரியத்தை நிறைவேற்ற நான் எப்போதும் வெளிப்படுவேன் என்பதையும், அக்காரியத்திற்காக அவன் ஒரு தந்தை தன் மகனை அழைப்பதைப் போல என்னை அழைப்பதையும் ஏற்பேன் என்பதையும் அவனுக்குப் புரிய வைத்தேன்.(63) நான் பிரம்மனிடம் நிறைவு கொண்டதன் விளைவால் அளவிலா சக்தி கொண்ட அவனுக்கு ஏற்புடைய பல உயர்ந்த வரங்களை அருளினேன். (மீண்டும்) நான் நிவிருத்தி சொல்லும் நடைமுறையைப் பின்பற்றினேன்.(64) உயர்ந்த நிவிருத்தியானது கடமைகள் மற்றும் செயல்கள் அனைத்தையும் அழிப்பதில் அடையாளம் காணப்படும். எனவே, நிவிருத்தியைப் பின்பற்றும் ஒருவன் மற்றான இன்பநிலையை அடைய வேண்டும்.(65) சாங்கிய தத்துவ உண்மைகளில் இருந்து பெறப்பட்ட தீர்மானமான முடிவுகளுடன் கூடிய கல்விமான்களான ஆசான்கள், ஞானப் பலத்தைக் கொண்ட கபிலரைப் போலவே, சூரியனின் பிரகாசத்திலும், யோகத்தின் குவிந்த நிலையிலும் வசிப்பவனாக என்னைக் குறித்துச் சொல்லியிருக்கின்றனர்.(66)
(வேத) சந்தங்களில் சிறப்புமிக்க ஹிரண்யகர்ப்பனால் மீண்டும் மீண்டும் பாடப்படுபவன் நானே. ஓ! பிராமணரே, யோக சாத்திரங்கள், யோகத்தில் திளைப்பவனாக என்னைக் குறித்துச் சொல்கின்றன.(67) நான் நித்தியமானவன். வெளிப்படும் ஒரு வடிவை ஏற்கும் நான், தற்போது சொர்க்கத்தில் வசித்து வருகிறேன். ஆயிரம் யுகங்களின் முடிவில் நான் மீண்டும் இந்த அண்டத்தை என்னுள் ஈர்த்துக் கொள்வேன்.(68) அசைவன மற்றும் அசையாதன உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தையும் என்னுள் ஈர்த்துக் கொண்ட பிறகு, ஞானத்தை மட்டுமே துணையாகக் கொண்டு நான் நீடித்திருப்பேன்.(69) பல காலங்கள் கழிந்ததும், மீண்டும் என் ஞானத்தின் துணையுடன் நான் அண்டத்தைப் படைப்பேன். என்னுடைய நான்காவது வடிவமானது அழிவற்ற சேஷனை உண்டாக்குகிறது.(70) சேஷன் சங்கர்ஷணன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறன். சங்கர்ஷணன் பிரத்யும்னனை உண்டாக்குவான். பிரத்யும்னனிலிருந்து நான் அநிருத்தனாகப் பிறப்பெடுக்கிறேன். நான் மீண்டும் மீண்டும் (என்னை) படைத்துக் கொள்கிறேன்.(71) அநிருத்தனிலிருந்து பிரம்மன் உண்டாகிறான். பின்னவன் அநிருத்தனின் தொப்புலிலிருந்து பிறப்பை அடைகிறான். பிரம்மனிலிருந்து அசைவன மற்றும் அசையாதன உள்ளிட்ட உயிரினங்கள் எழுகின்றன.(72)
ஒவ்வொரு கல்பத்தின் தொடக்கத்திலும் படைப்பானது இவ்வழியிலேயே மீண்டும் மீண்டும் நேர்கிறது என்பதை அறிவாயாக. இவ்வுலகில் நேரும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனன் போலவே படைப்பும், அழிவும் அடுத்தடுத்து நேர்கின்றன.(73) மேலும் அளவிலா சக்தி கொண்ட காலமானது மறைந்த சூரியனை மீண்டும் கொண்டு வருவதைப் போலவே, பூமியானவள் நீருக்கடியில் மூழ்கும் போது, அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகப் பன்றியின் வடிவை ஏற்று, கடலெனும் கச்சையைக் கொண்ட பூமியை மீண்டும் தன் நிலையில் நிறுத்துவேன். அதன்பிறகு, பலத்தின் செருக்கால் நிறைந்த ஹிரண்யாக்ஷன் என்ற பெயரைக் கொண்ட திதியின் மகனைக் கொல்வேன்.(74,75) பிறகு தேவர்களுக்கு நன்மை செய்வதற்காகச் சிங்கமனிதன் {நரசிங்க} வடிவை ஏற்று, வேள்விகளை அழிப்பவனான திதியின் மகன் ஹிரண்யகசிபுவைக் கொல்வேன்.(76)
(பிரஹலாதனின் மகனான) விரோசனனுக்குப் பலி என்ற பெயரில் ஒரு வலிமைமிக்க மகன் பிறப்பான். அந்தப் பேரசுரன் தேவர்களாலும், அசுரர்களாலும், ராட்சசர்களாலும் கொல்லப்பட முடியாதவனாக இருப்பான். அவன் சக்ரனை அண்டத்தின் ஆட்சியுரிமையில் இருந்து தூக்கி வீசுவான்.(77) சசியின் தலைவனை முறியடித்த பிறகு, மூவுலகங்களின் அரசுரிமையையும் அவன் எடுத்துக் கொண்ட பிறகு, நான் கசியபரின் மூலமாக அதிதியின் கருவறையில் பனிரெண்டாவது ஆதித்தியனாகப் பிறப்பேன்.(78) ஓ! நாரதரே, அளவற்ற காந்தியைக் கொண்ட இந்திரனிடம் அதை (பலியிடம் இருந்து மூவுலகங்களின் அரசுரிமையைப் பறித்து) மீட்டளித்து, தேவர்களை அவர்களுக்குரிய இடங்களில் மீண்டும் நிறுவுவேன்.(79) தானவர்களில் முதன்மையான பலியைப் பொறுத்தவரையில், அவனைப் பாதாள உலகங்களில் வசிக்கச் செய்வேன்.(80)
திரேதா யுகத்தில் பிருகு குலத்தில் ராமனாக {பரசுராமராகப்} பிறந்து, பலத்திலும், உடமைகளிலும் செருக்கடைந்திருக்கும் க்ஷத்திரியர்களை அழிப்பேன்.(81) திரேதா யுகம் முடிந்து, துவாபர யுகத்தின் தொடக்கத்தில் நான் இக்ஷ்வாகு அரச குலத்தைச் சார்ந்த தரசரதனின் மகன் ராமனாக நான் பிறப்பெடுப்பேன்.(82) அந்நேரத்தில், ஏகதர், திவிதர் என்ற பெயர்களால் அழைக்கப்படும் பிரஜாபதியின் இரண்டு மகன்கள், தங்கள் தம்பியான திரிதருக்குச் செய்த தீங்கின் விளைவால், மனித வடிவின் அழகை இழந்து குரங்குகளாகப் பிறப்பை அடைவர்.(83) ஏகதர் மற்றும் திவிதரின் குலத்தில் பிறக்கும் குரங்குகள், பெரும்பலத்திலும், வலிமையிலும், சக்தியிலும் பெருகி, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான ஆற்றலைப் பெற்றிருப்பர். ஓ! மறுபிறப்பாளரே, அந்தக் குரங்குகள் அனைத்தும், தேவ காரியங்களை நிறைவேற்றுவதில் எனக்குக் கூட்டாளிகளாவர்.(84) பிறகு நான், ராட்சசர்களின் பயங்கரத் தலைவனும், புலஸ்திய குலத்தில் இழிந்தவனும், சீற்றமிக்கவனும், உலகங்கள் அனைத்துக்கும் முள்ளாக இருப்பவனுமான ராவணனை அவனது பிள்ளைகள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்துக் கொல்வேன்.(85)
துவாபர மற்றும் கலியுகங்களின் சந்திக்கு நெருக்கமான காலத்தில், மதுரா நகரத்தில் பிறப்பை அடைந்து, கம்சனை அழிக்கும் நோக்கத்திற்காக நான் உலகில் மீண்டும் தோன்றுவேன்.(86) அங்கே தேவர்களுக்கு முட்களாக இருக்கும் தானவர்களில் எண்ணற்றவர்களைக் கொன்ற பிறகு, நான் துவாரகை நகரத்தின் குசஸ்தலியில் என் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வேன்.(87) அந்நகரத்தில் வசித்திருக்கும்போது, அதிதிக்குத் தீங்கை இழைத்தவனும், பூமியின் மகனுமான அசுரன் நரகனையும், முரன் மற்றும் பீடன் என்ற வேறு சில தானவர்களையும் கொல்வேன்.(88) மற்றொரு முதன்மையான தானவனான பிராக்ஜோதிஷத் தலைவனையும் கொன்று, அந்த இனிமை நிறைந்த நகரத்தில் இருந்து பல்வேறு வகைச் செல்வங்களைத் துவாரகைக்குக் கொண்டு வருவேன்.(89) {பேரனான அநிருத்தனுக்காகச் சோணிதபுரமென்கிற பாணாஸுரனுடைய நகரத்தை அடைந்து பெரும்போர் புரிவேன், [அப்பொழுது]} தானவன் பாணனுக்கு {பாணாசுரனுக்கு} நன்மை செய்வதில் பற்றுள்ளவர்களும், தங்கள் வழிபாட்டாளர்களுக்காக என்னுடன் போரிட முயல்பவர்களும், தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுபவர்களுமான மஹேஸ்வரனையும் {சிவனையும்}, மஹாசேனனையும் {முருகனையும்} நான் வெல்வேன்[2].(90) தானவன் பலியின் மகனும், ஆயிரம் கரங்களைக் கொண்டவனுமான பாணனை வென்று, அடுத்ததாகச் சௌபம் என்றழைக்கப்படும் தானவ நகரத்தில் வசிப்போர் அனைவரையும் அழிப்பேன்.(91) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, அடுத்ததாக நான், கர்க்கரின் சக்தியின் விளைவால் பெரும் வலிமை பெற்றிருக்கும் தானவனான கால யவனனைக் கொல்வேன்[3].(92)
[2] "பலியின் மகனான பாணன், மஹாதேவனிடம் {சிவனிடம்} அர்ப்பணிப்புக் கொண்ட வழிபாட்டாளனாவான். பாணனின் மகளான உஷை, கிருஷ்ணனின் பேரனான அநிருத்தனிடம் காதலில் வீழ்கிறாள். அநிருத்தன் பாணனால் சிறைபிடிக்கப்படுகிறான். அநிருத்தனைக் காக்கவே கிருஷ்ணன், மஹாதேவனையும், கார்த்திகேயனையும் வென்று, பாணனுடன் போரிட்டான். பாணனின் ஆயிரத்தோரு கரங்களில் இரண்டைத் தவிர்த்து மற்றவை அனைத்தும் கிருஷ்ணனால் துண்டிக்கப்பட்டன. அநிருத்தன் மற்றும் உஷையின் காதலைச் சொல்லும் பகுதி மிக அழகான ஒன்றாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] சௌபம் என்பது தானவர்களின் பறக்கும் நகரமாகும்.கிருஷ்ணன் அந்த நகரத்தில் வசித்தோர் அனைவரையும் கொன்று, அதைக் கடலில் வீழ்த்தினான். காலயவனன் பின்வரும் சூழ்நிலையில் கிருஷ்ணனால் கொல்லப்பட்டான். தானவனால் துரத்தப்பட்ட கிருஷ்ணன், சத்ய யுகத்தைச் சேர்ந்த மன்னன் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு மலைக்குகையைப் புகலிடமாக அடைந்தான். அந்தக் குகைக்குள் நுழைந்த கிருஷ்ணன், உறங்கிக் கொண்டிருக்கும் மன்னனின் தலைமாட்டில் நின்றான். கிருஷ்ணனைப் பின்தொடர்ந்து சென்ற தானவன், அங்கே மன்னன் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனை விழிப்படையச் செய்தான். அவனை விழிப்படையச் செய்பவர்கள் அவனது பார்வையால் எரிந்து போவார்கள் என்ற வரத்தைத் தேவர்கள் அம்மன்னனுக்குக் கொடுத்திருந்ததால் மன்னன் அந்தத் தானவனைக் கண்டதும் அவன் சாம்பலாக எரிந்து போனான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உலகின் பிற மன்னர்கள் அனைவருடனும் சச்சரவு செய்பவனும், ஜராசந்தன் என்ற பெயரைக் கொண்டவனுமாக ஒரு செருக்குமிக்க அசுரன் கிரிவ்ரஜத்தின் மன்னனாகத் தோன்றுவான். அவனது மரணம் என் புத்தியின் துணையால் வேறு ஒருவரால் ஏற்படுத்தப்படும்.(93) அடுத்ததாக நான், உலகின் மன்னர்கள் அனைவராலும் கப்பம் கட்டப்படுவதும், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனால் செய்யப்படுவதுமான வேள்வியில் சிசுபாலனைக் கொல்வேன். இந்தச் செயல்கள் சிலவற்றில் வாசவனின் மகனான அர்ஜுனன் மட்டுமே எனக்குத் துணைவனாக இருப்பான்.(94,95) யுதிஷ்டிரனையும், அவனது தம்பிகள் அனைவரையும் அவர்களது மூதாதையரின் நாட்டில் நிறுவுவேன். உலகிற்கு நன்மை செய்யும் பொருட்டு, நானும் அர்ஜுனனும் பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்களை எங்கள் பலத்தால் எரிக்கும்போதும், என்னையும் அவனையும் {அர்ஜுனனையும்} மக்கள் நாராயணன் என்றும், நரனென்றும் அழைப்பார்கள். எங்கள் விருப்பப்படி பூமியின் கனத்தைக் குறைத்தபிறகு, அனைத்தையும் தழுவும் என் சானத்தை நினைவுகூர்ந்து, முக்கியச் சாத்வதர்கள் அனைவரையும், எனக்கு மிகப் பிடித்த நகரமான துவாரகையையும் என்னுள் கலப்பேன்.(96-98)
நான்கு வடிவங்களைக் கொண்ட நான் இவ்வாறு பெரும் ஆற்றலைக் கொண்ட பல செயல்களைச் செய்து, என்னால் படைக்கப்பட்டதும், பிராமணர்கள் அனைவராலும் மதிக்கப்படுவதுமான பேரின்ப உலகங்களுக்குள் இறுதியாக நுழைவேன்.(99) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அன்னப்பறவை, ஆமை, மீன் எனத் தோன்றிய பிறகு நான் பன்றியாக வெளிப்பட்டு, பின்னர்ச் சிங்கமனிதனாகவும் {நரசிங்கமாகவும்}, குள்ளனாகவும் {வாமனனாகவும்}, பிருகு குலத்தின் ராமனாகவும், தசரதனின் மகன் ராமனாகவும், சாத்வதக் குலக்கொழுந்தான கிருஷ்ணனாகவும், இறுதியில் கல்கியாகவும் வெளிப்படுவேன்.(100) வேதங்களிலுள்ள திறன் தேர்வுகள் இவ்வுலகில் இருந்து மறையும்போது அவற்றை நான் மீண்டும் கொண்டுவருவேன். கிருத யுகத்தில், வேதங்களும், அவற்றின் திறன் தேர்வுகளும் என்னால் மீண்டும் படைக்கப்பட்டன.(101) அவை மீண்டும் மறைந்து போகின்றன, அல்லது புராணங்களில் இருந்து பகுதி அளவில் மட்டுமே கேட்கப்படுகின்றன. என் சிறப்புத் தோற்றங்கள் பலவும் உலகில் கடந்த காலச் செய்திகளாகிவிட்டன.(102) நான் தோன்றிய வடிவங்களில் உலகின் நன்மையை அடைந்து மீண்டும் நான் எனச் சொந்த இயல்புக்குத் திரும்பியிருக்கிறேன். ஓ! நாரதரே, உமது முழுமையான பக்தியின் விளைவால் நீர் இன்று காணும் இந்த எனது வடிவத்தைப் பிரம்மனே கூடக் கண்டதில்லை. ஓ! பிராமணரே, என்னில் முழுமையான பக்தி கொண்டிருக்கும் உமக்கு நான் இப்போது அனைத்தையும் சொல்லிவிட்டேன். ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் கடந்த காலத் தோற்றங்களையும், எதிர்காலத் தோற்றங்களையும், அவற்றின் புதிர்கள் அனைத்துடன் சேர்த்து உமக்குச் சொல்லிவிட்டேன்" என்றான் {நாராயணன்}.(104)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "மாற்றமில்லாத அண்டந்தழுவிய வடிவைக் கொண்டவனும், புனிதமானவனுமான அந்தச் சிறப்புமிக்கத் தேவன், இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அப்போதே அங்கேயே மறைந்து போனான்.(105) பெருஞ்சக்தி கொண்ட நாரதர், வேண்டிய உயர்ந்த ஆதரவை அடைந்து, நரனையும், நாராயணனையும் காண பதரி என்றழைக்கப்படும் ஆசிரமத்திற்குப் பெரும் வேகத்துடன் சென்றார்.(106) நான்கு வேதங்களுக்கு முற்றிலும் இணக்கமானதும், சாங்கிய யோகத்துடன் ஒத்திசைவதும், பஞ்சராத்ர சாத்திரங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுவதும், நாராயணனின் வாயாலேயே சொல்லப்பட்டதுமான இந்தப் பெரும் உபநிஷதத்தை, நாராயணனின் உதடுகளில் இருந்து தாம் கேட்டதுபோலவே, நாரதர் (தமது தந்தையான) பிரம்மனின் வசிப்பிடத்தில் கேட்கும் பலரின் முன்னிலையில் சரியாக அதே முறையில் மீண்டும் சொன்னார்" {என்றார் பீஷ்மர்}.(107,108)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "நுண்ணறிவைக் கொண்ட நாராயணனின் மகிமையைச் சொல்லும் இந்த அற்புத உரையை, அனைத்துப் பொருட்களையும் படைத்தவரான பிரம்மன், நாரதரின் உதடுகளில் இருந்து கேட்டான் என்றால், இது குறித்து அவர் அறியாதவரா? (109) உலகங்கள் அனைத்தின் சிறப்புமிக்கப் பெரும்பாட்டன் எவ்வகையிலாவது பெரும் நாராயணனிடம் இருந்து வேறுபட்டவரா அல்லது தாழ்ந்தவரா? அளவற்ற சக்தியைக் கொண்ட நாராயணனின் பலத்தை அவர் எவ்வாறு அறியாமல் இருந்தார்?" என்று கேட்டான்.(110)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னர்களின் மன்னா, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெருங்கல்பங்களும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான படைப்புகளும் அழிவுகளும் ஏற்கனவே நேர்ந்து, கடந்த கால நிகழ்வுகள் ஆகிவிட்டன.(111) ஒவ்வொரு படைப்பின் தொடக்கத்திலும், பெரும் பலம் கொண்டவனும், அனைத்துப் பொருட்களைப் படைப்பவனுமான பிரம்மன் (நாராயணனால்) நினைக்கப்படுகிறார். ஓ! மன்னா, தேவர்கள் அனைவரிலும் முதன்மையான நாராயணன் தம்மைவிட மேம்பட்டவன் என்பதைப் பிரம்மா நன்கறிவார்.(112) நாராயணனே பரமாத்மா என்பதையும், அவனே உயர்ந்த தலைவன் {நியந்தா} என்பதையும், அவனே பிரம்மனையும் படைப்பவன் என்பதையும் அவன் அறிவான். பிரம்மனின் வசிப்பிடத்திற்கு வந்திருந்தவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான முனிவர் கூட்டத்திற்கே நாரதர், பழமையானதும், வேதங்களுக்கு இணக்கமானதுமான இந்தப் பழைய புராணத்தைச் சொன்னார். தேவன் சூரியன், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட அந்த முனிவர்களிடம் இருந்து அந்தப் புராணத்தைக் கேட்டு, ஓ! மன்னா, தன் பரிவாரத்தில் தொடர்பவர்களும் தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டோருமான அறுபத்தாறாயிரம் முனிவர்களுக்கு அதை மீண்டும் சொன்னான்.(113-11¬5)
உலகங்கள் அனைத்திற்கும் வெப்பத்தைக் கடத்தும் தேவனான சூரியன், தனக்கு முன்பு எப்போதும் பயணிப்பதற்காக (பிரம்மனால்) படைக்கப்பட்ட அவர்களுக்கு மீண்டும் அந்தப் புராணத்தைச் சொன்னான்.(116) ஓ! மகனே, சூரியனின் பரிவாரத்தைப் பின்தொடர்பவர்களான அந்த உயர் ஆன்ம முனிவர்களும், மேருவின் சாரலில் கூடும் தேவர்களுக்கு இந்தச் சிறந்த புராணத்தை மீண்டும் சொன்னார்கள்.(117) ஓ! மன்னர்களின் மன்னா, தவசிகளில் சிறந்தவரும், மறுபிறப்பாளருமான அசிதர், தேவர்களிடமிருந்து இந்தப் புராணத்தைக் கேட்டுப் பித்ருக்களுக்கு அதை மீண்டும் சொன்னார்.(118) ஓ! மகனே, முற்காலத்தில் இந்தப் புராணத்தை என் தந்தையான சந்தனு எனக்குச் சொன்னார். ஓ! பாரதா, என் தந்தையிடமிருந்து அதைக் கேட்ட நான் இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(119) புராணம் என்றழைக்கப்படும் இந்தச் சிறந்த பழங்கதையைக் கேட்ட தேவர்களும், முனிவர்கள் அனைவரும் பரமாத்மாவைத் துதிக்கின்றனர்.(120)
ஓ! மன்னா, முனிவர்களுக்குச் சொந்தமானதும், இப்படி ஒருவருக்கொருவர் வழிவழியாகச் சொல்லப்படுவதுமான இந்தப் புராணத்தை, வாசுதேவனை வழிபடாத எவருக்கும் நீ சொல்லக்கூடாது.(121) ஓ! மன்னா, நீ என்னிடம் இருந்து கேட்டிருக்கும் இந்தப் புராணம் உண்மையில் வேறு நூறு புராணங்களின் சாரங்களைக் கொண்டதாகும்.(122) ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் தேவர்களும் அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலைக் கடைந்து அமுதத்தை உண்டாக்கினர். அதே போலவே, பழங்காலத்தில் ஒன்றுகூடிய பிராமணர்கள், சாத்திரங்கள் அனைத்தையும் கடைந்து, அமுதத்துக்கு ஒப்பான இந்தப் புராணத்தை உண்டாக்கினர்.(123) ஓர் ஓய்வான இடத்தில் குவிந்த கவனத்துடனும், நிறைந்த அர்ப்பணிப்புடனும் இந்தப் புராணத்தை அடிக்கடி படிப்பவனும், அடிக்கடி கேட்பவனும்,(124) வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு பெரிய தீவில், சந்திரனின் நிறத்தைக் கொண்ட சொர்க்கவாசியாவதில் வெல்கிறான். அத்தகைய ஒரு மனிதன் ஆயிரம் கதிர்களைக் கொண்ட நாராயணனுக்குள் நுழைவதில் வெல்கிறான் என்பதில் ஐயமில்லை.(125)
நோயாளி ஒருவன், இந்தப் புராணத்தைத் தொடக்கத்தில் இருந்து கேட்பதால் தன் நோயில் இருந்து விடுதலையடைகிறான். இந்தப் புராணத்தைப் படிக்கவோ, கேட்கவோ விரும்பும் மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைகிறான். அர்ப்பணிப்புக் கொண்ட வழிபாட்டாளன், இதைப் படிப்பதினாலோ, கேட்பதினாலோ, அர்ப்பணிப்புமிக்க வழிபாட்டாளர்களுக்காக முன்பதிவு செய்யப்படும் உயர்ந்த கதியை அடைகிறான்.(126) ஓ! ஏகாதிபதி, அனைத்திலும் முதன்மையான அவனை நீயும் எப்போதும் துதித்து வழிபட வேண்டும். அவனே அனைத்து உயிரினங்களின் தந்தையும், தாயுமாக இருக்கிறான். மொத்த அண்டத்திலும் அவனே மதிப்புமிக்கப் பொருளாகிறான்.(127) ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, பிராமணர்களின் சிறப்புமிக்க நித்திய தேவனும், உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் உன்னிடம் நிறைவு கொள்ளட்டும்" {என்றார் பீஷ்மர்}".(128)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஜனமேஜயா, இந்தச் சிறந்த புராணத்தைக் கேட்டு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனும், அவனது தம்பிகள் அனைவரும் நாராயணனிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டோராகினர்.(129) ஓ! பாரதா, (அந்த நாளில் இருந்து) அவர்கள் அனைவரும் நாராயணனை அமைதியாகத் தியானிக்கும் பயிற்சியை மேற்கொண்டு, "சிறப்புமிக்கவனான அந்தப் புனிதமானவனுக்கே வெற்றி" என்ற வார்த்தைகளை அவனை மகிமைப்படுத்தும் வகையில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.(130) மேலும், ஆசான்களில் சிறந்தவரும், தீவில் பிறந்தவரும் {துவைபாயனரும்}, தவங்களில் அர்ப்பணிப்புமிக்கவருமான கிருஷ்ணர் {வியாசர்}, அமைதியாக உரைக்கத்தகுந்த உயர்ந்த மந்திரமான "நாராயணா" என்ற சொல்லைச் சொல்லி பாடினார்.(131) அவர், எப்போதும் அமுதத்தின் வசிப்பிடமாக இருக்கும் பாற்கடலுக்கு ஆகாயத்தின் மூலம் பயணித்து, அங்கே அந்தப் பெருந்தேவனை வழிபட்டு, மீண்டும் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(132)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "(பிரம்மனின் வசிப்பிடத்தில் கூடியிருந்த முனிவர் கூட்டத்திற்கு) நாரதரால் சொல்லப்பட்ட புராணத்தையே நான் இப்போது உனக்கு மீண்டும் சொன்னேன். இந்தப் புராணம், பழங்காலத்தில் இருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இறங்கி வந்திருக்கிறது. நான் முற்காலத்தில் இதை எனக்குத் திரும்பச் சொன்ன என் தந்தையிடம் இருந்து கேட்டேன்".(133)
சூதர் {சௌதியானவர் சௌனகரிடம்} தொடர்ந்தார், "வைசம்பாயனர் ஜனமேஜயனுக்குச் சொன்ன அனைத்தையும் நான் இப்போது உமக்குச் சொன்னேன். வைசம்பாயனரின் விவரிப்பைக் கேட்ட மன்னன் ஜனமேஜயன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி தன் கடமைகள் அனைத்தையும் செய்தான்.(134) நீங்கள் அனைவரும் கடுந்தவங்களைச் செய்தவர்களாகவும், உயர்ந்தவையும், சிறந்தவையுமான பல நோன்புகளையும் நோற்பவர்களாகவும் இருக்கிறீர்கள். நைமிசம் என்ற பெயரில் அறியப்படும் இந்தப் புனிதமான காட்டில் வசிக்கும் நீங்கள் வேதங்கள் அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையாவர்கள் ஆவீர்கள்.(135) மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் அனைவரும் சௌனகரின் இந்தப் பெரும் வேள்விக்கு வந்திருக்கிறீர்கள். சிறந்த வேள்விகளில் நீங்கள் அனைவரும், தெளிந்த நெய்யிலான ஆகுதிகளை மந்திரங்களின் துணையுடன் நெருப்புக்குள் முறையாக ஊற்றியும், அவற்றை நாராயணனுக்குக் காணிக்கையாக்கியும், நித்தியமானவனும், உயர்ந்த தலைவனுமான அவனையே வழிபட்டுத் துதிப்பீராக. என்னைப் பொறுத்தவரையில், நான் இந்தச் சிறந்த புராணத்தைப் பரம்பரைவழியாக முற்காலத்தில் என் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன்" {என்றார் சௌதி}.(136)
சாந்திபர்வம் பகுதி – 340ல் உள்ள சுலோகங்கள் : 136
ஆங்கிலத்தில் | In English |