Narayaneeya of Vyasa! | Shanti-Parva-Section-341 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 168)
பதிவின் சுருக்கம் : பிரம்மன் முதலிய தேவர்கள் தவமிருந்ததையும்; நாராயணன் அவர்களுக்கு வரமளித்ததையும், பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி அறங்களை நாராயணன் பிரம்மனுக்குச் சொன்னதையும் தமது சீடர்களுக்குச் சொன்ன வியாசர்...
சௌனகர் {சௌதியிடம்}, "வேதங்களையும், அதன் அங்கங்களையும் முழுமையாக அறிந்தவனும், சிறப்புமிக்கத் தேவனும், பலமிக்கவனுமான நாராயணன், ஒரே நேரத்தில் வேள்விகளைச் செய்பவனாகவும், அவற்றை அனுபவிப்பவனாகவும் எவ்வாறு இருக்கிறான்?(1) மன்னிக்கும் தன்மையுடன் கூடிய அவன், (தவிர்க்கும் தன்மையான) நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுகிறான். உண்மையில், நிவிருத்தியின் கடமைகளை அந்தப் பலமிக்கப் புனிதமானவனே விதித்திருக்கிறான்.(2) அவ்வாறிருக்கையில், பிரவிருத்தி அறத்தின் மூலம் விளையும் வேள்விப் பங்குகளைத் தேவர்கள் பலர் ஏன் எடுத்துக் கொள்கின்றனர்? தவிர்க்கும் அறத்தின் விதிகளைச் சிலர் பின்பற்றுகின்றனர், அவன் ஏன் தன் மனோநிலைக்கு முரணாகச் சிலரை படைத்திருக்கிறான்?(3) ஓ! சூதா, இந்த எங்கள் ஐயங்களை விலக்குவாயாக. இந்த ஐயம் நித்தியமானதாகவும், பெரும்புதிர் தொடர்புடையதாகவும் தெரிகிறது. (பிற) சாத்திரங்களுக்கு இணக்கமானவையும், நாராயணன் குறித்தவையுமான கதைகள் அனைத்தையும் நீ கேட்டிருக்கிறாய்" என்றார் {சௌனகர்}.(4)
சௌதி, "ஓ! சிறந்த சௌனகரே, வியாசரின் சீடரான வைசம்பாயனர், இக்காரியம் குறித்து ஜனமேஜயனால் கேள்வி கேட்கப்பட்டபோது சொன்னவற்றை உமக்குச் சொல்கிறேன்.(5) உயிரினங்கள் அனைத்தின் உள்ளார்ந்த ஆன்மாவாக இருப்பவனான நாராயணனின் மகிமையைக் கேட்டவனும், நுண்ணறிவும், ஞானமும் மிக்கவனுமான ஜனமேஜயன் சரியாக இக்காரியங்களைக் குறித்து வைசம்பாயனரிடம் கேட்டான்.(6)
ஜனமேஜயன் {வைசம்பாயனர்}, "பிரம்மன், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகியோருடன் கூடிய மொத்த உலகங்களும், செழிப்பை உண்டாக்குபவையாகச் சொல்லப்படும் செயல்களுடன் ஆழமான தொடர்புடையவையாகத் தெரிகின்றன.(7) ஓ! மறுபிறப்பாளரே, இருப்பை இல்லாமலாக்குவதும், உயர்ந்த நிலையுமான விடுதலை {முக்தி} நிலையானது உம்மால் சொல்லப்பட்டது. தகுதி, தகுதியின்மை ஆகிய இரண்டுமற்று விடுதலையடைபவர்கள் {முக்தியடைபவர்கள்}, ஆயிரம் கதிர்களைக் கொண்ட பெருந்தேவனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள் என நாம் கேட்கிறோம்.(8) ஓ! பிராமணரே, நித்தியமான விடுதலை அறத்தை {மோக்ஷ தர்மத்தைப்} பயில்வது மிகக் கடினமானதாகத் தெரிகிறது. இதிலிருந்து மாறுபடும் தேவர்கள் அனைவரும், வேள்வி நெருப்புகளிலும், இதே வழிமுறைகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் பிற காணிக்கைகளிலும், மந்திரங்களுடன் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள்.(9) மேலும், பிரம்மன், ருத்திரன், வலனைக் கொன்றவனான பலமிக்கச் சக்ரன் {இந்திரன்}, சூரியன், விண்மீன்களின் தலைவன் (சத்திரமாஸ்), காற்றின் தேவன் {வாயு}, நெருப்பின் தேவன் {அக்னி}, நீர்நிலைகளின் தேவன் {வருணன்}, (உயிரோட்டமான) அளவற்ற வெளி {ஆகாயம்}, (விழிப்புணர்வு கொண்ட) அண்டம், எஞ்சிய சொர்க்கவாசிகள் ஆகிய இவர்கள், தன் முயற்சியால் கொண்டுவரப்படும் விழிப்புடன் கூடிய இருப்பை அழிக்கும் வழிமுறையை அடைவது குறித்து அறியாதவர்களாக இருப்பதாகத் தெரிகிறது[1].(10,11) எனவே, அழிவற்ற, மாற்றமில்லாத பாதையை அவர்கள் அடையவில்லை என்பது உறுதியானதாகும். அந்தப் பாதையைவிட்டு விலகி, காலத்தால் அளக்கப்படும் விழிப்புடன் கூடிய இருப்புநிலைக்கு வழிவகுக்கும் பிரவிருத்தி அறத்தை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.(12) உண்மையில், நிலையற்ற வெகுமதிகளைக் கொடுக்கும் செயல்களுடன் பற்றுடைய இது பெருங்களங்கமாகும். ஓ! மறுபிறப்பாளரே, இந்த ஐயம் என் இதயத்தில் குத்திய வாளாக {தைத்த முள்ளாக} இருக்கிறது. இதுகுறித்த பழைய கதைகளைச் சொல்லி அஃதை அகற்றுவீராக.(13) ஓ! மறுபிறப்பாளரே, பல்வேறு வகை வேள்விகளில் மந்திரங்களின் துணையுடன் தேவர்களுக்கு அளிக்கப்படும் வேள்விக் காணிக்கைகளில் அவர்கள் தங்களுக்குரிய பங்குகளை எடுத்துக் கொள்வதாக எக்காரணத்தினால் சொல்லப்படுகிறது? மேலும் தேவர்கள் வேள்விகளில் ஏன் துதிக்கப்படுகின்றனர்?(14) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பிறர் செய்யும் வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளின் பங்கை எடுத்துக் கொள்ளும் அவர்கள் யாருக்காகப் பெரும் வேள்விகளைச் செய்கிறார்கள்?" என்று கேட்டான்.(15)
[1] "அடையப்படும் உயர்ந்த கதியின் விளைவால் நிவிருத்தி அறமே மேன்மையானதாக இருந்தால், நம்மிலும் மேன்மையான தேவர்கள் ஏன் அவற்றைப் பின்பற்றுவதில்லை? விடுதலையை {முக்தியை} அடையும் வழிமுறைகளை அவர்கள் அறியாதவர்களா?" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸனாதனமான மோக்ஷதர்மமானது அனுஷ்டிக்க அரியது. தம் காலத்தின் அளவை நினைத்தும் (ஸ்ருஷ்டி முதலான) பிரவிருத்தியை அடைந்தவர்களான பிரம்மா, ருத்ரர், வலாஸுரனைக் கொன்றவரும், பிரபுவுமான இந்திரன், ஸூர்யன், சந்திரன், வாயு, அக்கினி, வருணன், ஆகாயம், பிருதிவி மற்றுமுள்ள தேவர்கள் ஆகிய இவர்கள் தமக்கு ஏற்பட்ட நாசத்தை அறியவில்லையா? அதனால்தான் அவர்கள் நிலையுள்ளதும், நாசமில்லாததும், கெடுதலில்லாததுமான மோக்ஷதர்மத்தை அடையவில்லையா?" என்றிருக்கிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நீ என்னிடம் கேட்ட இந்தக் கேள்வி ஓர் ஆழ்ந்த புதிர் தொடர்புடையதாகும். தவங்களைச் செய்யாதவனும், புராணங்களை அறியாதவனுமான எந்த மனிதனாலும் இதற்கு விரைவாகப் பதிலளிக்க முடியாது.(16) எனினும், வியாசர் என்று அழைக்கப்படுபவரும், தீவில் பிறந்தவரும், வேதங்களை வகுத்த பெரும் முனிவருமான எங்கள் ஆசான், முன்பொரு காலத்தில் எங்களால் கேள்வி கேட்கப்பட்டபோது சொன்னதை உனக்குச் சொல்கிறேன்.(17) சுமந்தர், ஜைமினி, உறுதியான நோன்புகளைக் கொண்ட பைலர், நான்காவதாக {வைசம்பாயனனாகிய} நான், ஐந்தாவதாக உகர் ஆகியோர் சிறப்புமிக்க வியாசரின் சீடர்களாக இருந்தோம்.(18) எண்ணிக்கையில் ஐவராக இருந்த நாங்கள் தற்கட்டுப்பாடு மற்றும் நோன்புகளில் தூய்மை கொண்டவர்களாகவும், கோபத்தையும் எங்கள் புலன்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்தியவர்களாகவும் இருந்தோம். எங்கள் ஆசான் மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட வேதங்களை எங்களுக்குக் கற்பித்து வந்தார்.(19) ஒரு காலத்தில், மலைகளில் முதன்மையானதும், சித்தர்களும், சாரணர்களும் வசித்து வந்த இடமும், இனிமை நிறைந்ததுமான மேருவின் சாரலில் வேத கல்வியில் நாங்கள் ஈடுபட்டு வந்தபோது, நீ இன்று வெளிப்படுத்திய இதே ஐயம் எங்கள் மனங்களில் எழுந்தது.(20) எனவே, நாங்கள் இது குறித்து எங்கள் ஆசானிடம் கேட்டோம். எங்கள் ஆசான் சொன்ன பதிலை நான் கேட்டேன். ஓ! பாரதா, அந்தப் பதிலை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன்.(21)
அறியாமையால் ஏற்படும் அனைத்து வகை இருளையும் அகற்றுபவரும், பராசரரின் மகனுமான வியாசர், தமது சீடர்களால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்டு இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(22) "உண்மையில் நான் மிகக் கடுமையான தவங்களைச் செய்திருக்கிறேன். மனிதர்களில் சிறந்தவர்களே, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து நான் முழுமையாக அறிந்திருக்கிறேன்.(23) பாற்கடலின் கரைகளில் நான் வசித்திருந்தபோது, என் தவங்கள் மற்றும் புலன்களில் நான் கொண்டிருந்த கட்டுப்பாட்டின் விளைவால் நாராயணன் என்னிடம் நிறைவு கொண்டான். அந்தப் பெருந்தேவன் கொண்ட நிறைவின் விளைவால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைக் குறித்து முழுதுணரும் அறிவு என் மனத்தில் எழுந்தது.(24) உங்கள் மனங்களைக் கலக்கமடையச் செய்தும் இந்தப் பெரும் ஐயங்களைக் குறித்து முறையான வரிசையில் சொல்கிறேன் கேட்பீராக. ஞானக் கண் மூலம் நான் கல்பத்தின் தொடக்கத்தில் நேர்ந்தவை அனைத்தையும் கண்டேன்.(25) சாங்கியர்கள் மற்றும் யோகத்தை அறிந்தவர்கள் ஆகிய இருவரும் பரமாத்மா என்ற பெயரில் எவனை அழைக்கிறார்களோ, அவனே தன் செயல்களின் விளைவால் முதன்மையான புருஷனாகக் கருதப்படுகிறான். கல்விமான்களால் புலப்படாதது {அவ்யக்தம்} அல்லது பிரதானம் என்றழைக்கப்படும் பிரகிருதி அவனிலிருந்தே எழுகிறது.(26) பலமிக்கதான அந்தப் புலப்படாததிலிருந்தே உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்காக அநிருத்தன் என்றழைக்கப்படுபவன் எழுந்தான். அந்த அநிருத்தனே, உயிரினங்களுக்கு மத்தியில் பேரான்மா என்ற பெயரால் அறியப்படுகிறான்.(27) அந்த அநிருத்தனே புலப்படுபவனாகி {வியக்தனாகி}, பெரும்பாட்டனான பிரம்மனைப் படைத்தான். அனைத்து வகைச் சக்திகளையும் கொண்ட அநிருத்தனே, நனவுநிலை {அகங்காரம்} என்ற மற்றொரு பெயரால் அறியப்படுகிறான்.(28)
அந்த நனவுநிலையிலிருந்து {அகங்காரத்திலிருந்து} பூமி, காற்று, வெளி, நீர் மற்றும் ஐந்தாவதாக ஒளி என்ற ஐம்பெரும்பூதங்கள் எழுந்தன.(29) (எண்ணிக்கையில் ஐந்தான) பெரும்பூதங்களைப் படைத்த பிறகு அவன் அவற்றின் குணங்களைப் படைத்தான்[2]. பிறகு அவன் அந்தப் பெரும்பூதங்களைக் கலந்து உடல்கொண்ட பல்வேறு வடிவங்களைப் படைத்தான். அவர்களைச் சொல்கிறேன் கேட்பீராக.(31) மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, உயர் ஆன்ம வசிஷ்டர், சுயம்புவான மனு ஆகிய எண்மர் பிருகிருதியின் தனிமங்களாக அறியப்பட வேண்டும். உலகங்கள் அனைத்தும் இவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(31) அப்போது, உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், உயிரினங்கள் அனைத்தின் வெற்றிக்காக அங்கங்கள் அனைத்துடன் கூடிய வேதங்களையும், அங்கங்களோடு கூடிய வேள்விகளையும் படைத்தான். பிருகிருதியின் இந்த எட்டுத் தனிமங்களில் இருந்தே இந்தப் பரந்த அண்டம் எழுந்தது.(32) பிறகு, கோபம் எனும் கோட்பாட்டில் இருந்து ருத்திரன் எழுந்தான். உயிர் கொண்ட அவன், தன்னைப் போன்ற இன்னும் பத்து பேரைப் படைத்தான். இந்தப் பதினோரு ருத்திரர்களும், விகார புருஷர்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.(33) ருத்திரர்கள், (எட்டு) பிரகிருதிகள், தெய்வீகமான பல்வேறு முனிவர்கள் ஆகியோர் உயிர் பெற்று, அண்டத்தைத் தாங்குவதற்காகவும், அதன் இயக்கத்தை நோக்கில் கொண்டும் பிரம்மனை அணுகினார்கள்.(34)
[2] "ஒளிக்குக் காட்சி, நீருக்கு சுவை, வெளிக்கு ஒலி, காற்றுக்குத் தீண்டல், பூமிக்கு மணம் ஆகியவையே அந்தக் குணங்களாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பெரும்பாட்டனிடம் பேசிய அவர்கள், "ஓ! புனிதமானவரே, ஓ! பெரும்பலமிக்கவரே, நாங்கள் உம்மால் படைக்கப்பட்டோம். ஓ! பெரும்பாட்டனே, எங்களில் எவரெவர் எந்தெந்த காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக.(35) எந்தக் குறிப்பிட்ட காரியங்களைக் கண்காணிப்பதற்காக எந்த அதிகாரம் உம்மால் படைக்கப்பட்டிருக்கிறது? எங்களில் எவர், எந்த வகை நனவுநிலையை {அகங்காரத்தைக்} கொண்டு, இவற்றில் எந்த அதிகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்?(36) எங்கள் அதிகாரத்திற்குத் தக்கப்படி கடமைகளையாற்ற எங்கள் ஒவ்வொருவருக்கும் எந்தெந்த அளவுக்குப் பலம் விதிக்கப்பட்டிருக்கிறது?" {என்று கேட்டனர்}. அவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்}, பின்வரும் வழியில் அவர்களுக்கு மறுமொழி கூறினான்.(37)
பிரம்மன், "தேவர்களே, இக்காரியத்தைக் குறித்து என்னிடம் கேட்பதில் நீங்கள் நன்றாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருப்பீராக. உங்கள் கவனத்தில் உள்ள அதே காரியம் குறித்தே நானும் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.(38) மூவுலகங்களும் எவ்வாறு தாங்கப்பட வேண்டும்? எவ்வாறு அதை முன்னெடுக்க வேண்டும்? உங்களுடைய பலமும், என்னுடைய பலமும் எவ்வாறு கதியை நோக்கிப் பயன்படுத்தப்பட வேண்டும்?(39) நாம் அனைவரும் இந்த இடத்தை விட்டு அகன்று, உலகத்தின் சாட்சியாகவும், இருப்பில் உள்ளவர்களில் முதன்மையானவனுமான அந்தப் புலப்படாதவனிடம் {அவ்யக்தனிடம்} செல்வோம். எது நமக்கான நன்மை என்பதை அவன் நமக்குச் சொல்வான்" என்றான்.(40)
இதன்பிறகு, அந்தத் தேவர்களும், முனிவர்களும், மூவுலகங்களுக்கும் நன்மை செய்ய விரும்பி, பாற்கடலின் வடகரைக்குப் பிரம்மனுடன் சென்றனர்.(41) அங்கே வந்ததும் அவர்கள் வேதங்களில் பிரம்மன் அறிவித்தபடியே கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினர். அந்தக் கடுந்தவங்கள் மஹாநியமம் (நோன்புகள் மற்றும் நியமங்களில் முதன்மையானது) என்ற பெயரால் அறியப்பட்டன.(42) மேல் நோக்கிய கண்களுடனும், மேலுயர்த்திய கரங்களுடனும், நிலையான மனத்துடனும் அங்கே அவர்கள் மரக்கட்டைகளைப் போல அசையாதிருந்தனர்.(43) அவர்கள் ஆயிரம் தேவ வருடங்களுக்கு இந்தக் கடுந்தவங்களைச் செய்தனர். அந்தக் காலம் நிறைவடைந்ததும், வேதங்கள் மற்றும் அவற்றின் அங்கங்களுடன் இணைக்கமான இந்த இனிய வார்த்தைகளை அவர்கள் கேட்டனர்.(44)
அருளப்பட்டவனும், புனிதமானவனுமான அவன் {அவ்யக்தன்}, "தேவர்களே, பிரம்மனின் துணையுடன் கூடியவர்களும், தவச் செல்வத்தைக் கொண்டவர்களுமான முனிவர்களே, உங்கள் அனைவருக்கும் நல்வரவு கூறி மதித்து, இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன்.(45) உங்கள் இதயங்களில் என்ன இருக்கிறது என்பதை நான் அறிவேன். உண்மையில், உங்கள் சிந்தனைகள் மூவுலங்களின் நன்மைக்கானவையே. உங்கள் சக்தியையும், பலத்தையும் பெருக்கி, (செயல்களுக்கான ஒருதலைச்சார்பு கொண்ட) பிரவிருத்தியை உங்களுக்குக் கொடுப்பேன்.(46) தேவர்களே, என்னைத் துதிக்கும் விருப்பத்தில் நீங்கள் இந்தத் தவங்களைச் செய்திருக்கிறீர்கள். இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவர்களே, நீங்கள் மேற்கொண்ட அந்தத் தவங்களுக்கான சிறந்த கனிகளை இப்போது அனுபவிப்பீராக.(47) இந்தப் பிரம்மன் உலகங்கள் அனைத்தின் தலைவனாவான். பலம் கொண்ட அவன் உயிரினங்கள் அனைத்தின் பெரும்பாட்டனாவான். நீங்கள் தேவர்களில் முதன்மையானவர்களாகவும் இருக்கிறீர்கள். என் மகிமைக்காக நீங்கள் அனைவரும் குவிந்த மனங்களுடன் வேள்விகளைச் செய்வீராக.(48) நீங்கள் செய்யப்போகும் அந்த வேள்விகளின் காணிக்கைகளில் எப்போதும் எனக்கு ஒரு பங்கைக் கொடுப்பீராக. படைப்பின் தலைவர்களே, அதன் பிறகு உங்கள் ஒவ்வொருவருக்குமுரிய அதிகாரங்களையும், உங்கள் நன்மைக்காக விதிக்கப்பட்டவற்றையும் ஒப்படைப்பேன்" என்றான் {அவ்யக்தன்}.(49)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தேவர்களின் தேவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், பெரும் முனிவர்கள் மற்றும் பிரம்மன் ஆகியோர் அனைவரும், தங்கள் உடலில் மயிர்க்கூச்சம் ஏற்படும் வகையில் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(50) அவர்கள், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி விஷ்ணுவைக் கௌரவிப்பதற்கான ஒரு வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த வேள்வியில் பிரம்மனே கூட விஷ்ணுவுக்கான காணிக்கைகளில் ஒரு பகுதியை அர்ப்பணித்தான்.(51) பிரம்மனைப் போலவே தேவர்கள் மற்றும் தெய்வீக முனிவர்கள் ஒவ்வொருவரும் அதே போன்ற பகுதிகளை அந்தப் பெருந்தேவனுக்குக் காணிக்கையாக அளித்தனர். இவ்வாறு பெருமதிப்புடன் விஷ்ணுவுக்குக் காணிக்கையாக்கப்பட்ட அந்தப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டும் கிருத யுகத்திற்காக விதிக்கப்பட்ட விதிகளின்படியே இருந்தன.(52) தேவர்கள், முனிவர்கள் மற்றும் பிரம்மன் ஆகியோர், அந்த வேள்வியில், சூரியனின் நிறத்தைக் கொண்டவனாகவும், இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவனாகவும், தமஸ் குணத்தின் எல்லையைக் கடந்திருப்பவனாகவும், பரந்தவனாகவும், அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனாகவும், அனைத்தின் உயர்ந்த தலைவனாகவும், வரங்களை அளிப்பவனாகவும், பலங்கொண்டவனாகவும் அந்தப் பெருந்தேவனைத் துதித்தனர்.(53)
வரமளிப்பவனும், புலப்படாதவனும், உடலற்றவனுமான அந்தப் பெருந்தேவன் {நாராயணன்}, இவ்வாறு துதிக்கப்பட்டு, அங்கே கூடியிருந்த சொர்க்கத்தின் தேவர்களிடம்:(54) "இவ்வேள்வியில் உங்களால் அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் என்னை வந்தடைந்தன. நான் உங்கள் அனைவரிடமும் நிறைவுடன் இருக்கிறேன். நான் உங்களுக்கு வெகுமதிகளை அளிக்கப் போகிறேன். இருப்பினும், அவை நீங்கள் திரும்பி வரவேண்டிய கதிகள் நிறைந்தவையாகவே இருக்கும்[3].(55) தேவர்களே, நான் உங்களிடம் கொண்ட அன்பு மற்றும் என் அருளின் விளைவால், இந்த நாள் முதல், இதுவே உங்கள் தனித்துவமான சிறப்பியல்பாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு யுகத்திலும் பெரும் அளவிலான காணிக்கைளுடன் கூடிய வேள்விகளைச் செய்து, பிரவிருத்தியில் பிறக்கும் கனிகளை அனுபவிப்பவர்களாக இருப்பீர்கள்.(56) தேவர்களே, வேதங்களில் விதிகளின்படி வேள்விகளைச் செய்யப் போகும் மனிதர்கள், தங்கள் வேள்விக் காணிக்கைகளில் உங்கள் அனைவருக்குமுரிய பங்குகளைக் கொடுப்பார்கள்.(57) இந்த வேள்வியில் எவன் எந்தக் காணிக்கையைக் கொடுத்தானோ, அவன் (இத்தகைய வேறு வேள்விகளில்) இதே போன்ற பங்கைப் பெறுபவனாக வேத சூத்திரங்களில் அமைப்பேன்.(58) உங்கள் அதிகாரத்திற்குரிய காரியங்களைக் கவனிக்கப் படைக்கப்பட்ட நீங்கள், அந்த வேள்விகளில் நீங்கள் புறம் {காணிக்கைகளின்} பங்குகளைச் சார்ந்த உங்கள் பலத்துடன் உலகங்களைத் தாங்குவீர்களாக.(59)
[3] "அஃதாவது இங்கே அளிக்கப்படுவது முக்தியல்ல. அந்த வெகுமதிகளைப் பெறுபவர்கள் (சொர்க்கமெனும்) திரும்பிவரக்கூடிய {மறுபிறவி கொள்ள வேண்டிய} கதிகளையே அடைவார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உண்மையில், நீங்கள் பல்வேறு உலகங்களில் நடைபெறும் சடங்குகள் மற்றும் நோன்புகளின் மூலம் பிருவிருத்தியின் கனிகளில் எழும் உங்கள் பலத்தைப் பெற்று அந்த உலகக் காரியங்களைத் தொடர்ந்து தாங்குவீராக.(60) மனிதர்களால் செய்யப்படும் வேள்விகளில் இருந்து உங்கள் பலத்தைப் பெறும் நீங்கள் என்னைப் பலப்படுத்துவீர்கள். இவையே உங்கள் அனைவருக்காகவும் நான் சிந்திப்பதாகும்.(61) இந்நோக்கத்திற்காகவே நான் வேதங்களையும், வேள்விகளையும், செடிகள் மற்றும் மூலிகைகளையும் படைத்திருக்கிறேன். பூமியில் மனிதர்களின் மூலம் இவற்றால் முறையாகத் தொண்டாற்றப்படும் தேவர்கள் நிறைவை அடைவார்கள்.(62) தேவர்களில் முதன்மையானவர்களே, இந்தக் கல்பத்தின் முடிவு வரை, பிரவிருத்தி அறத்தின் விளைவைச் சார்ந்திருக்கும் வகையில் உங்கள் அமைப்புகளை உண்டாக்கி, உங்கள் படைப்பை விதித்திருக்கிறேன். இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவர்களே, அவரவருக்குரிய அதிகாரத்தின்படி நீங்கள் மூவுலகங்களின் நன்மையை நாடுவதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீராக.(63) மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் ஆகிய இந்த ஏழு முனிவர்களும் {இந்த சப்தரிஷிகளும்} என் மனோவிருப்பத்தாலேயே படைக்கப்பட்டார்கள் {இவர்கள் என் மானஸபுத்திரர்கள்}. இவர்கள் வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானோராவார்கள். உண்மையில் அவர்கள் வேத ஆசான்களாக ஆவார்கள். வாரிசுகளை உண்டாக்கும் செயலுக்குத் தங்களை அர்ப்பணிப்பதையே இவர்கள் {சப்தரிஷிகளும்} நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதால் பிரவிருத்தி அறத்தில் பற்றுள்ளவர்களாகவே இவர்கள் இருப்பார்கள்.(65)
செயல்கள் மற்றும் நோன்புகளில் ஈடுபடும் உயிரினங்களுக்கு இதுவே நான் சொல்லும் நித்திய பாதையாகும். உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்கு அதிகாரம் படைத்த பலமிக்கத் தலைவன் அநிருத்தன் என்றழைக்கப்படுகிறான்.(66) ஸனர், ஸநத்ஸுஜாதர், ஸநகர், ஸநந்தனர், ஸநத்குமாரர், கபிலர், ஏழாவதாக ஸநாதனர்(67) ஆகிய இந்த ஏழு முனிவர்களும் {இந்த சப்தரிஷிகளும்} பிரம்மனின் ஆன்ம மகன்களாவர் {பிரம்மனின் மானஸ புத்திரர்களாவர்}. (கல்வி அல்லது முயற்சியைச் சார்ந்திராமலேயே) ஞானம் தானாக இவர்களை அடையும். இவர்கள் எழுவரும் நிவிருத்தி அறத்தில் பற்றுடையவர்களாவர். இவர்களே யோகத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானோராவார்கள். இவர்கள் சாங்கிய தத்துவத்தில் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்களே கடமை குறித்த சாத்திரங்களின் ஆசான்களாக இருப்பார்கள், இவர்களே நிவிருத்தி அறத்தின் கடமைகளை அறிமுகம் செய்து, அவற்றை உலகங்களில் பாயச் செய்வார்கள்.(69)
புலப்படாததிலிருந்து (பிரகிருதியிலிருந்து) நனவுநிலையும் {அகங்காரமும்}, (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முப்பெரும் குணங்களும் உண்டாகின. பிரகிருதியைக் கடந்திருப்பவன் க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுகிறான்.(70) நானே அந்த க்ஷேத்ரஜ்ஞன் ஆவேன். செயல்களில் பற்றுடையோருக்குரிய பாதையானது, மறுபிறவிகளைக் கொண்டதாகும். அந்தப் பாதையில் ஒருவனால் திரும்பாத இடத்தை அடையமுடியாது. பல்வேறு உயிரினங்கள் பல்வேறு கதிகளுக்காகப் படைக்கப்படுகின்றன. சில பிரவிருத்தி பாதையைக் கருத்தில் கொண்டும், சில நிவிருத்தி பாதையைக் கருத்தில் கொண்டும் படைக்கப்படுகின்றன. ஓர் உயிரினம் எந்தப் பாதையைப் பின்பற்றுகிறோ, அதற்குரிய வெகுமதியையே அஃது அனுபவிக்கிறது. இந்தப் பிரம்மனே, உலகங்கள் அனைத்தின் ஆசானாவான். பலம் கொண்ட இவனே அண்டத்தைப் படைக்கிறான்.(71,72) அவனே உங்கள் தாயும், தந்தையும், பாட்டனும் ஆவான். என் ஆணையின் பேரில் அனைத்து உயிரினங்களுக்கு அவன் வரங்களை அளிக்கிறான்.(73) அவனது ஆணையின் பேரில் அவனது புருவத்தில் இருந்து உதித்தவனும், பலம் கொண்டவனுமான அவனுடைய மகன் ருத்திரன், படைக்கப்பட்டவை அனைத்தையும் தாங்குவான்.(74) நீங்கள் உங்களுக்குரிய அதிகாரங்களை அடைந்து, விதிப்படி உலகங்களின் நன்மையை நாடுவீராக. உலகங்கள் அனைத்திலும் சாத்திரச் செயல்பாடுகள் நடைபெறட்டும். இதில் எந்தத் தாமதமும் வேண்டாம்.(75)
தேவர்களில் முதன்மையானோரே, அனைத்து உயிரினங்களின் செயல்களையும், அதன்மூலம் அவை அடையப்போகும் கதிகளையும் நீங்களே விதிப்பீராக. உயிரினங்கள் அனைத்தும் வாழக்கூடிய கால அளவையும் நீங்களே நிர்ணயிப்பீராக.(76) யுகங்கள் அனைத்திலும் முதன்மையானதும், இப்போது நடைபெறுவதுமான இந்த யுகம், கிருதம் என்ற பெயரில் அறியப்பட வேண்டும். இந்த யுகத்தில் செய்யப்படும் வேள்விகளில் உயிரினங்கள் கொல்லப்படக்கூடாது. என் ஆணையன்றி வேறுவகையில் இது நடைபெறக்கூடாது.(77) இந்த யுகத்தில் அறம் முழுமையாகத் தழைக்கும். இதன் பிறகு திரேதம் என்றழைக்கப்படும் யுகம் நேரும். அந்த யுகத்தில் வேதங்கள் ஒரு பகுதியை இழக்கும். அவற்றில் மூன்று மட்டுமே நீடித்திருக்கும்.(78) அந்த {திரேத} யுகத்தில் செய்யப்படும் வேள்விகளில், விலங்குகள் புனித மந்திரங்களின் துணையால் காணிக்கையாக்கப்பட்ட பிறகு கொல்லப்படும். அறத்தைப் பொறுத்தவரையில் ஒரு பகுதியை இழந்து மூன்று பகுதிகள் மட்டுமே தழைக்கும்.(79) திரேதம் முடிந்ததும், துவாபரம் என்ற பெயரிலான கலப்பு யுகம் நேரும். அந்த யுகத்தில் அறம் இரண்டு பகுதிகளை இழக்கும், இரண்டு பகுதிகள் மட்டுமே தழைக்கும்.(80) துவாபரம் முடிந்ததும் நேரும் யுகம் திஷ் என்றழைக்கப்படும், அது தனக்கு முன்பு கலியை {கலிபுருஷனைக்} கொண்டுவரும். அறம் மூன்று பகுதிகளை இழக்கும். அனைத்து இடங்களிலும் ஒரேயொரு பகுதி மட்டுமே நீடித்திருக்கும்" என்றான் {நாராயணன்}.(81)
அந்தப் பெருந்தேவன் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, தேவர்களும், தெய்வீக முனிவர்களும் அவனிடம், "அந்த யுகத்தில் ஒவ்வொரு இடத்திலும் அறத்தின் நான்காவது பகுதி மட்டுமே நீடித்திருக்கும் என்றால், ஓ! புனிதமானவனே, நாங்கள் எங்கே செல்வோம்? என்ன செய்வோம்?" என்று கேட்டனர்.(82)
அதற்கு அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {நாராயணன்}, "தேவர்களில் முதன்மையானோரே, அந்த யுகத்தில், அனைத்து உயிரினங்களிடமும் கருணை நிறைந்த கடமைகளின் துணையுடன் எங்கெல்லாம் வேதங்கள், வேள்விகள், தவங்கள், வாய்மை, தற்கட்டுப்பாடு ஆகியவை அப்போதும் நீடித்திருக்குமோ அத்தகைய இடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும். பாவத்தால் உங்களை ஒருபோதும் தீண்ட முடியாது" என்றான்".(83)
வியாசர் தொடர்ந்தார், "அந்தப் பெருந்தேவனால் இவ்வாறு ஆணையிடப்பட்ட தேவர்களும், அவர்களுடன் கூடிய முனிவர்கள் அனைவரும், அவனுக்குத் தலைவணங்கிய பிறகு, தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்றனர்.(84) சொர்க்கவாசிகள் அந்த இடத்தைவிட்டு அகன்ற பிறகு, அப்போது அநிருத்தனின் வடிவில் வசித்திருந்த அந்தப் பெருந்தேவனைக் காணும் விருப்பத்தில் அங்கேயே இருந்தான்.(85) அந்தத் தேவர்களில் முதன்மையானவன் ஒரு பெரிய குதிரைத் தலையைக் கொண்ட வடிவை ஏற்றுப் பிரம்மனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். வேதங்களையும், அதன் அங்கங்களையும் உரைத்தபடியே அவன் ஒரு கமண்டலத்துடனும், திரிதண்டத்துடனும், பிரம்மனின் முன்னிலையில் தோன்றினான்.(86) உலகங்கள் அனைத்தையும் படைப்பவன் {பிரம்மன்}, அளவிலா சக்தி கொண்ட அந்தப் பெருந்தேவனைக் குதிரைத் தலை மகுடம் சூட்டப்பட வடிவில் கண்டு, அந்த வரமளிக்கும் தலைவனைத் தலைவணங்கி வழிபட்டு, அவனது முன்னிலையில் மதிப்புடன் கரங்கூப்பி நின்றான். அந்தப் பெருந்தேவன் பிரம்மனை ஆரத்தழுவி இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னான்.(88)
அந்தப் புனிதமானவன் {அஸ்வசிரஸுடன் கூடிய பெருந்தேவன்}, "ஓ! பிரம்மாவே, உயிரினங்கள் பின்பற்றவேண்டிய செயல் நடைமுறைகளைக் குறித்துச் சிந்திப்பாயாக. நீயே அண்டத்தின் தலைவனாகவும், ஆசானாகவும் இருக்கிறாய். உன் மேல் சுமையை நிறுத்திபிறகு விரைவில் நான் கவலையில் இருந்து விடுபடுவேன்.(89) எனினும், தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் கடினமான நிலை ஏற்படும் நேரங்களில், அந்த நெருக்கடி நிலையின் முக்கியத்துவத்தை நான் புரிந்து கொள்ளும் வகையிலான வடிவங்களில் வந்து பிறப்பேன் {அவதாரம் எடுப்பேன்}" என்றான்.(90)
இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, குதிரைத் தலையைக் கொண்ட அந்த மகத்தான வடிவம் அங்கேயே, அப்போதே மறைந்தது. அவனது ஆணையை ஏற்ற பிரம்மனும் விரைவில் தன் உலகத்திற்குச் சென்றான்.(91) இதனாலேயே, ஓ! அருளப்பட்டவர்களே, தொப்புளில் தாமரையைக் கொண்ட அந்த நித்திய தேவன், வேள்விகளில் முதல் பங்கை ஏற்பவனாகி, அதன் காரணமாகவே வேள்விகள் அனைத்தையும் நித்தியமாகத் தாங்குபவன் என்றழைக்கப்படுகிறான்.(92) அழிவில்லாத கனிகளை விரும்பும் உயிரினங்கள் எந்தக் கதியை அடைய விரும்புகின்றனவோ அந்தக் கதியைக் கொண்ட நிவிருத்தி அறத்தையே அவன் பின்பற்றுகிறான். அதே நேரத்தில் அண்டத்தில் பல்வேறு கருத்துகளைக் கொடுக்கும் நோக்கத்தில் அவனே பிறருக்காகப் பிரவிருத்தி அறத்தையும் விதித்தான்.(93) இருப்பிலுள்ள படைக்கப்பட்ட அனைத்திற்கும் அவனே தொடக்கமும், நடுநிலையும், முடிவுமாக இருக்கிறான். அவனே அவர்களது படைப்பாளனாகவும், தியானிக்கத் தகுந்து பொருளாகவும் இருக்கிறான். செயல்படுபவனாகவும், செயலாகவும் அவனே இருக்கிறான். யுக முடிவில் அண்டத்தைத் தன்னுள் ஈர்த்துக் கொண்டு, உறங்கச் சென்று மற்றொரு யுகம் தொடங்கும்போது மீண்டும் அண்டத்தைப் படைக்கிறான்.(94)
உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், முக்குணங்களைக் கடந்தவனும், பிறப்பற்றவனும், அண்டமே வடிவானவனும், சொர்க்கவாசிகள் அனைவரின் வசிப்பிடமாகவும், புகலிடமாகவும் இருப்பவனுமான அந்தச் சிறப்புமிக்கவனை நீங்கள் அனைவரும் வணங்குவீராக.(95) அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனாகவும், ருத்திரர்களின் தலைவனாகவும், ஆதித்தியர்கள் மற்றும் வசுக்களின் தலைவனாகவும் உள்ள அவனை நீங்கள் வணங்குவீராக.(96) அசுவினிகளின் தலைவனும், மருத்துகளின் தலைவனும், வேதங்களில் விதிக்கப்பட்ட வேள்விகள் அனைத்தின் தலைவனும், வேதாங்கங்களின் தலைவனுமான அவனை நீங்கள் வணங்குவீராக.(97) பெருங்கடலில் எப்போதும் வசிப்பவனும், ஹரி என்றழைக்கப்படுபவனும், தர்ப்பைப் புற்களைப் போன்ற முடியைக் கொண்டவனுமான அவனை நீங்கள் வணங்குவீராக. அமைதி மற்றும் நிலையமைதியாக இருப்பவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் மோக்ஷ அறத்தைப் புகட்டுபவனுமான அவனை வணங்குவீராக.(98) தவங்கள், அனைத்துவகைச் சக்திகள், புகழ் ஆகியவற்றின் தலைவனும், வாக்கின் தலைவனும், ஆறுகளின் தலைவனுமான அவனை வணங்குவீராக.(99) கபர்தின் {சடையுள்ளவன்} என்றழைக்கப்படுபவனும், பெரும் பன்றியும், ஒற்றைக் கொம்புடன் கூடிய குதிரையும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், சூரியனும், நன்கறியப்பட்ட குதிரைத் தலையைக் கொண்டவனும், எப்போதும் நான்கு வகை வடிவங்களில் வெளிப்படுபவனுமான அவனை வணங்குவீராக.(100) வெளிப்படாதவனும், அறிவால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், அழியத்தக்கதாகவும், அழிவில்லாததாகவும் இருப்பவனுமான அவனை வணங்குவீராக. மாற்றமில்லாதவனாக இருக்கும் அந்த உயர்ந்த தேவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்.(101) அவன் ஞானக் கண்ணின் துணையால் மட்டுமே அறிய முடிந்த உயர்ந்த தலைவனாக இருக்கிறான். இவ்வாறு, பழங்காலத்தில் ஞானக்கண்ணின் துணையால் நான் அந்த முதன்மையான தேவனைக் கண்டேன்.(102) சீடர்களே, நீங்கள் கேட்ட அனைத்தையும் சொல்லிவிட்டேன். நீங்கள் என் சொற்களின்படி செயல்பட்டு, ஹரி என்றழைக்கப்படும் அந்த உயர்ந்த தலைவனுக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றுவீராக. வேத சொற்களில் அவன் புகழைப் பாடித் துதித்து, முறையான சடங்குகளின்படி அவனை வழிபடுவீராக" என்றார் {வியாசர்}".(103)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "வேதங்களைத் தொகுத்தவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான அவர், இது குறித்து எங்களால் கேட்கப்பட்ட போது இவ்வாறே சொன்னார். உயர்ந்த அறவனோனான அவரது மகனும் {சுகரும்}, சீடர்கள் {நாங்கள்} அனைவரும் இஃதை அவர் சொன்னபோது கேட்டுக் கொண்டிருந்தோம்.(104) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, எங்கள் ஆசானும், நாங்களும், நான்கு வேதங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரிக்குகளால் அந்தப் பெருந்தேவனை {நாராயணனைத்} துதித்தோம்.(105) இவ்வாறே நீ கேட்டது குறித்த அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன். ஓ! மன்னா, தீவில் பிறந்தவரான எங்கள் ஆசான் இவ்வாறே எங்களுக்குச் சொன்னார்.(106)
"அந்தப் புனிதமான தலைவனை வணங்குகிறோம்" என்ற வார்த்தைகளை எவன் சொல்கிறானோ, குவிந்த கவனத்துடன் இந்த உரையாடலை எவன் கேட்கிறானோ, எவன் படிக்கிறானோ, எவன் பிறருக்குச் சொல்கிறானோ,(107) அவன் புத்தியும், உடல்நலமும் கொண்டவனாகவும், அழகையும், பலத்தையும் உடையவனாகவும் ஆவான். நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த நோயில் இருந்து அவன் விடுபடுவான்; கட்டுகளில் {பந்தங்களில்} அகப்பட்டிருந்தால் அந்தக் கட்டுகளில் இருந்து அவன் விடுபடுவான். ஆசைகளைப் பேணி வளர்க்கும் மனிதன், (இதன் மூலம்) தன் விருப்பங்கள் அனைத்தும் கனியப்பெற்று, நீண்ட வாழ்நாளையும் எளிதாக அடைவான்.(108)
ஒரு பிராமணன் இதைச் செய்வதால் வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாவான். ஒரு க்ஷத்திரியன் இதைச் செய்வதால் வெற்றியால் மகுடம் சூட்டப்படுவான். ஒரு வைசியன் இதைச் செய்வதால் பெரும் லாபங்களையும், ஒரு சூத்திரன் இதைச் செய்வதால் பேரின்பத்தையும் அடைவார்கள்.(109) மகனற்ற மனிதன் ஒரு மகனை அடைவான். கன்னிப்பெண் விரும்பத்தக்க கணவனை அடைவாள். கருவுற்ற பெண்மணி {இதைச் செய்தால்} ஒரு மகனை ஈன்றெடுப்பாள்.(110) மலட்டுப் பெண்ணும் கருவுற்று, மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் என்ற செல்வத்தை அடைவாள். பயணத்தில் இந்த உரையை வரிசை மாறாமல் உள்ளடியே கூறுபவன், தன் வழியில் எந்தத் தடங்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாகச் செல்வான். உண்மையில், ஒருவன் இந்த உரையைப் படிப்பதாலோ, உரைப்பதாலோ {கேட்பதாலோ}, தான் விரும்பும் எந்தப் பொருளையும் அடைவான்.(111) நிறைவான முடிவைக் கொண்டதும், இருப்பிலுள்ள அனைத்திலும் முதன்மையான உயர்ந்த ஆன்மாவின் {பரமனின்} குணங்களைச் சுமந்திருப்பதுமான அந்தப் பெரும் முனிவரின் {வியாசரின்} இந்த வார்த்தைகளையும், முனிவர்களின் பெருங்கூட்டமும், சொர்க்கவாசிகளும் {தேவர்களும்} சொல்லும் இந்த உரையைக் கேட்டுப் பரமனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் பெரும் மகிழ்ச்சியை அடைவார்கள். {இது வியாஸமகரிஷியின் உறுதியான வார்த்தை}" {என்றார் வைசம்பாயனர்}.(112)
சாந்திபர்வம் பகுதி – 341ல் உள்ள சுலோகங்கள் : 112
ஆங்கிலத்தில் | In English |