The significations of names! | Shanti-Parva-Section-342 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 169)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் தனது மகிமையையும், தன் பெயர்களின் தனிப்பட்ட பொருள்களையும் அர்ஜுனனுக்குச் சொன்னது...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! புனிதமானவரே, பெருமுனிவரான வியாசர் தமது சீடர்களுடன் மதுசூதனின் புகழைப் பாடியபோது குறிப்பிட்ட பல்வேறு பெயர்களின் தனிப்பொருள்களை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனான {பகவானான} ஹரியின் அந்தப் பெயர்களைக் கேட்க நான் விரும்புகிறேன். உண்மையில் அந்தப் பெயர்களைக் கேட்பதன் மூலம் நான் பிரகாசமான கூதிர் கால நிலவைப் போலத் தூய்மையடைந்து புனிதமடைவேன்" என்று கேட்டான்.(1,2)
வைசம்பாயனர் சொன்னார், "குணங்கள் மற்றும் செயல்களின் மூலம் அமைந்த ஹரியின் பல்வேறு பெயர்களுடைய தனிப்பொருள்களை அந்தப் பலமிக்க ஹரியே உற்சாகம் நிறைந்த ஆன்மாவோடு பல்குனனுக்கு {அர்ஜுனனுக்கு} விளக்கியதைக் கேட்பாயாக.(3) ஒரு காலத்தில், பகைவீரர்களைக் கொல்பவனான பல்குனன், எந்தப் பெயர்களால் உயர் ஆன்ம கேசவன் துதிக்கப்படுகிறானோ அவற்றில் சிலவற்றின் பொருளைக் கேசவனிடமே கேட்டான்.(4)
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! புனிதமானவனே, ஓ! கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை விதிப்பவனே, ஓ! இருப்பிலுள்ள அனைத்தையும் படைத்தவனே, ஓ! மாற்றமில்லாதவனே, ஓ! உலகங்கள் அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவனே, ஓ! அண்டத்தின் தலைவா, ஓ! அனைத்து மனிதர்களின் அச்சங்களை விலக்குபவனே,(5) ஓ! கேசவா, ஓ! தேவா, உன்னுடைய பல்வேறு செயல்களின் விளைவால் வேதங்களிலும், புராணங்களிலும் பெரும் முனிவர்களால் குறிப்பிடப்படும் உன்னுடைய பெயர்கள் அனைத்தின் தனிப்பொருள் விளக்கத்தை நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். ஓ! தலைவா, அந்தப் பெயர்களின் தனிப்பொருட்களை உன்னையன்றி வேறெவரும் விளக்கத்தகுந்தவர் அல்ல" என்று கேட்டான்[1].(6,7)
[1] கும்பகோணம் பதிப்பில், "ஓ தேவரே, மகரிஷிகளால் புராணங்களிலும், வேதங்களிலும் உம்முடைய கர்மங்களால் உண்டானவைகளும், ரஹஸ்யங்களுமான நாமங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஓ கேசவரே, அவைகளுடைய அர்த்தவிவரணத்தை உம்மிடமிருந்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ பிரபுவே, உம்மைத்தவிர வேறொருவராலும் இந்த நாமங்களுடைய அர்த்த விஸ்தாரத்தைச் சொல்ல இயலாது" என்றிருக்கிறது.
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, "ஓ! அர்ஜுனா, ரிக்வேதம், யஜுர் வேதம், அதர்வணங்கள், சாமங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள், கணிய சாத்திரம் {சோதிட சாத்திரம்},(8) சாங்கிய சாத்திரங்கள், யோக சாத்திரங்கள், மற்றும் வாழ்வியல் சாத்திரங்கள் ஆகியவற்றில் பெரும் முனிவர்களால் சொல்லப்படும் பெயர்கள் பலவாகும்.(9) அந்தப் பெயர்களில் சில என் குணங்களுக்கும், சில என் செயல்களுக்கும் தொடர்புடையனவாகும். ஓ! பாவமற்றவனே, (குறிப்பாக) என் செயல்களைக் குறித்த பெயர்கள் ஒவ்வொன்றின் பொருளைச் சொல்கிறேன் கேட்பாயாக.(10) பழங்காலத்தில் நீ என் உடலின் பாதியாக இருந்தாய் என்று சொல்லப்படுகிறது. பெரும் மகிமை கொண்டவனும், உடல்படைத்த உயிரினங்கள் அனைத்தின் பரமாத்மாவாக இருப்பவனுமானவனை வணங்குகிறேன்[2].(11) அண்டத்தோடு அடையாளம் காணப்படுபவனும், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற அடிப்படையான) முக்குணங்களைக் கடந்தவனும், அந்தக் குணங்களின் ஆன்மாவுமான நாராயணனை வணங்குகிறேன். அவனது அருளிலிருந்து பிரம்மன் எழுந்தான், அவனது கோபத்திலிருந்து ருத்திரன் எழுந்தான்.(12) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் எங்கிருந்து எழுந்தனவோ, அதன் தோற்றுவாயாக அவனே இருகிறான். சத்வ குணம் கொண்டோர் அனைவரிலும் முதன்மையானவனே, சத்வ குணம் பதினெட்டுக் குணங்களைக் கொண்டதாகும்[3].
[2] "பரமாத்மாவுக்குக் கிருஷ்ணன் செய்யும் வணக்கம் சிறப்பியல்பைக் கொண்டதாகும். பரமாத்மாவை வணங்குவதன் மூலம் அவன் தன்னையே வணங்குகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "சத்வமே அறத்தின் குணமாகும். அது பதிரெட்டுக் குணங்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. உரையாசிரியர் அவை அனைத்தையும் குறிப்பிடுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிரீதி, மிகுதியான பிரகாசம், விருத்தி, ஸுலபனாயிருத்தல், ஸுகம், கிருபணத்தனமில்லாமை, பரபரப்பில்லாமை, ஸந்தோஷம், ஸ்ரத்தை, பொறுமை, தைரியம், கொல்லாமை, சுசியாயிருத்தல், குரோதமில்லாமை, ருசுவாயிருத்தல், ஸமமாயிருத்தல், உண்மையுரைத்தல், அஸூயையில்லாமை" ஆகியனவனே அந்தப் பதினெட்டுக் குணங்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றன.
வானத்தையும், பூமியையும் தன் ஆன்மாவாகக் கொண்டவளும், தன் படைப்பு சக்தியால் அண்டத்தைத் தாங்குவதில் வெல்பவளுமான பரம இயற்கையின் குணம் அதுவே {சத்வ குணமே}. அந்த இயற்கையானவள் செயல்கள் அனைத்தின் கனியினோடு (உயிரினங்கள் தங்கள் செயல்களின் மூலம் அடையும் பல்வேறு இன்ப உலகங்களின் வடிவில்) அடையாளம் காணப்படுகிறாள்.(13) அவள் தூய சித்-ஆகவும் இருக்கிறாள். அவள் இறப்பற்றவளாகவும், வெல்லப்பட முடியாதவளாகவும், அண்டத்தின் ஆன்மாவாகவும் அழைக்கப்படுகிறாள். அவளிடமிருந்தே படைப்பு மற்றும் அழிவு என்ற இரண்டு மாறுபாடுகளும் {விகாரங்களும்} தோன்றுகின்றன.(14) (அவள் எனது பிரகிருதி அல்லது இயற்கையோடு அடையாளம் காணப்படுகிறாள்). பாலினமற்ற அவளே, அல்லது அவனே மக்கள் செய்யும் தவங்களாக இருக்கிறாள்/ன். செய்யப்படும் வேள்வியாகவும், வேள்வியைச் செய்யும் வேள்வியாளனாகவும் அவனே இருக்கிறான். அவனே புராதனனும், முடிவற்றவனுமான புருஷனாவான். வேறு பெயரில் அநிருத்தன் என்றழைக்கப்படும் அவன், அண்டத்தின் படைப்பு மற்றும் அழிவுக்கான தோற்றுவாயாக இருக்கிறான்[4].(15)
[4] கும்பகோணம் பதிப்பில், "பதிரெட்டு குணங்களுடைய ஸத்வகுணமான அது என்னுடைய பரமான ஸ்வரூபம்; அது ஆகாயமும், பூமியுமாயிருந்து உலகங்களைத் தரிக்கின்றதும், கர்மங்களின் பயனான ஸ்வர்க்கமுதலான ஸ்வரூபமும், பாதிக்கப்படாத சித்ரூபமும், அழிவற்றதும், ஜயிக்கமுடியாததும், உலகங்களுக்கு ஆத்மாவாகச் சொல்லப்பட்டதுமாயிருக்கிறது. அதிலிருந்து ஸ்ருஷ்டிப்ரளயமுதலான எல்லா விகாரங்களும் உண்டாகின்றன. தவமும், யஜ்ஞமும், யாகம் செய்பவரும், புராண புருஷரும், விராட்டும், உலங்களுடைய உற்பத்தி நாசங்களுக்குக் காரணமாயிருப்பவர் அநிருத்தரென்று சொல்லப்பட்டார்" என்றிருக்கிறது.
ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, பிரம்மனின் இரவு முடிந்த போது, அந்த அளவிலா சக்தி கொண்டவனுடைய {அநிருத்தனுடைய} அருளின் மூலம் முதலில் ஒரு தாமரை தோன்றியது.(16) அநிருத்தனின் அருளின் மூலம் அந்தத் தாமரையினுள் பிரம்மன் தோன்றினான். பிரம்மனுடைய பகல்பொழுதின் மாலை வேளையில் அநிருத்தன் கோபத்தால் நிறைந்ததன் விளைவால், (அண்ட அழிவுக்கான வேளை நேரும்போது) அனைத்தையும் அழிக்க வல்லவனாகவும், ருத்திரன் என்றழைக்கப்படுபவனாகவும் அவனது நெற்றியில் இருந்து ஒரு மகன் பிறந்தான். (அநிருத்தனின்) உற்சாகம் மற்றும் கோபம் ஆகியவற்றில் இருந்து உண்டான பிரம்மன் மற்றும் ருத்திரன் என்ற இவ்விருவரும் தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாவர்.(17,18)அநிருத்தனின் வழிகாட்டுதலின் பேரில் இந்தத் தேவர்கள் இருவரும் படைக்கவும், அழிக்கவும் செய்கின்றனர். அனைத்து உயிரினங்களுக்கும் வரங்களை அளிக்கவல்லவர்களாக இருப்பினும், (படைப்பு மற்றும் அழிவு என்று) தாங்கள் கவனிக்கும் அலுவலின் காரியத்தில் அவர்கள் அநிருத்தனின் கைகளில் இருக்கும் கருவிகளே ஆவர். (அண்டத்தைப் பொறுத்தவரையில் வெளிப்படையாகச் செயல்படுபவர்களாகப் பிரம்மனையும், ருத்திரனையும் அமைத்து, அநிருத்தனே அனைத்தையும் செய்கிறான்).(19)
ருத்திரன் வேறுபெயரில் கபர்தின் என்றும் அழைக்கப்படுகிறான். அவன் தன் தலையில் சடாமுடி தரித்தவனாக இருக்கிறான், சில வேளைகளில் வழுக்கைத் தலையை வெளிப்படுத்துகிறான். அவன் தன் இல்லமாக அமைந்த சுடலைக்கு மத்தியிலேயே வசிக்க விரும்புகிறான். அவன் கடும் நோன்புகளை நோற்பவனாக இருக்கிறான். அவன் பெரும் பலமும், சக்தியும் கொண்ட ஒரு யோகியாவான்.(20) தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், பகனின் கண்களைப் பிடுங்கியவனும் அவனே. ஓ! பாண்டுவின் மகனே, ருத்திரன் தன் ஆன்மாவாக நாராயணனையே கொண்டிருக்கிறான் என்று எப்போதும் அறியப்பட வேண்டும்.(21) ஓ! பார்த்தா, தேவர்களின் தேவனான மஹேஸ்வரன் வழிபடப்படும்போது, பலமிக்க நாராயணனும் வழிபடப்பட வேண்டும்.(22) ஓ! பாண்டுவின் மகனே, அண்டமனைத்தின், உலகங்களனைத்தின் ஆன்மாவாக நானே இருக்கிறேன். அதே போல ருத்திரனே என் ஆன்மாவாக இருக்கிறான். இதன் காரணமாகவே நான் எப்போதும் அவனைத் துதிக்கிறேன்.(23) மங்கலனும், வரமளிப்பவனுமான ஈசானனை நான் துதிக்கவில்லையெனில், எவனும் என்னைத் துதிக்கமாட்டார்கள்.(24) நான் நிறுவும் விதிகளையே உலகங்கள் அனைத்தும் பின்பற்றுகின்றன. அந்த விதிகள் எப்போதும் துதிக்கப்பட வேண்டும், அதன் காரணமாகவே நான் அவற்றைத் துதிக்கிறேன்.(25)
எவன் ருத்திரனை அறிவானோ, அவன் என்னை அறிவான், எவன் என்னை அறிவானோ அவன் ருத்திரனை அறிவான். எவன் ருத்திரனைப் பின்பற்றுகிறானோ, அவன் என்னையே பின்பற்றுகிறான். ருத்திரனே நாராயணனாவான். அவர்கள் இருவரும் ஒருவரே; ஒருவனே இரண்டு வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறான்.(26) ஒருவராகவே உள்ள ருத்திரனும், நாராயணனும் வெளிப்படும் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்து, அவற்றை {அந்தப் பொருட்களைச்} செயல்பட வைக்கின்றனர். ஓ! பாண்டுவின் மகனே, ருத்திரனைத் தவிர வேறு எவனும் எனக்கு வரமருளத் தகுந்தவனல்ல.(27) இஃதை என் மனத்தில் தீர்மானித்துக் கொண்டு, ஒரு மகனைப் பெறும் வரத்தை அடைவதற்காகப் பழங்காலத்தில் நான் ருத்திரனைத் துதித்தேன். இவ்வாறு ருத்திரனைத் துதிப்பதால் நான் என்னையே துதிக்கிறேன்.(28) விஷ்ணு தன்னையன்றி {தன் சுயத்தையன்றி} வேறு எந்தத் தேவனுக்கும் தலைவணங்குவதில்லை. இதன் காரணமாகவே (ஏற்கனவே நான் உனக்குச் சொன்னது போலவே ருத்திரனாக நானே இருப்பதால்) நான் ருத்திரனைத் துதிக்கிறேன்.(29) பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மற்றும் பெரும் முனிவர்கள் அனைவரும், ஹரி என்று வேறு பெயரில் அழைக்கப்படும் தேவர்களில் முதன்மையான நாராயணனையே துதிக்கின்றனர்.(30) கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றில் இருப்பில் உள்ள அனைத்திலும் முதன்மையானவனாக விஷ்ணு எப்போது துதிக்கப்பட்டு, மதிப்புடன் வழிபடப்பட வேண்டும்.(31) விஷ்ணுவுக்கு நீ தலைவணங்குவாயாக. அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவனுக்கு நீ தலைவணங்குவாயாக. ஓ! குந்தியின் மகனே, தேவர்களில் முதன்மையானவனும், வேள்விகளில் தனக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை உண்பவனுமான அந்தப் பெரும் வரமளிக்கும் தேவனை வணங்குவாயாக.(32)
நான்கு வகை வழிபாட்டாளர்கள் இருப்பதாக நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் அனைவரிலும், வேறு எந்தத் தேவனைத் துதிக்காமல் என்னிடம் மட்டுமே அர்ப்பணிப்பு கொண்டோரே முதன்மையானவர்கள் ஆவர். நானே அவர்கள் தேடும் கதியாக இருக்கிறேன். அவர்கள் செயல்களில் ஈடுபட்டாலும் அவற்றின் கனிகளை ஒருபோதும் நாடுவதில்லை.(33) என் வழிபாட்டாளர்களில் எஞ்சிய மூன்று வகையினர், தங்கள் செயல்களுக்கான கனிகளை விரும்புபவர்கள் ஆவர். அவர்கள் பெரும் இன்ப நிலை கொண்ட உலகங்களை அடைந்தாலும், அவர்களது தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் மீண்டும் அங்கிருந்து வீழ்வார்கள். எனவே என் வழிபாட்டாளர்களில், முழு விழிப்புநிலையை அடைந்தவர்கள் (அத்தகைய விழிப்பு நிலையின் மூலம், என்னோடும் அடையாளங்காணப்படும் மனிதர்களால் அடையப்படும் கதியைத் தவிர வேறு இன்பங்கள் அனைத்தும் நிலையில்லாதவை என்பதை அறிந்து) முதன்மையான (அருமதிப்புள்ள) கதியை அடைகின்றனர்[5].(34) இத்தகைய தெளிவை வெளிப்படுத்தும் ஒழுக்கம் கொண்டவர்களும், விழிப்படைந்தவர்களுமான அவர்கள், பிரம்மன், அல்லது மஹாதேவன், அல்லது சொர்க்கத்தில் தோன்றும் பிற தேவர்களைத் துதிப்பதில் ஈடுபட்டாலும், இறுதியாக அவர்கள் என்னையே அடைவதில் வெல்கிறார்கள்.(35) ஓ! பார்த்தா, என் வழிபாட்டாளர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையே இவ்வாறு உனக்குச் சொன்னேன்.(36)
[5] "முக்தி நிலை, அல்லது பரமாத்மாவோடு முழுமையாக அடையாளங்காணப்படும் நிலை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! குந்தியின் மகனே, நீயும், நானும் நரன் மற்றும் நாராயணன் என்று அறியப்படுகிறோம். பூமியின் சுமையைக் குறைக்கும் நோக்கத்திற்காகவே நாமிருவரும் மனித உடல்களை ஏற்றோம்.(37) ஆன்மாவைச் சார்ந்திருக்கும் பல்வேறு வகை யோகங்களை நானறிவேன். ஓ! பாரதா, நான் யார் என்பதையும், நான் எங்கிருந்து வந்தேன் என்பதையும் நானறிவேன். நிவிருத்தி அறத்தையும், உயிரினங்களின் செழிப்புக்குப் பங்களிக்கும் அனைத்தையும் நானறிவேன்.(38) நான் நித்தியமானவன், மனிதர்கள் அனைவருக்கும் நானே ஒரே புகலிடமாக இருக்கிறேன். நரன் என்றழைக்கப்படுவனிடமிருந்து தோன்றியதால் நீர்நிலைகள் நாரம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பழங்காலத்தில் இருந்து நீர்நிலைகளையே என் புகலிடமாக நான் கொள்வதால், நாராயணன் என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன்.(39) சூரியனின் வடிவை ஏற்கும் நான், என் கதிர்களால் அண்டத்தைத் தழுவுகிறேன். அனைத்து உயிரினங்களின் வசிப்பிடமாக நானே இருப்பதால் வாசுதேவன் என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன்.(40)
ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களின் கதியாகவும், அவற்றின் தந்தையாகவும் நானே இருக்கிறேன். ஆகாயம் மற்றும் பூமி முழுமையிலும் நான் நீக்கமற நிறைந்திருக்கிறேன், என் காந்தியானது காந்திகள் அனைத்தையும் கடந்திருக்கிறது.(41) ஓ! பாரதா, உயிரினங்கள் அனைத்தும் முடிவில் அடைய விரும்பும் கதியாக நானே இருக்கிறேன். அண்டமனைத்திலும் நான் விஸ்தரித்திருப்பதால் {நிறைந்திருப்பதால்} விஷ்ணு என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன்.(42) புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெற்றியை அடைய விரும்பும் மக்கள், சொர்க்கமாகவும், பூமியாகவும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ள ஆகாயமாகவும் உள்ள என்னையே அடைய முனைகின்றனர். இதன் காரணமாக நான் தாமோதரன்[6] என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(43) பிருச்னி என்ற சொல்லில் உணவு, வேதங்கள், நீர் மற்றும் அமுதம் ஆகியவையும் அடங்கும். இவை நான்கும் எப்போதும் என் வயிற்றில் இருக்கின்றன. எனவே நான் பிருச்னிகர்ப்பன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(44) ஒரு காலத்தில், ஏகதர் மற்றும் திவிதரால் முனிவர் திரிதர் கிணற்றுக்குள் தள்ளிவிடப்பட்ட போது, மனம் தளர்ந்த திரிதர், "ஓ பிருச்னிகர்ப்பா, வீழ்ந்துவிட்ட திரிதனைக் காப்பாயாக" என்று என்னை இருப்புக்கு அழைத்ததாக முனிவர்கள் சொல்கின்றனர்.(45) முனிவர்களில் முதன்மையானவரும், பிரம்மனின் (ஆன்ம) மகனுமான திரிதர், இவ்வாறு என்னை அழைத்ததும், அந்தக் குழியில் இருந்து அவர் காக்கப்பட்டார்.(46) உலகிற்கு வெப்பத்தை வழங்கும் சூரியனிலிருந்தும், சுடர்மிக்க நெருப்பிலிருந்தும் {அக்னியிலிருந்தும்}, சந்திரனிலிருந்தும் வெளிப்படும் கதிர்களே என் மயிராகின்றன. எனவே, கல்வியாளர்களான பிராமணர்களில் முதன்மையானோர் என்னைக் கேசவன் என்ற பெயரால் அழைக்கின்றனர்.(47)
[6] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "தாம = இந்திரிய நிக்ரகம், உத் = உயர்வு, ரூ = ஆடைவது; இந்திரிய நிக்ரகத்தினால் அவனை அடுத்து உயர்வயடைவதால் தாமோதரர் என்பது" என்றிருக்கிறது.
உயர் ஆன்ம உதத்தியர், தமது மனைவியைக் கருவுறச் செய்து, தேவர்களின் மாயையால் அவளிடமிருந்து மறைந்தார். தம்பியான பிருஹஸ்பதி, அந்த உயர் ஆன்மாவுடைய {உதத்தியருடைய} மனைவியின் முன் தோன்றினார்.(48) ஓ! குந்தியின் மகனே, உதத்தியருடைய மனைவியின் கருவறையில் இருந்தவனும், ஏற்கனவே அடிப்படையான ஐம்பூதங்களால் உடலமைந்ததுவனுமான குழந்தை, கலவி விருப்பத்தால் அங்கே வந்த அந்த முதன்மையான முனிவரிடம் {பிருஹஸ்பதியிடம்},(49) "ஓ! வரங்களை அளிப்பவரே, நான் ஏற்கனவே இந்தக் கருவறையில் நுழைந்துவிட்டேன். என் தாயைத் தாக்குவது உமக்குத் தகாது" என்றான். இன்னும் பிறக்காதவனான அந்தக் குழந்தையின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிருஹஸ்பதி, கோபத்தால் நிறைந்து, ஒரு சாபத்தை அளிக்கும் வகையில்,(50) "கலவி இன்பத்தை விரும்பி இங்கே நான் வந்தபோது, இவ்வழியில் நீ எனக்குத் தடங்கலாக அமைந்ததால், என் சாபத்தின் மூலம் நீ குருடனாகப் பிறப்பாய் என்பதில் ஐயமில்லை" என்றார்.(51) அந்த முதன்மையான முனிவர் அளித்த இந்தச் சாபத்தின் மூலம், உதத்தியரின் பிள்ளை குருடாகப் பிறந்து, நீண்ட நாட்கள் குருடனாகவே இருந்தார். இதன் காரணமாக, பழங்காலத்தில் அந்த முனிவர் தீர்க்கதமஸ் என்ற பெயரால் அறியப்பட்டார்.(52)
எனினும் அவர், நான்கு வேதங்களையும், அவற்றின் நித்திய அங்கங்கள் மற்றும் உப அங்கங்களையும் அடைந்தார். அதன் பிறகு அவர், இந்த எனது இரகசிய பெயரைச் சொல்லி, அடிக்கடி என்னை இருப்புக்கு அழைத்தார். உண்மையில், விதிக்கப்பட்ட விதியின்படியே மீண்டும் மீண்டும் அவர் என்னைக் கேசவன் என்ற பெயரைக் கொண்ட அழைத்தார்.(53) இந்தப் பெயரை மீண்டும் மீண்டும் சொன்னதனால் அடைந்த தகுதியின் {புண்ணியத்தின்} மூலம், தனது குருட்டு நிலையில் இருந்து குணமடைந்த அவர், அதுமுதல் கௌதமர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். எனவே, ஓ! அர்ஜுனா, தேவர்கள் மற்றும் உயர் ஆன்ம முனிவர்கள் அனைவருக்கும் மத்தியில் என்னுடைய இந்தப் பெயரைச் சொல்வது வரங்களை விளைவிக்கும். நெருப்பின் தேவனும், சோமனும் ஒன்றாகக் கலந்து ஒன்றாகவும், ஒரே பொருளாகவும் ஊடுகலந்தனர். இதன் காரணமாகவே, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டமும் இவ்விரு தேவர்களால் நீக்கமற நிறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது[7].(55) புராணங்களில், அக்னியும் சோமனும் ஒரே இயல்பைக் கொண்டவர்களாகவும், ஒரே விளைவைக் கொண்டவர்களாகவும் சொல்லப்படுகின்றனர். ஒரே விளைவுக்கு வழிவகுக்கும் இயல்பைக் கொண்ட இவை இரண்டின் விளைவால், அவர்கள் ஒருவருக்கொருவர் தகுந்தவரென்றும், அண்டத்தைத் தாங்குபவர்கள் என்றும் சொல்லப்படுகின்றனர்" என்றான் {கிருஷ்ணன்}.(56)
[7] "ரிஷிகேசன் என்ற சொல்லின் பொருளை விளக்குவதே இந்த ஸ்லோகத்தின் நோக்கமாகும் என உரையாசிரியர் இங்கே விளக்குகிறார். அக்னி செரிமான நெருப்பாகும். சோமன் உணவாகும். எனவே, அக்னியும், சோமனும் ஒன்று கலப்பதால் அண்டத்தைத் தாங்குகின்றனர். செரிமான நெருப்பு மற்றும் உணவின் வடிவிலான அக்னி மற்றும் சோமன் ஆகிய இருவரும் அண்டத்திற்கு மகிழ்ச்சியளிப்பவர்களாவர். இதன் காரணமாக அவர்கள் (எண்ணிக்கையில் இருவர் என்ற பொருளில்) ஹ்ரிஷி என்றழைக்கப்பட்டனர். அவர்கள் நாராயணனின் கேசமாக, அல்லது மயிராக இருப்பதால் அவன் ரிஷிகேசன் என்றழைக்கப்பட்டான். இந்தச் சொற்பிறப்பியல் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருக்கின்றன. ரிஷிகேசன் என்ற சொல்லானது வேறு எங்கும் ஈசன் என்றும், ரிஷிகங்களின் அல்லது புலன்களின் தலைவன் என்றும் விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 342ல் உள்ள சுலோகங்கள் : 56
ஆங்கிலத்தில் | In English |