Thursday, December 06, 2018

ருத்திர நாராயணப் போர்! - சாந்திபர்வம் பகுதி – 343

Battle between Rudra and Narayana! | Shanti-Parva-Section-343 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 170)


பதிவின் சுருக்கம் : அக்னி மற்றும் சோமனின் இயல்பொற்றுமை; ருத்திரனுக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த போர்...


அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "பழங்காலத்தில், அக்னியும், சோமனும் எவ்வாறு தங்கள் சொந்த இயல்பில் சீரான தன்மையை அடைந்தனர்? இந்த ஐயம் என் மனத்தில் எழுகிறது. ஓ! மதுசூதனா, இதை விலக்குவாயாக" என்றான்.(1)


உயர்ந்தவனான அந்தப் புனிதமானவன் {ஸ்ரீ கிருஷ்ண பகவான்}, "ஓ! பாண்டுவின் மகனே, என் சக்தியில் இருந்து எழும் நிகழ்வுகளைக் கொண்ட ஒரு புராதனக் கதையைச் சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் அதைக் கேட்பாயாக.(2) தேவ அளவின்படி நாலாயிரம் {4000} யுகங்கள் கடந்ததும், அண்ட அழிவு ஏற்படுகிறது. புலப்படுவது, புலப்படாததில் மறைகிறது. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் அழிவை அடைகின்றன.(3) ஒளி, பூமி, காற்று ஆகிய அனைத்தும் மறைந்து போகின்றன. அண்டத்தில் இருள் பரவி, அஃது ஒரே நீர்ப்பரப்பாகிறது.(4) இரண்டாவது ஒன்றில்லாத பிரம்மத்தைப் போல முடிவில்லாமல் நீர் மட்டுமே இருக்கும்போது, பகலும் இருப்பதில்லை, இரவும் இருப்பதில்லை. இருப்பும், இல்லாமையும் இருப்பதில்லை; புலப்படுவதும், புலப்படாததும் இருப்பதில்லை.(5) அண்டத்தின் நிலை இவ்வாறு இருக்கும்போது, அழிவற்றவனும், இறப்பற்றவனும், புலன்களற்றவனும், உணரப்பட முடியாதவனும், பிறப்பற்றவனும், கருணை நிறைந்த வாய்மையின் சுயமும், சிந்தாமணி என்றழைக்கப்படும் ரத்தினத்தின் கதிர்கள் எனும் இருப்பின் வடிவத்துடன் கூடியவனும், பகைமை, சிதைவு, மரணம், மூப்பு ஆகிய கோட்பாடுகள் அற்றவனும், வடிவமற்றவனும், நீக்கமற நிறைந்திருப்பவனும், அண்டப்படைப்பின் கோட்பாடாகவும், தொடக்கம், நடுநிலை, முடிவு இல்லாது நித்தியமாக இருப்பவனுமான நாராயணனின் குணக் கலவையான தமஸில் இருந்து இருப்பவற்றில் முதன்மையானவனும், நித்தியமானவனும், மாற்றமில்லாதவனுமான ஹரி எழுகிறான்.(6) இந்தத் துணிவுரைக்கு அதிகாரம் இருக்கிறது.

ஸ்ருதி {வேதம்}, "பகல் இல்லை. இரவு இல்லை. இருப்பு இல்லை. இல்லாமை இல்லை. தொடக்கத்தில் தமஸ் மட்டுமே இருந்தாள்" என்று சொல்கிறது[1].(7)

[1] "சத் என்பது இருப்பாகும். அசத் என்பது இல்லாமையாகும். பொதுவாக இவ்விரு சொற்களும், நுட்பமான அல்லது புலப்படாத காரணம் மற்றும் திரளான அல்லது புலப்படும் காரியங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடும். இங்கே தமஸ் என்பது அடிப்படை முக்குணங்களில் ஒன்றைக் குறிக்காமல், ஆதி இருளைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அவள் அண்டத்தின் வடிவில் இருந்தாள், அவள் நாராயணனுடைய அண்ட வடிவத்தின் இரவாக இருந்தாள். இதுவே தமஸ் என்ற சொல்லின் பொருளாகும்.(8) இவ்வாறு தமஸில் பிறந்த (ஹரி என்றழைக்கப்படும்) அந்தப் புருஷனிலிருந்து பிரம்மத்தைக் காரணமாகக் கொண்டு பிரம்மன் என்றழைக்கப்படுபவன் இருப்புக்கு வந்தான். உயிரினங்களைப் படைக்க விரும்பிய பிரம்மன், தன் கண்களிலிருந்து அக்னியையும், சோமனையும் உண்டாக்கினான். அதன் பிறகு உயிரினங்கள் படைக்கப்பட்டபோது, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் என்ற முறையான வரிசையில் மனிதர்கள் படைக்கப்பட்டனர். சோமனாகப் பிறந்தவன் பிரம்மாவன்றி வேறு எவனுமல்ல; பிராமணராகப் பிறந்தோர் அனைவரும்உண்மையில் சோமனே ஆவர். அக்னியாகப் பிறந்தவன் க்ஷத்திரியனன்றி வேறு எவனுமல்ல. பிராமணர்கள் க்ஷத்ரர்களைவிடப் பெருஞ்சக்தி கொண்டவர்களாக இருந்தனர். இதன் காரணம் யாதென நீ கேட்டால், க்ஷத்திரியர்களை விடப் பிராமணர்கள் மேன்மையானவர்கள் என்பது உலகம் முழுவதிலும் வெளிப்படும் ஒரு குணமாகும் என்பதே பதிலாகும். இது பின்வருமாறு நேர்ந்தது. மனிதர்களைப் பொறுத்தவரையில் பிராமணர்களே மூத்த படைப்பாக இருக்கின்றனர். பிராமணர்களை விட மேன்மையான எவரும் அவர்களுக்கு முன்பு படைக்கப்பட்டதில்லை. எவன் ஒரு பிராமணனின் வாயில் உணவூட்டுவானோ அவன் (தேவர்களை நிறைவு செய்வதற்காக) சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவபவனாகக் கருதப்படுகிறான். பிரம்மன் உயிரினங்களைப் படைக்கும் காரியம், இவ்வழியில் பொருட்களை விதித்தே நிறைவடைந்தது எனச் சொல்கிறேன். அவன் {பிரம்மன்} படைக்கப்பட்ட அனைத்தையும் அதனதன் நிலைகளில் நிறுத்தி மூவுலங்களையும் தாங்கினான். ஸ்ருதிகளின் மந்திரங்களில் இதே போன்ற தீர்மானம் ஒன்றிருக்கிறது.(9) {ஸ்ருதியில்}, "ஓ! அக்னி, வேள்விகளில் ஹோத்ரி நீயே, அண்டத்திற்கு நன்மை செய்பவன் நீயே. தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், உலகங்கள் அனைத்திற்கும் நன்மை செய்பவன் நீயே" {என்றிருக்கிறது}.(10)

இதற்கு (வேறொரு) சான்றாதாரமும் இருக்கிறது. {ஸ்ருதியில்}, "ஓ! அக்னி, அண்டம் மற்றும் வேள்விகளின் ஹோத்ரி நீயே. தேவர்களும், மனிதர்களும் எதன் மூலம் அண்டத்திற்கு நன்மை செய்வார்களோ, அந்தத் தோற்றுவாய் நீயே" {என்றிருக்கிறது}.(11) "உண்மையில் அக்னியே ஹோத்ரியாகவும், வேள்விகளைச் செய்பவனாகவும் இருக்கிறான். மேலும் வேள்வியின் பிரம்மாவாக அக்னியே இருக்கிறான்.(12) மந்திரங்கள் சொல்லாமல் வேள்வி நெருப்புக்குள் ஆகுதிகள் ஏதும் ஊற்றப்படக்கூடாது; தவங்களைச் செய்யும் மனிதர்களில்லாமல் தவங்களில்லை; மந்திரங்களுடன் ஆகுதிகள் ஊற்றுவதாலேயே தேவர்கள், மனிதர்கள் மற்றும் முனிவர்களின் வழிபாடுகள் நிறைவடைகின்றன. எனவே, ஓ அக்னி, வேள்விகளின் ஹோத்ரியாக நீயே கருதப்படுகிறாய். மனிதர்களின் ஹோமச் சடங்குகள் குறித்து அறிவிக்கப்பட்டிருக்கும் மந்திரங்கள் அனைத்தும் நீயே" {என்றுமிருக்கிறது}. பிறர் செய்யும் வேள்விகளை நடத்திக் கொடுக்கும் கடமை பிராமணர்களுக்கு விதிக்கப்படுகிறது. மறுபிறப்பாள, அல்லது இரு பிறப்பாள வகையைச் சேர்ந்தவர்களான க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்ற வேறு இருவகையினனுக்கு அதே கடமை பரிந்துரைக்கப்படவில்லை. எனவே, பிராமணர்களே அக்னியைப் போல வேள்வியைத் தாங்குகின்றனர். (பிராமணர்கள் செய்து கொடுக்கும்) வேள்விகள் தேவர்களைப் பலமடையச் செய்கின்றன. இவ்வழியில் பலமடையும் தேவர்கள், (வாழும் உயிரினங்கள் அனைத்தையும் ஆதரிப்பதன் மூலம்) பூமியைக் கனியச் செய்கின்றனர். ஆனால் முதன்மையான வேள்விகளின் மூலம் அடையப்படும் விளைவானது, பிராமணர்களின் வாயின் மூலமும் அடையப்படலாம்.(13) பிராமணனின் வாயில் உணவை அளிக்கும் கல்விமான், தேவர்களை நிறைவு செய்வதற்காகப் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவனாகச் சொல்லப்படுகிறான்.(14) இவ்வழியில் பிராமணர்களே அக்னியாகக் கருதப்படுகின்றனர். கல்வியைப் பெற்றவர்கள் அக்னியைத் துதிக்கின்றனர். மேலும் அக்னியே விஷ்ணு ஆவான். உயிரினங்கள் அனைத்தினுள்ளும் நுழையும் அவனே அவற்றின் உயிர் மூச்சுகளைத் தாங்கிப்பிடிக்கிறான்.(15)

இது தொடர்பாகச் சநத்குமாரரால் பாடப்பட்ட ஒரு சுலோகம இருக்கிறது. பிரம்மன் அண்டத்தைப் படைத்த போது, முதலில் பிராமணர்களைப் படைத்தான். பிராமணர்கள் வேத கல்வியின் மூலம் இறவாமையை அடைந்து, அத்தகைய கல்வியின் துணையால் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். பிராமணர்களின் நுண்ணறிவு, வாக்கு, செயல்கள், நோன்புகள், நம்பிக்கை மற்றும் தவங்கள் ஆகியன பசுவின் அமுதத்தை {வெண்ணையைத்} தாங்கும் உறியைப் போலப் பூமியையும் சொர்க்கத்தையும் தாங்குகின்றன.(16) வாய்மையைவிட உயர்ந்த கடமை வேறேதும் இல்லை. தாயைவிட மதிக்கத்தகுந்த மேன்மையானவர்கள் வேறு எவரும் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் இன்பநிலையை அளிப்பதற்குப் பிராமணனைவிட மிகத் தகுந்தவன் வேறு எவனும் இல்லை.(17) பிராமணர்கள் (தங்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள் மற்றும் பிற வகை உடைமைகளிலிருந்து) வாழ்வாதாரத்திற்கு எந்தக் குறிப்பிட்ட வழிமுறையும் இல்லாத ஆட்சிப்பகுதிகளில் வசிப்போர் துன்பத்தை அடைவார்கள். அங்கே எருதுகள் மக்களைச் சுமக்கவோ, ஏர் உழுவோ செய்வதில்லை, அதே போல எந்த வகை வாகனங்களும் அவற்றை ஏற்பதில்லை. குடுவைகளில் உள்ள பால் ஒருபோதும் வெண்ணைப் பெறுவதற்காகக் கடையப்படுவதில்லை. மறுபுறம், அங்கே வசிப்பவர்கள், அனைத்து வகைச் செழிப்புகளையும் இழந்து, (அமைதியின் அருளை அடைவதற்குப் பதிலாக) திருடர்களாகிறார்கள்.(18)

வேதங்கள், புராணங்கள், வரலாறுகள், மற்றும் அதிகாரமிக்கப் பிற எழுத்துகளில் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவும், அனைத்துப் பொருட்களையும் படைப்பவர்களும், இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் அடையாளங்காணப்படுகிறவர்களுமான பிராமணர்களே நாராயணனின் வாயாக இருக்கிறார்கள். உண்மையில், அந்த வரமளிக்கும் பெருந்தேவன் பேச்சைக் கட்டுப்படுத்தித் தவமிருந்தபோது, அவனது வாயில் இருந்து முதலில் வந்தவர்கள் பிராமணர்களே. விளக்கப்படமுடியாத வடிவத்தில் பிரம்மனாக நானே இருந்து, தேவர்கள், அசுரர்கள் மற்றும்பெரும் முனிவர்களைப் படைத்து, அவரவருக்குரிய நிலைகளில் நிறுத்தி, தேவைப்படும் நேரத்தில் தண்டிக்கவும் செய்வதால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மேம்பட்ட நிலையைப் பிராமணர்கள் அடைகிறார்கள். அஹல்யை சிற்றின்ப வன்தாக்குதலுக்கு உள்ளான விளைவால், அவளது கணவரான கௌதமரால் இந்திரன் சபிக்கப்பட்டான், அதன் மூலமே அவன் தன் முகத்தில் பச்சை தாடியைக் கொண்டான். கௌசிகரின்அந்தச் சாபத்தின் மூலம் இந்திரன் தன் விதைப்பைகளையும் (அண்டத்தை) இழந்தான், பின்னர், (பிற தேவர்கள் அவன் மீது கொண்ட அன்பால்) ஓர் ஆட்டின் விதைப்பைகளால் (அஜத்தின் விருஷணத்தால்) அந்த இழப்பு சமன் செய்யப்பட்டது.

மன்னன் சர்யாதியின் வேள்வியில், பெரும் முனிவரான சியவனர், அசுவின் தேவர்கள் இருவரையும் வேள்விக்காணிக்கைகளின் பங்காளிகளாக்க விரும்பியபோது, இந்திரன் அதைத் தடுத்தான். சியவனர் இவ்வாறு வற்புறுத்தியபோது, அவர் மீது வஜ்ரத்தை வீச நினைத்தான் இந்திரன். அந்த முனிவர் {சியவனர்} இந்திரனின் கரங்களை முடக்கினார். ருத்திரனால் தமது வேள்வி அழிந்த பெரும் முனிவர் தக்ஷர், மீண்டும் தம்மைக் கடுந்தவங்களில் ஈடுபடுத்திக் கொண்டு அடைந்த உயர்ந்த பலத்தின் விளைவால், ருத்திரனின் நெற்றில் மூன்றாவது கண் போன்ற ஒன்றைத் தோன்றச் செய்தார். ருத்திரன், அசுரர்களுக்குச் சொந்தமான முந்நகரத்தை {திரிபுரத்தை} அழிக்க முயன்ற போது, சகிப்புத்தன்மையைக் கடந்து தூண்டப்பட்டவரும், அசுரர்களின் ஆசானுமான உசானஸ், தமது தலையின் சடாமுடியில் இருந்து ஒன்றைப் பிடுங்கி, அந்த ருத்திரன் மீது வீசினார். அந்தச் சடாமுடியில் இருந்து பல பாம்புகள் எழுந்தன. அந்தப் பாம்புகள் ருத்திரனைக் கடித்ததால் அவனது தொண்டை நீல நிறமானது. கடந்த காலமான {யுகமான} சுயம்புவான மனுவின் காலத்தில், நாராயணன் ருத்திரனின் தொண்டையைப் பற்றியதாகவும், அதனால் ருத்திரனின் தொண்டை நீலமானதாகவும் சொல்லப்படுகிறது[2].

[2] கும்பகோணம் பதிப்பில், "திரிபுரர்களைக் கொல்லுவதற்குத் தீக்ஷை பெற்றவரான ருத்ரருடைய ஜடைகள் சுக்கிராசாரியரால் தலையிலிருந்தும் அறுத்து அக்னியில் போடப்பட்டன. அதிலிருந்தும் ஸர்ப்பங்களுண்டாயின. அந்த ஸர்ப்பங்களால் பீடிக்கப்பட்ட அவருடைய கழுத்துக் கறுத்த வர்ணத்தையடைந்தது. முன் ஸ்வாயம்புவமன்வந்தரத்திலும் அவர் நாராயணருடைய கரத்தினால் கட்டுண்டதால் கறுத்தகழுத்தையுடையவரானார். அமிருதத்தினுற்பத்தி காலத்தில் வாயுவினால் சேர்க்கப்பட்ட விஷத்தைப் பக்ஷிக்கிறவரானார். "விஷபானஞ்செய்தார்” என்கிற நிமித்தமாகவே பிரம்மாவினால் சந்திரகலையானது (சிரத்தில்) வைகப்பட்டதும்" என்றிருக்கிறது.

அமுதத்திற்காகப் பெருங்கடல் கடையப்பட்ட நிகழ்வின்போது, அங்கிரஸ் குலத்தைச் சார்ந்த பிருஹஸ்பதி, புருஷ்சாரணம் என்ற சடங்கைச் செய்வதற்காகப் பெருங்கடலின் கரையில் அமர்ந்தார். தொடக்க ஆசமனத்திற்காக {நீராடலுக்காக} அவர் சிறிதளவு நீரை எடுத்தபோது, அது புழுதி நிறைந்ததாகக் காணப்பட்டது. இதனால் கோபமடைந்த பிருஹஸ்பதி, "நான் உன்னைத் தீண்ட வந்தும், அதைக் கருத்தில் கொள்ளாமல் நீ இவ்வளவு தூய்மையில்லாமல் இருப்பதாலும், தெளிவடையாமல் இருப்பதாலும், இந்த நாள் முதல் மீன்கள், சுறாக்கள், ஆமைகள் மற்றும் பிற நீர்வாழ் விலங்குகளால் நீ கறைபடிந்திருப்பாய்" என்று சொல்லி பெருங்கடலுக்குச் சாபமளித்தார். அந்தக் காலத்திலிருந்து பெருங்கடலின் நீரானது, பல்வேறு வகைக் கடல் விலங்குகளாலும், ராட்சசர்களாலும் நிறைந்திருக்கிறது.

முன்பொரு சமயம் தாஷ்டிரியின் {துவஷ்டாவின்} மகன் விஷ்வரூபர், தேவர்களின் புரோகிதரானார். அவருடைய தாயானவள் ஓர் அசுரனின் மகள் என்பதால் அவர் தாய்வழியில் அசுரர்களோடு தொடர்புடையவராக இருந்தார். வேள்வி காணிக்கைகளில் தேவர்களுக்குரிய பங்கை பொதுவெளியில் கொடுத்தாலும், தனிப்பட்ட முறையில் அசுரர்களுக்கும் பங்கைக் கொடுத்தார். ஹிரண்ய கசிபுவைத் தங்கள் தலைமையில் கொண்ட அசுரர்கள், விஷ்வரூபரின் தாயான தங்கள் தங்கையிடம் சென்று, அவளிடம், "தாஷ்டிரியின் மூலம் உண்டானவனும், திரிசிரிஸ் என்ற வேறு பெயரால் அழைக்கப்படுபவனுமான உன் மகன் விஷ்வரூபன், இப்போது தேவர்களின் புரோகிதராக இருக்கிறான். பொது வெளியில் வேள்விக் காணிக்கைகளில் தேவர்களுக்குரிய பங்கை அவன் கொடுக்கும்போது, அதில் எங்கள் பங்கையும் தனிப்பட்ட முறையில் கொடுத்து வருகிறான். இதன் விளைவால் தேவர்கள் பெருக்கத்தையும், நாங்கள் பலவீனதைதயும் அடைகிறோம். எனவே, அவனை எங்கள் தரப்பை அடையச் செய்வதே உனக்குத் தகும்" என்றார்கள்.

அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட விஷ்வரூபரின் தாய், (இந்திரனின்) நந்தன வனத்தில் இருந்து தன் மகனிடம் சென்று அவரிடம், "ஓ! மகனே, நீ ஏன் உன் எதிரிகளைப் பெருக்கி உன் தாய் மாமன்களின் தரப்பை பலவீனப்படுத்துகிறாய்? இவ்வழியில் செயல்படுவது உனக்குத் தகாது" என்றாள்.

தன் தாயால் இவ்வாறு வேண்டப்பட்ட விஷ்வரூபர், அவளது வார்த்தைகளைக் கீழ்ப்படிய வேண்டும் என்று நினைத்து, அந்தச் சிந்தனையின் விளைவால், தன் தாய்க்கு உரிய மரியாதைகளைச் செலுத்திவிட்டு, ஹிரண்யகசிபுவின் தரப்பை அடைந்தார். திரிசிரஸ் {விஷ்வரூபர்} வந்ததும், மன்னன் ஹிரண்யகசிபு, பிரம்மனின் மகனும், தன் பழைய ஹோத்ரியுமான வசிஷ்டரை அனுப்பிவிட்டு, {ஹோத்ரி என்ற} அந்த அலுவலில் திரிசிரஸை நியமித்தான். இதனால் கோபமடைந்த வசிஷ்டர், "என்னை அனுப்பிவிட்டு, வேறொருவரை உன் ஹோதிர்யாக நியமித்துக் கொண்டதால் இந்த உனது வேள்வி நிறைவு பெறாது, இதற்கு முன் இல்லாத ஓர் உயிரினம் உன்னைக் கொல்லும்" என்று அவனுக்குச் சாபமளித்தார். இந்தச் சாபத்தின் விளைவால், ஹிரண்யகசிபு சிங்க மனிதனின் {நரசிம்மத்தின்} வடிவில் இருந்த விஷ்ணுவால் கொல்லப்பட்டான்.

விஷ்வரூபர், தமது தாய்வழி உறவினர்களின் தரப்பை அடைந்து, அவர்களைப் பெருக்குவதற்காகக் கடுந்தவங்களைச் செய்தார். அவரைத் தமது நோன்புகளில் இருந்து பிறழச் செய்ய விரும்பிய இந்திரன் அழகிய பல அப்சரஸ்களை அவரிடம் அனுப்பினான். ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களும், தெய்வீகமானவர்களுமான அந்தத் தேவகன்னிகளைக் கண்டு விஷ்வரூபரின் இதயம் கலக்கமடைந்தது. குறுகிய காலத்திற்குள் அவர் அவர்களிடம் மிகுந்த பற்றைக் கொண்டார். அவர் அவர்களிடம் பற்றுக் கொண்டார் என்பதை அறிந்த அந்தத் தெய்வீக தேவ கன்னிகள், ஒருநாள் அவரிடம், "இனியும் நாங்கள் இங்கே இருக்க மாட்டோம். உண்மையில் நாங்கள் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்லப் போகிறோம்" என்றனர்.

தம்மிடம் அவ்வாறு சொன்னவர்களிடம் அந்தத் தாஷ்டிரியின் மகன், "நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள்? என்னோடே இருங்கள். நான் உங்களுக்கு நன்மையைச் செய்வேன்" என்றார்.

அவர் இவ்வாறு சொல்வதைக் கேட்ட அந்த அப்சரஸ்கள், "நாங்கள் அப்சரஸ்கள் என்றழைக்கப்படும் தெய்வீகமான தேவகன்னிகளாவோம். சிறப்புமிக்கவனும், பெரும் பலம் கொண்டவனும், வரமளிப்பவனுமான இந்திரனையே பழங்காலத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்தோம்" என்றனர்.

அப்போது விஷ்வரூபர் அவர்களிடம், "இந்த நாளே, தேவர்கள் அனைவரையும், அவர்களின் தலைமையில் உள்ள இந்திரனையும் இல்லாமல் செய்வேன்" என்றார்.

இதைச் சொன்ன திரிசிரஸ், பெரும் திறம் கொண்ட குறிப்பிட்ட புனிதமான மந்திரங்களை மனதிதல் சொல்லத் தொடங்கினார். அந்த மந்திரங்களின் சக்தியால் அவரது சக்தி அதிகரிக்கத் தொடங்கியது. வேள்விகளுக்கு அடிமையாக இருந்த பிராமணர்கள், முறையான சடங்குகளுடன் புனித நெருப்பில் ஊற்றிய சோமம் அனைத்தையும் ஒரு வாயினால் பருகத் தொடங்கினார். இரண்டாவது வாயினால் அவர் (வேள்விகளில் கொடுக்கப்பட்ட) உணவுகள் அனைத்தையும் உண்ணத் தொடங்கினார். மூன்றாம் வாயினால் அவர் இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அனைவரின் சக்தியையும் பருகத் தொடங்கினார. அவர் குடித்துஃக கொண்டிருந்த சோமத்தினால், அவரது உடலின் ஒவ்வொரு பகுதியும் சக்தியில பெருகுவதைக் கண்ட தேவர்கள் அனைவரும், இந்திரனுடன் சேர்ந்து பெரும்பாட்டன் பிரம்மனிடம் சென்றனர்.

அவனது {பிரம்மனின்} முன்னிலையை அடைந்த அவர்கள், "எங்கும் செய்யப்படும் வேள்விகளில் முறையாக அளிக்கப்படும் சோமம் அனைத்தும் விஷ்வரூபரால் பருகப்படுகிறது. எங்களுக்குரிய பங்குகள் ஏதும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. அசுரர்கள் பெருகுகிறார்கள், நாங்களோ பலவீனமடைகிறோம். எனவே, எங்களுக்கான நன்மை எதுவோ, அதை விதிப்பதே உமக்குத் தகும்" என்றனர்.

தேவர்கள் நிறுத்தியதும், பெரும்பாட்டன் அவர்களிடம், "பிருகு குலத்தைச் சேர்ந்த பெரும் முனிவர் ததீசி இப்போதும் கடுந்தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். தேவர்களே, அவர்களிடம் சென்று ஒரு வரத்தை வேண்டுங்கள். அவர் தமது உடலைக் கைவிடும்படி ஏற்பாடு செய்யுங்கள். பிறகு அவரது எலும்புகளைக் கொண்டு வஜ்ரம் என்றழைக்கப்படும் புதிய ஆயுதம் ஒன்றை உண்டாக்குங்கள்" என்றான்.

பெரும்பாட்டனால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்ட தேவர்கள், புனிதமான முனிவர் ததீசி தமது தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர். இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அந்தத் தவசியிடம், "ஓ! புனிதமானவரே, உமது தவங்கள் தடையில்லாமல் நன்றாக நடைபெறுகிறது என நம்புகிறோம்" என்றனர்.

அதற்குத் தவசியான ததீசி அவர்களிடம், "உங்கள் அனைவருக்கும் நல்வரவு. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக. நீங்கள் சொல்வதை நிச்சயம் நான் செய்வேன்" என்றார்.

அப்போது அவர்கள் அவரிடம் {தேவர்கள் முனிவர் ததீசியிடம்}, "உலகங்கள் அனைத்தின் நன்மைக்காக நீர் உமது உடலைக் கைவிடுவதே உமக்குத் தகும்" என்றனர்.

பெரும் யோகியும், இன்ப துன்பங்களை ஒரே ஒளியில் காண்பவரும், உற்சாகத்துடன் இருப்பவருமான தவசி ததீசி இவ்வாறு வேண்டப்பட்டதும், தமது யோக சக்தியால் தம் ஆன்மாவைக் குவித்துத் தமது உடலைக் கைவிட்டார்[3]. களிமண்ணாலான அந்தத் தற்காலிகமான வசிப்பிடத்தை அவரது ஆன்மா கைவிட்டபோது, தாத்ரியானவர் {பிரம்மன்}, அவரது எலும்புகளை எடுத்து வஜ்ரம் என்றழைக்கப்படும் ஒரு தடுக்கப்பட முடியாத ஆயுதத்தை உண்டாக்கினார்.

[3] கும்பகோணம் பதிப்பில், "இவ்விதம் சொல்லப்பட்ட ததீசர், "ஆயிரம் வருஷம் என்னால் இந்திரனுடைய பதமடையப்படுமானால் சரீரத்தை விடுவேன்" என்று அவர்களுக்குச் சொன்னார். அப்பொழுது இந்திரன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லித் தன்னுடைய ஸ்தானத்தைக் கொடுத்துவிட்டுத் தபஸியானான். ததீசர் இந்திரானானார். அவ்வளவுக்கு முன்னமே இந்திரனுடன் கூடின தேவர்கள், "தேகத்தைவிடுவதற்கு இது காலம்" என்று வந்தார்கள். அப்படியே வருத்தமில்லாத மனமுடையவரும், ஸுகதுக்கங்களில் ஸமமானவரும் மகாயோகியுமான ததீசரானவர் உடனே புத்தியில் பரமாத்மாவைத் தியானித்துக் கொண்டு சரீரத்தைவிட்டார்" என்றிருக்கிறது. இந்தச் சம்பவங்கள் கங்குலியின் பதிப்பில் இல்லை.

ஒரு பிராமணரின் எலும்புகளால் இவ்வாறு செய்யப்பட்டதும், பிற ஆயுதங்களால் ஊடுருவப்பட முடியாததும், தடுக்கப்பட முடியாததும், விஷ்ணுவின் சக்தியால் நிறைந்ததுமான அந்த வஜ்ரத்தைக் கொண்டு இந்திரனானவன், தாஷ்டிரியின் மகனான விஷ்வரூபரைத் தாக்கினான். இவ்வாறு தாஷ்டிரியின் மகனைக் கொன்ற இந்திரன், அவரது தலையை உடலில் இருந்து துண்டித்தான். எனினும், விஷ்வரூபரின் உயிற்ற உடல் கடையப்பட்ட போது, அதனுள் இருந்த சக்தி, விருத்திரன் என்ற பெயரைக் கொண்ட வலிமைமிக்க அசுரன் ஒருவனை உண்டாக்கியது. விருத்திரன் இந்திரனின் பகைவனானான், ஆனால் அவனையும் இந்திரன் வஜ்ரத்தால் கொன்றான். இவ்வாறு பிரம்மஹத்தி என்ற பாவம் இரண்டுமுறை செய்யப்பட்ட விளைவால், பேரச்சமடைந்த இந்திரன் சொர்க்கத்தின் ஆட்சியுரிமையைக் கைவிட்டான். பிறகு அவன் மானஸத் தடாகத்தில் வளர்ந்த ஒரு குளிர்ந்த தாமரைத் தண்டில் நுழைந்தான். அனிமா என்ற யோக குணத்தின் விளைவால் மிக நுட்பமான வடிவை அடைந்த அவன் அந்தத் தாமரைத் தண்டின் இழைகளுக்குள் நுழைந்தான்.

மூவுலகங்களின் தலைவனான, சச்சியின் கணவன், பிரம்மஹத்தி என்ற பாவத்தில் கொண்ட அச்சத்தினால் காணாமல் போன போது, இந்த அண்டம் தலைவனற்றதானது. ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் தேவர்களைத் தாக்கின. பெரும் முனிவர்களால் சொல்லப்பட்ட மந்திரங்கள் தங்கள் திறன்கள் அனைத்தையும் இழந்தன. எங்கும் ராட்சசர்கள் தோன்றினர். மன்னனற்றவர்களாக இருந்த அனைத்து உலகவாசிகளும் பலத்தை இழந்தவர்களாக ராட்சசர்களுக்கும், பிற தீய உயிரினங்களுக்கும் எளிய இரையாக வீழத் தொடங்கினர். அப்போது தேவர்களும், முனிவர்களும் ஒன்று சேர்ந்து ஆயுஷின் மகனான நஹுஷனை மூவுலகங்களின் மன்னனாக அவனுக்கு முறையாக முடிசூட்டினர். நஹுஷன் தன் நெற்றியில் முழுமையாகக் கொண்டிருந்த ஐநூறு ஒளிக்கோள்களின் சுடர்மிக்கப் பிரகாசம், ஒவ்வொரு உயிரினத்தின் சக்தியையும் குன்றச் செய்தது. இவ்வாறு இருந்த நஹுஷன் தொடர்ந்து சொர்க்கத்தை ஆளத் தொடங்கினான். மூவுலகங்களும் இயல்பான நிலைக்குத் திரும்பின. அண்டத்தில் வசித்தவர்கள் மீண்டும் மகிழ்ச்சியானவர்களாகவும், உற்சாகமானவர்களாகவும் ஆனார்கள்.

அப்போது நஹுஷன், "அந்த இந்திரன் அனுபவித்த அனைத்தும் என் முன்னிலையில் இருக்கின்றன. அவனது மனைவியான சச்சி மட்டுமே இல்லை" என்றான்.

இதைச் சொன்ன நஹுஷன் சச்சி {இந்திராணி} இருந்த இடத்திற்குச் சென்று, அவளிடம், "ஓ! அருளப்பட்ட மங்கையே, நான் தேவர்களின் தலைவன் வந்திருக்கிறேன். என்னை ஏற்பாயாக" என்றான்.

சச்சி அவனுக்கு மறுமொழியாக, "நீர் இயல்பாகவே அறவொழுக்கத்தில் பற்று கொண்டவராவீர். மேலும் நீர் சோம {சந்திர} குலத்தைச் சார்ந்தவராக இருக்கிறீர். நீர் மாற்றான் மனைவியைப் பீடித்தல் தகாது" என்றாள்.

அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட நஹுஷன், அவளிடம், "இந்திரனின் நிலை {பதவி} இப்போது என்னால் அடையப்பட்டது. நான் இந்திரனின் ஆட்சிப்பகுதிகளையும், அவனுடைய மதிப்புமிக்க உடைமைகள் அனைத்தையும் அனுபவிக்கத் தகுந்தவனாவேன். உன்னை அனுபவிக்க நினைப்பதில் பாவமேதும் இல்லை. முன்பு நீ இந்திரனுடையவளாக இருந்ததால் இப்போது எனதாக வேண்டும்" என்றான்.

சச்சி அவனிடம், "நான் நோற்கும் நோன்பொன்று நிறைவடையாமல் இருக்கிறது. {நோன்பின்} இறுதியான சடங்குகள் நிறைவடைந்ததும், ஒரு சில நாட்களில் நான் உம்மிடம் வருகிறேன்" என்றாள்.

இந்திரனின் மனைவியிடம் இந்த உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டு நஹுஷன் அவளது முன்னிலையில் இருந்து அகன்றான். அதே வேளையில் துயரத்தாலும், சோகத்தாலும் பீடிக்கப்பட்ட சச்சி, தன் தலைவனைக் காணும் ஆவலாலும், நஹுஷன் மீது கொண்ட அச்சத்தாலும் (தேவர்களின் தலைமைப் புரோஹிதரான) பிருஹஸ்பதியிடம் சென்றாள். முதல் பார்வையிலேயே பிருஹஸ்பதி அவள் கவலையடைந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டார். உடனே அவர், அவள் தன் கணவனை மீட்கத் தேவையானவற்றைச் செய்யும் நோக்கம் கொண்டிருப்பதைத் தியான யோகத்தின் மூலம் அறிந்தார்.

பிருஹஸ்பதி அவளிடம், "தவத்தகுதியையும், நீ இப்போது நோற்கும் நோன்பின் விளைவால் உண்டாகும் தகுதியையும் கொண்டு, வரமளிக்கும் தேவியான உபஸ்ருதியை இருப்புக்கு அழைப்பாயாக. உன்னால் இருப்புக்கு அழைக்கப்படும் அவள், உடனே தோன்றி உன் கணவன் வசிக்கும் இடத்தைக்காட்டுவாள்" என்றார்.

அவள் அந்தக் கடும் நோன்பு நோற்றுக் கொண்டிருந்த போது, உரிய மந்திரங்களின் துணையுடன் வரமளிக்கும் தேவியான உபஸ்ருதியை இருப்புக்கு அழைத்தாள்.

சச்சியால் இருப்புக்கு அழைக்கப்பட்ட அந்தத் தேவி அவள் முன் தோன்றி, "உன் விருப்பத்தைக் கேட்க நான் இங்கிருக்கிறேன். உன்னால் இருப்புக்கு அழைக்கப்பட்டதால் நான் வந்திருக்கிறேன். நீ பேணி வளர்க்கும் எந்த விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும்?" என்று கேட்டாள்.

அவளுக்குத் தலைவணங்கிய சச்சி, "ஓ! அருளப்பட்ட மங்கையே {பகவதி}, என் கணவர் எங்கிருக்கிறார் என்பதைக் காட்டுவதே உனக்குத் தகும். வாய்மை நீயே. ரிதம் {ஸத்துக்களுக்குத் தாய்} நீயே" என்றாள்.

இவ்வாறு சொல்லப்பட்ட தேவி உபஸ்ருதி, அவளை மானஸத் தடாகத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே வந்த அவள், தாமரைத் தண்டின் இழைகளுக்குள் வசிக்கும் சச்சியின் தலைவனான இந்திரனை அவளுக்குச் சுட்டிக் காட்டினாள். தன் மனைவி நிறம் குன்றி, மெலிந்திருப்பதைக் கண்ட இந்திரன், மிகவும் கவலையடைந்தான்.

அந்தச் சொர்க்கத்தின் தேவன் தனக்குள்ளேயே, "ஐயோ, பெருஞ்சோகம் என்னை மூழ்கடிக்கிறது. நான் என் நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டேன். என் நிமித்தமாகக் கவலையடைந்திருக்கும் என் மனைவி காணாமல் போன என்னைக் கண்டுபிடித்து இங்கே வந்திருக்கிறாள்" என்றான்.

இவ்வாறு சிந்தித்த இந்திரன், அன்புக்குரிய தன் மனைவியிடம், "இப்போது நீ எந்நிலையில் இருக்கிறாய்?" என்று கேட்டான்.

அவள், "நஹுஷன் என்னை அவனது மனைவியாகும்படி அழைக்கிறான். நான் அவனிடம் செல்லப் போகும் காலத்தை நிர்ணயித்து அவகாசம் பெற்றிருக்கிறேன்" என்றாள்.

இந்திரன் அவளிடம், "நீ நஹுஷனிடம் சென்று, ’இதற்கும் முன் ஒருபோதும் பயன்படுத்தப்படாததும், சில முனிவர்கள் பூட்டப்பட்டதுமான வாகனத்தில் உன்னிடம் வந்து, அந்நிலையிலேயே உன்னை மணக்க வேண்டும்’ என்றும், ’இந்திரன் மிக அழகிய பல வாகனங்களைக் கொண்டிருந்தான், அவை அனைத்தும் அவனைச் சுமந்திருக்கின்றன’ என்றும், ’எனினும், இந்திரனுக்கே இல்லாத அத்தகைய வாகனத்தில் அவன் வர வேண்டும்’ என்றும் சொல்வாயாக" என்றான்.

இவ்வாறு தன் தலைவனால் ஆலோசனை கூறப்பட்ட சச்சி, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள். இந்திரன் மீண்டும் தாமரைத் தண்டின் இழைகளுக்குள் நுழைந்தான்.

இந்திரனின் ராணி மீண்டும் சொர்க்கத்திற்குத் திரும்பியதைக் கண்ட நஹுஷன், அவளிடம், "நீ நிர்ணயித்த காலம் முடிவடைந்தது" என்றான். இந்திரன் அவளிடம் செய்யச் சொன்னதைச் சச்சி அவனிடம் சொன்னாள்.

நஹுஷன், தான் செலுத்திய வாகனத்தில் பெரும் முனிவர்கள் பலரைப் பூட்டி, சச்சி வாழ்ந்து வந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டான். மைத்ரவருணனின் உயிர்வித்தின் மூலம் கும்பத்தில் பிறந்தவரும், முனிவர்களில் முதன்மையானவருமான அகஸ்தியர், இவ்வழியில் நஹுஷனால் அவமதிக்கப்படும் அந்த முதன்மையான முனிவர்களைக் கண்டார். அவரை {அகஸ்தியரை} நஹுஷன் தன் காலால் தாக்கினான்.

அவனிடம் அகஸ்தியர், "இழிந்தவனே, பெரும் முறையற்ற செயலைச் செய்வதால் நீ பூமியில் விழுவாயாக. பாம்பாக மாறி, இந்தப் பூமியும் மலைகளும் உள்ளவரை அந்த வடிவத்திலேயே தொடர்ந்து வாழ்வாயாக" என்று சபித்தார்.

அந்தப் பெரும் முனிவரால் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டவுடனே நஹுஷன் அந்த வாகனத்தில் இருந்து கீழே விழுந்தான். மூவுலகங்களும் மீண்டும் தலைவனற்றவையாகின. தேவர்களும் முனிவர்களும் ஒன்றுசேர்ந்து விஷ்ணு இருக்கும் இடத்திற்குச் சென்று, இந்திரனை மீட்டுக் கொண்டு வரக் கோரினர்.

அவனை {விஷ்ணுவை} அணுகிய அவர்கள், "ஓ! புனிதமானவனே, பிரம்மஹத்தி என்ற பாவத்தில் மூழ்கியிருக்கும் இந்திரனை மீட்பாயாக" என்றனர்.

வரமளிப்பவனான விஷ்ணு அவர்களிடம், "இந்திரன் ஒரு குதிரை வேள்வியை விஷ்ணுவை மதிக்கும் வகையில் செய்யட்டும். அப்போது அவன் தனது முந்தைய நிலையை அடைவான்" என்றான்.

தேவர்களும், முனிவர்களும் இந்திரனைத் தேடத் தொடங்கினர், ஆனால் அவர்களால் அவனைக் காண முடியாததால் சச்சியிடம் சென்று, "ஓ! அருளப்பட்ட மங்கையே, இந்திரனிடம் சென்று அவனை இங்கே கொண்டு வருவாயாக" என்றனர்.

அவர்களால் வேண்டிக்கொள்ளப்பட்ட சச்சி {இந்திராணி} மீண்டும் மானஸத் தடாகத்திற்குச் சென்றாள். இந்திரன், அத்தடாகத்திலிருந்து எழுந்து பிருஹஸ்பதியிடம் வந்தான். தேவ புரோஹிதரான பிருஹஸ்பதி, ஒரு நல்ல குதிரைக்குப் பதில் அனைத்து வழியிலும் வேள்விக்குத் தகுந்த ஒரு கருப்பு மானை வைத்து, குதிரை வேள்வி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பிருஹஸ்பதி, மருத்துகளின் தலைவனான இந்திரனை (கொல்வதில் இருந்து காக்கப்பட்ட) அந்தக் குதிரையிலேயே அவனது இடத்திற்கு வழிநடத்தினார்[4]. பிறகு அந்தச் சொர்க்கத்தின் தலைவன் {இந்திரன்}, தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவராலும் துதிகளால் துதிக்கப்பட்டான். பிரம்மஹத்தி பாவமானது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பெண், நெருப்பு, மரங்கள், பசு ஆகியவற்றில் வசிக்கும்படி விதிக்கப்பட்டு, அதனிலிருந்து தூய்மையடைந்த அவன் தொடர்ந்து சொர்க்கத்தை ஆளத் தொடங்கினான். இவ்வாறே ஒரு பிராமணரின் சக்தியால் பலமடைந்த இந்திரன், தன் பகைவனைக் கொல்வதில் வென்றான் (அந்தச் செயலின் விளைவாகப் பாவத்தில் மூழ்கியபோது, மற்றொரு பிராமணரின் சக்தியால் மீட்கப்பட்டான்). இவ்வாறே இந்திரன் மீண்டும் தன் நிலையை அடைந்தான்.

[4] கும்பகோணம் பதிப்பில், "பிறகு தேவர்களும், முனிவர்களும் இந்திரனைக் காணாமையால் இந்திராணியை நோக்கி, "ஓ, ஸௌபாக்யவதி. செல். இந்திரனை அழைத்துவா" என்று சொன்னார்கள். அவள் அந்த ஸரஸிலிருக்கிற இந்திரனை அழைத்தாள். இந்திரனும் அந்த ஸரஸிலிருந்து வெளியில் வந்து ஸரஸ்வதீநதியை அடைந்தான். பிருகஸ்பதியும் இந்திரனுக்காக அஸ்வமேதமென்கிற மஹாயாகத்தை நடத்தினார். அந்த யாகத்தில் கறுப்பும் வெளுப்புமான யாகாஸ்வத்தை விட்டு அதையே வாகனமாகச் செய்து பிருஹஸ்பதியானவர் தேவர்களுக்குப் பதியான இந்திரனை ஸ்வர்க்கஸ்தானத்தை அடையும்படி செய்தார்" என்றிருக்கிறது. குதிரைக்குப் பதில் மான் என்று கங்குலியில் வரும் செய்தி கும்பகோணம் பதிப்பில் இல்லை. பிபேக் திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே குதிரைக்குப் பதில் மான் பயன்படுத்தப்பட்ட செய்தி இருக்கிறது.

பழங்காலத்தில், பெரும் முனிவரான பரத்வாஜர் தெய்வீக கங்கையின் கரையில் தமது துதிகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது விஷ்ணு மூன்று அடி வடிவைக் கொண்டு {வாமனனாக} அந்த இடத்திற்கு வந்தான்[5]. அந்த இயல்புக்குமீறிய காட்சியைக் கண்ட பரத்வாஜர், கை நிறையக் கொண்ட நீரால் விஷ்ணுவைத் தாக்கினார். இதனால் விஷ்ணுவின் மார்பில் (ஸ்ரீவத்ஸம் என்றழைக்கப்படும்) ஒரு வடுவை அடைந்தான்[6].

[5] "கங்கையாற்றுக்கு மூன்று ஓடைகள்உண்டு. ஒன்று சொர்க்கத்திலும், ஒன்று பூமியிலும், மூன்றாவது பாதாளத்திலும் பாய்கிறது. மறுபிறப்பாள வகையினர், தங்கள் காலை, நடுப்பகல் மற்றும் மாலை துதிகளில் அந்த நீரைத் தீண்டுவார்கள். எனவே, ‘பரத்வாஜர் நீரைத் தீண்டினார்’ என்பதன் மூலம் அவர் துதித்துக் கொண்டிருந்தார் என்பது சொல்லப்படுகிறது. விஷ்ணு மூன்றடி வடிவத்தை அண்டத்தின் அரசுரிமையில் இருந்து பலியை நீக்குவதற்காக ஏற்றான். ஓர் அடியால் பூமியையும், மற்றொன்றால் ஆகாயத்தையும் மறைத்தான். அவன் மூன்றாவது அடியை வைக்க இடமேதும் இல்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்

[6] "ஸ்ரீவத்ஸம் என்பது விஷ்ணுவின் மார்பில் இருக்கும் அழகிய சுழி {ரேகையாகும்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

முனிவர்களில் முதன்மையானவரான பிருகுவால் சபிக்கப்பட்ட அக்னி, அனைத்துப் பொருட்களையும் விழுங்கும் கடப்பாடு உடையவனாகச் செய்யப்பட்டான்.(19-57) ஒரு காலத்தில் தேவர்களின் தாயான அதிதி, தன் மகன்களுக்காக உணவு சமைத்திருந்தாள். அந்த உணவை உண்டு, அதன் மூலம் பலமடையும் தேவர்கள் அசுரர்களைக் கொல்வார்கள் என்று அவள் நினைத்திருந்தாள். உணவு சமைக்கப்பட்ட பிறகு, புதன் (என்ற பெயரால் அறியப்படும் கோளின் தலைமைத் தேவன்) ஒரு கடும் நோன்பை நிறைவு செய்து, அதிதி முன்னிலையில் வந்து, "எனக்குப் பிச்சை கொடு" என்று கேட்டான். இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட அதிதி, தன் மகன்களான தேவர்கள் முதலில் உண்ணாமல் வேறு யாரும் உணவை உண்ணக்கூடாது என்று நினைத்து அவனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. இவ்வாறு தனக்குப் பிச்சை அளிக்க மறுத்த அதிதியின் நடத்தையால் கோபமடைந்தவனும், பிரம்மனின் சுயமுமான புதன், தான் நிறைவு செய்திருந்த கடும் நோன்பின் மூலம் சபித்தான். அதிதி தனக்குப் பிச்சையிட மறுத்ததால் விவஸ்வான் {சூரியன்} தனது இரண்டாம் பிறவியில் அவளது கருவறையில் முட்டையின் {அண்டத்தின்} வடிவில் பிறப்படையும்போது அவள் பெரும் வலியை உணர்வாள் {துன்பமடைவாள்} என்று சபித்தான். அந்த நேரத்தில் அதிதி விவஸ்வானிடம் புதனின் சாபத்தை நினைவு கூர்ந்தாள், அதன் காரணமாகவே சிராத்தங்களில் துதிக்கப்படும் தேவனான விவஸ்வான் அதிதியின் கருவறையில் இருந்து வெளி வந்ததும், மார்த்தாண்டன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(58)

பிரஜாபதியான தக்ஷன் அறுபது {60} மகள்களின் தந்தையானான். அவர்களில் இருபத்துமூவர் கசியபருக்கும்; பத்து பேர் தர்மனுக்கும்; பத்து பேர் மனுவுக்கும், இருபத்தெழுவர் சோமனுக்கும் அளிக்கப்பட்டனர். நக்ஷத்திரங்கள் என்றழைக்கப்படுபவர்களும், சோமனுக்கு அளிக்கப்பட்டவர்களுமான அந்த இருபத்தெழுவரும் அழகிலும், சாதனைகளிலும் இணையானவர்களாகவே இருப்பினும், சோமன், எஞ்சியோரைவிட ரோகிணியிடமே அதிகப் பற்றுடன் இருந்தான். அவனது மனைவிகளில் எஞ்சியோர் அனைவரும், பொறாமையில் நிறைந்து, அவனை விட்டு அகன்று தங்கள் தந்தையிடம் சென்று தங்கள் கணவனின் நடத்தை குறித்துச் சொல்லும் வகையில், "ஓ! புனிதமானவரே, அழகில் நாங்கள் அனைவரும் இணையானவர்களாகவே இருப்பினும், எங்கள் கணவரான சோமர், எங்கள் சகோதரியான ரோஹிணியிடம் அதிகப் பற்றுடன் இருக்கிறார்" என்றனர். தன் மகள்கள் சொன்ன வெளிப்பாடுகளில் கோபமடைந்த தெய்வீக முனிவரான தக்ஷன், தன் மருமகனை காச நோய் தாக்கி அவனிடமே வசிக்கட்டும் என்று சாபமளித்தான். தக்ஷனின் இந்தச் சாபத்தினால் பலமிக்கச் சோமனைப்ப பீடித்த காசநோய் அவனது உடலுக்குள் நுழைந்தது. இவ்வழியில் காசநோயால் பீடிக்கப்பட்ட சோமன், தக்ஷனிடம் வந்தான். பின்னவன் {தக்ஷன்} அவனிடம், "நீ உன் மனைவியரிடம் சமமாக நடந்து கொள்ளாததால் நான் உன்னைச் சபித்தேன்" என்றான். பிறகு அந்த முனிவன் {தக்ஷன்}, சோமனிடம், "உன்னைப் பீடித்திருக்கும் காசநோயால் நீ குறைவை அடைகிறாய். மேற்குப் பெருங்கடலில் ஹிரண்யசரம் என்றழைக்கப்படும் புனித நீர்நிலை இருக்கிறது. அந்தப் புனித நீருக்குச் சென்று அங்கே நீராடுவாயாக" என்றான். அந்த முனிவனின் ஆலோசனையின் பேரில் சோமன் அங்கே சென்றான். சோமன் அந்த ஹிரண்யசிரத்தை அடைந்து அங்கே நீராடினான். தூய்மைச் சடங்குகளைச் செய்து அவன் தன் பாவத்தில் இருந்து தூய்மையடைந்தான். சோமனால் அந்தப் புனித நீர்நிலை ஒளிர்ந்ததால் (அபாசிதம் அடைந்ததால்), அந்த நாள் முதல் அது பிரபாஸை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. எனினும், பழங்காலத்தில் தக்ஷன் அளித்த சாபத்தின் விளைவால் முழு நிலவின் {பௌர்ணமியின்} இரவிலிருந்து தேயத்தொடங்கிப் புது நிலவின் {அமாவாசையின்} இரவில் முற்றாக மறைவதும், அதன் பிறகு மீண்டும் முழு நிலவின் இரவு வரை வளர்வதும் இன்று வரை நடக்கிறது. பிரகாசமான சந்திர வட்டில் {இவ்வாறு} களங்கமடைந்த காலத்திலிருந்து சோமனின் உடலில் குறிப்பிட்ட சில கரும்புள்ளிகள் இருக்கின்றன. உண்மையில் நிலவின் அற்புத வட்டில் அந்த நாள் முதல் முயலின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறது.(59)

ஒரு காலத்தில் ஸ்தூலசிரஸ் என்ற பெயரைக் கொண்ட முனிவர் ஒருவர் மேரு மலைகளின் வடக்குச் சாரலில் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்தார். அவர் அந்தக் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்தபோது, அனைத்து வகை இனிய நறுமணங்களையும் சுமந்தபடி ஒரு தூய்மையான தென்றல் அங்கே வீசத் தொடங்கி அவரது உடலுக்கு விசிறிவிட்டுக் கொண்டிருந்தது. அவன் செய்த கடுந்தவத்தால் அவரது உடல் வெந்து கொண்டிருந்ததாலும், அனைத்து வகை உணவையும் தவிர்த்து அவர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து கொண்டிருந்ததாலும் அவரைச் சுற்றிலும் வீசிய இனிய தென்றலின் விளைவால் அவர் உயர்வான நிறைவை அடைந்தார். தனக்கு விசிறிவிட்ட அந்த இனிய தென்றலிடம் அவர் இவ்வாறு நிறைவடைந்ததால், அவரைச் சுற்றிலும் இருந்த மரங்கள் (பொறாமையடைந்து) அவரது புகழைப் பழிக்கும் வகையில் மலர்களை வெளியிட்டன. மரங்களின் இந்நடத்தையால் வெறுப்படைந்த முனிவர், "இதுமுதல் உங்களால் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு உரிய மலர்களை வெளிப்படுத்த முடியாது" என்று சபித்தார்.(60)

பழங்காலத்தில் நாராயணன் உலகத்திற்கு நன்மை செய்வதற்காகப் பெரும் முனிவர் வடவாமுகராகப் பிறந்தான். மேருவின் சாரலில் கடுந்தவம் செய்து கொடிருந்தபோது அவர் பெருங்கடலை தன் முன்னிலைக்கு வருமாறு அழைத்தார். எனினும், பெருங்கடல் அவரது ஆணைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. இதனால் சினமடைந்த அந்த முனிவர்கள் வெப்பத்தோடு கூடிய தன் உடலைக் கொண்டு பெருங்கடலின் நீரைத் திடமாக்கி மனித வியர்வையின் சுவையுடன் அதை உப்புத்தன்மை அடையச் செய்தார். மேலும் அந்த முனிவர், "இனி உன் நீர் பருகும் நிலையில் இராது. உனக்குள் திரியும் குதிரைத் தலைக்கு மட்டுமே உன் நீர் பருகுவதற்கு இனிமையானதாக இருக்கும்" என்றார். இதன் காரணமாகவே பெருங்கடலின் நீரானது இந்த நாள்வரை சுவையில் உப்புத்தன்மை கொண்டதாகவும், குதிரைத் தலையைத் தவிர வேறு எவராலும் பருக முடியாததாகவும் இருக்கிறது[7].(61)

[7] "கடல்களில் பேருருவத்துடன் திரியும் இந்தக் குதிரைத் தலை இந்து சாத்திரங்களில் குறிப்பிடப்படுகிறது. அதன் வாயிலிருந்து சுடர்மிக்க நெருப்பு தொடர்ந்து வெளிப்படுகிறது. அதைக் கொண்டு அது கடலின் நீரைப் பருகுகிறது. மேலும் அஃது எப்போதும் பேரொலியெழுப்பி முழங்கிக் கொண்டிருக்கிறது. அது வடவாமுகம் என்றழைக்கப்படுகிறது. அதனிலிருந்து வெளிப்படும் நெருப்பானது வடவாநளன் என்றழைக்கப்படுகிறது. பெருங்கடலின் நீர் தெளிந்த நெய்யாகிறது. அந்தக் குதிரைத் தலை வேள்வி நெருப்பின் ஆகுதியாக ஊற்றப்படும் தெளிந்த நெய்யாக அதைப் பருகுகிறது. இந்த வடவ நெருப்பின் தோற்றம் சில வேளைகளில் ஜமதக்னி குலத்தில் பிறந்த ஊர்வ முனிவரின் கோபத்தால் உண்டானது என்று சொல்லப்படுகிறது. எனவே அஃது ஔர்வ நெருப்பு என்றும் சில வேளைகளில் அழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

உமை என்ற பெயரைக் கொண்ட இமய மலையின் மகளைத் திருமணம் செய்து கொள்ள ருத்திரன் விரும்பினான். (மஹாதேவனிடம உமையை அளிப்பதாக ஹிமவான் {இமயம்} உறுதியளித்த பிறகு) ஹிமவானை அணுகிய பெரும் முனிவர் பிருகு, அவனிடம், "உனது மகளான இவளை எனக்கு மணமுடித்துத் தருவாயாக" என்று கேட்டார். அதற்கு ஹிமவான், "என மகளுக்கு மணவாளனாக ருத்திரனை ஏற்கனவே தேர்ந்தெடுத்திருக்கிறேன்" என்று மறுமொழி கூறினான். இந்த மறுமொழியால் கோபமடைந்த பிருகு, "உன் மகளை அளிக்க மறுத்து இவ்வாறு என்னை அவமதித்ததால் இனி ஒருபோதும் நீ ரத்தினங்களாலும், தங்கத்தாலும் நிறைந்திருக்கமாட்டாய்" என்றார். அந்த {பிருகு} முனிவருடைய சொற்களின் விளைவால் இந்த நாள் வரை இமய மலைகளில் தங்கமோ, ரத்தினங்களோ இருப்பதில்லை. பிராமணர்களின் மகிமை இவ்வாறானதே.(62)

பிராமணர்களின் உதவியின் மூலமே, நித்தியமானவளும், சிதைவில்லாதவளுமான பூமியைத் தங்கள் மனைவியாகக் கொள்ளவும், அவளை அனுபவிக்கவும் க்ஷத்திரியங்களால் முடிகிறது. மேலும் பிராமணர்களின் சக்தியானது, அக்னி மற்றும் சோமனாலானதாகும். இந்த அண்டம் அந்தச் சக்தியாலேயே தாங்கப்படுவதால், ஒன்று சேர்ந்த அக்னி மற்றும் சோமனாலேயே அது தாங்கப்படுகிறது.(63)

சூரியனும், சந்திரமாஸும் நாராயணனின் கண்களாக இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. சூரியனின் கதிர்களே என் கண்களாக அமைகின்றன. சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் இந்த அண்டத்தை வலுவூட்டவும், வெப்பமூட்டவும் செய்கின்றனர்.(64) இவ்வாறு சூரியனும் சந்திரனும் அண்டத்திற்கு வலுவும், பலமும் ஊட்டுவதால் அவர்கள் அண்டத்தின் ஹர்ஷம் (இன்பம்) எனக் கருதப்படுகிறார்கள். ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அக்னி மற்றும் சோமன் அண்டத்தைத் தாங்குவதற்குச் செய்யும் இச்செயல்களின் விளைவாலேயே நான் ரிஷிகேசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன். உண்மையில் நானே அண்டத்தைப் படைப்பவனும், வரமளிப்பவனுமான ஈசானன் ஆவேன்[8].(65)

[8] "சொற்பிறப்பியலின்படி ரிஷிகேசன் என்ற சொல் இவ்வாறு விளக்கப்படுகிறது. எண்ணிக்கையில் இரண்டாக இருக்கும் அக்னி மற்றும் சோமன் ஆகியோர் "ஹிரிஷி" என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் இருவரையும் தன் கேசமாக அல்லது முடியாகக் கொண்டவன் "ஹிரிஷிகேசன்" என்றழைக்கப்படுகிறான். வேறு இடங்களில் இச்சொல் ஹிரிஷிகத்தன் {புலன்களின்} தலைவன் அல்லது ஈசன் என்று விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

புனித நெருப்பில் ஆகுதியாகத் தெளிந்த நெய் ஊற்றப்படும்போது சொல்லப்படும் மந்திரங்களின் சக்தியால், வேள்விகளில் அளிக்கப்படும் (முக்கிய) பங்கை நான் பெறுகிறேன். என் நிறமானது, ஹரித் என்றழைக்கப்படும் முதன்மையான ரத்தினத்தின் நிறத்தைக் கொண்டதாகும். இந்தக் காரணத்தால் நான் ஹரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறேன்.(66)

நான் உயிரினங்கள் அனைத்தின் நிலையான வசிப்பிடமாக இருக்கிறேன். சாத்திரங்களை அறிந்த மனிதர்களால் நான் உண்மை, அல்லது அமுதத்தோடு அடையாளம் காணப்படுகிறேன். இதன் காரணமாக, கல்விமானான பிராமணர்கள் என்னை ரிததாமன் (உண்மையின் வசிப்பிடம், அல்லது அமுதத்தின் வசிப்பிடம்) என்ற பெயரில் அழைக்கிறார்கள்.(67)

பழங்காலத்தில் பூமி நீருக்குள் மூழ்கிக் காணாமல் போன போது, பெருங்கடலின் ஆழங்களில் அவளைக் கண்டு அங்கிருந்துஅவளை உயர்த்தியவன் நானே. இதன் காரணமாகத் தேவர்கள், கோவிந்தன் என்ற பெயரால் என்னைத் துதிக்கின்றனர்.(68)

சிபி என்ற சொல், உடலில் முடியில்லாத ஒருவனைக் குறிக்கும். சிபியின் வடிவில் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் சிபிவிஷ்டன் என்ற பெயரால் அறியப்படுகிறான்.(69) இந்தக் காரணத்திற்காகவே நான் இந்த இரகசியப் பெயரைக் கொண்டிருக்கிறேன்.(70) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான யாஷ்கர் {யாஷ்க முனிவலர்}, சிபிவிஷ்டன் என்ற பெயரில் என்னைத் துதித்து, பூமியின் பரப்பிலிருந்து மறைந்து போனவையும், பாதாள லோகத்தில் மூழ்கிக் கிடந்தவையுமான நிருக்தங்களை மீட்பதில் வென்றார்.(71)

நான் ஒருபோதும் பிறந்ததில்லை. நான் ஒருபோதும் பிறப்பதில்லை. நான் ஒருபோதும் பிறக்கப்போவதுமில்லை. அனைத்து உயிரினங்களின் க்ஷேத்ரஜ்ஞன் நானே. எனவே, நான் அஜன் (பிறக்காதவன்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்[9].(72)

[9] "நானே அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருப்பதால், பிறப்பில்லாதவனாக நித்தியமானவனாக, தொடக்கமும், முடிவும் இல்லாதவனாக இருக்கிறேன். எனவே நான் பிறப்பில்லாதவன் என்று அழைக்கப்படுகிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இழிவான எதனையும், நயமற்ற எதனையும் நான் ஒருபோதும் சொன்னதில்லை. வாய்மையின் சுயமானவளும், பிரம்மனின் மகளும், ரிதை என்ற பெயரால் அழைக்கப்படுபவளுமான தெய்வீக சரஸ்வதி என் வாக்கைப் பிரதிபலித்து எப்போதும் என் நாவில் குடியிருக்கிறாள்.(73) இருப்பில் உள்ளவையும், இல்லாதவையும் என்னால் என் ஆன்மாவில் கலக்கப்பட்டிருக்கின்றன. பிரம்மனின் வசிப்பிடமாகக் கருதப்படும் புஷ்கரையில் வசிக்கும் முனிவர்கள் என்னை வாய்மை என்ற பெயரால் அழைக்கின்றனர்.(74) நான் சத்வ குணத்தில் இருந்து ஒருபோதும் பிறழ்ந்ததில்லை, சத்வ குணம் என்னில் இருந்தே தோன்றியது என்பதை அறிவாயாக. ஓ! தனஞ்சயா, இப்பிறவியிலும் கூட என் புராதன குணமான சத்வ குணம் என்னைவிட்ட அகலவில்லை. நான் என்னைச் சத்வ குணத்தில் நிறுவிக் கொண்டு, கனிகளை எப்போதும் விரும்பாமல் செயல்களைச் செய்வதில் ஈடுபடுகிறேன். என் இயல்பான சத்வக குணத்தின் மூலம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடையும் என்னை, சத்வ குணத்தைப் பின்பற்றுவதால் எழும் ஞானத்தின் துணையால் மட்டுமே காண முடியும். அந்தக் குணத்தில் பற்று கொண்டோரின் மத்தியில் மட்டுமே நான் அறியப்படுகிறேன். இந்தக் காரணத்திற்காகத் தான் நான் சாத்வதன் என்ற பெயரால் அறியப்படுகிறேன்.(75,76)

நான் இரும்பினால் செய்யப்பட்ட பெரிய கலப்பைக் கொழுவின் வடிவை ஏற்று, பூமியை உழுகிறேன். என் நிறம் கருப்பாக இருப்பதால், நான் கிருஷ்ணன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(77)

நான் பூமியை நீரோடும், வெளியை மனத்தோடும், காற்றை ஒளியோடும் இணைக்கிறேன். எனவே நான் வைகுண்டன் என்றழைக்கப்படுகிறேன்[10].(78)

[10] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "வி - என்பதற்கு வாயுவும் தேஜஸும் ஜலமும் பொருள்; கு - என்பதற்குப் பூமியென்பது பொருள்; ட - என்பதற்கு ஆகாயமென்பது பொருள். அவற்றைச் சேர்த்தவர் வைகுண்டர். "குண்ட" என்பதற்குத் திறமையின்மை என்பதும், "வி" என்பதற்கு இல்லை என்பதும் பொருள் அவற்றைச் சேர்ப்பதில் திறமையின்மை இல்லாததால் {திறமையுள்ளவன் என்பதால்} வைகுண்டவர் என்றுமாம்" என்றிருக்கிறது.

பரப்பிரம்மத்துடன் அடையாளம் காணப்படுவதன் மூலம் தனிப்பட்ட நனவுநிலை இருப்பைத் தவிர்ப்பது ஒரு வாழும் உயிரினம் அடையக்கூடிய உயர்ந்த குணம் அல்லது நிலையாகும். நான் அந்தக் குணம் அல்லது நிலையில் இருந்து ஒருபோதும் பிறழாதவனாக இருப்பதால் நான் அச்சுதன் {பிறழாதவன்} என்றழைக்கப்படுகிறேன்.(79)

பூமியும், ஆகாயமும் அனைத்துத் திசைகளிலும் விரிந்திருப்பதாக அறியப்படுகின்றன. அவை இரண்டையும் நானே தாங்குவதால் நான் அதோக்ஷஜன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(80) வேதங்களை அறிந்தவர்களும், சாத்திரங்களில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு விளக்கம் கூறுவதில் ஈடுபடுபவர்களுமான மனிதர்கள் அதே பெயரை அழைத்தே வேள்விகளில் என்னைத் துதிக்கின்றனர்.(81) பழங்காலத்தில் பெரும் முனிவர்கள் கடுந்தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, "அதோக்ஷஜன் என்ற பெயரால் அழைக்கப்படத்தகுந்தவன் பலமிக்க நாராயணனைத் தவிர வேறு எவனுமில்லை" என்றனர்.(82)

அண்ட உயிரினங்கள் அனைத்தின் வாழ்வையும் நீட்டிக்கச் செய்யும் தெளிந்த நெய்யானது என் பிரகாசமாக இருக்கிறது {என்னைப் பிரகாசிக்கச் செய்யும் தெளிந்த நெய்யானது அண்ட உயிரினங்கள் அனைத்தின் வாழ்வையும் நீட்டிக்கச் செய்கிறது}. வேதமறிந்தவர்களும், குவிந்த ஆன்மாக்களைக் கொண்டோருமான பிராமணர்கள் இதன் காரணமாகவே கிருதார்ச்சிஸ் என்ற பெயரால் என்னை அழைக்கின்றனர்.(83)

உடலில் {பித்தம், சிலேத்துமம், வாதம் என்று} நன்கு அறியப்பட்ட மூன்று தாதுக்கள் இருக்கின்றன. செயலையே தங்கள் தோற்றுவாயாகக் கொண்ட அவை பித்த நீர் {பித்தம்}, சளி {சிலேத்துமம்}, காற்று {கபம்} என்றழைக்கப்படுகின்றன. உடலானது இம்மூன்றின் கலவையாகவே அழைக்கப்படுகிறது. இம்மூன்றால் தாங்கப்படும் உயிரினங்கள் அனைத்தும், இவை பலவீனமடையும் போது, தாங்களும் பலவீனமடைகின்றன. உயிர் அறிவியல் சார்ந்த சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் அனைவரும் இதன் காரணமாகவே திரிதாது என்ற பெயரால் என்னை அழைக்கின்றனர்.(84,85)

ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் புனிதமான தர்மம் {அறம்} விருஷம் என்ற பெயரில் அறியப்படுகிறது. எனவே நிகண்டுகம் என்றழைக்கப்படும் வேத அகரமுதலியில் சிறந்த விருஷன் என்று நான் அழைக்கப்படுகிறேன்.(86) கபி என்ற சொல் முதன்மையான பன்றியைக் குறிக்கிறது, தர்மம் வேறுபெயரில் விருஷம் என்றழைக்கப்படுகிறது. உயிரினங்கள் அனைத்தின் தலைவரும், தேவர்கள் மற்றும் அசுரர்களின் தந்தையுமான கசியபர், இதன் காரணமாகவே விருஷகபி என்ற பெயரால் என்னை அழைத்தார்.(87)

தேவர்களாலும், அசுரர்களாலும் எனது தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவை ஒருபோதும் காண இயன்றதில்லை. இதன் காரணமாகவே நான் அநாதி, அமத்தியன், அனந்தன் என்று பாடப்படுகிறேன். நானே பலமிக்க உயர்ந்த தலைவனாவேன் {ஈஸ்வரனாவேன்}, நானே அண்டத்தின் (அடுத்தடுத்த தோற்றங்களையும், அழிவுகளையும் காணும்) நித்திய சாட்சியாவேன்.(88) ஓ! தனஞ்சயா, நான் எப்போதும் தூய்மையான, புனிதமான சொற்களைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், ஒருபோதும் பாவம் நிறைந்ததைக் கேட்பதில்லை. எனவே நான் சுசிசிரவஸ் என்றழைக்கப்படுகிறேன்.(89)

ஓ! பிறரின் இன்பத்தை அதிகரிப்பவனே, பழங்காலத்தில் ஒற்றைக் கொம்புடைய பன்றியாகப் பிறந்து, கடலின் அடியில் மூழ்கிய பூமியை நான் உயர்த்தினேன். இதன் காரணமாக நான் ஏகசிருங்கன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(90) இந்நோக்கத்திற்காக நான் பெரும்பன்றியின் வடிவை ஏற்றபோது, என் முதுகில் மூன்று கூன்களைக் கொண்டிருந்தேன். உண்மையில், அந்த என் தனிப்பட்ட வடிவின் விளைவால் நான் திரிககுத் (மூன்று கூன் கொண்டவன்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்[11].(91)

[11] கும்பகோணம் பதிப்பில், "வராஹரூபத்தைத் தரித்தவனான நான் அப்படியே இருந்தேன். உயர்ந்தவைகளான தோள், நாஸிகை, தெற்றுப்பல் இம்மூன்றையுமுடைய சரீரத்தினுடைய பரிமாணத்தால நான், ‘த்ரிககுத்’ என்று பிரஸித்திபெற்றேன்" என்றிருக்கிறது.

கபிலரால் எடுத்துரைக்கப்பட்ட அறிவியலை {சாங்கியத்தை} அறிந்தவர்கள் பரமாத்மாவை விரிஞ்சன் என்ற பெயரால் அழைக்கிறார்கள். அந்த விரிஞ்சனே வேறு பெயரில் பெரும் பிரஜாபதி (அல்லது பிரம்மன்) என்று அழைக்கப்படுகிறான். அண்டத்தின் படைப்பாளனான நான் உயிரினங்கள் அனைத்திற்கும் உயிரைக் கொடுத்ததன் விளைவால் விரிஞ்சன் என்றழைக்கப்படுபவனோடு அடையாளம் காணப்படுகிறேன்.(92) (அனைத்து தத்துவங்களிலும்) முடிவான தீர்மானங்களைக் கொண்ட சாங்கிய தத்துவ ஆசான்கள், ஞானத்தையே துணையாகக் கொண்டு சூரிய வட்டிலுக்கு மத்தியில் நிற்கும் நித்திய கபிலராக என்னை அழைக்கிறார்கள்.(93) வேத ஸ்லோகங்களில் பிரகாசமிக்க ஹிரண்யகர்ப்பனாகப் பாடப்படுபவனும், யோகியரால் எப்போதும் வழிபடப்படுபவனுமான அவனோடு பூமியில் எப்போதும் நான் அடையாளம் காணப்படுகிறேன்.(94)

இருபத்தோராயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட ரிக் வேதத்தின் உடல்வடிவமாக நான் கருதப்படுகிறேன். வேதங்களை அறிந்த மனிதர்கள், ஆயிரம் கிளைகளை {சாகைகளைக்} கொண்ட சாம வேதத்தின் உடல்வடிவமாக அழைக்கிறார்கள். அதே போலவே என்னை அர்ப்பணிப்புடன் வழிபடும் கல்விமான்களான பிராமணர்களில் சிலர் ஆரண்யகங்களில் என்னைப் பாடுகிறார்கள்.(95) அத்யார்யுக்களில் {அத்வரியுகாண்டத்தில்} என்னை ஆறும், ஐம்பதும், எட்டும், ஏழும், முப்பதுமான {அதாவது மொத்த எண்ணிக்கையில் நூற்றொரு} கிளைகளை {சாகைகளைக்} கொண்ட யஜுர் வேதமாக என்னைப் பாடுகிறார்கள்.(96) அதர்வணங்களை அறிந்த கல்விமான்களான பிராமணர்கள் ஐந்து கல்பங்களையும், அனைத்து கிரியைகளையும் கொண்ட அதர்வணங்களோடு அடையாளம் காணப்படுபவனாக என்னைக் கருதுகிறார்கள்.(97) ஓ! தனஞ்சயா, கிளைகளை {சாகைகளைப்} பொறுத்தவரையில் பல்வேறு வேதங்களில் இருக்கும் உட்பிரிவுகள், அந்த உட்பிரிவுகளில் அமைந்திருக்கும் ஸ்லோகங்கள், அந்த ஸ்லோகங்களில் உள்ள உயிரெழுத்துகள், உச்சரிக்கும் விதிகள் அனைத்தும் என் படைப்பே என்பதை அறிவாயாக.(98) ஓ! பார்த்தா, (படைப்பின் தொடக்கத்தில், பிரம்மன் மற்றும் தேவர்கள் அனைவரால் இருப்புக்கு அழைக்கப்பட்டு, பாற்கடலில் இருந்து) எவன் எழுகிறானோ, எவன் பல்வேறு தேவர்களுக்குப் பல்வேறு வரங்களை அளிக்கிறானோ அவன் நானன்றி வேறெவனுமல்ல. வேதங்களின் உப அங்கங்களில் உள்ள அசைகள் மற்றும் உச்சரிப்பு அறிவியலின் கொள்ளிடம் நானே.(99)

வாமதேவரால் சுட்டிக்காட்டப்பட்ட பாதையைப் பின்பற்றிய உயர் ஆன்ம பாஞ்சாலன், என் அருளால் (வேதங்களைப் படிப்பதில்) அசைகள் மற்றும் சொற்களின் பிரிவில் உள்ள விதிகளில் நித்திய தன்மையை அடைந்தான். பாப்ரவ்ய குலத்தில் {கோத்திரத்தில்} பிறந்த காலவர், உயர்ந்த தவ வெற்றியை அடைந்து, நாராயணனிடம் இருந்து வரத்தையும் அடைந்து, அசைகள் மற்றும் சொற்களின் பிரிவுகளையும், உச்சரிப்பு விதிகளையும் வகுத்து இவ்விரு காரியங்களையும் அறிந்த முதல் அறிஞரானார். குண்டரீகனும் {கோத்திரப் பெயர்}, பெருஞ்சக்தி கொண்டவனுமான மன்னன் பிரம்மதத்தன்,(100,101) பிறப்பிறப்பில் நேரும் துன்பத்தைச் சிந்தித்து, என் அருளால் தொடர்ந்த ஏழு பிறவிகளின் போக்கில் யோகத்தில் அர்ப்பணிப்புடைய மனிதர்களால் அடையப்படும் செழிப்பை அடைந்தான்.(102)

ஓ! பார்த்தா, ஓ! குரு குலத்தின் தலைவா, பழங்காலத்தில் ஒரு காரியத்திற்காகத் தர்மனின் மகனாகப் பிறப்படைந்த நான் தர்மஜன் என்ற பெயரால் கொண்டாடப்பட்டேன்.(103) நரன் என்றும் நாராயணன் என்றும் இரு வடிவங்களில் பிறப்பை அடைந்தேன். அவ்விரு வடிவங்களில் இருந்த நான், சாத்திரக் கடமைகள் மற்றும் வேறு கடமைகளைச் செய்வதற்கு உதவும் வாகனத்தைச் செலுத்தி, கந்தமாதன மலைகளில் ஓயாத தவத்தில் ஈடுபட்டேன்.(104)

அந்த நேரத்தில் தக்ஷன் பெரும் வேள்வியைச் செய்தான். எனினும், ஓ! பாரதா, அந்தத் தக்ஷன் வேள்விக் காணிக்கைகளில் ருத்திரனுக்கு ஒரு பங்கைக் கொடுக்க மறுத்துவிட்டான்.(105) தவசி ததீசியால் தூண்டப்பட்ட ருத்திரன் அந்தப் பெரும் வேள்வியை அழித்தான். ஒவ்வொரு கணமும் சுடர்விடும் தழல்களைக் கொண்ட ஓர் ஈட்டியை {சூலத்தை} அவன் ஏவினான்.(106) அவ்வீட்டி, தக்ஷன் வேள்விக்காக ஏற்பாடு செய்திருந்த அனைத்துப் பொருட்களையும் எரித்த பிறகு, பதரியின் ஆசிரமத்தில் (நரன் மற்றும் நாராயணனான) எங்களை நோக்கிப் பெருஞ்சக்தியுடன் வந்தது.(107) பெரும் வேகத்துடன் வந்த அந்த ஈட்டி {சூலம்} நாராயணனின் மார்பில் விழுந்தது. அந்த ஈட்டியின் சக்தியால் தாக்கப்பட்டதால் நாராயணனின் தலையில் இருந்த முடி பச்சை நிறமானது. உண்மையில் என் முடியின் நிறம் மாறியதன் விளைவால், நான் முஞ்சகேசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(108)

நாராயணன் ஹும் என்று சொல்லி, சக்தியை இழந்த அந்த ஈட்டி மீண்டும் சங்கரனின் கரங்களில் கொடுத்தான்.(109) இதனால் பெருங்கோபம் அடைந்த ருத்திரன், கடுந்தவப் பலத்துடன் கூடிய முனிவர்களான நரநாரயணர்களை நோக்கி விரைந்தான்.(110) அப்போது நாராயணன், அவ்வாறு விரைந்து வந்த ருத்திரனின் தொண்டையைத் தன் கரத்தால் பற்றினான். அண்டத்தின் தலைவனான நாராயணனால் பற்றபட்டதும், ருத்திரனுடைய தொண்டையின் நிறம் மாறி கருப்பானது. அந்நேரத்தில் இருந்து ருத்திரன் சிதிகாந்தன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்.(111) அதே வேளையில் நரன், ருத்திரனை அழிப்பதற்காக ஒரு புல்லை எடுத்து அதை மந்திரங்களால் ஈர்த்தான். இவ்வாறு ஈர்க்கப்பட்ட அந்தப் புல்லானது வலிமைமிக்க ஒரு போர்க்கோடரியாக மாறியது.(112) நரன் திடீரென அதை ருத்திரன் மீது வீசினான். ஆனால் அது துண்டுகளாக நொறுக்கி விழுந்தது. அவ்வாயுதம் துண்டுகளாக நொறுங்கியதன் விளைவால் நான் கண்டபரசு என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்[12].(113)

[12] கும்பகோணம் பதிப்பில் இதற்கடுத்து இன்னும் ஒன்று குறிப்பிடப்படுகிறது. அது பின்வருமாறு, "ருத்திரருக்கு உச்சேஷணமென்கிற பாகத்தைத் திரும்பவும் அளித்தார்கள். இந்த விஷயத்தில் சுருதியுமிருக்கிறது. வேதங்களால் திரும்பவும், ’அப்படியே ருத்ரரானவர் உச்சேஷண பாகத்தையுடையவர். எல்லோராலும் அடைய முடியாத ஸ்வரூபத்தையுடைய உச்சேஷண பாகத்தால் உச்சேஷண காலத்தில் அவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்’ என்று சொல்லப்பட்டார்" என்றிருக்கிறது".

அர்ஜுனன், "ஓ! ஜனார்த்தனா, மூவுலகங்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய வெற்றியடைந்தது யார் என்பதை எனக்குச் சொல்வாயாக"என்றான்.(114)

அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, "ருத்திரனும், நாராயணனும் போரில் ஈடுபட்டபோது அண்டம் முழுவதும் திடீரெனக் கவலையால் நிறைந்தது.(115) நெருப்பின் தேவன், வேத மந்திரங்களின் துணையுடன் வேள்வகளில் முறையாக ஊற்றப்படும் தூய, தெளிந்த நெய் காணிக்கைகளை ஏற்க மறுத்தான். அப்போது தூய்மையான ஆன்மாக்களைக் கொண்ட முனிவர்களின் மனங்களில் வேதங்கள் உள்ளொளியால் ஒளிரவில்லை.(116) ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் தேவர்களைப் பீடித்தன. பூமி நடுங்கினாள். ஆகாய ஓடு இரண்டாகப் பிளந்ததாகக் காணப்பட்டது.(117) ஒளிக்கோள்கள் அனைத்தும் தங்கள் ஒளியை இழந்தன. படைப்பாளனான பிரம்மனே தன் இருக்கையில் இருந்து விழுந்தான். பெருங்கடல் வற்றியது. இமய மலைகள் பிளந்தன.(118)

ஓ! பாண்டுவின் மகனே, எங்கும் இத்தகைய பயங்கரச் சகுனங்கள் தோன்றியபோது, தேவர்கள் மற்றும் உயர் ஆன்ம முனிவர்கள் அனைவரும் சூழ பிரம்மன் போர் நடந்த அந்த இடத்திற்கு வந்தான். நிருக்தங்களின் துணையால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய நான்முகப் பிரம்மன் தன் கரங்களைக் கூப்பி ருத்திரனிடம்,(119,120) "மூவுலகங்களுக்கு நன்மை ஏற்படட்டும். ஓ! அண்டத்தின் தலைவா, அண்டத்திற்கு நன்மை செய்யும் விருப்பத்தில் உன் ஆயுதங்களைக் கீழே வீசுவாயாக.(121) அழிவற்றதும், மாற்றமில்லாததும், பரமும், அண்டத்தின் தோற்றுவாயும், சீரானதும், உயர்ந்த செயல்படு பொருளும், முரண்பட்ட இரட்டைகளைக் கடந்ததும், செயலற்றதும் எதுவோ,(122) அது வெளிப்பட விரும்பி (இரண்டாக இருந்தாலும் ஒன்றேயான) இந்த அருளப்பட்ட வடிவை ஏற்றிருக்கிறது. (பரப்பிரம்மத்தின் வெளிப்படு வடிவங்களான) இந்த நரனும், நாராயணனும், தர்மனின் குலத்தில் பிறந்தவர்களாவர்.(123) தேவர்களில் முதன்மையானவர்களான இவர்கள் உயர்ந்த நோன்புகளை நோற்று, கடுந்தவங்களைச் செய்து வருகிறார்கள். அவன் மட்டுமே அறியும் சிறந்த காரணத்தாலும், அவனது அருள் குணத்தாலும் அவனிடமிருந்தே எழுந்தவன் நான் என்பது அறியப்பட வேண்டும்.(124) அவனது கோபத்தில் இருந்து எழுந்தவனாக நீ இருந்தாலும், முன்படைப்புகள் அனைத்திற்கும் முன்பே நீடித்திருப்பதால் நித்தியமானவன் நீ. நானும், தேவர்கள் மற்றும் பெரும் முனிவர்களான இவர்களும்,(125) நீயும், பிரம்மத்தின் இந்த வெளிப்படு வடிவத்தைத் துதிக்க வேண்டும். தாமதமில்லாமல் உலகங்கள் அனைத்திலும் அமைதி ஏற்படட்டும்" என்றான். பிரம்மனால் இவ்வாறு சொல்லப்பட்ட ருத்திரன், நெருப்பெனும் தன் கோபத்தை நிறுத்தி,(126) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனுமான நாராயணனை நிறைவு செய்வதில் தன்னை நிறுவிக் கொண்டான். உண்மையில், அவன் துதிக்கத்தக்கவனும், வரமளிப்பவனும், பலமிக்கவனுமான நாராயணனை அடைந்தான்.(127)

வரமருள்பவனும், கோபம் மற்றும் புலன்களை முழுக் கட்டுப்பட்டில் கொண்டவனுமான அந்தத் தேவன் {நாராயணன்} ருத்திரனிடம் நிறைவையும், சமாதானத்தையும் அடைந்தான்.(128) அண்டத்தின் தலைவனும், ஹரி என்ற பெயரால் அழைக்கப்படுபவனுமான அந்தப் பெருந்தேவன், முனிவர்கள், பிரம்மன், தேவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்ட பிறகு, சிறப்புமிக்க ஈனானனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(129) "எவன் உன்னை அறிவானோ அவன் என்னை அறிவான். எவன் உன்னைப் பின்பற்றுவானோ அவன் என்னைப் பின்பற்றுவான். எனவே, உனக்கும் எனக்குமிடையில் எந்த வேறுபாடும் கிடையாது. நீ ஒருபோதும் வேறுவகையில் நினைக்காதே.(130) உன் சூலத்தால் என் மார்பில் ஏற்பட்ட இந்த அடையாளம் இந்த நாள் முதல் அழகிய சுழியின் வடிவை ஏற்கும், உன் தொண்டையில் என் கரம் ஏற்படுத்தியிருக்கும் அடையாளம் அழகிய வடிவை ஏற்கட்டும், இதன் விளைவால் நீ ஸ்ரீகண்டன் என்ற பெயரால் அழைக்கப்படுவாய்" என்றான் {நாராயணன்}.(131)

அருள் நிறைந்த புனிதமானவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "ஒருவருக்கொருவர் தங்கள் மேனிகளில் இத்தகைய அடையாளங்களை உண்டாகிக் கொண்டு, இவ்வாறே ருத்திரனிடம் நட்பை வளர்த்துக் கொண்ட நரன் மற்றும் நாராயணன் ஆகிய இரு முனிவர்களும்,(132) தேவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பிவிட்டு, அமைதியான ஆன்மாக்களோடு மீண்டும் தங்களைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, பழங்காலத்தில் ருத்திரனுக்கும், நாராயணனுக்கும் இடையில் நடந்த போரில் பின்னவன் {நாராயணன்} எவ்வாறு வென்றான் என்பதைச் சொல்லிவிட்டேன்.(133) மேலும், அந்தப் பெருந்தேவனுக்கு முனிவர்கள் அளித்த தனிப்பொருள் கொண்ட இரகசிய பெயர்களையும் உனக்குச் சொல்லிவிட்டேன்.(134) ஓ! குந்தியின் மகனே, இவ்வழியில் பல்வேறு வடிவங்களை ஏற்கும் நான், பிரம்ம லோகத்திலும், அதற்கு மேலும் உயர்ந்த நித்திய உலகங்களிலும், கோலோகம் என்றழைக்கப்படும் உலகத்திலும் என் விருப்பப்படியே திரிந்து வருகிறேன்.(135)

பெரும்போரில் என்னால் பாதுகாக்கப்பட்டுப் பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறாய். ஓ! குந்தியின் மகனே, நீ செய்த போர்கள் அனைத்திலும் உனக்கு முன்பு நீ கண்டவன், தேவர்களுக்குத் தேவனும், கபர்தின் என்ற வேறு பெயரால் அழைக்கப்படுபவனுமான ருத்திரனையன்றி வேறு எவனுமல்ல.(137) வேறு பெயரில் காலன் என்றும் அறியப்படும் அவன் என் கோபத்தில் இருந்த உண்டானவன் என்பதை அறிவாயாக.(138) தேவர்களுக்குத் தேவனும், அளவிலா பலம் கொண்டவனுமான அந்த உமையின் தலைவனுக்கு {சிவனுக்குத்} தலைவணங்குவாயாக. அண்டத்தின் சிறப்புமிக்கத் தலைவனும், ஹரி என்ற பெயரில் அழைக்கப்படுபவனுமான அந்த அழிவற்ற தேவனுக்கும் {நாராயணனுக்கும்} குவிந்த ஆன்மாவோடு தலைவணங்குவாயாக. நான் மீண்டும் மீண்டும் சொன்னது போல அந்தத் தேவன் {ருத்திரன்}, என் கோபத்தில் இருந்து பிறந்தவனன்றி வேறெவனும் அல்ல. ஓ! தனஞ்சயா, இதற்கு முன்பு அவனது பலத்தையும், சக்தியையும் குறித்துக் கேட்டிருக்கிறாய்" என்றான் {கிருஷ்ணன்}".(140)

சாந்திபர்வம் பகுதி – 343ல் உள்ள சுலோகங்கள் : 140

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்