Narada and NaraNarayana! | Shanti-Parva-Section-344 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 171)
பதிவின் சுருக்கம் : நாரதர் ஸ்வேதத்வீபத்தில் இருந்து திரும்பியது; அவர் மீண்டும் பதரியை அடைந்தது; நாரதருக்கும் நரநாராயணர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
சௌனகர், "ஓ! சௌதி, நீ சொன்ன இந்தக் கதை சிறப்பானதாகும். உண்மையில், இதைக் கேட்ட தவசிகள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்திருக்கின்றனர்.(1) ஓ! சௌதி, பூமியில் உள்ள புனிதத் தலங்கள், மற்றும் புண்ணிய நீர்நிலைகள் அனைத்திற்கும் சென்று தூய்மைச் சடங்குகளைச் செய்வதால் கிட்டும் தகுதியைவிட {புண்ணியத்தைவிட} நாராயணனைக் குறித்துச் சொல்லும் ஒரு கதை அதிகக் கனிதரும் என்று சொல்லப்படுகிறது.(2) புனிதமானதும், ஒவ்வொரு பாவத்தையும் கழுவ வல்லதும், நாராயணனைக் குறித்ததுமான உனது இவ்வுரையைக் கேட்டு நிச்சயம் நாங்கள் அனைவரும் புனிதமடைந்தோம்.(3) அனைத்து உலகங்களாலும் துதிக்கப்படுபவனும், சிறப்புமிக்கவனும், தேவர்களில் முதன்மையானவனுமான அந்தத் தேவன் {நாராயணன்}, பிரம்மனோடு கூடிய தேவர்களாலும், முனிவர்கள் அனைவராலும் கூடக் காணப்பட இயலாதவனாவான்.(4) இருப்பினும், ஓ! சூதரின் மகனே, ஹரி என்றழைக்கப்படும் நாராயணனை நாரதரால், காண முடிந்தது. தெய்வீகமானவனும், பலமிக்கவனுமான அந்தத் தலைவனின் அருளாலேயே அவரால் காண முடிந்தது.(5) எனினும், அண்டத்தின் உயர்ந்த தலைவனான அவன் அநிருத்த வடிவத்தில் இருந்த காட்சியைப் பெற்ற பிறகும் கூடத் தெய்வீக முனிவரான நாரதர் தேவர்களில் முதன்மையானவர்களான நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரையும் காண (இமயச் சாரலில் உள்ள பதரி ஆசிரமத்தை நோக்கி) ஏன் மீண்டும் விரைந்து வந்தார்? ஓ! சௌதி, நாரதரின் அந்த நடத்தைக்கான காரணத்தை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார்.(6)
சௌதி, "பரிக்ஷித்தின் அரசமகனான ஜனமேஜயன் தன் (பாம்பு) வேள்வி தொடர்ந்து கொண்டிருந்தபோது, ஓ! சௌனகரே, வேள்விச் சடங்குகளின் இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட அந்த மன்னர்களின் மன்னன் {ஜனமேஜயன்}, தன் பாட்டின் பாட்டனும், வியாசர் என்றழைக்கப்படுபவரும், பலத்துடன் கூடிய தவசிகளில் முதன்மையானவரும், தீவில் பிறந்தவருமான முனிவர் கிருஷ்ணர் அல்லது வியாசர் என்றழைக்கப்பட்டவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(8)
ஜனமேஜயன் {வியாசரிடம்}, "தெய்வீக முனிவரான நாரதர், வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} இருந்து திரும்பியதும், புனிதனான நாராயணன் அவரிடம் சொன்ன வார்த்தைகளைச் சிந்தித்து, அடுத்ததாக என்ன செய்தார்?(9) இமய மலைகளின் சாரலில் உள்ள பதரி என்றழைக்கப்படும் ஆசிரமத்திற்கு வந்து, அவ்விடத்தில் கடுந்தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நரன் மற்றும் நாராயணன் ஆகிய இரு முனிவர்களைக் கண்டு எவ்வளவு காலம் அங்கே வசித்தார்? அவருக்கும் அந்த முனிவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்களின் பொருள் என்ன?(10)
உண்மையில் ஞானப் பெருங்கடலாக இருக்கும் நாராயணனைக் குறித்த இந்த உரையாடலானது, நூறாயிரம் {ஒரு லட்சம்} ஸ்லோகங்களாலான பாரதம் என்றழைக்கப்படும் பெரும் வரலாற்றை நுண்ணறிவைக் கொண்ட நீர் கடந்ததனால் எழுந்தது.(11) தயிரில் இருந்து வெண்ணைப் போலவும், மலய மலைகளில் இருந்து சந்தன மரம் போலவும், வேதங்களில் இருந்து ஆரண்யகங்களைப் போலவும், மருத்துவ மூலிகைகள் அனைத்தில் இருந்தும் வரும் அமுதம் போலவும், ஓ! தவப்பெருங்கடலே, ஓ! பிராமணரே, நாராயணனைக் குறித்ததும், அமுதம் போன்றதுமான இந்த உரையாடலானது, உலகில் உள்ள பல்வேறு வரலாறுகள் மற்றும் புராணங்களில் இருந்து உம்மால் எழுப்பப்பட்டிருக்கிறது.(13) நாராயணனே உயர்ந்த தலைவனாவான் {ஈஸ்வரன்} ஆவான். சிறப்புமிக்கவனும், பெரும்பலம் கொண்டவனுமான அவன் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருக்கிறான். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உண்மையில் அந்த நாராயணனின் சக்தி தடுக்கப்பட முடியாததாகும்.(14)
உண்மையில் ஞானப் பெருங்கடலாக இருக்கும் நாராயணனைக் குறித்த இந்த உரையாடலானது, நூறாயிரம் {ஒரு லட்சம்} ஸ்லோகங்களாலான பாரதம் என்றழைக்கப்படும் பெரும் வரலாற்றை நுண்ணறிவைக் கொண்ட நீர் கடந்ததனால் எழுந்தது.(11) தயிரில் இருந்து வெண்ணைப் போலவும், மலய மலைகளில் இருந்து சந்தன மரம் போலவும், வேதங்களில் இருந்து ஆரண்யகங்களைப் போலவும், மருத்துவ மூலிகைகள் அனைத்தில் இருந்தும் வரும் அமுதம் போலவும், ஓ! தவப்பெருங்கடலே, ஓ! பிராமணரே, நாராயணனைக் குறித்ததும், அமுதம் போன்றதுமான இந்த உரையாடலானது, உலகில் உள்ள பல்வேறு வரலாறுகள் மற்றும் புராணங்களில் இருந்து உம்மால் எழுப்பப்பட்டிருக்கிறது.(13) நாராயணனே உயர்ந்த தலைவனாவான் {ஈஸ்வரன்} ஆவான். சிறப்புமிக்கவனும், பெரும்பலம் கொண்டவனுமான அவன் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருக்கிறான். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உண்மையில் அந்த நாராயணனின் சக்தி தடுக்கப்பட முடியாததாகும்.(14)
கல்பத்தின் முடிவில் பிரம்மன் முதலான தேவர்களும், கந்தர்வர்களுடன் கூடிய முனிவர்களும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் யாவும் நாராயணனுக்குள்ளேயே நுழைகின்றன.(15) எனவே, நாராயணனைத் தவிர உயர்ந்த வேறு எதுவும், புனிதமான வேறு எதுவும் பூமியிலோ, சொர்க்கத்திலோ இல்லை என நான் நினைக்கிறேன். புனிதத் தலங்கள் அனைத்திற்கும் செல்வது, புனித நீர் நிலைகள் அனைத்திலும் நீராடி தூய்மையடைவது ஆகியனவும், நாராயணனைக் குறித்த ஓர் உரையாடலைவிட அதிகத் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்குவதில்லை. அண்டத்தின் தலைவனான ஹரி குறித்ததும், பாவங்கள் அனைத்தையும் அழிப்பதுமான இந்த உரையாடலைத் தொடக்கம் முதல் கேட்டதனால், எங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைந்ததாகவும், முற்றிலும் புனிதமடைந்ததாகவும் நாங்கள் உணர்கிறோம். என் மூதாதையான தனஞ்சயன், தன் கூட்டாளியாக வாசுதேவனைக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தால், அவன் குருக்ஷேத்திரப் பெரும்போரில் வெற்றியடைந்து ஒருபோதும் ஆச்சரியமாகாது. அண்டத்தின் பெருந்தலைவனான விஷ்ணுவையே தன் கூட்டாளியாகக் கொண்ட ஒருவனால் மூவுலகங்களிலும் அடையமுடியாதது எதுவுமில்லை என நான் நினைக்கிறேன். என் மூதாதையர்களின் உலகம் சார்ந்த செழிப்பு மற்றும் ஆன்ம செழிப்பைக் கவனித்துக் கொள்ள ஜனார்த்தனன் இருந்தான் எனும்போது அவர்கள் நிச்சயம் பெரும் பெரும் நற்பேற்றைப் பெற்றவர்களே, புகழத்தக்கவர்களே. உலகங்கள் அனைத்தினாலும் துதிக்கப்படும் புனிதமான நாராயணனை, கடுந்தவத்தின் துணையால் மட்டுமே காண முடியும்.(17-21) எனினும், மார்பில் அழகிய சுழியுடன் கூடிய நாராயணனைக் காண்பதில் அவர்கள் வெற்றியடைந்தனர். என் மூதாதையர்களைவிட, பரமேஷ்டியின் மகனான தெய்வீக முனிவர் நாரதர் பெரும் நிற்பேற்றைப் பெற்றவரே.(22) உண்மையில் அழிவுகள் அனைத்தையும் கடந்திருக்கும் நாரதர், வெண்தீவுக்குச் சென்று ஹரியைக் காணப் பெரும் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.(23) உண்மையில் அவர் அந்த உயர்ந்த தலைவனை {ஈஸ்வரனைக்} கண்டது அவனது அருளால் மட்டுமே என்பது தெளிவாகத் தெரிகிறது. அநிருத்தனின் வடிவில் உள்ள நாராயணனை நாரதர் கண்டது அவரது நற்பேற்றாலேயே.(24) நாராயணனை அவ்வடிவில் கண்ட நாரதர், பதரியில் இருக்கும் நர நாராயணர்களைக் காண மீண்டும் ஏன் விரைந்து வந்தார்? ஓ! தவசியே, பரமேஷ்டியின் மகனான நாரதர் வெண்தீவில் இருந்து திரும்பி, பதரியை அடைந்து, நர நாராயண முனிவர்களைக் கண்ட பிறகு, அங்கே எவ்வளவு காலம் வாழ்ந்தார்? அவர்களிடம் என்ன பேசினார்? உயர் ஆன்மா கொண்ட அவ்விருவரும் அந்த முதன்மையான முனிவரிடம் என்ன சொன்னார்கள்? இவை அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான் {ஜனமேஜயன்}.(26-28)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார்,[1] "அளவிலா சக்தி கொண்ட புனித வியாசருக்கு வணக்கம். நாராயணனைக் குறித்த இந்தக் கதை அவரது {வியாசரின்} அருளால் சொல்லப் போகிறேன்.(29) வெண்தீவை அடைந்த நாரதர் மாற்றமில்லாதவனான ஹரியைக் கண்டார். ஓ! மன்னா, அந்த உயர்ந்த தலைவன் சொன்ன கனமான வார்த்தைகளைத் தம் மனத்தில் சுமந்தபடியே அந்த இடத்தைவிட்டு அகன்று விரைவாக மேரு மலைகளை நோக்கிச் சென்றார். ஓ! மன்னா, மேருவை அடைந்ததும், தான் பெற்ற அனுபவத்தை நினைத்து ஆச்சரியத்தால் நிறைந்தார்.(30,31) அவர் தமக்குள்ளேயே, "இஃது எவ்வளவு ஆச்சரியமானது. நான் மேற்கொண்டது நீண்ட பயணமாகும். இத்தகைய நெடுந்தொலைவுக்குச் சென்று உடல்நலத்தோடும், பாதுகாப்பாகவும் திரும்பியிருக்கிறேன்" என்று நினைத்தார். பிறகு அவர் மேரு மலைகளில் இருந்து கந்தமாதனத்தை நோக்கிச் சென்றார்.(32)
[1] "ஜனமேஜயனின் கேள்விகள் வியாசரை நோக்கியே கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், அனைத்துப் பதிப்புகளிலும் வைசம்பாயனரே பதில் சொல்வதாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் ஜனமேஜயன் கேள்விக்குப் பிறகு, "அப்பொழுது வ்யாஸர், அவருடைய அந்த வார்த்தையைக் கேட்டு ஸமீபத்திலிருக்கிற வைசம்பானரென்கிற சிஸ்யருக்கு, ‘என்னிடமிருந்து நீ கேட்ட எல்லாவற்றையும் இவனுக்குச் சொல்’ என்று ஆஜ்ஞை செய்தார். வேதியர்களில் சிறந்தவரான அவரும் குருவினுடைய வசனத்தை அங்கீகரித்து அப்பொழுதே புராதனமான சரித்திரத்தையெல்லாம் (அவருக்குச்) சொல்லத் தொடங்கினார்" என்றிருக்கிறது.
வானத்தில் பறந்து சென்ற அவர், பதரி என்ற பெயரில் அறியப்படும் அந்தப் பெரிய ஆசிரமத்தில் விரைவாக இறங்கினார். அங்கே அவர் (நரன் என்றும், நாராயணன் என்றும் அழைக்கப்படும்) அந்தப் புராதனத் தேவர்கள், தங்கள் சுயத்தையே சார்ந்திருந்து, உயர்ந்த நோன்புகளை நோற்றுக் கொண்டு, தவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்.(33) துதிக்கத்தக்கவர்களான அவ்விருவரும் தங்கள் மார்பில் ஸ்ரீவத்சம் என்றழைக்கப்படும் அழகிய சுழிகளையும், தங்கள் தலைகளில் சடாமுடிகளையும் தரித்திருந்தனர். உலகத்திற்கு ஒளியூட்டும் அவர்களது பிரகாசமானது சூரியனின் சக்தியைக் கடந்ததாக இருந்தது.(34) அவர்கள் இருவரின் உள்ளங்கைகளிலும் அன்னப்பறவையின் பாதம் {ஹம்ஸரேகை} என்றழைக்கப்படும் அடையாளத்தைக் கொண்டிருந்தன. அவர்களது உள்ளங்கால்களில் சக்கரத்தின் அடையாளம் இருந்தது. அவர்களது மார்பு மிக அகலமாக இருந்தது; அவர்களது கரங்கள் கால்மூட்டு வரை நீண்டிருந்தன.(35) அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு முஷ்கங்களைக்[2] கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அறுபது பற்களையும், நான்கு கரங்களையும் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் குரலும் மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமானதாக இருந்தது. அவர்களது முகம் அழகானதாகவும், அவர்களது நெற்றி அகலமானதாகவும், புருவங்கள் அழகானதாகவும், கன்னங்கள் நன்கு அமையப்பெற்றனவாகவும், மூக்குகள் நீண்டவையாகவும் இருந்தன.(36) அந்த இரண்டு தேவர்களின் தலையும் பெரியவையாகவும், உருண்டையாகவும், திறந்த குடைகளுக்கு ஒப்பானவையாகவும் இருந்தன. இந்த அடையாளங்களைக் கொண்டிருந்த அவர்கள் தோற்றத்தில் மிக மேன்மையானவர்களாகத் தெரிந்தனர்.(37)
[2] "இந்தச் சொல்லுக்கான பொருளைச் சொல்வது மிகக் கடினமானதாக இருக்கிறது. உரையாசிரியர் இவற்றைத் தோள்கள் என்று சொல்வதாக நினைக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவர்களைக் கண்ட நாரதர், மகிழ்ச்சியால் நிறைந்தார். அப்போது அவர் அவர்களை மதிப்புடன் வணங்கினார், பதிலுக்கு அவர்களும் அவரை வணங்கினர். அவர்கள் அந்தத் தெய்வீக முனிவரை "நல்வரவு" கூறி வரவேற்று வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர். முதன்மையானவர்களான அவ்விருவரையும் கண்ட நாரதர் தமக்குள்ளேயே இவ்வாறு நினைக்கத் தொடங்கினார்,(38) "அனைத்து உயிரினங்களாலும் மதிக்கப்படும் இந்த முதன்மையான முனிவர்கள் இருவரும், வெண்தீவில் நான் கண்டவனைப் போன்ற அதே தோற்றத்தைக் கொண்டவர்களாகத் தெரிகிறார்கள்" {என்று நினைத்தார்}.(39) இவ்வழியில் சிந்தித்த அவர், அவர்கள் இருவரையும் வலம் வந்து, அவருக்கு வழங்கப்பட்ட குசப் புற்களால் அமைந்த சிறந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.(40) இதன் பிறகு, தவங்களின் வசிப்பிடமானவர்களும், புகழ்மிக்கச் சாதனைகளைச் செய்தவர்களும், சக்தி மிக்கவர்களுமான அந்த முனிவர்கள் இருவரும், அமைதியான இதயத்துடனும், தற்கட்டுப்பாட்டுடனும் தங்கள் காலை சடங்குகளைச் செய்தனர்.(41) பிறகு அவர்கள் ஆவல் நிறைந்த இதயத்துடன், நாரதருக்கு அவரது கால்களைக் கழுவ நீரையும், வழக்கமான அர்க்கிய பொருட்களையும் கொடுத்து அவரை வழிபட்டனர். தங்கள் காலைச் சடங்குகளைச் செய்து, தங்கள் விருந்தினரை வரவேற்று தேவையான விருந்தோம்பல்களையும் செய்த பிறகு அவர்கள் மரப்பலகைகளால் ஆன இரண்டு இருக்கைகளில் அமர்ந்தனர்.(42) அந்த இரு முனிவர்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தபோது, புனித நெருப்பில் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஊற்றுவதன் விளைவால் ஒளிரும் வேள்விப் பீடங்களைப் போலவே அந்த இடம் ஒருவித அழகுடன் ஒளிரத் தொடங்கியது.(43) அப்போது நாராயணர், களைப்பில் இருந்து புத்துணர்வை அடைந்து, தமக்குள் அளிக்கப்பட்ட விருந்தோம்பலுடன் கூடிய வரவேற்பில் நிறைவடைந்து, சுகமாக அமர்ந்திருக்கும் நாரதரைக் கண்டு, அவரிடம் இவ்வார்த்தைகளைப் பேசத் தொடங்கினார்.(44)
நரனும், நாராயணனும், "நித்தியமானவனும், தெய்வீகமானவனும், எதிலிருந்து நாம் பிறந்தோமோ அந்த உயர்ந்த தோற்றுவாயுமான பரமாத்மாவை வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} கண்டீரா?" என்று கேட்டனர்.(45)
நாரதர், "மாற்றமில்லாதவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனுமான அந்த அழகனை நான் கண்டேன். உலகங்கள் அனைத்தும், முனிவர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும் அவனிலேயே வசிக்கின்றனர்.(46) இப்போதும் நித்தியமானவர்களான உங்கள் இருவரையும் காணும்போது அவனையே காண்கிறேன். அந்த ஹரியின் அடையாளங்கள் மற்றும் குறியீடுகள், புலன்களுக்கு முன்பு வெளிப்படும் உங்கள் இருவரின் வடிவங்களிலும் தெரிகின்றன. உண்மையில் நான் உங்கள் இருவரையும் அந்தப் பெருந்தேவனின் அருகிலேயே காண்கிறேன். பரமாத்மாவால் விடைகொடுத்து அனுப்பப்பட்டே இன்று நான் இங்கே வந்தேன்.(47-49) சக்தி, புகழ் மற்றும் அழகில் அவனுக்கு இணையானவர்களாகத் தர்மனின் குலத்தில் பிறந்த உங்கள் இருவரைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?(50) க்ஷேத்ரஜ்ஞன் குறித்த கடமைகளின் மொத்த நடைமுறைகளையும் அவன் எனக்குச் சொன்னான். எதிர்காலத்தில் அவன் இவ்வுலகத்தில் எடுக்கப்போகும் அவதாரங்கள் அனைத்தையும் எனக்குச் சொன்னான்.(51)
வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} வசிப்பவர்கள், சாதாரண மனிதர்களுக்குச் சொந்தமான ஐம்புல்களில் ஏதும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் விழிப்படைந்த ஆன்மா கொண்டவர்களாகவும், உண்மை ஞானத்துடன் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் அண்டத்தின் உயர்ந்த தலைவனான அந்த முதன்மையானவனிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் அந்தப் பெருந்தேவனைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள் அவனும் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(52) புனிதமானவனான அந்தப் பரமாத்மா தன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டோரிடம் எப்போதும் அன்புடன் இருக்கிறான். மறுபிறப்பாளர்களை அவன் விரும்புகிறான். தன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டோரிடம் எப்போதும் அன்பாக இருக்கும் அவன், தன்னை வழிபடுபவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(53) அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், அண்டத்தை அனுபவிப்பவனும், சிறப்புமிக்கவனுமான மாதவன் தன்னை வழிபடுபவர்களிடம் எப்போதும் அன்புடன் இருக்கிறான். அவனே செயல்படுபவன்; அவனே காரணன்; அவனே விளைவுமாக {காரியமாகவும்} இருக்கிறான். அவன் எல்லாம் வல்லவனாகவும், அளவிலா காந்தியைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.(54) அனைத்துப் பொருட்களும் எங்கே பிறக்கின்றனவோ அதன் காரணமாக அவனே இருக்கிறான். சாத்திர விதிகள் அனைத்தின் உடல்வடிவமாக அவனே இருக்கிறான். தத்துவங்கள் அனைத்தின் உடல்வடிவமாகவும் அவனே இருக்கிறான். அவன் பெரும்புகழைக் கொண்டவனாக இருக்கிறான்.(55)
தவங்களின் மூலம் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ளும் அவன், வெண்தீவில் (நேரும்) சக்தியைவிட உயர்ந்த காந்தியுடன் தன்னை ஒளியூட்டிக் கொள்கிறான். தவங்களால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அவன், மூவுலகங்களிலும் அமைதியை விதித்திருக்கிறான்.(56) இத்தகைய மங்கல புத்தியைக் கொண்ட அவன், புனிதத்தையே உடல்வடிவமாகக் கொண்ட மிக மேன்மையான நோன்பை நோற்பதில் ஈடுபடுபட்டிருக்கிறான். கடுந்தவங்களில் ஈடுபட்டபடியே அவன் வசிக்கும் ஆட்சிப்பகுதியில், சூரியன் சுடுவதில்லை, சோமன் அந்தப் பகுதியை அலங்கரிப்பதில்லை. அங்கே காற்று வீசுவதில்லை.(57) சிறப்புமிக்கவனான அண்டப் படைப்பாளன், எட்டு விரற்கட்டைகளின் அளவில் ஒரு பீடத்தை அமைத்துக் கொண்டு, கிழக்கு நோக்கிய முகத்துடன் கரங்களை உயர்த்தியபடியே ஒற்றைக் காலில் நின்று கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறான்.(58)
அங்கங்களுடன் கூடிய வேதங்களை ஓதியபடியே அவன் கடுந்தவங்களில் ஈடுபட்டு வருகிறான். பிரம்மனின் விதிகளுக்கு ஏற்ப முனிவர்களாலும், பசுபதியாலும், எஞ்சியிருக்கும் முக்கியத் தேவர்களாலும், தைத்தியர்களாலும், தானவர்களாலும், ராட்சசர்களாலும் வேள்வித்தீயில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான, அல்லது இறைச்சியாலான ஆகுதிகள் எதுவும் அந்தப் பெருந்தேவனின் பாதங்களையே அடைகின்றன.(59-61) அவனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்களால் செய்யப்படும் எந்தச் சடங்கையும், எந்த அறச் செயலையும் அந்தப் பெருந்தேவன் தன் தலையால் பெற்றுக் கொள்கிறான்.(62) விழிப்படைந்தவர்களும், உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்களைவிட மூவுலகிலும் வேறு எவரும் அவனுக்கு அன்புக்குரியவர் இல்லை. அவனிடம் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டவன் {பக்திமான்} அந்த மனிதர்களைவிட அன்புக்குரியவன் ஆவான்.(63) அந்தப் பரமாத்மாவால் விடைகொடுத்தனுப்பப்பட்டே நான் இங்கே வந்தேன். சிறப்புமிக்கவனும், புனிதமானவனுமான ஹரி இஃதையே எனக்குச் சொன்னான். எனவே நான் இதுமுதல் அநிருத்தனின் வடிவில் உள்ள நாராயணனிடம் அர்ப்பணிப்புடன் உங்கள் இருவருடன் வசிக்கப் போகிறேன்" என்றார் {நாரதர்}.(64)
சாந்திபர்வம் பகுதி – 344ல் உள்ள சுலோகங்கள் : 64
ஆங்கிலத்தில் | In English |