Narada resides at Vadari! | Shanti-Parva-Section-345 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 172)
பதிவின் சுருக்கம் : பரமாத்மாவின் மகிமையைச் சொன்ன நரனும், நாராயணனும்; தவத்தில் ஈடுபட்ட நாரதர்...
நரனும், நாராயணனும் {நாரதரிடம்}, "(அநிருத்தனின் வடிவில்) பலமிக்க நாராயணனை நீர் கண்டதால் உயர்ந்த அருளைக் கொண்டவராகவும், உயர்ந்த புகழுக்குத் தகுந்தவராகவும் இருக்கிறீர். வேறு எவராலும், ஏன் ஆதி தாமரையில் பிறந்த பிரம்மனாலும் கூட அவனைக் காண முடிந்ததில்லை.(1) பலமிக்கவனும், புனிதம் நிறைந்தவனுமான அந்தப் புருஷர்களில் முதன்மையானவன், வெளிப்படாத மூலத்தையும், காணப்பட முடியாதவனாகவும் இருக்கிறான் ஓ! நாரதரே, நாங்கள் உமக்குச் சொல்லும் இந்த வார்த்தைகள் உண்மையே.(2) அர்ப்பணிப்புடன் அவனைத் துதிப்பவனைவிட இந்த அண்டத்தில் வேறு எவனும் அவனுக்கு அன்புக்குரியவன் இல்லை. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இதன் காரணமாகவே அவன் உம்மிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(3) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தவங்கள் நோற்பதில் ஈடுபட்டுவரும் அந்தப் பரமாத்மாவின் ஆட்சிப்பகுதிக்கு எங்கள் இருவரைத் தவிர வேறு எவராலும் செல்ல முடியாது.(4) அந்த இடம் அவனால் அலங்கரிக்கப்பட்டிருப்பதன் விளைவால், அஃது {அவ்விடம் / வெண்தீவு / ஸ்வேதத்வீபம்} ஆயிரம் சூரியர்கள் ஒன்றுதிரண்டதற்கு ஒப்பான காந்தியைக் கொண்டிருக்கிறது.(5)
ஓ! பிராமணரே {நாரதரே}, சிறப்புமிக்கவனும், அண்டப் படைப்பாளனின் தோற்றுவாயுமான அவனிடம் இருந்தே பூமியுடன் தொடர்புடைய மன்னிக்கும் குணம் பிறந்தது.(6) அனைத்து உயிரினங்களின் நன்மைக்கான குணங்களைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவனில் இருந்தே ரசம் (சுவை) எழுந்தது. நீருடன் தொடர்புடைய ரஸம் என்ற குணம் நீராகவே இருக்கிறது.(7) அவனிடமிருந்தே வடிவம் அல்லது பார்வையை ஆன்மாவாகக் கொண்ட குணத்துடன் கூடிய வெப்பம் அல்லது ஒளி எழுந்தது. அது சூரியனைப் பற்றுவதன் விளைவால், சூரியனால் ஒளிரவும், வெப்பத்தைத் தரவும் முடிகிறது.(8) சிறப்புமிக்கவனும், முதன்மையானவனுமான அவனிடமிருந்தே தீண்டலும் எழுந்தது. அது காற்றைப் பற்றுவதன் விளைவால் காற்றானது தீண்டல் உணர்வை உண்டாக்கியபடியே உலகம் முழுவதும் திரிகிறது.(9) மொத்த அண்டத்தின் பலமிக்கத் தலைவனான அவனிடம் இருந்தே ஒலி எழுந்தது. அது வெளியுடன் பற்று கொள்வதன் விளைவால் மறைக்கப்படாததாகவும், அடைக்கப்படாததாகவும் இருக்கிறது.(10) அனைத்து உயிரினங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மனம் இந்தச் சிறப்புமிக்கவனிடம் இருந்தே எழுந்தது. சந்திரனுடன் பற்று கொள்வதன் விளைவால் சந்திரன் அனைத்துப் பொருட்களையும் வெளிப்படுத்தும் குணத்தைக் கொண்டிருக்கிறான்.(11)
வேள்விகளில் அளிக்கப்படும் ஆகுதிகள் மற்றும் பிற காணிக்கைகளை உண்ணும் தெய்வீக நாராயணன், ஞானத்தை மட்டுமே துணையாகக் கொண்டு எந்த இடத்தில் வசிக்கிறானோ, அந்த இடமே அனைத்துப் பொருட்களையும் உண்டாக்கும் காரணமான சத் என்ற பெயரில் அறியப்படுகிறது.(12) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, களங்கமற்றவர்களும், அறம் மற்றும் பாவம் ஆகிய இரண்டில் இருந்தும் விடுபட்டவர்களுமான மனிதர்களின் பாதையானது மங்கலமும், இன்பமும் நிறைந்ததாகும்.(13) உலகங்கள் அனைத்தின் இருளை விலக்கும் சூரியனே (முக்தன் ஒருவன் கடந்து செல்லும்) வாயிலாகச் சொல்லப்படுகிறான். சூரியனுக்குள் நுழையும் அத்தகைய மனிதர்களின் உடல்கள் அவனது நெருப்பில் எரிக்கப்படுகின்றன. அதன் பிறகு அவர்கள் எக்காலத்திலும், எவராலும் காண முடியாத நிலையை அடைகிறார்கள்.(14) புலப்படாத அணுக்களாகக் குறைக்கப்படும் அவர்கள் பிறகு (சூரியனின் நடுப்பகுதியில் வசிக்கும்) நாராயணனுக்குள் நுழைகிறார்கள். அவனிலிருந்தும் கடந்து செல்லும் அவர்கள் அநிருத்தன் என்ற வடிவத்திற்குள் நுழைகிறார்கள்.(15)
உடல்சார்ந்த குணங்கள் அனைத்தையும் மொத்தமாக இழந்து, மனமாக மட்டுமே மாறும் அவர்க்ள பிரத்யும்னனுக்குள் நுழைகிறார்கள். பிரத்யும்னனிலிருந்தும் கடந்து செல்பவர்களும், சாங்கிய தத்துவத்தை அறிந்தவர்களும், பரம்பொருளிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள், ஜீவன் என்றழைக்கப்படும் சங்கர்ஷணனுக்குள் நுழைகிறார்கள். அதன் பிறகு, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற அடிப்படை முக்குணங்களையும் இழக்கும் அந்த மறுபிறப்பாளர்கள் அந்த அடிப்படை முக்குணங்களைக் கடந்தவனான க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படும் பரமாத்மாவுக்குள் நுழைகிறார்கள். அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் அசல் புகலிடம் அல்லது வசிப்பிடம் வாசுதேவனே என்பதை நீர் அறிய வேண்டும்.(16-18) குவிந்த மனத்தைக் கொண்டவர்களும், அனைத்து வகைக் கட்டுப்பாடுகளையும் நோற்பவர்களும், புலனடக்கம் கொண்டவர்களும், மொத்த ஆன்மாவுடன் சேர்த்து அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களே வாசுதேவனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள்.(19)
ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {நாரதரே}, நாங்கள் இருவரும் தர்மனின் இல்லத்தில் பிறப்பை அடைந்தோம். மேலும் நாங்கள் இனிமையான இந்தப் பெரிய ஆசிரமத்தில் கடுந்தவங்களைச் செய்து வருகிறோம்.(20) ஓ! மறுபிறப்பாளரே, பரம்பொருளால் வெளிப்படுத்தப்பட்டவையும், மூவுலகங்களிலும் தேவர்கள் அனைவருக்கும் அன்புக்குரியவையுமான பொருட்கள் அனைத்திற்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் (பிற உயிரினங்களால அடையப்பட முடியாத பல்வேறு சாதனைகளை அடைவதற்காக) நாங்கள் இவ்வாறு தவத்தில் ஈடுபடுகிறோம்.(21) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பொதுவில் இல்லாதவையும், எங்கள் இருவருக்கு மட்டுமே பொருந்தக்கூடியவையுமான விதிகளுக்கு இணக்கமாகச் சிறந்த மற்றும் உயர்ந்த நோன்புகள் நிறைந்த கடுந்தவங்களை நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் செய்து வருகிறோம்.(22) ஓ! தெய்வீக முனிவரே, தவங்களைச் செல்வமாகக் கொண்ட தெய்வீக முனிவரான உம்மை நாங்கள் வெண்தீவில் கண்டோம். நாராயணனைச் சந்தித்த பிறகு நீர் ஒரு குறிப்பிட்ட தீர்மானத்தை அடைந்திருக்கிறீர்.(23) அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய மூவுலகங்களிலும் நாங்கள் அறியாதது ஏதுமில்லை. ஓ! பெருந்தவசியே, {மூவுலகங்களிலும்} நடக்கப் போகும், அல்லது நடந்த, அல்லது நடந்து கொண்டிருக்கும் நன்மை அல்லது தீமையை அந்தத் தேவதேவன் உமக்குச் சொன்னான்" என்றனர்".(24)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கடுந்தவங்களில் ஈடுபட்டுவந்த நரநாராயணர்கள் இருவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தெய்வீக முனிவரான நாரதர், மதிப்புடன் தன் கரங்களைக் கூப்பி நாராயணனில் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டார்.(25) நாராயணனால் அங்கீகரிக்கப்பட்ட எண்ணற்ற புனித மந்திரங்களை அவர் காலத்திற்கும் தன் மனத்தில் முறையான நோன்புகளுடன் உரைத்துக் கொண்டே இருந்தார். பெரும் சக்தியுடன் கூடிய நாரதர், பரம தேவனான நாராயணனை வழிபட்டும், தர்மனின் இல்லத்தில் பிறந்த புராதன முனிவர்கள் இருவரையும் துதித்துக் கொண்டும், இமயச் சாரலில் உள்ள நரநாராயணர்களுக்குச் சொந்தமான பதரி எனும் ஆசிரமத்தில் ஓராயிரம் தேவ வருடங்களுக்குத் தொடர்ந்து வசித்து வந்தார்".(26-27)
சாந்திபர்வம் பகுதி – 345ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |