Pitri worship! | Shanti-Parva-Section-346 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 173)
பதிவின் சுருக்கம் : பித்ருக்களுக்குச் செய்யும் சடங்குகளின் சிறப்பை நாரதருக்குச் சொன்ன நரனும், நாராயணனும்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஒரு சமயத்தில் பரமேஷ்டியின் மகனான நாரதர், நர நாரயணரின் ஆசிரமத்தில் வசித்து வந்தபோது, தேவர்களை மதிக்கும் சடங்குகளையும், நோன்புகளையும் முறையாகச் செய்துவிட்டு, பித்ருக்களைக் கௌரவிக்கும் சடங்கைச் செய்வதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(1) இவ்வாறு அவர் ஆயத்தமாவதைக் கண்ட தர்மனின் மூத்த மகனான பலமிக்க நாராயணர், "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தேவர்கள் மற்றும் பித்ருக்கள் தொடர்புடைய இந்தச் சடங்குகள் மற்றும் நோன்புகளில் யாரை நீர் வழிபடுகிறீர்? ஓ! புத்திமான்கள் அனைவரிலும் முதன்மையானவரே, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் எனக்கு இது குறித்துச் சொல்வீராக. நீர் செய்வது என்ன? நீர் செய்யும் இந்தச் சடங்குகளால் என்ன கனிகளை {பலன்களை} நீர் விரும்புகிறீர்" என்று கேட்டார்.(2,3)
நாரதர், "முந்தைய நிகழ்வொன்றில் தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் சடங்குகளும், நோன்புகளும் செய்யப்பட வேண்டும் என்று நீர் என்னிடம் சொன்னீர். தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் சடங்குகள் உயர்ந்த வேள்வியாகும் என்றும், நித்தியமான பரமாத்மாவை வழிபடுவதற்கு இணையானவை என்றும் நீர் சொன்னீர்.(4) அந்தப் போதனையில் அறிவுரை பெற்ற நான், தேவர்களை வழிபட்டுச் செய்யப்படும் இந்தச் சடங்குகளின் மூலம் நித்தியமானவனும், மாற்றமில்லாதவனான விஷ்ணுவைக் கௌரவித்து வேள்வி செய்கிறேன். அந்தப் பரம தேவனிலிருந்த உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன் பழங்காலத்தில் உதித்தெழுந்தான்.(5) பரமேஷ்டி என்றும் வேறு பெயரில் அழைக்கப்படும் அந்தப் பிரம்மன் என் தந்தையை (தக்ஷனை) உண்டாக்கினான். (தக்ஷ முனிவரின் சாபத்தால் பின்னாளில் அவருடைய மகனாகப் பிறப்பை அடைந்தாலும்) நான் அனைவருக்கும் முன்பாகப் பிரம்மனின் விருப்பத்தால் படைக்கப்பட்ட அவருடைய ஆன்ம மகனாவேன் {பிரம்மனின் மானஸபுத்திரனாவேன்}.(6) ஓ! சிறப்புமிக்கவரே, அறவோரே, நாராயணனால் விதிக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்புடைய வகையில் பித்ருக்களைக் கௌரவிக்கும் இந்தச் சடங்குகளை நான் நாராயணனுக்காகவே செய்கிறேன். சிறப்பு மிக்க நாராயணனே, (அனைத்து உயிரினங்களின்) தந்தையும், தாயும், பாட்டனுமாவான்.(7) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகள் அனைத்திலும் அண்டத்தின் தலைவனான அவனே துதிக்கப்படுகிறான், வழிபடப்படுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் தந்தைமாரான தேவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்ருதிகளைச் சொல்லிக் கொடுத்தனர்.(8) ஸ்ருதிகளில் ஞானத்தை இழந்த அந்தத் தந்தைமார் தாங்கள் சொல்லிக் கொடுத்தவற்றை மீண்டும் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து அடைந்தனர். இந்நிகழ்வின் விளைவால், தங்கள் தந்தைமாருக்கு மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்த மகன்கள் தந்தையின் நிலையை அடைந்தனர் (தங்கள் மகன்களிடம் மந்திரங்களைப் பெற்ற தந்தைமார் மகன்களின் நிலையை அடைந்தனர்)[1].(9) அச்சந்தர்ப்பத்தில் தேவர்கள் என்ன செய்தனர் என்பதை நீங்கள் இருவரும் நன்கு அறிவீர்கள். (அந்தச் சந்தர்ப்பத்தில்) மகன்களும், தந்தைமாரும் ஒருவரையொருவர் இவ்வாறு வழிபட்டுக் கொண்டனர்.(10) முதலில் சில தர்ப்பை புற்களைப் பரப்பி வைத்துக் கொண்ட தேவர்களும், பித்ருக்களும் (தேவர்களின் பிள்ளைகளும்) மூன்று பிண்டங்களை அதில் வைத்து இவ்வழியில் ஒருவரையொருவர் வழிபட்டனர். எனினும், பழங்காலத்தில் பிண்டங்கள் என்ற பெயரை பித்ருக்கள் ஏன் அடைந்தனர் என்பதை நான் அறிய விரும்புகிறேன்" என்றார்.(11)
[1] "இந்தக்கதை என்னவென்றால், ஒருகாலத்தில் தேவர்கள், அசுரர்களுக்கெதிராகப் போரிடச் செல்லும் முன் தங்கள் பிள்ளைகளான அக்னிஷாதர் முதலியோருக்கு வேதங்களைச் சொல்லிக் கொடுத்தனர். எனினும், போர்க்களத்திலேயே அவர்கள் நீண்ட காலத்தைச் செலவிட்டதால் வேதங்களை மறந்து போனார்கள். மீண்டும் சொர்க்கத்திற்குத் திரும்பிய அவர்கள் தங்கள் பிள்ளைகளும் சீடர்களாகவும் இருந்தவர்களிடமே அவற்றை மீண்டும் அடைந்தனர். ஆசானே எப்போதும் தந்தை என்றும், சீடனே மகன் என்றும் சாத்திரங்கள் அறிவிக்கின்றன. வயதில் வேறுபாடு இந்த உறவுமுறையைப் பாதிக்காது. எனவே, பதினாறு வயதுடைய இளைஞன் ஒருவன் எண்பது வயது கொண்ட ஒருவருக்குத் தந்தையாகலாம். பிராமணர்களில் ஞானத்திற்கே மதிப்பன்றி வயதுக்கல்ல" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நரனும், நாராயணனும், "பழங்காலத்தில், கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமி காட்சியில் இருந்து மறைந்து போனாள். பெரும் பன்றியின் வடிவையேற்ற கோவிந்தனர் (தன் வலிமைமிக்கத் தந்தத்தால்) அவளை மேலே உயர்த்தினான்.(12) பூமியை மீண்டும் அவளது பழைய நிலையிலேயே நிலைநிறுத்தியவனும், நீரும், புழுதியும் பூசப்பட்டவனுமான அந்தப் புருஷர்களில் முதன்மையானவன், உலகத்திற்கும், அதில் வசித்தவர்களுக்கும் தேவையானவற்றைச் செய்வதில் தன்னை நிறுவிக் கொண்டான்.(13) ஓ! நாரதரே, சூரியன் நடுவானை அடைந்து, காலை துதிகளுக்கான வேளை {ஆந்நிக காலம்} வந்த போது, அந்தப் பலமிக்கத் தலைவன் {வராகன்}, தன் தந்தத்தைக் கொண்டு, திடீரென மூன்று மண் உருண்டைகளை உருட்டி, ஏற்கனவே புல் பரப்பப்பட்ட பூமியில் வைத்தான். நித்திய விதியில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி அந்தப் பலமிக்க விஷ்ணு அந்த மண் உருண்டைகளைத் தன் சுயத்திற்கே அர்ப்பணித்தான்.(14,15) அந்தப் பலமிக்கத் தலைவன் தன் தந்தங்களால் உருட்டிய மண் உருண்டைகளைப் பிண்டங்களாகக் கருதி, தன் உடல் வெப்பத்தால் எழுந்தவையும், உள்ளே எண்ணெய் உள்ளவையுமான எள்வித்துகளைக் கொண்டு, கிழக்கு முகமாக அமர்ந்து அந்த அர்ப்பணிப்புச் சடங்கைத் தானே செய்தான். அப்போது அந்தத் தேவர்களில் முதன்மையானவன், மூவுலகங்களில் வசிப்போருக்கு உண்டான ஒழுக்க விதிகளை நிறுவும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(16,17)
அந்த விருஷாகபி, "உலகங்களைப் படைத்தவன் நானே. நான் பித்ருக்கள் என்றழைக்கப்படுவோரை உண்டாக்கத் தீர்மானித்திருக்கிறேன்" என்று சொன்னான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன், பித்ருக்களைக் கௌரவிப்பதற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படுத்தும் உயர்ந்த விதிகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(18)
அவன் அவ்வாறு ஈடுபட்டிருந்தபோது, தன் தந்தத்தால் உருட்டப்பட்ட மண் உருண்டைகள் மூன்றும் தெற்கு நோக்கி விழுந்திருப்பதைக் கண்டான். அப்போது அவன், "என் தந்தத்தால் உருட்டப்பட்ட இந்த உருண்டைகள், பூமியின் பரப்பில் தென் திசை நோக்கி விழுந்திருக்கின்றன. இதனால் வழிநடத்தப்படும் நான், இதுமுதல் இவை பித்ருக்கள் என்ற பெயரில் அறியப்பட வேண்டும் என அறிவிக்கிறேன்.(19) உருண்டையாக எந்தக் குறிப்பிட்ட வடிவத்திலும் இல்லாத்த இவை மூன்றும், உலகின் பித்ருக்களாகக் கருதப்பட வேண்டும். இவ்வாறே நான் நித்திய பித்ருக்களை உண்டாக்குகிறேன்.(20) தந்தையும், பாட்டனும், பெரும்பாட்டனுமான நானே இந்த மூன்று பிண்டங்களில் வசிப்பதாகக் கருதப்பட வேண்டும்.(21) எனக்கு மேன்மையானவன் வேறு எவனும் இல்லை. நான் வழிபடவோ, சடங்குகளுடன் துதிக்கவோ வேறு எவன் இருக்கிறான்? இந்த அண்டத்தில் என் தந்தையென எவன் இருக்க முடியும்? நானே என் பாட்டனாவேன்.(22) உண்மையில் நானே பெரும்பாட்டனாகவும் தந்தையாகவும் இருக்கிறேன். (அண்டமனைத்திற்கும்) நானே ஒரே காரணனாவேன்" என்றான்.
ஓ! கல்விமானான பிராமணரே {நாரதரே}, விருஷாகபி என்றழைக்கப்படும் அந்தத் தேவர்களின் தேவன் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வராஹ மலைகளின் சாரலில் பெரும் சடங்குகளுடன் அந்தப் பிண்டங்களுக்குக் காணிக்கையளித்தான். அந்தச் சடங்குகளின் மூலம் அவன் தன்னையே வழிபட்டான். அந்த வழிபாட்டை நிறைவு செய்த அவன் அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(23,24) இதனாலேயே பித்ருக்கள் பிண்டம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இதுவே அந்தப் பொறுப்புப் பெயரின் அடித்தளமாகும். அச்சந்தர்ப்பத்தில் விருஷாகபியால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு ஏற்புடைய வகையிலேயே அனைவராலும் செய்யப்படும் வழிபாட்டைப் பித்ருக்கள் அடைகிறார்கள்.(25) பித்ருக்கள், தேவர்கள், ஆசான் அல்லது மதிப்புமிக்கப் பெரியவர், வீட்டிற்கு வரும் விருந்தினர், பசு, மேன்மையான பிராமணர்கள், பூமாதேவி, தாய்மார் ஆகியோரை எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் துதித்துக் கௌரவித்து வேள்வி செய்பவர்கள் விஷ்ணுவையே துதிப்பதாகவும், அவனுக்கே அவர்கள் வேள்வியைச் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பில் உள்ள அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தச் சிறப்புமிக்கத் தேவனே அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருக்கிறான்.(26,27) இன்ப துன்பங்களால் பாதிப்படையாத அவன் அனைத்திடமும் சமமாக நடக்கும் மனோநிலையைக் கொண்டவனாவான். மகிமை கொண்டவனும், பேரான்மாவுமான நாராயணனே அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாகச் சொல்லப்படுகிறான்" என்றனர் {நரனும், நாராயணனும்}".(28)
சாந்திபர்வம் பகுதி – 346ல் உள்ள சுலோகங்கள் :28
ஆங்கிலத்தில் | In English |