The glory of Narayana! | Shanti-Parva-Section-347 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 174)
பதிவின் சுருக்கம் : தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்ற நாரதர்; ஜனமேஜயனுக்கு நாராயணனின் மகிமையைச் சொன்ன வைசம்பாயனர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நரனும், நாராயணனும் சொன்ன இந்த வார்த்தைகளைக்கேட்ட முனிவர் நாரதர், பரம்பொருளிடம் அர்ப்பணிப்பில் {பக்தியில்} நிறைந்தார்.(1) நரநாராயணர்களின் ஆசிரமத்தில் முழுமையாக ஆயிரம் வருடங்கள் வசித்து, மாற்றமில்லாதவனான ஹரியைக் கண்டு, நாராயாணனைக் குறித்த சிறந்த உரையாடல்களைக் கேட்ட பிறகு அந்தத் தெய்வீக முனிவர், இமயச் சாரலில் உள்ள தன் சொந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(2) எனினும், முதன்மையான தவசிகளான நரனும், நாராயணனும், கடுந்தவப் பயிற்சிகளில் ஈடுபட்டபடியே இனிமை நிறைந்த தங்கள் பதரி ஆசிரமத்தில் தொடர்ந்து வசித்தனர்.(3) நீ பாண்டவ குலத்தில் பிறந்தவனாவாய். நீ அளவிலா சக்தி கொண்டவனாவாய். ஓ! பாண்டவ குலத்தைத் தழைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, நாராயணனைக் குறித்த இந்த உரையைத் தொடக்கம் முதல் கேட்ட உனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் கழுவப்பட்டு, ஆன்ம புனிதம் அடைந்தவனாக நீ இருக்கிறாய்.(4)
ஓ! மன்னர்களில் சிறந்தவனே, மாற்றமில்லாதவனான ஹரியை விரும்பி மதிப்பதற்குப் பதிலாக வெறுக்கும் ஒருவனுக்கு இம்மையுமில்லை, மறுமையுமில்லை.(5) தேவர்களில் முதன்மையானவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான நாராயணனை வெறுக்கும் மனிதனுடைய மூதாதையர்கள் நிச்சயம் நித்திய நரகில் மூழ்குவார்கள்.(6) ஓ! மனிதர்களில் புலியே, விஷ்ணுவே இருப்பிலுள்ள அனைத்தின் ஆன்மாவாக இருக்கிறான். அவ்வாறிருக்கையில், ஒருவன் விஷ்ணுவை வெறுப்பதன் மூலம் தன்னையே வெறுப்பதால், எவ்வாறு எவனாலும் அவனை வெறுக்க முடியும்?(7) நமது ஆசானும், காந்தவதியின் {சத்தியவதியின்} மகனுமான முனிவர் வியாசரே, உயர்ந்த மற்றும் மாற்றமில்லாத மகிமையான நாராயணனின் மகிமையைக் குறித்த இந்த உரையை நமக்குச் சொல்லியிருக்கிறார். ஓ! பாவமற்றவனே, நான் அவரிடமிருந்தே இதைக் கேட்டேன், நான் கேட்டவாறே சரியாக இதை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(8)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, புதிர்களுடன் கூடியதும், விவரங்களின் சுருக்கமுமான இந்த வழிபாட்டு மரபானது, அண்டத்தின் தலைவனான நாராயணனிடமிருந்தே நாரதரால் அடையப்பட்டது.(9) இந்தப் பெரும் வழிபாட்டு மரபின் விபரங்கள் இவ்வாறே இருக்கின்றன. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இதற்கு முன்பே ஹரி கீதையில், விதிகளுடன் கூடிய சுருக்கமான குறிப்புடன் இதை நான் உனக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறேன்[1].(10) வியாசர் என்றும் அழைக்கப்படும் தீவில் பிறந்தவரான கிருஷ்ணரே பூமியில் நாராயணர் என்பதை அறிவாயாக. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, மஹாபாரதத்தைப் போன்ற ஓர் ஆய்வை அவரைத் தவிர வேறு எவனால் தொகுக்க முடியும்?(11) நீ ஒரு பெரும் வேள்வியைச் செய்யத் தீர்மானித்திருக்கிறாய். நீ தீர்மானித்தவாறே அந்த வேள்வி நடைபெறட்டும். பல்வேறு வகைக் கடமைகள் மற்றும் வழிபாட்டு மரபுகளைக் கேட்டவனான உனது குதிரை வேள்வி நடைபெறட்டும்" {என்றார் வைசம்பாயனர்}".(12)
[1] "ஹரி கீதை என்பது பகவத்கீதையாகும். சில வேளைகளில் இது நாராயணக் கீதை என்றும் அழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சௌதி {சௌனகரிடம்} தொடர்ந்தார், "அந்த மன்னர்களில் சிறந்தவன் {ஜனமேஜயன்}, இந்தப் பெரும் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, தன் பெரும் வேளிவியின் நிறைவுக்காக விதிப்படி விதிக்கப்பட்டிருக்கும் அனைத்துச் சடங்குகளையும் செய்யத் தொடங்கினான்.(13) ஓ! சௌனகரே, உம்மால் கேட்கப்பட்ட நான், நாராயணனைக் குறித்த அந்தப் பெரும் சொற்பொழிவை {நாராயணீயத்தை} உமக்கும், நைமிசக் காட்டில் வசிப்பபோரான இந்த முனிவர்கள் அனைவருக்கும் முறையாகச் சொல்லிவிட்டேன்.(14) இதற்கு முன்பு, கிருஷ்ணன் மற்றும் பீஷ்மரின் முன்னிலையில், பல முனிவர்களும், பாண்டுவின் மகன்களும் கேட்டுக் கொண்டிருந்தபோது நாரதர் என் ஆசானுக்கு இதைச் சொன்னார்[2].(15) பரமதேவனான நாராயணனே மூவுலகங்களுக்கும், முனிவர்களில் முதன்மையான அனைவருக்கும் தலைவனாவான். பேரளவு கொண்ட இந்தப் பூமியைத் தாங்குபவன் அவனே. ஸ்ருதிகள் மற்றும் பணிவெனும் குணம் ஆகியவற்றின் கொள்ளிடம் அவனே. அமைதியான இதயத்தை அடையச்செய்யும் பயிற்சி விதிகள் அனைத்திற்கும், யமன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனிடம் செல்வோர் அனைவருக்கும் பெருங்கொள்ளிடம் அவனே. எப்போதும் முதன்மையான மறுபிறப்பாளர்கள் சூழ இருப்பவன் அவனே. அந்தப் பெருந்தேவனே உன் புகலிடமாக இருக்கட்டும்.(16)
[2] "இந்த ஸ்லோகத்தில் குருவெனக் குறிப்பிடப்படும் ஆசான் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தேவர்களின் குருவான பிருஹஸ்பதியே இங்கே குறிப்பிடப்படுகிறார் என உரையாசிரியர் நினைக்கிறார். தேவ குருவோ ஒருபோதும் பாண்டவர்களிடம் வந்ததில்லை. இஃது ஒருவேளை வியாசராகவோ, வைசம்பாயனராகவோ இருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நைமிசாரண்யவாஸிகளின் இடையில் கேட்கப்பட்ட நான் இப்பொழுது நாராயணீயமென்கிற இந்தச் சரித்திரத்தை உமக்குச் சொன்னேன். முன் காலத்தில் நாரதரால் ரிஷிகளும், பாண்டவர்களும், கிருஷ்ணனும், பீஷ்மரும் கேட்டுக் கொண்டிருக்கையில் பிருஹஸ்பதிக்குச் சொல்லப்பட்டது" என்றிருக்கிறது.
சொர்க்கவாசிகளுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எப்போதும் செய்பவன் ஹரியே. (மூவுலகங்களுக்குத் தொல்லையாக அமையும்) அசுரர்களை எப்போதும் கொல்பவனும் அவனே. தவங்களின் கொள்ளிடம் அவனே. பெரும் புகழ் கொண்டவன் அவனே. மது மற்றும் கைடபன் என்ற பெயர்களில் அறியப்படும் தைத்தியர்களைக் கொன்றவன் அவனே. சாத்திரங்கள் மற்றும் பிற கடமைகளை {தர்மங்களை} அறிந்தவர்களும், அவற்றை நோற்பவர்களுமான மனிதர்களால் அடையப்படும் கதிகளை விதிப்பவன் அவனே. வேள்விகளில் அர்ப்பணிக்கப்படும் முதன்மையான காணிக்கைகளை எடுத்துக் கொள்பவன் அவனே. உன் புகலிடமும், பாதுகாப்பும் அவனே.(17) குணங்களுடன் கூடியவன் அவன். குணங்களில் இருந்து விடுபட்டவனும் அவனே. நான்கு வகை வடிவங்களில் இருப்பவன் அவனே. குளங்களை அர்ப்பணித்தல், அதே வகையிலான அறச் சடங்குகளைச் செய்தல் ஆகியவற்றில் இருந்து எழும் தகுதிகளை {புண்ணியங்களைப்} பகிர்ந்து கொடுப்பவன் அவனே. வெல்லப்பட முடியாதவனாகவும், பெரும் வலிமை கொண்டவனாகவும் இருந்து, அறச்செயல்கள் செய்த முனிவர்களின் ஆன்மாவால் மட்டுமே அணுகக்கூடிய கதியை எப்போதும் விதிப்பவனும் அவனே.(18) உலகங்களின் சாட்சி அவனே. பிறப்பில்லாதவன் அவனே. புராதனப் புருஷன் அவனே. சூரியனின் நிறத்திலான உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்} அவனே, அனைத்தின் புகலிடமும் அவனே. நீரில் இருந்து எழுந்தவனே (நாராயணனே) அவனுக்கு {வாசுதேவனுக்குத்} தலைவணங்குவதால் நீங்கள் அனைவரும் அவனுக்கு {வாசுதவேனுக்குத்} தலைவணங்குவீராக.(18) அண்டத்தின் தோற்றுவாய் அவனே. அமிர்தம் என்றழைக்கப்படும் இருப்பு அவனே. நுட்பமானவன் அவனே. அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் புகலிடம் அவனே. மாற்றமில்லாத தன்மை பொருந்திய ஒருவன் அவனே. சாங்கியர்களும், ஆன்மக்கட்டுப்பாடு கொண்ட யோகியரும் நித்தியமான அவனையே தங்கள் புத்திகளில் தாங்கியிருக்கின்றனர்" {என்றார் சௌதி}[3].(20)
[3] சாந்தி பர்வம் பகுதி 335 முதல் இந்தப் பகுதி {சாந்தி பர்வம் பகுதி 347} வரையுள்ள பகுதிகளை நாராயணீயம் என்ற சாத்திரமாகவோ, அதன் சுருக்கமாகவோ கொள்ளலாம்.
சாந்திபர்வம் பகுதி – 347ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |