Religion of devotion - Ekanta! | Shanti-Parva-Section-349 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 176)
பதிவின் சுருக்கம் : பக்தி அறத்தை முதலில் தொடங்கியவர்; தொடக்க காலத்தில் இருந்து வழிவழியாக வந்த அறத்தின் வரலாறு; பக்திஅறத்தை ஏன் அனைத்து மனிதர்களும் பின்பற்றுவதில்லை; இந்த ஏகாந்த அறத்தின் மூலம் பிரம்மத்தை அடையும் வகையை ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "சிறப்புமிக்கவனாக ஹரி, தன்னிடம் முழு ஆன்மாக்களோடு தங்களை அர்ப்பணிப்போரிடம் அருள் நிறைந்தவனாகிறான். விதிக்கு ஏற்புடைய வகையில் அவனுக்கு அளிக்கப்படும் வழிபாடுகள் அனைத்தையும் அவன் ஏற்கிறான்.(1) தங்கள் விறகை எரித்தவர்களும், தகுதி மற்றும் தகுதியின்மை {புண்ணியப் பாவங்கள்} ஆகிய இரண்டும் இல்லாதவர்களுமான மனிதர்கள் ஆசானிலிருந்து ஆசான் மூலமாக வழிவழியாக அடையும் ஞானத்தையும், இறுதியில் அவர்கள் அடையும் வெற்றியைக் குறித்தும் சொன்னீர்[1].(2) அத்தகைய மனிதர்கள், வேறு மூன்றின் மூலமாக நான்காவதான புருஷர்களில் முதன்மையான சாரத்தை, அல்லது வாசுதேவனையே எப்போதும் அடைகிறார்கள்[2]. எனினும், தங்கள் முழு ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் {ஏகாந்திகள்} உடனே உயர்ந்த கதியை {பரமபதத்தை} அடைகிறார்கள்[3].(3) பக்தி அறமே (ஞானத்தை விட) மேன்மையானதாகவும், நாராயணனின் விருப்பத்திற்குரியதாகவும் தெரிகிறது என்பதில் ஐயமில்லை. இவர்கள் (அநிருத்தன், பிரத்யும்னன் மற்றும் சங்கர்ஷணன் என்ற) அடுத்தடுத்த மூன்று நிலைகளைக் கடக்காமல் மாற்றமில்லாத ஹரியை உடனே அடைகிறார்கள்.(4) முறையான நோன்புகள், ஒழுங்கமைக்கப்பட்ட விதிகளின்படியான உபநிஷத்துகளுடன் கூடிய வேத கல்வி ஆகியவற்றால் பிராமணர்களாலும், யதிகளின் அறத்தைப் பின்பற்றுவோராலும் அடையப்படும் கதியானது,(5) முழு ஆன்மாக்களுடன் ஹரியிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்களால் அடையப்படும் கதியைவிடக் குறைந்ததாக நான் நினைக்கிறேன். பக்தி அறத்தை முதலில் தொடங்கியது யார்? அஃதை அறிவித்தது தேவனா? முனிவரா?(6) முழு ஆன்மாக்களோடு அர்ப்பணிப்பில் ஈடுபடுபவர்களால் பயிலப்படும் நடைமுறைகள் என்னென்ன? அந்த நடைமுறைகள் எப்போது தொடங்கின? இவற்றில் எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. இவ்வையங்களை நீர் விலக்குவீராக. நீர் விளக்கப் போகும் பல்வேறு கூறுகளைக் கேட்க நான் பேராவலுடன் இருக்கிறேன்" என்றான் {ஜனமேஜயன்}.(7)
[1] "’தங்கள் விறகை எரித்தவர்கள்’ என்பது ஆசைகளிலிருந்து விடுபட்டவர்களைக் குறிக்கிறது. ‘பாரம்பர்யகதி’ என்பது வழிவழியாக ஆசான்களின் மூலம் அடையப்படும் ஞானத்தைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உலகத்தின் வாஸனை நசித்தவர்களும், புண்ணியப் பாபமற்றவர்களுமாயிருக்கிற அவர்களுக்கு குரு பரம்பரையாக வந்த ஞானமானது உம்மால் சொல்லப்பட்டது" என்றிருக்கிறது.[2] "வாசுதேவனுக்குக் கீழே சங்கர்ஷணன், பிரத்யும்னன் மற்றும் அநிருத்தன் என்ற நான்கு நிலைகள் இருப்பதால் வாசுதேவனே நான்காவதாக அழைக்கப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "ஞானத்தைச் சார்ந்திருப்போர் மற்றும் முழு ஆன்மாவோடு நாராயணனிடம் அர்ப்பணிப்பு கொள்வோர் ஆகியோருக்கிடையிலான வேறுபாட்டையே இந்த இரு ஸ்லோகங்களும் சொல்கின்றன. ஞானத்தைச் சார்ந்தவர்கள், வாசுதேவனை அடைவது உண்மையென்றாலும், அவர்கள் அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன் என்ற மூன்று நிலைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்தாக வேண்டும். எனினும், பக்தி கொண்ட பின்னவர்களோ உடனே வாசுதேவனை அடைகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டவர்கள் மற்றும் குரு படைகளின் பல்வேறு பிரிவுகள் போருக்காக அணிவகுத்தபோதும், அர்ஜுனன் உற்சாகமிழந்த போதும், அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} பல்வேறு குணங்களைக் கொண்ட மனிதர்களால் அடையப்படும் கதி எது, அடையப்படாத கதி எது என்ற கேள்வியை விளக்கினான். இதற்கு முன்பு நான் அந்தப் புனிதமானவனின் வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறேன். அச்சந்தர்ப்பத்தில் அந்தப் புனிதமானவனால் போதிக்கப்பட்ட அறம் புரிந்த கொள்ளக் கடினமானதாகும். தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அதைப் புரிந்து கொள்ளவே முடியாது.(8,9) ஓ! மன்னா, பழங்காலமான கிருதயுகத்தில் சாமங்களுக்கு {சாம வேதத்திற்கு} முற்றிலும் ஏற்புடைய வகையில் படைக்கப்பட்ட இந்த அறம், உயர்ந்த தலைவனான {ஈஸ்வரனான} நாராயணனாலேயே தாங்கப்படுகிறது.(10) உயர்ந்த அருளைக் கொண்டவனான பார்த்தன் {யுதிஷ்டிரன்}, முனிவர்களுக்கு மத்தியிலும், கிருஷணன் மற்றும் பீஷ்மரின் முன்னிலையிலும் நாரதரிடம் (அவரது சொற்பொழிவுக்காக) இதையே கேட்டான்.(11) தீவில் பிறந்த கிருஷ்ணரான என் ஆசான் {வியாசர்} நாரதர் சொன்னதைக் கேட்டார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்தத் தெய்வீக முனிவரிடம் இருந்து அடைந்து, அந்தத் தெய்வீக முனிவரிடம் இருந்து பெற்ற அதே வகையிலேயே எனக்கு அதைச் சொன்னார். ஓ! ஏகாதிபதி, நாரதரிடம் இருந்து அடையப்பட்ட அதே வழியிலேயே இப்போது நான் அஃதை உனக்குச் சொல்லப் போகிறேன். எனவே, நான் சொல்வதைக் கேட்பாயாக.(12)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாரதா, படைப்பாளனான பிரம்மன் நாராயணனின் மனத்தில் பிறந்து அவனது வாய்வழியே வெளிப்பட்ட கல்பத்தில், இந்த அறத்திற்கு ஏற்புடைய வகையில் தனது தைவ மற்றும் பைத்ர சடங்குகளை நாராயணனே செய்தான். நீரின் நுரையை உண்டு வாழும் முனிவர்கள் {பேனபர்கள்} அதை நாராயணனிடம் இருந்து அடைநனர்.(13,14) நுரையுண்ணும் முனிவர்களிடம் {பேனபர்களிடம்} இருந்து இந்த அறமானது, வைகானஸர்கள் என்ற பெயரைக் கொண்ட முனிவர்களால் அடையப்பட்டது. வைகானஸர்களிடம் இருந்து அதைச் சோமன் அடைந்தான். அதன்பிறகு அஃது அண்டத்தில் இருந்து மறைந்து போனது.(15)
ஓ! மன்னா, நாராயணனின் கண்களில் இருந்து உதித்த பிரம்மனின் {சாக்ஷுஷம் என்கிற} இரண்டாம் பிறப்புக்குப் பிறகு, பெரும்பாட்டன் (பிரம்மன்) மீண்டும் சோமனிடமிருந்து இவ்வறத்தைப் பெற்றான்.(16) இவ்வாறு நாராயணனின் ஆன்மாவாக இருக்கும் அவ்வறத்தைப் பெற்ற பிரம்மன், அதை ருத்திரனுக்குக் கொடுத்தான். ஓ! ஏகாதிபதி, அந்தப் புராதனக் கல்பத்தின் கிருத யுகத்தில் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ருத்திரன்,(17) வாலகில்யர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் முனிவர்கள் அனைவருக்கும் அதைச் சொன்னான். பிறகு நாராயணனின் மாயை மூலமாக அது மீண்டும் அண்டத்தில் இருந்து மறைந்து போனது.(18)
ஓ! மன்னா, நாராயணனின் வாக்கில் உண்டான பிரம்மனின் {வாசிகம் என்ற} மூன்றாம் பிறப்பில், இவ்வறமானது மீண்டும் நாராயணனிடமிருந்து உண்டானது.(19) பிறகு, சுபர்ணர் என்ற பெயரைக் கொண்ட ஒரு முனிவர் அஃதை அந்த முதன்மையானவனிடம் இருந்தே அடைந்தார்.(20) முனிவர் சுபர்ணர் முதன்மையான வழிபாட்டு மரபான இந்தச் சிறப்பான அறத்தை {தினமும்} பகல் வேளையில் மூன்று முறை சொல்லிக் கொண்டிருந்தார். இதன் விளைவால் அது திரிசௌபர்ணம் என்ற பெயரால் உலகத்தில் அழைக்கப்பட்டது.(21) இவ்வறம் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. அதனால் மனத்தில் ஆழப் பதிய வைக்கப்படும் கடமைகள் அவதானிக்க மிகக் கடினமானவையாக இருக்கின்றன. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவ்வறமானது அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தின் வாழ்வையும் தக்க வைக்கும் காற்றின் தேவனால் {வாயுவால்} முனிவர் சுபர்ணரிடமிருந்து அடையப்பட்டது. காற்றின் தேவன், விருந்தினர்களும் பிறரும் உண்ட பிறகு எஞ்சும் வேள்விக் காணிக்கைகளில் வாழும் முனிவர்களுக்கு அதைச் சொன்னான்.(22,23) இந்தச் சிறந்த அறமானது அந்த முனிவர்களிடம் இருந்து பெருங்கடலால் அடையப்பட்டது. பிறகு அது மீண்டும் அண்டத்தில் இருந்து மறைந்து நாராயணனில் கலந்தது.(24)
ஓ! மனிதர்களின் தலைவா, உயர் ஆன்ம பிரம்மன், நாராயணனின் காதிலிருந்து பிறந்த {ஸ்ரோத்ரஜம் என்ற} அடுத்த {நான்காவது} பிறப்பைக் கொண்ட கல்பத்தில் என்ன நடந்தது என்பதைக் கேட்பாயாக.(25) ஹரி என்றழைக்கப்படும் சிறப்புமிக்க நாராயணன், படைப்பைச் செய்யத் தீர்மானித்தபோது, அண்டத்தைப் படைக்கக்கூடிய பலமிக்க ஒருவனைக் குறித்துச் சிந்தித்தான்.(26) அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவனுடைய காதுகளில் இருந்து அண்டத்தைப் படைக்கத்தகுந்த ஒருவன் எழுந்தான். அனைவரின் தலைவன் {நாராயணன்}, அவனைப் பிரம்மன் என்ற பெயரில் அழைத்தான்.(27)
உயர்ந்தவனான {பரமனான} நாராயணன் பிரம்மனிடம், "ஓ! மகனே, என் வாயிலிருந்தும், பாதத்திலிருந்தும் அனைத்து வகை உயிரினங்களையும் படைப்பாயாக. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, இந்தப் பணியை நீ செய்வதற்குப் போதிய சக்தியையும் பலத்தையும் நான் தருவேன் என்பதால் உனக்கு நன்மையானதையே செய்யப் போகிறேன்.(28) சாத்வதம் என்ற பெயரில் அறியப்படும் இந்தச் சிறந்த அறத்தையும் என்னிடம் இருந்து நீ பெறுவாயாக. இவ்வறத்தின் துணை கொண்டு நீ கிருத யுகத்தைப் படைத்து, முறையாக அதை விதிப்பாயாக" என்றான்.(29)
இவ்வாறு சொல்லப்பட்ட பிரம்மன், அந்தச் சிறப்புமிக்க ஹரிமேதஸுக்குத் தலைவணங்கி, நாராயணனின் வாயில் இருந்து பிறந்ததும், புதிர்கள், விளக்கங்களின் சுருக்கங்கள்(30) மற்றும் ஆரண்யகங்கள் ஆகியவற்றைக் கொண்டதும், வழிபாட்டு மரபுகள் அனைத்திலும் முதன்மையானதுமான அந்த வழிபாட்டு மரபை அவனிடம் இருந்து பெற்றான். அந்த வழிபாட்டு மரபை அளவிலா சக்தி கொண்ட பிரம்மனுக்குக் கற்பித்த நாராயணன், அவனிடம்(31) "ஒவ்வொரு யுகத்திலும் பின்பற்றப்பட வேண்டிய கடமைகளைப் படைப்பவன்" என்றான். பிரம்மனிடம் இதைச் சொன்ன நாராயணன், அங்கேயே மறைந்து, தமஸ் குணத்தின் எல்லையைக் கடந்ததும், புலப்படாதது வசித்திருப்பதும், கனியில் விருப்பமில்லா செயல்களின் பெயரில் அறியப்படுவதுமான இடத்திற்குச் சென்றான்.(33) இதன் பிறகு, வரங்களை அளிப்பவனும், உலகங்களின் பெரும்பாட்டனுமான பிரம்மன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட பல்வேறு உலகங்களைப் படைத்தான்.(33) முதலில் தொடங்கிய யுகம் உயர்ந்த மங்கலமுடையதாக இருந்து கிருதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அந்த யுகத்தில் சாத்வத அறம் அண்டம் முழுவதும் நீக்கமற நிறைந்து நீடித்திருந்தது.(34) அனைத்து உலகங்களையும் படைத்தவனான பிரம்மன், அந்த ஆதி அறநீதியின் துணையுடன் தேவர்கள் அனைவரின் தலைவனும், ஹரி என்றழைக்கப்படுபவனுமான பலமிக்க நாராயணனை வழிபட்டான்.(35)
அப்போது அவ்வறம் பரவுவதற்கும், உலகங்களுக்கு நன்மை செய்யவும் விரும்பிய பிரம்மன், ஸ்வாரோசிஷ் என்ற பெயரால் அறியப்பட்ட மனுவுக்கு அந்த வழிபாட்டு மரபைக் கற்பித்தான்.(36) ஓ! மன்னா {ஜனமேஜயா}, உலகங்கள் அனைத்தின் தலைவனும், பலமிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான ஸ்வாரோசிஷ் மனு, சங்கபதன் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தன் மகனுக்கு அந்த வழிபாட்டு மரபின் ஞானத்தை உற்சாகமாக அளித்தான்.(37) மனுவின் மகனான சங்கபதன், முக்கிய மற்றும் துணைத்திசைகளை ஆட்சி செய்யும் {திக்பாலனான} தன் மகன் சுவர்நபானுக்கு {ஸுதர்மாவுக்கு} அந்த வழிபாட்டு மரபின் ஞானத்தை அளித்தான். கிருத யுகம் முடிந்து திரேதா யுகம் தொடங்கியதும், மீண்டும் அந்த வழிபாட்டு மரபு உலகில் இருந்து மறைந்துபோனது.(38)
ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, நாராயணனின் மூக்கில் இருந்து பிறந்த பிரம்மனின் {நாஸத்யம் என்ற} அடுத்தப் பிறப்பில், ஓ! பாரதா, சிறப்புமிக்கவனும், பலமிக்கவனுமான நாராயணன், அல்லது தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட ஹரியே பிரம்மனின் முன்னிலையில் இவ்வறத்தைக் குறித்துப் பாடினான். பிறகு பிரம்மனின் விருப்பத்தால் படைக்கப்பட்ட அவனது மகன் சனத்குமாரர் இந்த வழிபாட்டு மரபைக் கற்றார்.(39,40) ஓ! குருக்களில் புலியே, கிருத யுகத்தின் தொடக்கத்தில் பிரஜாபதியான வீரணன் சனத்குமாரரிடம் இருந்து இந்த வழிபாட்டு மரபை அடைந்தான்.(41) இவ்வழியில் அதைக் கற்ற வீரணன் அதைத் தவசி ரைப்யருக்குக் கற்பித்தான். பதிலுக்கு ரைப்யர் தூய ஆன்மாவையும், நல்ல நோன்புகளையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனும், முக்கிய மற்றும் துணைத் திசைகளை அறம்சார்ந்து ஆளும் திக்பாலனுமான தன் மகன் குக்ஷிக்கு {குக்ஷிபாலனுக்கு} அதைச் சொன்னார். இதன்பிறகு நாராயணனின் வாயில் இருந்து பிறந்த அந்த வழிபாட்டு மரபானது மீண்டும் உலகத்தில் இருந்து மறைந்து போனது.(42,43)
ஹரியில் இருந்து உதித்த ஒரு முட்டையில் இருந்து பிரம்மன் அடைந்த {அண்டஜம் என்ற} அடுத்தப் பிறப்பில், மீண்டும் இவ்வறம் நாராயணனின் வாயில் இருந்தே வெளிப்பட்டது.(44) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதைப் பெற்றுக் கொண்ட பிரம்மன், அதை முறையாக முழுமையாகப் பின்பற்றினான். ஓ! ஏகாதிபதி, பிறகு பிரம்மன், பர்ஹிஷதர்கள் என்ற பெயரால் அறியப்பட்ட முனிவர்களுக்கு அதைச் சொன்னான். பிறகு, சாம வேதத்தை நன்கறிந்தவரும், ஜியேஷ்டர் என்ற பெயரால் அறியப்பட்டவருமான ஒரு பிராமணர் பர்ஹிஷதர்களிடம் இருந்து அஃதை அடைந்தார். அவர் சாமங்களை நன்கறிந்தவராக இருந்ததாலேயே ஜியேஷ்டசாமவிரத ஹரி என்ற பெயரால் அறியப்பட்டார்.(46) ஜியேஷ்டர் என்ற பெயரால் அறியப்பட்ட பிராமணரிடம் இருந்து அவிகம்பனன் என்ற பெயரைக் கொண்ட ஒரு மன்னன் இந்த வழிபாட்டு மரபை அடைந்தான். இதன் பிறகு, பலமிக்க ஹரியிடம் இருந்து பெறப்பட்ட இந்த வழிபாட்டு மரபானது உலகத்தில் இருந்து மீண்டும் மறைந்துபோனது.(47)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, நாராயணனின் தொப்புளில் உதித்த தாமரையின் முலம் பிரம்மன் அடைந்த {பத்மஜென்மம் என்ற} ஏழாம் பிறப்பில், இந்தக் கல்பத்தின் தொடக்கத்தில் இந்த வழிபாட்டு மரபானது அனைத்து உலகங்களையும் படைத்தவனும், தூய ஆன்மாவைக் கொண்டவனுமான பெரும்பாட்டனுக்கு நாராயணனாலேயே அறிவிக்கப்பட்டது. பழங்காலத்தில் பெரும்பாட்டன் {பிரம்மன்}, (தன் விருப்பத்தால் படைக்கப்பட்ட தன் மகன்களில் ஒருவனான) தக்ஷனுக்குக் கொடுத்தான்.(48,49) பதிலுக்குத் தக்ஷன், ஓ! ஏகாதிபதி, தன் மகன்களின் மகன்கள் அனைவரிலும் மூத்தவனும், வயதில் சாவித்ரிக்கு மூத்தவனுமான ஆதித்யனுக்கு அதைக் கொடுத்தான். ஆதித்யனிடம் இருந்து விவஸ்வான் அஃதை அடைந்தான்.(50) திரேதா யுகத்தின் தொடக்கத்தில் விவஸ்வான் இந்த வழிபாட்டு மரபை மனுவுக்குக் கொடுத்தான். மனு, அனைத்து உலகங்களைப் பாதுகாக்கவும், ஆதரிக்கவும் அதைத் தன் மகனான இக்ஷ்வாகுவுக்குக் கொடுத்தான்.(51) இக்ஷ்வாகுவால் வெளியிடப்பட்ட அந்த வழிபாட்டு மரபானது மொத்த உலகிலும் பரவியது. அண்ட அழிவு நேரும்போது அது மீண்டும் நாராயணனிடமே திரும்பி அவனிலேயே கலக்கும்.(52)
ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, யதிகளால் பயிலப்பட்டுப் பின்பற்றப்படு அறமானது ஏற்கனவே ஹரிகீதையில் {பகவத்கீதையில்}, சுருக்கமான விதிகளுடன் உனக்குச் சொல்லப்பட்டது.(53) ஓ! மன்னா, தெய்வீக முனிவரான நாரதர், புதிர்கள் மற்றும் விளக்கங்களின் சுருக்கம் ஆகிய அனைத்துடன் அஃதை அண்டத்தின் தலைவனான நாராயணனிடமிருந்தே பெற்றார்.(54) இவ்வாறே இந்த முதன்மையான அறமானது, மிகப் பழமைவாய்ந்ததும், நித்தியமானதுமாகும். எளிதில் புரிந்துகொள்ளப்பட முடியாததும், பயில்வதற்கு மிகக் கடினமானதுமான அது {இந்த அறமானது}, சத்வ குணத்தில் பற்றுக் கொண்ட மனிதர்களால் எப்போதும் ஆதரிக்கப்படுகிறது.(55) கடமைகளின் முழு அறிவுடன் நன்கு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டவையும், எந்த உயிரினத்திற்கும் எந்தத் தீங்கையும் செய்யாதவையுமான செயல்களின் மூலமே உயர்ந்த தலைவனான {ஈஸ்வரனான} ஹரி நிறைவை அடைகிறான்.(56)
சிலர் அநிருத்தன் என்ற ஒரேயொரு வடிவத்தைக் கொண்டவனாக நாராயணனைத் துதிக்கிறார்கள், சிலர் அநிருத்தன் மற்றும் பிரத்யும்னன் என்ற இரு வடிவங்களைக் கொண்டவனாக அவனைத் துதிக்கிறார்கள். சிலர், அநிருத்தன், பிரத்யும்னன் மற்றும் சங்கர்ஷணன் என்ற மூன்று வடிவங்களைக் கொண்டவனாகத் துதிக்கின்றனர். நான்காம் வகையினரோ, அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன் மற்றும் வாசுதேவன் என்ற நான்கு வடிவங்களைக் கொண்டவனாக அவனைத் துதிக்கின்றனர்.(57) ஹரியே க்ஷேத்ரஜ்ஞன் (ஆன்மா) ஆவான். (எப்போதும் முழுமையான அவன்) பிரிவுகள் இல்லாதவனாக இருக்கிறான். ஐந்து அடிப்படை பூதங்களைக் கடந்து அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் ஜீவன் அவனே. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி அவற்றைச் செலுத்தும் மனமும் அவனே ஆவான். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அவனே அண்டத்தைப் படைத்தவனும், விதிப்பவனுமாவான். அவன் செயல்பாடு உள்ளவனாகவும், செயல்பாடு இல்லாதவனாக இரண்டாகவும் இருக்கிறான். காரணம், விளைவு {காரணக் காரியங்கள்} ஆகிய இரண்டும் அவனே. ஓ! மன்னா, தான் விரும்பியபடி விளையாடும் மாற்றமில்லாத ஒரே புருஷன் அவனே.(60)
இவ்வாறே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் புரிந்துகொள்ளப்பட முடியாததும், என் ஆசானின் {வியாசரின்} அருளால் என்னால் அடையப்பட்டதுமான பக்தி அறத்தை நான் உனக்குச் சொல்லுவிட்டேன்.(61) ஓ! மன்னா, முழு ஆன்மாக்களுடன் நாராயணனில் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் மிக அரிதானவர்களே. ஓ! குரு குலத்தின் மகனே {ஜனமேஜயனே}, உலகளாவிய கருணையால் நிறைந்தவர்களும், ஆன்ம அறிவை {ஆத்மஞானத்தைக்} கொண்டவர்களும், பிறருக்கு நன்மை செய்வதிலேயே எப்போதும் ஈடுபடுபவர்களுமான மனிதர்களே உலகம் முழுவதும் இருந்தால், கிருத யோகம் தோன்றி, மனிதர்கள் அனைவரும் கனியில் விருப்பமில்லாமல் செயல்களை நிறைவேற்றுவார்கள்.(62,63) ஓ! ஏகாதிபதி, சிறப்புமிக்கவரும், கடமைகள் அனைத்தையும் நன்கறிந்தவரும், என் ஆசானுமான வியாசர், பல முனிவர்களின் முன்னிலையில், கிருஷ்ணனும், பீஷ்மரும் கேட்டுக் கொண்டிருந்தபோது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இந்தப் பக்தி அறத்தைக் குறித்து இவ்வகையிலேயே உரையாடினார். தவங்களின் செல்வத்துடன் கூடிய தெய்வீக முனிவரான நாரதரிடமிருந்தே அவர் அஃதை அடைந்தார்.(64,65) முழுமையான ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள், தேவர்களில் உயர்ந்தவனும், பிரம்மத்தோடு அடையாளம் காணப்படுபவனும், தூய நிறம் கொண்டவனும், சந்திரனின் பிரகாசம் கொண்டவனும், மாற்றமில்லாதவனுமான நாராயணனையே தங்கள் கதியாக அடைவதில் வெல்கிறார்கள்" {என்றார் வைசம்பாயனர்}.(66)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பல்வேறு வகைக் கடமைகளைப் பயின்று விழிப்படைந்த ஆன்மாக்களைக் கொண்ட மறுபிறப்பாளர்களை நான் காண்கிறேன். பிராமணர்கள் அவ்வகைக் கடமைகளைப் பயிலாமல் ஏன் பிற வகை நோன்புகளையும், சடங்குகளையும் செய்கிறார்கள்?" என்று கேட்டான்.(67)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதா, உடல் படைத்த உயிரினங்கள் அனைத்தையும் பொறுத்தவரையில் சத்வ குணம் தொடர்புடையது என்றும், ரஜஸ் குணத்தின் தொடர்புடையது என்றும், தமஸ் குணத்தின் தொடர்புடையது என்றும் மூன்று வகை மனோநிலைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.(68) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஓ! மனிதர்களில் புலியே, உடல்படைத்த உயிரினங்களைப் பொறுத்தவரையில், சத்வ குணத்தில் பற்றுக் கொண்ட முதன்மையான மனிதன் நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைவான்.(69) சத்வ குணத்தைக் கொண்டு, அதன் துணையால் மட்டுமே ஒருவன் பிரம்மத்தை அறிந்த மனிதனைப் புரிந்து கொள்ள முடியும். விடுதைலையை {முக்தியைப்} பொறுத்தவரையில் அது முற்றிலும் நாராயணனையே சார்ந்திருப்பதாகும். எனவே, சத்வ குணத்தால் ஆனதே விடுதலையாக {முக்தியாகக்} கருதப்படுகிறது.(70)
இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவனை நினைப்பதன் மூலம் முழு ஆன்மாவுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதன் பெரும் ஞானத்தை அடைகிறான்.(71) ஞானம் கொண்டவர்களும், யதிகளின் நடைமுறைகளையும், விடுதலையறத்தை {முக்தி அறத்தைப்} பின்பற்றுபவர்களும், தாகம் தணிந்தவர்களுமான மனிதர்கள், தங்கள் விருப்பம் கனிவதற்கு உதவும் ஹரியையே எப்போதும் காண்கிறார்கள்.(72) பிறப்புக்கு (மற்றும் இறப்புக்கு) உட்பட்டு, ஹரியின் கருணை பார்வையை அடைந்த மனிதன், சத்வ குணத்தைக் கொண்டவனாகவும், விடுதலை அடைவதில் அர்ப்பணிப்புமிக்கவனாகவும் அறியப்பட வேண்டும்.(73) நாராயணனிடம் முழு ஆன்மாவுடன் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதனால் பின்பற்றப்படும் அறமானது, சாங்கியர்களின் அமைப்புக்கு இணையான அல்லது அதே போன்ற தகுதியுடையதாகக் கருதப்படுகிறது.(74) ஒருவன், அவ்வறத்தைப் பின்பற்றுவதன் மூலம், நாராயணனையே ஆன்மாவாகக் கொண்ட விடுதலையை {முக்தியை} அடைவதால் உயர்ந்த கதியை அடைகிறான். நாராயணனால் கருணையுடன் பார்க்கப்படும் மனிதன் விழிப்படைந்தவனாகிறான் {புத்தனாகிறான்}.(75)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, எவனாலும் தன் விருப்பத்தால் விழிப்படைய முடியாது. ரஜஸ் மற்றும் தமஸ் என்ற இரு குணங்களையும் கொண்டிருக்கும் இயல்பானது கலப்பு எனச் சொல்லப்படுகிறது.(76) இத்தகைய கலப்பு இயல்பைக் கொண்டவனும், பிறப்புக்கு (மற்றும் இறப்புக்கும்) உட்படுபவனும், அவ்வகையில் பிரவிருத்தி {செயல்} கோட்பாட்டைப் பின்பற்றுபவனுமான மனிதன் மீது ஹரி ஒருபோதும் தன் கருணை பார்வையைச் செலுத்துவதில்லை.(77) பிறப்பிறப்பிற்கு உட்படும் மனிதன், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற இரண்டு தாழ்ந்த குணங்களில் மூழ்கிய மனத்தைக் கொண்டிருப்பதால் உலகங்களின் பெரும்பாட்டனான பிரம்மனே அவனைப் பார்க்கிறான்[4].(78) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, தேவர்களும் முனிவர்களும் சத்வ குணத்தில் பற்றுக் கொண்டவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் நுட்பமான வடிவைக் கொண்ட அந்தக் குணம் {சத்வ குணம்} இல்லாதவர்கள் எப்போதும் மாறும் இயல்பைக் கொண்டவர்களாகவே கருதப்படுவார்கள்" என்றார் {வைசம்பாயனர்}[5].(79)
[4] "பிரவிருத்தி அறத்தை {செயலறத்தைப்} பின்பற்றுபவர்கள் தங்கள் தகுதிகளின் {புண்ணியங்களின்} மூலம் சொர்க்கம் முதலியவற்றை அடைவார்கள். எனினும் தகுதிகள் தீரும் தன்மையைக் கொண்டவையாகும். எனவே அவர்கள் சொர்க்கத்தில் இருந்து விழ நேரிடும். பிரவிருத்தியைப் பின்பற்றுபவர்கள் மீது படைப்பாளனான பிரம்மன் தன் கண்களைச் செலுத்துகிறான். எனினும் நிவிருத்தி அறமோ விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுப்பதாகும். நிவிருத்தியை {செயலற்ற அறத்தைப்} பின்பற்றும் மனிதர்களை நாராயணனே பார்க்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "தேவர்களும், முனிவர்களும் நிச்சயம் சத்வ குணத்தைக் கொண்டவர்கள்தான். ஆனால் அந்தச் சத்வம் {நுட்பமற்ற} திரள் வடிவைக் கொண்டதாகும். எனவே அவர்களால் முக்தியை அடைய முடியாது. நுட்பமான வடிவிலான சத்வ குணமே முக்திக்கு வழிவகுக்கிறது. விடுதலையை {முக்தியை} அடைய முடியாத தேவர்கள் மாறும் இயல்பைக் கொண்ட அந்த நிலையிலேயே நீடித்திருப்பார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "மாற்றக் கோட்பாடுகள் நிறைந்த ஒருவனால் எவ்வாறு இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானதை அடைய முடியும்? இவற்றை நிச்சயம் நீர் அறிவீர் என்பதால் அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. மேலும் பிரவிருத்தியையும் முறையான வகையில் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(80)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "(சாங்கிய அமைப்பின் தத்துவப் பட்டியலில்) இருபத்தைந்தாவதாக உள்ள ஜீவனால், செயல்களை முற்றிலும் தவிர்க்க இயலும்போது, மிக நுட்பமானதும், (நுட்பமான வடிவிலான) சத்வ குணத்தால் நிறைந்ததும், (அ, உ, ம என்ற) மூன்று எழுத்துகளைக் கொண்ட {ஓம் என்ற} அசையின் சாரத்தால் நிறைந்ததுமான முதன்மையான இருப்பை அடைவதில் வெல்ல முடியும்[6].(81) சாங்கிய அமைப்பு, வேத ஆரண்யகம், பஞ்சராத்ர சாத்திரங்கள் என அனைத்தும் ஒன்றாகவும், முழுமையான ஒன்றின் பகுதிகளாகவும் இருக்கின்றன. நாராயணனையே சாரமாகக் கொண்ட அறமே, நாராயணனிடம் முழு ஆன்மாக்களுடன் அர்ப்பணிப்பு கொள்வரின் அறமாகும்[7].(82) பெருங்கடலின் அலைகள் எழுந்து, வெளியே சென்றாலும் முடிவில் மீண்டும் திரும்பிவிடுவதைப் போலவே பல்வேறு வகை ஞானங்களும் நாராயணனிலிருந்து எழுந்து முடிவில் மீண்டும் நாராயணனையே அடைகின்றன.(83) ஓ! குரு குலத்தின் மகனே, இவ்வாறே நான் உனக்குச் சாத்வத அறத்தைக் குறித்து விளக்கியிருக்கிறேன். ஓ! பாரதா, நீ அதற்குத் தகுந்தவனாக இருந்தால் முறையாக அவ்வறத்தையே பயில்வாயாக.(84)
[6] கும்பகோணம் பதிப்பில், மிகவும் ஸூக்ஷ்மனும், தத்வங்களோடு கூடினவனும், (அகார உகார மகாரமென்கிற) மூன்று அக்ஷரங்களோடு கூடினவனும், கிரியையற்றவனும், இருபத்தைந்தாமவனுமான புருஷனைப் புருஷன் அடைவான்" என்றிருக்கிறது.[7] "ஏகாந்திகளால் பின்பற்றப்படும் அறமானது {பக்தி அறமானது}, மேலே சொல்லப்பட்ட சாத்திரங்களில் விதிக்கப்பட்டவற்றில் இருந்து உண்மையில் மாறுபட்டதல்ல" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவ்வாறே உயர்ந்த அருளைக் கொண்டவரான நாரதர், வெள்ளையர்களாலும், யதிகளாலும் பின்பற்றப்படுவதும், ஏகாந்தம் என்றழைக்கப்படுவதுமான இந்த நித்தியமான மாற்றமில்லாததை என் ஆசானான தீவில் பிறந்த கிருஷ்ணருக்கு {வியாசருக்குச்} சொன்னார்[8].(85) தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் நிறைவடைந்த வியாசர், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனுக்கு இவ்வறத்தைச் சொன்னார். என் ஆசானிடம் இருந்து அதைப் பெற்ற நான் இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(86) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இந்தக் காரணங்களாலே இவ்வறமானது பயில்வதற்கு மிகக் கடினமானதாக இருக்கிறது. உன்னைப் போலவே இதைக் கேட்ட பிறரும் கலக்கமடைகின்றனர் {மோகமடைந்து இதைப் பின்பற்றுவதில்லை}.(87) ஓ! மன்னா, அண்டத்தைப் பாதுகாப்பவனும், வஞ்சிப்பவனும் கிருஷ்ணனே ஆவான். ஓ! ஏகாதிபதி, அழிப்பவனாகவும், காரணமாகவும் அவனே இருக்கிறான்" என்றார் {வைசம்பாயனர்}.(88)
[8] "இங்கே குறிப்பிடப்படும் வெள்ளையர்கள் யார்? இந்த வார்த்தை இல்லற வாழ்வு முறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் மனிதர்களைக் குறிக்கிறது என உரையாசிரியர் விளக்குகிறார். யதிகள் மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறத்தாலான ஆடைகளை அணிவார்கள். எனினும், இல்லறவாசிகள் வெள்ளைத் துணிகளையே பயன்படுத்துவார்கள். இச்சொல் வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} வசிப்போரையும் குறிக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இவ்விதம் மஹாபாக்யவானான அந்த நாரதர் என்னுடைய குருவுக்கு ஸ்வேதர்களுக்கும் யதிகளுக்குமுரிய அழிவற்ற ஏகாந்த கதியைச் சொன்னார்" என்றிருக்கிறது. ஸ்வேதர்கள் என்ற சொல்லுக்கான அடிக்குறிப்பில், "’கிருகஸ்தர்களுக்கும்; என்பது பழையவுரை; ’வெள்ளை வஸ்திரமுடையவர்’ என்பது" எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 349ல் உள்ள சுலோகங்கள் : 88
ஆங்கிலத்தில் | In English |