The former life of Vyasa - Apantaratamas! | Shanti-Parva-Section-350 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 177)
பதிவின் சுருக்கம் : வியாசர் விஷ்ணுவுக்கு மகனாகப் பிறந்த பழங்கதை; பல்வேறு வழிபாட்டு மரபுகளும்; அவை சுட்டும் இறுதி கதியும்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாள முனிவரே, சாங்கிய அமைப்பு, பஞ்சராத்திர சாத்திரங்கள், வேத ஆரண்யகங்கள் ஆகிய பல்வேறு ஞான அமைப்புகள் அல்லது அற அமைப்புகளே தற்போது உலகில் இருக்கின்றன.(1) இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரே போன்ற கடமை நடைமுறைகளைப் போதிக்கின்றனவா? அல்லது ஓ! தவசியே, அவற்றால் போதிக்கப்படும் கடமைகளின் நடைமுறைகள் ஒன்றுக்கொன்று வேறுபாடு கொண்டவையா? என்னால் கேட்கப்படும் நீர், பிரவிருத்தி குறித்து முறையான வகையில் உரைப்பீராக" என்று கேட்டான்.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இருளை விலக்குபவரும், தீவுக்கு மத்தியில் பராசரருக்கு சத்தியவதியால் பெறப்பட்டவரும், பெரும் ஞானம் கொண்டவரும், பெருந்தகைமையுடன் கூடிய ஆன்மாவைக் கொண்டவருமான பெரும் முனிவரை {வியாசரை} நான் வணங்குகிறேன்.(3) அவரே பெரும்பாட்டனான பிரம்மனின் தோற்றுவாய் என்றும்; அவரே நாராயணனின் ஆறாவது வடிவம் என்றும்; அவர் யோக பலம் கொண்டவர் என்றும்; தம் பெற்றோருக்கு ஒரே மகனான அவர் நாராயணனின் அவதாரம் என்றும்; இயல்புக்கு மீறிய சூழ்நிலைகளில் ஒரு தீவில் பிறந்த அவர் வற்றாத வேதக் கொள்ளிடம் என்றும் கல்விமான்கள் சொல்கிறார்கள்.(4) கிருத யுகத்தில் பெரும் பலம் கொண்டவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான நாராயணன் அவரைத் தன் மகனாகப் படைத்தான். உண்மையில் உயர் ஆன்ம வியாசர், பிறப்பற்றவரும், புராதனமானவரும், வற்றாத வேதக் கொள்ளிடமும் ஆவார்" என்றார்.(5)
ஜனமேஜயன் {வைசம்பாயனிடம்}, "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, முனிவர் வசிஷ்டருக்கு, சக்திரி என்ற பெயரில் ஒரு மகன் இருந்ததாகவும், அந்தச் சக்திரிக்கு, பாராசரர் என்ற பெயரில் ஒரு மகன் இருந்ததாகவும், அந்தப் பராசரர் பெரும் தவத் தகுதியைக் கொண்டவரும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணன் {கருப்பன்_வியாசர்} என்ற பெயரைக் கொண்ட ஒரு மகனைப் பெற்றார் என்றும் நீரே இதற்கு முன்பு சொன்னீர்.(6) இப்போது மீண்டும் நீரே வியாசர் நாராயணனின் மகன் என்றும் சொல்கிறீர். அளவிலா சக்தியைக் கொண்டவரான வியாசர், தமது முற்பிறவியில் நாராயணனில் இருந்து உதித்தவரா? ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, நாராயணன் மூலம் ஏற்பட்ட வியாசரின் பிறப்பு குறித்து எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(7)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஸ்ருதிகளின் பொருளைப் புரிந்து கொள்ள விரும்பியவரும், தவப் பெருங்கடலும், சாத்திரக் கடமைகள், அறிவை ஈட்டுவது ஆகியவை அனைத்திலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பவருமான என் ஆசான் {வியாசர்}, சில காலம் இமய மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசித்து வந்தார்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர் {வியாசர்}, மஹாபாரதத்தைத் தொகுக்கும்போது சக்தியில் நேர்ந்த கடுஞ்சோர்வின் விளைவால் அவர் தம் தவங்களில் களைப்படைந்தார். அந்நேரத்தில் சுமந்தன், ஜைமினி, உறுதியான நோன்புகளைக் கொண்ட பைலன், நான்காவதாக நான் {வைசம்பாயனர்}, அவருடைய மகனான சுகர் ஆகியோர் அவருக்குச் சீடர்களாக இருந்தோம். ஓ! மன்னா, எங்கள் ஆசான் உணர்ந்த களைப்பை நோக்கில் கொண்ட நாங்கள் அவரது களைப்பைப் போக்கத் தேவையான அனைத்தையும் செய்து கொண்டு அவரிடம் கடமையுணர்வுடன் காத்திருந்தோம்.(9,10) தமது சீடர்களால் சூழப்பட்ட வியாசர், கணங்களுக்கு மத்தில் உள்ள கணங்களின் தலைவனான மஹாதேவனைப் போல இமய மலையின் சாரலில் அழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(11) அங்கங்களுடன் கூடிய வேதங்கள் அனைத்தையும், மஹாபாரத ஸ்லோகங்கள் அனைத்தின் பொருட்களையும் தொகுத்த பிறகு ஒரு நாள், குவிந்த கவனத்தோடு கூடிய நாங்கள் அனைவரும் புலனடக்கம் கொண்டவரும், அந்த நேரத்தில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவருமான எங்கள் ஆசானை அணுகினோம்.(12) உரையாடலுக்கான ஓர் இடைவேளையை உண்டாக்கிக் கொண்ட நாங்கள், வேதங்கள், மஹாபாரத ஸ்லோகங்கள் ஆகியவற்றின் பொருட்களை எங்களுக்கு விளக்கிச் சொல்லுமாறும், நாராயணனிடம் இருந்து அவர் {வியாசர்} அடைந்த பிறவி குறித்த நிகழ்வுகளை எங்களுக்குச் சொல்லுமாறும் அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரிடம் கேட்டுக் கொண்டோம்.(13) தத்துவங்கள் அனைத்தையும் அறிந்தவரான அவர், முதலில் ஸ்ருதிகள் மற்றும் மஹாபாரதத்தின் விளக்கங்களையும் சொல்லி, பிறகு நாராயணனிலிருந்து தாம் அடைந்த பிறப்பு சம்பந்தமான பின்வரும் நிகழ்வுகளை எங்களுக்குச் சொன்னார்.(14)
வியாசர், "சீடர்களே, ஒரு முனிவரின் பிறப்பு தொடர்புடைய வரலாறுகளில் சிறந்தந்தும், உரைகளில் முதன்மையானதுமான இவ்வுரையை நீங்கள் கேட்பீராக. மறுபிறப்பாளர்களே, கிருத யுகத்தில் நடந்த இந்தக் கதையை என் தவங்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன்.(15) ஆதி தாமரையில் நேர்ந்த {பிரம்மனின் பத்மஜென்மம் என்கிற} ஏழாம் பிறப்பின் போது, கடுந்தவங்களைக் கொண்ட நாராயணன், நன்மை தீமைகள் இரண்டையும் கடந்தும், ஒப்பற்ற காந்தியை ஏற்று முதலில் பிரம்மனைத் தன் தொப்புகளில இருந்து படைத்தான்.
பிரம்மன் பிறப்படைந்ததும் நாராயணன் அவனிடம்,(16,17) "நீ என் தொப்புளில் இருந்து பிறந்திருக்கிறாய். படைப்பின் பலத்தைக் கொண்ட நீ, பகுத்தறிவுடைய, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல்வேறு வகையிலான உயிரினங்களைப் படைப்பதில் உன்னை நிறுவிக் கொள்வாயாக" என்றான்.(18)
இவ்வாறு தன்னிருப்பின் ஆசிரியனால் சொல்லலப்பட்ட பிரம்மன், கவலையடைந்த மனத்துடன், தன் பணியின் கடினத்தை உணர்ந்து, தனக்கு இடப்பட்ட அணையைச் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தான். வரமளிப்பவனும், அண்டத்தின் தலைவனுமான சிறப்புமிக்க ஹரிக்குத் தலைவணங்கி இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(19) "ஓ! தேவர்களின் தலைவா, நான் உன்னை வணங்குகிறேன், ஆனால் பல்வேறு உயிரினங்களைப் படைக்க எனக்கென்ன பலம் இருக்கிறது என்று கேட்கிறேன்? நான் ஞானமில்லாதவன். இதை நோக்கில் கொண்டு என்ன விதிக்கப்பட வேண்டுமோ அதை விதிப்பாயாக" என்றான்.(20) இவ்வாறு பிரம்மனால் சொல்லப்பட்ட அண்டத்தின் தலைவனான நாராயணன், பிரம்மனின் பார்வையில் இருந்து அங்கேயே அப்போதே மறைந்து போனான். புத்தியுடன் கூடியவை அனைத்திலும் முதன்மையான அந்த உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்}, அப்போது புத்தியைக் குறித்துச் சிந்தித்தான்.(21) ஹரியின் வடிவத்திற்கு ஒப்பான வடிவத்துடன் கூடிய புத்தியானவள், பலமிக்க ஹரியின் முன்பு தோன்றினாள். யோகமனைத்தையும் கடந்தவனான நாராயணன் இப்போது புத்தியெனும் தேவியிடம் முறையாக யோகத்தைப் பயன்படுத்தினான்.(22) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், மாற்றமில்லாதவனுமான ஹரி, செயல்பாடு, நன்மை மற்றும் யோகபலம் அனைத்துடன் கூடிய புத்தியெனும் தேவியிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(23) "உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்கான பணியை நிறைவு செய்வதற்காக நீ பிரம்மனுக்குள் நுழைவாயாக" என்றான். இவ்வாறு அந்த உயர்ந்த தலைவனால் {ஈஸ்வரனால்} ஆணையிடப்பட்ட புத்தியானவள், அதன் பேரில் பிரம்மனுக்குள் நுழைந்தாள்.(24)
ஹரியானவன், புத்தியுடன் கலந்தவனாகப் பிரம்மனைக் கண்டபோது, மீண்டும் அவனிடம், "இப்போது நீ பல்வேறு வகை உயிரினங்களையும் படைப்பாயாக" என்றான்.(25) "சரி" என்ற சொல்லை நாராயணனிடம் மறுமொழியாகக் கூறிய பிரம்மன் மதிப்புடன் தன் மூதாதையின் ஆணையை ஏற்றான். அப்போது பிரம்மனின் முன்னிலையில் இருந்து மறைந்த நாராயணன்,(26) ஒளி அல்லது பிரகாசம் என்ற பெயரில் அறியப்பட்ட தன் இடத்தில் ஒரு கணத்தில் சென்று சேர்ந்தான். (புலப்படாத்தன்மையுடன் கூடிய) தன் சுயநிலைக்கு மீண்டும் திரும்பிய ஹரி, ஒரே அண்ட இயல்பில் தன்னை இருத்திக் கொள்ளத் தீர்மானித்தான்.(27)
எனினும், பிரம்மனால் படைப்பின் பணி நிறைவடைந்ததும், நாராயணனின் மனத்தில் மற்றொரு எண்ணம் எழுந்தது. உண்மையில் அவன் இவ்வாறே சிந்தித்தான், "பரமேஷ்டி என்றழைக்கப்படும் பிரம்மன், தைத்தியர்கள், தானவர்கள், கந்தர்வகள் மற்றும் ராட்சசர்களை உள்ளடக்கிய இந்த உயிரினங்கள் அனைத்தையும் படைத்துவிட்டான். ஆதரவற்றவளான பூமாதேவி இந்த உயிரினங்களின் கனத்தால் சுமை நிறைந்தவளாகிவிட்டாள்.(29) உலகத்தில் உள்ள தைத்தியர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்கள் பலர் பெரும்பலத்துடன் கூடியவர்களாவார்கள். தவங்களைச் செய்யும் அவர்கள், பல்வேறு நேரங்களில் பல அற்புத வரங்களை அடைவதில் வெல்வார்கள்.(30) தாங்கள் பெற்ற அந்த வரங்களின் விளைவால் செருக்கிலும், வலிமையிலும் பெருகும் அவர்கள், தேவர்களையும், தவ வலிமை கொண்ட முனிவர்களையும் ஒடுக்கிப் பீடிப்பார்கள். எனவே, சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு அடுத்தடுத்து பல்வேறு வடிவங்களை ஏற்று நான் இப்போது பூமியின் சுமையைக் குறைக்க வேண்டும்.(32) தீயவர்களைத் தண்டித்தும், நல்லோரை ஆதரித்தும் நான் இப்பணியை நிறைவேற்றுவேன். (இவ்வாறு என்னால் கவனித்துக் கொள்ளப்படுபவளும்) வாய்மையின் உடல்வடிவமுமான பூமியானவள், உயிரினங்களின் சுமையைச் சுமப்பதில் வெல்வாள்.(33) ஒரு பெரும்பாம்பின் வடிவை ஏற்கும் நான், வெட்டவெளியில் பூமியைத் தாங்க வேண்டும். இவ்வாறு என்னால் தாங்கப்படும் அவள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் தாங்குவாள். எனவே, பூமியில் பல்வேறு வடிவங்களில் அவதரிக்கும் நான், அத்தகைய நேரங்களில் அவளை ஆபத்தில் இருந்து காக்க வேண்டும்" {என்று நினைத்தான்}.(34) இவ்வழியில் சிந்தித்த அந்த மதுசூதனன், தன் நோக்கத்தில் கொண்ட பணியை நிறைவேற்றுவதற்காகக் காலாகாலத்தில் தோன்றப்போகும் பல்வேறு வடிவங்களைத் தன் மனத்தில் படைத்தான்.(35)
"பன்றி {வராஹம்}, சிங்க மனிதன் {நரசிம்மம்}, குள்ளன் {வாமனன்} மற்றும் {இராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட} மனிதர்களின் வடிவை ஏற்கும் நான், தீயவர்களாகவும், அடங்காதவர்களாகவும் மாறிவிட்ட தேவர்களின் எதிரிகளைக் கொல்வேன்" என்று நினைத்தான்.(36)
இதன்பிறகு அண்டத்தை உண்மையில் படைத்தவனான அவன் மீண்டும் "போ" என்ற ஓரசையைச் சொல்லி, சுற்றிலும் அஃதை எதிரொலிக்கச் செய்தான். இந்த வாக்கின் அசையில் (சரஸ்வதியில்} இருந்தே சாரஸ்வதர் என்ற பெயரைக் கொண்ட முனிவர் எழுந்தார்.(37) இவ்வாறு நாராயணனின் வாக்கில் பிறந்தவரான அந்த மகன் அபாந்தரதமஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பெரும் பலம் கொண்டவரான அவர், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை முழுமையாக அறிந்தவராக இருந்தார். நோன்புகளை நோற்பதில் உறுதிமிக்க அவர் வாக்கில் வாய்மை நிறைந்தவராக இருந்தார்.(38) பிறந்ததும் நாராயணனுக்குத் தலைவணங்கிய அந்த முனிவரிடம், தேவர்கள் அனைவரையும் உண்மையில் படைத்தவனும், மாற்றமில்லாத இயல்பைக் கொண்டவனுமான அவன் {நாராயணன்}, "ஓ! புத்தியுடன் கூடிய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, வேதங்களை வகுப்பதில் நீ உனது கவனத்தை அர்ப்பணிக்க வேண்டும். எனவே, ஓ! தவசியே, நான் ஆணையிட்டதைச் செய்வாயாக" என்றான்.(39)
சுயம்புவான மனுவின் பெயரைக் கொண்ட கல்பத்தில், நாராயணனின் வாக்கில் இருந்து இருப்புக்கு வந்த முனிவர் அபாந்தரதமஸ் அந்த உயர்ந்த தலைவனின் {ஈஸ்வரனின்} இந்த ஆணைக்குக் கீழ்ப்படிந்து, வேதங்களை வகுத்துத் தொகுத்தார்.(40) சிறப்புமிக்கவனான ஹரி, முனிவரின் அச்செயலுக்காகவும், அவரால் நன்கு செய்யப்பட்ட தவங்களுக்காகவும், நோன்புகள் மற்றும் நியமங்களுக்காகவும், அவரது புலனடக்கத்திற்காகவும் அவனிடம் நிறைவை அடைந்தான்.(41)
அவரிடம் பேசிய நாராயணன், "ஓ! மகனே {அபந்தரமஸே}, ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வேதங்களைப் பொறுத்தவரையில் நீ இவ்வழியிலேயே செயல்படுவாய். ஓ! மறுபிறப்பாளனே, நீ செய்த இந்தச் செயலின் விளைவால் நீ மாற்றமில்லாதவனாகவும், எவராலும் விஞ்ச முடியாதவனாகவும் ஆவாய்.(42) கலியுகம் தோன்றும்போது, கௌரவர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பாரதக் குலத்தின் குறிப்பிட்ட இளவரசர்கள் உன்னில் இருந்து பிறப்பை அடைவார்கள். அவர்கள், பலமிக்க நாடுகளை ஆளும் உயர் ஆன்ம இளவரசர்களாகப் பூமியில் கொண்டாடப்படுவார்கள்.(43) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, உன் மூலம் பிறந்தவர்களான அவர்களுக்கிடையில், நீ இல்லாத போது, ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் வகையில் பிணக்கு ஏற்படும்.(44) அந்த யுகத்திலும் கடுந்தவங்களைச் செய்யும் நீ, வேதங்களைப் பல்வேறு வகைகளாக வகுப்பாய். உண்மையில் அந்த இருள் யுகத்தில் உன் நிறம் கருமையாகும்.(45)
நீ பல்வேறு வகைக் கடமைகளையும், பல்வேறு வகை ஞானங்களையும் தோன்றச் செய்வாய். கடுந்தவங்களைச் செய்பவனாக இருந்தாலும், உலகின் மீது கொண்ட ஆசை மற்றும் பற்றில் இருந்து ஒருபோதும் விடுபட இயலாதவனாகவே இருப்பாய்.(46) எனினும் உன் மகன் {சுகர்}, மாதவனின் அருளால் பரமாத்மாவைப் போல அனைத்துப் பற்றுகளில் இருந்தும் விடுபடுவான். இது வேறு வகையில் ஆகாது.(47) பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மனத்தில் பிறந்த மகன் என்று கல்விமான்களான பிராமணர்களால் அழைக்கப்படுபவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தவப்பெருங்கடலைப் போன்றவரும், சூரியனின் காந்தியையே கடந்தவருமான வசிஷ்டர்,(48) வலிமையும், சக்தியும், ஆற்றலும் கொண்டவரும், பராசரர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பெரும் முனிவர் பிறக்கப் போகும் குலத்தின் மூதாதையாக இருப்பார். வேதப் பெருங்கடலும், தவங்களின் வசிப்பிடமுமான அந்த முதன்மையான மனிதர் {பராசரர்} (அந்தக் கலியுகத்தில் நீ பிறக்கும்போது) உன் தந்தையாவார்.(49) தந்தையின் இல்லத்தில் வசித்து வரும் ஒரு கன்னிப் பெண், பெரும் முனிவரான பராசரரிடம் கொள்ளும் கலவிச் செயல்பாட்டின் மூலம் அவளுக்கு நீ மகனாகப் பிறப்பாய்.(50)
கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த முக்கியப் பொருட்களில் உனக்கு எந்த ஐயமும் ஏற்படாது. தவங்களுடன் கூடியவனும், என்னால் கற்பிக்கப்பட்டவனுமான நீ, ஆயிரமாயிரம் யுகங்கள் கடந்த நிகழ்வுகளையும் காண்பாய். எதிர்காலத்தில் நேரப்போகும் ஆயிரமாயிரம் யுகங்களையும் நீ காண்பாய்.(51,52) ஓ! தவசியே, அப்பிறவியில் நீ, பிறப்பிறப்பற்றவனான நான், சக்கரம் தரித்துப் பூமியில் (யது குலத்தின் கிருஷ்ணனாக) அவதரிக்கப் போவதைப் பார்ப்பாய். ஓ! தவசியே, நீ என்னிடம் கொள்ளும் இடையறாத அர்ப்பணிப்பின் விளைவால் அடையப்படும் உன் தகுதியின் மூலம் இவை அனைத்தும் உனக்கு நடக்கும். நான் சொல்லும் இந்த வார்த்தைகள் வேறுவகையாகாது.(53) நீ உயிரினங்களில் முதன்மையான ஒருவனாக இருப்பாய். உன் புகழ் மகத்தானதாக இருக்கும். எதிர்காலக் கல்பத்தில் சூரியனின் மகனான சனியே, அந்தக் காலத்திற்கான பெரும் மனுவாகப் பிறப்பை அடைவான்.(54) ஓ! மகனே, அந்த மன்வந்தரத்தில், தகுதிகளைப் பொறுத்தவரையில் பல்வேறு காலங்களைச் சார்ந்த மனுக்களைவிட மேன்மையானவனாக இருப்பாய். என் அருளால் நீ அவ்வாறே ஆவாய் என்பதில் ஐயமில்லை.(55) இந்த உலகில் நீடித்திருக்கும் எதுவும் என் முயற்சியின் விளைவாக இருப்பவையே. பிறரின் எண்ணங்கள் அவர்களுடைய செயல்களுடன் பொருந்தாது. எனினும் என்னைப் பொறுத்தவரையில், சிறு தடையுமின்றி நான் நினைப்பதையே எப்போதும் விதிக்கிறேன்" {என்றான் நாராயணன்}.(56)
சாரஸ்வதர் என்ற பெயரில் அழைக்கப்படும் முனிவர் அபாந்தரதமஸிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்}, "செல்வாயாக" என்று சொல்லி அவருக்கு விடைகொடுத்து அனுப்பினான்.
{வியாசர் தொடர்ந்தார்} ஹரியின் ஆணையின் பேரில் பிறந்த அபாந்தரதமஸ் நானே. மேலும் நான் வசிஷ்ட குலத்தைத் திளைப்படைச் செய்பவனாக, கொண்டாடப்படும் கிருஷ்ண துவைபாயனன் என்ற பிறப்பை அடைந்திருக்கிறேன்.(57,58) என் முற்பிறவியில் நாராயணனின் அருளால் நான் அந்த நாராயணனின் ஒரு பகுதியாகவே பிறப்பை அடைந்தேன் என்பதை என் அன்புக்குரிய சீடர்களான உங்களுக்குச் சொன்னேன்.(59) நுண்ணறிவுமிக்கவர்களில் முதன்மையானவர்களே, பழங்காலத்தில் உயர்ந்த மன ஒருங்கமைப்பின் உதவியுடன் நான் கடுந்தவங்களைச் செய்தேன்.(60) பிள்ளைகளே, என்னிடம் பெரும் மதிப்புக் கொண்ட உங்களிடம் பேரன்பு கொண்டே, பழங்காலத்தில் என் முந்தைய பிறப்பில் நடந்தவையுமான நீங்கள் அறிய விரும்பிய அனைத்தையும் சொன்னேன்" என்றார் {வியாசர்}".(61)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி, களங்கமில்லா மனம் கொண்ட எங்கள் மதிப்புமிக்க ஆசானான வியாசரின் முற்பிறவி தொடர்புடைய சூழ்நிலைகளை நீ கேட்டதால் நான் உனக்குச் சொன்னேன். மீண்டும் நான் சொல்வதைக் கேட்பாயாக.(62) ஓ! அரசமுனியே, சாங்கியம், யோகம், பஞ்சராத்ரம், வேதங்கள் மற்றும் பசுபதி போன்ற பல்வேறு பெயர்களில் பல்வேறு வகை வழிபாட்டு மரபுகள் இருக்கின்றன.(63)
சாங்கிய வழிபாட்டு மரபானது பெரும் முனிவரான கபிலரால் அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. யோக அமைப்பை அறிவித்தது ஆதி ஹிரண்யகர்ப்பனை {பிரம்மனைத்} தவிர வேறு எவனும் அல்ல.(64) பிராசீனகர்ப்பர் என்ற சிலரால் அழைக்கப்படும் முனிவர் அபாந்தரந்தமஸ் வேதங்களின் ஆசானாகச் சொல்லப்படுகிறார்.(65) உமையின் தலைவனும், அனைத்து உயிரினங்களின் ஆசானும், ஸ்ரீகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுபவனும், பிரம்மனின் மகனும், உற்சாகமிக்கவனுமான சிவனே, பாசுபதம் என்ற பெயரில் அறியப்படும் வழிபாட்டு மரபை அறிவித்தவன்.(66) சிறப்புமிக்க நாராயணனே, பஞ்சராத்ர சாத்திரங்களை உள்ளடக்கிய வழிபாட்டு மரபு மொத்தத்தையும் அறிவித்தவன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இந்த வழிபாட்டு மரபுகள் அனைத்திலும், பலமிக்க நாராயணனே ஒரே விளக்கப் பொருளாகக் காணப்படுகிறான்.(67) இந்த வழிபாட்டு மரபுகளைச் சார்ந்த சாத்திரங்களின்படியும், அவற்றில் உள்ளடங்கியிருக்கும் ஞானத்தின் அளவுகளின் படியும், அவை நாராயணனையே ஒரே வழிபாட்டுப் பொருளாக அறிவிக்கின்றன.
சாங்கிய வழிபாட்டு மரபானது பெரும் முனிவரான கபிலரால் அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. யோக அமைப்பை அறிவித்தது ஆதி ஹிரண்யகர்ப்பனை {பிரம்மனைத்} தவிர வேறு எவனும் அல்ல.(64) பிராசீனகர்ப்பர் என்ற சிலரால் அழைக்கப்படும் முனிவர் அபாந்தரந்தமஸ் வேதங்களின் ஆசானாகச் சொல்லப்படுகிறார்.(65) உமையின் தலைவனும், அனைத்து உயிரினங்களின் ஆசானும், ஸ்ரீகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுபவனும், பிரம்மனின் மகனும், உற்சாகமிக்கவனுமான சிவனே, பாசுபதம் என்ற பெயரில் அறியப்படும் வழிபாட்டு மரபை அறிவித்தவன்.(66) சிறப்புமிக்க நாராயணனே, பஞ்சராத்ர சாத்திரங்களை உள்ளடக்கிய வழிபாட்டு மரபு மொத்தத்தையும் அறிவித்தவன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இந்த வழிபாட்டு மரபுகள் அனைத்திலும், பலமிக்க நாராயணனே ஒரே விளக்கப் பொருளாகக் காணப்படுகிறான்.(67) இந்த வழிபாட்டு மரபுகளைச் சார்ந்த சாத்திரங்களின்படியும், அவற்றில் உள்ளடங்கியிருக்கும் ஞானத்தின் அளவுகளின் படியும், அவை நாராயணனையே ஒரே வழிபாட்டுப் பொருளாக அறிவிக்கின்றன.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, இருளால் {அறியாமையால்} குருடான பார்வையைக் கொண்ட மனிதர்கள், நாராயணனையே அண்டத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளாகப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.(68) சாத்திரங்களின் ஆசிரியர்களான ஞானிகள், முனிவனான நாராயணனே அண்டத்தில் மதிப்புடன் வழிபடத்தக்க பொருளாவான் என்று சொல்கின்றனர். அவனைப் போன்ற வேறு எவனும் இல்லை என்று நான் சொல்கிறேன்.(69) ஹரி என்ற பெயரில் அழைக்கப்படும் பரமதேவன், ஐயங்கள் அனைத்தையும் (சாத்திரங்கள் மற்றும் உள்ளுணர்வின் துணையால்) விலக்குவதில் வென்றோரின் இதயங்களில் வசிக்கிறான். போலி மொழிகளின் துணையுடன் அனைத்திலும் சச்சரவு செய்பவர்கள் மற்றும் ஐயத்தின் ஆதிக்கத்தில் உள்ளோரின் இதயங்களில் மாதவன் ஒருபோதும் வசிப்பதில்லை.(70) பஞ்சராத்திர சாத்திரங்களை அறிந்தவர்களும், அதில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நோற்பவர்களும், முழு ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்பு கொண்டோரும் நாராயணனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள்.(71) சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் நித்தியமானவையாகும். மேலும், ஓ! ஏகாதிபதி, வேதங்கள் அனைத்தும் நித்தியமானவையாகும். இந்த வழிபாட்டு மரபுகள் அனைத்திலும் பழங்காலத்தில் இருந்து நீடித்திருக்கும் இந்த அண்டம் நாராயணனின் சுயமே என்று முனிவர்கள் அறிவிக்கின்றனர்.(72) வேதங்களில் விதிக்கப்பட்டவையும், சொர்க்கத்திற்கும், பூமிக்கும், வானத்திற்கும், நீருக்கும் இடையில் நேரும் நன்மையான அல்லது தீமையான எந்தச் செயலும் புராதன முனிவனான நாராயணனால் செய்யப்பட்டு, அவனிலிருந்தே உண்டாகின்றன" {என்றார் வைசம்பாயனர்}.(73)
சாந்திபர்வம் பகுதி – 350ல் உள்ள சுலோகங்கள் : 73
ஆங்கிலத்தில் | In English |