Mountain Vaijayanta! | Shanti-Parva-Section-351 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 178)
பதிவின் சுருக்கம் : பரமாத்மாவின் மகிமை குறித்துப் பிரம்மனுக்கும் சிவனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, புருஷர்கள் பலரா? அல்லது ஒரே ஒருவரா? அண்டத்தில் புருஷர்களில் முதன்மையாவன் எவன்? அனைத்துப் பொருட்களின் மூல காரணம் எனச் சொல்லப்படுவது எது?" என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சாங்கியம் மற்றும் யோக அமைப்புகளின் ஊகங்களில் பல்வேறு புருஷர்கள் பேசப்படுகிறார்கள். ஓ! குரு குலத்தின் ஆசானே, இவ்வமைப்புகளைப் பின்பற்றுவோர் அண்டத்தில் ஒரே புருஷனே இருக்கிறான் {வேறு எவரும் இல்லை} என்பதை உறுதிப்படுத்த விரும்பவில்லை[1].(2) இதே வகையிலேயே பரம புருஷன் எனும் ஒரே மூலத்தில் இருந்து பல புருஷர்கள் வந்ததாகச் சொல்லப்படுவதில், இந்த மொத்த அண்டமும் மேன்மையான குணங்களைக் கொண்ட அந்த ஒரே புருஷனோடு அடையாளம் காணப்படுவதே என்றும் சொல்லலாம். முனிவர்களில் முதன்மையானவரும், ஆன்மாவைக் குறித்து அறிந்தவரும், தவங்கள், தற்கட்டுப்பாடு மற்றும் மதிக்கத்தக்க வழிபாட்டுக்குத் தகுந்தவரும் என் ஆசானுமான வியாசரை வணங்கி, இப்போது இதைக் குறித்து விளக்கப் போகிறேன்.(3,4)
[1] "உரையாசிரியர் இந்த ஸ்லோகத்தைப் பின்வருமாறு விளக்கியிருக்கிறார். ’சாதாரணக் காரியங்களைப் பொறுத்தவரையில் சாங்கியர்கள் மற்றும் யோகியராகிய இருவரும் பல புருஷர்களைக் குறித்துப் பேசுகின்றனர். எனினும் உண்மையில் உயர்ந்த உண்மையான காரியத்தில் ஒரே புருஷனே இருக்கிறான்’. உரையாசிரியர் சொல்லும் இந்தச் செய்தி அடுத்த ஸ்லோகத்தில் வருகிறது" எனக் கங்குலி விளக்குகிறார்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, புருஷனைக் குறித்த இந்த ஊகம் வேதங்கள் அனைத்திலும் நேர்கிறது. அது ரிதம் மற்றும் வாய்மையுடன் அடையாளம் காணப்படுவதாக நன்கறியப்பட்டிருக்கிறது. முனிவர்களில் முதன்மையான வியாசர் இது குறித்துச் சிந்தித்தார்.(5) ஓ! மன்னா, அத்யாத்மா என்றழைக்கப்படுவதைக் குறித்துச் சிந்திப்பதில் ஈடுபட்டவர்களும், கபிலரைத் தங்களில் முதல்வராகக் கொண்டவர்களுமான பல்வேறு முனிவர்கள், இக்காரியத்தில் பொதுவாகவும், குறிப்பிட்ட வகையிலும் தங்கள் கருத்துகளை அறிவித்திருக்கின்றனர்.(6) அளவிலா சக்தி கொண்ட வியாசரின் அருளின் மூலம், புருஷனின் ஒருமையைக் குறித்த கேள்வியை விளக்க வியாசர் சொன்னதை விவரிக்கப் போகிறேன்.(7) ஓ! மன்னா, இது தொடர்பாகப் பிரம்மனுக்கும், முக்கண் மஹாதேவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) ஓ! ஏகாதிபதி, பாற்கடலுக்கு மத்தியில் வைஜயந்தம் என்ற பெயரில் தங்கத்தைப் போன்ற பெரும் பிரகாசமுடைய மலை ஒன்று இருக்கிறது.(9) சிறப்புமிக்கவனான பிரம்ம தேவன் பெருங்காந்தியும், இன்பநிலையையும் கொண்ட தன் வசிப்பிடத்தில் இருந்து தனியாக அங்கே சென்று அத்யாத்ம நடைமுறை குறித்துச் சிந்திப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(10)
பெரும் நுண்ணறிவைக் கொண்ட நான்முகப் பிரம்மன் அங்கே அமர்ந்திருக்கையில், ஒருநாள் அவனது {பிரம்மனது} நெற்றியில் இருந்து பிறந்தவனும், அவனுடைய மகனுமான மஹாதேவன் அண்டத்தில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைச் சந்தித்தான்.(11) பலமிக்கவனும், உயர்ந்த யோகத்தைக் கொண்டவனுமான முக்கண்ணனான சிவன், பழங்காலத்தில் வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்தபோது, அந்த மலையில் அமர்ந்திருக்கும் பிரம்மனைக் கண்டதால் அதனுச்சியில் விரைவாக இறங்கினான்.(12) தன் மூதாதையின் முன் உற்சாகமிக்க இதயத்துடன் சென்று அவனது பாதங்களை வழிபட்டான். மஹாதேவன் தன் பாதத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்ததைக் கண்ட பிரம்மன், அவனைத் தன் இடது கையால் உயர்த்தினான்.(13) பலமிக்கவனும், அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே தலைவனுமான பிரம்மன் இவ்வாறு மஹாதேவனை உயர்த்தி, நீண்ட காலம் கழித்துக் கண்ட தன் மகனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(14)
பெரும்பாட்டன் {பிரம்மன் சிவனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உனக்கு நல்வரவு. நற்பேற்றாலேயே நீண்ட நாள் கழித்து என் முன்னிலையில் உன்னைக் காண்கிறேன். ஓ! மகனே, உன் தவங்கள், வேத கல்வி மற்றும் பாராயணம் ஆகியவை அனைத்தும் சரியாக நடைபெறுகின்றன என நம்புகிறேன். நீ எப்போதும் கடும் தவங்களைச் செய்பவன். எனவேதான் நான் உன் தவங்களின் முன்னேற்றம் மற்றும் நன்னிலை குறித்து உன்னிடம் கேட்கிறேன்" என்றான்.(15,16)
ருத்திரன் {தன் தந்தையான பிரம்மனிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, உமது அருளால் வேதகல்வி மற்றும் என் தவங்கள் அனைத்தும் நன்றாக நடைபெறுகின்றன. மேலும் அண்டமும் நன்றாகவே இருக்கிறது.(17) சிறப்புமிக்கவரான உம்மை நீண்ட காலத்திற்கு முன்பு இன்பமும், பிரகாசமும் நிறைந்த உமது இல்லத்தில் கண்டேன். இப்போது உமது பாதத்தின் வசிப்பிடமாக இருக்கும் இந்த மலைக்கு வந்திருக்கிறேன்.(18) இன்பமும், காந்தியும் நிறைந்த உமது வழக்கமான இடத்தைவிட்டு இத்தகைய ஒரு தனிமையான இடத்திற்கு நீர் வந்திருப்பது என் மனத்தில் பெரும் ஆவலைத் தூண்டுகிறது. ஓ! பெரும்பாட்டா, நீர் இவ்வாறு செயல்படுவதற்குப் பெருங்காரணம் இருக்க வேண்டும்.(19) வசிப்பிடங்களில் முதன்மையான உமது வசிப்பிட, பசி மற்றும் தாகமெனும் துன்பங்களில் இருந்து விடுபட்டதாகவும், தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவராலும், அளவிலா காந்தி கொண்ட முனிவர்களாலும், கந்தர்வார்களாலும், அப்சரஸ்களாலும் வசிக்கப்படுவதாகவும் இருக்கிறது. அத்தகைய இன்பமான இடத்தைக் கைவிட்டு, இந்த முதன்மையான மலையில் தனிமையில் வசிக்கிறீர். இதற்கான காரணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல் இருக்காது" என்றான்.(21)
பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, "மலைகளில் முதன்மையான இந்த வைஜயந்த மலையே எப்போதும் என் வசிப்பிடமாகும். இங்கே குவிந்த மனத்துடன் முடிவிலா அளவுகளுடன் கூடிய அண்டத்தின் ஒரே புருஷனைத் தியானிக்கிறேன்" என்றான்.(22)
ருத்திரன் {தன் தந்தையான பிரம்மனிடம்}, "நீர் சுயம்பு ஆவீர். உம்மால் படைக்கப்பட்ட புருஷர்கள் பலர் இருக்கிறார்கள். ஓ! பிரம்மாவே, மேலும் பிறரும் உம்மால் படைக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் நீர் சொல்லும் இந்த முடிவிலா புருஷனை தனித்தவனாகவும், ஒருவனாகவும் சொல்கிறீர்.(23) ஓ! பிரம்மாவே, உம்மால் தியானிக்கப்படும் முதன்மையான புருஷன் யார்? இதில் நான் பேராவல் அடைகிறேன். என் மனத்தைப் பீடித்திருக்கும் இந்த ஐயத்தை நீர் கருணையுடன் விலக்குவீராக" என்றான்.(24)
பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, "ஓ! மகனே, நீ சொல்லும் புருஷர்கள் பலர் இருக்கிறார்கள். எனினும், புருஷர்கள் அனைவரையும் விஞ்சியிருப்பவனும், புலப்படாதவனுமான ஒரே புருஷனைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.(25) அண்டத்தில் நீடித்திருக்கும் பல புருஷர்கள் இந்த ஒரே புருஷன் எனும் அடித்தளத்திலேயே அமைந்திருக்கின்றனர்; இந்த ஒரே புருஷன் என்ற மூலத்தில் இருந்தே எண்ணிலடங்கா புருஷர்கள் பிறந்தனர் என்று சொல்லப்படுகிறது,(26) எனவே, அவர்கள் அனைவரும் குணங்களை இழப்பதில் வென்றால், அண்டத்தோடு அடையாளம் காணப்படுபவனும், உயர்ந்தவனும் {பரமனும்}, முதன்மையிலும் முதன்மையானவனும், நித்தியமானவனும், மேற்கண்ட அனைத்து குணங்களும் இல்லாதவனுமான அந்த ஒரே புருஷனுக்குள் நுழையத் தகுந்தவர்கள் ஆவார்கள்" என்றான்.(27)
சாந்திபர்வம் பகுதி – 351ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |