Mahapurusha! | Shanti-Parva-Section-352 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 179)
பதிவின் சுருக்கம் : பரமாத்மாவின் மகிமை குறித்துப் பிரம்மனுக்கும் சிவனுக்கும் இடையில் நடந்த உரையாடலின் தொடர்ச்சி...
பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, "ஓ! மகனே, அந்தப் புருஷன் எவ்வாறு குறிப்பிடப்படுகிறான் என்பதைக் கேட்பாயாக. அவன் நித்தியமானவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கிறான். அவன் சிதைவற்றவனாகவும், அளவிடமுடியாதவனாகவும் இருக்கிறான். அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்[1].(1) ஓ! அனைத்து உயிரினங்களிலும் சிறந்தவனே, அந்தப் புருஷனை உன்னாலோ, என்னாலோ, பிறராலோ காண முடியாது. புத்தியையும், புலன்களையும் கொண்டிருந்தாலும், தற்கட்டுப்பாடும், ஆன்ம அமைதியும் இல்லாது இருப்பவர்களால் ஒருபோதும் அவனைக் காண முடியாது. பரமபுருஷன் ஞானத்தின் துணையால் மட்டுமே காணப்படக்கூடியவனாகச் சொல்லப்படுகிறது.(2) உடலற்றவனாக இருந்தாலும் அவன் அனைத்து உடல்களிலும் வசிக்கிறான். உடல்களில் வசித்தாலும் அவன் அவ்வுடல்களால் செய்யப்படும் செயல்களால் ஒருபோதும் தீண்டப்படாதவனாக இருக்கிறான்.(3) அவன் உடல்கொண்ட அனைத்து உயிரினங்களுக்குள்ளும் அனைத்தையும் காணும் சாட்சியாக வசித்து அவற்றின் செயல்களைக் குறித்துக் கொள்வதில் ஈடுபடுகிறான். எப்போதும் எவராலும் அவனைப் புரிந்து கொள்ள முடியாது.(4)
[1] "அவன் நித்தியமானவனாகவும், தொடக்கமோ முடிவோ இல்லாதவனாகவும், மாறும் இயல்பற்றவனாகவும், எந்த மாற்றமும் இல்லாதவனாகவும், சிதைவற்றவனாகவும், அழிவுக்கு உட்படும் எந்த உடலும் இல்லாதவனாகவும், அளவிலாதவனாகவும் இருப்பதாலும், அவனது முழுமையை மனத்தால் உணர முடியாததாலும் அவன் புருஷன் என்றழைக்கப்படுகிறான். இந்த ஸ்லோகத்திலுள்ள சொற்களின் பொருட்களை உரையாசிரியர் இவ்வாறே விளக்குகிறார்". எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இந்தப் புருஷர் சாஸ்வதரும், அழிவற்றவரும், குறைவற்றவரும், அறியமுடியாதவரும், எல்லாவற்றையும் அடைந்தவருமாகச் சொல்லப்படுகிறார். குணங்களோடு கூடின உம்மாலும், என்னாலும், மற்றவர்களாலும் பார்க்க முடியாதவர்" என்றிருக்கிறது.
இந்த அண்டமானது அவனது தலையின் மகுடமாகும். அண்டமானது அவனது கரங்கள் ஆகும், அண்டமானது அவனது பாதமாகும். அண்டமானது அவனது கண்களாகும். அண்டமானது அவனது மூக்காகும். தனியொருவனாக க்ஷேத்திரங்கள் {உடல்கள்} அனைத்திலும் தன் விருப்பப்படி வரையறைகளின்றிச் சுகமாக உலவுகிறான்.(5) க்ஷேத்திரம் என்பது உடலுக்கான மற்றொரு பெயராகும். யோகத்தின் ஆன்மாவான அவன், க்ஷேத்திரங்கள அனைத்தையும், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் அறிந்திருப்பதால், க்ஷேத்ரஜ்ஞன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்[2].(6) உடல் கொண்ட உயிரினங்களுக்குள் அவன் எவ்வாறு நுழைகிறான், அவற்றை விட்டு எவ்வாறு வெளியேறுகிறான் என்பதை உணர்வதில் ஒருவரும் வெல்வதில்லை. சாங்கிய முறைக்கு ஏற்புடைய வகையிலும், யோகத்தின் துணை மூலமும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளை முறையாகச் செய்வதன் மூலமும், அந்தப் புருஷனுக்கான காரணத்தைக் குறித்துச் சிந்திப்பதில் நான் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அந்தச் சிறந்த காரணத்தால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும், நான் கொண்டிருக்கும் ஞானத்தின் அளவுக்கு ஏற்ப அந்த நித்திய புருஷனையும், அவனது ஒருமையையும், உயர்ந்த மகிமையையும் உனக்குச் சொல்கிறேன்.(7,8)
[2] "செயல்கள் வித்துகள் என்றழைக்கப்படுகின்றன. வித்துகள் மரங்களைப் படைக்கின்றன. செயல்கள் உடல்களை அடைவதற்கு வழிவகுக்கின்றன. எனவே உடல்களை உண்டாக்க செயல்கள் வித்துக்களைப் போலச் செயல்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கல்விமான்கள் ஒரே புருஷன் என்றே அவனைக் குறித்துச் சொல்கிறார்கள். இருப்பில் நித்தியமாக இருக்கும் அவன், மஹாபுருஷன் (பெரியவனும், உயர்ந்தவனுமான புருஷன்) என்ற குறிச்சொல்லுக்குத் தகுந்தவனாவான்.(9) நெருப்பு ஒரு பூதமாக இருந்தாலும், ஆயிரம் பல்வேறு சூழ்நிலைகளில் ஆயிரம் இடங்களில் அது சுடர்விட்டு எரிவது காணப்படுகிறது. ஒரே ஒரு சூரியனாக இருந்தாலும், அவனது கதிர்கள் பரந்த அண்டம் முழுதும் விரிந்திருக்கின்றன. பல்வேறு வகைகளில் தவங்கள் இருந்தாலும், அவை உண்டான ஒரே பொதுவான மூலத்தைக் கொண்டிருக்கின்றன. ஒரே காற்றாக இருந்தாலும், அஃது உலகில் பல்வேறு வடிவங்களில் வீசுகிறது. ஒரே பெருங்கடலானது, உலகில் பல்வேறு சூழ்நிலைகளில் காணப்படும் நீர்நிலைகள் அனைத்தின் தோற்றுவாயாக இருக்கிறது. குணங்கள் அற்றவனான அந்தப் புருஷனே எல்லையற்ற வெளியாக வெளிப்படும் அண்டமாக இருக்கிறான். அவனிடம் இருந்து உண்டான எல்லையற்ற அண்டமானது, அழிவுக்காகக் காலம் நேரும்போது, குணங்கள் அனைத்தையும் கடந்திருக்கும் அந்த ஒரே புருஷனுக்குள்ளேயே நுழைகிறது.(10)
உடல் மற்றும் புலன்களின் நனவுநிலையைக் கைவிடுவதன் மூலமும், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் கைவிடுவதன் மூலமும், வாய்மை மற்றும் பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடுவதன் மூலமும் ஒருவன் தன்னிடமுள்ள குணங்களைக் கைவிடுவதில் வெல்கிறான்.(11) புலப்படாத புருஷனை உணர்ந்து கொண்டு, அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன் மற்றும் வாசுதேன் என்ற நான்கு வடிவங்களின் நுட்பமான இருப்பைப் புரிந்து கொள்பவனுமான ஒருவன், அத்தகைய புரிதலின் விளைவால் இதயத்தில் முற்றான அமைதிநிலையை அடைந்து, அந்த ஒரே மங்கலப் புருஷனுக்குள் நுழைவதிலும், அவனோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலும் வெல்கிறான்.(12)
கல்விமான்களான சிலர் அவனையே பரமாத்மா என்று சொல்கின்றனர்.
வேறு சிலர் அவனை ஒரே ஆத்மாவாக {ஏகாத்மாவாகக்} கருதுகிறார்கள்.
மூன்றாம் வகைக் கல்விமான்கள் அவனையே ஆன்மாவாக விளக்குகிறார்கள்[3].(13)
உண்மை என்னவென்றால், பரமாத்மாவானவன் எப்போதும் குணங்களற்றவனாக இருக்கிறான் என்பதாகும். அவனே நாராயணன். அவனே அண்டத்தின் ஆன்மாவும், அவனே ஒரே புருஷனும் ஆகிறான். நீரில் வீசப்பட்டாலும் அதனால் ஒருபோதும் நனையாத தாமரை இலையைப் போலவே, செயல்களின் கனிகளால் அவன் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.(14) செயல்படும் ஆன்மா வேறு வகையானது. அந்த ஆன்மா சில நேரங்களில் செயல்களில் ஈடுபடுகிறது. அது செயல்களைக் கைவிடுவதில் வெல்லும்போது, விடுதலையை, அல்லது பரமாத்மாவோடு அடையாளங்காணப்படும் தன்மையை அடைகிறது.(15) செயல்படும் ஆன்மாவானது பதினேழு உடைமைகளைக் கொண்டிருக்கிறது[4]. எனவே, முறையான வரிசையில் எண்ணற்ற வகைப் புருஷர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(16)
வேறு சிலர் அவனை ஒரே ஆத்மாவாக {ஏகாத்மாவாகக்} கருதுகிறார்கள்.
மூன்றாம் வகைக் கல்விமான்கள் அவனையே ஆன்மாவாக விளக்குகிறார்கள்[3].(13)
உண்மை என்னவென்றால், பரமாத்மாவானவன் எப்போதும் குணங்களற்றவனாக இருக்கிறான் என்பதாகும். அவனே நாராயணன். அவனே அண்டத்தின் ஆன்மாவும், அவனே ஒரே புருஷனும் ஆகிறான். நீரில் வீசப்பட்டாலும் அதனால் ஒருபோதும் நனையாத தாமரை இலையைப் போலவே, செயல்களின் கனிகளால் அவன் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.(14) செயல்படும் ஆன்மா வேறு வகையானது. அந்த ஆன்மா சில நேரங்களில் செயல்களில் ஈடுபடுகிறது. அது செயல்களைக் கைவிடுவதில் வெல்லும்போது, விடுதலையை, அல்லது பரமாத்மாவோடு அடையாளங்காணப்படும் தன்மையை அடைகிறது.(15) செயல்படும் ஆன்மாவானது பதினேழு உடைமைகளைக் கொண்டிருக்கிறது[4]. எனவே, முறையான வரிசையில் எண்ணற்ற வகைப் புருஷர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(16)
[3] "இந்த ஸ்லோகத்தின் பொருள் இவ்வாறே இருக்க வேண்டும். யோகிகள் ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டு ஆன்மாக்களின் இருப்பையும், பரமாத்மாவின் மேன்மையையும் உறுதி செய்வதால், யோக அமைப்பில் அவன் {புருஷனே} பரமாத்மா என்றழைக்கப்படுகிறான். சாங்கியர்கள் ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் ஒன்றாகவே கருதுகிறார்கள். மூன்றாம் வகை மனிதர்கள், ஓர் ஆத்மாவுக்கும், எல்லையற்ற வெளிப்படும் அண்டத்துக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் தங்களால் காணமுடியாததால் அனைத்தையும் ஆன்மாவாகவே நினைக்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "செயல்படும் ஆத்மாவானது லிங்க சரீரத்திற்குள் பதுங்கியிருக்கிறது. அதைக் கொண்டே இப்போது மனிதனாகவும், அப்போது தேவனாகவும், வேறு எப்போதும் விலங்கு உள்ளிட்ட வேறு நிலைகளையும் அந்த ஆத்மா அடைகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "பதினேழு தத்வங்களின் கூட்டமான லிங்க சரீரம்" என்றிருக்கிறது.
எனினும், உண்மையில் ஒரேயொரு புருஷனே இருக்கிறான். அண்டத்தைப் பொறுத்தவரையில் அவனே விதிமுறைகள் அனைத்தின் வசிப்பிடமாவான். அவனே ஞானத்தின் உயர்ந்த பொருளாவான். அவனே, அறிபவனாகவும், அறியப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே சிந்திப்பவனாகவும், சிந்திக்கப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே உண்பவனாகவும், உண்ணப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே நுகர்பவனாகவும், நுகரப்படும் மணமாகவும் இருக்கிறான். அவனே தீண்டுபவனாகவும், தீண்டப்படும் பொருளாகவும் இருக்கிறான்.(17) அவனே காண்பவனாகவும், காணப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே கேட்பவனாகவும், கேட்கப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே கருத்தில் கொள்பவனாகவும், கருதுபொருளாகவும் இருக்கிறான். அவனே குணங்களைக் கொண்டவனாகவும், அவற்றில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான். ஓ! மகனே, அவனே நீடித்திருப்பதும், நித்தியமானதும், மாறாததுமான பிரதானம் என்ற பெயரில் இருகிறான்.(18) தாத்ரியைப் பொறுத்தவரையில் ஆதி விதியைப் படைப்பவன் அவனே. கல்விமான்களான பிராமணர்கள் அவனை அநிருத்தன் என்ற பெயரில் அழைக்கிறார்கள். வேதங்களில் இருந்து உண்டானவையும், சிறந்த தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டவையும், அருள் நிறைந்தவையுமான செயல்கள் அனைத்தும் அவனாலேயே உண்டாகின்றன.(19)
அமைதிமிக்க ஆன்மாக்களைக் கொண்ட தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும், வேள்விப்பீடங்களில் தங்கள் இடங்களை அடைந்து, தங்கள் வேள்விக் காணிக்கைகளின் முதல் பங்கை அவனுக்கே அளிக்கின்றனர்[5].(20) அனைத்து உயிர்களின் ஆசானாகிய பிரம்மனான நான், அவனிலிருந்தே பிறப்பை அடைந்தேன், நீயோ {சிவனாகிய நீயோ} என்னில் இருந்து பிறப்பை அடைந்தாய். ஓ! மகனே {சிவனே}, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் கொண்ட அண்டமும், புதிர்களுடன் கூடிய வேதங்கள் அனைத்தும் என்னில் இருந்து உண்டாகின.(21) நான்கு பிரிவுகளாகப் பிரிந்து அவன் விரும்பும் வகையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். இத்தகைய சிறப்புமிக்க தெய்வீகத் தலைவனும் கூட, தன் சொந்த ஞானத்தாலேயே விழிப்படைகிறான்.(22) ஓ! மகனே {சிவனே}, நீ கேட்ட கேள்விகளின்படியும், சாங்கிய அமைப்பு மற்றும் யோக தத்துவம் ஆகியவற்றில் இக்காரியம் விளக்கப்பட்டிருக்கும் வழியின்படியும் இவ்வாறே நான் உனக்குப் பதிலளித்தேன்" என்றான் {பிரம்மன்}.(23)
[5] "பிராக்வம்சம் என்பது வேள்விப்பீடத்தின் ஒரு பகுதியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எல்லாத் தேவர்களும், மிகவும் அடக்கமுடிய முனிவர்களும் பிராக்வம்சம் என்கிற ஸ்தானத்தில் யஜ்ஞபாகத்திற்குரிய அவரை உபாஸிக்கிறார்கள்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 352ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |