Which is the superior mode of life! | Shanti-Parva-Section-353 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 180)
பதிவின் சுருக்கம் : மேன்மையான ஆசிரமம் குறித்து பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; இந்திரனுக்குக் கதை சொல்லத் தொடங்கிய நாரதர்...
சௌதி {சௌனகரிடம்}, "வைசம்பாயனர், நாராயணனின் மகிமையை ஜனமேஜயனுக்கு இவ்வகையில் விளக்கிய பிறகு அவர், மற்றொரு காரியம் குறித்து யுதிஷ்டிரன் கேட்ட கேள்வியையும், கிருஷ்ணன், முனிவர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் முன்னிலையிலும் பீஷ்மர் அவற்றுக்கு அளித்த பதில்களையும் சொல்லத் தொடங்கினார். உண்மையில் வைசம்பாயனர் பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்[1].
[1] "இந்தப் பகுதி அனைத்து உரைகளிலும் தென்படவில்லை. விளக்கத் தொடர்பு இருப்பதால் இதைச் சேர்ப்பதே தகும் என நான் நிறைக்கிறேன். பல உரைகள் யுதிஷ்டிரன் சொன்னான் என்றே தொடங்குகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, ஓ! பாட்டா, முக்தி அறம் தொடர்புடைய கடமைகள் குறித்து நீர் எங்களுக்குச் சொன்னீர். இப்போது பல்வேறு வாழ்வுமுறைகளைப் பின்பற்றும் மக்களுக்கான முதன்மையான கடமைகளை எங்களுக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்[2].(1)
[2] "இந்தக் கேள்விக்கான நோக்கம் வாழ்வுமுறைகள் அனைத்திலும் எது முதன்மையானது என்பதை உறுதிப்படுத்துவதே ஆகும். அனைத்து வகை வாழ்வுமுறைகளைவிடவும் துறவே சிறந்ததாக விளக்கப்பட்டாலும் நடைமுறையில் அதன் கடமைகளைப் பின்பற்றுவது மிகக் கடினமானதாகும். எனவே, வேறு எந்த வாழ்வுமுறையின் கடமைகளாவது மேன்மையானதாகக் கருதப்படக்கூடும் என யுதிஷ்டிரன் விரும்புகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒவ்வொரு வாழ்வுமுறையைப் பொறுத்தவரையிலும் அவற்றில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நன்கு நடைமுறைப்படுத்தினால் அவை சொர்க்கத்திற்கும், வாய்மையின் உயர்ந்த கனிக்கும் {முக்திக்கும்} வழிவகுக்கவல்லவையே. கடமைகள் பல வாயில்களைக் கொண்டவையாகும். அவற்றால் கற்பிக்கப்படும் நடைமுறைகள் எதுவும் விளைவுகளைப் பொறுத்தவரையில் பயனற்றுப் போனதில்லை.(2)
ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நிலையான மற்றும் உறுதியான நம்பிக்கையுடன் எந்தக் கடமைகளையும் பின்பற்றும் எவனும், தன்னால் பின்பற்றப்படும் கடமைகளைப் புகழ்ந்து, எஞ்சியவற்றைத் தவிர்க்கிறான்.(3)
எனினும், நான் சொல்ல வேண்டும் என நீ விரும்பும் இந்தக் குறிப்பிட்ட காரியம் பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதருக்கும், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலின் பொருளாக இருந்தது.(4)
ஓ! மன்னா, உலகங்கள் அனைத்தினாலும் மதிக்கப்படும் பெரும் முனிவரான நாரதர், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராவார். அவர், நீக்கமற நிறைந்திருக்கும் காற்றைப் போல, எதனாலும் தடுக்கப்பட முடியாதவராக உலகங்கள் அனைத்திலும் திரிந்து கொண்டிருக்கிறார்.(5)
ஒரு காலத்தில் அவர் இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார். தேவர்களின் தலைவனால் முறையாகக் கௌரவரிக்கப்பட்ட அவர், அவனது அருகில் அமர்ந்தார்.(6)
அவர் களைப்பு நீங்கி சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட சச்சியின் தலைவன் {இந்திரன்}, அவரிடம் {நாரதரிடம்}, "ஓ! பெரும் முனிவரே, ஓ! பாவமற்றவரே, ஏதாவது ஆச்சரியம் நிறைந்ததை நீர் கண்டீரா?(7) ஓ! மறுபிறப்பாள முனிவரே, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட நீர், அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய அண்டத்தின் ஊடாக அனைத்தையும் சாட்சியாகக் கண்டபடி ஆவலுடன் திரிந்து வருகிறீர்.(8) ஓ! தெய்வீக முனிவரே, இந்த அண்டத்தில் நீர் அறியாதது ஏதுமில்லை. எனவே, நீர் கண்ட, அல்லது கேட்ட, அல்லது உணர்ந்த ஆச்சரியமான நிகழ்வு எதையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(9)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பேசுபவர்களில் முதன்மையான நாரதர் இவ்வாறு கேட்கப்பட்டதும், பின்வரும் பெரிய வரலாற்றை அந்தத் தேவர்களின் தலைவனுக்குச் சொல்லத் தொடங்கினார்.(10)
நாரதர் தம் கருத்தில் கொண்டிருந்த அதே நோக்கத்திற்காகவே, இந்திரனிடம் அவர் சொன்ன அந்தக் கதையை நான் இப்போது சொல்லப் போகிறேன்; கேட்பாயாக" என்றார் {பீஷ்மர்}.(11)
சாந்திபர்வம் பகுதி – 353ல் உள்ள சுலோகங்கள் : 11
ஆங்கிலத்தில் | In English |