Three kinds of duty! | Shanti-Parva-Section-354 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 181)
பதிவின் சுருக்கம் : ஒரு பிராமணரின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; மூவகை கடமைகளைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த பிராமணர்; அந்தப் பிராமணரின் இல்லத்திற்கு விருந்தினராக வந்த மற்றொரு பிராமணர்...
{இந்திரனிடம் நாரதர் சொல்வதாக} பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மனிதர்களில் சிறந்தவனே, கங்கையாற்றின் தென்கரையில் அமைந்திருந்ததும், மஹாபத்மம் என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான ஒரு சிறந்த நகரத்தில் குவிந்த ஆன்மாவுடன் கூடிய ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்.(1)
அத்ரி குலத்தில் பிறந்த அவர் இனிமையானவனாக இருந்தார். (நம்பிக்கையாலும், தியானத்தாலும்) ஐயங்கள் அனைத்தையும் விலக்கிய அவர், தாம் பின்பற்றும் பாதையை நன்கறிந்தவராக இருந்தார். அறக்கடமைகளை எப்போதும் நோற்பவரான அவர், தமது கோபத்தை முற்றான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். எப்போதும் மனம் நிறைந்திருந்த அவர், தமது புலன்களை முழுமையாக ஆள்பவராக இருந்தார்.(2)
தவங்கள் மற்றும் வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த அவர், நல்ல மனிதர்கள் அனைவராலும் மதிக்கப்பட்டார். அறவழிகளின் மூலம் செல்வமீட்டிய அவரது ஒழுக்கமானது, அனைத்து பொருட்களிலும் அவர் சார்ந்ததும், அவர் பின்பற்றுவதுமான வாழ்வுமுறைக்குத் தொடர்புடையதாக இருந்தது.(3)
அவரது குடும்பம் மிகப் பெரியதாகவும், கொண்டாடப்படுவதாகவும் இருந்தது. அவருக்கு உற்றார், உறவினர், பிள்ளைகள், மனைவிகள் எனப் பலர் இருந்தனர். அவரது ஒழுக்கம் எப்போதும் மதிக்கத்தக்கதாகவும், களங்கமற்றதாகவும் இருந்தது.(4)
தாம் பல பிள்ளைகளைப் பெற்றிருப்பதைக் கண்ட அந்தப் பிராமணர், பெரிய அளவிலான அறச்செயல்களைச் செய்து வந்தார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவரது அற நோன்புகள், அவரது குடும்ப வழக்கங்கள் தொடர்புடையவையாகவே இருந்தன[1].(5)
[1] "குடும்ப வழக்கங்கள் எப்போதும் பெருங்கவனத்துடன் பின்பற்றப்பட்டு வந்தன. சாத்திர விதிகளுக்குப் பொருத்தமற்றவையாக இருப்பினும், இத்தகைய வழக்கங்கள் தங்கள் சக்தியை இழக்கவில்லை. மகளையோ, தங்கையையோ விற்பது கண்டிக்கத்தக்கது என்றாலும், பெரும் மன்னனான சல்லியன், தன் தங்கையைப் பாண்டுவுக்கு அளித்தபோது, தன் குடும்ப வழக்கமாக அதற்குப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டான். இந்த நாள் வரை வைஷ்ண நம்பிக்கையைப் பின்பற்றும் பல குடும்பங்களின் வேள்விகளில் விலங்குகள் கொல்லப்படுகின்றன. அதற்குக் குடும்ப வழக்கமே காரணமாகச் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மூன்று வகைக் கடைமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று அந்தப் பிராமணர் சிந்தித்தார். ’தாம் பிறந்த வகைக்கெனவும் {வர்ணத்துக்கெனவும்}, தாம் பின்பற்றும் (இல்லறம் நோற்கும் ஒரு பிராமணனின்) வாழ்வுமுறைக்கெனவும் {ஆசிரமத்திற்கெனவும்} வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் முதல்வகை. தர்ம சாஸ்திரங்கள் என்றழைக்கப்படும் குறிப்பிட்ட சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகள் இரண்டாம் வகை. வேதங்களிலும், சாத்திரங்களிலும் இல்லாவிட்டாலும் பழங்காலத்தில் இருந்து மதிப்புமிக்க, திறன்மிக்க மனிதர்களால் பின்பற்றப்படும் கடமைகள் மூன்றாம் வகை’ {எனச் சிந்திதார்}.(6)
"இதில் எந்தெந்த கடமைகளை நான் பின்பற்ற வேண்டும்? நான் பின்பற்றப்போகும் எந்தெந்த கடமைகள் எனக்கான நன்மைக்கு வழிவகுக்கும்? உண்மையில் எது என் புகலிடமாக இருக்க வேண்டும்?" என்பது போன்ற சிந்தனைகள் அவரை {அந்தப் பிராமணரைக்} கலங்கடித்தன. அவரால் தமது ஐயங்களுக்கு விடைகாண முடியவில்லை.(7)
இத்தகைய சிந்தனைகளால் கலக்கமடைந்திருந்த அந்த வேளையில், குவிந்த ஆன்மாவைக் கொண்டவரும், மிக மேன்மையான ஓர் அறத்தைப் பின்பற்றுபவருமான ஒரு பிராமணர் அவரது இல்லத்திற்கு விருந்தினராக வந்தார்.(8)
அந்த இல்லறத்தான் {முதல் பிராமணர்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வழிபாட்டு விதிகளின் படி தமது விருந்தினரை முறையாகக் கௌரவித்தார். தமது விருந்தினர் புத்துணர்வடைந்ததையும், சுகமாக அமர்ந்திருப்பதையும் கண்ட அந்த விருந்தோம்பி {முதல் பிராமணர்}, அவரிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார்" என்றார் {பீஷ்மர்}.(9)
சாந்திபர்வம் பகுதி – 354ல் உள்ள சுலோகங்கள் : 9
ஆங்கிலத்தில் | In English |