The doors to heaven! | Shanti-Parva-Section-355 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 182)
பதிவின் சுருக்கம் : பிராமணர் தன் விருந்தினரிடம் முக்திக்கான வழிமுறை குறித்துக் கேட்டது; தமக்கும் அதில் ஐயமிருப்பதாக விருந்தினர் சொன்னது...
பிராமணர் {தன் இல்லத்திற்கு விருந்தினராக வந்த பிராமணரிடம்}, "ஓ! பாவமற்றவரே, உமது இனிய உரையாடலின் விளைவால் நான் உம்மிடம் மிகுந்த பற்றைக் கொண்டிருக்கிறேன். நீர் என் நண்பராகிவிட்டீர். நான் உம்மிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன்; கேட்பீராக.(1) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, ஓர் இல்லறத்தானாக {கிருஹஸ்தாஸ்ரமத்தைச் சேர்ந்தவனாக} என் மகனிடம் கடமைகளை ஒப்படைத்துவிட்டு, மனிதனின் உயர்ந்த கடமைகளைச் செய்ய விரும்புகிறேன். ஓ! மறுபிறப்பாளரே, என் பாதை எதுவாக இருக்க வேண்டும்?(2) ஆன்மாவைச் சார்ந்திருந்து ஒரே ஆன்மாவின் இருப்பை அடைய விரும்புகிறேன். ஐயோ, பற்றுகளில் கட்டப்பட்டிருக்கும் என்னால் அந்தப் பணியை நிறைவேற்றுவதில் என்னை நிறுவிக் கொள்ளும் இதயம் உண்மையில் வாய்க்கவில்லை[1].(3) இல்லற நோற்பில் என் வாழ்வின் சிறந்த பகுதி கடந்து விட்டதால், வரப்போகும் காலத்தில் எஞ்சியுள்ள என் வாழ்நாளில் என் {வாழ்வெனும்} பயணத்திற்கான செலவுகளைக் கொடுப்பதற்கான {பரலோகம் செல்வதற்கான} வழிமுறைகளை ஈட்ட விரும்புகிறேன்.(4) உலகமெனும் பெருங்கடலைக கடக்கும் விருப்பம் என் மனத்தில் எழுந்துள்ளது. ஐயோ, (என் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும்) அறமெனும் தெப்பத்தை எப்போது அடையப் போகிறேன்?(5) தேவர்களே கூடத் தங்கள் செயல்களின் கனிகளைப் பொறுத்துக் கொள்ளவும், தண்டிக்கப்படவும் செய்கிறார்கள் என்பதைக் கேட்டும், அனைத்து உயிரினங்களின் தலைக்கு மேலும் யமனின் கொடிக்கம்ப வரிசைகளையும், பறக்கும் கொடிகளையும் கண்டும்,(6) நான் சந்திக்கும் இன்பத்திற்குரிய பல்வேறு பொருட்களில் என் இதயம் இன்பத்தை அடையத் தவறுகிறது. பிச்சையெடுத்துத் திரிந்து கிடைக்கும் பிச்சையில் தங்கள் வாழ்வாதாரத்தைச் சார்ந்திருக்கும் யதிகளைக் கண்டு, யதிகளின் அறத்தில் எனக்கு மதிப்பேதும் உண்டாகவில்லை. ஓ! மதிப்புமிக்க விருந்தினரே, புத்தியின் மற்றும் காரணத்தின் அடிப்படையிலான அறத்தின் துணை கொண்டு, குறிப்பிட்ட கடமைகளின் நடைமுறையில் {அறத்தில்} என்னை நீர் நிறுவுவீராக" என்றார் {முதல் பிராமணர்}".(7)
[1] "ஜீவாத்மா பரமாத்மாவில் கலப்பதைச் சொல்கிறார். அதாவது பரமாத்மாவில் என் ஜீவனைக் கலக்க முயற்சிக்கிறேன் என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நான் ஆத்மாவையடைந்து ஒருவனாக ஆத்மாவிலிருப்பைப் பார்க்க விரும்புகிறவானயிருந்தும் சாதாரணமான குணங்களாலே கட்டப்பட்டு அதைப் பார்க்கவில்லை" என்றிருக்கிறது.
பீஷ்மர் தொடர்ந்தார், "பெரும் ஞானத்தைக் கொண்ட அந்த விருந்தினர், அறம் சார்ந்த தம் விருந்தினரின் இந்தப் பேச்சைக் கேட்டு, இனிமையானதும், மென்மையானதும் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(8)
அந்த விருந்தினர் {இரண்டாம் பிராமணர்}, "இக்காரியம் குறித்து நானும் குழப்பத்திலேயே இருக்கிறேன். இதே எண்ணமே என் மனத்திலும் இருக்கிறது. இதில் ஒரு நிச்சயமான தீர்மானத்தை என்னால் அடையமுடியவில்லை. சொர்க்கத்திற்குப் பல கதவுகள் இருக்கின்றன.(9) விடுதலையை {முக்தியை} மெச்சும் சிலர் இருக்கிறார்கள். சில மறுபிறப்பாளர்கள், வேள்விகளைச் செய்வதால் கிட்டும் கனிகளைப் புகழ்கின்றனர். சிலர் காட்டு வாழ்க்கைமுறையை {வானப்ரஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுகின்றனர். மேலும் சிலர் இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுகின்றனர்.(10) சிலர், மன்னர்களின் கடமைகளை நோற்பதால் அடையப்படும் தகுதிகளை {புண்ணியங்களைச்} சார்ந்திருக்கின்றனர். சிலர் ஆன்மக் கட்டுப்பாடு எனும் பண்பாட்டில் விளையும் கனிகளைச் சார்ந்திருக்கின்றனர். ஆசான்கள் மற்றும் பெரியோர்களுக்குக் கடமையுணர்வுடன் கீழ்ப்படிவதால் விளையும் தகுதிகள் நன்மையானவை என்று சிலர் நினைக்கிறார்கள். சிலர் வாக்குக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுகின்றனர்.(11) சிலர் தங்கள் தாய் தந்தையரைக் கடமையுணர்வுடன் பார்த்துக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றிருக்கின்றனர். வாய்மை மற்றும் கருணை என்ற கடமைகளைப் பின்பற்றிச் சிலர் சொர்க்கத்திற்கு உயர்ந்திருக்கின்றனர்.(12) சிலர் போரிட விரைந்து, தங்கள் உயிர்களை விட்டுச் சொர்க்கத்தை அடைந்திருக்கின்றனர். மேலும் சிலர் உஞ்சம் என்றழைக்கப்படும் நோன்பைப் பின்பற்றி வெற்றியை அடைந்து சொர்க்கத்தின் பாதையை அடைந்திருக்கின்றனர்.(13) சிலர் தங்களை வேத கல்விக்கு அர்ப்பணித்திருக்கின்றனர். மங்கலங்கூடிய அத்தகைய கல்வியில் பற்று கொண்டவர்களும், நுண்ணறிவையும் அமைதியான ஆன்மாக்களையும் கொண்டவர்களும், தங்கள் புலன்களை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுமான இந்த மனிதர்கள் சொர்க்கத்தை அடைகின்றனர்.(14) எளிமையும், வாய்மையும் கொண்ட வேறு சிலர் தீய மனிதர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். வாய்மையும், எளிமையும், தூய்மையான ஆன்மாவையும் கொண்ட அத்தகைய மனிதர்கள் சொர்க்கவாசிகளாகக் கௌரவிக்கப்பட்டிருக்கின்றனர்.(15) எப்போதும் அகலத் திறந்திருக்கும் கடமைகள் {அறங்கள்} எனும் ஆயிரம் வாசல்களின் மூலம் மனிதர்கள் சொர்க்கத்தை அடைவது இவ்வுலகில் காணப்படுகிறது. காற்றின் முன்பான மேகத் திரள் போல உமது இந்தக் கேள்வி என் புத்தியைக் கலங்கடிக்கின்றன" என்றார் {விருந்தினர்}.(16)
சாந்திபர்வம் பகுதி – 355ல் உள்ள சுலோகங்கள் : 16
ஆங்கிலத்தில் | In English |