Naga Padmanabha! | Shanti-Parva-Section-356 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 183)
பதிவின் சுருக்கம் : நாகன் பத்மனிடம் செல்லும்படி விருந்தளிப்பவரிடம் சொன்ன விருந்தினர்...
விருந்தினர் தொடர்ந்தார், "ஓ! பிராமணரே, இவை யாவற்றையும் உமக்கு முறையாக விளக்க முயற்சிக்கிறேன். நான் என் ஆசானிடமிருந்து கேட்டதை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(1)
முந்தைய படைப்பில் அறச்சக்கரம் சுழலத் தொடங்கிய இடமும், கோமதி ஆற்றங்கரையில் அமைந்திருப்பதும், நைமிஷம் என்ற பெயரில் அறியப்படுவதுமான காட்டில் {காட்டின் அருகில்} நாகர்களின் பெயரில் அழைக்கப்படும் ஒரு நகரம் இருக்கிறது.(2)
பழங்காலத்தில் தேவர்கள் அனைவரும் அந்த இடத்தில் ஒன்றுகூடி ஒரு மகத்தான வேள்வியைச் செய்தனர். அங்கே உலகமன்னர்களில் முதன்மையான மாந்தாத்ரி {மாந்தாதா}, இங்கேதான் தேவர்களின் தலைவனான இந்திரனை வென்றான்.(3)
அற ஆன்மா கொண்ட வலிமைமிக்க நாகன் ஒருவன், அந்தப் பகுதியில் இருக்கும் அந்த நகரத்தில் வசித்து வருகிறான். அந்தப் பெரும் நாகன், பத்மநாபன் அல்லது பத்மன் என்ற பெயரில் அறியப்படுகிறான்.(4)
(செயல்கள், அறிவு, துதி என்ற) முப்பாதையில் நடக்கும் அவன் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அனைத்து உயிரினங்களையும் நிறைவு செய்கிறான்.(5)
அனைத்திலும் பெருங்கவனத்துடன் சிந்தித்து, நல்லோரைப் பாதுகாத்து, இணக்கம் {சாம}, கொடை, அல்லது கையூட்டளித்தல் {தான}, வேற்றுமையை உண்டாக்கல் {பேத}, பலத்தைப் பயன்படுத்தல் {தண்டம்} என்ற நால்வகைக் கொள்கையைப் பின்பற்றித் தீயோரைத் தண்டித்தும் வருகிறான்.(6)
அங்கே சென்று நீர் விரும்பும் கேள்விகளை அவனிடம் கேட்பீராக. உயர்ந்த அறம் எது என்பதை உண்மையில் அவன் உமக்குக் காட்டுவான்.(7)
அந்த நாகன் விருந்தினர்களை எப்போதும் விரும்புபவன் ஆவான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன் சாத்திரங்களையும் நன்கறிந்தவனாவான். அவன், வேறு எந்த மனிதனிலும் காணப்படாதவையும், விரும்பத்தக்கவையுமான ஒழுக்கங்கள் அனைத்தையும் கொண்டவனாவான்.(8)
அவன், நீருடனோ, நீரில்லாமலோ செய்யப்படும் கடமைகளை எப்போதும் நோற்கும் மனநிலை கொண்டவனாவான். வேத கல்வியில் அவன் அர்ப்பணிப்புமிக்கவனாவான். அவன் தவங்களையும், தற்கட்டுப்பாட்டையும் கொண்டவனாவான். அவன் பெருஞ்செல்வத்தைக் கொண்டவனாவான்.(9)
அவன் வேள்விகளைச் செய்கிறான், கொடையளிக்கிறான், தீங்கிழைப்பதைத் தவிர்க்கிறான், மன்னிக்கவும் செய்கிறான். அவன் ஒழுக்கம் அனைத்து வகையிலும் சிறப்பானதாகும். பேச்சில் வாய்மை கொண்டவனும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனுமான அவன் நன்னடத்தைக் கொண்டவனும், தன் புலன்களை முறையாகக் கட்டுப்படுத்துபவனுமாக இருக்கிறான்.(10)
அவன் தன் விருந்தினர்கள் மற்றும் பணியாட்கள் அனைவரும் உண்ட பிறகே உண்கிறான். அவன் அன்புடன் பேசக்கூடியவனாவான். அவன், எது நன்மையானது, எது எளிமையானது, எது சரியானது, எது கண்டிக்கத்தக்கது என்ற அறிவைக் கொண்டவனாவான். அவன் செய்வதையும், செய்யாமல் விடுவதையும் கணக்கில் கொள்கிறான். அவன் எவரிடமும் ஒருபோதும் பகைமையுடன் நடந்து கொள்வதில்லை. அவன் எப்போதும் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதிலேயே ஈடுபடுகிறான். அவன், கங்கையின் மத்தியில் உள்ள ஒரு தடாகத்தின் நீரைப் போலத் தூய்மையானதும், களங்கமற்றதுமான ஒரு குடும்பத்தைச் சார்ந்தவனாவான்" {என்றார் விருந்தினர்}.(11)
சாந்திபர்வம் பகுதி – 356ல் உள்ள சுலோகங்கள் : 11
ஆங்கிலத்தில் | In English |