The Brahmana set out! | Shanti-Parva-Section-357 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 184)
பதிவின் சுருக்கம் : சரியான பாதை காட்டியதற்காகத் தமது விருந்தினரை மெச்சிய பிராமணர்; இரவு முழுவதும் தமது விருந்தினருடன் உரையாடி, காலையில் நாகன் இருக்கும் நகரம் நோக்கிப் புறப்பட்டது...
விருந்தளிப்பவர் தம் மறுமொழியாக, "ஆறுதலளிக்கும் உமது இந்த வார்த்தைகளைக் கேட்டு, கனமான சுமையைத் தூக்கிக் கொண்டிருக்கும் ஒருவனது தலையில் இருந்தோ, தோள்களில் இருந்து அந்தச் சுமை எடுக்கப்பட்டால் அவனுக்கு உண்டாகும் அந்த அளவு நிறைவை நானும் அடைகிறேன்.(1)
நான்கு சக்கரங்களில் நீண்ட பயணத்தை மேற்கொண்ட ஒருபயணி, படுக்கையில் கிடக்கும்போது உணர்வதும், இடமில்லாததால் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த ஒரு மனிதன், ஓர் இருக்கைக் கிடைக்கும்போது உணர்வதும், அல்லது தாகத்தில் இருக்கும் மனிதன் குளிர்ந்த நீரைக் காணும்போது உணர்வதும், அல்லது பசித்த மனிதன் தன் முன் சுவைமிக்க உணவைக் காணும்போது உணர்வதும்,(2) அல்லது ஒரு விருந்தாளி சரியான நேரத்தில் தன் முன்பு விரும்பத்தக்க உணவு வைக்கப்படும்போது உணர்வதும், அல்லது நீண்ட காலம் ஆசைப்பட்டு ஒரு மகனைப் பெற்ற ஒரு முதிய மனிதன் உணர்வதும், ஒருவன் எவனை நினைத்து அதிகக் கவலைப்படுவானோ அந்த அன்புக்குரிய நண்பனையோ, உறவினனையோ சந்திக்கும்போது உணர்வதுமான நிறைவுக்கு ஒப்பாக உம்மால் சொலப்பட்ட இந்த வார்த்தைகளின் விளைவால் நான் நிறைவடைந்திருக்கிறேன்.(3,4)
மேல்நோக்கிய பார்வை கொண்ட ஒரு மனிதனைப் போல நான், உமது உதடுகளில் இருந்து விழுந்தவற்றைக் கேட்டும், அதன் முக்கியத்துவத்தைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டும் இருக்கிறேன். விவேகமிக்க இந்த வார்த்தைகளால் நீர் உண்மையில் எனக்கு அறிவுரையை வழங்கியிருக்கிறீர்.(5)
ஆம், நீ சொன்னது போலவே நான் செய்யப் போகிறேன். இந்த இரவை என்னோடு மகிழ்வாகக் கழித்து, அத்தகைய ஓய்வின் மூலம் உமது களைப்பை அகற்றிக் கொண்டு நாளை விடியற்காலையில் நீர் செல்லலாம்.(6) தெய்வீகச் சூரியனின் கதிர்கள் மங்கியிருப்பதையும், பகலின் தேவன் கீழ்நோக்கிய பாதையில் செல்வதையும் காண்பீராக" என்றார் {விருந்தளிப்பவர்}".(7)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பகைவர்களைக் கொல்பவனே, அந்தப் பிராமணரால் விருந்தோம்பலுடன் கவனிக்கப்பட்டவரும், கல்விமானுமான அந்த விருந்தாளி, தனக்கு விருந்தளிப்பவரின் துணையுடன் அந்த இரவைக் கழித்தார்.(8)
உண்மையில் அவர்கள் இருவரும் நான்காவது வாழ்வுமுறையான சந்நியாச {துறவுக்} கடமைகள் குறித்து ஒருவருக்கொருவர் உற்சாகமாகப் பேசியபடியே அந்த இரவை மகிழ்ச்சியாகக் கழித்தனர். கவரும் வகையிலான அவர்களது உரையாடும் இயல்பினால் அந்த இரவு பகலைப் போலக் கழிந்து சென்றது.(9)
காலை விடிந்ததும், (விருந்தாளியின் உரையாடலின்படி) தமக்கு நன்மையானது எனக் கருதப்பட்டதை நிறைவேற்றும் ஆவல் நிறுவப்பட்ட இதயத்தைக் கொண்ட அந்தப் பிராமணரால் அந்த விருந்தாளி உரிய சடங்குகளுடன் வழிபடப்பட்டார்.(10)
அறவோரான அந்தப் பிராமணர் தமது விருந்தினருக்கு விடைகொடுத்தனுப்பி, தன் நோக்கத்தை அடையத் தீர்மானித்து, தமது உற்றார் உறவினரிடம் விடைபெற்றுக் கொண்டு, நாகர்களின் முதன்மையான வசிப்பிடத்தில் தம் இதயத்தை உறுதியாக நிலைக்கச் செய்து, சரியான நேரத்தில் அதை நோக்கிப் புறப்பட்டார்" {என்றார் பீஷ்மர்}.(11)
சாந்திபர்வம் பகுதி – 357ல் உள்ள சுலோகங்கள் : 11
ஆங்கிலத்தில் | In English |