Naga's wife! | Shanti-Parva-Section-358 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 185)
பதிவின் சுருக்கம் : வழிவிசாரித்து நைமிஷவனத்தில் உள்ள நாகப்பட்டணத்தை அடைந்த பிராமணர்; நாகனின் மனைவியைக் கண்டது; நாகன் அங்கில்லாதது; நாகன் வரும் வரை கோமதி ஆற்றங்கரையில் காத்திருந்த பிராமணர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இனிய காடுகள், தடாகங்கள் மற்றும் புனித நீர்நிலைகளைக் கடந்து சென்ற அந்தப் பிராமணர் இறுதியாக ஒரு குறிப்பிட்ட தவசியின் ஆசிரமத்தை வந்தடைந்தார்.(1)
அங்கே வந்த அவர், தமது விருந்தினரிடம் கேட்ட நாகனைக் குறித்து அவரிடம் {அந்தத் தவசியிடம்} சரியான வார்த்தைகளில் விசாரித்து, அவரது அறிவுறுத்தலின் படி தம் பயணத்தைத் தொடர்ந்தார்.(2)
தமது பயண நோக்கத்திற்கான தெளிவான கருத்துடன் கூடிய அந்தப் பிராமணர், நாகனின் இல்லத்தை அடைந்தார். அதற்குள் முறையாக நுழைந்த அவர், சரியான வார்த்தைகளால் தம்மை அறிவித்தபடியே, "ஹோ, இங்கே இருப்பது யார்? நான் ஒரு பிராமணன் இங்கே விருந்தினனாக வந்திருக்கிறேன்" என்றார்.(3)
பேரழகு படைத்தவளும், கடமைகள் அனைத்தையும் நோற்பதில் அர்ப்பணிப்புள்ளவளும், கற்புடையவளுமான அந்த நாகனின் மனைவி இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.(4)
விருந்தோம்பும் கடமைகளில் எப்போதும் கவனத்துடன் இருக்கும் அவள், முறையான சடங்குகளுடன் விருந்தினரை வழிபட்டு, அவரை வரவேற்று, "நான் உமக்குச் செய்யக்கூடியது என்ன?" என்று கேட்டாள்.(5)
அந்தப் பிராமணர், "ஓ! பெண்ணே, நீ என்னிடம் சொன்ன இனிமையான வார்த்தைகளால் நான் போதுமான அளவுக்குக் கௌரவிக்கப்பட்டேன். என் பயணத்தால் உண்டான களைப்பும் அகன்றது. ஓ! அருள்நிறைந்த பெண்ணே, நான் சிறப்புமிக்கவனான உன் கணவனைக் காண விரும்புகிறேன்.(6) இதுவே என் உயர்ந்த நோக்கமாகும். இஃது ஒன்றே என் விருப்பத்திற்குரிய பொருளுமாகும். இந்தக் காரணத்திற்காகவே நான் இன்று உன் கணவனான நாகனின் வசிப்பிடத்திற்கு வந்திருக்கிறேன்" என்றார்.(7)
நாகனின் மனைவி, "மதிப்புமிக்க ஐயா, என் கணவர் ஒரு மாத காலம் சூரியனின் தேரை இழுப்பதற்காகச் சென்றிருக்கிறார். ஓ! கல்விமானான பிராமணரே, அவர் பதினைந்து நாட்களில் திரும்பி, உமக்குக் காட்சியளிப்பார்.(8) என் கணவர் இல்லத்தில் இல்லாத காரணத்தை உமக்குச் சொன்னேன். உள்ளபடி இஃது இவ்வாறிருக்கட்டும், நான் உமக்கு வேறென்ன செய்ய வேண்டும்? இதைச் சொல்வீராக" என்றாள்[1].(9)
[1] கும்பகோணம் பதிப்பில், "பூஜ்யரான என்னுடைய நாயகர் ஸூர்யனுடைய ரதத்தை வகிப்பதற்காக ஒரு மாஸம் ஸஞ்சரிக்கப் போயிருக்கிறார்; ஏழெட்டு நாட்களில் சந்தேகமின்றி வந்துவிடுவார். பூஜ்யரான என் நாயகர் பரதேசம் சென்றிருப்பதை நீர் தெரிந்து கொள்ளும். வேறு என்ன செய்ய வேண்டும்? அதை எனக்குச் சொல்லும்" என்றிருக்கிறது.. இதன் அடிக்குறிப்பில் "பதினைந்து என்றும் கொள்ளலாம்" என்றிருக்கிறது.
பிராமணர் {நாகனின் மனைவியிடம்}, "ஓ! கற்புடைய பெண்ணே, உன் கணவனைக் காணும் நோக்கத்துடனே நான் இங்கே வந்திருக்கிறேன். ஓ !மதிப்புமிக்க இல்லத்தலைவியே, நான் அருகில் இருக்கும் காட்டில் வசித்தபடியே, அவன் திரும்பி வருவதற்காகக் காத்திருப்பேன்.(10) உன் கணவன் திரும்பியதும், அவனைக் காணும் விருப்பத்தால் தூண்டப்பட்டு நான் இவ்விடத்திற்கு வந்திருக்கிறேன் என்பதை அவனிடம் கருணையுடன் சொல்வாயாக. அவன் திரும்பி வந்ததும் அஃதை எனக்குச் சொல்வாயாக.(11) ஓ! அருளப்பட்ட மங்கையே, அது வரை நான் சொற்ப உணவை உண்டு, உன் கணவன் திரும்பி வருவதற்காகக் கோமதியாற்றங்கரையில் காத்திருப்பேன்" என்றார்.(12)
நாகனின் மனைவியிடம் இதை மீண்டும் மீண்டும் சொன்ன அந்த முதன்மையான பிராமணர், அந்த நாகன் திரும்பி வரும் காலம் வரை வசித்திருப்பதற்காகக் கோமதியாற்றங்கரைக்குச் சென்றார்" என்றார் {பீஷ்மர்}.(13)
சாந்திபர்வம் பகுதி – 358ல் உள்ள சுலோகங்கள் : 13
ஆங்கிலத்தில் | In English |