The fast of the Brahmana! | Shanti-Parva-Section-359 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 186)
பதிவின் சுருக்கம் : உணவு உண்ணும்படி பிராமணரிடம் கேட்டுக் கொண்ட நாகர்கள்; நாகர்களின் கோரிக்கையை மறுத்த பிராமணர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்த நகரத்தைச் சார்ந்த நாகர்கள், தவப்பயிற்சியில் அர்ப்பணிப்பு மிக்க அந்தப் பிராமணர், நாகத்தலைவனின் வரவை எதிர்பார்த்து, உணவை முற்றிலும் துறந்து காட்டில் தொடர்ந்து வசித்து வருவதைக் கண்டு மிகவும் துன்புற்றனர்.(1)
அந்தப் பெரும் நாகனின் சகோதரர்கள், பிள்ளைகள் மற்றும் மனைவி உள்ளிட்ட உற்றார் உறவினர்கள் ஒன்றாகத் திரண்டு அந்தப் பிராமணர் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.(2)
கோமதி ஆற்றங்கரைக்கு வந்த அவர்கள், அற்புத நோன்புகளை நோற்றபடியே அனைத்துவகை உணவுகளையும் துறந்து, அமைதியாகக் குறிப்பிட்ட மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு தனிமையான ஓரிடத்தில் அமர்ந்திருந்த அந்த மறுபிறப்பாளரைக் {பிராமணரைக்} கண்டனர்.(3)
அந்தப் பெரும் நாகனின் உற்றார் உறவினர், அந்தப் பிராமணரின் முன்பு வந்து, அவருக்கு உரிய வழிபாட்டைச் செய்து, கள்ளங்கபடற்ற தன்மை நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(4) "ஓ! தவச் செல்வத்தைக் கொண்ட பிராமணரே, நீர் இங்கு வந்து ஆறு நாட்கள் ஆகின்றன. ஓ! அறத்திற்கு அர்ப்பணிப்புள்ள மறுபிறப்பாளரே, இருப்பினும் உணவுக்கென ஒரு வார்த்தையும் நீர் சொல்லவில்லை.(5) நீர் எங்களிடம் வந்திருக்கிறீர். உம்மைக் கவனிக்க நாங்கள் இருக்கிறோம். உமக்கான விருந்தோம்பல் கடமைகளை நாங்கள் அவசியம் செய்ய வேண்டும். நாங்கள் அனைவரும் உமக்குக் காரியம் இருக்கும் அந்த நாகத் தலைவனின் உறவினர்கள் ஆவோம்.(6) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, கிழங்குகள், அல்லது கனிகள், இலைகள், அல்லது நீர், அல்லது அரிசி, அல்லது இறைச்சியை உமது உணவாக உட்கொள்வதே உமக்குத் தகும்.(7) முற்றிலும் உணவைத் தவிர்த்த நிலையில் இந்தக் காட்டில் நீர் வசிப்பதன் விளைவால், இளைஞர்களும், முதியவர்களுமான மொத்த நாகச் சமூகமும் பீடிக்கப்பட்டிருக்கிறது.(8) எங்களில் எவரும் பிராமணக்கொலை என்ற குற்றத்தைச் செய்தவர்களல்ல. எங்களில் எவரும் பிறந்த உடனே மகனை இழந்தவர்களுமல்ல. எங்கள் குலத்தில், தன் வசிப்பிடத்திற்கு வந்த தேவர்கள், அல்லது விருந்தினர்கள் அல்லது உறவினர்கள் உண்பதற்கு முன்னர் எவரும் உண்டதில்லை" என்றனர்.(9)
அந்தப் பிராமணர், "உங்கள் அனைவருடைய வேண்டுகோளின் விளைவால் என் நோன்பு முறிந்ததாகக் கருதப்படலாம். நாகத் தலைவன் திரும்பி வருவதற்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்கின்றன.(10) எட்டாம் இரவு கடந்த பின்னும் நாகர்களின் தலைவன் திரும்பி வரவில்லையெனில், உணவை உண்பதன் மூலம் நான் என் நோன்பை முறித்துக் கொள்வேன். நாகத் தலைவனிடம் நான் கொண்ட மதிப்பின் விளைவாலேயே உணவனைத்தையும் துறக்கும் இந்த நோன்பை நோற்கிறேன்.(11) என் செயலுக்காக நீங்கள் வருந்தக்கூடாது. நீங்கள் அனைவரும் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்பிச் செல்லுங்கள். இஃது அவன் நிமித்தமாகச் செய்யப்படும் நோன்பாகும். என்னுடைய இந்த நோன்பு முறியும் வகையில் எதையும் நீங்கள் செய்யக்கூடாது" என்றார்.(12)
ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கூடிவந்த நாகர்கள் அந்தப் பிராமணரால் இவ்வாறு சொல்லப்பட்டு அவரால் விடைகொடுத்து அனுப்பப்பட்டனர். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அதன் பேரில் அவர்களும் தங்கள் தங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்" என்றார் {பீஷ்மர்}.(13)
சாந்திபர்வம் பகுதி – 359ல் உள்ள சுலோகங்கள் : 13
ஆங்கிலத்தில் | In English |