Nagas return! | Shanti-Parva-Section-360 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 187)
பதிவின் சுருக்கம் : திரும்பி வந்த நாகன்; அவனது மனைவி அவனைப் பிராமணரிடம் போகச் சொன்னது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "முழுமையாகப் பதினைந்து நாள் நிறைவடைந்ததும், சூரியனின் தேரை இழுக்கும் பணியை முடித்து, அவனது {சூரியனின்} அனுமதியைப் பெற்றுக்கொண்டு அந்த நாகத் தலைவன் (பத்மநாபன்) தன் வீட்டுக்குத் திரும்பினான்.(1)
அவன் திரும்பி வந்ததைக் கண்ட அவனது மனைவி, அவனது காலைக் கழுவி விடவும், அதே இயல்பிலான பிற பணிகளைக் கடமையுணர்வுடன் செய்யவும் அவனை அணுகினாள். இந்தப் பணிகளைச் செய்த பிறகு அவள் அவன் அருகில் அமர்ந்தாள். அப்போது களைப்பில் இருந்து புத்துணர்வு அடைந்த நாகன், கடமையுணர்வுமிக்கவளும், கற்புடையவளுமான தன் மனைவியிடம்,(2) "என் அன்பு மனைவி நான் இல்லாதபோது, நான் சொன்னவற்றுக்கு ஏற்புடைய வகையிலும், சாத்திர விதிகளின்படியும் தேவர்களையும், விருந்தினர்களையும் வழிபடுவதைக் கண்டுகொள்ளாமல் இல்லையென நம்புகிறேன்.(3) உன் பாலினத்திற்கு {பெண்களுக்கு} இயல்பான தூய்மையற்ற புத்திக்கு வசப்படாமல், இல்லத்தில் நானில்லாத போது, விருந்தோம்பல் கடமைகளை உறுதியாகப் பின்பற்றியிருப்பாய் என நம்புகிறேன். கடமை மற்றும் அறத்தின் தடைகளை நீ கடக்காமல் இருக்கிறாய் என நம்புகிறேன்" என்றான்.(4)
நாகனின் மனைவி, "சீடர்களின் கடமை, தங்கள் ஆசான் சொல்வதை மதிப்புடன் நிறைவேற்றுவது; பிராமணர்களின் கடமை வேத கல்வியும், அவற்றை நினைவில் கொள்வதும்; பணியாட்களின் கடமை தங்கள் தலைவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது; மன்னனின் கடமை, நல்லோரைப் பாதுகாத்து, தீயோரைத் தண்டித்து மக்களைப் பாதுகாப்பதாகும்.(5) க்ஷத்திரியனின் கடமைகள் தீமையில் இருந்து ஒடுக்குமுறையில் இருந்தும் உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பதைத் தழுவியது என்று சொல்லப்படுகிறது.(6) சூத்திரனின் கடமை, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்ற மூன்று மறுபிறப்பாள வகையினரிடம் {வர்க்கத்தினரிடம்} பணிவுடன் தொண்டாற்றுவது. ஓ! நாகர்களின் தலைவரே, ஓர் இல்லறத்தானின் அறம் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதில் அடங்கியிருக்கிறது.(7) சொற்ப உணவை உண்பது, உரிய வகையில் நோன்புகளை நோற்பது ஆகியவை புலன்களுக்கும், அறக்கடமைகளுக்கும் இடையில் உள்ள தொடர்பின் விளைவான (அனைத்து வகை {வர்க்க} மக்களின் தகுதியில் {புண்ணியத்தில்} அடங்கியிருக்கிறது.(8)
விடுதலைக்கு வழிவகுக்கும் வாழ்க்கையைப் பின்பற்றுபவன், "நான் யார்? எங்கிருந்து வந்திருக்கிறேன்? பிறக்கு எனக்கு என்னவாக இருக்கிறார்கள்? நான் பிறருக்கு என்னவாக இருக்கிறேன்?" என்ற இந்த நினைவுகளையே தன் மனத்தை எப்போதும் செலுத்த வேண்டும்.(9) கற்புடைமை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகியனவே மனைவியின் உயர்ந்த கடமையாக அமைகிறது. ஓ! நாகர்களின் தலைவரே, உமது போதனைகளால் நான் இதை நன்கறிந்திருக்கிறேன்.(10) எனவே, என் கடமையை அறிந்தவளும், அறத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் உம்மை என் கணவனாக அடைந்தவளுமான நான் ஏன் கடமையின் பாதையில் இருந்து நழுவி, கீழ்ப்படியாமை மற்றும் பாவத்தின் பாதையில் நடக்கப் போகிறேன்?(11) நீர் இல்லத்தில் இல்லாத போது, எவ்வகையிலும் தேவர்களுக்கான துதி நிற்கவில்லை. சிறு புறக்கணிப்பும் இல்லாமல் உமது வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினர்களை விருந்தோம்பல் கடமைகளுடன் நான் கவனித்துக் கொண்டேன்.(12)
பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு பிராமணர் இங்கே வந்தார். அவர் தமது நோக்கத்தை என்னிடம் வெளிப்படுத்தவில்லை. அவர் உம்மைச் சந்திக்க விரும்பினார்.(13) கோமதி ஆற்றங்கரையில் உம் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து வசித்து வருகிறார். கடும் நோன்புகளைக் கொண்ட அந்தப் பிராமணர், பிரம்மத்தைச் சொல்வதில் ஈடுபட்டபடியே அங்கே அமர்ந்திருக்கிறார்.(14) ஓ! நாகர்களின் தலைவரே, நீர் உமது வசிப்பிடத்திற்குத் திரும்பிய உடனேயே உம்மை அங்கு அனுப்பி வைப்பதாக அவருக்கு உறுதியளித்திருக்கிறேன்.(15) ஓ! நாகர்களில் சிறந்தவரே, நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு அங்கே செல்வதே உமக்குத் தகும். ஓ! கண்களால் கேட்பவரே, அந்த மறுபிறப்பாளரை இங்கே கொண்டு வந்த அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதே உமக்குத் தகும்" என்றாள் {நாகனின் மனைவி}[1].(16)
[1] "தர்சனசிரவஸ் என்பது கண்களால் கேட்பவர் என்ற பொருளைத் தரும். நாகங்கள் காதுகள் இல்லாதவையாகவும், தங்கள் கண்களைக் கொண்டே பார்ப்பதாகவும், கேட்பதாகவும் நம்பப்படுகிறது. மஹாபாரதம் மற்றும் புராணங்களில் சொல்லப்படும் நாகர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பது கடினம். அவர்கள் பாதாள லோகத்தில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்ட அமானுஷ்யர்களாகவே தெரிகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 3602ல் உள்ள சுலோகங்கள் : 16
ஆங்கிலத்தில் | In English |