Nagas wrath! | Shanti-Parva-Section-361 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 188)
பதிவின் சுருக்கம் : மனிதன் நாகனை அழைப்பதா என மனைவியிடம் கோபித்துக் கொண்ட நாகன்; தன் கணவனை அமைதிப்படுத்தி பிராமணரிடம் செல்லச் சொன்ன அவனது மனைவி...
நாகன் {பத்மநாபன் தன் மனைவியிடம்}, "ஓ! இனிய புன்னகை கொண்டவளே, அந்தப் பிராமணன் யாரென நினைக்கிறாய்? அவர் உண்மையில் மனிதன்தானா? அல்லது பிராமணரின் வடிவில் வந்த தேவனா?(1) ஓ! பெரும்புகழைக் கொண்டவளே, நோக்கத்திற்குத் தக்க என்னைக் காணவிரும்பும் மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? என்னைக் காண விரும்பும் மனிதனால், அவன் வசிக்கும் இடத்திற்கு வந்து தன்னைப் பார்க்குமாறு இவ்வாறு எனக்கு ஆணையிடமுடியுமா?(2) ஓ! இனிய பெண்ணே, தேவர்கள், அசுரர்கள் மற்றும் தெய்வீக முனிவர்களுக்கு மத்தியில் நாகர்கள் பெருஞ்சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். பெரும் வேகம் கொண்ட அவர்கள் சிறந்த நறுமணத்தையும் கொண்டிருக்கிறார்கள்.(3) அவர்கள் {மனிதர்களால்} வழிபடத்தக்கவர்கள். அவர்கள் வரம் அருளவல்லவர்கள். உண்மையில், நாமும் பிறரால் பின்பற்றப்படத் தகுந்தவர்கள். ஓ! பெண்ணே, நாம் மனிதர்களால் காண இயலாதவர்களாக இருக்கிறோம்" என்றான்.(4)
அந்த நாகத்தலைவனின் {பத்மநாபனின்} மனைவி, "அந்தப் பிராமணரின் எளிமை மற்றும் கவர்ச்சியில் இருந்து, அவர் காற்றில் வாழும் எந்தத் தேவனும் அல்ல என அறிகிறேன். ஓ! பெருங்கோபம் கொண்டவரே, அவர் தம் முழு இதயத்துடன் உம்மை மதிக்கிறார் என்பதையும் நான் அறிவேன்.(5) உமது துணையைக் கொண்டு நிறைவேற வேண்டிய நோக்கம் ஏதோ அவரது இதயத்தில் நிலைத்திருக்கிறது. மழையை விரும்புவதும், சாதகம் என்றழைக்கப்படுவதுமான பறவை, (தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக) மழையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதைப் போலவே, உம்மைச் சந்திப்பதற்காக அந்தப் பிராமணரும் காத்துக் கொண்டிருக்கிறார்.(6) உம்மைக் காண இயலாமையின் விளைவால் பேரிடர் அவரை அணுகாதிருக்கட்டும். உம்மைப் போன்ற மதிப்புமிக்கக் குடும்பத்தில் பிறந்த எந்த மனிதனும், வீட்டிற்கு வந்த விருந்தினரைப் புறக்கணிப்பதன் மூலம் மதிப்புடன் நீடித்திருக்க முடியாது.(7)
உமக்கு இயல்பான கோபத்தைக் கைவிட்டு அந்தப் பிராமணரைக் காணச் செல்வதே உமக்குத் தகும். அந்தப் பிராமணரை ஏமாற்றுவதன் மூலம் தாழ்மையை அடைவது உமக்குத் தகாது.(8) துயர் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் வந்த மனிதர்களின் கண்ணீரைத் துடைக்க மறுக்கும் மன்னன் அல்லது இளவரசன் கருவைக் கொன்ற குற்றத்தை இழைத்தவனாவான். பேச்சைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் ஞானத்தை அடைகிறான்.(9) கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும்புகழை அடைகிறான். பேச்சியில் வாய்மையைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவன் நாநலமென்ற கொடையை அடைந்து, சொர்க்கத்தில் கௌரவிக்கப்படுகிறான்.(10) நிலத்தைக் கொடையளிப்பதால் ஒருவன் புனித வாழ்வு முறையைப் பின்பற்றும் முனிவர்களுக்கு விதிக்கப்படும் உயர்ந்த கதியை அடைகிறான். அறவழிகளின் மூலம் செல்வம் ஈட்டுவதால் ஒருவன் விரும்பத்தக்க பல கனிகளை அடைகிறான்.(11) தனக்கான நன்மையை முழுமையாகச் செய்வதால் ஒருவன் நரகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கிறார். அறவோர் இதையே சொல்கின்றனர்" என்றாள்.(12)
நாகன், "செருக்கால் நான் ஆணவமேதும் அடையவில்லை. எனினும், என் பிறப்பின் விளைவால் ஓரளவு ஆணவம் என்னால் கருதத்தக்கதே. ஓ! அருளப்பட்ட பெண்ணே, என்னிடம் ஆசையில் பிறக்கும் கோபமேதும் கிடையாது. அவை அனைத்தும் உன் சிறந்த போதனைகளெனும் நெருப்பால் எரிக்கப்பட்டன.(13) ஓ அருளப்பட்ட இல்லத் தலைவியே, கோபத்தை விட அடர்ந்த இருள் எதனையும் நான் காணவில்லை. எனினும், நாகர்கள் கொண்டிருக்கும் மிகுந்த கோபத்தின் விளைவால், அவர்கள் மனிதர்கள் அனைவராலும் நிந்திக்கப்படும் பொருட்களாகின்றனர்.(14)
பேராற்றலைக் கொண்டவனான பத்து தலை இராவணன், கோபத்தின் ஆதிக்கத்திற்கு வீழ்ந்து இந்திரனின் பகைவனாகி, அந்தக் காரணத்தினாலேயே போரில் இராமனால் கொல்லப்பட்டான்.(15) பிருகு குல முனிவர் இராமர் {பரசுராமர்}, தமது தந்தையின் ஹோமப்பசுவுடைய கன்றைக் கொண்டு வருவதற்காகத் தங்கள் அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் நுழைந்ததைக் கேட்ட கார்த்தவீரியனின் மகன்கள், இவ்வாறு தங்கள் அரசக்குடிலில் நுழைந்ததை அவமதிப்பாகக் கருதி கோபவசப்பட்டதால், இராமரின் கரங்களில் அழிவை அடைந்தனர்.(16) உண்மையில் பெரும்பலத்தைக் கொண்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனுக்கு ஒப்பானவனவனுமான கார்த்தவீரியன் கோபவசப்பட்டதால் ஜமதக்னி குலத்தின் இராமரால் போரில் கொல்லப்பட்டான்.(17)
ஓ! இனிய பெண்ணே, உண்மையில் தவங்களுக்குப் பகையும், எனக்கான நன்மை அனைத்தையும் அழிப்பதுமான என் கோபத்தை உன் வார்த்தைகளால் கட்டுப்படுத்திக் கொண்டேன்.(18) அனைத்து அறங்களையும், தீராத தகுதிகளையும் {புண்ணியங்களையும்} கொண்ட உன்னை என் மனைவியாக அடைந்த நற்பேற்றினால் என்னை நானே பெரிதாகப் புகழ்ந்து கொள்கிறேன்.(19) நான் இப்போது அந்தப் பிராமணர் இருக்கும் இடத்திற்குச் செல்லப் போகிறேன். நிச்சயம் நான் அந்தப் பிராமணரிடம் முறையான வார்த்தைகளைப் பேசுவேன். அவர் நிச்சயம் தமது விருப்பங்கள் நிறைவேறியே இங்கிருந்து செல்வார்" என்றான் {நாகன் பத்மநாபன்}.(20)
சாந்திபர்வம் பகுதி – 361ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |