Dharmaranya! | Shanti-Parva-Section-362 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 189)
பதிவின் சுருக்கம் : பிராமணரைக் கண்ட நாகன்; பிராமணர் தன் பெயரைச் சொல்லி தன் விருப்பத்தையும் சொன்னது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்த நாகர்களின் தலைவன் {பத்மநாபன்} தன் அன்புக்குரிய மனைவியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அந்தப் பிராமணர் தன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த இடத்திற்குச் சென்றான். அவ்வாறு செல்லும் போதே அந்தப் பிராமணரைக் குறித்துச் சிந்தித்த அவன், அவர் நாக நகரத்திற்கு வந்த காரணம் எது என ஆச்சரியமடைந்தான்.(1) ஓ!மனிதர்களின் தலைவா, அந்த முதன்மையான நாகன், தன்னுடைய இயல்பான அற அர்ப்பணிப்பால் அவர் முன்பு சென்று, தன் விருந்தாளியான அவரிடம் இனிய வார்த்தைகளில்,(2) "ஓ! பிராமணரே, கோபவசப்படாதீர். நான் உம்மிடம் அமைதியாகப் பேசுகிறேன். கோபம் கொள்ளாதீர். யாரை எதிர்பார்த்து நீர் இங்கு வந்தீர்? உமது நோக்கம் என்ன?(3) கோமதி ஆற்றங்கரையின் இந்தத் தனிமையான இடத்தில் நீர் யாரைத் துதித்துக் கொண்டிருக்கிறீர்?" என்று கேட்டான்.(4)
அந்தப் பிராமணர் {நாகன் பத்மநாபனிடம்}, "ஓ! மறுபிறப்பாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, என் பெயர் தர்மாரண்யன் என்றும், நான் நாகன் பத்மநாபனைக் காண இங்கே வந்திருக்கிறேன் என்றும் அறிவாயாக. அவனிடம் எனக்கு ஒரு காரியம் இருக்கிறது.(5) அவன் இப்போது இல்லத்தில் இல்லை எனக் கேள்விப்பட்டேன். எனவே, இப்போது நான் அவன் அருகில் இல்லை. மேகங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாதகப் பறவையைப் போல எனக்கு அன்பானவனாக நான் கருதும் ஒருவனுக்காக நான் காத்திருக்கிறேன்.(6) அவனுக்கு நேரும் தீமைகள் அனைத்தையும் களையவும், அவனுக்கு நன்மையைக் கொண்டுவரவும், அவன் வரும் வரை வேதங்களை உரைப்பதில் ஈடுபட்டு, யோகத்தில் மகிழ்ச்சியாக என் நேரத்தைக் கடத்தி வருகிறேன்" என்றார் {தர்மாரண்யர்}.(7)
நாகன், "உண்மையில் உமது ஒழுக்கம் மிக நல்லதாக இருக்கிறது. பக்திமானான நீர், அறவோர் அனைவருக்கும் நன்மை செய்வதில் அர்ப்பணிப்புள்ளவராக இருக்கிறீர். ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணரே, உமக்கு எல்லாப் புகழும் உண்டாகட்டும். நீர் அந்த நாகனைக் கருணைக் கண்களுடன் காண்கிறீர்.(8) ஓ! கல்விமானான முனிவரே, நீர் தேடும் அந்த நாகன் நானே. உமக்கு ஏற்புடைய எந்தக் காரியத்தை நான் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆணையிடுவீராக.(9) ஓ! மறுபிறப்பாளரே, நீர் இங்கிருக்கிறீர் என்பதை என் மனைவியிடம் இருந்து அறிந்து, உம்மைக் காண்பதற்காக நான் இவ்விடம் வந்திருக்கிறேன். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, எந்தப் பணியையும் நம்பிக்கையுடன் எனக்குக் கொடுப்பதே உமக்குத் தகும்.(11) உமது நன்மையை அலட்சியம் செய்து, எங்கள் நன்மை நாடுவதில் உமது நேரத்தை ஈடுபடுத்தும் உமது தகுதிகளால் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கிவிட்டீர்" என்றான்.(12)
அந்தப் பிராமணர் {தர்மாரண்யர்}, "ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட நாகா, உன்னைக் காணும் விருப்பத்தால் உந்தப்பட்டே நான் இங்கே வந்தேன். ஓ! பாம்பே, அனைத்திலும் அறியாமையைக் கொண்டிருக்கும் நான் உன்னிடம் ஒன்றைக் கேட்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்.(13) ஆன்மாவைச் சார்ந்திருக்கும் நான், ஜீவாத்மாவின் கதியான பரமாத்மாவை அடைய விரும்புகிறேன். நான் இவ்வுலகத்தில் மீது பற்றுடனோ, அதனுடன் தொடர்பறுத்துக் கொண்டோ இல்லை.(14) நீ சந்திரனைப் போன்ற ஏற்புடைய {இனிமையான} பிரகாசத்துடனும், தூய புகழில் மறைக்கப்படும் தகுதிகளின் பிரகாசத்திலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்.(15) ஓ! காற்றை மட்டுமே உண்டு வாழ்பவனே, நான் உன்னிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்விக்கு முதலில் பதிலளிப்பாயாக. அதன்பிறகு, என்னை இங்கே கொண்டு வந்த நோக்கத்தைக் குறித்து உனக்குச் சொல்கிறேன்" என்றார் {தர்மாரண்யர்}.(16)
சாந்திபர்வம் பகுதி – 362ல் உள்ள சுலோகங்கள் : 16
ஆங்கிலத்தில் | In English |