Wonderful Surya! | Shanti-Parva-Section-363 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 190)
பதிவின் சுருக்கம் : சூரியனிலுள்ள அதிசயங்களை தர்மாரண்யர் என்ற பிராமணருக்குச் சொன்ன நாகன் பத்மநாபன்...
பிராமணர் {தர்மாரண்யர் நாகன் பத்மநாபனிடம்}, "ஒரே சக்கரமுடைய விவஸ்வானின் தேரை உன் முறைப்படி இழுக்கச் சென்று வந்தாய். நீ பயணம் செய்த உலகங்களில் ஆச்சரிக்கரமாக நீ கவனித்த எதையும் எனக்கு விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்" என்றார்.(1)
அந்த நாகன் {தர்மாரண்யரிடம்}, "தெய்வீகமான சூரியனே எண்ணற்ற ஆச்சரியங்களின் இல்லமாகவும், புகலிடமாகவும் இருக்கிறான். மூவுலகங்களில் வசிக்கும் உயிரினங்கள் அனைத்தும் சூரியனில் இருந்து உண்டானவையே.(2) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான எண்ணற்ற முனிவர்களும், தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மரக்கிளைகளில் அமரும் பறவைகளைப் போலச் சூரியனின் கதிர்களிலேயே வசிக்கின்றனர்.(3)
சூரியனில் இருந்து வெளிப்படும் பெருங்காற்றானது {வாயுவானது}, அதன் {சூரியனின்} கதிர்களையே புகலிடமாகக் கொண்டு, அங்கிருந்து அண்டத்தைக் கண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதைவிட அதிக ஆச்சரியம் தரத்தக்கது வேறு எது?(4) ஓ! மறுபிறப்பாள முனிவரே {தர்மாரண்யரே}, உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்யும் விருப்பத்தில் காற்றை {வாயுவை} பல பகுதிகளாகப் பிரிக்கும் சூரியன், அதை மழைக்காலங்களில் பொழியும் மழையாகச் செய்வதை விட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(5) சூரிய வட்டிலுக்குள் இருக்கும் பரமாத்மா, சுடர்மிக்கப் பிரகாசத்தில் குளித்தபடியே அண்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(6) சூரியனின் கருங்கதிர்கள் {சுக்கிரன் எனும் கோளின் சக்தி} மழை நிறைந்த மேகங்களாகி, பருவகாலத்தில் மழையாகப் பொழிவதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(7) தான் பொழியும் மழையை எட்டு மாதங்கள் பருகியிருந்து, மழைக்காலங்களில் மீண்டும் அதைப் பொழிவதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(8)
சூரியனின் குறிப்பட்ட கதிர்களில் அண்டத்தின் ஆன்மா வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவனிலேயே அனைத்துப் பொருட்களின் வித்துகளும் இருக்கின்றன. அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய பூமியைத் தாங்குபவன் அவனே {சூரியனே}.(9) ஓ! பிராமணரே, புருஷர்களில் முதன்மையானவனும், பெரும் பிரகாசத்தைக் கொண்டவனும், நித்தியமானவனும், தொடக்கமும், முடிவும் இல்லாதவனுமானா முதன்மையான புருஷன் சூரியனில் வசிக்கிறான் என்பதை விட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(10) எனினும், நான் இப்போது சொல்லப் போவதைக் கேட்பீராக. இஃது ஆச்சரியத்திலும் ஆச்சரியமானதாகும். சூரியனுக்கு அருகிலேயே இருந்ததால் தெளிந்த வானில் நான் இதைக் கண்டேன்.(11)
பழங்காலத்தில் ஒரு நாள் நடுப்பகலில் சூரியன் மகிமையுடன் ஒளிர்ந்து அனைத்திற்கும் வெப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த போது, சூரியனின் பிரகாசத்திற்கு இணையாக ஒளிர்வதாகத் தெரிந்த ஒருவன் சூரியனை நோக்கி வந்தான்.(12) நான் ஏற்கனவே சொன்னது போலத் தன் சக்தியால் உலகங்கள் அனைத்தையும் தன் மகிமையால் சுடர்விடும்படியும், தன் சக்தியால் நிறையும்படியும் ஆகாயத்தைப் பிளந்து அதனுடாகத் தனக்கான பாதையை உண்டாகிக் கொள்பவனைப் போல அவன் வந்தான்.(13) அவனது உடலில் இருந்து வெளிப்பட்ட கதிர்கள், வேள்வித்தீயில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதியின் சுடர்மிக்கப் பிரகாசத்துக்கு ஒப்பாகத் தெரிந்தது. தன் சக்தியாலும், காந்தியாலும் அவன் பார்க்கப்பட முடியாதவனாக இருந்தான். அவனுடைய வடிவம் விளக்கப்பட முடியாததாக இருந்தது. உண்மையில் அவன் இரண்டாம் சூரியனைப் போலவே இருந்தான்.(14)
அவன் அருகே வந்ததும், சூரியன் (மதிப்புமிக்க வரவேற்பைக் கொடுக்கும் வகையில்) தன் கரங்கள் இரண்டையும் விரித்தான். பதிலுக்குச் சூரியனைக் கௌரவிக்கும் வகையில் அவனும் தன் வலக்கரத்தை நீட்டினான்.(15) பிறகு அவன், ஆகாயத்தைத் துளைத்துக் கொண்டு, சூரியனின் வட்டிலுக்குள் நுழைந்தான். சூரியனின் சக்திக்குள் கலந்த அவன், சூரியனாகவே மாறிவிட்டதாகத் தெரிந்தது.(16) இவ்வாறு அவ்விரு சக்திகளும் சந்தித்துக் கொண்டபோது, எது எதுவாக இருக்கிறது என்பதில் நாங்கள் குழப்பமடைந்தோம். உண்மையில், நாங்கள் தேரில் சுமந்த சூரியன் யார், வானத்தின் ஊடாக வந்தவன் யார் என்பதை அடையாளங்காண்பதில் நாங்கள் தவறினோம்.(17) குழப்பமடைந்த நாங்கள் சூரியனிடம், "ஓ! சிறப்புமிக்கவனே, உன்னில் கலந்தவனும், இரண்டாமவனாக உன்னைப் போல மாறியவனும் யார்?" என்று கேட்டோம்" என்றான் {நாகன் பத்மநாபன்}.(18)
சாந்திபர்வம் பகுதி – 363ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |