Unccha vow! | Shanti-Parva-Section-364 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 191)
பதிவின் சுருக்கம் : தன்னுள் நுழைந்த ஒளியின் வரலாற்றைச் சொன்ன சூரியன்...
சூரியன் {நாகன் பத்மநாபனிடம்}, "இவன் அக்னி தேவனல்ல, இவன் அசுரனல்ல. இவன் நாகனுமல்ல. உஞ்சம் {உஞ்சவிருத்தி} என்றழைக்கப்படும் நோன்பை நோற்பதில் வெற்றி மகுடம் சூட்டப்பட்டதன் விளைவால், சொர்க்கத்தை அடைந்த பிராமணன் இவன்[1].(1)
[1] "உஞ்ச நோன்பு {உஞ்சவிருத்தி} என்பது தானியங்கள் அறுவடை செய்யப்பட்டு, அவற்றுக்குரியவர்கள் அவற்றை எடுத்துச் சென்றதும் வயலில் எஞ்சியிருக்கும் தானியங்களைச் சேகரித்து அஃதை உண்டு வாழும் வாழ்க்கையாகும். இது பின்பற்றுவதற்கு மிகக் கடினமானதாகும். எனவே அது தொடர்புடைய தகுதியும் {புண்ணியமும்} மிகப் பெரியதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இந்த மனிதன், மரத்தில் இருந்து விழுந்த பழங்கள், கிழங்குகள் மற்றும் இலைகளை உண்டு வாழ்ந்து வந்தான். சில வேளைகளில் இவன் நீரையும், சில வேளைகளில் காற்றை மட்டுமே உண்டும் குவிந்த ஆன்மாவோடு தன் நாட்களைக் கடத்தி வந்தான்.(2)
இவன் தொடர்ந்து உரைத்த சம்ஹிதைகளால் தேவன் மஹாதேவன் இவனிடம் நிறைவடைந்தான். இவன் சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் செயல்கள் நிறைவேற்றுவதில் முயற்சி செய்து வந்தான். அந்தச் செயல்களின் தகுதியாலேயே இவன் இப்போது சொர்க்கத்தை அடைந்திருக்கிறான்.(3)
செல்வம் இல்லாமல், எவ்வகை ஆசையும் இல்லாமல் இருக்கும் இவன், தன் வாழ்வாதாரக் காரியத்தில் உஞ்சம் {உஞ்சவிருத்தி} என்றழைக்கும் நோன்பை நோற்று வந்தான். நாகர்களே, கல்விமானான இந்தப் பிராமணன், அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தான்.(4), {என்றான் சூரியன்}.
{நாகன் தர்மாரண்யரிடம்}, "சூரிய வட்டிலுக்கு வரும் இந்தச் சிறந்த கதியை அடையும் உயிரினங்களைவிடத் தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, நாகர்களோ மேன்மையானவர்கள் கிடையாது. ஓ! மறுபிறப்பாளரே {தர்மாரண்யரே}, அந்தச் சந்தர்ப்பத்தில் நான் கண்ட அற்புத நிகழ்வு இதுவே.(5)
ஓ! மறுபிறப்பாளரே, உஞ்ச நோன்பை நோற்றதால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்படும் மனிதர்களால் அடையப்படும் கதியை அடைந்தவருமான அந்தப் பிராமணர், இந்த நாள் வரை சூரிய வட்டிலிலேயே தங்கி இருக்கிறார்" என்றான் {நாகன் பத்மநாபன்}.(6)
சாந்திபர்வம் பகுதி – 364ல் உள்ள சுலோகங்கள் : 6
ஆங்கிலத்தில் | In English |