The Brahmana departed! | Shanti-Parva-Section-365 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 192)
பதிவின் சுருக்கம் : தாம் வந்த நோக்கத்திற்கான விடையை நாகனின் பதில் இருந்து அடைந்த பிராமணர்; பத்மநாபனிடம் விடைபெற்றுச் சென்ற தர்மாரண்யர்...
பிராமணர் {தர்மாரண்யர் நாகன் பத்மநாபனிடம்}, "ஓ! நாகா, உண்மையில் இது மிகுந்த அற்புதம் நிறைந்ததாகும். நீ சொன்னதைக் கேட்டதால் நான் உயர்வான நிறைவை அடைந்திருக்கிறேன். நுட்பமான பொருள் நிறைந்த உன் வார்த்தைகள், நான் பின்பற்ற வேண்டிய வழியை எனக்குக் காட்டுகின்றன.(1) ஓ !நாகர்களில் சிறந்தவனே, நீ அருளப்பட்டிருப்பாயாக, நான் இங்கிருந்து செல்ல விரும்புகிறேன். என்னைக் குறித்து விசாரிக்க உன் பணியாட்களை அனுப்பி, இப்போதும், எப்போதும் என்னை நீ நினைவுகூற வேண்டும்" என்றார்[1].(2)
[1] கும்பகோணம் பதிப்பில், "உனக்கு க்ஷேமமுண்டாகட்டும். போகிறேன். காரியங்களில் ஏவுதலிலும், செய்வித்தலிலும் என்னை நினைக்க வேண்டும்" என்றிருக்கிறது.
நாகன் {பத்மநாபன்}, "உம்மை இங்கே கொண்டு வந்த நோக்கம் இன்னும் உமது நெஞ்சில் இருக்கிறது. நீர் இன்னும் எனக்கு அதை வெளிப்படுத்தவில்லை. பிறகு நீர் எங்கே செல்லப் போகிறீர்? ஓ! மறுபிறப்பாளரே {தர்மாரண்யரே}, என்னால் என்ன செய்யப்பட வேண்டும் என்பதையும், உம்மை இங்கே கொண்டு வந்த நோக்கத்தையும் எனக்குச் சொல்வீராக.(3) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, உமது காரியம் என்னவாக இருந்தாலும், அதை நிறைவேற்றிக் கொண்ட பிறகு, என்னை வணங்கி, வாக்கால் அதை வெளிப்படுத்தியோ, வெளிப்படுத்தாமலோ, என்னால் விடைகொடுக்கப்பட்டு, உற்சாகம் நிறைந்தவராக நீர் செல்லலாம்.(4) நீர் என்னிடம் நட்பைக் கொண்டிருக்கிறீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே, இந்த மரநிழலில் அமர்ந்திருக்கும் உம்மை நான் காண மட்டுமே செய்திருக்கிறேன், இந்நிலையில் நீர் செல்வது உமக்குத் தகாது.(4) நீர் எனக்கு அன்புக்குரியவராகவும், நான் உமக்கு அன்புக்குரியவனாகவும் ஆகிவிட்டோம் என்பதில் ஐயமில்லை. இந்த நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் உம்முடையவர்களேயாவர். ஓ! பாவமற்றவரே, என் இல்லத்தில் சில காலத்தைக் கழிப்பதில் உமக்குத் தடையென்ன இருக்கிறது?" என்று கேட்டான்.(6)
அந்தப் பிராமணர் {தர்மாரண்யர் பத்மநாபனிடம்}, "ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஓ! ஆன்ம ஞானத்தை அடைந்த நாகா, இஃது இவ்வாறே இருக்கிறது. தேவர்கள் எவ்வகையிலும் உனக்கு மேன்மையானவர்களாக இல்லை என்பது உண்மையே.(7) நீயாக இருப்பவன் நானே, நானாக இருப்பவன் உண்மையில் நீயே. நானும், நீயும், பிற உயிரினங்கள் அனைத்தும், பரமாத்மாவுக்குள் நுழைய வேண்டியவர்களே.(8) ஓ! நாகர்களின் தலைவா, அறம் அல்லது தகுதியை வென்றெடுக்கும் சிறந்த வழிமுறைகளுக்கான காரியத்தில் என் மனத்தில் ஓர் ஐயம் ஊடுருவியிருக்கிறது. உன்னிடம் இருந்து உஞ்ச நோன்பைக் குறித்து அறிந்ததால், உன் சொற்பொழிவின் மூலம் அந்த ஐயம் விலகப்பெற்றேன்.(9) எனவே, நன்மையான விளைவுகளைக் கொடுக்கும் காரியத்தில் மிகவும் திறன்மிக்கதான அந்த நோன்பை இதுமுதல் நான் பின்பற்றப் போகிறேன். ஓ! அருளப்பட்டவனே, சிறந்த காரணங்களின் அடிப்படையிலான இந்த நிச்சயத் தீர்மானத்தை நான் இப்போது அடைந்திருக்கிறேன். நான் உன்னிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். உனக்கு ஆசிகள். ஓ! நாகா, என் நோக்கம் நிறைவடைந்தது" என்றார் {தர்மாரண்யர்}".(10)
சாந்திபர்வம் பகுதி – 365ல் உள்ள சுலோகங்கள் : 10
இந்தப் பகுதி Sacred Text வலைத்தளத்தில் இல்லை.
ஆங்கிலத்தில் | In English |