Ekalavya, Drona and Arjuna | Adi Parva - Section 134 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 70)
பதிவின் சுருக்கம் : தமது மகனுக்கும், சீடர்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டிய துரோணர்; அஃதை அறிந்து கொண்ட அர்ஜுனன்; அர்ஜுனனுக்கு இரவில் உணவிட வேண்டாம் என்று சமயற்காரனிடம் சொன்ன துரோணர்; இரவில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட அர்ஜுனன்; துரோணரின் அன்பைப் பெற்ற அர்ஜுனன்; ஏகலவ்யனைச் சீடனாக ஏற்காத துரோணர்; ஏகலவ்யனின் திறமையைக் கண்ட இளவரசர்கள்; கட்டைவிரலைக் கூலியாகக் கேட்ட துரோணர்; துரோணர் தன் சீடர்களுக்கு வைத்த சோதனை...
Ekalavya_Adi Parva - Section 134 | Mahabharata In Tamil |
அப்படி அவர்கள் அனைவரையும் சீடர்களாக ஏற்றுக் கொண்ட துரோணர், ஒரு நாள் அவர்களை அழைத்து, தனது காலில் விழுந்து வணங்கச் செய்து, கனத்த இதயத்துடன்,(5) "நான் எனது இதயத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை வைத்திருக்கிறேன். ஓ! பாவங்களற்றவர்களே, நீங்கள் ஆயுதங்களில் நிபுணத்துவம் பெற்றதும், அந்தக் காரியத்தை நிறைவேற்றித் தருவதாக எனக்கு உண்மையாக உறுதியளிப்பீர்களாக" என்று சொன்னார்".(6)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட குரு இளவரசர்கள் அமைதியாக இருந்தனர். ஆனால் அர்ஜுனன், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் காரியம் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றித் தருவதாக உறுதி கூறினான்.(7) மகிழ்ச்சியடைந்த துரோணர், அர்ஜுனனை மார்புறத் தழுவி, அவன் தலையின் நறுமணத்தை மறுபடி மறுபடி முகர்ந்து, அந்தப் பொழுது முழுவதும் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.(8)
பெரும் பலம் கொண்டவரான துரோணர், பாண்டுவின் மகன்களுக்குத் தெய்வீக மற்றும் மனித ஆயுதங்களில் பயிற்சி கொடுத்தார்.(9) ஓ! பாரதக் குலத்தில் காளையே, அந்த பிராமணர்களில் சிறந்தவரான துரோணரிடம் ஆயுதப் பயிற்சி பெற வேறு பிற நாட்டு இளவரசர்களும் அந்த இடத்தில் குழுமினர்.(10)
Adi Parva - Section 134 | Mahabharata In Tamil |
இப்படியே துரோணர், ஆயுத அறிவியல் குறித்த தனது பாடங்களை இளவரசர்களுக்குப் போதித்தார். மாணவர்கள் நீர் நிரப்பும் போது, அனைவருக்கும் நேரம் அதிகமாக வேண்டும் என்று எண்ணி அவர்களுக்குக் குறுகிய வாய்க் கொண்ட பாத்திரத்தைக் {கமண்டலம்} கொடுப்பார் துரோணர்.(16) ஆனால், தனது மகனான அஸ்வத்தாமனுக்கு மட்டும், வேகமாக நீர் நிரப்பி, விரைவாகத் தன்னிடம் அவன் வர வேண்டும் என்று எண்ணி, அகன்ற வாய்க் கொண்ட பாத்திரத்தைக் {கும்பத்தைக்} கொடுத்து அனுப்புவார்.
அஸ்வத்தாமன் விரைவாக வந்து விட்டால், மற்றவர்கள் வருவதற்குள் கிடைக்கும் இடைவேளையில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் மேன்மையான, நுட்பமான முறைகளைத் தனது மகனுக்குக் கற்பித்தார். ஜிஷ்ணு (அர்ஜுனன்) இதை அறியவந்தான். எனவே, வாருணாயுதத்தைக் {வாருணாஸ்திரத்தைக்} கொண்டு அந்தக் குறுகிய வாய்க் கொண்ட பாத்திரத்தில் வேகமாக நீர் நிரப்பி, தனது குருவின் மைந்தன் செல்லும் அதே நேரத்திற்குக் குருவிடம் அவனும் சென்றான். ஆயுதங்களில் ஞானம் கொண்டவனும், அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனும், புத்திசாலியுமான அந்தப் பிருதையின் மைந்தன் {அர்ஜுனன்}, தனது குருவின் மைந்தனை விடச் சிறப்பில் எந்த வகையிலும் தாழ்வடையவில்லை.(17-19)
அர்ஜுனன், தான் மேற்கொண்ட ஆயுதப் பயிற்சிக்கு ஒப்பாகத் தனது குருவுக்குச் செய்த சேவையால், விரைவிலேயே அவன் குருவுக்குப் பிடித்தமான மாணவனானான். (20) துரோணர், தனது மாணவனுக்கு ஆயுதப் பயிற்சியில் இருக்கும் அர்ப்பணிப்பைக் கண்டு, தனது சமையற்காரனை அழைத்து ரகசியமாக,(21) "அர்ஜுனனுக்கு ஒருபோதும் இருளில் உணவிடாதே. இதை நானே சொன்னேன் என்றும் அவனிடம் சொல்லி விடாதே" என்றார்.(22) சில நாள் கழித்து, அர்ஜுனன் விளக்கொளியில் உணவு அருந்திக்கொண்டிருக்கும்போது, காற்றால் விளக்கு அணைந்தது.(23) ஆனால், சக்தி கொண்ட அர்ஜுனன், உணவருந்துவதைத் தொடர்ந்தான். வழக்கமான பழக்கத்தால் அவனது கை, வாய்க்கு செல்வதைக் கண்டான்.(24) பழக்கவழக்கத்தின் சக்தியை உணர்ந்தவனும், பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனுமான அந்தப் பாண்டு மைந்தன் {அர்ஜுனன்}, இரவில் விற்பயிற்சி செய்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(25) ஓ! பாரதா {ஜனமேஜயா}, இரவில் வில்லிலிருந்து புறப்படும் நாணொலியைக் கேட்ட துரோணர், அவனிடம் வந்து அவனை வாரியணைத்துக் கொண்டு,(26) "நான் உண்மையில் சொல்கிறேன். நான் உனக்குக் கற்பிக்கப் போகும் வித்தையால் உனக்கு நிகரான வில்லாளி ஒருவனும் இவ்வுலகத்தில் இருக்க மாட்டான்" என்றார்".(27)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதன்பிறகு துரோணர் அர்ஜுனனுக்குக் குதிரை, யானை, தேர் போன்றவற்றில் அமர்ந்தும், தரையிலும் போர் செய்யும் பயிற்சியைப் போதித்தார்.(28) பெரும்பலம் கொண்ட துரோணர், அர்ஜுனனுக்குக் கதாயுதம், வாள், வேல், ஈட்டிகள், கணைகள் கொண்டு போரிடும் பயிற்சிகளையும் போதித்தார். அவனுக்குப் பல ஆயுதங்களில் பயிற்சியும், ஒரே நேரத்தில் பல மனிதர்களிடம் போரிடும் பயிற்சியும் கொடுத்தார்.(29) அவரது நிபுணத்துவத்தைக் கேள்விப்பட்ட பல நாட்டு மன்னர்களும், இளவரசர்களும், ஆயுத அறிவியல் படிக்கும் ஆர்வத்தில், துரோணரிடம் ஆயிரக்கணக்கில் வந்து குழுமினர்.(30)
ஓ! ஏகாதிபதியே, அப்படி வந்தவர்களில், (கலப்பு வர்ணங்களில் தாழ்ந்த) நிஷாத மன்னன் ஹிரண்யதனுசின் மகனான ஏகலவ்யன் என்ற இளவரசனும் இருந்தான்.(31) எனினும், அறநெறிகளின் விதிகள் அனைத்தையும் அறிந்தவரான துரோணர், (ஒரு காலத்தில்) உயர் பிறப்பாளர்களான தன் சீடர்கள் அனைவரையும் அந்த நிஷாத இளவரசன் {ஏகலவ்யன்} விஞ்சிவிடக் கூடும் என்பதைக் கண்டு, அவனை விற்பயிற்சியில் சீடனாக ஏற்றுக் கொள்ளவில்லை.(32)
ஆனால், ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, அந்த நிஷாத இளவரசன், துரோணரின் பாதத்தைத் தனது தலையால் தொட்டு வணங்கி, வந்த வழியே கானகத்திற்குள் சென்று, அங்கே துரோணரின் களிமண் வடிவத்தைச் செய்து,(33) அதுவே தனது உண்மையான ஆசானென என்று நினைத்து மரியாதையுடன் வணங்கி, மிகக் கடுமையான ஆயுதப் பயிற்சியை அதன் {அந்தப் பதுமையின்} முன்பு செய்யத் தொடங்கினான்.(34) தன் ஆசானிடம் அவன் கொண்ட ஒப்பற்ற மதிப்பினாலும், தன் நோக்கத்தில் அவன் கொண்டிருந்த அர்ப்பணிப்பினாலும், நாண்கயிற்றில் கணைகளைப் பொருத்துவது, இலக்கு நோக்குவது, விடுப்பது ஆகிய மூன்று செயல்முறைகளும் அவனுக்கு மிக எளிதானவையாக இருந்தன.(35)
ஒரு நாள், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, கௌரவ மற்றும் பாண்டவ இளவரசர்கள், துரோணரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, தங்கள் தேர்களில் ஏறி வேட்டைக்குச் சென்றனர்.(36) ஓ! மன்னா, அந்தக் குழுவினருடன் சென்ற ஒரு வேலைக்காரன், சில வழக்கமான பொருட்களுடன், தனது நாயையும் உடன் அழைத்துச் சென்றான்.(37) கானகத்திற்கு வந்த அவர்கள், தங்கள் வேட்டையைத் தேடி உலவிக் கொண்டிருந்தனர். அதே வேளையில், உடன் வந்த நாயும் தனியாகக் கானகத்தில் உலவி, நிஷாத இளவரசன் (ஏகலவ்யன்) இருக்குமிடத்திற்கு வந்தது.(38) கருப்பு நிறத் தோலுடையுடனும், உச்சந்தலையில் குடுமியுடனும், அழுக்கேறிய உடலுடனும் கருத்த நிறத்துடனும் இருந்த நிஷாதனைக் கண்ட அந்த நாய், சத்தமாகக் குரைத்தது.(39)
Ekalavya | Adi Parva - Section 134 | Mahabharata In Tamil |
முழுவதும் அந்நியமானவனாக இருந்த, அந்தக் கடும் முகம் கொண்டவனிடம் {எகலவ்யனிடம்}, "நீ யார்? யாருடைய மகன் நீ?" என்று கேட்டனர்.(44)
இப்படிக் கேட்கப்பட்ட அம்மனிதன், "வீரர்களே, நான் நிஷாத மன்னன் ஹிரண்யதனுசின் மைந்தன். ஆயுதக் கலையில் நிபுணத்துவம் பெற்றவரான ஆசான் துரோணரின் மாணாக்கனாக என்னை அறிவீராக" என்றான்".(45)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதன்பிறகு, அந்த நிஷாதன் தொடர்பான அனைத்தையும் அறிந்து கொண்ட பாண்டவர்கள், நகரத்திற்குத் திரும்பி, துரோணரிடம் சென்று, கானகத்தில் அவர்கள் கண்ட அதிசயமான வில்வித்தைச் சாதனையைப் பற்றி அவரிடம் சொன்னார்கள்.(46) குறிப்பாக அர்ஜுனன், ஓ! மன்னா, அவ்வளவு நேரமும் ஏகலவ்யனைச் சிந்தனை செய்து கொண்டு, பிறகு துரோணரைத் தனிமையில் சந்தித்து, தனது குரு தன் மீது வைத்திருக்கும் அன்பில் நம்பிக்கை கொண்டு,(47) "நீர் என்னை அன்புடன் உமது மார்போடு அணைத்து, எனக்குச் சமமாக உமது மாணவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொன்னீர்.(48) இப்போது உமது மாணவனான இந்த நிஷாத மன்னன் மைந்தன் {ஏகலவ்யன்} என்னைவிட மேம்பட்டவனாக இருப்பது எவ்வாறு?" என்று கேட்டான்".(49)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணர் சிறிது நேரம் சிந்தித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து, அர்ஜுனனை அழைத்துக் கொண்டு நிஷாத இளவரசனிடம் {ஏகலவ்யனிடம்} சென்றார்.(50) அங்கே, உடலெங்கும் அழுக்கேறி, தலையில் குடுமியுடன், கந்தலாடையுடன், கையில் வில்லேந்தித் தொடர்ச்சியாகச் சரம்போலக் கணையடித்துக் கொண்டிருக்கும் ஏகலவ்யனைக் கண்டார்.(51) ஏகலவ்யன் துரோணரைக் கண்டு, சில எட்டுகள் முன் வந்து, அவரது பாதத்தைத் தொட்டு, நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்தான்.(52) இப்படித் துரோணரை வணங்கிய நிஷாத மன்னனின் மைந்தன் {ஏகலவ்யன்}, தன்னை அவரது சீடனாகத் தெரிவித்து, மரியாதையாகக் கரங்குவித்து அவர் முன் நின்றான்.(53) ஓ! மன்னா, துரோணர் அந்த ஏகலவ்யனிடம், “ஓ! வீரனே, நீ எனது சீடனாக இருப்பின், எனக்குரிய கூலியைக் {தட்சணையைக்} கொடுப்பாயாக!" என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்ட ஏகலவ்யன் பெரும் மனநிறைவுகொண்டு,(54) “ஓ! குருவே, நான் உமக்கு என்ன தரட்டும்? எனக்குக் கட்டளையிடுவீராக. வேதமறிந்த அனைத்து மனிதர்களைக் காட்டிலும் முதன்மையானவரே {துரோணரே}, எனது குருவுக்கு நான் தரமாட்டேன் என்று சொல்வதற்கு உலகில் எந்தப் பொருளும் இல்லை" என்றான்.(55)
அதற்குத் துரோணர், “ஓ! ஏகலவ்யா, உண்மையில் எனக்குப் பரிசு {தக்ஷிணை} கொடுக்கும் நோக்கம் உனக்கு இருக்குமானால், உனது வலக்கைக் கட்டை விரலைத் தருமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன்" என்றார்".(56)
Ekalavya, Drona and Arjuna | Adi Parva - Section 134 | Mahabharata In Tamil |
இதனால் அர்ஜுனன், அவனிடம் இருந்த (பொறாமை எனும்) நோய் அகன்று மகிழ்ச்சியடைந்தான். {"அர்ஜுனனுக்கு எவனும் இணையாக முடியாது" என்ற துரோணரின் வார்த்தைகள் இப்போது உண்மையாகின}[1].(59)
[1] { } என்ற அடைப்புக்குறிக்குள் இருக்கும் வரி கங்குலியில் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் இருக்கின்றன.துரோணரின் சீடர்களில் இருவர் கதாயுதத்தைப் பயன்படுத்துவதில் திறன்வாய்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் துரியோதனனும், பீமனும் ஆவர். அவர்களிருவரும் ஒருவரிடமொருவர் பொறாமை கொண்டிருந்தனர்.(60) அஸ்வத்தாமன் ஆயுத அறிவியலின் புதிர்களில் {மந்திர ஆயுதங்களில்} அனைவரையும் விஞ்சி நின்றான். இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்) வாட்போரில் அனைவரையும் விஞ்சி நின்றார்கள்.(61) யுதிஷ்டிரன் தேர்ப்போரில் அனைவரையும் விஞ்சி நின்றான். ஆனால் அர்ஜுனன், எல்லாவகையிலும் அனைவரையும் விஞ்சி நின்றான். புத்திக்கூர்மையில், இருப்பனவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதில், பலத்தில், விடாமுயற்சியில் என அனைத்திலும் அனைவரையும் விஞ்சி நின்றான் அர்ஜுனன். அனைத்து ஆயுதங்களிலும் தேர்ந்த அவன், தேர் வீரர்களில் முதன்மையானவர்களுக்கும் முதன்மையானவனாக இருந்தான். அவனது புகழ் கடல் நுனி வரை உலகெங்கும் பரவியது. அனைவருக்கும் ஒரேமாதிரியான கல்வியாக இருப்பினும், அர்ஜுனன் (நளினமான கரங்களைக் கொண்ட இளவரசனாக) அனைவரையும் மிஞ்சினான். குருவுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதில், அனைவரிலும் முன்னவனாக இருந்தான். எல்லா இளவரசர்களிலும், அர்ஜுனன் மட்டுமே அதிரதனானான்[2].(62-64)
[2] அதிரதன்- தன்னந்தனி தேர்வீரனாக இருந்து, ஒரே நேரத்தில் அறுபதாயிரம்{60,000} எதிரிகளுடன் போர் புரிபவன்.பீமசேனனின் பெரும்பலத்தையும், அர்ஜுனன் அனைத்து ஆயுதங்களிலும் தேர்ந்ததையும் கண்ட திருதராஷ்டிரனின் தீய மகன்கள், அவர்களிடம் பொறாமை கொண்டனர்.(65) ஓ! மனிதர்களில் காளையே {ஜனமேஜயா}, அவர்களது பயிற்சி முடிந்ததும், ஒருநாள், துரோணர் தனது சீடர்களின் ஆயுதப் பயன்களைச் சோதித்துப் பார்க்க விரும்பி, அவர்கள் அனைவரையும் ஒருங்கே கூட்டினார்.(66) அவர்களைத் ஒன்றாகத் திரட்டுவதற்கு முன்னர், அருகில் இருந்த ஒரு மரத்தின் உச்சியில் அவர் ஒரு செயற்கைப் பறவையை நிறுவச் செய்து, அதையே இலக்காக வைத்தார். பிறகு துரோணர் அவர்களிடம்,(67) "உங்கள் விற்களை விரைவாக எடுத்துக் கொண்டு இங்கே வந்து நின்று, விற்களில் கணையைப் பொருத்தி, அந்த மரத்தில் இருக்கும் பறவைக்குக் குறி வையுங்கள்.(68) நான் உத்தரவிட்டதும், அந்தப் பறவையின் தலையைக் கொய்யுங்கள். குழந்தைகளே, நான் ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பைத் தருவேன், ஒவ்வொருவராக வாருங்கள்" என்றார்".(69)
Ekalavya, Drona and Arjuna | Adi Parva - Section 134 | Mahabharata In Tamil |
துரோணர் அதே தேர்வை துரியோதனனுக்கும், திருதராஷ்டிரனின் மற்ற மைந்தர்களுக்கும் ஒருவர் பின் ஒருவராக வைத்தார். மற்ற சீடர்களான பீமன் மற்றும் பல நாடுகளில் இருந்து வந்திருந்த ஏனையோருக்கும் அதே தேர்வையே வைத்தார். ஆனால் யுதிஷ்டிரன் சொன்னது போலவே "மரம், தாங்கள், சக மாணவர்கள், பறவை ஆகியவற்றைக் காண்கிறேன்" என்றே அனைவரும் சொன்னார்கள். குருவால் கடிந்து கொள்ளப்பட்ட அவர்கள் தனியாக நிற்க வைக்கப்பட்டனர்" {என்றார் வைசம்பாயனர்}.(77,78)
ஆதிபர்வம் பகுதி 134ல் உள்ள சுலோகங்கள் : 78
ஆங்கிலத்தில் | In English |