My words shall never be futile said Krishna | Vana Parva - Section 12c | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
திரௌபதி கிருஷ்ணனிடம் தனது துயரை உரைத்தல்; கிருஷ்ணன் திரௌபதிக்கு சமாதானம் கூறுதல்; அர்ஜுனன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகியோர் உறுதி கூறுதல்…
திரௌபதி தொடர்ந்தாள், "*1வாரணாவதத்தில் தங்கள் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை {பாண்டவர்களை} எரித்துக் கொல்ல எண்ணி, அவனே {துரியோதனனே} அந்த வீட்டுக்குத் தீ வைத்தான். இத்தகு செயலை யாரால் செய்ய முடியும்? பிறகுதான் சிறப்புவாய்ந்த குந்தி பேரிடரால் தாக்கப்பட்டு, நெருப்பு சூழ, பயங்கரமாகக் கதற ஆரம்பித்தாள். தனது பிள்ளைகளிடம், "ஐயோ, கெட்டேன்! இந்த நெருப்பில் இருந்து நாம் இன்று தப்பிப்பது எவ்வாறு! ஐயோ எனது பாலகர்களுடன் நான் அழிந்து போகப் போகிறேனே!" என்றாள். பிறகு, பலம் நிறைந்த கரங்களும், காற்றின் சக்தியைப் போன்ற வீரத்தையும் கொண்ட பீமர், தனது தாய்க்கும் சகோதரர்களுக்கும் "*2பறவைகளின் மன்னனான வினதையின் மகன் கருடனைப் போல நான் ஆகாயத்தில் எழும்புவேன். நமக்கு இந்த நெருப்பிடம் இருந்து பயமில்லை" என்று ஆறுதல் கூறினார். பிறகு தனது தாயை இடது புற இடுப்பிலும், மன்னரை {யுதிஷ்டிரரை} வலது புற இடுப்பிலும், இரட்டையர்களைத் தனது தோள்களிலும், விவத்சுவை {அர்ஜுனரை தனது முதுகிலும் தாங்கிய பெரும் பலம் வாய்ந்த விருகோதரர் {பீமசேனர்}, அவர்கள் அனைவரையும் தூக்கிக் கொண்டு, ஒரே தாவலில் நெருப்பைக் கடந்து, தனது தாயையும், சகோதரர்களையும் நெருப்பில் இருந்து காப்பாற்றினார்.
அதே இரவில் அங்கிருந்து தங்கள் தாயுடன் கிளம்பி, ஹிடிம்பனின் காட்டிற்கருகே வந்தனர். களைத்துப் போய் துயரத்துடன் தங்கள் தாயுடன் உறங்கிக் கொண்டிருக்கும்போது, ஹிடிம்பை என்ற ராட்சச பெண் ஒருத்தி அவர்களை அணுகினாள். தங்கள் தாயுடன் தரையில் படுத்து தூங்கும் பாண்டவர்களைக் கண்டு, ஆசையால் உந்தப்பட்டு, பீமசேனரைத் தனது தலைவராகக் கொள்ள நினைத்தாள். அந்தப் பலவீனமானவள் பீமரின் பாதங்களை எடுத்து தனது மடியில் வைத்து, தனது மிருதுவான கரங்களால் அழுத்திக் கொடுத்தாள். அளவிடமுடியா சக்தியும் பெரும் பலமும், வீழ்த்த முடியா வீரமும் கொண்ட பீமர், உறக்கத்தில் இருந்து எழுந்து அவளிடம், "களங்கமற்ற குணம் கொண்டவளே, நீ இங்கு என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார். இப்படிக் கேட்கப்பட்ட அந்தக் களங்கமற்ற, நினைத்த உருவை எடுக்கக்கூடிய ராட்சசப் பெண் மறுமொழியாக அந்த உயர் ஆன்ம பீமரிடம், "இந்த இடத்தில் இருந்து விரைவாக ஓடுங்கள்! பெரும் பலம் கொண்ட எனது தமையன் உங்களைக் கொல்ல வருவான்! ஆகையால் தாமதிக்காமல் விரைந்து செல்லுங்கள்" என்றாள். பீமர் கர்வத்துடன், "நான் அவனிடம் அச்சம் கொள்ளவில்லை! அவன் இங்கு வந்தால், நான் அவனைக் கொல்வேன்!" என்றார். இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டே அந்தப் பயங்கரமான நரமாமிச உண்ணி {ஹிடிம்பன்} அந்த இடத்தில் வந்தான்.
பயங்கரமான உருவத்துடன் காணச் சகிக்காதபடி காட்சியளித்து, உரத்த கர்ஜனை செய்து கொண்டு வந்த அந்த ராட்சசன், "ஹிடிம்பையே, நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்? அவனை என்னிடம் கொண்டு வா, நான் அவனைச் சாப்பிடுகிறேன். தாமதிப்பது உனக்குத் தகாது" என்றான். ஆனால், களங்கமற்ற அந்த ராட்சசப் பெண் {ஹிடிம்பை} மிகுந்த இரக்கம் கொண்டதாலும், அவர்கள் மீது பரிதாபம் கொண்ட சுத்தமான இதயம் கொண்டதாலும், ஏதும் பேசாமல் இருந்தாள். பிறகு அந்த நரமாமிசம் உண்ணும் கொடிய விலங்கு, பயங்கரமாகக் கர்ஜனை செய்து, பெரும் பலத்துடன் பீமரிடம் விரைந்தான். பெரும் சீற்றத்துடன் அவனை அணுகிய அந்த பலம்வாய்ந்த நரமாமிச உண்ணி, பெரும் கோபம் கொண்டு, பீமரின் கைகளைத் தனது கைகளால் பற்றி, இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போல இறுக்கிக் கடினமாக்கி, திடீரென பீமரை இடிமின்னலின் சக்தியுடன் ஒரு அடி அடித்தான். ராட்சசனிடம் அகப்பட்ட கரங்களுடன் இருந்த பீமர் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பெரும் கோபம் கொண்டார். பிறகு பீமசேனருக்கும் ஹிடிம்பனுக்கும் இடையில் ஒரு பயங்கரமான போர் நடந்தது. அனைத்து ஆயுதங்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த அந்த இருவர் புரிந்த போர், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} விரித்திரனுக்கும் நடந்தப் போரைப் போல இருந்தது.
பாவங்களற்றவனே {கிருஷ்ணா}, அந்த ராட்சசனுடன் நெடுநேரம் விளையாடிய பிறகு பலமும் பெரும் சக்தியும் நிறைந்த பீமர், களைப்புடன் போராடிக் கொண்டிருந்த அந்த நரமாமிச உண்ணியை {ஹிடிம்பனை} கொன்றார். ஹிடிம்பனைக் கொன்ற பிறகு, பிற்பாடு *3கடோத்கசனைப் பெற்ற {அவனது தங்கையான} ஹிடிம்பையை முன் விட்டு, பீமரும் அவரது சகோதரர்களும் சென்றனர். பிறகு அந்த எதிரிகளை ஒடுக்குபவர்கள், தங்கள் தாயை அழைத்துக் கொண்டு, பல அந்தணர்கள் சூழ ஏகசக்கரத்தை நோக்கி முன்னேறினர். அவர்களின் பயணத்திற்கு இடையில், வியாசர் வந்து அவர்களின் நன்மைகள் கருதி அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பிறகு ஏகச்சக்கரத்தை அடைந்ததும், அங்கேயும் கடும் நோன்புகள் நோற்ற பாண்டவர்கள் ஹிடிம்பனைப் போலவே கொடுமையான *4பகன் என்ற பெரும் பலம் வாய்ந்த நரமாமிச உண்ணியைக் கொன்றனர். அடிப்பவர்களில் முதன்மையான பீமர் அந்தக் கொடுமையான நரமாமிச உண்ணியைக் கொன்ற பிறகு, தனது சகோதரர்களுடன் துருபதரின் தலைநகருக்குச் சென்றார். கிருஷ்ணா, நீ பீஷ்மகனின் மகளான ருக்மிணியை அடைந்தது போல, அங்கே தங்கியிருந்த சவ்யசாசின் {அர்ஜுனர்} என்னை அடைந்தார்! மதுசூதனா, *5அர்ஜுனர் மற்றவர்களால் செய்ய முடியாத சாதனையைச் செய்தும், அங்கு கூடிய பல மன்னர்களிடம் போரிட்டும் என்னை சுயம்வரத்தில் வென்றார்.
கிருஷ்ணா இப்படியே எண்ணிலடங்கா துயரங்களுடனும், பெரும் சோகத்துடன் தௌமியரைத் தலைமையாகக் கொண்டு, இனிமையான குந்தியின் துணையின்றி வாழ்ந்து வருகிறேன். பெரும் பலத்தையும் சிங்கம் போன்ற வீரத்தையும் கொடையாகக் கொண்டிருந்தும், எதிரிகளிடம் நான் கேவலப்படும்போது இவர்கள் ஏன் இப்படி அமர்ந்திருந்தார்கள்? பலம் குறைந்த தீய கொடும் எதிரிகளின் கையால் தீங்கிழைக்கப்பட்டு, நான் நீண்ட காலம் எரிந்து கொண்டிருக்க வேண்டியதுதானா? நான் பெருமைமிக்க குலத்தில் பிறந்தேன். *6இயல்புக்கு மிக்க வழியில் இந்த உலகத்துக்கு வந்தேன். பாண்டவர்களின் அன்பு மனைவியாக இருக்கிறேன், சிறப்பு மிக்க பாண்டுவின் மருமகளாக இருக்கிறேன்! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா} இப்படி பெண்களில் முதன்மையானவளாக, கணவர்களுக்கு என்னை அர்ப்பணித்தவளாக நான் இருப்பினும், இந்திரர்களுக்கு ஒப்பான பாண்டவர்களின் கண்ணெதிரிலேயே கூந்தலைப் பற்றி இழுத்து வரப்பட்டேன்." என்றாள் {திரௌபதி}.
மென்மையாகப் பேசும் கிருஷ்ணை {திரௌபதி} இப்படிச் சொல்லிவிட்டு தாமரை மொட்டுகளைப் போல இருக்கும் மென்மையான கைகளால் தனது முகத்தை மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள். அப்படி பாஞ்சாலி {திரௌபதி} வடித்த கண்ணீர் அனைத்து நற்குறிகளும் பெற்ற அவளது ஆழமான, பருத்த, அழகான மார்பகங்களைக் கழுவிச் சென்றது. பிறகு அவள் தனது கண்களைத் துடைத்துக் கொண்டு, அடிக்கடி பெருமூச்சுவிட்டபடி கோபம் நிறைந்த வார்த்தைகளுடனும் தடைபட்ட குரலுடனும், "கணவர்கள், அல்லது மகன்கள், அல்லது நண்பர்கள், அல்லது சகோதரர்கள், அல்லது தந்தையோ அற்றவளாக நான் இருக்கிறேன். மதுசூதனா எனக்கு நீயும் இல்லாது போனாய். தாழ்ந்த எதிரிகளால் நான் கடுமையாக நடத்தப்பட்ட போது, நீங்கள் அனைவரும் அதைக் கண்டும் அசையாமல் அமர்ந்திருந்தீர்கள்! கர்ணன் செய்த கேலியால் ஏற்பட்ட வருத்தம் தணிக்கப்பட முடியாததாக இருக்கிறது! இவற்றின் அடிப்படையில், உறவினராக, மரியாதைக்காக, நமது நட்புக்காக, உனக்கு என் மீது இருக்கும் தலைமைத் தன்மைக்காக நான் எப்போதும் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டியவள்" என்றாள்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், அந்த வீரர்களின் கூட்டத்தில் அழுது கொண்டிருந்த திரௌபதியிடம் வாசுதேவன் {கிருஷ்ணன்}, "அழகான மங்கையே, நீ யார் மீது கோபத்துடன் இருக்கிறாயோ அவர்களின் மனைவிமார், விவத்சுவின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்குண்டு இரத்தத்தில் நனைந்து தரையில் கிடக்கும் தங்கள் கணவர்களைக் கண்டு, நீ இப்போது எப்படி அழுகிறாயோ அதே போல அழுவார்கள். பெண்ணே, அழாதே, பாண்டுவின் மகன்களுக்காக நான் எனது முழு சக்தியையும் பயன்படுத்துவேன்! நீ (மறுபடியும்) மன்னர்களுக்கு ராணியாவாய் என்பதை நான் உனக்கு உறுதி கூறுகிறேன். வானம் இடிந்து விழலாம், இமயம் பிளந்து போகலாம், கடல் நீர் வற்றிப் போகலாம், ஆனால் எனது வார்த்தைகள் பலனற்று போகாது {பொய்க்காது}!" என்றான். அச்யுதனின் மறுமொழியைக் கேட்ட திரௌபதி தனது மூன்றாம் கணவனை (அர்ஜுனனை} சாய்ந்தபடி பார்த்தாள். பலம்வாய்ந்த மன்னா {ஜனமேஜயா}, அர்ஜுனன் திரௌபதியிடம், "தாமிரம் போன்ற அழகான கண்களை உடையவளே வருந்தாதே! சிறப்புமிக்கவளே, மதுவைக் கொன்றவன் {மதுசூதனன் = கிருஷ்ணன்} சொல்வது போலவே நடக்கும்! அழகானவளே, வேறு மாதிரியாக நடக்காது!" என்றான்.
திருஷ்டத்யும்னன், "நான் துரோணரைக் கொல்வேன், சிகண்டின் பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வான். பீமசேனர் துரியோதனனைக் கொல்வார், தனஞ்செயர்{அர்ஜுனன்} கர்ணனைக் கொல்வார். தங்கையே, ராமன் {பலராமன்} மற்றும் கிருஷ்ணனின் துணையாகக் கொண்ட எங்களை விரித்திரனைக் கொன்றவனால் கூட வீழ்த்த முடியாது. அப்படி இருக்கும்போது திருதராஷ்டிரனின் மகன்களால் என்ன செய்ய முடியும்?" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகள் பேசப்பட்ட பிறகு, அனைத்து வீரர்களும் தங்கள் முகங்களை வாசுதேவன் பக்கமாக திருப்பினர். அவன், அவர்களுக்கு மத்தியில் இருந்து பின்வருமாறு பேசினான்.
தொடர்வது.......
சூது பெருந்தீங்கானது - வனபர்வம் பகுதி 13
-------------------------------------------------------------------------------------------
*1-வாரணாவதத்தில் தங்கள் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை {பாண்டவர்களை} எரித்துக் கொல்ல எண்ணி,
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
மாளிகைக்கு தீயிட்டான் பீமன் - ஆதிபர்வம் பகுதி 150
-------------------------------------------------------------------------------------------
*2-பறவைகளின் மன்னனான வினதையின் மகன் கருடனைப்
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
பிறந்தான் கருடன் | ஆதிபர்வம் - பகுதி 23
-------------------------------------------------------------------------------------------
*3கடோத்கசனைப் பெற்ற {அவனது தங்கையான} ஹிடிம்பையை....
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
பீமனிடம் பேசிய ராட்சசி - ஆதிபர்வம் பகுதி 154
பீமன் ஹிடிம்பன் மோதல் - ஆதிபர்வம் பகுதி 155
ஹிடிம்பனைக் கொன்றான் பீமன் - ஆதிபர்வம் பகுதி 156-----------------------------------------------------------------------------------------------------------
*4 பகன் என்ற பெரும் பலம் வாய்ந்த நரமாமிச உண்ணியைக் கொன்றனர்.
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
பீம பகாசுர மோதல் - ஆதிபர்வம் பகுதி 165
------------------------------------------------------------------------------------------*5அர்ஜுனர் , பல மன்னர்களிடம் போரிட்டும் என்னை சுயம்வரத்தில் வென்றார்.
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
------------------------------------------------------------------------------------------
*6இயல்புக்கு மிக்க வழியில் இந்த உலகத்துக்கு வந்தேன்.
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
-----------------------------------------------------------------------------------------
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.