Showing posts with label பொற்கதவம். Show all posts
Showing posts with label பொற்கதவம். Show all posts

Thursday, January 09, 2014

பொற்கதவம் - 4 | முதற்கனல் - 9 | வெண்முரசு - ஜெயமோகன்


இந்தப் பகுதி பீஷ்மர் வியாசர் சந்திப்பைச் சொல்கிறது... வியாசர் பீஷ்மருக்கு மன்னன் சிபியின் கதைச் சொல்வதும் வருகிறது..

*********************************************************************************
பொற்கதவம்-4 | முதற்கனல்-9 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...
இந்தக் கதை வரும் பகுதியை நான் மஹாபாரதத்தில் கண்டதில்லை. ஆனால் மன்னன் சிபியின் கதை வருகிறது. அதை இன்னும் நான் மொழிபெயர்க்கவில்லை. இப்போது வனபர்வத்தின் 65வது பகுதியை மொழிபெயர்த்து வருகிறேன். இந்த சிபி கதை வனபர்வத்தின் 196வது பகுதியில் வருகிறது. அதனால் இதில் வரும் சிபி கதையின் ஆங்கில லிங்கைத் தருகிறேன்.
*********************************************************************************

நமது கருத்து:

//சித்ரகர்ணி என்று பெயர்கொண்ட அந்த முதிய சிம்மம் அதற்கு விதி வகுத்த பாதையில் நடந்து வந்து வியாசனின் தவச்சாலையை நோக்கியபடி ஒரு பாறைமீது நின்றுகொண்டிருந்தபோதுதான் அஸ்தினபுரியில் இருந்து பீஷ்மர் அவ்வழியே சென்றார்.// இப்படி ஒரு காட்சி மஹாபாரதத்தில் இல்லை. ஆனால் ஆசிரியரின் புனைவு அருமையாக இருக்கிறது.


// சிபியிடம் அப்பருந்து சொன்னது “மன்னனே உன்னை வணங்குகிறேன். சைத்ரகம் என்னும் செம்பருந்துக்குலத்தின் அரசனாகிய என்பெயர் சித்ரகன். பிறப்பால் நானும் உன்னைப்போன்றே ஷத்ரியன்.// மஹாபாரதத்தில் சிபியிடம் பேசிய பருந்து இந்திரன் என்றும் புறா அக்னி என்றும் வருகிறது.

// பீஷ்மர் குனிந்து அந்தப் புழுதியில் இருக்கும் சிங்கத்தின் காலடித்தடங்களைப் பார்த்துவிட்டு “வயதான பெரிய சிங்கம். நகங்கள் மழுங்கியிருக்கின்றன. அதனால் வேட்டையாட முடியவில்லை.ஆகவேதான் வீட்டுப்பசுவை தேடி வந்திருக்கிறது”// இந்தக் காட்சி பீஷ்மரையே உருவகமாக் காட்டுவதாக அமைகிறது. ஆனால் அப்படி இது உருவகமாக இருந்தால், பின்பு சித்திரகர்ணி, கருவுற்றிருந்த அந்தப் பசுவையும் அடித்து, அதன் கருவையும் உண்பதை எதைக் குறிக்கிறது? பீஷ்மர் வயதான காலத்தில் பெண்களையும் கடத்திவந்து, பிள்ளைவரம் கொடுக்கமுடியாத ஒருவனுக்குக் கட்டி வைத்து கருவை உருவாகவிடவில்லை என்றா? அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

நான் ரசித்த வரிகள்

* அதற்குள் வாசல்கள் ஒவ்வொன்றாக திறந்துகொண்டிருந்தன. ‘இவனை நானறிவேன்…இவன் முகமோ உடலோ நானறியாதது. ஆனால் இவனை நானறிவேன்….என் ஆன்மா இவனைக்கண்டதும் எழுகிறது’ என்று அது திரும்பத்திரும்ப தனக்குள் சொல்லிக்கொண்டது.

* உன்னுடைய ரதசக்கரங்கள் ஓடித்தெறிக்கும் கூழாங்கற்கள்கூட பிறவிகள் தோறும் உன்னை பின்தொடர்கின்றன என நீ அறியவும் முடியாது. நான் இந்த முதுமைவரை வேட்டையாடி வேட்டையாடி கண்டறிந்தது ஒன்றே. காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப்பின்னிச்செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் நாம்’

* பீஷ்மரின் உயரத்தை அண்ணாந்து பார்த்து மகிழ்ந்து சிரித்து “தம்பி அஸ்தினபுரிக்குமேல் உயர்ந்திருக்கும் ஹஸ்தியின் அரண்மனை முகடுபோலிருக்கிறாய் நீ”

* //“ஆம்…அது உண்மை” என்றார் பீஷ்மர். “நான் என்னை உருவாக்கிக் கொள்ள எனக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை. என் அன்னையும், தந்தையும், குலமும், தேசமும், நான் கற்ற நெறிகளும் இணைந்து என்னை வடிக்கின்றன. என் வழியாக உருவாகும் என்னை நானே அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்”// இந்த வார்த்தைகள் இன்றைய மனிதர்கள் பலருக்கும் கூட பொருந்தும் என நினைக்கிறேன்.

* ஆயுதங்கள் உயிரற்றவை. உயிரற்றவைக்கு மட்டுமே கச்சிதம் கைகூடுகிறது. அவற்றை இயக்கும் விதிகளுக்கு அப்பால் அவற்றில் ஏதுமில்லை..” பீஷ்மர் தொடர்ந்தார். “நான் என்னை மிகமிகக்கூரிய ஓர் ஆயுதம் என்பதற்கு அப்பால் உணர்ந்ததேயில்லை.

* அந்தப்பெண்களின் உள்ளம். அவர்கள் இந்த மண்ணில் வந்து விடப்போகும் கண்ணீர். அதை களம் வரைந்த பின்பே ஆடத்தொடங்கும் என் எளிய தர்க்கஞானமும், நான்குவாயில்களையும் மூடிக்கொண்டிருக்கும் குலநீதியும் தாங்குமா என்ன?”

* “என்னுடைய அரண்மனை வளாகத்திற்குள் என் கைகளுக்குள் வந்த ஒவ்வொன்றுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்பதே என் தன்னறம்” என்றான் சிபி.

* என்னை இந்த அலகுடனும் இந்த நகங்களுடனும் இப்பெரும்பசியுடனும் படைத்த ஆற்றல் அல்லவா என்னை கொன்று உண்பவனாக ஆக்கியது? இந்தச் சின்னஞ்சிறு வெண்புறா இன்று காலையில் மட்டும் ஆயிரம் சிறுபூச்சிகளை கொத்தி உண்டிருக்கிறதென்பதை நீ அறிவாயா? அந்த ஆயிரம் புழுக்கள் பல்லாயிரம் சகப்புழுக்களை விழுங்கி நெளிந்துகொண்டிருந்தன என்பதை அறிவாயா? இதை விட்டுவிடு. இதைக் காப்பாற்ற முயலும்போது நீ இப்அண்டத்தை நிகழ்த்தும் முதல்மனதுடன் போட்டிபோடுகிறாய்”



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Wednesday, January 08, 2014

பொற்கதவம் - 3 | முதற்கனல் - 8 | வெண்முரசு - ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=44003
http://venmurasu.in/2014/01/08/ நூல்-ஒன்று-முதற்கனல்-8/

இந்தப் பகுதி பீஷ்மர் அறிமுகம், பராசரர் அறிமுகம், வியாசர் அறிமுகம் என பல பகுதிகளைத் தொடுகிறது...

*********************************************************************************
பொற்கதவம்-3 | முதற்கனல்-8 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...
*********************************************************************************

நமது கருத்து:

//இன்று காலை பேரமைச்சர் இதைக்கொண்டுவந்து என்னிடம் அளித்தார். பலபத்ரரின் ஒற்றன் நாகரதேசத்துக்குச் சென்ற ஒரு தூதனைக் கொன்று இதை கைப்பற்றியிருக்கிறான்.// என்று சத்தியவதி சொல்வதாக ஒரு வசனம் வருகிறது. தூதர்களைக் கொல்வது அக்கால வழக்கப்படு பெரும் பாவமாகும். "தூதனாக வந்ததால் பிழைத்தாய்" என்று மகாபாரதத்தில் பல இடங்களில் வரும்.


காசிமன்னன் சுயம்வரத்திற்கு அஸ்தினாபுரத்திற்கு அழைப்புக் கொடுக்காமல் நடத்த எண்ணினான் என்ற மகாபாரதச் செய்தியை வைத்துக் கொண்டு சத்தியவதி பீஷ்மரிடம் ஓலைகள் காட்டும் காட்சியை அழகாகப் புனைந்திருக்கிறார் திரு.ஜெயமோகன்.

காசி மன்னன் பெயர்க்குறிப்பு முழு மஹாபாரதத்தில் இல்லை // “காசிமன்னன் பீமதேவன் அவனுடைய மூன்று மகள்களுக்கும் சுயம்வரம் ஏற்பாடு செய்திருக்கிறான்” என்றாள் சத்யவதி.//

பீஷ்மரை கூர்ந்து நோக்கி சத்யவதி சொன்னாள். “அந்த விழாவுக்கு நம்மைத்தவிர பாரதநாட்டில் உள்ள அத்தனை அரசர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருக்கிறான் பீமதேவன்…நம்மை அவமானப்படுத்துவதற்காகவே இதைச் செய்திருக்கிறான்.  நாம் அவனிடம் பெண்கேட்டதற்காகவே இதைச்செய்கிறான்…”

// அறத்தின் வழிகள் முற்றறிய முடியாதவை. ஆனால் மனிதன் செய்யும் அறமீறல்களோ விண்ணிலும் மண்ணிலும் பொறிக்கப்படுபவை. மனிதனுக்கு படைப்புசக்திகள் வைத்த மாபெரும் சூது இதுவென்று நினைக்கிறேன்”// அருமையான வைர வரிகள்.

மகாபாரதத்தில் வரும் கல்மாஷபாதனைத்தான் கிங்கரன் என்கிறார் என்று நினைக்கிறேன்.

இந்தப் பதிவில் நான் ரசித்த வரிகள்

* ஒரு கணமேனும் தன்னைப்பற்றி நினையாதவர்களுக்கு மட்டுமே உரிய கருணை நிறைந்த புன்னகை கொண்டிருந்தான்.

* ஒவ்வொரு பார்வையிலும் நான் இங்கிருப்பவனல்ல என்று சொல்வதுபோல, ஒவ்வொரு சொல்லிலும் இதற்குமேல் சொல்பவனல்ல என்பதுபோல, ஒவ்வொரு காலடியிலும் முற்றாக கடந்து செல்பவர்போல அவர் தெரிந்தார்.

* அக்கதைகளைக் கேட்கும் எவரும் அஸ்தினபுரியின் அரசனை மாயத்தால் கைப்பற்றிய தீயதேவதை என்றுதான் என்னைப்பற்றி எண்ணுவார்கள்.

* ஆயர்குடிகளும் வேளாண்குடிகளும் கடலவர்களும் எதை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் நான் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

* அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது” என்றார்.

* பீஷ்மர் திகைத்து எழுந்து பதறும் குரலில் “அன்னையே நீங்கள் சொல்வது அறப்பிழை….ஒருபோதும் செய்யக்கூடாதது அது…” என்றார். “அஸ்தினபுரியின் அரசி ஒருபோதும் எண்ணக்கூடாத திசை. வேண்டாம்” என்றார்.

* பீஷ்மர் “அன்னையே, உங்கள் சொல் எனக்கு ஆணை. ஆனால் நான் இக்கணம்வரை என் அகம் சொல்லும் நெறியை மீறியதில்லை. எதிர்த்துவரும் ஷத்ரியனிடம் மட்டுமே நான் என் வீரத்தைக் காட்டமுடியும். அரண்மனைச் சிறுமிகளிடம் தோள்வலிமையைக் காட்டினால் இந்த பார்தவர்ஷமே என்னைத் தூற்றும்…என்னை மன்னியுங்கள். என்மேல் கருணை காட்டி தங்கள் ஆணையிலிருந்து என்னை விடுவியுங்கள்”

* “பழிச்சொல்லில் வாழ்வதே வீரனின் மீளா நரகம் தாயே…என்னை அந்த இருண்ட குழியில் தள்ளிவிடாதீர்கள்” என்றார்.

* மொத்தப்அண்டத்தையும் மொழியாக மட்டுமே அறியும் பேரருளைப் பெற்றவர் அவர் என்றது சூதர்குலம். படைக்கப்பட்டதெல்லாம் வானில்தான் இருந்தாகவேண்டும் என்பதுபோல கூறப்பட்டவை எல்லாம் அவரது சித்தத்திலும் இருந்தாகவேண்டும் என்று நம்பினர்.

* புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில் மூழ்கி எழுந்தார். துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார்.

* அந்த மீன்கள் நீருக்குள் இசைத்துக்கொண்டிருக்கும் பாடலே அவளிலும் ஒலிக்கிறது என்று உணர்ந்து கொண்டார். அக்கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என.

* மச்சகந்தி கருவுற்று உதரம் நிறைந்தபின் யமுனைக்குள் இருந்த மணல்தீவொன்றுக்குள் நாணலில் சிறுகுடிலைக் கட்டி அதில் தங்கிக்கொண்டாள். சித்திரை மாத முழுநிலவுநாளில் அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளைப்போலவே கருநிறமும் வைரம்போன்ற கண்களும் கொண்ட குழந்தை அது.

* கருநிறம் கொண்டிருந்ததால் அதை அவர்கள் கிருஷ்ணன் என்றழைத்தனர். தீவில் பிறந்தவனாதலால் துவைபாயனன் என்றனர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, January 07, 2014

பொற்கதவம் - 2 | முதற்கனல் - 7 | வெண்முரசு - ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=43944
http://venmurasu.in/2014/01/07/நூல்-ஒன்று-முதற்கனல்-7

இந்தப் பகுதியில் சந்தனு சத்தியவதி காதலும், சத்தியவதி எப்படி ஆட்சியைத் தனது கைகளில் வைத்திருந்தாள் என்பதும் சொல்லப்படுகிறது.

*********************************************************************************
பொற்கதவம்-2 | முதற்கனல்-7 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...
*********************************************************************************

சந்தனு சத்தியவதி காதலை அழகாக சொல்லியிருக்கிறார். நாமே அந்த சந்தனுவாக உணரும் படி இருக்கிறது இந்தப் பதிவு.


சந்தனு தானே சத்தியவதியை அடைந்தான் என்று சொல்வதால், பீஷ்மனின் சபதத்திற்கு அவசியம் இல்லாமல் போகிறது. ஒரு வேளை பிளாஷ்பேக்காக பின்னால் வரக்கூடும் என்று நினைக்கிறேன். பீஷ்மனின் சபதமே மஹாபாரதத்திற்கு முதுகெலும்பு. சரி சபதம் இல்லையென்றாலும், பீஷ்மன் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாவது சொல்ல வேண்டியிருக்கும்.

உபரிசரன் {வசுவின்} கதை இருந்தால், பாண்டவர்களுடன் சேதி நாட்டுக்கு இருந்த தொடர்பின் ஆழம் வாசகர்களுக்குப் புரியும். இந்தப் பதிவில் தசராஜனே சத்தியவதியின் தகப்பன் என்பது நிறுவப்படுவதால், {மகாபாரதக் கதையின் படி அவன் வளர்ப்பு தந்தைதான்} அதை வாசகர்கள் உணராமல் போகக்கூடும்.

ஓவியம் அருமை. இதுவரை மனிதர்களின் முதுக்குக்குப் பின்னால், தூரத்து நிழல் உருவம் என்றே  படங்கள் வந்திருக்கின்றன. குளோஸ்-அப் ஓவியங்களையும் எதிர்பார்க்கிறது மனம்.
இந்தப் பதிவில் நான் ரசித்த வரிகள்...

* “நம் உறவின் எல்லை இது. இனி நாம் வேறு ஒரு உலகிலேயே சந்திக்கமுடியும்” என்று சொல்லி நீரில் மூழ்கி மறைந்தாள். அவன் அந்தக்குழந்தையை முகர்ந்து பார்த்தான். அத்ரிகையின் மீன்மணத்தை கொண்டிருந்தது அது.

* அவளை மார்போடணைத்து அவள் சிறுமேனியின் நறுமணத்தை முகர்வதையே தன் வாழ்வின் பேரின்பமாகக் கொண்டிருந்தான்.

* நிலத்தை விட நீரே அவளுக்கு உவப்பானதாக இருந்தது. நீருக்குள் அவளுக்கு சிறகுகள் முளைப்பதாக அவள் தோழிகள் சொன்னார்கள். மனிதர்கள் ஒருபோதும் சென்று பார்க்கமுடியாத நீராழங்களுக்கெல்லாம் அவள் முக்குளியிட்டுச் சென்றாள். அவர்கள் எவரும் அறிந்திராத முத்துக்களுடன் திரும்பி வந்தாள்.

* நிலவொளியில் யமுனை கிளர்ச்சிகொண்டிருந்ததனால் அலைகள் அவர் தோள்களுடன் மல்லிட்டன. கைசோர்ந்து அவர் நீரில் மூழ்கத் தொடங்கினார்.

* நீருக்குள் மூழ்கி தன் தலைக்குமேல் நிலவொளி நீரிலாடும் நடனத்தைப்பார்த்தபடி கீழே சென்றுகொண்டே இருந்தபோது அவர் தன்னை நோக்கி அவள் நீந்தி வருவதைக் கண்டார். அவளுடைய கண்கள் மீன்விழிகள் போல இமையாது திறந்திருந்தன.

* செம்பவளப் பாறைகள் மேல் பொன்னாலும் வெள்ளியாலும் உடல் கொண்ட மீன்கள் சிறகுகளை விசிறியபடி அவன் கேட்கமுடியாத சொற்களை உச்சரித்தபடி பறந்துசென்றன. அச்சொற்கள் குமிழ்களாக எழுந்து நூறாயிரம் வண்ணங்கள் காட்டி வானுக்கு எழுந்தன.

* அவள் உடலில் நீராழத்தில் அவர் உணர்ந்த வாசனையை அறிந்தார். புதுமீன் வாசனையா மதநீரின் வாசனையா என்றறியாமல் அவர் அகம் தவித்தது

* பதினெட்டு ஆண்டுகாலம் சத்யவதியின் மேனியின் வாசனையன்றி வேறெதையும் அறியாதவராக அரண்மனைக்குள் வாழ்ந்தார் சந்தனு. ஒவ்வொருநாளும் புதியநீர் ஊறும் சுனை. ஒவ்வொரு காலையிலும் புதுமலர் எழும் மரம். ஒவ்வொருகணமும் புதுவடிவு எடுக்கும் மேகம்.

*  ‘கன்றுக்கு பாற்கடல் மரணமேயாகும்’ என்று முதுநிமித்திகர் சொன்னார். அவருடலில் நாள்தோறும் காய்ச்சல் படிப்படியாக ஏறி வந்தது.

*  சந்தனுவின் அரசியாக வந்தபின்னர் சிலநாட்களிலேயே அஸ்தினபுரியின் ஆட்சியை முழுக்க சத்யவதியே ஏற்றுக்கொண்டாள். மதம் கொண்ட யானையை பார்வையாலேயே அடக்கி மண்டியிடச்செய்யும் ஆற்றல்கொண்டவளாக அவளிருந்தாள். 



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Monday, January 06, 2014

பொற்கதவம் | முதற்கனல் - 6 | வெண்முரசு - ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=43926

இந்தப் பகுதியில் சந்தனு இறப்பது, சித்திராங்கதன் அரியணை ஏறுவது, சித்திராங்கதன் கந்தர்வனால் கொல்லப்படுவது. விசித்திரவீரியனை அரியணையில் அமர்த்துவது ஆகியன வருகின்றன.

*********************************************************************************
முதற்கனல்-6 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவு...

சந்தனுவின் மைந்தர்கள் | ஆதிபர்வம் - பகுதி 101- http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section101.html

*********************************************************************************

1. முழுமஹாபாரதத்தில் //விசித்திரவீரியன் பருவம் அடைவதற்கு  முன்னரே, மன்னன் சந்தனு, தவிர்க்க முடியாத காலத்தின் தலையீடுகளை உணர்ந்தான். சந்தனு சொர்க்கத்திற்கு உயர்ந்த  பின்னர், பீஷ்மன் தன்னை சத்தியவதியின் தலைமையின் கீழ் நிறுத்தி, எதிரிகளை ஒடுக்கும் சித்திராங்கதனை அரியணையில் ஏற்றினான்.// என்று இருப்பது

வெண்முரசில் //ஃபால்குன மாதம் விசாக நட்சத்திரத்தில் மழைக்கால இரவின் நான்காம் சாமத்தில் முதியமன்னர் சந்தனு உயிர்துறந்தார். அவரது உடல்நிலையை அறிந்த மக்களெல்லாம் ஊர்மன்றுகளிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி நின்று அரண்மனைக்கோட்டைமுகப்பின் வெண்கலமணியாகிய காஞ்சனத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். வாத்தியங்களை தாழ்த்திவைத்து சூதர்கள் சோர்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது வெறிமின்னும் கண்களும் சடைவிழுதுகள் தொங்கும் தோள்களும் புழுதியும் அழுக்கும் படிந்த உடலுமாக பித்தன் ஒருவன் கோட்டைவாசலைத் தாண்டி ஊருக்குள் நுழைந்தான். கண்டாமணியை நோக்கி கூடியிருந்த மக்கள் நடுவே அவன் வந்து நின்றபோது அவனுடைய விசித்திரமான தோற்றத்தாலும் சைகைகளாலும் மக்கள் விலகி நின்று கவனிக்கத்தொடங்கினர்.// என்று விரிவாகவே இருக்கிறது   {இச்செய்தி வேறு புராணங்களில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம்}.

2. வெண்முரசில் //புடைத்த தசைநார்களும் நீலநரம்புகளும் அசையும் உடல் கொண்ட அந்த அழகனை அள்ளியணைக்க இருகைகளையும் விரித்து முன்னால் குவிந்தான். நீருக்குள் இருந்த சித்ராங்கதன் என்னும் கந்தர்வன் அவனை அணைத்து இழுத்துக்கொண்டு ஆழத்துக்குள் புகுந்துகொண்டான்.// என்று வருவது

முழுமஹாபாரதத்தில் //சித்திராங்கதன் எதிரி மன்னர்களை எல்லாம் அழித்து, தனக்கு நிகர் யாரும் இல்லை என்று உணர்ந்தான். தன்னால் மனிதர்களையும், அசுரர்களையும், ஏன் தேவர்களையும் வெல்ல முடியும் என்று நினைத்த சித்திராங்கதன், பெரும் பலம் வாய்ந்த மன்னனான கந்தர்வ மன்னனைப் போருக்கு அழைத்தான். பெரும் பலசாலிகளான அந்த கந்தர்வனும், குருபரம்பரையின் முன்னவனும் குருக்ஷேத்திரத்தில் உக்கிரமாக போர் செய்தனர். அந்தப் போர் சரஸ்வதி நதிக்கரையில் மூன்று முழு வருடங்களுக்கு உக்கிரமாக நடந்தது. அந்த பயங்கரப் போரில் அடர்ந்த கணைகள் மழையைப் போலப் பொழிந்தன. அவர்களிருவரில் அதிக தந்திரம் கொண்ட கந்தர்வன் குருக்களின் இளவரசனைக் கொன்றான். மனிதர்களில் முதன்மையான, எதிரிகளை ஒடுக்கும் சித்திராங்கதனைக் கொன்றுவிட்டு கந்தர்வன் மேலுலகம் சென்றான். ஓ மன்னா, மனிதர்களில் புலி போன்ற பெரும் வீரமிக்க சித்திராங்கதன் கொல்லப்பட்ட பிறகு, சந்தனுவின் மைந்தன் பீஷ்மன், அவனது ஈமக்கடன்களை முடித்து, பெரும் சக்தி கொண்ட விசித்திரவீரியன் சிறுவனாக இருந்த போதே அவனை குருக்களின் அரியணையில் அமர்த்தினான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section101.htm// என்று வருகிறது.

3. சித்திராங்கதன் தன் பெயர் கொண்ட கந்தர்வனுடனேயே 3 வருடங்கள் தொடர்ச்சியாகப் போரிட்டு மடிந்தான் என்பதுதான் மஹாபாரதச் செய்தி

கந்தர்வனுக்கும் ஒரே பெயர்தான் என்பதால் கிணற்றில் தெரியும் தனது பிம்பத்தைப் பார்த்து விழுந்து இறப்பதாகக் காட்டியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

மேலும் சித்திராங்கதன் குறித்த வர்ணனை அவன் இயல்புக்குமாறாக பெண்ணை விரும்பாது ஆணை விரும்புபவனாகச் சித்தரிக்கப் படுகிறதோ என்றும் நினைக்கிறேன். ஆனால் அதற்கு புராண ஆதரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இந்தப் பதிவில் ஹஸ்தி மன்னன், யானைகள், அஸ்தினாபுரத்தின் தோற்றம், பித்தனின் அறிமுகமும், அவன் சொல்லும் வார்த்தைகளும் அழகாக இருக்கின்றன.

இந்தப் பதிவின் ஓவியம் அருமையாக இருக்கிறது. இனி வரும் பதிவுகளில் ஓவியம் குறித்து பாராட்ட வேண்டியத்தில்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொருநாளும் பாராட்டிக் கொண்டிராமல், குறை இருந்தால் மட்டும் சுட்டிக் காட்டலாம் என்றிருக்கிறேன்.

இப்பதிவில் நான் ரசித்த வரிகள்...

* மண்ணுலகின் எழில்காண விண்ணவரும் வருவதற்கு அஸ்தினபுரியே முதற்காரணமாக அமைந்தது.

* விடியலின் முதற்கதிர் மண்ணைத் தொட்டு முதல் கூழாங்கல்லை பொன்னாக்கியபோது சூதர்களின் பாடல் முடிந்து தலைக்கோலர் தன் வெண்சங்கை ஊதினார்.

* “தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது” என்று அவன் சந்தனுவைப்பற்றி சொன்னான். “வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” என்று சந்தனுவின் மைந்தர்களான சித்ராங்கதனைப்பற்றியும் விசித்திரவீரியனைப்பற்றியும் சொன்னான்.

* “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன” என்றார்.

* அந்த துயரம் நிறைந்த கண்களையே சிலகணம் பார்த்துநின்ற பலபத்ரருக்கு தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்கமுடியும் என்று பட்டது. ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுடவாழ்க்கையை பார்த்துநிற்கின்றன.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்