Self-restraint! | Shanti-Parva-Section-292 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 119)(பராசர கீதை - 2)
பதிவின் சுருக்கம் : நன்மை அளிக்கக்கூடிய காரணங்களைக் குறித்துப் பராசரர், மன்னன் ஜனகனுக்குச் சொன்னதன் தொடர்ச்சியை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பராசரர் {ஜனகனிடம்}, "மனத்துடன் கூடிய உடலெனும் இந்தத் தேரை அடைந்து, ஞானம் எனும் கடிவாளத்தைக் கொண்டு, புலன்நுகர் பொருட்களெனும் குதிரைகளைக் கட்டுப்படுத்தும் மனிதனை நுண்ணறிவு கொண்டவன் {அவன் புத்திமான்} என நிச்சயம் கருதலாம்.(1) ஓ! மறுபிறப்பாளனே, தற்சார்புடைய மனம் கொண்டவனும், வாழ்வாதார வழிமுறைகளைக் கைவிட்டவனுமான ஒரு மனிதனால் (பரமனிடம் குவிந்த தியானம் மற்றும் பரமனிடம் கொள்ளும் பக்தியின் வடிவில்) செய்யப்படும் வணக்கமுறை மிகுந்தப் பாராட்டுக்குரியதாகும்; அந்த வணக்கமுறையானது, செயல்களைக் கடப்பதில் வென்ற மனிதனிடம் பெறப்பட்ட போதனையின் விளைவால் கிடைப்பதேயன்றி, {ஆன்ம} முன்னேற்றத்தில் ஒரே நிலையில் உள்ள மனிதர்களின் விவாதப் பரிமாற்றத்தால் கிடைப்பதல்ல[1].(2) ஓ! மன்னா {ஜனகனே}, இவ்வளவு கடினத்துடன் குறிப்பிட்ட அளவுக்கான வாழ்நாள் காலத்தை அடைந்து பிறகு, (புலன்களின் ஈடுபாட்டால்) அஃதை ஒருவன் குறைத்துக் கொள்ளக் கூடாது. மறுபுறம், மனிதன் எப்போதும் அறச்செயல்களின் மூலம் படிப்படியாக அடையக்கூடிய முன்னேற்றத்திற்காக எப்போதும் முயற்சிக்க வேண்டும்[2].(3) ஜீவன் தன் வெவ்வேறு இருப்புக் காலங்களில் ஆறு வெவ்வேறு நிறங்களை அடைந்த பிறகு, மேன்மையான நிறத்தில் இருந்து கீழே விழுபவன் கண்டிப்புக்கும், நிந்தனைக்கும் தகுந்தவனாவான். எனவே, நற்செயல்களின் விளைவை அடைந்த ஒருவன் ரஜஸ் குணத்தால் களங்கமடைந்த செயல்கள் அனைத்தையும் தவிர்க்கும் வகையில் தன் நடத்தையை அமைத்துக் கொள்ள வேண்டும்[3].(4) மனிதன் செய்யும் அறச்செயல்களின் மூலம் மேன்மையான நிறத்தை அடைகிறான். அடைதற்கரிய மேன்மையான நிறத்தை அடைய இயலாத மனிதன், பாவம் நிறைந்த செயல்களைச் செய்வதன் மூலம் (நரகில் மூழ்கி, தாழ்ந்த நிறத்தில் வீழ்வதன் மூலம்) தன்னைத் தானே கொன்று கொள்கிறான்.(5)
[1] "இந்த ஸ்லோகம் புரிந்து கொள்ள மிகக் கடினமானதாகும். இங்கே சொல்லப்படும் சேவை என்ற சொல்லானது, குவிந்த தியானத்துடன் பக்தியின் வடிவில் பரம்பொருளுக்குச் செலுத்தப்படும் வணக்கமுறையைக் குறிக்கிறது. விருத்திஹினம் என்பது வாழ்வாதார வழிமுறைகளைக் கைவிட்டு உலகப் பொருட்களைத் தவிர்ப்பவனைக் குறிக்கிறது. இரண்டாவது வரியில் உள்ள த்விஜன் என்பது எட்டாம் வேற்றுமை உருபாகும். சுருக்கமாக, ‘இத்தகைய சேவை {வணக்கமுறை}, தகுந்த ஆசான்களிடம் இருந்து கற்கப்பட வேண்டுமேயன்றி, ஆன்ம முன்னேற்றத்தில் ஒரே நிலையில் உள்ள மனுதிர்களின் விவாதத்தால் கற்கப்படக்கூடாது’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள் ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஜீவனமில்லாதவனும், (ஸேவையை) அடுத்த மனமுள்ளவனுமாயிருப்பவனுக்குப் பிராம்மணன் கையால் நிறைவேறின ஸேவையானது புகழப்படுகின்றனது. ஸமானமாயிருக்கிற ஒருவருக்கொருவரிடத்திலிருந்து உண்டாவது சிலாகிக்கப்படுகிறதில்லை" என்றிருக்கிறது.[2] "சேவையை {வணக்கமுறையை} விரைவில் அல்லது காலத் தாமதமில்லாமல் பயில வேண்டும் என்று சொல்வதே இந்தச் சுலோகத்தின் நோக்கமென உரையாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "சனத்குமாரருக்கும், விருத்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலில் இந்த ஆறு நிறங்களும் குறிப்பிடப்படுகின்றன, மேலும் மேன்மையான நிறத்தை அடைவதற்கு, அல்லது மேன்மையான இருந்து கீழ்மையான ஒன்றுக்கு வீழ்வதற்குச் செய்யப்படும் செயல்களின் இயல்புகளையும் குறிப்பிடப்படுகின்றன. இது சாந்தி பர்வம் பகுதி 280ல் https://mahabharatham.arasan.info/2018/09/Mahabharatha-Santi-Parva-Section-280.html இருக்கிறது.
விழிப்பற்ற நிலையிலோ, அறியாமையிலோ செய்யப்படும் பாவம்நிறைந்த செயல்கள் அனைத்தும் தவங்களின் மூலம் அழிக்கப்படுகின்றன. எனினும், அறிந்தே செய்யப்பட்ட பாவச் செயலானது மிகுந்த துன்பத்தை உண்டாக்குகிறது.(6) எனவே, ஒருவன் கவலையை மட்டுமே கனியாகக் கொண்ட பாவச் செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.(7) நுண்ணறிவுமிக்க மனிதன், பாவம் நிறைந்த தன்மையைக் கொண்ட ஒரு செயலானது, பெரும் பயனை விளைவிப்பதாக இருந்தாலும், சண்டாளனைத் தீண்டாத ஒரு தூய மனிதனைப் போல அஃதை {அந்தப் பாவச்செயலை} ஒருபோதும் செய்யமாட்டான்[4].(8) பாவச் செயல்கள் துன்பம் நிறைந்தவையாக இருப்பதையே நான் காண்கிறேன். பாவத்தின் மூலம், பாவியின் பார்வையே வக்கிரமடைவதால் அவன் தன் உடலையும், ஆன்மாவோடு கூடிய உடலின் அங்கங்களையும் சீர்குலைத்துக் கொள்கிறான்.(9) இந்த உலகில் துறவை மேற்கொள்ளாத மூடன், இம்மையில் விடைபெற்றுச் செல்லும்போது பெரும் துன்பத்தால் பீடிக்கப்படுகிறான்.(10)
[4] "ஒரு குறிப்பிட்ட வகைச் சண்டாளன் ’குசலின்’ என்றழைக்கப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புத்திமானானவன் பெரிய பயனுள்ளதாயினும் பாவஸம்பந்தமுள்ள காரியத்தைப் பரிசுத்தனாயிருப்பவன் ராஜஸனாயிருப்பவனை எப்படி ஆச்ரயிக்கக்கூடாதோ அப்படி ஆச்ரிக்கக்கூடாது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன் தீயச் செயல்கள் பெரும் கனிகளுக்கு வழிவகுப்பவையாக இருப்பினும், மங்கலமான மனிதன் களங்கமடைந்த நீரைத் தீண்டாததைப் போலவே, அவற்றின் மூலம் ஒருபோதும் கட்டப்பட மாட்டான்" என்றிருகிறது.
ஓ! மன்னா, நான் சொல்வதைக் கவனத்துடன் கேட்பாயாக, நிறமற்ற துணி புழுதியடையும்போது, அதைத் தூய்மைப்படுத்தலாம், ஆனால் கருப்புச் சாயம் கொண்ட துணியைத் தூய்மைப்படுத்த முடியாது; பாவத்தின் வழக்கிலும் அதேதான் நேர்கிறது.(11) அறிந்தே பாவமிழைத்த மனிதன், அந்தப் பாவத்தைக் கழிப்பதற்காக அறச்செயல்களைச் செய்தால், அந்த நல்ல மற்றும் தீய செயல்களுக்குண்டான கனிகளைத் தனித்தனியாக அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் வேண்டும்[5].(12) பிரம்மத்தை ஓதுபவர்கள் {பிரம்மவாதிகள்}, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கொண்டு, அறியாமையால் செய்யப்பட்ட தீங்கேற்படுத்தும் செயல்கள் அனைத்தும் அறச்செயல்களால் கழிக்கப்படுகின்றன என்று சொல்கிறார்கள்.(13) எனினும், அறிந்தே செய்யப்பட்ட பாவத்தை அறத்தால் ஒருபோதும் கழிக்க முடியாது. பிரம்ம சாத்திரங்களை அறிந்தவர்களும், பிரம்மத்தை ஓதுபவர்களுமான மறுபிறப்பாளர்கள் இவ்வாறே சொல்கிறார்கள். அறவோராலோ, பாவிகளாலோ அறிந்தும், அறியாமலும் செய்யப்படும் எந்தச் செயலும் (அவற்றின் கனிகள் அனுபவிக்கப்படாத, அல்லது தாங்கிக் கொள்ளப்படாத வரையில்) எஞ்சியேயிருக்கின்றன என்பதே என் பார்வையாகும்[6].(15)
[5] "அறிந்தே செய்யப்படும் பாவத்தை ஒருபோதும் பாவக்கழிப்பால் அழிக்க முடியாது என்பதைக் காட்டுவதே இந்த ஸ்லோகத்தின் நோக்கமாகும். பாவத்தை அழிக்கும் ஒரே வழிமுறை அதன் கனிகளைத் தாங்கிக் கொள்வது மட்டுமே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] கும்பகோணம் பதிப்பில், "நானோ பாவமில்லாமல் அறிந்து செய்யுங் காரியத்தைக் குணமுள்ளதாகக் கருதுகிறேன். ஏனெனில், ஸூக்ஷ்மமாயிருந்தாலும் மனத்துடன் விசாரித்துப் புத்திப் பூர்வமாய்ச் செய்யப்பட்ட கர்மங்கள் அததற்குத்தக்கபடி பயனையளிக்கின்றன" என்றிருக்கிறது.
முழு ஆய்வுடன் மனமறியச் செய்யப்பட்ட செயல்கள், அதனதன் பருமை அல்லது நுண்மையின்படி திரளான, அல்லது நுட்பமான கனிகளை விளைவிக்கின்றன[7].(16) எனினும், ஓ! அற ஆன்மா கொண்டவனே {ஜனகனே}, பெரும் தீங்கு நிறைந்த செயல்கள், அறியாமையில் செய்யப்பட்டிருந்தால், அவற்றுக்குண்டான விளைவுகளைத் தவறாமல் உண்டாக்குபவையும், நரகத்திற்கே கூட வழிவகுப்பவையுமான அந்தச் செயல்கள், பொருத்தமற்ற வகையிலான விளைவுகளை {அற்பவிளைவுகளையே} அவனிடம் உண்டாக்கும்.(17) தேவர்கள், அல்லது மதிப்பிற்குரிய தவசிகள் போன்றோரால் செய்யப்படும் (ஐயம் நிறைந்த அல்லது அறமற்ற இயல்பைக் கொண்ட) செயல்களைப் பொறுத்தவரையில், அவற்றை ஓர் அறவோன் செய்யக்கூடாது; கேள்விப்பட்டாலும் அவற்றை நிந்திக்கக்கூடாது.(18) ஓ! மன்னா {ஜனகனே}, தன் திறனைக் குறித்துச் சிந்தித்து உறுதியடைந்து, அறச்செயல்களைச் செய்யும் மனிதன், நிச்சயம் தனக்கான நன்மையை அடைவான்.(19) சுடப்படாத {மண்} பாத்திரத்தில் ஊற்றப்படும் நீரானது படிப்படியாகக் குறைந்து, இறுதியில் மொத்தமாக வெளியேறிவிடும். எனினும், அது சுடப்பட்ட பாத்திரத்தில் ஊற்றப்பட்டால், அளவு குறையாமல் அப்படியே எஞ்சி நிற்கும். அதே போலவே, புத்தியின் துணையுடன் சிந்திக்காமல் செய்யப்படும் செயல்கள் நன்மையை விளைவிப்பதில்லை; அதே வேளையில் தீர்மானத்துடன் செய்யப்பட்ட செயல்கள், மங்கா சிறப்புடன் எஞ்சி தங்கள் விளைவாக மகிழ்ச்சியை விளைவிக்கும்.(20)
[7] "அறிந்தே செய்யப்பட்ட செயல்கள் அனைத்தும் தங்கள் இயல்புக்குத் தக்க கனிகளையே விளைவிக்கும் என்பதே இங்கே பொருள். அதன் இயல்பு பருமனாக இருந்தால் கனிகளும் பருமனாகவே இருக்கும், அது நுட்பமாக இருந்தால் விளையும் கனிகளும் நுட்பமானவையாகவே இருக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நீருள்ள பாத்திரத்தில் மேலும் நீர் ஊற்றப்பட்டால், அங்கே ஏற்கனவே இருந்த நீரின் அளவு அதிகரிக்கும்; அதே போலவே தீர்மானத்துடன் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், அவை நியாயமானவையாக இருந்தாலும், வேறு வகையில் இருந்தாலும், அறத்தின் {புண்ணியத்தின்} அளவு அதிகரிக்கவே செய்கிறது.(21,22) ஒரு மன்னன், தன் எதிரிகளையும், தங்கள் மேன்மையை உறுதிசெய்ய முனையும் அனைவரையும் அடக்கி, முறையாக ஆண்டுத் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். ஒருவன், புனித நெருப்பைத் தூண்டி, பல்வேறு வேள்விகளில் அவற்றில் ஆகுதிகளை ஊற்றி, மத்திம வயதிலோ, முதிர் வயதிலோ காடுகளுக்குள் ஓய்ந்து, (இறுதி இரண்டு வாழ்வுமுறைகளைப் பயின்று) அங்கேயே வாழ வேண்டும்.(23) தற்கட்டுப்பாடு, அறவொழுக்கம் ஆகியவற்றைக் கொண்ட ஒருவன், தன்னைப் போலவே பிற உயிரினங்களையும் பார்க்க வேண்டும். மேலும், ஓ! மன்னா, அவன் பெரியோர்களை மதிக்க வேண்டும். வாய்மையும், நன்னடத்தையும் பயில்வதன் மூலம் அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான்" என்றார் {பராசரர்}.(24)
சாந்திபர்வம் பகுதி – 292ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |