Being a righteous person is desirable! | Shanti-Parva-Section-293 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 120)(பராசர கீதை - 3)
பதிவின் சுருக்கம் : அறம் செய்ய விரும்புவதே மேன்மையடையும் வழி என ஜனகனுக்குச் சொன்ன பராசரர்...
பராசரர் {ஜனகனிடம்}, "இவ்வுலகில் உள்ள எவரும், மற்றொருவருக்கு நன்மை செய்வதில்லை. எவரும் பிறருக்குக் கொடையளிப்பதும் காணப்படுவதில்லை. அனைவரும் தங்களுக்காகச் செயல்படுவதே காணப்படுகிறது.(1) மக்கள் அன்பில்லாதவர்களாகும்போது, தங்கள் பெற்றோரையும், தங்கள் உடன் பிறந்தோரையும் கைவிடுவது காணப்படுகிறது. வேறு வட்டங்களைச் சார்ந்த உறவினர்களைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?[1](2) புகழ்பெற்றவருக்குக் கொடுக்கப்படும் கொடை, புகழ்பெற்றவரால் கொடுக்கப்படும் கொடைகள் ஆகிய இரண்டும் சமமான தகுதிக்கே {புண்ணியத்திற்கே} வழிவகுக்கும். எனினும், இவ்விரு செயல்களில் கொடையேற்பதைவிடக் கொடையளிப்பது மேன்மையானது[2].(3) உரிய வழிமுறைகளில் அடையப்பட்டு, உரிய வழிமுறைகளில் பெருக்கப்படும் செல்வமானது, அறமீட்டும் நிமித்தமாகக் கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும்.(4) அறமீட்ட விரும்புபவன், பிறருக்குத் தீங்கிழைக்கும் வழிமுறைகளில் ஒருபோதும் செல்வத்தை ஈட்டக்கூடாது. ஒருவன் செல்வத்தைப் பற்றார்வத்துடன் தேடாமல், தன் சக்திக்குத்தக்க செயல்களையே செய்ய வேண்டும்.(5)
[1] "அன்பில்லாத மக்கள், இவ்வளவு நெருங்கிய உறவினர்களையே கைவிடும்போது, அத்தகைய செயல்களின் மூலம் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையினாலன்றி, வேறு ஒருபோதும் பிறருக்கு நன்மை செய்வதில்லை என்று இறந்தகால முடிவெச்சமாகச் சொல்லமுடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "மேன்மையான ஒருவரிடம் இருந்து பெறப்படும் கொடையும், ஓர் ஏழைக்குக் கொடுக்கப்படும் கொடையும் சம தகுதியை {புண்ணியத்தைக்} கொண்டதே. ஒரு செல்வந்தன், கொடை ஏற்பதைவிடக் கொடையளிப்பதன் மூலம் பெரும் தகுதியை ஈட்டுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
(தாகத்துடன் கூடிய) விருந்தினருக்கு குளிர்ந்த அல்லது நெருப்பில் சுடப்பட்ட நீரை அர்ப்பணிப்புமிக்க மனத்துடன் கொடுப்பதன்மூலம், பசித்தவனுக்கு உணவிட்ட செயலுக்குரிய தகுதியை {புண்ணியத்தை} ஒருவன் ஈட்டுகிறான்.(6) உயர் ஆன்ம ரந்திதேவன், கிழங்குகள், கனிகள் மற்றும் இலைகளைத் தவசிகளுக்குக் காணிக்கையளித்து அவர்களை வழிபட்டதன் மூலம் உலகங்கள் அனைத்திலும் வெற்றியை அடைந்தான்.(7) சிபியின் அரச மகன் {சிபி எனும் நகரத்தைச் சேர்ந்த மன்னன் [சைப்யன்]}, தோழனுடன் {மாடானுடன்}[3] கூடிய சூரியனுக்கு அதே வகைக் காணிக்கைகளை அளித்து அவனை நிறைவடையச் செய்ததன் மூலம் இன்ப உலகங்களை அடைந்தான்.(8) மனிதர்கள் அனைவரும் பிறவி அடைவதன் மூலம் தேவர்கள், விருந்தினர்கள், பணியாட்கள், பித்ருக்கள் மற்றும் தங்கள் சுயத்திற்குக் கடன்பட்டவர்களாகிறார்கள். எனவே, ஒவ்வொருவரும் அந்தக் கடன்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளத் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும்.(9) ஒருவன், வேதங்களைக் கற்பதன் மூலம் பெரும் முனிவர்களிடம் தான் பட்ட கடனிலிருந்து விடுபடுகிறான். அவன் வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களிடம் பட்ட கடனிலிருந்து விடுபடுகிறான். சிரார்த்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் அவன் பித்ருக்களிடம் பட்ட கடனில் இருந்து விடுபடுகிறான். நன்மை செய்வதன் மூலம் சக மனிதர்களிடம் பட்ட கடனை அவன் அடைக்கிறான்.(10)
[3] "ஸூரியனுடைய பக்கத்திலுள்ளவன்" என்று கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்புச் சொல்கிறது.
வேத மந்திரங்களைக் கேட்பதன் மூலமும், அவற்றின் கருத்தைச் சிந்திப்பதன் மூலமும், வேள்விகளில் எஞ்சியவற்றை உண்பதன் மூலமும், தன் உடலைப் பராமரிப்பதன் மூலமும் ஒருவன் தன் சுயத்திற்கு {ஆன்மாவுக்குப்} பட்ட கடனை அடைக்கிறான். அவன் தன் பணியாட்களுக்குப் பட்ட கடனுக்காகத் தொடக்கத்தில் இருந்தே செயல்கள் அனைத்தையும் முறையாகச் செய்ய வேண்டும்.(11) மனிதர்கள் செல்வமற்றவர்களாக இருந்தாலும், பெரும் முயற்சிகளின் மூலம்[4] வெற்றியை அடைவது காணப்படுகிறது. முனிவர்கள் தேவர்களை முறையாகத் துதிப்பதன் மூலமும், வேள்வி நெருப்பில் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை முறையாக ஊற்றுவதன் மூலமும், தவ வெற்றியை அடைவது காணப்படுகிறது.(12) ரிசீகரின் மகன், விஷ்வாமித்திரரின் மகனானான். வேள்விக் காணிக்கைகளில் பங்குகளை {அவிர்ப்பாகங்களைக்} கொண்ட தேவர்களை ரிக்குகளைக் கொண்டு துதிப்பதன் மூலம் அவன் மறுமையில் வெற்றியை அடைந்தான்[5].(13) உசனஸ், தேவர்களின் தேவை நிறைவு செய்ததன் மூலம் சுக்கிரனானார். உண்மையில், (உமா) தேவியின் புகழைத் துதித்தன் மூலம் அவர் ஆகாயத்தில் பெருங்காந்தியுடன் திளைக்கிறார்[6].(14)
[4] "தியானம் மற்றும் தாரணையின் மூலம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] கும்பகோணம் பதிப்பில், "ரிசீகரின் புத்திரனான சுநச்சேபன் யஜ்ஞத்தில் பாகமுடையவர்களான தேவர்களை ரிக்குகளால் துதித்து விசுவாமித்ரருடைய புத்திரனாதலை அடைந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "விஷ்வாமித்திரரின் மகன் ரிசீரின் மகனிடம் சென்றான். அந்த வலிய கரங்களைக் கொண்டவன், வேள்விப் பங்குகளைக் கொண்ட தேவர்களை ரிக்வேத மந்திரங்களால் வழிபட்டான்" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், "இது தெளிவற்றதாக இருக்கிறது. ரிசீகரின் மகன் என்பர் ஜமதக்னி ஆவார். விஷ்வாமித்திரரின் மகன் கௌசிகராவார். எனவே கௌசிகரே ஜமதக்னியிடம் சென்றிருக்க வேண்டும்" என்று பிபேக்திப்ராய் விளக்கியிருக்கிறார்.[6] "இஃது உசனஸ், ஆகாயத்தில் கோள் என்ற நிலையை அடைந்ததைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மேலும், அசிதர், தேவலர், நாரதர், பர்வதர், கக்ஷீவான், ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமர்}, தூய ஆன்மாவைக் கொண்ட தாண்டியர்,(15) வசிஷ்டர், ஜமதக்னி, விஷ்வாமித்திரர், அத்ரி, பரத்வாஜர், ஹரிசமச்ரு, குண்டாதரர் சுருதச்ரவஸ்(16) ஆகிய இந்தப் பெருமுனிகள், ரிக்குகளின் துணையுடனும், குவிந்த மனங்களுடனும் விஷ்ணுவைத் துதித்ததன் மூலமும், தவங்களின் மூலமும், நுண்ணறிவுடன் கூடிய அந்தப் பெருந்தேவனின் அருளின் மூலமும் வெற்றியை அடைந்தனர்.(17) தகுதியில்லாத பல மனிதர்கள், அந்த நல்ல தெய்வத்தைத் துதித்ததன் மூலம் தனிச்சிறப்பு வாய்ந்த பெரும் நிலையை அடைந்தனர். ஒருவன் தீய அல்லது நிந்திக்கத்தக்க எந்தச் செயலையும் செய்வதன் மூலம் முன்னேற்றத்தை நாடக்கூடாது.(18) அறவழிகளில் ஈட்டப்பட்ட செல்வமே உண்மையான செல்வமாகும். அறமற்ற வழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வம் நிந்தனைக்குரியதாகும். அறமே அழிவற்றதாகும். செல்வத்தின் மீது கொண்ட விருப்பத்தால் அஃது ஒருபோதும் இவ்வுலகில் கைவிடப்படக்கூடாது.(19) தன் புனித நெருப்பைப் பராமரிப்பவனும், தேவர்களுக்குத் தன் தினத் துதிகளைக் காணிக்கையாக்குபவனுமான அற ஆன்மா கொண்ட மனிதனே அறவோர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, வேதங்கள் அனைத்தும் (தக்ஷிணை, கார்ஹபத்யம், ஆஹவனியம் என்ற) மூன்று புனித நெருப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.(20)
எந்தப் பிராமணன், {குறைவற்ற} செயல்களை முழுமையாகச் செய்வானோ அவன் {அந்த மூன்று நெருப்புகளடங்கிய} புனித நெருப்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். செயல்களைச் செய்யாமல் இருப்பவன், அந்தப் புனித நெருப்பைப் பராமரிப்பதைவிட, அஃதை உடனே கைவிடுவதே சிறந்தது[7].(21) புனித நெருப்பும், தாய், பெற்ற தந்தை, ஆசான் ஆகியோரும், முறையாகப் பணிவிடை செய்யவும், பணிவுடன் தொண்டு புரியவும் தகுந்தவர்கள் ஆவர்.(22) செருக்கடையச் செய்யும் உணர்வுகள் அனைத்தையும் கைவிட்டு, முதியோரிடம் காத்திருந்து, அவர்களுக்குத் தொண்டாற்றுபவனும், கல்விமானும், காமம் இல்லாதவனும், அன்பின் கண்ணோடு உயிரினங்கள் அனைத்தையும் பார்ப்பவனும், செல்வமற்றவனும், தன் செயல்களில் அறவோனும், (எவருக்கும்) எத்தீங்கையும் செய்யும் விருப்பம் இல்லாதவனுமான மனிதனே, இவ்வுலகில் உண்மையில் மதிப்பிற்குரிய மனிதனாக நல்லோராலும், பக்திமான்களாலும் வழிபடப்படுகிறான்" என்றார் {பராசரர்}.(23)
[7] கும்பகோணம் பதிப்பில், "எல்லா வேதங்களும் மூன்று அக்னிகளிலிருக்கின்றன. ஆதலால் அக்னியை ஆதானஞ்செய்த தர்மாத்மாவே புண்ணியஞ்செய்கின்றவர்களின் உத்தமன். அனுஷ்டானம் குறையாமலிருக்கிற அந்தப் பிராம்மணன்தான் ஆஹிதாகனியாயுள்ளவன். அனுஷ்டானமில்லாதவன் அநாஹிதாக்னியாயிருப்பது சிறந்தது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வேதங்கள் அனைத்தும் மூன்று நெருப்புகளில் நிறுவப்பட்டுள்ளன. ஒரு பிராமணன் புனித நெருப்பைக் கொண்டிருந்தால், அவனது செயல்கள் ஒருபோதும் குறைவடையாதவையாக இருக்கும். எனினும், அக்னிஹோத்ரம் செய்யாத ஒருவன், புனித நெருப்பைக் கைவிடுவதே சிறந்தது.
சாந்திபர்வம் பகுதி – 293ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |